Friday, September 30, 2011

உள்ளாட்சித் தேர்தலும்.. இயற்கை விதியும்..!!

கடந்த 28 வருடங்களுக்கும் மேலாக தமிழக அரசியலை உள்ளிருந்து உற்று நோக்கி வரும் என்னுடைய கணிப்பின் படி தமிழகத்தைப் பொருத்தவரை திமுக தான் தனிப்பெறும் கட்சியாக இருந்து வருகிறது. ஆனால் எம்ஜிஆர் அப்பொழுதைய காலகட்டத்தில் தனக்கென்று (நீண்ட பாரம்பரியம் மற்றும் சுதந்திரத்திற்குப் பிறகான தொடர்ந்த 20 வருட ஆட்சியினால்) 15 லிருந்து சில தொகுதிகளில் 20 சதவிகிதம் வரையிலும் வாக்கு வங்கியை வைத்துக் கொண்டிருந்த காங்கிரஸை நிலையான கூட்டணிக் கட்சியாக வைத்துக் கொண்டிருந்ததால் தனிப்பெறும் கட்சியான  திமுகழகத்தை வெற்றி கொண்டு வந்தார்.

ஆனால் எம்ஜிஆர் மறைவிற்குப் பின் அனைத்து கட்சிகளும் தனித்து நின்ற போது திமுக அமோக வெற்றி கண்டது. அடுத்ததாக ஜெயலலிதா அதே பழைய எம்ஜிஆர் ஃபார்முலா படி காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து வெற்றியை ஈட்டிய நிகழ்வும் நடந்தது. அதன் பிறகு முதல் முறையாக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸின் பெரும் அணியுடன் (தமாகா)  கூட்டணி கண்டு திமுக அமோக வெற்றி கண்டது. அடுத்ததாக ஜெயலலிதா அதே பாணியில் (தமாகா வுடன் கூட்டணி போட்டு) வென்ற விபத்து நடந்தேறியது.

அதன் பிறகு தெளிவாக சுதாரித்துக் கொண்ட திமுக தலைவர் அகில இந்திய காங்கிரஸ் தலைமையுடன் நல்ல நெருக்கத்தை உருவாக்கிக் கொண்டு நிலைத்த கூட்டணியை உருவாக்கி,  தொடர்ச்சியாக இரண்டு பாராளுமன்றம், ஒரு சட்டமன்றம் மற்றும் ஒரு உள்ளாட்சி தேர்தல்களில் அமோக வெற்றி கண்டது. ஆனால் இந்த காலகட்டத்தில் தான் காங்கிரஸ் கட்சி இலங்கைப் பிரச்சினையில் தமிழர்களிடம் மிகப்பெறும் வெறுப்பைச் சம்பாதித்ததும், விஜயகாந்தின் தேமுதிக என்ற காங்கிரஸுக்கு மாற்றான ஒரு கட்சி உருவானதும் நிகழ்ந்தது.


கடந்த தேர்தலில் இதை மிகச்சரியாக கணித்துச் செய்தாரா அல்லது வேறுவழியின்றி செய்தாரா என்று தெரியாது ஆனால், இக்கட்சியுடன் கூட்டணி அமைத்து மிகப் பெரும் வெற்றியை தனதாக்கிக் கொண்டுவிட்டார் ஜெயலலிதா.


ஆனால் வயதின் காரணமாகவோ அல்லது வேறு சிலபல நிர்பந்தங்களின் காரணமாகவோ வெற்று வேட்டான காங்கிரஸை உதறிவிட்டு, தனித்தோ அல்லது வேறு சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டோ குறைந்தபட்சம் கௌரவமான எதிர்கட்சி அந்தஸ்தையாவது அடையும் வாய்ப்பையும் தவறவிட்டுவிட்டார்.


ஒரு வேளை இப்பொழுது செய்ததைப் போன்று அப்பொழுது காங்கிரஸை கழட்டிவிட்டிருந்தால் 'உறுமீனுக்காக' ஒற்றைக்காலில் தவம் செய்துகொண்டிருந்த அதிமுக அதை கொத்திக் கொண்டு சென்று, தேமுதிக தனித்து விடப்பட்டு, அக்கட்சி திமுகவிற்கு எதிரான வாக்குகளைப் பிரித்து.... இன்று அதிமுக பெற்றிருக்கும் அதே வெற்றியை திமுக பெற்று ஆட்சியில் அமர்ந்திருக்கும்.!


ஆனால் இயற்கையின் விதி என்று ஒன்று இருக்கிறது.., அதனால் திட்டமிடப்பட்ட, ஒரு நாடகத்தின் முடிவை மாற்றும் சக்தி எவருக்கும் இல்லை. இப்பொழுது அதே "இயற்கை" தனது காய்களை ஒரு நான்கு மாதங்களுக்குப் பிறகு மாற்றி வைத்திருப்பது போன்ற ஒரு தோற்றம் தெரிகிறது!!

பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

Monday, September 5, 2011

"பாரதவிலாஸ்" நகராட்சியும் "2" ஆம் தர "ஜீ"னி மூட்டையும்!!!

எங்க பாரதவிலாஸ் ஊர்ல முனிசிபாலிடி என்று அழைக்கப்படும் நகராட்சி அலுவலகம் நகரின் மையத்தில் இருக்கிறது. அப்பல்லாம் ஊர்ல ஒரே ஜீனி டிமாண்ட் இருந்த நேரம். ஊர்ல பத்து தெருவுக்கு ஒரு கடைன்னு மொத்தம் ஐந்தே கடைகள் மட்டும் நகராட்சி சார்பா திறக்கப்பட்டு மக்களுக்கு ஜீனி விநியோகம் செய்வாங்க.

எப்பவும், நகராட்சி ஆணையரா எங்க ஊருக்கு வருபவர்கள் எல்லோருமே அந்த ஐந்து கடைகளையும் ஒவ்வொரு மூன்று வருடத்துக்கும் ஏற்று நடத்துற உரிமத்தை, எங்க ஊருல பரம்பரை பரம்பரையா பல தொழில்கள் செய்து கொண்டிருக்கும், நாலஞ்சி குடும்பத்த சேர்ந்த அங்கத்தினர்கள் யாருக்காவது தான் கொடுப்பாங்க. சமீபத்துல ஃபாரீனெல்லாம் போய் பெரிய பணத்தோட வந்து இங்கு செட்டிலான ஒரு புது பணக்காரரின் பிள்ளைகளைக் கூட இந்த லிஸ்ட்ல இப்ப சேர்த்துக்கிட்டாங்க!!

எங்க நகராட்சிக்கு ரெண்டுல எதாவது ஒரு கட்சிக்கார்தான் முக்கிய தலைவரா மாறி மாறி வருவாங்க. அதனால எந்த பாகுபாடும் பார்க்காம நம்ம நாலஞ்சு குடும்பமும் அந்த தலைவருங்களை மட்டும் எப்பவுமே நல்லபடியா கவனிச்சிக்குவாங்க! அப்பப்ப வர்ற இந்த நகராட்சி ஆணையருங்களுக்கு எப்பவுமே பொறங்கைய நக்குற கதைதான் நடந்துக்கிட்டிருந்துச்சி. அவங்களும் அதையே பரம திருப்தியா ஏத்துப்பாங்க! ஏன்னா, எப்பவுமே அப்பப்ப இருக்கற தலைவரோட ஏதாவது ஒரு சொத்தையான சொந்தக்காரங்கள தான் ஆணையரா போட்டுப்பாங்க. அதுனால தான் எந்த பிரச்சினையும் இல்லாம போயிட்டிருந்திச்சி.

ஆனா இந்த அஞ்சு கடைகளையும் நடத்துற "பபெ" (அதாங்க, நம்ம பழம் பெருச்சாலிகள்!) இருக்காங்களே, அவங்க பெரிய பஹாசுரன்கள். ஒரு மூட்டை ஜீனிய நூறு ரூபாய்க்கு நகராட்சில வாங்கி 1000 ரூபாய்க்கு வித்துக்கிட்டு இருந்தாங்க. பல பேருக்கு இந்த விலை கட்டுபடியாகாததாலயும், சிலருக்கு தூரத்து தெருவுல இருந்து அம்புட்டு தூரம் வந்து க்யூவுல நின்னு ஜீனிய வாங்க முடியாதுன்னும், அப்படியே வந்து வாங்குனாலும், கிலோவுக்கு கால்கிலோ குறையும், ஒரே அழுக்காவும், குப்பை செத்தையாகவும் கலந்திருக்கும். இத இம்புட்டு கஷ்டப்பட்டு வாங்குறதுக்கு காப்பில கருப்பட்டி போட்டே குடிச்சிடலாம்னு பலரும் பேசாம இருந்திடுவாங்க.

இப்புடி போயிட்டிருந்த நேரத்துல தான் எங்க ஊருக்கு, ஏதோ அரசியல் மங்காத்தாவுல, நம்ம தலைவரோட சொந்தத்துல சேராத, "முத்து ராஜ்" ன்னு ஒரு ஆணையர் வந்து நகராட்சி அலுவலகத்துல உட்கார்ந்தார். அவரு வந்து ஒருமாசத்துல அந்த அஞ்சு கடைகளுக்கும் அடுத்த மூன்றாண்டுகளுக்கான உரிமம் புதுப்பிக்கும் நேரம் வந்தது. நம்ம முத்துராஜ் கொஞ்சம் விவரமான, அதேசமயம் விவகாரமான பேர்வழியும் கூட! அவரு தன்னோட டூ வீலர எடுத்துக்கிட்டு அஞ்சு கடைக்கும் ஒரு ரவுண்டு போயி, அப்படியே ஒரு எட்டு மக்களையும் பார்த்து பேசிட்டு வந்தார்.

அவருக்கு என்னா தெரிஞ்சிதுன்னா, ஊர்ல இருக்கற தெருவுக்கு ரெண்டு பணக்கார பயபுள்ளைங்க மட்டும் தான் இம்புட்டு அதிக விலை கொடுத்து இந்த அழுக்கு 2 ஆம் தர ஜீனிய வாங்கி ஜூஸு குடிக்குதுங்க, மத்தபடி தினக்கூலி வாங்குறவுகளும், மாசசம்பளக்காரர்களும் இந்தப் பக்கமே திரும்பிப் பார்க்குறது இல்லன்னு தெளிவா புரிஞ்சி போச்சு! அன்னிக்கு ராத்திரி மொட்ட மாடில நின்னுகினு மானத்தப் பார்த்துக்கிட்டிருந்தவருக்கு இன்னொன்னும் புரிஞ்சுது. அது என்னன்னா, இந்த நாலஞ்சு "பபெ" பயலுவலும் நேரா தலைவர பார்த்து விருந்து வச்சிடறாங்க, அவரும் நல்லா ஒரு புடிபுடிச்சிட்டு, கழுவாத கைய நீட்டுனா, நாம நக்கிட்டு போயிட வேண்டியது தானா? என்றும் யோசிக்க வைத்தது.

இத யோசிச்சிட்டே போய் படுத்தவர், காலைல எந்திரிச்சி, கிளம்பி நகராட்சி அலுவலகம் போய் தன் அறையில் உட்கார்ந்து கொண்டு, டவாலி கணக்கா நின்னுட்டிருந்த ப்யூனை வரச்சொன்னார். "யோவ் அந்த தண்டரா போடுறவன கூப்பிட்டு நான் சொல்றத அப்பிடியே ஊர் முழுக்க தம்பட்டம் அடிக்கச்சொல்லுய்யா!" என்று சொல்லி பேச ஆரம்பித்தார். "பாரதவிலாஸ் ஊர் மக்களுக்கோர் நற்செய்தி, அடுத்த வாரம் முதல் நம் ஊரில் உள்ள 50 தெருக்களிலும் தெருவுக்கு ஒன்று வீதம் 2 ஆம் தர ஜீனி விற்கும் கடை திறக்க ஆணையர் முடிவு செய்துள்ளார்,  அதனால் ஜீனி கடைக்கான உரிமம் வாங்க, பணவசதி உள்ள உள்ளூர்காரர்கள் யார் வேண்டுமானாலும் வந்து அந்தந்த தெரு கடை உரிமத்தை அடுத்த மூன்றாண்டுகளுக்கு நடத்த பெற்றுக்கொள்ளலாம். முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை தரப்படும்.... டும் டும் டும் டும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!!!

இந்த தண்டோராவைக் கேட்ட மாத்திரத்தில் ஊரே, ஒவ்வொரு முச்சந்தியிலும் கூடிக்கூடிப் பேசிக்கொள்கிறது. இது உண்மையா? வேற ஏதாவது உள்குத்து இருக்குமோ? இப்புடியெல்லாம் நடக்க வாய்ப்பு இருக்கா? நம்புறமாதிரி இல்லியே?.... இப்படியாக பேச்சுக்கள் பொதுமக்கள் மத்தியில் கிளம்புகின்றன.

அதேநேரத்துல அந்த பபெ குடும்பத்தினரும், தலைவரும் அவசர அவசரமா கூடிப்பேசி நம்ம முத்துராஜ கூப்புட்டு பேசறாங்க. ஆனா இவரு அவங்ககிட்ட புடிகொடுத்தே பேசல, ஆனா அவங்க போனப்பறம், தலைவருகிட்ட மாத்திரம் கொஞ்ச நேரம் தனியா பேசிட்டு தன் வேளையை பார்க்க ஆரம்பிச்சிட்டாரு. அதன்பிறகு தலைவரும் பபெ ங்கள கூப்பிட்டு, "இது ஒன்னும் ஆவரத்துக்கு இல்லை, கொஞ்சம் விட்டுத்தான் புடிக்கணும், அதுக்காக ஒதுங்கி நின்னா உங்களுக்கு தான் லாஸ் ஆவும், அப்பறமா வருங்காலத்துல இந்த ஆட்டத்துலயே கூட நீங்க இல்லாம போயிடுவீங்க, அதனால நீங்க அஞ்சு கடைக்கு பத்லா, இன்னும் ஒரு நாலஞ்சு கடைக்கு சேர்த்து பணத்த கட்டி லீஸுக்கு எடுத்துக்குங்க, பின்னாடி பார்த்துக்கலாம்"ன்னு சொல்லிடுறாரு.

பொதுமக்கள்ல பலபேருக்கு இதுல என்ன உள்குத்து இருக்குமோன்னு சந்தேகமும் பயமும் இருந்தாலும், சில பேரு "மயிற கட்டி மலைய இழுப்போம், வந்தா மலை வரலன்னா மசுறே போச்சுன்" ன்னு, குறிப்பிட்ட தேதில முனிசிபாலிட்டி வாசல்ல க்யூகட்டி நின்னுடுறாங்க. அதே நேரத்துல நம்ம பபெ க்களும் ஒரு பத்து பேரா வந்து க்யூவுல சேர்ந்துக்குறாங்க. வந்து நிக்கற ஆளுங்கள பார்த்த அவங்களுக்கு எல்லாம் ஒரே கடுப்பு!

ஊருல தெருவுக்குள்ளாற பொட்டிகடை வச்சிருக்கறவனும், மளிகைக்கடை வச்சிருக்கறவனும், ... இந்த டீ கடை பார்ட்டியெல்லாம் கூட வந்து க்யூவுல நிக்குறானுங்களே(?!), இவனுங்களுக்கு சமமா நாமலும் தொழில் செய்யறதான்னு ஒரே எரிச்சலோடு கால்கடுக்க நிக்கிறாங்க!!

கரெக்டா பத்தரை மணிக்கெல்லாம் ப்யூன் வந்து எல்லோரையும் உள்ள வரச்சொல்றாரு. அவங்கள ஒரு ஹால்ல உட்கார வச்சி, முத்துராஜி பேசறாரு. அம்பது தெருவுக்கும், அம்பது கடைய ஏலம் வுடப்போறோம், நீங்க நாப்பது பேருதான் வந்திருக்கீங்க. பரவாயில்ல, இதோட மதிப்பு இன்னும் சரியா உங்களுக்கு புரியலன்னு நினைக்கிறேன். அதனால முதல்ல வந்த உங்களுக்கு அவங்கவங்க தெருவுல இருக்கற கடைய கொடுத்திடுறேன். பாக்கி பத்து கடைக்கு அப்புறமா யார் யார் முன்னாடி வர்றாங்களோ அவங்களுக்கு பிறகு கொடுத்திடுறேன்னு சொல்லி கடையை நடத்துவதற்கான சட்ட திட்டங்களை விளக்க ஆரம்பிக்கிறார்.

அவர் சொல்லிக்கிட்டே வரும்போது ஒரு மூட்டை 2 ஆம் தர ஜீனி 100 ரூபாய் என்றதும், பபெ ங்கள தவிர புதுசா வந்திருந்த எல்லோருக்கும் தலையே சுற்ற ஆரம்பித்தது!! "அடப்பாவிங்களா, 100 ரூபாய்க்கு வாங்கித்தான் மக்களுக்கு ஆயிரம் ரூபாய்க்கு விக்கறீங்களா?" ன்னு மனசுக்குள்ளாறயே இந்த "பபெ" ங்களைப் பார்த்து கேட்டுக்கிட்டு, ஆஹா.. இது முன்னாடியே தெரிஞ்சிருந்தா நம்ம சொந்தங்காரங்களையே மத்த பத்து கடையையெல்லாம் எடுக்கச்சொல்லி அழைச்சிட்டு வந்திருக்கலாமே ன்னு யோசிச்சிட்டே கைய பெசய ஆரம்பிச்சிட்டாங்க! (ஐயோ வடை போச்சேன்னு!!)
இதை புரிஞ்சிக்கிட்ட முத்துராஜா, "யோவ், மத்தவங்களுக்கு அடிக்காத யோகம் உங்களுக்கு அடிச்சிருக்கேன்னு சந்தோஷப்பட பழகிக்குங்கய்யா, உங்கள சேர்ந்தவன் மட்டும்தான் எல்லா நன்மையையும் அனுபவிக்கனும்னு பேராசைல, கிடைத்த சந்தோஷத்த கோட்டை விடாதீங்க, அப்பறம் இந்த "பபெ" ங்களுக்கும் உங்களுக்கும் வித்தியாசம் இல்லாம போயிடும்" னு சொல்லவே, அவிங்களும் சுதாரிச்சிக்கிட்டு, தங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை நினைத்து புளகாங்கிதம் அடைந்து, அதற்கு காரணமான முத்துராஜை தெய்வமாக நோக்கி கையை தூக்கி கும்பிட்டனர்.!!

பிறகு ஒவ்வொருவராக உரிய டெபாசிட் தொகையினை கட்டிவிட்டு, அவரவர் தெருவில் அரசின் 2 ஆம் தர ஜீனி விற்கும் கடையை திறந்துகொள்ளும் உரிமத்தை பெற்றுக்கொண்டு, உற்சாகத்துடன் வெளியில் வந்தனர்! அப்படி கடை ஆரம்பித்தவர்கள் அனைவரும் தங்கள் வியாபாரத்தை பெறுக்க வேண்டுமானால் தங்கள் தெருவில் உள்ள எல்லோரையும் ஜீனி வாங்க வைத்தால் தான் சாத்தியமாகும் என்பதை உணர்ந்து, பழைய பெருச்சாலிகளைப் போல அநியாய லாபம் வைத்து விற்காமல் 100 ரூபாய்க்கு வாங்கியதை இன்னொரு 100 ருபாய் லாபம் வைத்து (அதாவது 100%) விற்க ஆரம்பித்தார்கள்.

அதுவரையிலும் எட்டாக்கனியாக இருந்த ஜீனியின் விலை அதள பாதாளத்திற்கு விற்க ஆரம்பித்ததால், அதுவும், அவரவர் தெருவிலேயே கடைபோட்டு கூவிக்கூவி விற்க ஆரம்பித்ததால், ஒவ்வொரு தெருவிலும் இருக்கின்ற பெரும்பாலான மக்கள் (அதாவது குப்பனும், சுப்பனும்) ஜீனி வாங்கிப் போட்டு காப்பி குடிக்கும் பழக்கத்திற்கும், பல இனிப்பு பலகாரங்கள் செய்து உண்ணும் வாய்ப்பினையும் பெற்று சந்தோஷமடைந்தனர்.!!!
 
நேயர்களே, இந்த கற்பனையான புனைவிற்கு நீங்கள் தரும் ஆதரவினைப் பொருத்து இதன் இரண்டாம் பாகம் விரைவில் வெளியிடப்படும்!!!!!