Saturday, June 23, 2012

இண்டர்வ்யூ

வீடே பரபரன்னு இருந்திச்சி. நிச்சயம் இந்த வேலை கிடைச்சிடும்னு ஊர்ல இருந்து வந்திருந்த என் சின்னக்கா சொல்லிக் கொண்டிருந்தார்.

அப்பா தான் நான் போட்டுச் செல்லப்போகும் ஷூவுக்கு. கிழிந்த வேஷ்ட்டியில் ஆள்காட்டி விரலை விட்டு நுனியில், விபூதி பொட்டலம் மாதிரி பேப்பரில் மடித்து வைத்திருந்த ஷூபாலிஷை தொட்டு, ஷூவின் மேல் பொட்டு பொட்டாக வைத்து.... பிறகு கரகரவென்று வேகமாக தேய்த்துக் கொண்டிருந்தார்.

தோ பார்டா தம்பி, காம்படீஷன் சக்ஸஸ்ல போட்ருக்கான், நல்லா தலைய சீவி முடி பறக்காத மாதிரி இருக்கனுமாம். தேங்காண்ணைய தடவினா வெயில் ஏற ஏற மூஞ்சில வழிய ஆரம்பிச்சிடும். அத்தான் யூஸ் பண்ணிட்டிருக்குற ப்ரில் க்ரீம் ட்யூப் முடியறா மாதிரி இருந்திச்சி. அத நான் எடுத்துட்டு வந்திருக்கேன்.

காலைல குளிச்சோடுன எண்ணைய தடவிடாத. வெளில நின்னு தலைய காய வச்சிட்டு அப்படியே இந்த ஜெல்ல போட்டு சீவிட்டு போயிடு...

சரிக்கா அதெல்லாம் நான் பாத்துக்கறேன். ஆன இண்டர்வ்யூல எல்லாம் பொதுவா ஆரம்பிக்கறச்சே, அவங்க கம்பெனிய பத்தி நமக்கு எந்த அளவுக்கு தெரியும்னு கேப்பாங்களாம். அப்ப அவங்க கம்பெனிய பத்தி அக்குவேற ஆணி வேறா சொல்லிட்டோம்னா, அதுலயே இம்ப்ரஸ் ஆகி, மத்த கேள்வில்லாம் நமக்கு ஃபேவராவே இருக்குமாம்க்கா......,  நம்ம சுவாமியோட மாமா தான் இதெல்லாம் சொன்னார்.

அப்டீன்னா, நீ போறது பெயிண்ட் கம்பெனி தான? நம்ம அய்யர் கடை தான் அதுக்கு ஹோல் சேல் எல்லாம். நான் போயி அந்த பெயிண்ட் விலை பட்டியில் மத்த சமாச்சாரம்லாம் வாங்கிட்டு வந்துடறேன். நீ மத்த வேலைய பாருன்னு அப்பா சொல்லிட்டு எழுந்து சட்டைய மாட்ட ஆரம்பிச்சிட்டார்.

மத்தியானம் சாப்பாடு லைட்டா இருந்தா போதும்னுட்டேன். அதுனால எல்லாருக்குமே ஒரே ரசம் வைத்து கூழ்வடாம் வருத்து வைத்துவிட்டார் அம்மா. பாவம் அக்கா வீட்டுல நான்வெஜ் சமைக்க மாட்டாங்க, இங்க வந்தா தான் தினம் செஞ்சி சாப்ட்டு போவாங்க. இன்னிக்கு அது கட்.

சாப்பிடும் போது, நாளைக்கு அக்காவுக்கு மீன் எடுத்து சமச்சிடும்மான்னு சொன்ன்னேன். அதுக்கென்னடா, இதெல்லாம் பெரிய விஷயமா, நீ நல்லபடியா இண்டர்வியூவ முடிச்சிட்டு வா, அதுக்காக நாளைக்கு நம்ம காளியம்மன் கோவில்ல 108 சுத்து சுத்தி விரதம் இருக்கப் போறேன். நீ தான் நாலாண்ணக்கி வந்துடுவேல்ல, அப்ப மீன் எடுத்து எல்லாருமா சேர்ந்து சாப்பிடலாம்... அக்கா சொன்னுச்சி.

அக்காவின் ஒரு வயது மகனிடம் அரை மணி நேரம் விளையாடிவிட்டு,  சேகரித்து வைத்திருந்த பெயிண்ட் டெக்னாலஜி பற்றிய புத்தகத்தை மேய்ந்து கொண்டிருந்தேன். ரெண்டு மூனு பெயிண்ட் ஷேட் கார்டும், குறிப்பு எழுதப்பட்ட ஒரு ரோக்கா பேப்பருமாக அப்பா உள்ளே வந்தார்.

இது மூனும் தான் அந்த கம்பெனியோட கலர் அட்டையாம். இதுல அவங்க தயார் பண்ற அத்தனை பெயிண்ட் லிஸ்ட்டும் இருகாம். இந்த பேப்பர்ல, அவங்க கம்பெனி ஆரம்பிச்ச வருஷம், எங்கெங்க தயாரிக்கிறாங்க, எத்தனை டீலர்கள் இருக்காங்க....  அப்டீங்கற விவரம்லாம், ஐயர் சொல்லச் சொல்ல எழுதிட்டு வந்துட்டேன்.

ச்சே... என்ன மாதிரியான மனுஷன் இவர்? தன்னால் இயலுகின்ற உச்சம் வரை சென்று, அங்கிருக்கும் எனக்கானதை தருவித்து விடுகிறாரே?! அதுவும் ஆசை ஆசையாய்!

நான் யாரும் அடைய முடியாத உச்சத்தை அடையக்கூடாது என்று ஆண்டவன் நினைத்து விட்டான், அதனால் தான் உனக்கு எந்த வசதி வாய்ப்பையுமே தராமல் அவன் தட்டி விட்டான் போலிருக்கிறது என் தந்தையே! ஆனாலும் நீ சந்தோஷிக்கும் அளவிற்கான ஒரு உயரத்தை நான் அடைவேன். அதுவும் உனக்காகவே அதை அடைவேன்......!!!

இரவு அப்பாவே வந்து ரயிலேற்றி விட்டார்......

சுஜாதா கதைகளையும், கட்டுரைகளையும் படித்துப் படித்து, பெங்களூருவை வெளிநாட்டிலிருக்கும் நகரம் ஒன்றினைப்போல் இருக்கும் என்று பெரிய அளவில் கற்பனை செய்து வைத்திருந்தேன். குளிர் மட்டும் நம்ம ஊரை விட அதிகமாக இருந்தாலும், ஜன நெருக்கடி, பரபரப்பு அது இதுன்னு பார்த்தா, சென்னையை விட உசத்தியாக மனத்து எதுவுமே படவில்லை.

அந்த எண்ணம் வந்துவிட்டதாலோ என்னவோ? புது ஊர், வெளி மாநிலம என்ற பயம், படபடப்பு எல்லாம் எதுவுமில்லாம், அரை மணி நேரத்தில் சகஜமாகிவிட்டேன்.  நானே விசாரித்துக் கொண்டு சென்று நண்பனின் அண்ணன் வீட்டைக் கண்டுபிடித்து கதவைத் தட்டினேன்.

சரியாக ஒன்பது நாற்பதுக்கெல்லாம், பஸ்ஸிலிருந்தபடியே இண்டர்வ்யூ நடக்கவிருக்கும் கட்டிடத்தைச் சுட்டிக் காட்டிவிட்டு, பஸ் அடுத்த ஸ்டாப்பில் நின்றதும், பெஸ்ட் ஆஃப் லக் சொல்லி கைகொடுத்து இறங்கச் சொல்லிவிட்டு அந்த பஸ்ஸிலேயே அந்த அண்ணன், தன்னுடைய கம்பெனிக்குப் போய்விட்டார்.

ஒரு நிமிட நடையிலேயே கட்டிடம் பிரம்மாண்டமாக கண்முன்னே விரிந்தது. ஆச்சர்யமாக பார்க்க முற்படும் போதே, 50 க்கும் அதிகமானோர் ஷூ, டை எல்லாம் அணிந்து கையில் ஃபைலோடு நின்று கொண்டிருப்பது தெரிந்தது. இரண்டு காதுகளுக்கு பின்புறம் கொஞ்சம் கீழாக இறங்கினாற் போன்ற இடத்தில் சிவ்வென் வெப்பநிலை அதிகமானது....

மனது ஏனோ தானாக அப்பாவை நினைத்துக் கொண்டது....  "தம்பி இதுல ஜெயிக்கணும்கறது எல்லாம் முக்கியமில்லடா, ஆனா இது உனக்கு ஒரு நல்ல அனுபவமா இருக்கணும். அதுக்கு மட்டும் உன்னை தயாரா வச்சுக்க.. சரியா?"  என்று கிளம்பறச்சே ஆசீர்வாதம் பண்ணும் போது சொன்னது ஒரு முறை மனதுக்குள் வந்து போனது.

பின் மண்டையில் ஏறிய வெப்பம் தானாக இறங்கத் தொடங்கியது. ஃபைலுக்கு அடியில் உள்ளங்கையை மடித்து இடுப்புக்கு கீழான பக்கவாட்டில் அனைத்துச் சென்றவன், அனிச்சையாக அதன் மேல் பக்க அடிமுனையை இரு விரல்களால் மட்டும் பிடித்துத் தொங்கவிட்டபடியே, நேர்காணலுக்கு வந்திருக்கும் சக தோழர்களிடம் என்னை ஐக்கியப்படுத்திக் கொள்ள ஆரம்பித்தேன்.!!

கடைசியில் மொத்தமாக 112 பேர் தேறினார்கள். எல்லோருக்கும் ஒரு படிவம் கொடுத்து பூர்த்தி செய்து வாங்கப்பட்டது. எல்லோரும் ஒருவருக்கொருவர் சந்தேகங்களைக் கேட்டு சரி செய்து பூர்த்தி செய்ய,. நான் மட்டும் வேண்டுமென்றே, என் புத்திக்கு சரி என்று படுவதை பூர்த்தி செய்து முதல் ஆளாக நீட்டினேன். எல்லோருக்கும் என்னைப் பார்த்து பின் காதில் வெப்பம் ஏறியிருக்கும் போல் தோன்றியது!.

சரியாக பத்து பத்துக்கெல்லாம் ஒரு காப்பியும் இரண்டு மேரி பிஸ்க்கெட்டும் கொடுத்தார்கள். வழுவழுவென்ற தரை. பொதுவாக எங்க ஊர்ல அதை சலவைக் கல் என்போம். 15 அடிக்கும் அதிகம் உயரமான மேல் தளம். ஃபேன் கண்ணில் படவில்லை.  ஆனாலும் கொஞ்சம் குளிராகத்தான் இருந்தது. ரம்மியமான வாசம் வீசிக் கொண்டிருந்தது. இலேசாக ஏதோ வயலின் இசை ஒலித்துக் கொண்டிருந்தது. இரண்டு நிமிடம் கூர்ந்து கவனித்த பின்பு அது லால்குடி என்று தெரிந்தது.

கசமுசவென இருந்த பேச்சு சத்தம், கால் மணி நேரத்தில் தானாகவே அடங்கிவிட்டிருந்தது. ஒரு இருபது பேர் வரை பெரிய அப்பாடக்கர்களாகத் தெரிந்தார்கள். அதில் கிட்டத்தட்ட எல்லோருமே வெள்ளையாக இருந்தார்கள். பலர் மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தார்கள். கூடுமானவர ஆங்கிலத்திலேயே பேச முயற்சித்துக் கொண்டிருந்தார்கள்.

பல ஊர்களிலிருந்தும், மாநிலத்திலிருந்தும் வந்திருந்தாலும் அந்த ஒரு சிறிய கூட்டம் மட்டும், மோப்பம் பிடித்து ஒரு அணியாக கூடிக் கொண்டார்கள். மற்றவர்கள் அவர்களிடமிருந்து இயல்பாகவே பிரிந்து விட்டிருந்தார்கள்.

ஆனாலும் ஏதோ ஒரு வேற்று உலகத்தில் இருப்பது போலவும், எங்க ஊரு பசங்கள விட நான் சற்று உயர்ந்த நிலைக்கு வந்து விட்டது போன்ற மன உயர்வு நிலை ஏற்பட்டிருந்ததை என்னால் மறைக்க முடியவில்லை. உடனே நண்பன் சாமிநாதனிடம் பேசி இதையெல்லாம் சொல்ல வேண்டும் போல் இருந்தது.

சரியாக பத்தரை மணிக்கெல்லாம் அனைவரும் ஒரு ஹாலுக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். நான்கு விடைகளில் ஒன்றை தெரிவு செய்யும் படியான முப்பது கேள்விகளைக் கொண்ட ஒரு படிவம் கொடுக்கப்பட்டது. 11 மணிக்குள் திருப்பித் தந்துவிட வேண்டும் என்ற கட்டளையுடன் எழுத பணிக்கப்பட்டோம்.

இன்னும் ஒரு 50 பேர் கூடுதலாக அமரும் அளவிற்கான ஹால் அது. நல்ல குளிரடித்தது, ஏதோ ஒரு துவாரத்திலிருந்து குளிர் காற்று வருவது மட்டும் உறுதியானது! வெளிச்சத்திற்கு குண்டு பல்பு, ட்யூப் லைட் என்றில்லாமல் வேறு மாதிரி இருந்தது. மிகவும் அழகாய் தெரிந்தது.....

அமர்வதற்கு இலேசாக குஷன் செய்யப்பட்ட இருக்கை, எழுது பலகையும் இணைக்கப்பட்டிருந்தது புது மாதிரியாக இருந்தது. எல்லோரும் எழுதிக் கொண்டிருந்தார்கள். டிக் தானே செய்யச் சொல்லியிருக்கின்றார்கள், இவர்கள் என்ன எழுதுகின்றார்கள் என்றே புரியவில்லை.

என் வேலையை ஆரம்பித்தேன். ஒரு கேள்வி கூட பெயிண்ட்டுக்கு தொடர்புடையதாக இல்லை.. பொதுவான வினாக்கள் தான். ஒரு வினா போஃபோர்ஸ் பற்றிக் கூட கேட்டிருந்தார்கள். கேள்விகளை படித்தவுடன் முதலில் மனதுக்கு தோன்றிய பதிலை டிக் செய்து கொண்டே வந்தேன். பத்து நிமிடத்தில் முடிந்து விட்டது. இதையும் முதல் ஆளாக நானே கொடுத்தேன். எல்லோரும் என்னை ஒரு மாதிரியாகப் பார்ப்பது புரிந்தது.

சரியாக 11.30 க்கெல்லாம் ஒரு பேப்பர் கொண்டுவந்து அங்கிருந்த நோட்டீஸ் போர்டில் ஒட்டி, இதிலிருக்கும் 50 பேர் மட்டும் மீண்டும் ஹாலுக்கு உள்ளே வரவும், மற்றவர், அடுத்த அறையில் உங்களுக்கான போக்குவரத்து தொகையை பெற்றுக் கொண்டு கிளம்பவும் என்று ஸ்கர்ட் போட்ட ஒரு பெண்  சொல்லிவிட்டுச் சென்றது.

அனைவரும் அரக்கப்பரக்க அந்த போர்டை நோக்கி ஓடினார்கள். சிலர் துள்ளிக் குதித்தார்கள். நான் உட்கார்ந்தே இருந்தேன். மறுபடி காதுக்குப் பின்னால் வெப்பம். மூன்று நிமிடமாகியும் அந்த இடத்தில் கூட்டம் குறைந்தபாடில்லை. கண்ணாடி போட்ட ஒருவன் என்னிடம் வந்து கை கொடுத்து விட்டு உள்ள போங்கன்னு சொல்லிட்டு, காசு வாங்க அடுத்த அறைக்குச் சென்றான்.

உள்ளே 50 பேர் கொஞ்சம் சந்தோஷத்துடன் அமர்ந்திருந்தோம். 45, 50 மற்றும் 60 வயது கொண்ட மூவர் அணி ஒன்று கோட் சூட்டுடன் வந்து மேடையில் அமர்ந்தது. தங்கள் கம்பெனியைப் பற்றி ஆங்கிலத்தில் பேசினார்கள்.  சரியாக 12 மணிக்கு அனைவரிடமும் 10 கேள்விகள் அடங்கிய வினாத்தாளும், பதில் எழுத பத்து வெள்ளைத் தாள்களும் தரப்பட்டு, தனித்தனியே முன்பு போல அமர வைக்கப்பட்டோம். ஒரு மணிக்குள் முடித்துவிட வேண்டும் என்று கட்டளை.

முழுக்க முழுக்க பெயிண்ட் சம்பந்தப்பட்ட கேள்விகள் தான், சிலது அவர்கள் கம்பெனி பற்றியும் இருந்தது. எல்லாமே எனக்குத் தெரிந்தது போலத்தான் இருந்தது. சிலர் அரை மணி நேரத்திலேயே எழுந்து  விட்டனர். பலர் யோசித்து யோசித்து எழுதினர். எனக்கு சரியாக 40 நிமிடங்கள் தேவைப் பட்டது. மீண்டும் ஒரு முறை படித்துப் பார்த்து விட்டு கொடுத்தேன். இன்னும் ஒரு பத்து பேர் எழுதிக் கொண்டிருந்தார்கள்.

எல்லோருக்கும் அருமையான மதிய உணவு அளிக்கப்பட்டது. இவ்வளவு அதிக மெனுவுடனும், சுவையுடனும், நாகரீகத்துடனும், ஒருவித நளினத்துடனும், கண்டு கேட்டிராத பல பதார்த்தங்களுமாக பரிமாறப்பட்ட ஒரு விருந்தை, அதுவரையிலும் நான் சென்றிருந்த எந்தவொரு பெரிய பணக்கார வீட்டு கல்யாணத்திலும் கூட சாப்பிட்டதில்லை!.

சாப்பிடும் போது வீட்டிலிருக்கும் அப்பா, அம்மா, அக்கா நினைவெல்லாம் தானாகவே வந்து சென்றது. இன்னிக்கு என்ன சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்....? நாளைக்கு ஊருக்குச் சென்றவுடன், சொர்கலோகம் மாதிரியான இந்த இடம், சாப்பாடு பற்றியெல்லாம் அவர்களிடம் சொல்ல வேண்டும். ரொம்ப பெருமையாகவும், சந்தோஷமாகவும் இருக்கும் அவர்களுக்கெல்லாம்.

இரண்டு மணிக்கெல்லாம், மீண்டும் ஒரு லிஸ்ட் ஒட்டப்பட்டது. என்னையும் சேர்த்து பத்துப் பேர் அதில் இடம்பிடித்திருந்தனர். இவ்வளவு பெரிய சந்தோஷத்தை ஏற்கும் அளவிற்கான பக்குவம் அப்பொழுது என் மனதிற்கு வந்திருக்கவில்லை.  விம்மி வெடித்துவிடும் போலிருந்தது. அப்பா, அம்மாவை என் ஊரை, ஊரில் உள்ள அனைவரையும் பார்த்துக் கத்திச் சொல்ல வேண்டும் போல் இருந்தது.

பிடித்த மாதிரி செருப்பு, ஆல்ட்டர் பண்ணாத பேண்ட், சட்டை, கைக்கு சொந்தமாக வாட்ச், சொந்தமாக ஒரு செகண்ட் ஹேண்ட் சைக்கிள், லைப்ரரியில் நுழைந்தவுடன் கைக்குக் கிடைக்கும் பிடித்த பத்திரிகை, சஞ்சிகை.....  இப்படி நிறைய சொல்லலாம், இதுவரையிலும் என் வாழ்வில் அதிக சந்தோஷங்களை எப்பவாவது கொடுத்திருந்த சந்தர்ப்பங்கள்.

ஆனால் எனது கற்பனை அல்லது கனவில் கூட தோன்றியிராத ஒரு இடத்தில் கிடைக்கப் போகும் வேலையும், அதனால் எங்கள் தலைமுறையே அடையப்போகும் உச்சமும், எனக்கு புது அனுபவம் தான்.

ஒவ்வொருவராக உள்ளே அழைத்தனர். பத்திலிருந்து இருபது நிமிடங்களுக்குள் ஒவ்வொருவரும் வெளியேறினர். மற்றவர்களைப் போல நான் யாரிடமும் சென்று என்ன கேட்டார்கள் என்று கேட்கவில்லை. எட்டாவது ஆளாக அழைக்கப்பட்டு உள்ளே  நுழைந்தேன்.

ஐந்து பேர் கோட் சூட்டுடன் அமர்ந்திருந்தார்கள். ஒரே ஒருவர் மட்டும் நம்ம பாஷை பேசுபவர் போல தெரிந்தார். சர்டிஃபிகேட்ஸ் கேட்டார்கள் கொடுத்தேன். பார்த்தார்கள். குடும்பம், வருமானம் பற்றியெல்லாம் கேட்டார்கள். பெரிதாக ஈடுபாடு காட்டி கேள்வி கேட்பதாகப் படவில்லை. ஹைதராபாத் அல்லது பம்பாயில் வேலை கொடுத்தால் செல்வாயா? என்றார்கள். சரி என்றேன். வீட்டிற்கு கடிதம் வரும் என்றார்கள். வெளியேறினேன்.

போக்குவரத்து செலவுக்கான தொகையைப் பெற்றுக்கொண்டு கிளம்பினேன். மறுநாள் வீட்டில் அக்காவுடன் சேர்ந்து அனைத்து கதையையும் ஒன்று விடாமல் சொல்லிக் கொண்டே  மீன் குழம்பு சாப்பிட்டேன்.

நிச்சயம் கிடைச்சுடும்டா...ன்னு அக்கா நம்பிக்கையுடன் சொல்லியது. ஆனால் அப்பா மட்டும் அடுத்த இண்டர்வ்யூவுக்கு தயார் செய்து கொள். இந்த வேலை வரும்வரை காத்திருக்க வேண்டாம். நம் முயற்சி தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்றார்....  இது உனக்கு நல்ல அனுபவமாக அமையும். என்றது ஏனோ கொஞ்சம் நெருடலாகவே இருந்தது.

........................இருபது வருடங்களுக்கும் மேல் ஓடி விட்டது. இன்னும் அந்தக் கம்பெனி அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வந்து சேர்ந்திருக்கவில்லை!

புது வீடு கட்டுவதற்காக அய்யர் கடையில் சென்ற வாரம் வாங்கிய சாமான்களின் பில்லை அப்பா எடுத்து வந்தார்கள்....

என்னப்பா? ஐயர் கடைல வாங்கல? வேற ஏதோ கடை பேர்ல பில்லுல போட்டிருக்கு?

இல்லப்பா... கடை அது தான்..... ஆனா ஓனர் மாறிட்டாரு!  ...ஏம்ப்பா அவங்களுக்கு என்ன ஆச்சு?

காலம் மாறிடிச்சிடா தம்பி. எவ்ளோ படிச்சிருந்தாலும், திறமை இருந்தாலும் உங்களை எல்லாம் வேலைக்கு எடுக்க மாட்டாங்கன்னு சொன்னாங்க.......


ஆனா இன்னிக்கு நீ நூறு பேருக்கு சம்பளம் கொடுக்கற முதலாளியா மாறிட்ட, ஆனா அவங்க எல்லாத்தையும் வித்து சுட்டுட்டு, கெட்டும் பட்டணம் போன்னு கிளம்பிட்டாங்க....


வாழ்க்கைச் சக்கரம்கறது தனி மனித வாழ்க்கைக்கு மட்டுமில்ல, ஒரு கூட்டம், ஒரு இனத்துக்கே கூட பொருந்தும்னு சொல்லிக்கிடே வெளிய போயிட்டார்.

எதுக்கோ விடை கிடைத்த மாதிரி இருந்தது......!!!
Tuesday, June 19, 2012

மோட்டுவலையப் பார்த்து யோசிச்சது..!!

இது என் வலைப்பூவின் புதிய பரிமாணம்.!

சில சமயங்களில் இரவு நேரத்தில் தூக்கத்திற்கு மனதும் மூளையும் ஒன்றிணைந்து தயாராகிக் கொண்டிருக்கும் நேரத்தில், அன்று முழுமைக்கும் நாம் கடந்து வந்த பற்பல மனிதர்கள், காட்சிகள், சம்பவங்கள், இசை, சண்டை சச்சரவுகள், சுக துக்ககங்கள்.... என்று எல்லாவற்றிலுமிருந்து, சிலவை மட்டும் நம் மனதின் அடியில் சம்மணமிட்டிருக்கும்.

அந்த நினைவின் வெளிப்பாடு, வேறு சில பரிமாணங்களுடனோ அல்லது முன்பொறு நாள் நம் வாழ்வில் நடந்திருந்த இதற்கு இணையான வேறொரு சம்பவத்தின் முளை விட்ட விருட்சமாகவோ இருந்திருக்கும். அப்படிப்பட்ட நினைவுகளின் தொகுப்பை அவ்வப்பொழுது தொகுத்து பதிவாக்கினால் என்ன? என்று எழுந்த சிந்தனையின் கோர்வை  தான் என் வலைப்பூவின் இந்த புதிய பரிமாணமாக வந்திருக்கிறது. 

தொடர்ந்து அவ்வப்பொழுது, சீரான இடைவெளியில் இந்த மாதிரியான என்னுடைய சிந்தனைகளை உங்களிடம் பரிமாறி, வம்படி வழக்காக சாப்பிடச் சொல்வேன்!!!!!!
****************************************************************************************

சமீபத்தில் கலைஞர் தொலைக்காட்சியில் தேவர் மகன் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. நல்ல இளமையோடு இருந்த காலத்தில் வந்த படம்.  திருமணத்திற்கு முன் காதலித்துக் கொண்டிருந்த வசந்தகால சமயத்தில் வந்த படம் அது.

இளங்கலை படிக்க ஆரம்பிக்கும் போதே, கமலின் தீவிர ரசிகனாக மாறிவிட்டிருந்தேன். அதனால் கமல் படம் என்றாலே அதிலுள்ள நல்லது கெட்டதுகளையெல்லாம் ஆராயாமல், கைதட்டி, விசிலடித்து ஆர்பாட்டத்துடன் படம் பார்ப்போம்...

இந்தப் படமும் அப்பொழுது அப்படித்தான் பலமுறை என்னால் பார்க்கப்பட்டது.

ஆனால் இப்பொழுது அப்படத்தைப் பார்க்கும் பொழுது, சாதி, சமூகம், அது தொடர்பான காட்டுமிராண்டித் தனங்கள் எல்லாம் பற்றி மனம் சென்று கொண்டிருந்தாலும்.....

லண்டன் கல்லூரித் தோழியும், காதலியுமான கௌதமியை அழைத்துக் கொண்டு, ஊருக்கும், தன் சாதி சனத்திற்கும் ஒவ்வாத ஒப்பனையுடன் ஊரைச் சுற்றிக் காண்பித்துக் கொண்டிருப்பார் கமல்.

அப்பொழுது கம்புச்சண்டை பயிற்றுவிக்கும் எதிர்கோஷ்டி ஆசாமி கமலை வம்புக்கிழுக்க, இவர் அதை புரிந்து கொண்டு நகர, அவன் விடாமல் வம்பிக்கிழுத்து முதலில் விளையாட்டுக்கு என்று ஆரம்பிக்கும் சண்டை, பிறகு தீவிரமாக மாறி அவன் நெற்றியில் சுண்ணாம்பு பொட்டு வைக்கும் போட்டியாக அதி தீவிரம் எடுக்கும்.

திறமையான இயக்குனர்களின் படங்களில் சில முக்கிய காட்சிகளில் இளையராஜாவின் பின்னனி இசை அபாரமானதொரு பங்களிப்பைத் தருவதாக அமைந்துவிடுவதுண்டு

இந்தக் காட்சியிலும் அப்படித்தான். அந்தக் காட்சிக்கு சம்பந்தப்பட்ட நடிகர்கள் உட்பட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் ஒரு பக்கம் என்றால், சரி பாதியாக இன்னொரு பக்கத்தில் இளையராஜாவின் தாளக்கட்டு மட்டும் நிற்கும்!

விளையாட்டாக கம்பு சுற்றிவிட்டு வெளியேறும் கமலை ஒடி வந்து பின்னாலிருந்து எதிர் ஆசாமி அடிக்க, அதன் பிறகு தீவிரமான சண்டைக்கு தயாராகி உடைகளை மாற்றி களமிறங்குவார் கமல்.

அப்பொழுது தான் ஆரம்பிக்கும் இளையராஜாவின் தாளக்கட்டு வாத்தியம். முதலில் ஒற்றை வாத்திய இசைக் கருவியில் தான் ஆரம்பிக்கும். சதுஸ்ர ஜாதி தாளத்தில் மூன்று ரவுண்டு ஒரே கோர்வையாக வந்த பிறகு, இன்னுமொரு துணை தாள வாத்தியம் திஸ்ர நடையாக உள்ளே நுழையும்.......

அதுவரையிலும் கமல்ஹாசன் மற்றும் ஒளிப்பதிவாளரின் கைகள் சற்றி ஓங்கியிருந்தது என்றால், அந்த புதிய தாள வாத்தியம் திஸ்ர நடையாக உள்ளே நுழைத்தவுடன், இசை என்னும் இறைவன், பார்வையாளர்களின் மூளையில் போய் சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்டு......

வேறு எதையும் பார்க்காதே...., கூர்ந்து கவனி....., இருக்கை நுனிக்கு வந்து உட்கார்ந்து பார்...., ஆஹ்.. இப்பொழுது கைத்தட்டு....., இப்பொழுது ஆரவாரம் செய்..... சரி இப்பொழுது லேசாக சிரித்துக் கொண்டே இருக்கையில் பின்நகர்ந்து சாய்ந்து உட்கார்ந்து பார்...... என்று ஆணையிட்டுக் கொண்டே இருக்கும்!

கிட்டத்தட்ட இரண்டரை நிமிடங்கள், நான்கு கோர்வைகளை முதல் மூன்றும் தாள வாத்தியமாகவும், நான்காவதை லய வாத்தியமாகவும் உள் நுழைத்து.... அருமையானதொரு ஆலாபனையாக......

அப்பப்பா, கண்களில் நீர் கோர்த்து விட்டது. இதை யார் சாதித்தது? இளையராஜாவா? இல்லை அவரை வேலை வாங்கிய கமல்ஹாசனா? .......

எதுவாக இருந்தாலும், அது வெளிப்பட்டது இளையராஜா மூலம் தான்........

எழுந்து நின்று கரவொலி செய்கின்றேன் இளையராஜா அவர்களே!! உங்கள் மேல் இருக்கும் வருத்தம் எல்லாம், இதை ஏன் எல்லா இடத்திலும் நியாயமாக செய்ய தவறுகின்றீர்கள் என்பது தான்...!


 சாந்து பொட்டு பாட்டு - இது ஆரம்பிக்கும் முன்பே அந்த தாளக்கட்டு ஆரம்பித்து விடும். வெறும் பாட்டில் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து தான் ஆரம்பிக்கும். படத்தோடு பார்க்கும் போது இன்னும் அற்புதமாக இருக்கும்.

************************************************************************************

அது 1996 ஆம் வருடத்தின் மார்ச் மாத பின் மாலைப் பொழுது. அபுதாபில் ஒரு பணக்கார ஷேக்கின் உல்லாசப் படகு அது. அப்படகின் ஓட்டுனரும் என் நண்பருமாகிய பாபநாசம் சிவாவும் நானும் மட்டும் அந்த படகிலிருந்தோம்.

படகு, அலைகளெல்லாம் கடந்த... அமைதியாக நீர் தளும்பிக் கொண்டிருக்கும் கடற்பகுதியில் நிலை கொண்டிருந்தது. நண்பர் ஒரு தீவிர இளையராஜா ரசிகர். பேச்சு இளையராஜா, இப்பொழுதெல்லாம் சொர்ணலதாவை அதிகம் பயன்படுதுவதில்லை, மீண்டும் சித்ராவுக்கே முக்கியத்துவம் தருகிறார் என்ற ரீதியில் போய்க்கொண்டிருந்தது.

அப்பொழுது நண்பர், படகிலிருந்த அன்றைய லேட்டஸ்ட் ஆடியோ ஸிஸ்டத்தில் “போறாளே பொன்னுத்தாயி” பாடலின் சோக ட்ராக்கை ஒலிபரப்பச் செய்தார். அதை ஓட விட்டு அரையிலிருந்து வெளிவந்து கடலை பார்த்தவாறு நின்றிருந்தேன்.

வீட்டு நினைவுகளும், அப்பொழுது காதலியாக இருந்த இப்பொழுதைய என் மனைவியின் நினைவுகளும் மனம் முழுக்க விரவியிருந்தது...., காதுகலூடே அந்த பாடலும் உள் நுழைந்து மனதிலிருந்த அந்த நினைவுகளையெல்லாம் மெல்ல வெளியேற்றி கொஞ்சம் கொஞ்சமாக விரவ ஆரம்பித்து உச்சத்தில் தீவிர ஆக்கிரமிப்பாக மாறிப்போனது.

அந்தக் குரலில் இருந்த ஏதோ ஒன்று, மனம் என்ற வஸ்துவை மசாஜ் செய்து கொண்டிருந்தது. எதிரே தெரிந்த சில அங்குலங்கள் மட்டுமே நீண்டிருந்த அலைகளைக் கொண்ட கடல் நீரும், தலைச்சீவலை கன்னாபின்னாவென்று கலைக்காத வெக்கையிலிருந்து குளிருக்கு மாறும் இடைவெளியிலிருந்த அந்த இதமான காற்றும், கண்ணுக்கெட்டிய தூரத்தில் பெரிதாய் இளஞ்சிவப்பும் மஞ்சளுமாய் தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருந்த சூரியனும்......

எல்லாம் மறைந்து போய் அந்த தேவதையின் குரல் மட்டுமே மனதை ஆக்கிரமித்தது போதாதென்று மூளையையும் அபகரித்துக் கொண்டிருந்தது!

அந்த நிமிடங்கள் தான் என் மனம் கொஞ்சம் கொஞ்சமாக ஜானகியிலிருந்து சொர்ணலதாவுக்கும், இளையராஜாவிலிருந்து ஏ.ஆர். ரஹ்மானுக்கும் இடம் பெயர்ந்து இன்றளவும் அதிலிருந்து விடுபடாத மயக்கத்திலேயே நின்று கொண்டிருக்கிறது!!!

எதைக் கொடுத்தாலும் தகும் அந்த எமகாத குரலுக்கு!!  (இதை கிளிக்கி நீங்களும் அனுபவியுங்கள் அந்த சுகத்தை)

Monday, June 18, 2012

கலைஞர் V/s கலாம்

இந்தியாவின் முதன்மைக் குடிமகனுக்கான தேடல் அல்லது தேர்தலுக்கான முஸ்தீபுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தியாவைப் பொருத்தவரை வழக்கம் போல இதுவும் இன்னுமொரு தேர்தல் தான் என்றாலும் தமிழகத்தில் நிலைமை அப்படி இருப்பதாகத் தெரியவில்லை.

ஒய்யாரக் கொண்டையிலே தாழம்பூவாம், கதையாகத்தான் இருக்கிறது, இங்குள்ள கலைஞர் எதிர்ப்புநிலை எடுத்துள்ள ஒரு சாராரின் இது தொடர்பான பேச்சுக்களும், செயல்களும்.

ஆம், குடியரசுத் தலைவர் தேர்தல் பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் அடிபடத் தொடங்கியவுடனேயே, தன் கட்சி எம் எல் ஏக்களும் அமைச்சர்களும், பத்திரிகைகளும் நடத்தும் முகஸ்துதி மேளாவில் தினம் தினம் பரவசப்பட்டு ஏகாந்த மனநிலையில் இருக்கும் ஜெயலலிதா,  தான் தான் அடுத்த பிரதமர் என்று காரியம் சாதிக்கும் கூட்டம் கச்சிதமாக உசுப்பேற்றி விட்ட மனநிலையோடு சங்மா என்ற பழங்குடி இனத்தவரைப் பிடித்து இவர் தான் அடுத்த குடியரசு தலைவர் என்று அறிவித்து விட்டார்.

ஏலம் எடுக்கப்போன முதலாளியின் அல்லக்கை தாறுமாறாக ஏலத்தை ஏற்றிவிட்டது போல ஆகிவிட்டது பிஜேபிக்கு. ஒரு வேளை அவர்களுடைய தேர்வும் சங்மா தான் என்றிருந்திருந்தால் கூட, முந்திரிக் கொட்டை போல தன்னிச்சையாக ஜெயலலிதா அறிவித்து விட்ட நிலையில் அதை ஏற்றுக் கொண்டால், முப்பது வருடங்களுக்கும் மேலாக உழைத்து, கொண்டுவந்து சேர்த்திருக்கும் இந்தியாவின் இரண்டாவது பெரிய தேசியக் கட்சி என்ற பிம்பம் அடியோடு தவிடுபொடியாகிவிடும் அபாயம் இருக்கிறது அவர்களுக்கு..

அதனால் ஙே.... என்ற விழிப்பையே பதிலாக ஊடகங்களுக்கும், ஜெயலலிதாவுக்கும் சொல்லிவிட்டு அமைதி காத்துவிட்டது பி ஜே பி.

சரியான தருணம் கனிந்து விட்டதை உணர்ந்து களமிறங்கிய காங்கிரஸ், நீண்ட கால பிரதமர் கனவில் இருக்கும் பிரணாப் முகர்ஜிக்கு, அதற்கான வாய்ப்பு தான் வழங்கப்படவில்லையே என்ற ஆதங்கத்தை, அவருக்கான வாழ்நாள் சாதனையாக.... குடியரசுத் தலைவர் பதவியில் அமர்த்துவதன் மூலம் ஓரளவுக்கு சமண் செய்து விடலாம் என்று காய் நகர்த்தத் தொடங்கி விட்டது.

முதல் கட்டமாக முறைப்படி அதற்கான தாக்கிதுகளை சரியான தூதுவர் மூலமாக அனைத்து கூட்டணிக் கட்சித் தலைவர்களிடமும் அனுப்பி அவர்களிடம் பேசி அதற்கான ஓப்புதலையோ அல்லது மாற்று ஏற்பாடுகளையோ திரட்டிக் கொண்டது.

மிக முக்கிய இரண்டு தோழமைக் கட்சிகளில் ஒன்றான திமுக அதை ஏற்றுக் கொண்டு விட்ட நிலையில், இன்னொரு கட்சியான திரிணாமுல் காங்கிரஸின் தலைவி மம்தா பூடகமாக பேசிக்கொள்ளலாம் என்று அனுப்பிவிட, காங்கிரஸ் தலைமையோ, மம்தாவை தவிர்த்து பர்முடேஷன் காம்பினேஷன் கணக்கைப் போட ஆரம்பித்து விட்டது.

தன்னைவிட குறைந்த வாக்கு சதவிகிதம் வைத்துள்ள ஜெயலலிதாவே ஒரு வேட்பாளரை அறிவிக்கும் போது, தான் ஏன் ஒருவரை நியமித்து வெற்றிபெற வைக்க முடியாது? என்று மம்தா பானர்ஜி எண்ணிவிட்டாரோ என்னவோ? ......ஆரம்பித்து விட்டது குடியரசு தலைவர் தேர்தலில் அரசியல் சடுகுடு!

சோனியா சொல்லும் பிரணாப்பை, தான் ஏற்க முடியாது என்று நடுரோட்டில் வைத்து நிருபர்களிடம் சொல்லி விட்டு, முலாயம் வீட்டில் போய் முகம் கழுவிக் கொண்டு அவரோடு வெளியே வந்து, அப்துல்கலாம் தான் அடுத்த குடியரசு தலைவர் என்று ஒரு குண்டை போட்டு விட்டு ரயிலைப் பிடிக்க ஓடிவிட்டார்! 

ஜெயலலிதாவிடம் ஆரம்பத்திலேயே உச்சந்தலையில் அடி வாங்கிய பி ஜே பி இப்பொழுது தான் லேசாக மயக்கம் தெளிந்து, தன்னுடைய தேசியக் கட்சி அந்தஸ்த்தை தக்க வைத்துக் கொள்ள ஏதாவது செய்ய வேண்டுமே என்று அரக்கப்பரக்க விழிக்க ஆரம்பித்து விட்டது.

ஆனால் அக்கட்சியில் அனைவருமே பிரதமர் கனவில் இருப்பதால், தங்கள் பெயர் யார் மனதிலும் தோன்றிவிடக் கூடாது என்று தனித்தனியாக யாகங்கள் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்!

தன் பெயரை யாராவது சொல்லிவிட்டால் என்ன செய்வது என்று பயந்து போய், அத்வானியே வேட்பாளர் வேட்டைக்கு கிளம்பி விட்டார்!!!

சாதாரணமாக, காங்கிரஸில் ஆயிரம் கோஷ்டிகள் இருக்கும். ஆனால் அத்தனை கோஷ்டிகளுமே ஒரு தலைமைக்கு கட்டுப்பட்டிருக்கும். ஆனால் பி ஜே பியிலோ கோஷ்டிகள் எதுவும் பெரிதாக வாலாட்டாது ஆனால், நூற்றுக்கணக்கான தலைவர்கள் மட்டும் இருப்பார்கள்! அவர்கள் யாருமே அதிகாரப்பூர்வ தலைவர் சொல்வதை மறந்தும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்!!

சங்மா பெயரைச் சொன்னாலோ தங்கள் அனைவரின் குடுமியும் ஜெயலலிதா கையில் நோகாமல் சென்று குடிபுகுந்து விடும் என்பதையும் தெளிவாக புரிந்து வைத்திருந்தனர்.

இந்த தருணத்தில் தான், குழம்பிய குட்டைக்குள் மட்டுமே மீன் பிடிக்கத் தெரிந்த சுனா சாமி இது தான் சரியான நேரம் என்று அப்துல் கலாம் பெயரை அறிவிக்கிறார். 

ஆஹா, இவரு ஏற்கனவே சோனியாவுக்கு கடுக்கா கொடுத்தவராச்சே, பதவியிலிருக்கும் போதே ஜெயேந்திரரிடம் சம்மணமிட்டு தரையில் அமர்ந்த நல்ல பிள்ளையாச்சே, குஜராத்தில் கொத்துக் கொத்தாக தன் இன மக்களை கொன்று குவித்தாலும் எதுவுமே நடக்காதது போல முகத்தை வைத்துக் கொண்டிருந்தவராச்சே, தமிழ் அது இதுன்னு குறுகிய வட்டத்தில் அடங்காமல், ராஜபக்‌ஷேவானாலும், கூடங்குளம் அணு உலையானாலும், இந்திய இறையாண்மை என்னும் குடையின் நிழலில் நட்பு  பாராட்டுபவராச்சே......  என்று பல ச்சேக்களை ஒன்றிணைத்து, “இது நம்ம ஆளுன்னு” அனைத்து பி ஜே பி தலைவர்களும் சுனா சானாவை ஆரத் தழுவிக் கொண்டார்கள்.

இதில் இன்னொரு (சின்ன) தொலைநோக்கு லாபமும் அவர்களுக்கு இருந்தது. காங்கிரஸ் கூட்டனியின் முக்கிய பங்குதாரரான மம்தாவின் வேட்பாளரை நாமும் ஆதரிச்சிட்டா, மத்திய அரசுக்கு சீக்கிரமாவே ஆப்பு அடிச்சிடலாம்கிறது தான் அது! (அதுக்கப்பறம் இவிங்க ஜெயிச்சி ஆட்சி அமைப்பாங்களாங்கிறது எல்லாம் வேற விஷயம்)

ஆனா இன்னொரு பிரச்சினையும் இதுல இருக்கு. அது என்னன்னா? மம்தா சொன்ன ஆள ஆதரிச்சா, ஜெயலலிதாவின் ருத்ர தாண்டவம் அரங்கேற்றப்பட்டு, அடுத்த தபா மத்தியில ஆட்சியமைக்கலாம் என்ற கொஞ்சநஞ்ச கனவும் எரிந்து சாம்பலாகிவிடுமே?! என்ன செய்வது?

இருக்கவே இருக்காரு, ஜெயலலிதா எவ்ளோ அடிச்சாலும் தாங்குற நம்ம அத்வானி! அவரு வந்து ஜெயாவ பாக்குறாரு.

ஓட்டு எண்ணிகைய கூட்டி கழிச்சி பார்த்தா, கையோட கை தான் ஓங்கி இருக்கு. நீங்க சொன்ன சங்மாவுக்கு எல்லாருமா சேர்ந்து சங்கு ஊதிடுவாய்ங்க. அது சங்மாவோட தோல்விங்கறத விட உங்களோட (ஜெயலலிதாவோட) தோல்வின்னு தான் கருணாநிதி பிரச்சாரம் பண்ண ஆரம்பிச்சிடுவாரு.

அது உங்களோட வருங்கால டெல்ல அரசியல் கனவையே அடி மரத்துல ஆசிட் ஊத்துன மாதிரி கருக்கிடும். அதனால நாம எல்லோரும் சைலண்ட்டா சங்மாவுக்கு சங்கு ஊதிட்டு, கலாமை ஆதரிக்கும் பிரச்சாரத்தை ஊதி விட்டோம்னா,  நமக்கு ரெண்டு பலன் கிடைக்கும்.

அது என்னன்னா? ஒன்னு காங்கிரஸ் கூட்டணிலேருந்து மம்தாவை கழட்டி, சீக்கிரமா தேர்தல் வரவழைத்து, அவங்களோட சேர்ந்து மெகா கூட்டணி அமைத்து மத்தியில ஆட்சியைப் பிடிச்சிடலாம். ரெண்டாவதா: கருணாநிதி ஏற்கனவே காங்கிரஸ் வேட்பாளரைத் தான் கூட்டணி தர்மப்படி ஆதரிப்போம்னு சொல்லிட்டதால, அதுலேர்ந்து மாற மாட்டார். அத் வச்சே, ஒரு தமிழரான, சிறுபான்மை சமூகத்தவரான, கலாமை எதிர்க்கும் கலைஞர்னு....  பிரச்சாரம் பண்ணி, அவர் ஒரு இனத் துரோகி மட்டுமல்ல, இஸ்லாமியத் துரோகின்னும் பரப்புரை செய்ய நல்ல வாய்ப்பு கிட்டும்னு......

அத்வானி சொல்லச் சொல்ல, .... பட் இந்த கடேசி பாய்ண்ட் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மேன்!  அப்டீன்னு ஒத்த வரியில ஜெ. தன் முடிவை அறிவிச்சிட்டார்!

ஆனா இதெல்லாம் எதுவுமே புரியாத, ஒரு அப்பாவி பொதுஜனம், ஏன் சார், இப்ப இருக்குற கண்டிஷன்ல கலைஞர் கலாமை ஆதரிச்சாலும் கூட பிரணாப் தான சார் ஜெயிப்பார். அப்பறம் ஏன் ஜெ. அத்வானில்லாம் தேவையில்லாம கலாமை ஆதரிச்சி நிப்பாட்டிவச்சி.....  ஒரு ஜனாதிபதியா இருந்தவரை தோற்கடிச்சி அசிங்கப்படுத்தப் பார்க்குறாங்க?

அட அப்ரசண்டி, எங்களுக்கும் இந்த கணக்கெல்லாம் தெரியும்டா வெண்ணை, ஆனா, ஒரு மாதிரி தமிழின துரோகின்னு நாங்கள்லாம் ஃபிலிம் காட்டிட்டிருகற அந்தக் கருணாநிதிய, இஸ்லாமியர்களின் எதிரின்னு இன்னோரு டர்னிங் பாய்ண்ட்டோட நல்ல மசாலா படமா காட்ட இந்த திரைக்கதை ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்குண்டா!!!

இப்படிக்கு ஜெ. & அத்வானி மைண்ட் வாய்ஸ் கூட்டறிக்கை!!!Saturday, June 9, 2012

அவள் பெயர் சங்கீதா ...

எங்கள் நிறுவனம் படிப்படியாக வளர்ந்து கொண்டிருந்த நேரம் அது. வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க, நகரத்தை ஒட்டிய அந்த அழகான கிராமத்தின் மையத்திலிருந்த ஓடாமல் பூட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய பழைய அரிசி ஆலை ஷெட்டை வாடகைக்கு எடுத்து இயங்க ஆரம்பித்தோம்.

அதுவரையிலும் வெளியில் வாடகைக்கு மாவு அரைத்துக் கொண்டிருந்த நாங்கள், சொந்தமாக பெரிய பெரிய மிஷினெல்லாம் போட்டு ஜரூராக வேலை ஆரம்பித்தது. அதிகமான உற்பத்திக்கு ஈடு கொடுக்க வேலைக்கு நிறைய ஆட்களையும் எடுத்துக் கொண்டிருந்தோம். மிஷின் மற்றும் வாகன டிரைவர்கள் தவிர மற்ற அனைவரும் பெண் பணியாளர்களாகவே எங்களுக்கு தேவைப்பட்டது.

கிட்டத்தட்ட நாற்பதுக்கும் அதிகமான பெண்களை அந்த கிராமத்திலிருந்தும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும் வேலைக்கென தேர்ந்தெடுத்தோம். எந்த விளம்பரமும் செய்யாமலேயே, காற்றுவாக்கில் செய்தி பரவி, தினம் தினம் நான்கைந்து பெண்கள் வேலை கேட்டு வருவார்கள். அவர்களை நேர்காணல் நடத்தி, எங்கள் அறிவுக்கு எட்டிய வரையிலும் தகுதியானவர்கள் என்று நம்புபவர்களை மட்டும் பணியில் சேர்த்துக்கொள்வோம்.

ஒரு பத்து பேரை இப்படி வேலைக்கு அமர்த்தினால் நான்கு பேர் மட்டுமே சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு தொடர்ந்து வேலைக்கு வருவார்கள். மீதிப் பேர் இரண்டு நாளிலிருந்து இருபது நாட்களுக்குள் ஏதாவது காரணத்தைச் சொல்லி கழண்டு விடுவார்கள்.

இன்னும் இருபது நபர்களுக்கு மேல் ஆட்கள் தேவைப்பட்ட நிலையில் தான் ஒரு நாள் காலை பத்து மணி இருக்கும், பக்கத்து ஊரிலிருந்து ஐந்து பெண்கள் வேலை கேட்டு வந்திருப்பதாக காவலாளி சொல்லவும், உள்ளே வரச்சொன்னேன். எல்லாருமே திருமணமாகாதவர்கள். அதில் மூவருக்கு பதினாறு வயதுக்கு மேல் இருக்கும். ஆனால் இரண்டு பேருக்கு பத்து வயது ஆகியிருக்குமா என்பதே சந்தேகமாய் இருந்தது!

அந்த மூவரை மட்டும் சில அடிப்படைக் கேள்விகளைக் கேட்டுவிட்டு, வேலைக்கு சேர்த்துக்கொள்ளும் நடைமுறைக்காக மேலாளரிடம் அனுப்பி விட்டேன். அந்த இரண்டு குட்டிப் பெண்களிடமும்...  "அம்மாடி, நீங்க ரொம்ப சின்னப் பசங்களா இருக்கீங்க, உங்கள வேலைல சேர்த்தா அதிகாரிங்க வந்து எங்க மேல கேஸ் போட்றுவாங்க, அதனால நீங்க வீட்டுக்கு போயி அப்பா அம்மாட்ட சொல்லி படிக்கிற வழிய பாருங்க"ன்னு சொன்னேன்.

உடனே அதில் ஒரு குட்டிப் பெண், "சார், வீட்ல படிக்கல்லாம் வக்க மாட்டாங்க சார், எனக்கும் அதெல்லாம் பிடிக்காது சார்,

ஏம்மா பிடிக்காது?

இல்ல சார்... தெரில...  ஸ் கோலுக்கு போறதுன்னாலே புடிக்காது சார்..... அழுவ அழுவயா வரும் சார்......!!

அதான் ஏன்னு கேக்கறேன்.....

ம்ம்ம்.... இல்ல சார்.  வேலை குடுங்க சார்.  எனக்கு இது ரொம்ப பிடிச்சிருக்கு!  நடவுக்கு போனா அந்த சேறும் தண்ணியும் புடிக்கல சார். கம்பெனி வேலன்னா, எங்க தெரு அக்கால்லாம் நிறைய பேர் வர்றாங்க....  அவங்கள எல்லாம் பார்த்தா ஆசையா இருக்கு சார்...!!

இதுக்கு மேல என்ன சொல்லி இவளுக்கு புரிய வைப்பதுன்னு புரியாம, எப்படியாவது தட்டிக் கழிக்க வேண்டுமே என்ற எண்ணத்தில்...

உனக்கு சொன்னா புரியாது, போயிட்டு ஒரு வாரம் கழிச்சி வந்து பாரு என்று சொல்லி அனுப்பி விட்டேன். அந்தப் பெண் மட்டும் ரொம்ப சோகமாகவும், மெதுவாகவும், கம்பெனியை திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றது...

சற்று நேரத்திற்கெல்லாம் நான் இதை மறந்து மற்ற வேலைகளில் மூழ்கி விட, மதியம் சாப்பாட்டை முடித்து சற்று காலார நடக்கலாம் என்று எழுந்து வெளியே வந்த போது.....

சற்று தூரத்தில் மெயின் கேட்டுக்கு வெளியே தலையை மட்டும் நீட்டி செக்யூரிட்டி யாரிடமோ சண்டையிட்டுக் கொண்டிருந்தார். அவரை கூப்பிட்டு யாரப்பா? என்ன சண்டை? என்றேன்.

காலைல வந்த அந்தப் பொண்ணு தான் சார். இப்ப திரும்பவும் வந்து உங்கள பார்க்கணும்னு அடம்பிடிக்குது சார்.

சரி வரச் சொல்லு....

பாவாடை, சட்டையை எல்லாம் நன்கு இழுத்து விட்டுக் கொண்டு, தலையை வகிடெடுத்து வாரி, ஒழுங்காக பின்னிப் போட்டுக் கொண்டு, முகத்தை மலர்ச்சியாய் இருப்பது போல வைத்துக் கொண்டு என் முன்னே வந்து நின்றது !!

அதான் காலைலயே சொல்லிட்டேனே? திரும்பவும் வந்து நின்னா என்ன அர்த்தம்? எங்களுக்கெல்லாம் வேற வேலை வெட்டி இல்லன்னு நினைச்சியா? என்று உண்மையிலேயே சற்று கோபம் மேலிட்ட எரிச்சலுடன் கேட்டேன்.

என் கோவத்தைப் பற்றியெல்லாம் லட்சியம் பண்ணாதவளாய், வூட்டுக்கு போயி எங்கம்மாட்ட கேட்டேன் சார்..., எனக்கு போன மாசந்தான் 16 வயசு ஆச்சுன்னு சொன்னுச்சி சார். சோறு தண்ணி சரியா திண்ணாததால உடம்பு எளச்சி, சின்ன புள்ளயாட்டமா இருக்கேன்னு சொன்னிச்சி சார்.....!

என்னையறியாமல் சிரிப்பு வந்து விட்டது. அடக்கக்கூட முடியவில்லை. சிரித்துக் கொண்டே, அப்படியா? சரி அப்பன்னா போயி உங்க வீட்டு ரேஷன் கார்டை எடுத்துட்டு, உங்க அப்பாவை அழைச்சிட்டு வா. என்று அனுப்பி வைத்தேன்.

நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் கணக்கு நிர்வாகத்தை என் மனைவி தான் நிர்வகித்து வருகிறார். நாங்கள் இருவருமே கிளம்பி தொழிற்சாலைக்கு வந்துவிடுவது தான் நடைமுறையாக இருந்து வருகிறது.

நரிக்குறவர்கள் வேலைக்குச் செல்லும் போது குடும்பமாகத்தான் செல்வார்கள். அப்படியே தங்கள் குழந்தையையும் ஒரு தூளி போல துணியில் கட்டி அதில் குழந்தையை வைத்து, பின் பக்கமோ அல்லது பக்கவாட்டிலோ தொங்க விட்டுக் கொண்டு தங்கள் வியாபாரத்தைக் கவனிப்பார்கள்.

அது போலத்தான் நாங்களும்! மூன்று வயது நிறைவுறாத எங்கள் பிள்ளையையும் தூக்கிக் கொண்டே கம்பெனிக்குச் சென்றுவிடுவோம். அன்றும் அப்படித்தான். நாங்கள் மூவரும் கம்பெனிக்குள் நுழையும் போது, தொழிற்சாலை வாசலுக்கு எதிராக இருக்கும் பணியாளர் ஓய்வு அறை என்ற  கீற்றுக் கொட்டகை வாசலில் 35 லிருந்து 45 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி இலக்கில்லாமல் மேலே பார்த்துக் கொண்டு சோர்வுடன் அமர்ந்திருந்தார்.

நாங்கள் வருவதை உணர்ந்த அந்தப் பெண்மனி சட்டென்று எழுந்து நிற்கவும், அந்தக் குட்டிப் பெண் கொட்டகைக்குள்ளிருந்து ஓடி வந்து அந்தப் பெண்மனியின் முதுகுக்குப் பின்னால் தன்னை பாதி மறைத்தவாறு நின்று கொண்டாள்.

நான் வழக்கம் போல் உள்ளே நுழைந்தவுடன் வேறு எதிலும் கவனத்தைத் திருப்பாமல், நேராக உள்ளே சென்று கம்பெனியை ஒரு சுற்று சுற்றி வந்து, ஒரு சிலரிடம் நலன் விசாரித்து விட்டு பத்து நிமிடம் கழித்து வெளியே வந்தேன். என் மனைவியும் அந்தப் பெண்மனியும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

இவுங்க தான் அந்தப் பொண்ணோட அம்மா.... என்று மனைவி சொல்லவும்...

சார், அவளுக்கு ஸ்கோலுக்கு போறது புடிக்கலன்னாலும் பரவால்ல போயித்தான் ஆவனும்னு, அடிச்சி உதச்சி அனுப்பி வக்கிற அளவுக்கு எங்கிட்ட வசதி கிடையாது சார். அந்த மனுஷன் நல்லாதான் சம்பாதிக்கிறான். ஆனா அல்லாத்தையும் குடிச்சி தொலச்சிடறானே!!

அதுவும் பத்தாதுன்னு நான் நாத்து நடவுன்னு போயி சம்பாதிக்கறதையும் பிச்சி புடிங்கி பாதிய புடுங்கிடுறான்.  இவ நிம்மதியா வூட்டல குந்திக்கிட்டு, மான மருவாதியா ஸ்கோலுக்கு போவல்லாம் முடியாதுங்க....

எங்கினியாவுது வேல பாத்துதான் ஆவணும். வர்றதுல அந்தாளு புடுங்கினது போக மீதிய மறச்சி கிறச்சி கொண்டுட்டு வந்து தான் எங்க பொழப்ப ஓட்டியாவனும். நீங்க  இல்லன்னுட்டாலும் வேற எங்கியாச்சும் அவ வேலைக்கி போயித்தான் ஆவணும்!

எங்கூரு புள்ளங்க ஆறு பேரு இங்க வேல செய்யிறதால, இவளும் வந்து போவ வசதியா இருக்கும். அவளுக்கும் இங்க இருக்கற பசங்க, மிஷினு மாவு அறக்கிறது, பாக்கெட்டு ஒட்டுறது எல்லாத்தையும் பார்த்து ரொம்ப ஆசையா இருக்குது. அதான் என்னய வந்து சொல்லி சேர்த்துவுடச் சொல்லி, ரெண்டு நாளா தொனத்தி எடுத்துட்டா.

பார்த்து செய்யுங்க சார்........

என் மனம் ஆயிரம் கேள்விகளால் நிரம்பி, மண்டையில் அதற்கான விடை தேடும் லட்சம் செல்கள்,  பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தன!

சொத்தே இல்லாதவன் உயில் எழுதும் கதையாகத்தான் இருக்கிறது, நம்ம நாட்டு சட்ட திட்டங்கள் எல்லாம்.

மதுவை ஒழித்து விட்டு, அல்லது அரபு நாடுகளில் இருப்பது போல், அவரவர் வசதிக்கேற்ப கோட்டா சிஸ்டம் வைத்து விட்டு,  பத்தாம் வகுப்பு வரை அடிப்படைக் கல்வியை அனைத்து தரப்பினருக்கும் கட்டாயமாக்கும் சட்டத்தைக் கொண்டுவந்து, அதையும் ஒரே மாதிரியாக வடிவமைக்கப்பட்ட அரசுப் பள்ளிகளே அளிக்க வேண்டும் என்று சட்டம் இயற்றினால் எப்படியிருக்கும்?!

இந்தச் சட்டங்கள் நடைமுறைக்கு வந்தால், குழந்தைத் தொழிலாளர் தடைச் சட்டத்தை மீறுபவர்களுக்கு தூக்கு தண்டனையே கொடுக்கலாமே.....?!

என்று மனம் எங்கெங்கோ சென்று பினாத்தலாக சுற்றிக் கொண்டிருக்க.......  என் மனைவி தோளைப் பிடித்து உலுக்கிய பிறகு தான் சுய நினைவுக்கே வந்தேன்.

என்ன...? அந்த அம்மா பேசிட்டிருக்கு, நீங்க பாட்டுக்கு வேற என்னத்தையோ சிந்தனை பண்ணிட்டிருக்கீங்க? என்று கேட்டதும் தான் சம காலத்திற்கு வந்தேன். குழம்பிப் போன மனநிலையில் இருந்தவனாய் எங்கே அந்தப் பெண் என்றேன்.

நம்ம பையன் அவள்ட்ட நல்லா ஒட்டிக்கிட்டாங்க, நீங்க பேசிட்டிருந்தப்ப, அவனுக்கு நான் சாப்பாடு ஊட்டறேன்னு வாங்கிட்டு அய்யனார் கோவில் பக்கம் போயிருக்கா என்று சொல்லவும், எனக்கு மனைவியின் மேல் லேசான கோபம் வந்தாலும் அதை வெளிக்காட்டாமல், சரி அந்தப் பொண்ண வரச்சொல்லு என்று சொல்லி விட்டு, என் அலுவலக அறைக்குச் சென்று விட்டேன்.

ஐந்து நிமிடத்திற்கெல்லாம், என் மனைவி உள்ளே நுழைய அந்தப் பெண்ணும் அவளுக்குப் பின்னால் அவள் தாயாரும் அறை வாசலிலேயே நின்று கொண்டார்கள். அவர்களை உள்ளே வரச் சொல்லி சாடை காட்டவும், தயக்கமாக இருவரும் உள்ளே நுழைந்து, ஆவலாய் என் முகத்தைப் பார்த்தார்கள்.

ஏம்மா, நான் உன்னய ஸ்கூல்ல சேர்த்து விட்டு, ஃபீஸ் எல்லாம் கட்டுறேன். நீ படிக்கிறியா?  என்று கேட்கவும்......

அந்தப் பெண், தன் இடது பக்க மேல் உதட்டை வெளிப்புறமாக மடித்து மேலே தூக்கி, இரண்டு பக்க கன்ன மேட்டையும் கீழிறக்கி....  இடது காலை கால் வட்டமாக பின்னுக்கிழுத்து, வலது தோள்பட்டையை லேசாக முன்பக்கம் கீழிறக்கினால் போல் கொண்டு வந்து, இடுப்பை திருகினாற் போல் நெளித்து......

வேண்டாஆஆம்..... சார் என்று ஒரு மாதிரியாகச் சொல்லவும்.....,

என் மனைவி உட்பட அனைவருக்குமே ஒரு மாதிரியாகி விட்டது!!!

அறை முழுவதும் ஒரு நிமிடம் நிசப்தமாகவே சென்றது....  என் இடது கை கட்டைவிரலும், நடுவிரலும், இருபக்க தாடையில் ஆரம்பித்து தடவிக் கொண்டே வந்து தாவங்கட்டயில் மோதிக் கொண்டன,  திரும்பத் திரும்ப அதே போல் அனிச்சையாக என் விரல்கள் விளையாடிக் கொண்டிருக்க.....

என் மனைவி தான் கனைத்தாள்.....

நான் கைகளை நாற்காலியின் இரண்டு கைப்பிடியிலும் வைத்து அழுத்தி, மேலெழும்பி, நேராக அமர்ந்து கொண்டு........  உன் பெயர் என்னம்மா? என்று கேட்கவும்....

அந்தப் பெண் வாயெல்லாம் பல்லாக அகலமாக விரித்துச் சிரிக்க......  அவள் அம்மா தான் சொன்னார்....

அவள் பெயர் சங்கீதா    ...... என்று!

Thursday, June 7, 2012

விவசாய தற்கொலைகள் ஆரம்பம் - விழித்துக் கொள்ளுமா ஜெ. அரசு?!

யார் சாபம் வேண்டுமானாலும் பொய்த்துப் போகலாம், ஆனால் தன் ரத்தத்தை வியர்வையாகச் சிந்தி, நாட்டு மக்கள் அனைவருக்கும் உணவளிக்கும் விவசாயின் வயிற்றெரிச்சல், குடி மக்களையும், முடியரசனையும் எரித்து சாம்பலாக்கிவிடும்!

தமிழகத்தில் ஒரு அரசு, அதில் விவசாயத்திற்கென்று தனி துறை, அதில் ஒரு அமைச்சர் அவருக்கு நான்கு உதவியாளர்கள், நூற்றுக்கணக்கான அதிகாரிகள், ஆயிரக் கணக்கான ஊழியர்கள் என்று மாதத்திற்கு ஐம்பது, நூறு கோடிகளை இவர்களுக்காக சம்பளமாகக் கொடுத்தும்.......

வெறும் ஐந்து லட்ச ரூபாய் கடனுக்காக ஒரு விவசாயி, விஷம் அருந்தி தன் உடலை மருத்துவ படிப்புக்கு தானம் செய்வதாக எழுதி வைத்து விட்டு, நடு வீதியில் இறந்து போகிறான்...!!!

தமிழகத்தின் நெற்களஞ்சியமாம், பழைய தஞ்சை மாவட்டத்தின் ஒரு பகுதியான மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள மாப்படுகை என்ற கிராமத்தைச் சேர்ந்த முருகையன் என்ற விவசாயி தான், தன் உயிரை பலி கொடுத்து... இல்லையில்லை தியாகம் செய்து இந்த அரசுக்கும், விவசாயத்துறைக்கும் எச்சரிக்கை மணி அடித்துள்ளார்.

நாலு ஏக்கரில் கரும்பை போட்டுட்டு, கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து மூன்று மணி நேரம் கூட மின்சாரம் வராததால், தண்ணீரின்றி பயிர் வாடி சூம்பி விட... அதை தன் கண்ணீராலேயே பாதி எடை தேறினால் போதும் என்று வளர்த்துக் கொண்டு வந்து நிறுத்தினால்......

சர்க்கரை ஆலையில் ஸ்ட்ரைக். இரண்டு மாதம் வெட்டப்படாமல் காய்ந்து அதன் எடை இன்னும் குறைந்து போக.... ஆலை திறந்து விட்டாலும், கரும்பை வெட்டுவதற்கு அனுமதி கொடுக்கவில்லை அதிகாரிகள். நொந்து போய் அலையாய் அலைந்து ஒரு வழியாக அனுமதியைப் பெற்றுவிட்ட அந்த விவசாயி, அதை வெட்டுவதற்கு ஆட்களை அழைத்தால், அதுவும் பஞ்சம்.

கரும்புத் தாளில் சுணையிருக்கும், அது அரிக்கும் என்று தொழிலாளிகள் கூற ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க இயலாமல், அதை எரிய விட்டார் அந்த விவசாயி. எப்படிக் குமுறியிருக்கும் அந்த மனிதனின் மனது?!

அந்தச் சோளை எரியும் போது ஏற்படும் வெப்பத்தில், டன் டன்னாக அடியிலிருக்கும் கரும்பின் சாறும் ஆவியாகி காற்றோடு கலந்திருக்கும். மீதமிருக்கின்ற எடைக்கு காசு கிடைத்தால் போதும், இப்பயிறை விளைவிக்க வாங்கிய கடனையாவது ஒன்றுக்குப் பாதி அடைத்து விடலாம் என்று அதை வெட்டி ஆலைக்கு கொண்டு சென்றால்......

அங்கேயும், இவரைப் போலவே வந்து காத்திருக்கும் விவசாயக் கூட்டத்தின் வரிசையில் கடைசி இடம் தான் கிடைத்திருக்கிறது. பரவாயில்லை என்று காத்திருந்தால், ஒரு வாரமாகியும் கரும்பு வண்டி, ஆலைக்குள் செல்லவில்லை.

இவர் காத்திருப்பார். கடன் காரர்கள் காத்திருப்பார்களா? வெட்டிய கரும்பு ஒரு நாள் காய்ந்தாலும் ஐந்து சதம் எடை இழக்கும். வாரக்கணக்கு என்றால் என்ன ஆகும்?!

கணக்குப் போட்டுப் பார்த்தவருக்கு, கவலையில் தலை சுற்றியது தான் மிச்சம். கால் போன போக்கில் சென்றிருக்கிறார். அவர் ஒரு முடிவுக்கு வந்துவிட்ட போது அடைந்திருந்த இடம், சிதம்பரம் அண்ணாமலை நகர். கடிதம் எழுதி சட்டைப் பையில் வைத்து விட்டு, விஷத்தைக் குடித்து.... நிம்மதி அடைந்து விட்டார்.....!!!!!!

பொது மக்களே, ஆட்சியாளர்களே, அரசு விவசாயத்துறை அதிகாரிகளே, அந்த விவசாயியைப் பார்த்து யாரும் அனுதாபப்பட வேண்டாம். நாமெல்லாம் திருந்துவதற்கு ஒரு எச்சரிக்கை மணியை அடித்து விட்டு அவர் விடுதலை ஆகிவிட்டார்.ஆகையால் நாம் தான் பயப்பட வேண்டும்!!

பற்றியெறிந்த அவரது வயிறும், நெஞ்சமும் நாம் திருந்தும் வரை விடாது. நம்மை துரத்திக் கொண்டே இருக்கும்.

ஒரு விவசாயிக்கு அடிப்படையாக என்ன தேவை? தண்ணீர் தான். தன் வீராப்பை எல்லாம் தூக்கி மூட்டை கட்டி வைத்து விட்டு, யார் காலிலாவது விழுந்து அவனுக்குத் தேவையான தண்ணீரை, தேவையான நேரத்தில் அவனுக்கு கிடைக்கும் வழிவகை செய்து தர வேண்டியது ஒரு அரசின் தலையாய கடமை.

அது முடியாமல் போனால் தண்ணீருக்குத் தேவையான மின்சாரத்தையாவது அவனுக்கு தொடர்ந்து 8 மணி நேரம் வழங்கி தண்ணீர் பஞ்சத்தைப் போக்கியிருக்க வேண்டும்.

அடுத்து, விவசாயி என்பவன், மேலும் மேலும் உற்பத்தி செய்து நாட்டை பசியின்றி வைத்திருக்கும் படியான மனநிலையில் மட்டுமே எப்பொழுதும் இருக்க வேண்டும். அவன் விளைவிக்கின்ற பொருளை, விற்று முதலாக்கித் தரும் பொறுப்பை அரசாங்கம் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்காகத்தானே ஆயிரக் கணக்கான ஊழியர்களும், அதிகாரிகளும், அமைச்சர்களும், கோடி கோடியாக சம்பளம் வாங்குகின்றார்கள்?!

அடுத்ததாக விவசாயம் செய்வதற்கு தேவையான் விவசாயத் தொழிலாளர்கள். இது இன்றைக்கு நம் தமிழகத்தின் தலையாய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

முன்பு போல இப்பொழுது யாரும் இந்த வேலைக்கு வருவதில்லை. அப்படியே வந்தாலும், சொகுசாக இருக்கும் படி பார்த்துக் கொள்கிறார்கள். கரும்புச் சோலையை எரியவிட்டு, கரும்பு வெட்டும் காட்சியை இதுவரை நாம் பார்த்திருக்கின்றோமா? அல்லது காதால் தான் கேட்டிருக்கின்றோமா? இல்லையே!! பிறகு ஏன் இப்பொழுது மட்டும் இப்படி???

அனைவருக்கும், மூன்று வேலை சாப்பாட்டிற்கான முக்கியத்தேவையான அரிசி இலவசமாக எப்பொழுது கிடைக்க ஆரம்பித்ததோ அப்பொழுதே எல்லோரும் சோம்பேறியாகி விட்டார்கள் என்பதை யாரும் மறுக்க இயலாது. இதை வெளிப்படையாகச் சொல்வதற்கு சிலர் தயங்கலாம். ஆனாலும் இது தான் உண்மை. 

சரி விவசாயத் தொழிலாளியால் அந்த கஷ்டத்தை தாங்க முடியவில்லை, இனி அந்த வேலையைச் செய்ய மாட்டேன் என்கிற பொழுது எப்படி கட்டாயப் படுத்த இயலும்? என்று சிலர் கேட்கலாம்.

நியாயம் தான். இந்த மாதிரியான சூழ்நிலையை சமாளிக்கத்தானே விவசாயத்திற்கென்று தனியாக ஒரு துறை இருக்கின்றது. எத்தனை கோடி அங்கு புரள்கின்றது தெரியுமா? அந்த வேலைக்குத் தேவையான கருவிகள், இயந்திரங்கள், உபகரணங்களை தருவித்து, அதை உபயோகிக்கும் பயிற்சியினைத் தந்து, தடையின்றி விவசாயம் நடைபெற வேண்டிய வேலையைச் செய்வதற்குத் தானே அவர்களுக்குச் சம்பளம், கிம்பளம் எல்லாம்?


அடுத்ததாக, அனுமதி கொடுத்து வெட்டப்பட்ட கரும்பை வாரக்கணக்கில் காய விட்டது யார் குற்றம்? அதற்கு பொறுப்பேற்க வேண்டியவர்கள் யார்? யார்? விளைந்த உணவுப் பொருளை வற்றிப்போக வைத்தது......

வற்றிப்போன சாற்றின் மூலம் கிடைக்கும் சர்க்கரைக்கு ஈடாக இறக்குமதி செய்யப்படும் சர்க்கரைக்கான, அந்நிய செலாவனி இழப்பு என்ற வகையில் அதை ஒரு தேசிய இழப்பாகத்தானே கருத முடியும்?! இதற்கு யார் பொறுப்பேற்பது?!

சரி இதெல்லாம் போகட்டும், உலகின் முதல் தொழிலும், முக்கியத் தொழிலுமான பசிப்பிணி போக்கும் விவசாயத்தை செய்ததை தவிர வேறெந்த தவறும் செய்யாத ஒரு மனிதனின் உயிர் போனதற்கு யார் காரணம்? யார் இதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ளப் போகிறார்கள்?

குடி மக்கள் கேட்டால் தான் முடி அரசன் ஆணையிடுவான். ஏனென்றால் அப்படித்தான் பழகியிருக்கின்றார்கள். அல்லது பழக்கப்படுத்தியிருக்கின்றோம்.

இன்னும் ஒரு சாவு கூட நம் தமிழக விவசாய நிலத்தில் விழக்கூடாது. 

அதற்கு குடி மக்களாகிய நாம் தான் பொறுப்பு......


Tuesday, June 5, 2012

சமச்சீர் கல்வியும்.... நாலாம் தலைமுறையும்...

மயிலாடுதுறையிலிருந்து சிறிது வட மேற்காக ஆறு கிலோ மீட்டர் சென்றால் நீடூர் என்ற கிராமம் வரும். இஸ்லாமிய மக்களும், இந்துக்களும் கிட்டத்தட்ட சம அளவில் வசிக்கின்ற அழகிய கிராமம். அங்குள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கமலி என்ற பெண் நேற்று வெளியான 10 ஆம் வகுப்பு தேர்வில் 500 க்கு 437 மதிப்பெண்கள் பெற்று பள்ளியின் முதல் மாணவியாக வந்திருக்கின்றாள்.

மேலோட்டமாக பார்க்கும் பொழுது இது ஒரு சாதாரண நடைமுறை நிகழ்வு போலத் தோன்றினாலும், அந்தப் பெண் மற்றும் அவள் பெற்றோர்களிடம் பேசிய போது....

ஒரு அரசின் தலைமை எடுக்கக் கூடிய ஆகச் சிறந்ததொரு தொலைநோக்கு திட்டத்திற்கான முடிவினால், எப்படி ஒரு சமுதாயம் சீரடைந்து உயர்நிலையை அடையும் என்பதற்கான சாத்தியக்கூற்றை  தெள்ளத் தெளிவாக உணர முடிகின்றது.

அந்தப் பெண்ணின் தந்தை ஒரு தினக்கூலித் தொழிலாளி. பெயிண்டிங் வேலை முதல் சமையல் வேலை வரை, அன்றைய தேதியில் எங்கு ஆள் தேவைப்படுகின்றதோ, அங்கு சென்று சம்பாதிக்கும் நிலையிலிருப்பவர். தாயாரோ ஒரு கம்பெனியில் மாதம் ரூபாய் மூவாயிரம் சம்பளத்தில் வேலை செய்பவர். அந்தப் பெண்ணுக்கு இரண்டு தங்கைகள் மற்றும் ஒரு தந்தைவழிப் பாட்டி. ஆகமொத்தம் ஆறு உறுப்பினர்களைக் கொண்ட குடும்பம் அது.

அவள் படித்ததோ அதே ஊரில் இருக்கும் ஒரு அரசுப் பள்ளியில். அங்கு நடத்தப்படும் பாடத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கூட வீட்டில் கேட்டுத் தெளிவு பெற தாய், தந்தைக்கு கல்வி அறிவு போதாது. டியூஷன் வைத்துக் கொள்ளலாம் என்றால் அதற்கும் வீட்டில் வசதி கிடையாது. அதற்காக கொஞ்சம் அழுத்தம் கொடுத்தாலும் பள்ளிப் படிப்பையே நிறுத்திவிடும் அபாயம் இருக்கின்றது!

சரி, இதெல்லாம் போகட்டும் என்றாலும் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்து உட்கார்ந்து நிதானமாக ஒரு முறைக்கு இரண்டு முறை படித்து, தானே தெளிவு பெற்றுக் கொள்ளும் அளவிற்கான நேரமும் கூட கிடையாது. காரணம், அம்மா பணி முடிந்து வீட்டிற்கு வந்து சேரவே 8 மணிக்கு மேல் ஆகிவிடும். ஆகையால் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் இந்தப் பெண் தான்,  தன் தங்கைகளையும் பார்த்துக் கொண்டு, அனைவருக்குமான இரவு உணவையும் தயார் செய்து வைக்க வேண்டும்!

பிறகு அம்மா, அப்பா எல்லோரும் வந்தவுடன், குளித்து முடித்து சாப்பிட்ட பிறகு தான் படிப்பதற்கான நேரமே கிடைக்கும். .....

இந்தச் சூழ்நிலையில் பத்தாம் வகுப்பில் படித்து தேர்வெழுதி, 437 மதிப்பெண்களுடன் அந்தப் பள்ளியின் முதல் மாணவியாக வந்திருக்கின்றாள். ஆனால் இந்த நிகழ்வை கேட்கும் அல்லது படித்துப் பார்க்கும் நமக்குத்தான் இது ஒரு ஆச்சர்யமான விடயமாக இருக்கின்றது. ஆனால் அந்தப் பெண்ணுக்கோ அல்லது அந்தப் பள்ளியில் படிக்கும் மற்ற மாணவிகளுக்கோ இது ஒரு இயல்பானதொரு நடைமுறையாகத்தான் இருக்கின்றது.

அனேகமாக தமிழகம் முழுவதும், கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயில்கின்ற, அடித்தட்டு குடும்பத்தைச் சார்ந்த  அனைத்து மாணவ, மாணவிகளின் நிலையும் இது மாதிரியாகத்தான் இருக்கும்.

இவ்வளவு வேலைகளையும் செய்து கொண்டே, படிப்பதற்கு பள்ளி ஆசிரியர்களின் துணை தவிர வேறு எதுவும் இல்லாமல் எப்படி உன்னால் இந்த அளவிற்கு மதிப்பெண்களைப் பெற முடிந்தது? என்று கேட்டால்.....  சட்டென பதில் வருகிறது.

சமச்சீர் கல்வி தான் சார் காரணம்...! 

புத்தகத்தைப் படித்தாலே எல்லாம் புரியும் படி அழகா இருந்திச்சி சார். ராத்திரி 9 மணிக்கு உட்கார்ந்தேன்னா, பத்தரை அல்லது சில சமயம் 11 மணி வரை தான் படிப்பேன். கணக்குலயும், இங்கிலீஷிலயும் தான் மார்க் குறைஞ்சிடிச்சி. அதுக்கு மட்டும் கொஞ்சம் நல்லா சொல்லிக் கொடுத்திருந்தா, 450க்கு மேல வாங்கிருப்பேன்.

ஆனாலும் பரவாயில்ல சார். 400 மார்க்கெல்லாம் எங்க ஸ்கூலால வாங்கவே முடியாதுங்கற நிலை மாறிட்டு சார். பத்து பேருக்கு மேல 400+ வாங்கியிருக்கோம். இப்ப +2ல 90% க்கு மேல எடுத்துடுவோம்னு நம்பிக்கை வந்திடிச்சி சார். ஏன்னா இப்பத்தான் எல்லோரும் எங்கள கவனிக்கிறாங்க. +1, +2 ல டியூஷன் வக்கிறதுக்கு நான் பணம் தர்றேன்னு பல பேர் வந்து சொல்றாங்க.

எங்கள பார்த்து பல பேருக்கு நம்பிக்கை வந்திடுச்சி சார்.  அடுத்த வருஷம் வேணா பாருங்க எங்க ஸ்கூல்ல 20 பேருக்கு மேல 400+ மார்க்கு வாங்குவாங்க! எல்லாத்துக்கும் காரணம் சமச்சீர் கல்வி தான் சார். எளிமையாவும், எங்களுக்கெல்லாம் புரியிற மாதிரியும் இருந்திச்சி சார். எங்களையும் இப்பத்தான் தான் எல்லாரும் பார்க்க ஆரம்பிக்கிறாங்க. !!!!

ஒரு புதிய பரிமாணத்திற்கான அடித்தளம் கட்டமைக்கப்பட்டு விட்டது போன்ற உணர்வுடன் என் மனம் நேற்றிலிருந்து நிரம்பியிருக்கின்றது.

இன்று காலை இந்த இணையத்தில் வந்து பார்த்தால், சமச்சீர் கல்வி மிகவும் இலகுவாக இருக்கிறது. நானூற்றி முப்பதிலிருந்து ஐம்பது வரை வாங்க வேண்டிய பிள்ளைகள் எல்லாம் நானூற்றி எழுபது, என்பது என்று வாங்கிக் குவித்து விட்டார்கள். தேர்ச்சி சதவிகிதமும் அதிகரித்து விட்டது.

இதெல்லாம் எங்கு கொண்டு போய் விடுமோ தெரியவில்லையே? நம் கல்வித்தரம் இப்படியே குறைந்து போய் விட்டால், உலகத்தரத்தோடு நாம் எப்படி போட்டிப் போட முடியும்? என்றெல்லாம் எழுதிக் குவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இப்படிப்பட்ட அறிவு ஜீவிகளுக்கெல்லாம் அந்தக் கிராமத்து குழந்தைகளின் சார்பாக சொல்லிக் கொள்ள விரும்புவது இதைத்தான்:

இதுவரையிலும் உலகத்தரத்தோடு படித்து, எதை புதிதாக கண்டுபிடித்து விட்டீர்கள் நீங்கள்? எவனாவது மேலை நாட்டறிஞன் கண்டுபிடித்ததை உபயோகித்து செயல்பட வைக்கும் ஆப்பரேட்டர் வேலை தானே இதுவரையிலும் செய்து கொண்டிருக்கின்றீர்கள்?! மேலை நாட்டவன் கண்டு பிடித்த காரை ஓட்டிக் கொண்டிருக்கும் படிக்காத கிராமத்தானைப் போலத்தான் எவனோ கண்டு பிடித்த கம்ப்யூட்டரை நீங்கள் ஓட்டிக் கொண்டிருக்கின்றீர்கள்.

ஒரு பாமரனான எனக்கு இந்த இரண்டு செயல்களுக்கும் பெரிதான வித்தியாசம் தெரியவில்லை!

இதெல்லாம் போகட்டும். நீங்கள் சொல்வது உண்மையாகவே இருந்து தொலையட்டும். மாநில வழி சமச்சீர் கல்வி தரம் குறைந்தது என்றால், நீங்கள் மத்திய வழி பாடத்திட்டத்திற்கு ஓடிவிட வேண்டியது தானே?

இந்தியா கிராமங்களில் தான் வாழ்கிறது என்று காந்தியடிகள் சொன்னது உண்மையானால், அந்த கிராமமும், கிராமத்து மாணவனும் மேன்மையடைய வேண்டியது தானே நியாயமானதாக இருக்கும்?! அப்படியானால், இதுவரை ஒற்றை எண்ணிக்கையாக இருந்த 400+ மதிப்பெண் வாங்கிய எங்கள் கிராமத்து கண்மனி, இன்று பத்தாக பரிமளித்திருக்கின்றான். நாளை இது நூறாகும், அடுத்த நாள் ஆயிரமாகும், அதுவே லட்சமாக விஸ்வரூபம் எடுக்கும்.....

நாலாம் தலைமுறையைப் பார்....  என் கிராமத்து இளைஞனும் ஐஐடி, ஐஐஎம் இல் ஒளிவீசிக் கொண்டிருப்பான். மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரியாக வலம் வருவான்.........

ஆனால் என்னவொரு சோகம் என்றால்... அப்பொழுது அவனும் இதையே தான் சொல்லிக் கொண்டிருப்பான்  

"நம்ம ஸ்டேட் போர்டு ஸிலபஸ் ரொம்ப புவர்..ப்பா"    ................!!!!!!

Sunday, June 3, 2012

கலைஞர் - சும்மா அதிருதுல்ல?!


சும்மா அதிருதுல்ல...?!  

என்ற சிவாஜி படத்தின் பிரபலமான ரஜினி வசனம் போலத்தான் இருக்கிறது, திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களைப் பற்றிய பேச்சை எடுத்தாலே, அவரது எதிராளிகளுக்கும், ஊடகங்களுக்கும்!!

கிட்டத்தட்ட எழுபது வருடங்களுக்கும் மேலான தமிழக அரசியல் களத்தின் ஆளுமை! அரசியல் மட்டுமல்லாது சினிமா, நாடகம், பல்வேறு தளங்களை உள்ளடக்கிய பெரிய பெரிய நூல்கள், நாவல்கள், காப்பியங்கள், புனைவுகள், சமூக சீர்திருத்தக் கட்டுரைகள், லட்சக் கணக்கான தனது தொண்டர்களை இன்னமும் ஒரே குடும்பமாக கட்டிப்போட்டு வைத்திருக்கும் காரணியான கடிதங்கள்,ஆகியவற்றை உள்ளடக்கிய எழுத்தாளர் முகம், தமிழிசை வளர்ச்சிக்கான முன்னெடுப்புக்களும், சீரிய செயல்பாடுகளுமான இசைக் கலைஞன் முகம்........

என்று தமிழுக்கான மூன்று பக்கமும் தீட்டப்பட்டு ஒளி வீசச் செய்கின்ற இயல் இசை நாடகம் என்ற மூன்று துறைகளிலுமே சிறப்பான தனி இடத்தைப் பெற்றுள்ளதோடு அதற்கு மணி மகுடம் வைத்தது போல் அரசியல் என்னும் சிம்மாசனத்திலும் இன்று வரையில் தன்னிகரற்ற தலைவனாய் அமர்ந்து கொண்டு.....  தானே தமிழாய் வாழும் அந்தத் தலைவனை பார்தால், அவரைப் பற்றிக் கேட்டால், இல்லை இல்லை அவரைப் பற்றி நினைத்தாலே பிரம்மிப்பாகத்தான் இருக்கின்றது.

உலகில் ஒவ்வொரு துறையிலும் அளப்பறிய சாதனைகள் பல செய்து உச்சத்தை தொட்டவர்கள் பல உண்டு. அவர்களைப் போல அந்தத் துறையில் தாமும் முன்னேறி உச்சத்தைத் தொட வேண்டும் என்று முன்னேறத்துடிக்கும் ஒவ்வொருவருக்கும் ஆசை அல்லது அடங்காத வெறி இருக்கும். ஆனால் நம் கலைஞரைப் போன்றதொரு உச்சத்தைத் தொட நினைத்து, அவரை அறிய முற்படும் அனைவருமே, அந்த எண்ணத்திலிருந்து பின் வாங்கும் வரலாறு தான் இன்று வரையிலும் தொடர்கிறது.

காரணம் ஒரு துறை இரண்டு துறைகள் என்றால் சரி!  ஆனால் பல்துறை வித்தகனாக அல்லவா இருந்து கொண்டிருக்கிறார்!! அத்துணை துறைகளிலுமே அந்தந்த கால கட்டங்களில், தனக்கெனவொரு சிறப்பான இடத்தை கிரயம் பண்ணி வைத்திருக்கின்றாரே?! வயது தொண்ணூறு ஆனாலும் துள்ளித் திரிகின்றார், தோல்வி வந்தாலும் துவளாமல் மீண்டு எழுகிறார்.....  எப்படி இதையெல்லாம் சமண் செய்துவிட முடியும் என்று மலைத்துப் போய் தான் மருண்டு விடுகின்றனர்.

ஆகையால் இவர் சமன் செய்ய வேண்டிய இலக்கு அல்ல...  இருட்டில் வழி காட்டும் விளக்கு என்பதை உணர்ந்து லட்சோப லட்சம் இளைஞர்கள் இன்றைக்கும் அவரை குன்றிலிட்ட விளக்கென கருதி கை கூப்பி வணங்கி வளர்கின்றனர்.

நான் பலமுறை நினைத்து நினைத்து கோபத்தில் பொங்கியது உண்டு. கலைஞர் என்ற அந்த பெரும் சக்தியால் பட்டம், பதவி, பெயர், புகழ், பணம், மன நிம்மதி, சமூக அந்தஸ்த்து, சம உரிமை, சந்தோஷம், புத்தி கூர்மை.... இப்படியாக இன்னும் நீளும் பட்டியலில் ஏதாவது ஒன்றையோ அல்லது பலவற்றையோ அனுபவித்து அதனால் அவர் மீதான அன்பு மிகுதியால் பாராட்டுவதும், புகழ்வதுமாக இருக்கும் கூட்டம் ஒரு பக்கம் என்றால்....  காரணமேயில்லாமல் அவரை வசைபாடும் ஒரு கூட்டமும் காலட்சேபம் நடத்திக் கொண்டிருக்கிறதே என்று!

மற்றவர் பங்கையும் சேர்த்து, தானே உண்டு கொழுத்த ஒரு கூட்டம், பெருமளவில் பாதிக்கப்பட்டதும் அவரால் நிகழ்த்தப்பட்ட வரலாறு தான். அந்தக் கூட்டமும் அதன் கைக்கூலிப் படைகளுக்கும் கூட வாழ்வாதாரம் அளித்துக் கொண்டிருப்பதே கலைஞர் தானே!  ஆம் அவர் இல்லை என்றால் இந்த அடிமைக் கூட்டத்திற்கெல்லாம் ஆரியக்கூத்தாட அனுமதி மறுக்கப்பட்டுவிடுமே(?!)

அப்பொழுது தான் தெரியும் கலைஞர் யார் என்று அந்த அடிமைகளுக்கு!!!

எத்தனை குற்றச் சாட்டுகள் வைக்கின்றனர் இவர் மேலே?! ஊழல் செய்தார், துரோகம் செய்தார், கடமை மறந்தார்... என்றெல்லாம். ஆனாலும் தமிழகத்தை அதிக காலம் ஆள்வதற்கு அவருக்குத்தானே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது மக்களால்! அதனால் தான் நீ இந்தக் காழ்ப்புணர்வு பேச்சுக்களை எல்லாம் காது கொடுத்துக் கூட கேட்பதில்லை போலிருக்கிறது.

நீ சூரியன் என்பது உனக்குத் தெரியும்....!  
ஆனால் அது என்னைப் போன்றவர்களுக்கு இப்பொழுது தான் புரிகிறது...!!!

இனி உன் மீதான வசை மொழிகள் எல்லாம், நாய் குறைப்பாகத்தான் எம் காதுகளில் விழும்...!!!
!