Tuesday, September 11, 2012

கூடங்குளம், சிங்களர் கார்ட்டூன், இன்னபிறவும்... மக்கள் மனநிலையும்.இணையத்தை திறந்து மற்ற சொந்த வேலைகளை எல்லாம் முடித்த பின்பு, பொழுது போக்கிற்கான வெட்டி அரட்டை வேண்டி சமூக வலைத்தளங்களுக்குள் நுழைந்தாலே, நாட்டின் அன்றாட பிரச்சினைகள் குறித்து வெட்டுக் குத்து விவாதங்கள் தான் களை கட்டுகின்றன.

இப்போ சமீபமாக களை கட்டியிருக்கும் இரு பிரச்சினைகள் கூடங்குளமும், தமிழக முதல்வரையும், இந்திய பிரதமரையும் இழிவு படுத்தி சிங்கள பத்திரிகை ஒன்று  வெளியிட்டிருக்கும் கேலிச்சித்திரமும் தான்!

இதேப் போன்று எந்தப் பிரச்சினையானாலும், இணைய இளைஞர்களில் மிகக் குறைந்த சதவிகிதத்தைச் சேர்ந்தவர்களுக்கே, இரு எதிர்நிலைக் கருத்துக்களில் ஏதோ ஒன்றினை வலுவாக ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ பேசக்கூடிய ஆற்றலும் துணிச்சலும் இருக்கிறது.

இதில் பெரும்பாலான சதவிகிதத்தினர், மெஜாரிட்டி எந்தப் பக்கமோ அந்த ஸ்டாண்டை எடுத்து விடுகின்றனர். இது கூட பரவாயில்லை, ஒரு குறிப்பிட்ட சதவிகித இளைஞர்களுக்கு என்ன ஸ்டாண்டு எடுப்பது என்பதிலேயே குழப்பம் அதிகமிருப்பது தான் வேடிக்கையின் உச்சம்!

ஆனால் இது மாதிரியாக இணையத்தில் சூடாக விவாதிக்கப்பட்டு தீர்ப்பெழுதப்படும் பல விடயங்களில் பொது மக்களின் கருத்து என்ன மாதிரியாய் இருக்கின்றது என்று பார்த்தோமானால் நமக்கு மிகப் பெரிய ஆச்சர்யமே பதிலாக காத்திருக்கிறது.

கூடங்குளம் பிரச்சினையைப் பொருத்தவரை நான் சந்தித்தித்த அத்தனைப் பேரின் நிலைப்பாடும், போராட்டக் காரர்களுக்கு எதிரானதாகவே இருக்கிறது. அவர்களில் பெரும்பாலானோருக்கு  பகல் இரவு என்று பாராமல் கண்ட நேரங்களில் ஒரு நாளைக்கு 8 மணி நேரத்திற்கும் அதிகமாக ஏற்படும் மின் தடை மிகப்பெரிய சங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதை கண்கூடாகக் காண முடிகின்றது.
சாதாரணமாக இது போன்ற விடயங்களில் அரசுக்கு எதிராக கம்யூனிச சிந்தனையுடன் போராட்டக் காரர்களுக்கு ஆதரவாகப் பேசக் கூடியவர்கள் கூட, “சார், இன்னிக்கு வீட்டை விட்டு கீழ இறங்குறவங்க, உசிரோட வீடு திரும்பறதுக்கு என்ன சார் உத்தரவாதம் இருக்கு? பஸ்ஸுலயோ, ரயிலிலோ போனால் கூடத்தான் விபத்து ஏற்பட்டு சாகுறாங்க, அதனால அதுல போகாம இருக்கோமா? அது மாதிரி தான் அணு உலையையும் எடுத்துக்கனும்”. என்று பக்காவாக லாஜிக் பேசுகிறார்கள்.

அரசு இவ்விஷயத்தில் மிகவும் மெத்தனமாக செயல்படுவதாகவும் சிலர் கூறுவதைக் கேட்டால் அதிர்ச்சியாகத் தான் இருக்கின்றது. அதேசமயம் மிகப் பெரும்பான்மையான மக்களின் கருத்துக்களை ஒதுக்கித் தள்ளிவிடவும் முடியாது.

மேலும் இவ்விஷயத்தில் போராட்டக் காரர்களுக்கு ஆதரவாக இணையத்தில் ஆவேசமாக எழுதுகின்ற பெரும்பாலானோரைப் பார்த்தால் அவர்கள் வெளி நாடுகளில் பல வருடங்களாக தங்கள் குடும்பத்தோடு செட்டில் ஆனவர்களாகத் தான் இருக்கின்றார்கள்.

அளவுக்கு அதிகமான மின் தடையால் தான் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசியும் ஏறியிருப்பதாக மக்கள் நம்புகின்றார்கள். அதனால் தான் விவசாயம் தடைபட்டதாகவும் வாதிடுகின்றனர். விலைவாசி ஏற்றம் மிகப் பெரிய அளவில் மக்களை கோபப்படுத்தியிருப்பதை கண்கூடாகக் காண முடிகிறது.
                                                                                                                      
கூடங்குளத்திலிருந்து மின்சாரம் வந்தால், மின் தடை நேரம் பெருமளவில் குறையும் என்றும் நம்புகின்றார்கள். என்னைக் கேட்டால், கூடங்குளத்து போராட்டக் காரர்களின் ஆவேசத்துக்கு நிகரானதொரு பெருங்கோபம் நீரு பூத்த நெருப்பாய் பொது மக்களிடமும் மேற் சொன்ன காரணங்களுக்காக ஏற்பட்டிருப்பதையும் மறுப்பதற்கில்லை.

இதேப் போன்று தான் சிங்கள பத்திரிகையின் கேலிச் சித்திரம் பற்றி பெரும்பான்மையான பொது மக்களுக்கு தெரிந்திருக்கவே இல்லை. அது பற்றி அறிந்திருந்த ஒரு சிலரும், அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. “சாமி கும்புட வந்தவன துரத்தியடிச்சா அவன் படம் போட்டுத் தான் காறித் துப்புவான்” என்று சர்வ சாதாரணமாகச் சொல்கின்றார்கள்.

ஆனால் இணையப் போராளிகளைப் பொருத்தவரை இதில் நகை முரண் என்னவென்றால், எதற்கெடுத்தாலும் சுற்றி வளைத்து ஜெயலலிதவை ஆதரிக்கின்றவர்களும், அப்படி முடியாதபட்சத்தில் அதில் கலைஞரை சம்பந்தப்படுத்தி அவரை திட்டித் தீர்ப்பவர்களும், சிங்கள கேலிச் சித்திரத்திற்கு எதிராக பொங்கித் தீர்த்தவர்களும், இடிந்தகரை மக்களுக்கு ஆதரவாக பொங்கும் பொழுது நாசுக்காக ஜெயலலிதாவை நகர்த்தி வைத்து விட்டு போலீஸ்காரர்களை மட்டும் கண்டமேனிக்கு திட்டித் தீர்க்கின்றார்கள்.

என்னே ஒரு நடுவுநிலை இவர்களது?!

Monday, September 10, 2012

லக்பிமாவாவது இந்தியாவை திருத்துமா?!கொஞ்சம் வெறுப்பு வரத்தான் செய்கிறது அந்த கார்டூனைப் பார்த்தால். “லக்பிமா” என்னும் சிங்களப் பத்திரிகையில் தான் அது வந்திருக்கின்றது. அந்த பத்திரிகையின் முதலாளி ராஜபக்‌ஷே அரசில் ஒரு மந்திரி என்றும் சொல்கிறார்கள்.

நமது தமிழக முதல்வரையும், இந்திய பிரதமரையும் ஒரு சேர, உடற்மொழி ரீதியாக மிக அசிங்கமாக சித்தரித்து கேலிச் சித்திரம் வரைந்து வெளியிட்டிருக்கின்றார்கள்.
விளையாடுவதற்காகவும், புனித யாத்திரைக்காவும் தமிழகம் வந்த சிங்களவர்கள் சிலரை திருப்பி அனுப்பிய தமிழக அரசின் செயலுக்கு எதிர்வினையாகத் தான் இந்த கேலிச்சித்திரத்தை அவர்கள் வெளியிட்டிருக்கக் கூடும்.

தமிழக அரசின் அந்தச் செயலுக்கான ஒரு எதிர் வினையை நாம் நிச்சயமாக எதிர்கொள்ளத் தான் வேண்டும். ஆனால் ஒரு நாட்டின் எதிர்வினை என்பது குறிப்பிட்ட வரைமுறைக்குள் தான் இருக்க வேண்டும் என்பதை விட நிச்சயமாக ஒரு நெறிமுறைக்குள் கட்டுப்பட்டிருக்க வேண்டும் என்பதை உண்மையான நடுநிலையாளர்கள் யாரும் மறுக்க முடியாது.

சரி, தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவ்வப்பொழுது தமிழுணர்வாளர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பதும், அதன் ஒரு எல்லையாக சிங்களர்களை துரத்தியடித்ததும் சிங்கள அரசை கோபப்பட வைத்திருப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிந்த அதே சமயத்தில்......

40 பாராளுமன்ற தொகுதிகளைக் கொண்ட தமிழகம் மற்றும் புதுவை மக்களின் விருப்பத்திற்கு மாறாக இலங்கை அரசின் விடுதலைப் புலிகளுக்கு எதிரான விதி மீறலுடன் கூடிய போர் என்ற பயங்கரவாதத்தை (லட்சக் கணக்கான சிவிலியன்கள் கொள்ளப்படுவதை போர் என்று ஏற்றுக் கொள்ள இயலாது. அது பயங்கரவாதம் தான்) அமைதியாக வேடிக்கைப் பார்த்ததுமின்றி, ஆதரவும் நல்கிய மன்மோகன் சிங் அரசு செய்த, துரோகத்துக்கு துணை போன செயலை மறந்து விட்டு அவரையும் அசிங்கப்படுத்தி கேலிச் சித்திரம் வரைந்திருப்பதின் காரணம் தான் என்ன?

உலக அளவில் இதை உற்று நோக்கினால், ஒரு பெரிய நாட்டின் சக்தி வாய்ந்த அதிகாரம் மிக்கவர் மற்றும் ஆட்சித் தலைவரை அதே நாட்டின் ஒரு மாகாண பெண் ஆட்சியாளரோடு உடற்மொழி ரீதியாக மிக கேவலமாக, அருகாமை நாட்டின் முழு அரசு ஆதரவு பெற்ற பத்திரிகையில் கேலிச் சித்திரம் வெளியிட்டிருப்பது எதைக் காட்டுகிறது?

அந்த நாட்டை தனது எதிரி நாடாக பிரகடனப் படுத்துகிறது என்று தான் அர்த்தம் கொள்ள வேண்டும். 

இவ் விடயத்தைக் கொண்டு, அதிமுகவின் தலைவி செல்வி ஜெயலலிதா தமிழ் ஈழ விஷயத்தில் அதிகம் ஸ்கோர் செய்து விடுவார் என்றெல்லாம் எண்ணி, என்னுடைய கருத்தை வெளிப்படையாக தெரிவிக்காமல் இருக்க முடியவில்லை.

இதை முதலில் ஒரு தமிழ் நாட்டுத் தமிழனாகவும், அடுத்தபடியாக ஒரு இந்தியனாகவும் தான் அணுக வேண்டும் என்பது என் நிலைப்பாடு.  நம் தமிழக முதல்வர் அதுவும் ஒரு பெண்ணை பின்னால் இருந்து தாக்குவது போல் கோழைத் தனமாக நான்காம் தர மஞ்சள் பத்திரிகையின் எண்ண ஓட்டத்தோடு கேலிச் சித்திரம் வரைந்த லக்பிமா சிங்கள தினசரியை வன்மையாக என்னுடைய இந்த கட்டுரையின் மூலம் கண்டிக்கிறேன்.

அதேப் போன்று நமது பாரதப் பிரதமரை இழிவுபடுத்தி நாகரீகமற்ற முறையில் தனது ஆதரவு பத்திரிகையின் மூலம் கேலிச் சித்திரம் வரைந்து தன்னை இந்தியாவின் எதிரி என்று பிரகடனப்படுத்திக் கொண்ட இலங்கை அரசுக்கு என் வந்தனங்கள்!

ஏனெனில் இத்தனை நாட்களாக நாமெல்லாம் கூவினாலும் காதில் விழாதவாறு செயல்பட்டு வந்த இந்திய தலைமைக்கு, இப்பொழுதாவது மண்டையில் உரைக்காதா என்ற எதிர்பார்ப்பு தான் அந்த “வந்தனத்திற்கான” காரணம்!

பட்டணத்தி வீட்டு மீன் குழம்பு.

இது காக்காய் தூக்கிப்போன எனது பழைய வலைப்பூவில் பதிவேற்றியது........!
இப்பொழுது மீள் பதிவாய் சிறிய மாற்றங்களுடன்.......!!

அது ஆகிவிட்டது முப்பது வருடங்களுக்கும் மேல். எனக்கு ஒரு பத்து அல்லது பன்னிரெண்டு வயதிருக்கும். இரண்டு நாள் விடுமுறையானாலும் சரி, இரண்டு மாத விடுமுறையானாலும் சரி நாங்கள் கொண்டாடுவதற்காக கொண்டு செல்லப்படும் இடம் "பெருஞ்சேரி". நடுவில் ஒரு சிவன் கோவில், அதன் நான்கு பக்கமும் அதனதன் திசைகளை முன் இணைப்பாகக் கொண்ட நான்கு தெருக்கள். ஊரை நட்ட நடுவில் பிளந்து கொண்டு செல்லும் ஒரு மெயின் ரோடு. ஊரின் கீழ எல்லையில் கிட்டத்தட்ட 50 ஆதிதிராவிடர் குடும்பங்கள் வாழும் ஒரு பெரிய, 'சேரி' என்று அழைக்கப்படும் தெரு.

மேற்கிலிருந்து கிழக்காகச் செல்லும் சாலை. மேல எல்லையில் ஒரு பெரிய கடைத்தெரு. மூன்று டீ கடைகள், ஒரு செட்டியார் மளிகைக் கடை, இரண்டு பெட்டிக் கடைகள், ஒரு பார்பர் கடை, ஒரு சாராயக் கடை என்று கலகலப்பான பெரிய கடைத்தெரு. கீழ எல்லையில் ஒரு சிறிய கடைத்தெரு. இரண்டு டீ கடைகள், ஒரு பெட்டிக் கடை, ஒரு குடியானவர் வைத்திருக்கும் குட்டி மளிகைக் கடை. இரண்டு எல்லைக்கும் இடைப்பட்ட தூரம் சற்றேரக் குறைய ஒரு கிலோ மீட்டர் வரும். வடக்கு எல்லையில் கிட்டத்தட்ட இரண்டு கிலோ மீட்டருக்கு பரந்து விரிந்த விளை நிலங்கள். தென்னண்ட எல்லையில் இரண்டு ஃபர்லாங் மட்டுமே வயல்வெளியும் அதை ஒட்டி வீர சோழன் ஆறும் கம்பீரமாக ஓடிக் கொண்டிருக்கும்.
அப்பாடி..., ஒரு வழியாக எங்களது விடுமுறைக் கொண்டாட்டங்களுக்கு ஒரு பத்துப் பதினைந்து வருடங்கள் தீனி போட்ட சுற்றுலாத் தளத்தை நான்கெல்லை வகுத்து மக்களுக்குப் படம் போட்டுக் காட்டியாகி விட்டது! இனி மேட்டருக்கு வந்து விடலாம். அந்த கிராமத்தில் அள்ள அள்ளக் குறையாத அளவிற்கு ஏகப்பட்ட மேட்டர்கள் இருந்தாலும் இப்பொழுது நாம் கொசுவத்தியைச் சுழல விடுவது ஒரு சுவை நிறைந்த சுவாரஸ்யமான மேட்டருக்குத் தான்.

பெருஞ்சேரியைப் பற்றிச் சொன்னேன், அந்த ஊருக்கும் எனக்குமான தொடர்பைப் பற்றிச் சொல்லவில்லை பாருங்கள். எங்கள் அம்மாவினுடைய பிறந்த ஊர் அது. அங்கிருக்கும் என் பாட்டி வீட்டிற்கு தான் நாங்கள் செல்வோம். மாமாவுக்கு திருமணம் ஆகாத காலம் அது. பாட்டியும் மாமாவும் மட்டுமே. மாமாவுக்கு மாயவரத்தில் உள்ள் CRC டெப்போவில் வேலை. 12 கிலோ மீட்டர் தூரம் தான், அதனால் தினசரி சென்று வந்து கொண்டிருந்தார்கள்.

இன்று வரை மீன் குழம்பு என்றால் எனக்கு அவ்ளோ பிடிக்கும். அந்தச் சின்ன வயதில் கேட்கவே வேண்டாம். என் மாமாவுக்கும் அதேப் போல் மீன் மோகம் உண்டு. நாங்கள் அங்கு சென்றாலே மாமா, பாட்டியிடம் 'அம்மா தம்பிபயலுக்கு (எனக்கு தான்) மீனுன்னா ரொம்ப உசிரு, மத்தியானமா போயி சமுத்திரத்து மீனை வாங்கியாந்து சமைச்சு வச்சிடு, ராத்திரி நான் வந்தோடன எல்லாரும் ஒன்னா சாப்பிடலாம்' ன்னுட்டு, மீனுக்காக ஐந்து ரூபாய் பணத்தை பாட்டியிடம் கொடுத்துவிட்டுப் போய்விடுவார்!

அப்ப எனக்கு ஆரம்பிக்கிற ஊறல் (சலைவா தாங்க) ராத்திரி, முதல் வாய் மீன் குழம்பு சாதத்தை வாயில் வைக்கும் வரை நான் ஸ்டாப்பா ரவுண்டு கட்டும். காலைல கொஞ்சமா சோப்பு போட்டு (சிக்கனமா இருந்தா தான் எங்க பாட்டிக்கு பிடிக்கும்) நல்லா குளிச்சிட்டு, அஞ்சாறு இட்லிய உள்ள வுட்டுட்டு,  லஞ்ச் க்காக வெயிட் பண்ணுவேன். நடுவில் பக்கத்து வீட்டு நடராஜன் விளையாட கூப்பிட்டால் எங்க பாட்டிய விட்டே அவன விறட்டச் சொல்வேன். (அவ்வளவு நல்ல பிள்ளையாக்கும்!) இரவு நல்ல வெயிட்டான சாப்பாடு என்பதால் மதியம் காமா சோமான்னு ஒரு ரசம் ப்ளஸ் மோர் அவ்வளவுதான். நார்த்தங்கா ஊறுகாயை தொட்டுக்கிட்டு தேவாமிர்தமா, இரவு மீன் குழம்பை நினைத்துக் கொண்டு சாப்பிட்டு விடுவேன்.

அந்த கிராமத்தில் எப்பொழுதுமே குளத்து மீன் தான். அதுவும் தூண்டில் மீன் தான். குரவைக் குட்டி போன்று சிறு சிறு மீன்கள் தான் கிடைக்கும். அவைகளும் நல்ல ருசியாகத் தான் இருக்கும். ஆனாலும் அம்மா செய்யும் கோழி வருவலை விட KFC சிக்கன் மேல் ஒரு ஈர்ப்பு வருமே, அதேப் போலத்தான் எப்பொழுதும் கிடைக்கும் நாட்டு மீனை விட, சமுத்திரத்து மீன் என்றால் ஒசத்தி என்ற ஒரு எண்ணம் அன்றைய கால கட்டத்தில் எல்லோருக்கும் உண்டு.

தரங்கம்பாடி, சந்திராப்பாடி கடல்களில் பிடிக்கும் மீன்கள் மதியம் 12 மணிக்கு கரை வந்தவுடன், முப்பது - நாற்பது சைக்கில்களில் பெரிய கூடை வைத்துக் கட்டி, அதில் ஏற்றிக் கொண்டு வீரசோழன் ஆற்றின் கரையை ஒட்டியுள்ள குறுகிய சாலையின் வழியாக வருவார்கள். வரும் வழியில் சங்கரன்பந்தல், பெரம்பூர், மங்கைநல்லூர், பேரளம், பூந்தோட்டம் என்று ஒவ்வொரு முக்கிய ஊர்களிலும் உள்ள மெயின் ரோட்டு முச்சந்தியில் தரைக்கடை போட்டு, ஊருக்குத் தகுந்தாற் போல் இரண்டிலிருந்து ஐந்து சைக்கில்கள் வரை நிறுத்தி மாலை 6 மணிக்குள் வியாபாரத்தை முடித்து விடுவார்கள்.

எங்கள் கிராமத்தின் தென்பகுதி எல்லையில் வீரசோழன் ஆறு ஓடும் என்று சொன்னேனே, அதைக் கடந்து அக்கரைக்குச் சென்றால் மலைக்குடி என்ற கிராமம் வரும். அந்தக் கிராமத்தின் வழியாகத் தான் இந்த மீன் கூடை சைக்கிள்கள் எல்லாம் சீரான இடைவெளியில் சென்று கொண்டிருக்கும். அவர்கள் நடுவில் எங்குமே ஸ்டாப்பிங் போட மாட்டார்கள். அப்படிப் போட்டால் திட்டமிட்ட ஊர்களில் கடை போட்டு மாலை ஆறு மணிக்குள் விற்றுத் தீர்க்க முடியாது.

ஆனால் இங்கு தான் ஆண்டவன் எங்களுக்கு ஆதரவாக கண்ணைத் திறந்திருந்தான்! அந்த மலைக்குடி மெயின் ரோட்டில் ஒரு சிறிய குடிசை போட்டுக் கொண்டு நம் வலையுலக பாஷயில் சொன்னால் ஒரு மீனவனும் அவர் மனைவியும் வாழ்ந்து வந்தார்கள். அந்தக் காலத்து என் பாட்டியின் பாஷையில் சொன்னால் ஒரு பட்டிணத்தானும், பட்டணத்தியும் வாழ்ந்து வந்தார்கள். அவர் ஏதோ கோவத்தில் சொந்த ஊரை விட்டு வெளியேறி இங்கு வந்து குடிசை போட்டுக் கொண்டதாகவும், அப்பொழுது கொஞ்ச நாள் எங்கள் பாட்டி வீட்டில் வேலை பார்த்ததாகவும், அந்த நன்றிக் கடனுக்காகத் தான் இன்றைக்கும் அவன் தமக்கு உதவுவதாகவும், ஒவ்வொரு முறை மலைக்குடிக்கு மீன் வாங்கச் செல்லும் பொழுதும் மறக்காமல் என் பாட்டி சொல்வார்.
மதியம் ஒன்றரை மணிக்கெல்லாம் நானும் என் பாட்டியும் அந்த மீனவர் வீட்டுக்குச் சென்று திண்ணையில் அமர்ந்து விடுவோம். ஒவ்வொரு மீன் சைக்கிளாக வர ஆரம்பிக்கும். அதை அவர் நிறுத்துவதும், என் பாட்டி சென்று கூடையைப் பார்த்து சரியில்லை என்று தவிர்ப்பதுமாக, குறைந்த பட்சம் பத்திலிருந்து அதிக பட்சமாக இருபது வண்டிகள் வரையிலும் கூட தொடரும். கடைசியில் பாட்டி 5 ரூபாய்க்கு மீன் வாங்குவதற்கு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாவது ஆகிவிடும்.

இதற்கிடையில் அந்த மீனவப் பெண்மனி முதல் வண்டியிலேயே மீன் வாங்கி (அவர்களுக்கு இலவசம்) கழுவி சமைத்தும் முடித்து விடுவார். அவர் அடுப்பில் சட்டியை வைத்து மீன் கொதிக்க ஆரம்பித்தவுடனேயே, என்னால் இருப்பு கொள்ள இயலாது. அந்த வீட்டின் திண்ணை என்று சொல்லப்படும் மேட்டில் உட்கார்ந்தாலேயே ஒட்டுமொத்த வீடும் துப்புறவாகத் தெரியும். மீன் குழம்பு பற்றிய என் கொலை வெறியைப் பார்வையிலேயே புரிந்து கொண்ட அந்தப் பெண்மனி, சாப்புடுறியா கண்ணுன்னு முதல் மரியாதை ராதா ஸ்டைல்ல தட்டுல சாதம் மீன் குழம்பு, மீன் எல்லாம் போட்டு எடுத்து வந்துவிடும்.

அதற்கு பதில்வினையாக, நான் செயல்பட எத்தணிக்கும் முன்பே பாட்டி குறுக்கே புகுந்து, "ஐயையோ அவங்க அப்பா என்னைய மாதிரி கெடையாது, இந்த மாதிரி இடத்துக்கெல்லம் அவன் வந்தது தெரிஞ்சாலே அவன கண்டம் துண்டமாக வெட்டிப் போட்டுடுவாரு. எனக்கு இந்த மேசாதி, கீழ்சாதி அப்டின்னெல்லாம் பார்க்க தெரியாது ஆனா எங்க மாப்ள அப்படி இல்லையே, என்னா பண்றது?" என்று தன்னுடைய ஒட்டுமொத்த தீண்டாமை அழுக்கையும் என் தந்தையில் மேல் பூசிவிட்டு, என்னுடைய ஆசைக் கனவை தவிடு பொடியாக்கி விடுவார். ஒவ்வொரு தடவை அங்கு செல்லும் பொழுதும் அவர் எடுக்கும் தீண்டாமைப் பாடம் மீன் குழம்பு கொதிக்க ஆரம்பித்தவுடன் ஆவியாய் மறைந்து விடும்.

ஆனால் அன்றைக்கு ஒரு முடிவோடும், திட்டத்தோடும் தான் பாட்டியோடு மலைக்குடிக்கு பயணமானேன். குடிசையின் திண்ணையில் உட்கார்ந்து விட்டேன், பாட்டியும் ஒவ்வொரு சைக்கிளாகச் சென்று பார்க்க ஆரம்பித்து விட்டார். இங்கு மீன் கொதிக்க ஆரம்பித்து விட்டது. வாசமும் தூக்க ஆரம்பித்து விட்டது. நான் எப்பொழுதும் மறைத்துக் கொள்ள முயலும் என் ஆசையை அன்று மறக்காமலே முக பாவனையில் வெளியிட ஆரம்பித்தேன். அதை பாட்டி, பட்டணத்தி இருவருமே நன்றாக கவனித்தும் விட்டார்கள். ஒரு சில தடவைகளாக சாப்பிடச் சொல்லி கேட்காத அந்தப் பெண்மணியும் அன்று வழக்கம் போல் தட்டில் நிறைய சோறு, குழம்பு, மூன்று மீன்கள் போட்டு கொண்டுவந்து சாப்பிடு கண்ணுன்னு சொன்னார்.

உடனே பாட்டி அப்பா கதைய அவிழ்க்க ஆரம்பிக்க..., நான் குறுக்கே புகுந்து பாட்டி நான் அப்பாட்ட இந்த முறை கேட்டுட்டேன். அவரும் "நான் முன்னாடி காங்கிரஸ்ல இருக்கும் போது தான் அப்படி புரியாம நடந்துகிட்டேன், அண்ணா கட்சில சேர்ந்ததிலேருந்து மனுஷனா மாறிட்டேன், உனக்கு அவங்க வக்கிற மீன் குழம்பு பிடிக்கலன்னாலும் அவங்கள சந்தோஷப் படுத்துறதுக்காகவாவது சாப்பிடனும்" னு சொல்லிட்டாரே! அப்டின்னு ஒரே போடா போட்டுட்டு, பாட்டிய திரும்பிக் கூட பார்க்காம தட்டை வாங்கி சாப்பிட ஆரம்பித்து விட்டேன்.

நான்கு தட்டுகள் வரை சாதம் வாங்கி, கிட்டத்தட்ட பத்து மீன் துண்டுகள் வரை சாப்பிட்டுவிட்டேன். "நீ அவ்ளோ அழகு"ன்னு சிம்ரன பார்த்து சூர்யா சொல்வது போல "நீ அவ்ளோ ருசி"ன்னு அந்த மீனையும், குழம்பையும் பார்த்து சொல்லிகிட்டே அவ்வளவையும் சாப்பிட்டு விட்டேன்.  என் பாட்டியோ ஒன்றும் செய்ய முடியாமல், அங்கு கோபத்தையும் அவர்கள் எதிரில் காட்ட முடியாமல், புள்ள சாப்ட்டதுக்கு வச்சுக்கன்னு அஞ்சு ரூவாய அந்த மீனவனிடம் கொடுக்க, அவரோ என்ன ஆச்சி இது மொத தடவயா புள்ள எங்க வூட்டுல ஒக்காந்து சாப்ட்ருக்கு, அதுக்கு காசு வாங்குறதா? ன்னு சொல்லி அந்த ஐந்து ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிற்கு ஒரு சைக்கிளில் மீனை வாங்கி பாட்டியிடம் கொடுத்து விட்டார்.
அதன் பிறகு ஆற்றைக் கடக்கும் வரையிலும் அமைதியாக வந்த பாட்டி (அவர்கள் குடிசையிலிருந்து பார்த்தால் தெரியும் என்பதாலோ என்னவோ), இக்கரை வந்தவுடன் ஒரு வேப்பங்குச்சியை ஒடித்துக் கொண்டு என் முழங்காலுக்குக் கீழே வாங்கு வாங்கென்று வாங்கி விட்டார். அவர் கையைப் பிடித்து தடுக்க முற்பட்ட போது, "அடேய் நாயே என்ன தொட்டுடாத, உன்னையவே தீட்டு கழிச்சாவனும்" னூ ஏதேதோ சத்தம் போட்டு, ஆடு மாடுகளை விரட்டி வருவது போல் கையில் கம்போடு என் பின்னே ஆவேசமாக நடந்து வந்து கொண்டிருந்தார்.

வீடு வந்தவுடன் உள்ளே நுழைய முற்பட்ட என்னை தடுத்து சந்து படலை திறந்து விட்டு, பம்படியில் என் டிராயர், சட்டையைக் கழட்டச் சொல்லி அந்தக் கம்பினாலேயே அதைத் தூக்கி தொட்டியில் இருந்த தண்ணீரில் நனைத்து விட்டு, என்னை உட்காரச் சொல்லி மூன்று வாலி தண்ணீரை தலையில் ஊற்றி, மாட்டுக் கோமியத்தை கொண்டுவந்து தலையில் தெளித்து, கையில் ஊற்றி ஒரு மிடரு விழுங்கவும் சொன்னது தான் உச்சக்கட்டம். மறுத்து ஒதுங்கிய போது கம்பை ஓங்கவே, தொல்லை விட்டால் சரி என்று ஒரு மிடறு குடித்து வைத்தேன்!

பிறகு சாமி அறைக்கு அழைத்துச் சென்று அங்குள்ள சாமிகளிடம் மன்னிப்பெல்லாம் தானும் கேட்டு என்னையும் கேட்கச் சொல்லி ஒன்னேகால் ரூபாயை என் கையில் கொடுத்து உண்டியலிலும் போடச் சொல்லி, என்னால் ஏற்பட்ட தீட்டை கழித்துவிட்ட திருப்தியில் மீன் அலம்பச் சென்று விட்டார்.

அவர் தீட்டுக் கழித்து விட்டதாக நினைத்து தன் அலுவல்களைக் கவனிக்க ஆரம்பித்தாலும், அது வரையிலும் நான் பிரியமுடன் பழகிவந்த என் பாட்டி, அன்று முதல் ஏதோ அழுக்குப் பிடித்தவராக, இருள் சூழ்ந்தவராகவே என் கண்களுக்குத் தெரிய ஆரம்பித்தார். ஒரு மீனவன் பிடித்துக் கொண்டுவரும் மீனை சிபாரிசு வைத்து வாங்கி வந்து வாயில் வைத்து விழுங்கத் தெரிகிறது. ஆனால் அவன் செய்து தரும் சாப்பாட்டை தின்னா தீட்டு ஒட்டிக்குமா...?

அதன் பிறகு எனக்கும் பாட்டிக்குமான நெருக்கத்தில் அனிச்சையாகவே ஒரு சரிவு ஏற்பட ஆரம்பித்து விட்டது. ஒரு கட்டத்தில் அதுவே நிரந்தர இடைவெளியை எங்களுக்குள் ஏற்படுத்திவிட்டது. அதன் பிறகு அங்கு சென்றாலே என் மாமா, அவர் மனைவி, பிள்ளைகள் இத்தோடு என் பேச்சு வார்த்தை நின்று போனது. நான் பூண்டி புஷ்பம் கல்லூரியில் எம்.எஸ்.ஸி படித்துக் கொண்டிருக்கும் பொழுது பாட்டிக்கு உடல் நலமில்லை என்று செய்தி வந்து, புறப்பட்டு பெருஞ்சேரி வந்தேன்.

மரணப் படுக்கையில் இருந்ததால், சுற்றிலும் மகன், மகள்கள், பேரக் குழந்தைகள் என்று அவர் இறக்கும் தருணத்திற்காக வெயிட்டிங். நான் வந்தவுடன் என்னையும் பால் ஊற்றச் சொன்னார்கள். ... ஊற்றினேன். லேசாக கண்ணை விழித்துப் பார்த்த பாட்டி, என் கையைப் பிடித்து முடியாமல் சிரித்துக் கொண்டே, "ஒரு பட்டணத்திய பார்த்து கல்யாணம் பண்ணிக்கிறியா?" ன்னு மெதுவாகக் கேட்க, அந்த சம்பவத்தை அறிந்த மாமாவும், அம்மாவும் மட்டும் சிரித்தார்கள். எனக்கும் லேசாக சிரிப்பு வந்தது. பாட்டி கண்ணில் லேசாக கண்ணீர்... ஒரு ஐந்து நிமிட இடைவெளியில் பாட்டி இறந்து விட்டதாக சுற்றிலும் நின்று கொண்டிருந்தவர்கள் ஃபார்மலாக அழ ஆரம்பித்தார்கள்...!!!