Friday, November 23, 2012

இருண்ட தமிழகம்!

எங்கு பார்த்தாலும் ஒரே மயான அமைதி. இரண்டு வருடங்களுக்கு முன்பு மக்கள் அனுபவித்துக் கொண்டிருந்த அனேக சௌகரியங்களை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து, இப்பொழுது இந்த அசௌகரியங்களை பழகிக் கொள்ள முயன்று கொண்டிருக்கின்றார்கள். ஆனால் குழந்தைகளையும், சிறு பிள்ளைகளையும் நினைத்தால் தான் பரிதாபமாக இருக்கின்றது.

ஓரிரு வயதாகியிருக்கும் குழந்தைகளுக்குக் கூட பரவாயில்லை. பிறந்ததிலிருந்தே, தொடர் மின்விசிறி காற்றில் தூங்காத இந்த நிலை பழக்கமாகியிருக்கும். ஆனால் மூன்று வயதிற்கு மேல் உள்ள குழந்தைகள் படும் பாடு தான் காணச் சகிக்கவில்லை. பிறந்ததிலிருந்து இரவு நேரத்தில் முழு மின் விசிறிக் காற்றில் தூங்கப் பழகிவிட்டு, இப்பொழுது பாதி ராத்திரி புழுக்கமும், கொசுக்கடியும் தரும் அவஸ்த்தையில் துவண்டு போகிறார்கள்.

காலை ஆறு மணிக்கு கண் விழித்தாலே கூட கரண்ட் காணாமல் போய்விடுகிறது. அடுத்து பத்து மணிக்குத் தான் திரும்பவும் கரண்ட்டைக் கண்ணால் பார்க்க முடியும். ஆனால் அலுவலக வேலைக்குச் செல்பவர்களானாலும் சரி, தினக்கூலி வேலைக்குச் செல்பவர்களானாலும் சரி, காலை 8 லிருந்து பத்து மணிக்குள் வேலைக்குச் சென்றுவிட வேண்டும் என்ற நியதி இருப்பதால், மின்சாரத்தை உபயோகிக்காமலேயே வேலைக்குச் சென்று விட வேண்டிய அவலம் தான் மிஞ்சுகிறது.

ஹீட்டரில் சுடுநீர் வைத்துக் குளிப்பது, காலையில் படிப்பது, மிக்ஸியில் சட்னி அரைப்பது, காலையில் உடைகளை சலவை செய்து கொள்வது, நல்ல வெளிச்சத்தில் அலங்காரம் செய்து கொண்டு வேலைக்குக் கிளம்புவது, செல்ஃபோன் சார்ஜ் செய்வது, காலைச் செய்திகளை டீவியிலோ, ரேடியோவிலோ கேட்பது, அக்வாகார்டில் குடிநீரைச் சுத்திகரித்துக் குடிப்பது, ....

என்ற இப்படியான எண்ணற்ற காலை வேலைகளுக்கு நமக்கு பேருதவியாக இருந்த மின்சாரம் இன்மையால், அனேகமாக அனைவர் வாழ்விலும் இந்த காலை நேரப் பணிகள் தடையாகித் தான் போயிருக்கிறது.

ஒரு வழியாக பத்து மணிக்கு வரும் மின்சாரம் அடுத்த இரண்டு மணி நேரத்தில் தன் கடமையை முடித்து விட்டு 12 மணிக்கெல்லாம் கடையைக் கட்டிவிடும்! அதற்குள்ளாக வீட்டுப் பெண்கள், குடும்பத்தினரின் மறுநாள் தேவைக்கான உடைகளை சலவை செய்வதா? வாஷிங் மெஷின் போட்டு அழுக்குத் துணிகளை துவைப்பதா? மிக்ஸி கிரைண்டரைப் பயன் படுத்தி மதிய உணவைச் சமைப்பதா? என்று அல்லாடித் தான்  போய்விடுவார்கள்!

இதில் தங்களை ரிலாக்ஸ் செய்து கொள்ள டிவீ, ஃபேன் என்றெல்லாம் எப்படி எண்ணம் வரும்? 12 மணிக்குப் போன கரண்ட் மறுபடியும் மாலை நான்கு மணிக்குத் தான் வந்து கதவைத் தட்டும். அதற்குள்ளாக வியர்வையில் நனைந்தபடியே சாப்பிட்டு முடித்து.....   காலையிலிருந்து தொடர்ந்து வேலை செய்து, மதியும் உண்ட களைப்பும் சேர்ந்து கொள்ள கொஞ்சம் படுத்து உறங்கி புத்துணர்வு பெறலாம் என்றாலும், வியர்வையில் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து தலைவலி வந்தது தான் மிச்சம் எம் தாய்க்குளங்களுக்கு!

தலைவலி தலையைப் பிளக்க ஆரம்பிக்கும் போதே சரியாக 4 மணிக்கு மின்சாரம் வந்து கதவைத் தட்ட, மீண்டும் அறக்கப் பறக்க ஓட்டத்தை ஆரம்பித்தாக வேண்டும். ஏனென்றால் வந்த கரண்ட், ஆறு மணிக்கெல்லாம் மீண்டும் கடையைக் கட்டிவிடுமே!

அந்த இரண்டு மணி நேரத்தில், அவசர அவசரமாக கிரைண்டர் போட்டு இட்லி மாவு அரைப்பது, இரவு டிபனுக்கு மிக்ஸி, குக்கர் இத்தியாதிகளை பயன் படுத்தி வேலைகளை முடித்துக் கொள்வது, தண்ணி டேங்க்குக்கு நீர் ஏற்றுவது, இத்தியாதிகளை முடித்தாக வேண்டும்!

ஒரு வழியாக ஆறு மணிக்கெல்லாம் கரண்ட் போன பின்பு முகம் கழுவிக் கொண்டு, இருட்டில் சென்ற கணவனையும் பிள்ளைகளையும், இருட்டோடு வீட்டிற்குள் வரவேற்று.....  அதன் பிறகு ஆறே முக்காலுக்கு வந்து ஏழேகாலுக்கு போகும் அரை மணி நேர கரண்ட்டில், கணவனும், குழந்தைகளும் டீவிக்கு அடித்துக் கொண்டிருக்க, இரவு டிபனுக்கு அம்மா ரெடி செய்து விடுவாள்.

ஏழேகாலுக்கு கரண்ட் போனவுடன், வாசலில் வந்து அனைவரும் அமர்ந்து கொண்டு கதை பேச.... சரியாக எட்டு மணிக்கு கரண்ட் வந்தவுடன், அவசர அவசரமாக அனைவரும் உள்ளே வந்து சீக்கிரமாக கரண்ட் இருக்கும் போதே சாப்பிட்டு முடித்து விட்டு, படுக்கையறைக்குள் புகுந்து விட வேண்டியது தான்! இல்லன்னா, மீண்டும் எட்டே முக்காலுக்கு கரண்ட் போயிடுமே! இதே கதை தான் இரவு முழுதும் பயணித்து, விடிகாலை 6 மணி வரை தொடரும்.

இது தான் இன்றை தமிழக குடும்பங்களின் ஒரு நாள் வாழ்க்கை முறையாக இருந்து கொண்டிருக்கிறது.  தன் சௌகரியத்துக்கு, தான் நினைத்தபடி எதையும் எப்பொழுதும் செய்து கொள்ள முடியாது. குழந்தைகளுக்கு படிப்பு, விளையாட்டு எதுவும் கிடையாது. பெரியவர்களுக்கு டிவீ, ரேடியோ என்ற பொழுதுபோக்கு அம்சங்கள் கிடையாது. பெண்களுக்கு மாவரைப்பது, சட்னி அரைப்பது, துணி துவைப்பது, சலவை செய்வது எல்லாம் சவாலாகிப் போய்விட்டன.

மொத்தத்தில் கரண்ட் இல்லாமல், மின் விசிறி இல்லாமல், இரவு பகல் எப்பொழுதும், வியர்வையில் பொசுங்கி, கொசுக்கடியில் அல்லலுற்று, தூக்கம் கெட்டு நடைப் பிணமாகத் தான் ஒவ்வொரு தமிழனும், தமிழச்சியும் தமிழகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

மாலை ஆறு மணிக்கு மேல் ஊரே இருண்டு கிடக்கிறது. நிறைய வழிப்பறிகளும், சங்கிலி அறுப்புகளும் சர்வசாதாரணமாகி விட்டன. பெண்கள் வெளியே வரவே அச்சப்படுகின்றார்கள். வாழ்க்கையே முடங்கிப் போனது போல் ஆகிவிட்டது ஒவ்வொருவருக்கும்.

மாலை நேரங்களில் கரண்ட் இல்லாத போது ஊரே ஒரு வித மயான அமைதியில் இருப்பது போன்ற ஒரு உணர்வு வருகின்றது...... இதெல்லாமே கரண்ட் இல்லாததால் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தமிழக மக்கள் அனுபவிக்கும் ஒருநாள் வாழ்க்கை முறை கஷ்டங்கள் மட்டுமே....!

ஆனால் இந்த மின் தடையால் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பொருளாதார இழப்பும், அதன் காரணமாக அவர்கள் படுகின்ற பாடும், தனிப் பெரும் பதிவாக எழுதக் கூடிய அளவிற்கு மிகவும் மோசமானது!!!!

ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக தமிழகத்தில் ஒரு குரல் ஒலித்துக் கொண்டிருந்தது, தமிழகம் இருண்டு விட்டது.. தமிழகம் இருண்டு விட்டது என்று!

அந்தக் குரலுக்குச் சொந்தக்காரருக்கு அப்பொழுதே தெரிந்திருக்கிறது போலும் தமிழகம் இருண்டுவிடும் என்று!!!!