Thursday, October 24, 2013

அடி வாங்கும் அதிமுகவும்..! அலற ஆரம்பிக்கும் அவா ஊடகங்களும்..!!தனக்கு எதிரான எந்த ஒடுக்குமுறையையும் தட்டிக்கேட்க எவருமே இல்லாத நிலையில், அப்படிக் கேட்கின்ற ஒருசிலர் மீதும் அடுக்குமுறையை ஏவி அப்புறப்படுத்தும் போதும் தான்....

ஒரு இனம், தனக்குத் தானே என்பது போல் இயல்பாகவே ஒன்றிணைந்து தனக்கு எதிரான ஒடுக்குமுறைக்கும், அடக்குமுறைக்கும், சுரண்டலுக்கும் முடிவு கட்ட வெகுண்டு எழும். அப்படி எழும் போது அந்த உணர்ச்சியின் வீரியம் அளப்பரியதானதாக இருக்கும். அது தன் குறிக்கோளை அடையாமல் அடங்காது. அதற்குப் பெயர் தான் “புரட்சி”!

தமிழகத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக இப்படி மக்களுக்கு எதிராக, வரலாறு காணாத விலையேற்றம், மின் கட்டண, பஸ் கட்டன உயர்வு என்பதோடு மட்டுமல்லாமல், ஜாதிக் கலவரங்கள், வன்முறைகள், துப்பாக்கிச் சூடுகள், 144 தடை உத்தரவுகள், சங்கிலிப் பறிப்பு, திருட்டு, கொலை, கொள்ளை என்று தொடர்ந்து..., மாநிலத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் உட்பட விவசாயம், சிறு, குறு தொழில்கள் அனைத்தும் முடக்கப்பட்டிருக்கின்ற நிலையில் என்பதுகளில் இருந்தது மாதிரியான மிக மிகப் பெரிய அளவிலான வேலையில்லாத் திண்டாட்டம் அடித்தட்டு மக்களிடையேயும், கீழ் நடுத்தர வர்க்கத்து மக்களிடையேயும் தலைவிரித்து ஆடுகிறது என்பதில் நீண்டு...., சாலைகள், பாலங்கள், தூர்வாருதல், துப்புறவுப் பணிகள் முதற்கொண்டு கடந்த ஆட்சியில் நடந்து கொண்டிருந்த அனைத்து உட்கட்டமைப்புப் பணிகளும், உள்ளாட்சிப் பணிகளும் பராமரிப்பின்றியும், தொடராமலும் சிதைந்து போயிருப்பதும், இது எல்லாவற்றிற்கும் மேலாக, மக்களை நேரடியாக பாதிக்கும் அனைத்து துறைகளிலும் மிகச் சாதாரணமாக நடக்கும் ஊழகள், அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களை நேரடியாக பாதிக்கும் டிரான்ஸ்ஃபர் ஊழல்கள் என்பதை எல்லாம் அதிமுகவின் அதி தீவிர ஏடுகளான ஜூவியும், தினமலருமே பட்டியலிட்டு அலறும் நிலையில்.......

மக்கள் இன்னும் பெரிய ஏற்றம் அல்லது மாற்றம் வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் தேர்ந்தெடுத்த அதிமுகவினரும், அதன் கூட்டணிக் கட்சியினரும் இந்த அவலங்களையெல்லாம் கண்டு கொள்ளாமல் இந்த ஆட்சிக்கு ஜால்ரா அடித்துக்கொண்டிருக்க, மக்கள் எதிர்க்கட்சி அந்தஸ்த்து வழங்கி சிறப்பித்த விஜயகாந்த் பம்மிப் பதுங்கி விட, ஊடகங்களும் மிரட்டப்பட்டோ அல்லது ரொட்டித்துண்டுகள் போட்டோ முடக்கப்பட...

திமுக மட்டும் வழக்கம் போல் மக்களுக்கு ஆதரவாக களத்தில் நிற்பதை மக்கள் உணர ஆரம்பித்திருக்கின்றார்கள். சட்டமன்றமாகட்டும், மக்கள் மன்றமாகட்டும் அரசின் தவறுகளை தெளிவாகச் சுட்டிக்காட்டி திமுக மட்டுமே மக்களுக்கு ஆதரவாக களத்தில் நிற்கிறது. தமிழகம் முழுவதும் ஐந்தாயிரம் இடங்களில் தெருமுனைப் பிரச்சாரங்கள் நிகழ்த்தி உங்களோடு, உங்களுக்காக நாங்கள் இருக்கின்றோம் என்ற நம்பிக்கையை மக்கள் மனங்களில் விதைத்திருகின்றது. உடகங்கள் கண்ணைப் பொத்தி, வாயை மூடிக்கொண்டிருந்தாலும், வலிமையான இணையதள பிரச்சாரம் மூலம் அக்கட்சியின் தலைவர், தளபதி முதல் அடிமட்டத் தொண்டன் வரை இந்த ஆட்சியின் அவலங்களை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சென்று இந்த அவல ஆட்சிக்கு மூக்கணாங்கயிறு போட்டு மிகப் பெரிய அளவிலான அத்துமீறல்களுக்கு அணை போட்டுக் கொண்டிருக்கின்றது.....!

ஆயினும், தாங்கள் கொடுத்த மிருக பலத்துடன் ஆட்சியில் அமர்ந்திருப்பதாலும், அவா தரப்பு ஊடகங்களின் அளப்பறிய ஆசீர்வாதத்தாலும், மற்ற தரப்பு ஊடகங்களின் மண்டியிடலாலும், சமூக நீதிக்கு எதிரான நடவடிக்கைகளை கொஞ்சம் கொஞ்சமாக கட்டவிழ்த்து விட்டு, அதிலிருந்து மக்கள் கவனங்களை திசை மாற்ற சாதிச் சங்கங்களின் செயல்பாடுகளை நீர்த்துப் போகாமல் நிலை நிறுத்தி, ஒரு சில கவர்ச்சியான இலவச அல்லது மலிவு விலைத் திட்டங்களை மட்டுமே செயல்படுத்தி, மது குடித்தலை மிகப் பெரிய அளவில் ஊக்குவித்து, பணப்புழக்கம் இல்லாத நிலையை உருவாக்கி, வேலை வாய்ப்பும் இல்லாமல், எதிர்காலத்தில் அவாளை அண்டிப்பிழைக்கும் அவல நிலைக்கு தாம் தள்ளப்படுவதை மக்கள் தெளிவாக உணர்ந்து பொங்கியெழ ஆரம்பித்திருக்கின்றார்கள்.

அதன் பொருட்டே மக்களின் இந்த எழுச்சி...., எங்கே “புரட்சியாக” மாறிவிடுமோ என்று பயந்து தான் அவா ஊடகங்களே தற்பொழுது மக்களை நேரடியாக பாதிக்கின்ற அரசுத்துறை ஊழல்கள் பற்றி அரசை விமர்சிக்காமல், எச்சரிக்கும் விதமாக எழுத ஆரம்பித்திருக்கின்றன....!!!

ஆகவே, அதிமுக ஆட்சியாளர்களே! அவா தரப்பு ஊடகங்களே!! இது பழைய காலம் இல்லை, எல்லோரையும் எப்பொழுதுமே ஏமாற்றிக் கொண்டிருக்கலாம் என்று எண்ணுவதற்கு! மக்கள் விழித்துக் கொண்டு விட்டார்கள், நீங்கள் வீழ்த்தி விட்டதாக எண்ணிக்கொண்டிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் அவர்களுக்கு ஆதரவாக அடுத்த தலைமுறைக்கான தலைவரையும் தேர்ந்தெடுத்து வைத்துக்கொண்டு எழுச்சியுடன் களத்தில் நிற்கின்றது......

அடங்கி ஒடுங்கி, ஒழுக்கமான் ஆட்சியை நடத்துகின்ற வழியைப் பாருங்கள்.... இல்லையென்றால் வருங்காலம் உங்களுடையதாக இருக்காது!!!


Monday, October 21, 2013

திராவிட முன்னேற்றக் கழகமும்... குறுநில மன்னர்களும்...!

கடந்த ஐந்தாண்டு கால திமுகழக ஆட்சியை வீழ்த்தி ஆரிய அம்மாவை ஆட்சியில் அமர்த்த அவாளால் வடிவமைக்கப்பட்டு நம்மவர்களிடம் பரப்புரை செய்த விஷமப் பிரச்சாரம் என்பது ஐந்து தலைபிலானதாக இருந்தது. 1. இலங்கைப் பிரச்சினை, 2. ஸ்பெக்ட்ரம், 3. குறுநில மன்னர்கள், 4. அளவுக்கதிகமான இலவசமும் அதனால் ஏற்பட்ட கடும் விலைவாசி உயர்வும், 5. மின்வெட்டு!!

இதில் “குறுநில மன்னர்கள்” தலைப்பில் அவர்கள் செய்த பரப்புரையில் மிக அதிக அளவில் வறுத்தெடுக்கப்பட்டது நமது சேலத்துச் சிங்கம் ஐயா வீரபாண்டியார் அவர்கள் தான்....

இந்த ஃப்ளாஷ்பேக்ல கட் பண்ணி இப்பத்திக்கி சீனுக்கு வாங்க மக்கா...!


                    

கடந்த வாரம் சேலம் மாவட்ட கழக அலுவலகமான கலைஞர் மாளிகையில் உள்ள வீரபாண்டியார் அரங்கில் நடைபெற்ற கழக மாணவரணியின் மாநிலம் தழுவிய அனைத்து மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கூட்டத்தில் நானும் கலந்துகொள்வதற்கான ஒரு சந்தர்ப்பமும் வாய்ப்பும் கிட்டியது.

அங்கே வந்திருந்த அனைவருக்கும் நல்ல புத்தகம் ஒன்றை உள்ளே நுழையும் போதே பரிசாக தந்து கொண்டிருந்தார்கள். கலைஞர் ஆட்சிக் காலங்களில் தமிழ்கத்திற்குச் செய்த சாதனைகளின் பட்டியல்.... இது தான் அந்த நூலின் உள்ளடக்கம். ஒரு கட்சி அதன் தலைவர் தம்முடைய ஆட்சிக் காலத்தில் செயல்படுத்திய நலத்திட்டங்கள், அந்த நாட்டிற்கான உள்கட்டமைப்பு வசதிகள், நிலைநாட்டிய சமூகநீதி சட்டங்கள், உருவாக்கிய வேலை வாய்ப்புகள், ஏற்படுத்திய தொழிற் புரட்சிகள், நிறைவேற்றிய தொலை நோக்குத் திட்டங்கள், நிறுவிய வரலாற்றுச் சின்னங்கள்... என்ற பட்டியலை புத்தகமாக வெளியிடும் அளவிற்கான எண்ணிக்கை கொண்டது என்பதான வரலாறு இந்த இந்திய அளவில் வேறு எவருக்காவது சாத்தியமா? என்பதை மோடி மஸ்தான்களின் மகுடிக்கு மயங்கிக் கிடக்கும் மிடில் கிளாஸ் மாதவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அது போகட்டும்! அந்த புத்தகத்தில் ஐயா வீரபாண்டியார் சேலம் மாநகருக்கும், ஒட்டுமொத்த சேலம் மாவட்டத்திற்கும் செய்திட்ட நலப்பணிகளை சுறுக்கமாக பட்டியலிட்டிருந்தனர். அந்த சாதனைகளின் எண்ணிக்கையே ஐம்பத்தி ஒன்று என்ற அளவில் இருந்தது. அந்தப் பட்டியலில் பத்து பேருக்கு சைக்கிள் கொடுப்பது, நூறு பேருக்கு தையல் மெஷின் கொடுப்பது, ஆயிரம் பேருக்கு இலவச திருமணம் செய்து வைத்தது போன்ற நற்பணிமன்ற பணிகளை எல்லாம் சேர்த்து ஒப்பேற்றியிருக்கவில்லை.

இன்னும் ரத்தினச் சுறுக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், ஐயா வீரபாண்டியார் போராடிப் பெற்று தம் மாவட்டத்திற்கு செய்திட்ட அந்த ஐம்பத்தியொன்று நலத்திட்டங்களை கழித்துவிட்டுப் பார்த்தால் சேலம் என்பது ஆந்திரா, ஒடிசா அல்லது பீகாரில் இருக்கின்ற ஒரு கிராமத்தைப் போன்றதாகத்தான் இன்றைய இளம் தலைமுறையினருக்கும் புலனாகியிருக்கும்.

எத்தனையெத்தனை புதிய அரசுப் பள்ளிகள், எத்தனை பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டிருக்கின்றன, அற்புதமான அரசு நூலகம், மல்டி ஸ்பெஷாலிடி மருத்துவமனை, உருக்காலை இரண்டாம் நிலை, உள்ளாட்சியிலிருந்து மாநில நெடுஞ்சாலையாகவும், மாநில நெடுஞ்சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளாகவும் மாற்றப்பட்டு மாவட்டம் முழுவதும் தரம்மிக்க சாலைகளால் இணைத்திருக்கின்றார், அதன் விளைவாக எத்தனையெத்தனை மேம்பாலங்கள், விவசாயத்துறையில் இருந்ததால் அது சம்பந்தப்பட்ட உயரிய ஆராய்ச்சிக் கூடங்கள், எத்தனையெத்தனை குடியிருப்புகள்......

இப்படியாக மாவட்டத்திற்கும், மக்களுக்கும் தொலைநோக்கிலும் சமகால வாழ்வாதாரத்திற்கும், அடிப்படை மற்றும் கிராமப்புர கல்விச் சேவையிலும் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியிருக்கின்றார்.

இவ்வளவையும் ஒரு மாவட்டத்திற்கு கொண்டுவர வேண்டும் என்றால் கட்சி மற்றும் ஆட்சித் தலைமையிடம், உரிமையோடு போராடிப் பெறக்கூடிய அளவிலான சக்திமிக்க இந்த மாதிரியான குறுநில மன்னார்களாலேயே சாத்தியப்படும்! சாமான்யர்களால் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு இவ்வளவு பெரிய திட்டங்களை குறுகிய கால அளவில் சாத்தியமாக்கியிருக்கவே முடியாது.

வீரபாண்டியார் என்று மட்டுமல்ல, திமுகவின் குறுநில மன்னர்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட அத்தனை பேருமே தன் தலைமையிடம் போராடி பிரம்மாண்டமான எண்ணற்ற நலத்திட்டங்களை தத்தமது பகுதிகளுக்குக் கொண்டு வந்து சேர்த்திருக்கின்றார்கள்.

அதன் காரணமாகவே இந்திய அளவில் தமிழகமானது உட்கட்டமைப்பு வசதிகள் உட்பட வேலைவாய்ப்பு வரை இன்றைய தேதியில் மிகவும் வளர்ச்சியடைந்த மாநிலமாக திகழ்ந்து கொண்டிருகின்றது.

மோடியின் குஜராத் அப்படியிருக்கும் இப்படியிருக்கும் என்று புலகாங்கிதம் அடைந்து கொண்டிருப்பவர்கள் எல்லாம், இருபது ஆண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தையும் இன்றைய தமிழகத்தையும் படம் பிடித்துப் பார்த்தால், இவ்வளவு குறுகிய காலத்தில் எவ்வளவு பெரிய வளர்ச்சியை தமிழகம் அடைந்திருக்கின்றது என்பதை புரிந்துகொள்ள முடியும். அதுவும் இந்த வளர்ச்சிப் பணிகள் அனைத்துமே திமுக ஆட்சிக்காலங்களில் மட்டுமே நிறைவேற்றப்பட்டிருக்கின்றன என்பதையும் மந்திரித்துவிடப்பட்டிருப்பவர்கள் எல்லாம் கவனிக்க வேண்டும்.

திமுகவின் குறுநில மன்னர்களைப் பற்றி ஆயிரம் குறைகள் கூறி கூத்தடித்த ஊடகங்கள் மோடியின் மதவாத அராஜகங்களைப் பற்றி அலட்டிக்கொள்வதே இல்லை. அதே சமயம், குஜராத் வளர்ச்சியைப் பற்றிப் பீற்றிக் கொண்டிருப்பவர்கள், தமிழகத்தின் கடந்த இருபது ஆண்டுகால வளர்ச்சியையும் அதற்காகப் போராடிய இந்த குறுநில மன்னர்களையும், அவற்றுக்கெல்லாம் அனுமதியளித்த சக்கரவர்த்தி கலைஞரையும் பற்றி கண்டுகொள்வதே இல்லை!!

ஊடகங்களைப் பற்றிப் புலம்புவதால் இனி நமக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை. கலைஞர் கொண்டு வந்த நமக்கு நாமே திட்டம் போன்று நாமே நம் சாதனைகளை மக்களிடம் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்களின் மூலமாகவும், திண்ணைப் பிரச்சாரங்களின் வாயிலாகவும், இணையதளங்களின் வாயிலாகவும் பட்டியலிட்டு கொண்டு போய் சேர்க்க வேண்டும்.

இளம் தலைமுறையினருக்கு கடந்தகால மற்றும் நிகழ்கால தமிழகத்தை ஒப்பிட்டுக்காட்டி அந்த வளர்ச்சிக்குக் காரணமான திராவிட முன்னேற்றக் கழகத்தையும் அதன் குறுநில மன்னர்களையும், அதன் சக்கரவர்த்தியையும் பற்றி புரிய வைக்க வேண்டும். அதுவே நமது கடமை. இதைச் செவ்வனே செய்து வந்தாலே எதிர்காலம் நம் கைகளில்!!!

வாழ்க திராவிட முன்னேற்றக் கழகம்...!

வளர்க அதன் குறுநில மன்னர்களும், சக்கரவர்த்தியும்....!!