Thursday, December 19, 2013

மத்திய ஆளுங்கட்சியாக திமுக சாதித்தது என்ன?

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தோழர் ஒருவர், திமுகவை கிண்டல் செய்யும் விதமாக, கடந்த பதினைந்து ஆண்டுகளாக இந்தியாவின் மத்திய அரசில் ஆளுங்கட்சியாக திமுக இருந்திருக்கின்றது என்று நிலைத்தகவல் இட்டிருந்தார்....

உண்மை தான் சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரஸ் அல்லாத ஒரு பெரிய கட்சியின் தலைமையில் ஐந்து ஆண்டுகள் நிலையான ஆட்சி அமைக்கப்பட்டதற்கும், அதன்பிறகு காங்கிரஸ் தலைமையில் நேருவின் குடும்ப வாரிசு இல்லாத பிரதமரைக் கொண்டு பத்து ஆண்டுகள் நிலையான ஆட்சி அமைக்கப்பட்டதற்கும் காரணமாக இருந்து இந்த ஆட்சிகளில் ஆளுங்கட்சி அந்தஸ்த்தோடு திமுக பங்கேற்றிருந்ததில் மாற்றுக் கருத்து இல்லை... மேலும் இதில் கிண்டல் கேலிக்கும் அவசியம் இல்லை என்றே நினைக்கின்றேன்.

இந்தியா சுதந்திரம் அடைந்து அரை நூற்றாண்டு கடந்த நிலையிலும் தமிழகத்திற்கு மத்திய அரசின் சார்பாக அதுவரை கிடைத்திராத பல முன்னேற்றங்கள் இந்த பதினைந்து ஆண்டு காலத்திற்குள் தான் தமிழகத்திற்கு கிடைத்திருக்கின்றது என்பது... இன்றைக்கு முப்பந்தைந்து வயதிற்கு உள்ளாக இருப்பவர்களுக்கு வேண்டுமானால் தெரியாமலோ அல்லது புரிந்துகொள்ள முடியாமலோ இருக்கலாம்.....

ஆனால் நாற்பது வயதினைக் கடந்தவர்களுக்கு 98க்கு முந்தைய தமிழகத்தின் நிலையும் அதன் பிறகான இன்றைய தமிழகத்தின் வளர்ச்சி பெற்ற நிலையினையும் ஒப்பிட்டு கண்டிப்பாக இந்த பதினைந்து ஆண்டுகளில் அதற்கு முந்தி கிடைத்திருக்காத எண்ணற்ற மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்திற்கு வாய்க்கப்பெற்று பெறு வளர்ச்சியை இந்த குறுகிய காலகட்டத்தில் தமிழகம் அடைந்திருப்பதை நன்றாக உணர்ந்து கொள்ளவோ அல்லது புரிந்துகொள்ளவோ முடியும்!

உட்கட்டமைப்பு வசதிகளை எடுத்துக் கொண்டாலே அதற்கு முன் குண்டும் குழியுமான ஒற்றைப்பாதை மாநில நெடுஞ்சாலைகளாக இருந்த நிலை மாறி இன்றைக்கு கிராம இணைப்புச் சாலைகள் கூட அற்புதமான அகல சாலைகளாக காட்சியளிக்கின்றன. குக்கிராமங்கள் முதல் முட்டுச் சந்துகள் வரை காங்க்ரீட் சாலைகளும், லட்சக்கணக்கான சிறு, குறு, பெரும் பாலங்களும், அனைத்து பஞ்சாயத்துகளுக்கும் உயர்நிலை நீர் தேக்கத் தொட்டிகளும், இந்த பதினைந்து வருடங்களில் மட்டுமே தமிழகத்தின் 90 சதவிகித ரயில்வே பாதைகள் அகல ரயில் பாதைகளாக மாற்றப்பட்டதும், பதினைந்து வருடங்களுக்கு முன்பிருந்ததை விட 100 சதவிகிதம் அதிக ரயில்கள் தமிழகத்தில் ஓடுவதும், பாதாள சாக்கடைத் திட்டங்கள் முதற்கொண்டு அனைத்து உள்ளாட்சி மேம்பாட்டுத் திட்டங்களும் மத்திய அரசின் நிதியினை தாராளமாகப் பெற்று தமிழகத்தின் சாதாரண நகரங்கள், கிராமங்கள் கூட பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட அழகாக ஜொலித்துக் கொண்டிருக்கின்றதை யாரும் மறுக்க முடியாது. 

98 இல் பதினைந்து வயதிற்குள்ளாக இருந்த இளைஞர்களால் ஒரு வேளை இந்த மாற்றங்களை அப்படியே உள்வாங்கிக் கொண்டிருக்க இயலாமல் போயிருக்கலாம். அதேசமயம் பத்து வயதிற்கு குறைவாக இருந்திருந்தவர்களுக்கு இந்த மாற்றங்கள் நிகழ்ந்ததே தெரிந்திருக்க வாய்ப்பில்லை.....!

வேலை வாய்ப்புகளைப் பொறுத்தவரை, 98க்கு முன்பாக தமிழகத்தில் படித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்த அன்றைய இளைஞர்களுக்கு இன்றைக்கு தமிழகத்தில் வேலை வாய்ப்பு நிலை எந்த அளவிற்கு கற்பனைக்கு எட்டாத அளவில் முன்னேற்றம் கண்டிருக்கின்றது என்பது தெள்ளத்தெளிவாகப் புரியும். ஏனெனில் சுத்ந்திர இந்தியாவில் முதல் அரை நூற்றாண்டில் தமிழகத்தில் வந்திருந்த பெரிய தொழிற்சாலைகளை விட கடந்த பதினைந்து ஆண்டுகளில் பல நூறு சதவிகிதம், அதாவது பல மடங்கு அதிக தொழிற்சாலைகள் தமிழகத்திற்கு வந்திருப்பதை யாரும் மறுக்கவே முடியாது. 

96இல் வெறும் மூவாயிரம் சம்பளம் உள்ள வேலை ஒன்றுக்கு கிட்டத்தட்ட முன்னூறு பேர் விண்ணப்பித்து நேர்காணலுக்கு செல்லும் நிலை இருந்ததை இன்றைக்கு கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. அன்றைக்கு நம் தமிழக இளைஞர்கள் மும்பை போன்ற வட இந்திய மாநிலங்களுக்கு கூலி வேலை செய்யச் செல்லும் நிலை மாறி, இன்றைக்கு ஆந்திரா, ஒரிஸ்ஸா, ராஜஸ்தான், பீகார், நேப்பால் போன்ற மாநிலம் மற்றும் நாடுகளில் இருந்து தமிழகத்திற்கு லட்சக்கணக்கான கூலித்தொழிலாளர்கள் வேலைக்கு வரும் அளவிற்கு மத்திய அரசின் மூலமாக நிறைவேற்றப்படும் உட்கட்டமைப்பு வேலை வாய்ப்புகள் உருவாகியிக்கின்றன. தொழில் துறையும் அந்த அளவிற்கு வளர்ந்திருக்கின்றது.....

இது மட்டுமல்லாது, கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே 89 இல் இருந்து இரண்டாண்டுகளுக்கு மத்திய ஆளுங்கட்சியாக திமுக பங்கேற்றிருந்த காலகட்டத்தில் தான் மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடும் சாத்தியமாக்கப்பட்டதும், அதனால் இன்று வரை பயனடைந்த பல லட்சம் தமிழர்களும் மத்திய ஆளுங்கட்சியாக திமுக இருந்ததற்கான அடையாள கிரீடங்களாக ஜொலித்துக் கொண்டிருக்கின்றார்கள்....!!!!

திமுகவின் வளர்ச்சியின் மேல் காழ்ப்புணர்வு கொண்ட சிலர் செய்த அவதூறான பிரச்சாரம் தான், திமுக பசை உள்ள துறைகளாக மத்திய அரசில் வாதாடிப் பெற்றுக் கொள்கின்றது என்பது! 

தேசியக் கட்சிகளின் தமிழக பிரதிநிதிகளுக்கு மத்திய அமைச்சர் பதவிகள் எப்பவாவது விபத்து போல கிடைத்தாலும் அது அலங்காரப் பதவியாகவே இருந்து வந்த நிலையில், மத்திய ஆளுங்கட்சியாக பங்கேற்று தங்கள் பிராந்தியத்திற்கான உரிமையை அழுத்தமாகக் கேட்டுப் பெற்று தமிழகத்தை வளர்ந்த வட இந்திய மாநிலங்களுக்கு இணையாக ஓட வைத்திருப்பதில் திமுகவின் பங்கை இப்படிப்பட்ட கேவலமான விமர்சனங்கள் மூலம் நீற்றுப்போக வைத்து, மீண்டும் தமிழகத்தை வீழ்ச்சிப்பாதையில் பயணிக்க வைக்கத்தான் இந்த மாதிரியான விமர்சனங்கள் வழி வகுக்கும்.

வளமான துறை கேட்டு பிரதமரை காண டெல்லி சென்ற கலைஞர், சிறையில் இருந்த தன் மகளைக் காண டெல்லி சென்ற போது பிரதமரையோ, அதிகார மையத்தையோ காணச் செல்லவில்லை என்பதையாவது இந்த அவதூறுப் பேர்வழிகள் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழகத்தை வளர்ந்த வட இந்திய மாநிலங்களுக்கு இணையாக மாற்றியதில் திமுகவின் பங்கு தான் மிக முக்கியமானது, இதனால் பாதிக்கப்பட்ட வ்டமாநில லாபிகள் திமுகவுக்கு எதிராக இருப்பதில் வியப்பில்லை. ஆனால் அந்த அவதூறுகளை நம்பி நம் தமிழக இளைஞர்களே ஆட்டு மந்தைக் கூட்டம் போல் தலையாட்டுவது தான் வேதனையான விடயம். இளைஞர்களே இந்த மாற்றத்தின் வித்தியாசம் உங்களுக்கு அனுபவ ரீதியாக உணர வாய்ப்பில்லை என்றால் உண்மையான வரலாற்றை தெளிவாகப் படித்து அல்லது கேட்டு ஆராய்ந்து புரிந்து கொள்ளுங்கள்.... நியாயமாக இந்த தேடலில் நீங்கள் இறங்கினால் தமிழக வளர்ச்சியில் திமுகவின் அரும் பணி உங்களுக்குத் தெளிவாகப் புரியும்.

ஆகவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்தில் விழுகின்ற ஒவ்வொரு வாக்கும் தமிழகத்தை வளர்ச்சியின் அடுத்த நிலைக்கு இட்டுச்செல்லும் ஒரு வாக்காகவே அமையும் என்பதை இப்பொழுது இங்கே அழுத்தமாக பதிவிட விரும்புகிறேன் - கொக்கரக்கோ சௌம்யன்

Monday, December 9, 2013

திமுக - இனி என்ன செய்ய வேண்டும்?!

ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளி வந்திருக்கும் நிலையில், இனி மத்திய அளவிலோ அல்லது தமிழக அளவிலோ அரசியல் ரீதியாக என்னென்ன மாற்றங்கள் நிகழலாம் என்பது பற்றியெல்லாம் பல்வேறு கருத்துப் பரிமாற்றங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், தமிழகத்தைப் பொறுத்தவரை குறிப்பாக திமுகழகத்தைப் பொறுத்தவரை தற்பொழுதைய பலம் என்ன? இனி அது தன்னை தக்கவைத்துக் கொள்ள எடுக்க வேண்டிய முன்னெடுப்புகள் என்ன? என்பதைப் பற்றிய ஒரு சிறு அலசல் மட்டுமே இது......


கடந்த 2011 சட்டமன்ற பொது தேர்தலில் ஏற்காட்டில் திமுக வேட்பாளர் பெற்ற வாக்குகளை விட இந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி மாறன் பெற்ற வாக்குகள் வெறும் இரண்டாயிரத்திற்கும் குறைவானதே.....

இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது கடந்த தேர்தலில் திமுகவோடு கூட்டணியில் இருந்த, அந்த தொகுதியில் (35 சதவிகித வன்னிய வாக்காளர்கள்) கணிசமான வாக்கு வங்கியைக் கொண்டிருக்கும் பாமகவும், காங்கிரஸும் இப்பொழுது அந்தக் கூட்டணியில் இல்லை. அதோடு தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கூட திமுக தலைவர் கலைஞர் மற்ற எந்த கட்சியும் திமுகவுக்கு ஆதரவு அளிக்கவில்லை என்பதை மக்களுக்கு ஊர்ஜிதம் செய்து விட்டிருக்கின்றார்.

இப்படிப்பட்ட நிலையில் திமுக தனியாக மக்களை மட்டுமே நம்பி மக்களோடு மட்டுமே கூட்டணி என்ற நிலைப்பாட்டுடன் களம் இறங்கி ஆளுங்கட்சியின் மிகப் பெரிய அத்து மீறல்களுக்கு மத்தியிலும், பதிவான வாக்குகளில் 30 சதவிகிதத்தைப் பெற்றிருக்கின்றது என்றால் அது அரசியல் ரீதியாக திமுகவின் மிகப் பலமான வளர்ச்சியையும் வலுவான அடித்தளத்தையுமே காட்டுகிறது. 

தமிழகத்தின் மிக மோசமான பொருளாதார நிலையில் இருக்கின்ற அடித்தட்டு மக்களைக் கொண்ட ஓரு சில தொகுதிகளில் ஒன்றான ஏற்காட்டில் ஒரு ஓட்டுக்கு இரண்டாயிரம் என்பதெல்லாம் மட்டுமல்லாமல் மாதக் கணக்காக தினம் நூறு, இரநூறு, பிரியாணி என்பதெல்லாம் கூட மிகப் பெரிய விஷயம். இந்த காரணங்களுக்காகவும் மட்டுமல்லாமல், அவர்களுக்கு வாக்களிக்காவிட்டால் இந்தம்மா நம் தொகுதியை பழி வாங்கிவிடுவார் என்ற அச்சத்தினாலும் அதிமுகவுக்கு அதிகப்படியாக விழுந்திருக்கின்ற வாக்குகளையும் எண்ணி அகமகிழ்ந்து இது அப்படியே வரும் பாராளுமன்ற பொது தேர்தலிலும் பிரதிபலிக்கும் என்று யாராவது எண்ணினால் அது வெறும் பகல் கனவாகவே இருக்கும்.

பொதுத் தேர்தலில் எல்லாமே இயல்பு நிலைக்கு வந்துவிட்டிருக்கும், தேர்தல் கமிஷன் கூட பயந்தறிந்து தான் செயல்பட வேண்டியிருக்கும். இவ்வளவு பெரிய பணம் விளையாட முடியாது, இது எல்லாவற்றிற்கும் மேலாக மற்ற கட்சிகளான காங்கிரஸ், பாஜக், தேமுதிக, மதிமுக, பாமக மற்ற பிற ஜாதிக் கட்சிகள் என்று அனைத்துமே ஏதாவது ஒரு கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்கும் நிலையோ அல்லது தனி அணியாகவோ களம் காணும் நிலையோ தான் இருக்கும்.

ஆகையால் அதிமுக கோட்டையிலேயே மிகப் பலமாக 30 சதவித வாக்கு வங்கியை மிகக் கடுமையான ஆளுங்கட்சி அதிகார துஷ்பிரயோகத்திற்கு நடுவிலும் வைத்திருக்கும் திமுக அமைக்கும் கூட்டணியே வரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றிக் கூட்டணியாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை!!!

ஆனால் திமுக கூட்டணி அமைப்பதில் மிகத் தெளிவான ஒரு பார்வையுடன் செயல்பட வேண்டும். பொதுவாக நாடு முழுவ்தும் ஆட்சிக்கு எதிரான மனநிலை என்பது ஒரு அலையாக இருப்பதை உணர முடிகின்றது. காங்கிரஸின் தோல்விக்கு அது தான் காரணம். அதே சமயம், ஏற்கனவே ஆட்சி அதிகாரத்தை ருசித்த அல்லது ருசித்துக் கொண்டிருக்கின்ற கட்சிகளின் மேல் மக்களுக்கு நம்பிக்கை பெருமளவில் குறைந்திருக்கின்றது. ஆகையால் வாய்ப்புள்ள இடங்களில் நம்பிக்கை அளிக்கக் கூடிய புதிய மாற்றுக் கட்சிகளை தேர்ந்தெடுக்க மக்கள் தயங்குவதில்லை என்பதற்கு உதாரணம் தான் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி.

ஆகவே இந்த இரண்டு விடயங்களையும் மனதில் கொண்டு காங்கிரஸை எந்த ரூபத்திலும் கூட்டணியில் சேர்க்காமல் திமுக களம் காண வேண்டும். இரண்டாவது ஒரு வித புத்தம் புதிய பொலிவுடன் புத்துணர்ச்சி பெற்றதாக, மக்கள் விரும்புகின்ற மாற்றத்தை நிறைவேற்றத் தகுதியான கட்சி என்று மக்கள் நம்பும் வகையில் திமுக தன்னை முன்னிலைப் படுத்த வேண்டும்.

அப்படிச் செயல்படுவதற்கு திமுகவின் முன்னால் இருக்கும் ஒரே ஆயுதம் தளபதி ஸ்டாலின் மட்டுமே! அவரை மட்டும் முன்னிலைப் படுத்தி மற்ற வாரிசுகள் அனைவரையும் கட்சி, அரசியல், ஆட்சி, தேர்தல் போன்ற களங்களிலிருந்து முற்றிலுமாக புறம் தள்ளி விட்டு தளபதியின் க்ளீன் இமேஜ் எனப்படும் கறை படியாத கைகளுக்குச் சொந்தக்காரர், சிறந்த நிர்வாகி என்ற அந்த ஊக்க மருந்தை திமுக உட்கொள்ள வேண்டிய கட்டாயம் வந்திருப்பதை யாரும் அவ்வளவு எளிதில் புறக்கணித்துவிட முடியாது.


மிக அதிக எண்ணிக்கையில் பெருகி வரும் நடுத்தர மக்களின் மன நிலை என்ன என்பதை திமுக உணர்வதற்கு முற்பட வேண்டும். ஏனெனில் திமுகவின் பலமே நடுத்தர வர்க்கம் தான். அதிமுகவின் பலம் படிப்பறிவில்லாத அடித்தட்டு மக்கள். எம் ஜி ஆர் அவர்களுக்கு இலவசங்களைக் கொடுத்து கட்டுக்குள் வைத்திருந்தார். கலைஞர் அதை எதிர்த்ததன் மூலம் நடுத்தர வாக்கு வங்கி திமுகவிட்ம் பதின் மூன்று வருடங்கள் ஆனாலும் சேதாரம் இல்லாமல் இருந்து மீண்டும் திமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியது.

ஆனால் என்றைக்கு கலைஞர் எம் ஜி ஆர் வேடம் போட ஆரம்பித்தாரோ அன்றைக்கே நடுத்தர வாக்கு வங்கி திமுகவிடமிருந்து விலகி வேறொரு மாற்றை தேட ஆரம்பித்து விட்டது. ஆனால் அடித்தட்டு வர்க்கமும் திமுகவை மனதார ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை. அவர்களுக்கு எம் ஜி ஆர் இல்லை என்றால் விஜயகாந்த் தான் மாற்றாகத் தெரிகிறார்....

ஆகவே திமுக அதனுடைய களத்தில் தான் பலமாக கால் ஊன்ற வேண்டும். அந்த களத்திற்கு தளபதி ஸ்டாலின் அவர்களே சரியான தேர்வு. இதை திமுக உடனடியாக செய்யத் தவறினால் சீமான்களும், தமிழருவி மணியன்களும், உதயகுமாரன்களும் இங்கே ஆம் ஆத்மிக்களாக மாறும் வாய்ப்பை நாம் காண வேண்டியதிருக்கும். தமிழகத்தில் உருவாகும் ஆம் ஆத்மி திமுகவுக்கான மாற்று என்பதையாவது திமுக தலைமை உடனடியாக உணர வேண்டும்!

பொதுவாக நடுத்தர வர்க்கத்தினர் அதீத இலவசங்கள் தான் நாட்டை சீரழிக்கின்றன என்று பலமாக நம்புகின்றார்கள். ஊழலை அடியோடு வெறுக்கின்றார்கள். அடாவடி அரசியலை புறம் தள்ளுகின்றார்கள், வளவள பேச்சை விட செயல்வீரர்களையே விரும்புகின்றார்கள். ஓட்டரசியலை மனதில் வைத்து பேசுவதையும் செயல்படுவதையும் முன்பு ராஜதந்திரம் என்று சொன்னவர்கள் இப்பொழுது அதையே அரசியல் மொள்ளமாறித்தனம் என்று நம்புகின்றார்கள்......!!


உடனடியாக சிலர் பொங்கி எழுந்து ஸ்டாலின் மட்டும் வாரிசு அரசியலின் உதாரணம் இல்லையா? என்று கேட்கலாம். ஆனால் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக முழு நேர கட்சித் தொண்டராக இன்று வரையிலும் நாள்தோரும் கட்சிக்காக உழைத்து கொண்டிருக்கும் அவரை திமுகவினர் மட்டுமல்லாது, தமிழக பொது மக்களே கூட இவரை கலைஞரின் வாரிசு என்ற வகைப்படுத்துததில் வைக்கவில்லை என்பது தான் உண்மைதலைவர் கலைஞர் மாற்றங்களை எளிதாக கணிக்கக் கூடியவர்.....

நல்ல முடிவெடுப்பார்....! திமுக வெகுண்டு எழும்...!