Friday, March 28, 2014

மலை காக்கும் பூதமும்... தடை தாண்டும் பெரியவரும்..!!


ஒரு உயரமான மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கின்றது திரையூர் என்ற அந்தக் கிராமம். அந்த மலை முழுவதும் அடர்ந்த காடும், மிருகங்களும் நிறைந்து அதை ஒரு பூதமும் காவல் காத்து நின்றது. 

மலைக்கு இன்னொரு பக்கத்தில் சொர்க்கலோகம் மாதிரியான அனைத்து வசதிகளையும் கொண்ட ஆரையூர் நகரமும் அதில் நாகரீகமான மனிதர்களும் வாழ்ந்து வந்தனர். 

திரையூர் கிராமம் நன்கு வளம் கொழிக்கின்ற பூமியாக இருந்தாலும், இங்குள்ள மக்கள் அங்கே இயற்கையாகவே கிடைக்கின்ற பழம், காய்கறிகள், சில சிறிய விலங்குகளின் மாமிசங்கள் ஆகியவற்றை உண்டே வாழ்க்கையை நடத்தி வந்தனர். அங்கே பெருமளவிலான மக்கள் வசித்துக்கொண்டிருக்கின்ற காரணத்தால், தானாகவே விளைந்து கிடைக்கின்ற உணவுப் பொருட்கள் அம்மக்களுக்கு போதுமானதாக இல்லாமல் அனைவருமே பசிக் கொடுமையில் தவித்து வந்தனர். 

ஆனால் ஆரையூரில் இருந்து தினம் ஒரு பறக்கும் களத்தில் இங்கு வந்து இறங்கும் சிலர், இம்மக்களின் உழைப்பைப் பயன்படுத்தி திரையூரில் இருக்கும் பல வளமான வஸ்துக்களை எடுத்துச் செல்வதும் அதற்கு ஈடாக அவர்களுக்கு கொஞ்சம் ரொட்டித் துண்டும், உடுத்திக் கொள்ள சில பயன்படுத்தப்பட்ட கிழிந்த ஆடைகளையும் தந்துவிட்டுச் செல்வதும் வழக்கம். 

அந்த ரொட்டித்துண்டுகளும், கிழிந்த ஆடையுமே திரையூர்வாசிகளுக்கு பெரும் பரிசாக தெரிந்த காரணத்தால் அவர்களுக்காகவே தங்கள் உழைப்பை கொட்டிக் கொடுத்து அவர்கள் கேட்கின்ற அனைத்தையுமே இங்கிருந்து அவர்களுக்கு தாரை வார்த்துக்கொண்டிருந்தனர். 

இந்த நிலையில் திரையூரில் வசித்த பெரியவர் ஒருவர் இதில் இருக்கின்ற சூட்சுமத்தையும் சுரண்டலையும் புரிந்து கொண்டவராய், தனக்கென்று ஒரு ஆதரவாளர் படையை இது பற்றிப் பேசி புரிய வைத்து திரட்டினார். அவர்கள் இம்மக்களுக்கு அவர்களே புதிய புதிய உணவுப் பொருட்களை விளைவிக்கும் வழி முறைகளையும், ஆடைகள் நெய்துகொள்ளும் நுணுக்கங்களையும் கற்றுக்கொடுத்து, அம்மக்கள் தாங்களாகவே தங்களுக்குத் தேவையான உணவையும், உடையையும் உற்பத்தி செய்துகொள்ளும் நிலைமைக்கு கொண்டு வந்தார். 

இதனால் ஆரையூர் சுரண்டல் பேர்வழிகளுக்கான இம்மக்களின் உழைப்பு சுத்தமாக நின்று போய், இவர்கள் அனைவருமே தங்களுக்குத் தேவையானவற்றுக்கு ஓரளவிற்கு தன்னிறைவு பெறும் நிலைக்கு வந்து விட்டிருந்தனர்.

அடுத்ததாக திரையூர் மக்களுக்குத் தேவையான சில அடிப்படைக் கல்வியையும் கற்பித்த அந்தப் பெரியவர்...., 

மலைக்கு அந்தப்பக்கம் சென்றால் ஒரு பெரிய சொர்க்க பூமி இருக்கின்றது. அங்கே இருப்பவர்கள் இங்கிருந்து கொண்டு செல்லப்பட்ட பற்பல வஸ்துக்களை வைத்து எண்ணற்ற இயந்திரங்கள் செய்து, அவற்றின் மூலம்  தங்கள் பகுதியையும், வாழ்க்கையையும் சொர்க்கமாக மாற்றி அமைத்துக் கொண்டிருக்கின்றனர்.... 

அது யார் வேண்டுமானாலும் சென்று தங்கி பயிற்சி பெறவும், வாழ்வதற்குமான பொது இடம். ஆனால் அங்கு சென்று முதலில் தங்கிய அவர்கள் வேறு யாரும் அங்கே நுழைந்து விடாதபடிக்கு வழிகளை அடைத்து வைத்திருக்கின்றனர். நாம் அங்கு செல்வதற்கான வழியை மட்டும் ஏற்படுத்திக் கொண்டோமானால் அங்கு சென்று அனைத்தையும் பயின்று, நம்முடைய திரையூரையும் ஆரையூர் மக்களைப் போன்று சொர்க்க பூமியாக மாற்றி சுகமாக வாழலாம் என்று அந்தப் பெரியவர் கூற அனைவரும் அதற்கு சம்மதிக்கின்றனர். 

பெரியவரும் தம்முடைய தோழர்களை அழைத்துச் சென்று அந்த மலையைக் குடைந்து ஆரையூர் இருக்கின்ற பகுதிக்குச் செல்வதற்கான வழியை ஏற்படுத்தி, இங்கிருந்து அங்கு செல்வதற்கு ரயில் பாதை அமைத்து, குட்டி ரயிலையும் அதில் இயங்க வைக்க ஏற்பாடு செய்கின்றார். 

ஒரு நாள் தம் மக்களை எல்லாம் ரயிலில் ஏற்றிக் கொண்டு அந்த சொர்க்க பூமிக்கும் கிளம்புகின்றார். ரயில் ஓட ஆரம்பித்தவுடன், அந்த வேகத்தில் கொஞ்சம் பயம் தொற்றிக்கொள்ளும் மக்கள் பிறகு சுதாரித்துக்கொண்டு அந்த வேகத்தை அனுபவித்தவாறு சந்தோஷமாக பயணத்தைத் தொடர்கின்றனர். 

ஆனால் இம்மக்கள் அங்கு வருவதை தெரிந்து கொண்ட  ஆரையூர்க்காரர்கள், இவர்கள் வந்தால் தமக்கான மதிப்பும் மரியாதையும் குறைந்து போய்விடுவது மட்டுமல்லாமல், தங்களுக்காக இலவசமாகவும், வெறும் சாப்பாட்டிற்கே உழைப்பதற்குமான ஆட்கள் இல்லாமல் போய்விடுவார்களே என்று எண்ணி, மலையைக் காக்கின்ற தங்கள் ஆதரவு பூதத்தை ஏவி விடுகின்றார்கள். 

நம் கதாநாயகர்கள் செல்லுகின்ற ரயிலானது மலையின் குகைப் பாதையில் நுழைந்தவுடன், இயல்பாக சூரியனின் கதிர்கள் மறைந்த காரணத்தால் திடீரென்று ரயில் முழுவதும் கும்மிருட்டு சூழ்ந்துகொள்கின்றது. உடனே மக்கள் பதறியடித்து பயத்தில் அலறுகின்றனர். அவர்கள் அறியாமையால் கும்மிருட்டு சூழ்ந்த நிகழ்வை யூகிக்க முடியாமல் தங்கள் கண்களே குருடாகிப்போனதாக சிலர் நம்ப ஆரம்பித்துவிட்டனர்!

சரியாக அப்பொழுது மலையில் இருந்து இறங்கிய அந்தப் பூதமானது ரயிலுக்குள் நுழைந்து, மக்களே இந்தப் பெரியவர் உங்களை எல்லாம் ஏமாற்றி பாதாளச் சிறையில் அடைத்து அடிமைகளாக்கப் பார்க்கின்றார். இப்பொழுது உங்கள் கண்கள் குருடாகிவிட்டது புரிகிறதா? யார் யாரெல்லாம் மீண்டும் வெளிச்சம் நிறைந்த உங்கள் பூமிக்கு திரும்ப வேண்டுமோ அவர்கள் என் கைகளைப் பற்றிக்கொள்ளுங்கள், உங்கள் கண் பார்வையும் திரும்பிவிடும், உங்கள் ஊருக்கும் கொண்டு போய்ச் சேர்த்துவிடுகின்றேன் என்று கூறுகின்றது.

அதை நம்பிய பயந்து போன மக்களும் பெரியவரை திட்டித் தீர்த்துவிட்டு பூதத்தின் கைகளைப் பற்றிக்கொள்கின்றனர். பூதமும் ரயிலை நிறுத்தி அவர்களை நடத்தியே மீண்டும் அவர்கள் பூமிக்கு கொண்டு வந்து சேர்த்து விடுகின்றது. 

குகையிலிருந்து வெளியேறிய மக்கள்....   தங்கள் குருடு நீங்கப் பெற்றவர்களாக நினைத்து பாதுகாப்பான இடத்திற்கு வந்தது போல் உற்சாகக் கூச்சல் எழுப்புகின்றனர்!!

ஆரம்பத்தில் பெரியவர் சொன்னதையெல்லாம் கேட்ட மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வந்தார்கள்

நிரந்தரமான சுகத்தையும் வாழ்வின் வெளிச்சத்தையும் அனுபவிக்க வேண்டிய நேரத்தில், 

இன்னும் சற்று நேரம் பொறுமை காத்திருந்தால்... 

பெரியவர் பேச்சைக் கேட்டு அவரை நம்பி உறுதியாக நின்றிருந்தால்...  

அந்த பூதத்தின் பேச்சைக் கேட்காமல் இருந்திருந்தால்....

இன்றைக்கு மீண்டும் தொடங்கிய இடத்திற்கே, வந்து நின்று, மீண்டும் பழைய மோசமான வாழ்க்கைக்கு வந்திருக்க வேண்டிய தேவை இருந்திருக்காது.....

ஆகவே மக்களே....

இப்பொழுது மீண்டும் அந்தப் பெரியவர் ரயிலை சரி செய்து வைத்துக்கொண்டு காத்திருக்கின்றார். அதில் ஏறி மலைக்கு அந்தப் பக்கம் சென்று திரையூருக்கு மலையால் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்ற சூரியனின் கதிர்களை காணப் போகின்றார்களா? 

இல்லை இந்த முறையும் பூதத்திற்கு படையல் போட்டு விட்டு வெறும் கையுடன் திரும்பப் போகின்றார்களா?????? 



Thursday, March 27, 2014

நாலாயிரம் ஏக்கர்ன்னா எவ்ளோ தெரியுமா??? 176000000..... சதுர அடி நிலம்!!!!!!


                              ஒரு ஏக்கர்ன்னா எவ்ளோ தெரியுமா?

44000 அதாவது நாற்பத்தி நாலாஆஆஆயிரம் சதுர அடி நிலம்!!!!

ஆக... நாலாயிரம் ஏக்கர் நிலம் என்றால்.....

176000000....... அதாவது பதினேழு கோடியே அறுபது லட்சம் சதுர அடி நிலம்...... அதாவது 73,333 கிரவுண்டு நிலம்!!!

இந்த பதினேழுகோடியே அறுபது லட்சம் சதுர அடி நிலத்தைத்தான் அஞ்சு வருஷத்துல மாசம் ஒன்னுக்கு ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிக்கிட்டு ஆட்டை போடப்பட்டிருக்கு....!!

அதை விடுங்க... இவ்ளோ நிலத்தை வச்சிக்கிட்டு தமிழ்நாட்டுல இருக்குற சொந்த வீடு இல்லாத எத்தனை பேர் தனித்தனி வீடு கட்டிக்கலாம் தெரியுமா???

சொந்த வீடோ நிலமோ இல்லாத தமிழக ஏழைக் குடும்பம் ஒன்றுக்கு 600 சதுர அடி நிலத்தை பங்கிட்டுக் கொடுத்தால்...

கிட்டத்தட்ட தமிழகம் முழுவதும் உள்ள மூன்று லட்சம் ஏழைக் குடும்பத்தினர் இலவசமாக சொந்த மண்ணில் தனி வீடு கட்டிக்கொள்ளலாம். 

இது மாதிரி செய்யாமல் ஃப்ளாட் சிஸ்டத்தில் 1 + 3 தளங்கள் கொண்ட கட்டிடமாகக் கட்டினால் ஒரு கிரவுண்டில் 12 வீடுகள் கட்டித்தரலாம். 

அப்படிப்பார்த்தால்.... 73,333 * 12 = 8,79,999 வீடுகள் அதாவது எட்டு லட்சத்தி எழுபத்தி ஒன்பதாயிரத்து தொள்ளாயிரத்தி தொண்ணூற்றி ஒன்பது குடும்பங்களுக்கு சொந்த வீடு கட்டித்தரலாம். 

அம்மா தாயே.... இந்த ஒரு ஓவா சம்பள கதையெல்லாம் இங்க வேண்டாம். அந்த அஞ்சு வருஷத்துக்கும் நியாயமா என்ன சம்பளம் உண்டோ அதை கணக்குப்பண்ணி வாங்கிக்குங்க. ஆனா அந்த சம்பளத்தை வச்சி வாங்குன இந்த சொத்தை எல்லாம் மக்களிடம் கொடுத்துடுங்க. சரியா????!!!!

ஐயா சாமீங்களா... தமிழகத்தின் உண்மையான நடுநிலை வாக்காள மக்களே கொஞ்சமாச்சும் சிந்திங்கய்யா!!!

கலைஞர் ஆட்சியே நல்லாட்சி....!!!
தளபதி ஆட்சியே தன்னிகரில்லா ஆட்சி...!!!



Friday, March 21, 2014

பாஜக கூட்டணி திமுக - அதிமுகவுக்கான மாற்றா???!!!

தமிழகத்துல அரசியல் அநாதைகளாக இருந்த கட்சியெல்லாம் ஒன்னு சேர்ந்து ரெண்டு மாசமா முட்டி மோதி ஒரு முடிவுக்கு வந்து ஒன்னு சேர்ந்திருக்காங்க.... இதுக்குப் போயி ஒட்டுமொத்த மீடியாவும் தையத்தக்கான்னு குதிக்கிறாங்க....

ஒருத்தர் அதிமுகவுக்கும் இந்தக் கூட்டணிக்கும் தான் போட்டிங்கறார், இன்னொருத்தர் திமுக டெபாஸிட் வாங்காதுங்கறார். ஒருத்தர் இந்தக் கூட்டணி 40 தொதியிலும் வெல்லும்ங்கறார், ஒருத்தர் இந்தக் கூட்டணியின் சார்ப்பா நிக்கறவங்கள்ல யார் யார் மந்திரியாகப் போறாங்கன்னு லிஸ்ட்டு போடுறார், தட்ஸ் தமிழ்ல ஒரு அம்பி ஒரு படி மேலே போய் திமுகவும், அதிமுகவும் தமிழ்நாட்டுல தனிமைப்படுத்தப்பட்டுடுச்சிங்குது!!!

என்னத்த சொல்றது?

சினிமாவில் நடக்குற மாதிரி எல்லாமே ஓரிரவில் நடந்திடும்ன்ங்கற மாதிரி மக்களை இந்த ஊடகங்கள் எல்லாம் இப்போ நம்ப வைக்க முயற்சிக்குது!! ஆனால் நிதர்சனம் என்பது எப்பவுமே நிலையானதாகவும், இந்த மாதிரியான யூகங்களை புறம் தள்ளுவதாகவுமே தான் இருக்கின்றது.


ஒரு பாராளுமன்ற தொகுதிக்கு சராசரியா 1500 வாக்குச்சாவடிகள் வரைக்கும் இருக்குது. இந்த வாக்குச்சாவடில எல்லாம் இருக்கின்ற ஆண், பெண் பூத்துக்கள் உட்பட அனைத்து இயந்திரங்களுக்குமாக சேர்த்து தலா ஐந்து பூத்து ஏஜண்டுகள் போட வேண்டும். அதுவே ஒரு தொகுதிக்கு 7500 பேர். இவர்கள் மிக மிக மிக நம்பகமான அந்தந்த்தப் பகுதியின் அனைத்து வாக்காளர்களையும் நன்கு அறிந்த உணர்வுள்ள கட்சிக்காரராக இருந்தால் தான் இந்த வெலையைத தெளிவாகச் செய்ய முடியும். 

இதைத் தவிர ஒரு வாக்குச்சாவடிக்கு சராசரியாக 3000 த்திலிருந்து 4000 வாக்காளர்கள் வரை இருப்பார்கள். 300 வாக்காளர்களுக்கு ஒரு பிரதிநிதி என்று வைத்துக்கொண்டால் கூட ஒரு வாக்குச்சாவடிக்கு நேர்மையான கட்சிக்காரர்கள் குறைந்தபட்சமாக 10 பேர் தேவை. அவர்கள் தான் தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் 300 வாக்காளர்களுக்கும் கடைசி 10 நாட்களில் பூத் சிலிப் கொடுப்பதிலிருந்து, அவர்களிடம் கட்சியின் சார்பாக நேரிடையாக வீட்களுக்குச் சென்று கட்சியின் பிரசுரங்களையும், பிரச்சாரங்களையும், வாக்குறுதிகளையும் சொல்லி தங்கள் கட்சிக்கு ஆதரவாக வாக்காளர்களைத் திரட்ட வேண்டும். இந்த எண்ணிக்கையே 15000 வரும். 

ஆக மொத்தம் பிரச்சாரம், மற்ற மற்ற பணிகளையெல்லாம் தவிர்த்து இந்த மாதிரியான நிர்வாகம் சம்பந்தப்பட்ட வேலைகளுக்கே 22500 கட்சியின் உணர்வுள்ள தொண்டர்கள் ஒவ்வொரு தொகுதிக்கும் தேவை. ஒரு கட்சி வெற்றிபெறுவதற்குத் தேவையான மிக மிக அடிப்படை தகுதி இது. 

இவை தவிர்த்து ஒவ்வொரு தொகுதிக்கும் (பாராளுமன்ற தொகுதி) வருகின்ற தலைவர்கள், பேச்சாளர்கள், வேட்பாளர் போன்ற அனைவருக்கும் பிரச்சாரத்திற்கான அனைத்து ஏற்பாடுகள் செய்வது, அழைத்துச் சென்று மக்களிடம் அறிமுகப்படுத்துவது, மற்ற மற்ற பிரச்சாரப் பணிகளையும், 22500 முக்கிய சேவையாளர்களுக்கும் தலைமைக் கழகத்துக்குமான பாலமாக இருந்து செயல்படுவது உட்பட அனைத்தையும் செய்வதற்கு.....

....ஒரு பாராளுமன்ற தொகுதிக்கு சராசரியாக 12லிருந்து 15 ஒன்றிய, நகர, பேரூர் கழக அமைப்புக்களும், சராசரியாக இவற்றுக்குக் கீழே 500லிருந்து 600 வரையிலான கிளைக்கழக (வார்டுகள், பஞ்சாயத்துக்கள்) அமைப்புக்களும்... அவ்வமைப்புக்களின் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்களாக மட்டுமெ 8000 லிருந்து 10000 பேர் வரையிலும் தேர்தல் காலங்களில் முழுநேர களப்பணியாளர்களாக இருந்து செயலாற்றிட வேண்டும். இதைத்தவிர்த்த மாவட்ட கழக நிர்வாகிகள் செயல்வீரார்களை இந்தக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. 

ஆக மொத்தம் வெற்றிபெறத் தகுதியான ஒரு கட்சிக்கு ஒரு பாரளுமன்ற தொகுதிக்கு மட்டும் தேர்தல் காலங்களில் கிட்டத்தட்ட ஒன்னரை மாதத்திற்கு முழு நேரமாக களம் இறங்கி உணர்வுடன் பணியாற்றக் கூடிய தொண்டர்களின் மிகக் குறைந்த பட்சத் தேவை 22500+9500 = 32000 பேர் ஆகும். 

இந்த 32000 தன்னார்வத் தொண்டர்கள் என்பது ஏதோ ஓரிரு தொகுதிகளிலோ அல்லது பத்துப்பதினைந்து தொகுதிகளிலோ இருந்தால் மட்டும் போதாது. ஆட்சியமைக்கத் தகுதியான கட்சி ஒன்றுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் இருக்கின்ற 40 தொகுதிகளிலுமே இந்த எண்ணிக்கை முழுமையாக இருந்திடல் வேண்டும். 

இந்தத் தகுதியில்லாத ஒரு கட்சி.... தான் ஆட்சியமைக்கப்போகிறோம் என்று அரைகூவல் விடுவதை விட அபத்தமான பேச்சு வேறு எதுவுமே இருக்க முடியாது. இந்த விவரங்கள் எல்லாம் புரியாத ஏசி ரூம் எழுத்தாளர்கள் எழுதுகின்ற கட்டுரைகளும், கட்டமைக்கின்ற விவாதங்களும் வெறும் ஏட்டுச் சுரைக்காயாகத்தான் முடியும். 

ஆகவே தமிழகத்தைப் பொறுத்தமட்டில் இந்தத் தகுதியை முழுமையாகப் பெற்றிருக்கின்ற கட்சிகள் என்று பார்த்தால், திமுகவும், அதிமுகவும் மட்டுமே. 

இவற்றிற்கு அடுத்தபடியாக இதில் கால்வாசி தகுதியை எட்டிப்பிடித்திருக்கின்ற ஒரே கட்சி என்றால் அது தேமுதிக மட்டுமே. ஆனால் அப்படி கால்வாசி தகுதியைப் பெற்றுவிட்ட ஒரு கட்சி தொடர்ந்து கூட்டணி அமைத்து களம் காணுமேயானால் அது கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து காணாமல் போகின்ற வரலாறு என்பது காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், மதிமுக போன்ற கட்சிகளை தொடர்ந்து கவனித்துக்கொண்டிருப்பவர்களுக்குப் புரியும்.


உடனே சிலர் ஓடிவந்து எம் ஜி ஆரையும், என் டி ஆரையும் துணைக்கழைப்பார்கள். ஆனால் அவர்கள் இருவருமே அரசியலில் அடியெடுத்து வைப்பதற்கு 30 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே தங்கள் ரசிகர்மன்றங்களை இது மாதிரியாக மிகப் பலமாக உருவாக்கி வைத்திருந்ததையும், அது அப்படியே அரசியல் கட்சியாக உருப்பெற்றதையும் இலகுவாக மறந்து போகின்றனர்.  ஆனால் அவர்களுக்கு முதல் வாய்ப்பிலேயே கிட்டிய ஆட்சியதிகாரம் என்ற அதிர்ஷ்டம் விஜயகாந்துக்கு கிடைக்காமல் போனது அவரது துரதிருஷ்டம் என்று சொல்வதை விட....  வியஜயாகாந்து முத்துவதற்கு முன்பாக கடைத்தெருவுக்கு வந்ததும், தான் என்ற ஆணவம் நிறைந்த பேச்சும், பொதுவெளியில் அவரது செயல்பாட்டில் தனிமனித ஒழுக்கம் பற்றிய மக்களின் விமர்சனமும், வெறும் குடும்பத்தை மட்டுமே தன் அருகில் வைத்துக்கொண்டு அறிவுஜீவிகள் யாரையும் அண்டவிடாமல் இருப்பதும்....  இப்படியாக ஏகப்பட்ட தவறுகள் அவரை முன்னேறவிடாமல் தடுத்துவிட்டது. 

இந்த 32000 பேர் என்ற எண்ணிக்கையானது சராசரியாக ஒரு தொகுதியில் வாக்களிக்கப்போகும் 800000 வாக்காளர்களில் 4 சதவிகிதம் ஆகும். 

ஆகவே பாஜக கூட்டணியில் ஒட்டுமொத்த வாக்கு வங்கியே 4 சதவிகிதத்தைத் தொடாத சிறு சிறு கட்சிகள் (தேமுதிக மட்டும் 7 சதவிகிதம் எடுத்துக்கொள்ளலாம்) நான்கைச் சேர்த்து களமிறங்கி அது வெற்றி பெரும் என்று எழுதுவதையும் பேசுவதையும் விட முட்டாள்தனமும், பத்தாம்பசலித்தனமும் வேறு எதுவுமே இருக்க முடியாது. 

ஆகவே வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டி என்பது திமுகவுக்கும் அதிமுகவுக்கும் மட்டுமே. மேலும் இவ்விரு கட்சிகளும் பெரிய கூட்டணி எதுவும் இல்லாமல் கிட்டத்தட்ட தனியாக நிற்பதே தங்களது மாநிலம் முழுமைக்குமான உட்கட்டமைப்பை இன்னும் பலமாக கூர் தீட்டிக்கொள்வதற்காக மட்டுமே என்பதையும் அரசியல் ஆர்வலர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


Friday, March 14, 2014

ஜெவிடம் பல்லிளிக்கும் ஆம் ஆத்மியின் ஊழல் எதிர்ப்பு நிலைப்பாடு!!


இந்த ஆம் ஆத்மி கட்சி ஆ.ராசவை எதிர்த்து நிக்கிறேன், மோடிய எதிர்த்து நிக்கிறேன், ராகுல எதிர்த்து நிக்குறேன், தயாநிதி மாறனை எதிர்த்து நிக்குறேன்னு எல்லாம் பீலாவுட்டுக்கிட்டு ஊழலுக்கு எதிராக ஆயுதம் எடுத்திருக்கும் பரமாத்மாவாக திரியிறானுங்களே.....

வக்காளி, தைரியமும் நெஞ்சுல மஞ்சாசோறும் இருந்திச்சின்னா, மாவட்ட நீதிமன்றத்தில் தண்டனைபெற்ற ஒரு குற்றவாளி, மேல் முறையீட்டில் ஜாமீனில் இருக்கின்ற ஒரு ஊழல்பேர்வழி, தான் நியாயவாதியா இருந்திருந்தா அந்த கேஸை இழுத்தடிக்க 200 தடவை வாய்தா வாங்கியிருக்க மாட்டார், இதுக்கு மேல தன்னால வாய்தா வாங்க முடியாதுன்னுவுடனே, ஒரு குறிப்பிட்ட நபரை சுட்டிக்காட்டி அவர் தான் தனக்கு அரசு வழக்கறிஞரா....

...புரியுதா மக்களே, அதாவது தனக்கு எதிரா வாதாடி, தன்னை சிறையில் தள்ள வேண்டிய ஒரு வழக்கறிஞரை இன்னார் தான் வேண்டும் என்று அடம்பிடித்து வழக்குத்தொடுத்து பிடித்து வைத்துக் கொண்டிருப்பவர்....

தன்னால இதுக்கு மேல வாய்தா வாங்க முடியாத நிலையில்... அந்த அரசு வழக்கறிஞரையே வாய்தா மேல் வாயாதா... மன்னிக்கவும் வழக்கறிஞர் வாய்தா வாங்க சட்டத்தில் இடமில்லாத காரணத்தால், பத்தாங்கிளாஸ் இங்லீஷ் செகண்ட் பேப்பர்ல மனப்பாடம் பண்ணி எழுதி 15 மார்க் வாங்கின அந்த லீவ் லெட்டரை, கொஞ்சம் மானே, தேனே, பொன்மானே எல்லாம் போட்டு நீதிபதிக்கு எழுதி வாய்தாவை நீட்டித்துக்கொண்டிருக்க....

ஒரு கட்டத்துல கடுப்பான நீதிபதி, 15 மார்க்கு போடுறதுக்கு பதிலா 65 ஆயிரம் அபராதம் போட்டுட்டாரு!!

இப்படியெல்லாம் ஒரு ஊழல் வழக்கில் தன்னை விடுவிக்க இயலாத நிலையில் அதன் தீர்ப்பிலிருந்து தப்பித்து ஓடிக் கொண்டிருக்கும் ஜெயலலிதாவுக்கு எதிராக......

இந்த ஆம் ஆத்மி கட்சியினர் ஒரு சிறு துறும்பைக்கூட கிள்ளிப்போடவில்லையே ஏன்???????!!!!!

இது தான் என் கேள்வி....

ஆம் ஆத்மியின் மாநிலத்தலைவர்ன்னு சொல்லிக்கிற உதயகுமாரனும், சாயந்திரம் ஆனா பார்க்குல போயி உக்காந்து சம வயசு ரிடையர்ட் பார்ட்டிங்க கிட்ட கடலை போடுறதுக்கு பதிலா, திமுகவுக்கு எதிரான பரப்புரைகள் செய்யும் டீவில எல்லாம் போயி குந்திக்கிட்டு கலைஞரையும், திமுகவையும் திட்டித்தீர்த்துவிட்டு இப்போ ஆம் ஆத்மியில் ஐக்கியமாகியிருக்கும் ஞானி போன்ற மேதையாக நினைத்துக் கொண்டிருக்கும் சாணிகளோ.....

பெங்களூரு கோர்ட்ல நடக்கும் ஊழல் சம்பந்தமா ஜெயலலிதாவை எதிர்த்து இங்கே ஒரு போராட்டம் நடத்திட இயலுமா?????

ஒர் அரசு வழக்குறைஞர் மேலயே அபராதம் விதிக்கின்ற அளவிற்கு சட்டத்தை மிகக் கேவலமாக எண்ணி செயல்பட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு எதிராக ஒரு புல்லைப்புடுங்கியாவது இங்கே தமிழ்நாட்டில் இவர்களால் போட முடியுமா?????


அப்புடி ஒருவேளை இங்க வந்து போராட்டம் நடத்தினீங்கன்னா... உங்க சின்னைத்தை அந்தம்மா கையிலெடுத்து உங்களை எல்லாம் வாரிச் சுருட்டிவிடும்....  ஆமா!!!

அங்க ஒன்னும் புடுங்க முடியாம எவனாவது ஊழல் கீழல்ன்னு சொல்லிக்கிட்டு திமுக பக்கம் வந்தீங்க... நீங்கள்லாம் சாட்சத் பொட்டைங்க தான்!!!



தளபதி ஸ்டாலின் தந்தி டீவி பேட்டியும்.... மோடி பற்றிய லேடிக்கான விளக்கமும்..!!

தளபதி ஸ்டாலின் தந்தி டீவிக்கு அளித்த பேட்டியிலிருந்து ஒரு கேள்வி...

மோடி பற்றிய நிலைப்பாடு பற்றிய அந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் தளபதி ஸ்டாலின் அவர்கள்.... மோடி சொல்வதாக கூறப்படும் வளர்ச்சி எந்த அளவிற்கு உண்மை என்பதில் இப்பொழுது வெளிவந்து கொண்டிருக்கும் இரு வேறு கருத்துக்களை எடுத்துரைத்து, திமுக ஆட்சியில் அதை விட அதிக அளவிலான வளர்ச்சியை தமிழகம் சாதித்திருப்பதை கூறியிருந்தார்.....

அந்த ஒரு பதிலை மட்டும் விளம்பரத்திற்கு எடுத்துப்போட்டு விட்டு, அதற்கான பதிலை பாஜகவின் வானதி ஸ்ரீனிவாசனிடம் அதற்கான விளக்கமாகக் கேட்டுப் பெற்று அதையும் இப்பொழுது பதிவு செய்து தந்தி டீவியில் விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்....

அந்தம்மா பேசும் போது, திமுக ஆட்சியில் எந்த மின் உற்பத்தி திட்டங்களுமே இல்லாமல் கடும் மின்வெட்டு ஏற்பட்டதாகவும், ஆனால் மோடி குஜராத்திலிருந்து உபரி மின்சாரத்தை வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்வதையும் பெருமையாக சொல்லிக்கொள்கிறார்.

அதற்கான நமது விளக்கம்.....

** 1967க்குப் பிறகு அதாவது திமுக முதன் முறையாக ஆட்சியைப் பிடித்த பிறகு இன்றைய தேதி வரை தமிழகத்தில் போடப்பட்டிருக்கின்ற அனைத்து மின் உற்பத்தி திட்டங்களுமே திமுக ஆட்சிக்காலங்களில் மட்டுமே போடப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.

** 96 லிருந்து 2001 வரை திமுக செயல்படுத்திய திட்டங்களில் இருந்து கிடைத்த மின்சாரத்தை அடுத்து 2001 லிருந்து 2006 வரை ஆட்சி செய்த ஜெயலலிதா அரசு அனுபவித்து வந்ததே தவிர, அதிகரித்துக் கொண்டிருக்கும் தேவைகளுக்கு ஈடு கொடுக்கத் தேவையான புதிய மின் உற்பத்தித் திட்டங்களை அது செயல்படுத்தவே இல்லை....

** இதன் காரணமாக அடுத்து 2006இல் ஆட்சிக்கு வந்த திமுக எட்டு மின் உற்பத்தி திட்டங்களைப் போட்டு அதன் மூலம் 7300 மெகாவாட் மின்சாரம் உற்பத்திக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு அதற்கான நிதி ஆதரங்களைத் திரட்டி, வேலைகள் நடந்து கொண்டிருந்த நிலையில் 2011இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்துவிடுகின்றார்.....

** ஆனால் 2011 இல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா மூன்று ஆண்டுகள் ஆகியும் இன்று வரை புதியதாக ஒரு மின் உற்பத்தி திட்டத்தைக் கூட போடவில்லை. மேலும் கால், பாதி, முக்கால் வாசி கடந்த நிலையில் இருக்கின்ற திமுக ஆட்சிக்காலத்தின் அந்த 8 திட்டங்களையும் கூட இன்று வரையிலும் தேவையான நிதியை ஒதுக்கி முடிக்கவும் இல்லாமல், அதிக விலை கொடுத்து வெளியில் இருந்து மின்சாரம் வாங்கித்தான் தேவையை ஓரளவிற்கு சமாளிக்கின்றார்.

** உங்கள் மோடிக்கு தொடர்ந்து அந்த குஜராத் மக்கள் ஆதரவளித்தது போன்று திமுகவுக்கு குறைந்த பட்சம் இந்த முறையாவது தொடர்ந்து ஆட்சி செய்ய தமிழக மக்கள் அனுமதித்திருந்தால் நிச்சயம் அந்த 8 திட்டங்களும் இந்நேரம் முடிக்கப்பட்டு தமிழகம் இன்றைய தேதியில் உண்மையிலேயே மின் மிகை மாநிலமாக மாறியிருக்கும்.

** மேலும் குஜராத்தின் மின் உற்பத்தியில் கிட்டத்தட்ட பாதி அளவு இயற்கை உற்பத்தி அதாவது பெருக்கெடுத்து ஓடும் நர்மதா நதி அணைக்கட்டுக்களில் இருந்து கிடைக்கின்றது. அந்த மாதிரியான வருடம் முழுவதும் கிடைக்கின்ற நீர் ஆதாரம் தமிழகத்தில் கிடையாது. மோடிக்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் முக்கியமாக மின்சாரத்துக்கு கட்டப்பட்ட அணையில் இருந்து தான் அதிகம் கிடைக்கின்றது. அந்த அணை கட்டியதற்காக மக்களை இணைத்து மேதபட்கர் நடத்திய போராட்டத்திற்கான கூலியை காங்கிரஸும், அதனால் இப்பொழுது கிடைக்கின்ற மின்சாரத்தின் பலனை மோடியும் அனுபவிப்பது தான் விந்தை.

** மேலும் குஜராத் என்பது தமிழகத்தில் பாதி அளவே இருக்கின்ற ஒரு மாநிலம். அதன் தேவையும் குறைவு. இதையும் நாம் கணக்கில் எடுக்க வேண்டும்.

** இப்பொழுது தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான சிறு, குறு, மத்திய தர தொழிற்சாலைகள் கடந்த மூன்றாண்டுகால ஜெயலலிதா ஆட்சியின் மோசமான மின் விநியோகத்தால் மூடப்பட்டுவிட்டதால், அதில் மிகைப்படும் மின்சாரம் டொமஸ்டிக் அதாவது மக்கள் பயன்பாட்டிற்கு கிடைத்துக் கொண்டிருக்கின்றது. மக்களைப் பொறுத்தவரை இது ஒரு தற்காலிக தீர்வு மட்டுமே.

** ஆனால் தமிழகத்தின் பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு அதாவது கடைசி மாநில அந்தஸ்த்திற்கு அதாவது வெறும் 4.13 ஜிடிபி ரேஷியோவிற்கு தள்ளப்பட்டிருப்பதற்கு இந்த மாதிரி பெருமளவிலான தொழிற்சாலை உற்பத்தி முடக்கம் ஒரு மிக முக்கிய காரணம். அத்தோடு புதிய தொழில் முதலீடுகளும் கடந்த மூன்றாண்டு ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தமிழகத்திற்கு வரவேயில்லை.

** இந்த தொழிற் முடக்கமானது மாநிலத்தின் பெரிய வரி வருவாயையும் முடக்கிப் போட்டிருப்பதோடு, பல லட்சக்கணக்கான தொழிலாளிகள் கடந்த மூன்றாண்டுகளில் தமிழகத்தில் வேலையிழக்கவும் காரணமாக அமைந்திருக்கின்றதையும் நாம் கவனிக்க வேண்டும்.

**  மேலும் சரியான புள்ளிவிவரங்களுடன் அந்த பேட்டியில் தளபதி ஸ்டாலின் அவர்கள் பேசவில்லை என்றும் வானதி ஸ்ரீனிவாசன் அவர்கள் சொல்லியிருக்கின்றார்கள். ஆனால் இந்த மாதிரியான தெளிவான புள்ளிவிவரங்களுடன் தளபதி அவர்கள் பல மேடைகளில் பேசிக் கொண்டிருக்கின்றார். குறிப்பாக கடந்த மாதம் திருச்சியில் நடந்த திமுகவின் பத்தாவது மாநில மாநாட்டில் கூட இந்தப் புள்ளி விவரங்களை மிகத் தெளிவாக பட்டியலிட்டிருக்கின்றார்.

** அதே சமயம், இப்பொழுது திமுகவின் குறிக்கோள் என்பது தமிழகத்தில் ஜெயலலிதா அரசின் அவலங்களை மக்கள் மன்றத்தில் வைப்பது ஒன்றே என்ற காரணத்தால் அதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றது. மோடி ஆட்சியின் புள்ளி விவரங்கள் என்பதெல்லாம் இப்பொழுது திமுகவிற்கு அவசியம் இல்லை. ஏனெனில், திமுக தங்கள் கட்சியின் சார்பாக யாரையும் பிரதமர் வேட்பாளராக நிறுத்தவில்லை.

** திமுகவின் இலக்கு என்பது தமிழகத்தில் 30க்கும் அதிகமான இடங்களில் வெற்றிவாகை சூட வேண்டும் என்பதே. அந்த அதிக எண்ணிக்கையிலான எம்பிக்களின் ஆதரவோடு மத்தியில் தங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கின்ற விடயங்களை நிறைவேற்றுவதாக வாக்களித்து எழுதிக் கொடுக்கின்ற தகுதியான ஒரு நபர் பிரதமாக வருவதற்கு ஆதரவு தந்து, தமிழகத்திற்கான நலன்களை பெற்றுத்தருவது ஒன்றே திமுகவின் இன்றைய செயல் திட்டம்.

** இந்த நிலையில் மோடியின் ஆட்சி நல்லதா? கெட்டதா என்ற புள்ளிவிவரங்களை ஆராய்வது எல்லாம் திமுகவுக்கு தேவையற்ற ஒன்று, ஏனெனில் இங்கு பாஜக தனித்து நின்று ஒரு தொகுதியில் கூட டெபாஸிட் கூட வாங்க முடியாத நிலையில் இருந்து, இப்பொழுது அமைத்துக்கொண்டிருக்கும் கூட்டணியின் மூலம், அனைத்து தொகுதிகளிலும் டெபாஸிட்பெற மட்டுமே முயற்சித்துக் கொண்டிருக்கும் வேளையில் பாஜகவைப் பற்றியோ அல்லது அதன் பிரதமர் வேட்பாளர்பற்றியோ எந்த விமர்சனத்திற்கும் தன் சக்தியை விரையமாக்க திமுக விரும்பவில்லை என்பதையே தளபதி தெளிவாக உணர்த்தியிருக்கின்றார்.

** ஆகையால் திருமதி வானதி ஸ்ரீநிவாசன் அவர்களே, நீங்கள் இங்கு யாரையாவது எதிர்த்து அரசியல் செய்ய வேண்டும் என்றால், உங்கள் பிரதமர் வேட்பாளர் மோடிக்கு போட்டியாக களத்தில் தன்னைத்தானே முன்னிருத்திக் கொண்டிருக்கின்ற ஜெயலலிதாவுக்கு எதிராக விவாதம் செய்தால், உங்கள் மோடியை காப்பாற்றலாம். அதை விடுத்து தேவையில்லாமல் திமுக பற்றிப்பேசி காலத்தை விரயம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்!


Monday, March 10, 2014

இந்துத்துவா ஆட்சியமைக்கும் முயற்சியும்... இஸ்லாமிய வாக்கு வங்கிகளின் நிலைப்பாடும்...!


வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் என்பது, இது வரையிலும் நடந்ததிலேயே அதி முக்கியத்துவம் வாய்ந்ததான ஒன்றாகத்தான் நான் பார்க்கின்றேன்.
சுதந்திரத்திற்கு முன்பான அகண்ட பாரதமானது, பிரிக்கப்பட்டு சுதந்திரம் கிடைத்து மதச்சார்பற்ற இந்தியா என்கிற நமது நாடு அடைந்திருக்கின்ற வளர்ச்சியும், நாட்டில் நிலவுகின்ற அமைதிச் சூழலும்....

நிச்சயமாக நமக்கு அண்டை நாடுகளாக... மதச்சார்பு நாடுகளாக இருக்கின்ற பாகிஸ்தான், பங்களாதேஷ், நேப்பாளம் போன்ற நாடுகளில் நிச்சயமாக இல்லை என்பதை யாரும் மறுக்க இயலாது. 


இத்தகைய சூழ்நிலையில் நடக்கவிருக்கின்ற வரும் நாடாளுமன்ற தேர்தலானது, இந்துத்துவாவை மிக அழுத்தமாக நிறுவ நினைக்கின்ற ஒரு இயக்கத்தினால் வார்த்தெடுக்கபட்டு அதன் கொள்கைகளை எந்த சமரசத்திற்கும் இடமளிக்காமல் செயல்படுத்திட முனையும் ஒரு நபரை பிரதமர் வேட்பாளராக பகிரங்கமாக அறிவித்து விட்டுட்டுதான் இந்தத் தேர்தல் நடைபெறவிருக்கின்றது.

நிற்க....


அப்படிப்பட்ட ஒரு மதவாத தலைவருக்கு சற்றும் சளைக்காத அளவிற்கான இந்துத்துவா கொள்கைகளில், அவற்றை இந்தியாவில் நிறுவுவதில் ஆழ்ந்த பற்றுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் இன்னொரு பக்கம், பிரதமர் வேட்பாளராக தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டிருப்பதும், அதை எந்த பிராமண லாபிகளுமே...  ஏன்? அந்த பாஜகவே கூட விமர்சனம் செய்யாமலும், எதிர்க்காமலும் இருப்பதையும் நாம் கண்டுகொண்டிருக்கின்றோம். 


அதேப் போன்றே தன்னை பிரதமர் வேட்பாளராக ஓராண்டுக்கு முன்பே முன்னிலைப்படுத்திக் கொண்ட ஜெயலலிதா, ஒரு வார்த்தைக்குக் கூட பாஜகவையோ, அதன் பிரதமர் வேட்பாளர் மோடியையோ விமர்சிக்காமல், அதே சமயம், பாஜகவுக்கு நேரடி எதிர்ப்பாளர்களாகிய காங்கிரஸையும், மற்றும் உண்மையான இந்துத்துவ மதவாத எதிர்ப்பாளர்களையும் மட்டுமே மிகக் கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் செய்து வருகின்றார். 


இதை உறுதிப்படுத்துகின்ற வகையில் மதவாதத்திற்கு சற்றும் இடமளிக்காத, தன்னையே நம்பி அனைத்தையும் இழந்திருந்த கம்யூனிஸ்ட்டுகளையே கடைசி நேரத்தில் கழுத்தை அறுத்து வெளியேற்றியிருக்கின்றார். 


இந்த நிலைப்பாடுகளை உற்று நோக்கி நாம் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தோமேயானால், இந்தியாவை ஒரு இந்து நாடாக நிறுவ முயற்சிக்கும் அந்த இயக்கமானது, இந்த முறை எந்த வகையிலும் அதற்கான வாய்ப்பை நழுவ விட்டுவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருப்பது புரியும். 


நாட்டிலேயே வேறு எந்தப் பிரச்சினைகளையும் விட... அதாவது மதவாதம், ஜாதிச் சண்டைகள், தீண்டாமை, சமூக நீதி, பெண்கள் முன்னேற்றம், நிர்வாக முன்னேற்றம், பொருளாதார மேம்பாடு, போன்ற விடயங்கள் எதுவுமே முற்றும் முழுமையாக சரி செய்யப்படாத நிலையில், இவற்றையெல்லாம் விட நாட்டின் தலையாய பிரச்சினை ஊழல் ஒன்றே என்பது போன்ற தோற்றத்தை தன் சார்பு ஊடகங்களால் உருவாக்கி வைத்து விட்டு....


தமிழகத்தை விட பாதி அளவே இருக்கின்ற ஒரு குட்டி மாநிலத்தை ஆளுகின்ற ஒரு மதவாதி கைப்பிள்ளையை மகா உத்தமர் போலவும், சிறந்த நிர்வாகி போலவும் கடந்த நான்கு ஆண்டுகளாக அதே ஊடகங்களைக் கொண்டு இந்தியா முழுவதிலும் பரப்புரை செய்து....


ஊழல்களுக்கு எதிரான சிறந்த நிர்வாகி இவர் தான் என்ற தோற்றத்தை நாடு முழுவதும் ஏற்படுத்தி விட்டு அந்த மனிதரையே தங்கள் சார்புநிலை கொண்ட கட்சியின் அடுத்த பிரதமர் வேட்பாளராக முன்னிருத்தியிருக்கின்றது. 


இதுவரையிலும் சரி தான். இதில் ஜெயலலிதாவின் பாத்திரம் எந்த இடத்தில்? ஏன்? நுழைகின்றது என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.


பாஜக என்பது இந்தியா முழுவதிலுமே அனைத்து மாநிலங்களிலும் பரவலாக வளர்ச்சியடைந்த ஒரு இயக்கம் கிடையாது. 543 தொகுதிகளில், கிட்டத்தட்ட 250 தொகுதிகளில், அக்கட்சி ஆட்டத்திலேயே கூட கிடையாது. 300க்கும் சற்று குறைவான தொகுதிகளில் தான் அது போட்டியிடவே தகுதி பெற்றிருக்கின்ற நிலையில்..... அதிலும் பலவற்றில் கூட்டணிக் கட்சிகளுக்கு தாரை வார்க்க வேண்டியும், அந்த தொகுதிகளில் வெற்றிக்கு மாற்றுக்கட்சிகளுக்கும் சமமான வாய்ப்பிருக்கின்ற நிலையில்...


மோடி அலை என்ற ஒரு மாயத்தோற்றத்தை வைத்து மட்டுமே இன்னும்  கொஞ்சம் அதிக இடங்களை அறுவடை செய்ய முனைந்து கொண்டிருக்கின்றது. 


இந்த நிலையில் 272 தொகுதிகளில் பாஜகவுக்கு மட்டுமே வெற்றி கிடைத்தோ, அல்லது மோடியைப் போன்ற அதே இந்துத்துவா மனநிலையோடு இருக்கக்கூடிய ஒரு நபரின் ஆதரவோடு கூட்டமைத்து ஆட்சியமைத்தால் மட்டுமே அந்த இயக்கத்தால் தான் நிறுவ நினைக்கின்ற இந்து சாம்ராஜ்யத்தை நிறுவ முடியும்.


நிச்சயமாக பாஜகவால் தனியாக இன்றைய சூழ்நிலையில் அந்த எண்ணிக்கையை அடைய முடியாது என்பது ஓரளவு அவர்களுக்கு உரைக்க ஆரம்பித்திருக்கும் நிலையில்.....


பற்றாக்குறையை இட்டு நிரப்ப ஜெயலலிதா மட்டுமே மிகச் சரியான தேர்வாக அவர்களுக்கு இருக்க முடியும். அந்த வகையில் தான் ஜெயலலிதாவும் தனியாக வளர்த்துவிடப்படுகின்றார். அவரும் பாஜகவை கொஞ்சமும் சீண்டுவதில்லை... மன்னிக்கவும், விமர்சிப்பதில்லை!


சிலர் கேட்கலாம்....  பிறகு ஏன் பாஜக தமிழகத்தில் தனியாக ஒரு கூட்டணியை அமைக்க வேண்டும்? அதிமுகவோடு சேர்ந்தே நின்று தேர்தலை சந்திக்கலாமே? என்று!

இதில் தான் சூட்சுமமே அடங்கியிருக்கின்றது!

பாஜக தமிழகத்தில் தனித்து நின்றால் அதற்கு ஒரு சீட்டுக்கூட கிடைக்காது. ஜெயலலிதாவோடு கூட்டணி அமைத்தால், மிக மிக சொற்பமான சீட்டுக்களை மட்டுமே தருவார்....   அது கூட பரவாயில்லை. ஆனால் அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தால், எதிரணியில் திமுக சரிபாதி இடங்களில் மட்டுமே தான் நின்று, மிகப் பலமான கூட்டணியை அமைத்து, தமிழக அளவில் அதிக வாக்குவங்கியைக் கொண்ட கூட்டணியாக அது அமைந்து 40 தொகுதிகளிலும் அதிமுக - பாஜக கூட்டணியை மண்ணைக் கவ்வ வைத்துவிடும். 


ஆகவே தான், நடப்பு அதிமுக ஆட்சியினால் ஏற்பட்டிருக்கும் எதிர்ப்பு வாக்குகள் முழுமையாக திமுக பக்கம் சென்று விடாதவாறு, மற்ற அனைத்து முக்கிய சிறு சிறு எதிர்க்கட்சிகளையும் சேர்த்து பாஜகவே ஒரு கூட்டணியை அமைத்து தேர்தல் களத்தை எதிர்கொள்ள வருகின்றது. 


பாஜக தலைமையிலான கூட்டணி என்றாலும், இதில் பாஜக தேமுதிகவை விட குறைவான தொகுதிகளிலேயே நிற்கும் சூழலையும் அக் கட்சி பொருட்படுத்தவில்லை. காரணம், தமிழகத்தில் இருக்கின்ற இந்துத்துவா ஆதரவு வாக்குகள் பாஜக நிற்கின்ற குறைவான தொகுதிகளில் பாஜகவுக்கு ஆதரவாகவும், ஏனைய தொகுதிகளில் அதிமுகவிற்கு ஆதரவாகவே விழும் அளவிற்கு ஆரிய மனநிலை என்பது ஒரே மாதிரியாகத்தான் சிந்திக்கும், அதன்படியே செயல்படவும் செய்யும்.....


ஆகவே, திமுக கூட்டணிக்கு, நடப்பு ஆட்சிக்கு எதிரான மனநிலை கொண்டவர்களின் வாக்குகளும், பொதுவான நடுநிலையாளர்கள் வாக்குகளும் முழுமையாக சென்று விடாமல் அதை அப்படியே சேதாரமில்லாமல் பாஜக அணிக்கு செல்லும் பாதை மிகத்தெளிவாக வகுக்கப்பட்டிருப்பது தான் இங்கே பாஜக தனி அணி அமைத்து நிற்பதற்கான முக்கிய காரணம். 


இதனால் கிட்டத்தட்ட திமுகவுக்கும் அதிமுகவுக்குமான நேரடிப் போட்டி என்ற நிலை தமிழகத்தில் வரும் தேர்தலில் தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.

 
இந்த இடத்தில் மீண்டும் ஒரு முறை இந்தக் கட்டுரையின் நான்கு மற்றும் ஐந்தாம் பத்தியை மீண்டும் ஒரு முறை படித்துவிட்டு தொடரவும்....


ஆகவே இந்துத்துவ மத அடிப்படைவாதிகள் அகில இந்திய அளவில் ஒரு பெரும் திட்டத்துடன் செயல்படும் இத்தேர்தலில், சிறுபான்மை சமூகத்தினர், குறிப்பாக இஸ்லாமிய சகோதரர்கள் தங்களுக்குள் இருக்கின்ற தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்காக, இங்கே இவர் இருந்தால் அவர் இயல்பாகவே அதிமுகவுக்குத் தான் செல்வார் என்ற நிலைப்பாட்டோடு செயல்படுவது என்பது.....


ஒட்டுமொத்த இஸ்லாமிய சகோதரர்களுக்கும் செய்கின்ற துரோகமாகத்தான் எதிர்காலத்தில் அமையும். மதச்சார்பற்ற ஆட்சி மத்தியில் அமைய வேண்டும் என்று எண்ணுகின்ற ஒவ்வொரு இஸ்லாமிய சகோதரரும், வேறு எந்த சிந்தனைக்கும் இடம் கொடுத்துவிடாமல், தமிழகத்தைப் பொறுத்தவரை தங்கள் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் திமுக கூட்டணிக்கு அளிப்பதே புத்திசாலித்தனமான அல்லது தங்கள் இனத்திற்கு ஆதரவான செயலாக இருக்க முடியும்.
அதைத்தவிர்த்து அதிமுகவுக்கு ஆதரவாக விழுகின்ற ஒவ்வொரு சிறுபான்மையினரின் வாக்குகளும் தங்கள் தலையில் தாங்களே ஒரு பிடி மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளுகின்ற ஒரு முடிவாக மட்டுமே இருக்க முடியும் என்பதை கொஞ்சம் அமைதியாக யோசித்துப்பார்த்தால் புரியும். 


Tuesday, March 4, 2014

பாராளுமன்ற தேர்தலும்... திமுகவின் முஸ்தீபுகளும்...!


பாராளுமன்ற தேர்தல் வருவதற்கு மூன்று மாத கால இடைவெளி இருக்கின்ற நிலையில், நாற்பது தொகுதிகளிலும் தங்கள் கட்சியின் சார்பாக வேட்பாளர்களாக களம் இறங்க விருப்பமுள்ள தகுதியானவர்கள், இன்ன தேதியிலிருந்து... இந்த தேதிக்குள்ளாக விருப்பமனு அளிக்கலாம் என்று தலைமைக் கழகத்தில் இருந்து வெளிப்படையான அறிவுப்பு வருகிறது. அந்த விருப்ப மனுக்கள் இன்னின்ன தேதிகளில் இந்தந்த மாவட்டத்திற்கு பரிசீலனை செய்யப்பட்டு நேர்காணல் நடைபெறும் என்ற அறிவுப்பும் சேர்ந்தே வருகிறது.

அதே தேதியில்.. கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திட ஒன்றும், தேர்தல் அறிக்கை தயாரிக்கு ஒன்றுமாய் இரண்டு குழுக்கள் அறிவிக்கப்பட்டுகிறது. 

கூட்டணி பேச்சுவார்த்தை குழு, சில கட்சிகளுக்கு பகிரங்கமாக அழைப்பு விடுத்து, வந்தால் சேர்த்துக்கொள்வோம் (கண்டிஷன்ஸ் அப்ளை என்று மெல்லியதாக சொல்லிவிட்டு) என்று பகிரங்கமாக ஒளிவு மறைவின்றி அறிவிக்கிறது. 

தேர்தல் அறிக்கைக் குழுவோ, அறிக்கையில் மக்களுக்கு அத்தியாவசியமான திட்டங்களைச் சேர்ப்பதற்கு தொண்டர்களிடம் கூட கருத்துக்களை பகிருமாறு கோறுகின்றது!

சொன்ன தேதிகளில் விருப்ப மனுக்கள் வந்து குவிகின்றன. சொன்ன தேதிகளில் நேர்காணல் நடந்து முடிகிறது. 

இதற்கிடையில் கூட்டணிக் கட்சிகளின் வரவுகளும், அவர்களிடமான முதற்கட்ட பேச்சுவார்த்தைகளும், தேர்தல் அறிக்கை கிட்டத்தட்ட முழுவதுமாக தயாரான நிலையும் ஏற்படுகின்றது.....

நேர்காணல் முடிந்த அடுத்த நாள் கூட்டணிப் பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்கின்றது. ஒவ்வொரு கட்சித் தலைவராக முறைப்படி அழைக்கப்பட்டு, தொகுதி எண்ணிக்கையும், எந்தெந்த தொகுதிகள் என்பதும் பேசி இறுதி செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 

இவை அனைத்துமே ஏதோ மீடியா ஸ்கூப் செய்தி போன்று பரவாமல், கட்சித் தலைமையே புகைப்படங்களுடன் மணிக்கு மணி நடப்பவைகளை வெளிப்படையாக அறிவித்துச் செய்து கொண்டிருக்கின்றது.....

இது கட்சி... இது தான் ஒரு நேர்மையான கட்சியின், கட்சித் தலைமையின் செயல்பாடு... 

இதை விட்டு ஒரு ஆளு நாடு விட்டு நாடு ஓடிக்கிட்டே கோயிங் ஸ்டடி பண்னிட்டிருக்காரு... விட்டாக்கா அவர் குடும்பத்தினர் லீக்வான்யூ கிட்டக் கூட சிங்கப்பூர்ல ஒரு துறை முகம் கட்ட அனுமதி வேணும்ன்னு பேரம் பேசுவாரு போலருக்கு....

இன்னோரு கட்சி என்னடான்னா? 40 தொகுதிக்கும் வேட்பாளரை அறிவிச்சிட்டு தேர்தல் பிரச்சாரத்துக்கும் கிளம்பிட்டாங்க. கூட்டணின்னு நம்பிக்கிட்டு உண்டியல் குலுக்குனவன் எல்லாம் அன்னாந்து ஹெலிகாப்ட்டரை வாயப் பொளந்துக்கிட்டு வேடிக்கை பார்க்குறான்...

இன்னோரு தேசிய கட்சி சீட்டு பேரம் பேசிப் பேசி... கடேசீல பார்த்தா, அவங்க நிக்கறதுக்கே தென்னிந்தியாவ தாண்டித்தான் போயி நிக்கனும் போல இருக்கு....

இன்னோரு தேசிய கட்சியோ.... காம்ப்ளான் குடிக்குது, காவடி தூக்குது, வெய்யில் காலத்துல நடைபயணத்துக்கு கிளம்புது.....

பொதுவான அரசியல் பார்வையாளர்களுக்கும், நடுநிலையான பொதுமக்களுக்கும் புரியும். எப்பவுமே திமுக தான் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்குமான கட்சின்னு. 

ராணுவம், வெளிவிவகாரம், நிதி, சட்டம், இது மாதிரியான மேட்டர்கள்ல, 40க்கும் குறைவான எம்பிக்களை வைத்துக்கொண்டு ஒன்னும் ஆட்டவோ, அசைக்கவோ முடியாதுன்னு திமுகவுக்கும் தெரியும், பொது மக்களுக்கும் புரியும். நம்ம தயவுல மேல ஆட்சி அமைஞ்சிதுன்னா, நாலு நல்ல தொழிற்சாலையை கொண்டு வந்து நம்ம தமிழ்கார பசங்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கலாம். நல்ல சாலைகள் அமைத்துக்கொடுக்கலாம், நிறைய பாலங்கள் கட்டலாம், நிறைய ரயில்களைக் கொண்டு வரலாம், அதிக நிதி பெற்று கிராம வளர்ச்சிக்கும், கல்வி வளர்ச்சிக்கும் வழி பண்ணலாம்..... 

இப்படியாக நம்ம தமிழகத்தின் செழுமைக்கு மத்த மாநிலங்களை விட கொஞ்சம் அதிகமா வாங்கி பயன்படுத்திக்கலாம். மாநிலத்தின் வளர்ச்சி என்பதை ஆமை வேகத்திலிருந்து முயல் வேகத்திற்கு மாற்றலாம். இது மட்டுமே இன்றைக்கு இருக்கின்ற இந்திய ஆட்சி முறை சட்டத்தின் படி சாத்தியம். இந்த கோரிக்கைகளை மையப்படுத்தியே திமுகவின் தேர்தல் அறிக்கை இருக்கும்...

இதை விடுத்து, நான் ராணுவத்துக்கு ஆயுதம் வாங்குவேன், இலங்கையைப் பிடிப்பேன், லொட்டு லொசுக்குங்கற மாதிரி பேசிட்டிருந்தா, கேக்கும் போதே அலுப்புத்தட்டிடும். வெத்து ஜம்பம் எல்லாம் இங்க தமிழ்நாட்டுல தான் காட்டலாம். அங்க ஒன்னும் வேலைக்காகாது!!

மூனு மாசத்துல கரண்ட்டு கொண்டுட்டு வருவேன்னு சொல்லிட்டு, மூனு வருஷம் ஆகியும் இன்னிக்கும் ஒரு நாளைக்கு 5 மணி நேரம் மின் தடை பண்றவங்களால டெல்லிக்குப் போனாலும் எதையும் மாத்த முடியாது. ஒன்னே ஒன்ன வேணா மாத்தலாம்.....!

கொடநாட்டு வசிப்பிடத்தை.... குளூமணாலிக்கு மாத்தலாம்....!!

இளைய தலைமுறையினர் இதை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும்!!



Saturday, March 1, 2014

ஒரு தனையன்.... தலைவனாகிறான்...!


அப்பழுக்கற்ற மனிதர் அவர்...
அகவை அறுபத்தொன்றை கடந்து வருகிறார்...!

ஆளுமைத்திறன் கொண்ட தலைவர் அவர்...
ஆற்றல் மிக்க செயல்வீரராய் வலம் வருகிறார்...!!

இளைஞர்களின் எதிர்கால நம்பிக்கை அவர்...
இருண்ட ஆட்சிக்கு விடை கொடுக்க வருகிறார்...!!!

ஈடு இணையில்லா உழைப்பாளி அவர்...
ஈடுபாட்டுடன் கழகம் காக்க வருகிறார்...!!!

உண்மைக்கோர் இலக்கணம் அவர்...
உத்தமர் இவர் என்று எதிரிகளே வாழ்த்தும்படி வருகிறார்...!!!

ஊர் ஊராய்ச் சுற்றிச் சுழன்று வருகின்றார் அவர்...
ஊக்கமுடன் உடன்பிறப்புக்கள் களமாட வழி வகுத்து வருகிறார்...!!!

எழுந்து நிற்கும் உதயசூரியன் அவர்....
எதிரிகளை சுட்டெரிக்க ஓடி வருகின்றார்....!!!

ஏற்றமிகு இளைஞர்படை கொண்டவர் அவர்...
ஏகாதிபத்தியத்தை ஒழித்துக்கட்ட சூளுரைத்து வருகின்றார்...!!!

ஐயம் என்பதை அறியாதவர் அவர்....
ஐஏஎஸ், ஐபிஎஸ் எல்லாம் சலாமடிக்க பவனி வருகிறார்....!!!

ஒப்புமையில்லா தளபதி அவர்....
ஒப்பாரும் மிக்காருமில்லா தலைவராக மாறி வருகிறார்...!!!

ஓடி ஓடி உழைத்திடுவார் அவர்....
ஓங்கி உயர்ந்து வளருது அவர் புகழ்...!!!

அவ்வ்வ்.. என்று ஓலமிடுகின்றனர் எதிரிகள்....
இவரைக் கண்டு....
உ”ஃ’ப் என்று அதிர்ச்சியாகின்றனர் போட்டியாளர்கள்....!!!

அவர் தான் எங்கள் தளபதி... இல்லை இல்லை...

இனி அவர் தான் எங்கள் தலைவர்....!!!

பெற்றோருக்கு தனையனாக ஒரு சுற்றை (அறுபது ஆண்டுகள்) முடித்தவர்....

தம்பிமார்களுக்கு “தலைவனாக” அடுத்த சுற்றை (அகவை அறுபத்தொன்றை) ஆரம்பிக்கின்றார்....!!!

ஒரு தனையன்.... தலைவனாகிறான்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்!!!!!



ஆதலால் "வாருங்கள் தளபதியாரே..... பதவி ஏற்க”!!!

தமிழக அரசியலை..., ஆட்சி பீடத்தை... அடுத்த 20 ஆண்டுகளுக்கு ஆக்கிரமிக்கப் போகும் புதிய தலைமுறை அரசியல்வாதிகளை இனம் காணும் ஒரு நேர்மையான அலசல் தான் இந்தப் பதிவு.  வேறு எந்த விதமான சார்பு நிலையோ, உள்குத்தோ. நுண்ணரசியலோ இதில் இல்லை என்று அடித்துக் கூவு(று)கிறேன்.

இந்தியா குடியரசு ஆன பிறகு, கடந்த 60 ஆண்டுகால தமிழக அரசியல் வரலாற்றை உற்று நோக்கினால், வெறும் ஐந்து பேர் மட்டுமே (இதில் ஜானகி, ஓ.பி.எஸ் இவர்களை சேர்க்கவில்லை)  'முதல்வர்' பதவியை ஆக்கிரமித்துக் கொண்டிருந்திருக்கின்றார்கள். சொல்லப் போனால் அடுத்த ஐந்து ஆண்டுக்கான போட்டியில் கூட இந்தப் பட்டியலில் இருந்து தான் இருவர், முதல் இரண்டு ரேங்க்கில் இருக்கிறார்கள். 

கடந்த 60 ஆண்டுகளில் தமிழகத்தில் பல்வேறு துறைகளின் வளர்ச்சி, மக்களின் வாழ்வாதாரம், சூழ்நிலை, இன்னபிற எல்லாம் உயர்ந்திருக்கிறதா? அல்லது தாழ்ந்திருக்கிறதா? என்று பார்த்தால், இந்தியாவின் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது உடனடியாக மோசம் என்றும் கூறிவிட முடியாது, அதே சமயம் அடித்துப் பிடித்து உடனடி நற்சான்றிதழும் அளித்து விட முடியாது என்பது தான் நிதர்சனம். 

ஆக தமிழக மக்கள் அனைவருக்குமே கொஞ்சம் அலுப்பு தட்டியிருக்கிறது. ஏதோ ஒரு மாற்றம் தேவைப்படுகிறது....

கொஞ்சம் இளமையாக..., சுறுசுறுப்பாக..., நீண்ட ஆட்சி முறை அனுபவம் உள்ளவராக..., படிப்படியாக எல்லா நிலைகளையும் கடந்து அந்தந்த நிலைகளில் அனுபவம் பெற்றவராக...,  இதுவரை கொடுக்கப்பட்ட பொறுப்புகளை முழுமையாகவும், திறமையாகவும், மக்கள் பாராட்டும் படியாகவும், ஊழல் குற்றச்சாட்டு எதுவும் இதுவரை எழாத வகையில் செயல்பட்டிருப்பவராகவும்..., மக்களோடு மக்களாக கீழிறங்கி.. திட்டங்களை குறித்த காலத்திற்கு முன்னதாகவே நிறைவேற்றும் சாதுர்யம் கொண்டவராகவும்..., மக்கள் பிரதிநிதிகள் சபையில் தன் துறை சார்ந்த கேள்விகளுக்கு புள்ளி விபரங்களுடன் உடனுக்குடன் பதில் சொல்லும் ஆற்றல் பெற்றவராகவும்..., எதிர்க்கட்சியினரை வார்த்தைகளால் நோகடிக்காமல் தனிநபர் தாக்குதலின்றி பேசும் தன்மை கொண்டவராகவும்.... இப்படியே இதே ரீதியிலான இன்னும் பல 'வும்' முக்கு சொந்தக்காரராக...

....தள்ளாட்டமின்றி..., சுறுசுறுப்புடன் நடக்ககூடிய, ஓடக்கூடிய ஒருவர் முதல்வரானால் எப்படியிருக்கும்?! என்ற ஏக்கம் தமிழக மக்கள் அனைவருக்குமே வந்திருப்பது உண்மை தான்.

இது தான் சரியான தருணம்! நடந்து முன்னேறிக் கொண்டிருக்கும் தமிழகத்தை, படிகளில் ஏற்றி மேலே கொண்டுவரும் சக்தி கொண்ட ஒருவரை முதல்வராக அடையாளம் காணவேண்டிய காலகட்டத்தில் தான் இப்பொழுது தமிழக தமிழர்களான நாம் நின்று கொண்டிருக்கிறோம். 

சரி இப்படிப்பட்ட ஒருவரை தேர்ந்தெடுக்கும் போட்டிக் களத்தில் தமிழகத்தைப் பொறுத்தவரை இன்றைய நிலையில் யார் யார் இருக்கிறார்கள் என்று பார்த்தோமானால்...

இன்றைய நிலையில் இந்தப் போட்டியில் சில முக்கியமான கட்டங்களை தாண்டி, ஆட்டத்தில் இருப்பதாக மக்களால் உணரப்படுகிறவர்கள் இருவர் மட்டுமே.... 

ஒருவர் தளபதி மு.க. ஸ்டாலின்....  மற்றொருவர் கேப்டன் விஜயகாந்த். 

இந்த ஆட்டத்தில் மிக முக்கிய போட்டியாளராக இருந்திருக்க வேண்டிய வைகோ, ஏதோ ஒரு பிடிவாதத்தில் தன்னைத்தானே புதை குழிக்குள் சிக்க வைத்துக் கொண்டு தனக்கும், தன்னைச் சார்ந்தவர்களுக்கும், ஏன் அடைய விரும்பிய ஒரு லட்சியத்திற்கு கூட விடியலை பகல் கனவாகவே மாற்றி வைத்திருக்கிறார். பல நாட்டு அறிஞர்களின் புத்தகங்களையும், தத்துவங்களையும் கரைத்துக் குடித்திருக்கும் வைகோ, சுயநலமின்றியும் நிறைய நிதானத்துடனும் செயல்பட்டிருந்தால்...., இன்று வெற்றிக் கோட்டையின் நுழைவாயிலில் முதல் ஆளாக நின்றிருந்திருந்திருக்கக் கூடும்!

மேற்சொன்ன இருவரை தவிர்த்து வருங்கால இளம் தலைமுறை தமிழக முதல்வர் போட்டியில் 'நானும் ரௌடி தான்' ஸ்டைலில், சக போட்டியாளராக களத்தில் நிற்கின்றவர்கள் என்று பார்த்தோமானால்...,

தமிழருவி மணியன், டாக்டர் அன்புமணி ராமதாஸ், சீமான், கனிமொழி, உதயகுமார், நடிகர் விஜய், சரத்குமார், ஜி.கே. வாசன், கார்த்திக் சிதம்பரம்,  ... இப்படியாக சொல்லும் போதே வாயை மூடிக்கொண்டு சிரிக்கும்படியான பட்டியல் தான் நினைவுக்கு வருகிறது!

எனவே இன்றைய நிலவரத்தை வைத்துப் பார்த்தோமானால், ஸ்டாலின் மற்றும் விஜயகாந்த் இருவர் மட்டுமே, அடுத்த 20 ஆண்டுகளுக்கு தமிழக முதல்வர் பதவியை ஆக்கிரமிக்கப் போகும் போட்டிக் களத்தில் நிற்கிறார்கள். மேற்சொன்ன பட்டியலில் இருந்தோ அல்லது புதிதாக முளைத்தோ ஓரிருவர் வருங்காலத்தில் (இன்னும் 5 வருடத்தில்) இந்தப் போட்டிக்கு தகுதியானவர்களாக வருவார்களேயானால், அது ஆரோக்கியமான தமிழக அரசியலுக்கு வழிவகுக்கும் என்றே நினைக்கிறேன்.

சரி இப்பொழுது உள்ள போட்டியாளர்களில் முதலாவதாக விஜயகாந்த் ஐ பார்ப்போம்....

தமிழக வாக்காளர்களில் பெறும்பான்மையானவர்கள், கலைஞர் மற்றும் ஜெயலலிதாவிற்கு மாற்றாக ஒரு பலம் வாய்ந்த தலைமையை எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது, வாராது வந்த மாமணி போல் வந்தவர் தான் விஜயகாந்த். 2006 சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் சேர்த்து சராசரியாக எட்டு சதவிகித வாக்குகளைப் பெற்று, அவர் மட்டும் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றார்.

அது வரை எல்லாமே சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. அதன் பிறகு அடுத்த அடிக்கு அவர் முன்னேறினாரா என்று கேட்டால் அவரே கூட இல்லை என்று தான் சொல்வார். ஒரு மாற்று சக்தியாக தமிழக மக்களால் இனம் காணப்பட்ட விஜயகாந்த், எப்பொழுது அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தாரோ? அப்பொழுதே, “சற்றே விலகியிரும் பிள்ளாய்” என்று தமிழக மக்கள் சொல்லுகின்ற நிலைக்கு வந்துவிட்டிருந்தார்...

ஆனால் அது ஒரு இடைக்கால யுக்தி மட்டுமே, என்று எண்ணி மற்றுமொரு வாய்ப்பு அவருக்கு கொடுக்கலாம் என்று மக்கள் நினைத்திருந்தால் கூட அதற்கு சற்றும் இடம் தராமல், வரும் தேர்தலில் ருசி கண்ட பூனையாக கூட்டணி பேரத்தினை கூச்சநாச்சமின்றி எதிரெதிர் துருவங்களைச் சேர்ந்த அனைத்து முக்கிய கட்சிகளுடனும் தற்பொழுது நடத்திக் கொண்டிருக்கின்றார்.

இப்பொழுது கூட சென்ற தேர்தலில் தான் பெற்ற வாக்கு சதவிகிதத்தைப் பற்றி மட்டுமே பேசுகிறாரே தவிர, வரும் தேர்தலில் தன் கட்சிக்கு கூடுதலாக இவ்வளவு வாக்குகள் கிடைக்கும் என்று பேசவில்லை. தன் கட்சி சார்பாக தனக்கு கிடைத்த சட்டமன்ற உறுப்பினர் பதவியை கொஞ்சம் கூட மதிக்காமல் முதல் ஐந்து ஆண்டுகளில் ஓரிரு முறை மட்டுமே சட்டசபைக்கு சென்றுள்ளார்.

கேட்டால் எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா இவர்கள் எல்லாம் இதே தவறை செய்யவில்லையா? என்று கேட்பார். உண்மை தான். அவர்கள் யாருமே முதல் முறை எம்.எல்.ஏ ஆன போது இந்த தவறை செய்யவில்லை. மேலும், குறைந்த பட்சம் அவர்கள் கட்சிக்காரர்களாவது ஒத்துக் கொள்ளும் வகையில் அதற்கான ஒரு நியாயத்தை கற்பித்துச் சொன்னார்கள். ஆனால் விஜயகாந்த் அப்படி என்ன சாதித்து விட்டதாக நினைத்துக் கொண்டு சட்டசபை செல்வதை தவிர்த்தார்? சரி ஒரு ஒழுங்கான எதிர்க்கட்சி தலைவராகவாவது நடந்து கொண்டாரா? ஜெயலலிதா செய்வதைப் போல் ஒரு எதிரிக் கட்சி தலைவராகத்தான் இதுவரை நடந்து கொண்டிருக்கிறார்!

இவர் செய்ததை எல்லாம் தான் ஏற்கனவே ஜெயலலிதா செய்து கொண்டிருக்கிறாரே! அந்த இருவருக்கும் மாற்றாகத்தானே மக்கள் இவரைப் பார்த்தார்கள். அவர்களில் ஒருவர் செய்வதையே இவரும் செய்தால் மாற்றத்தை விரும்பும் மக்கள் எங்கனம் மீண்டும் இவரை ஆதரிப்பார்கள்? சரி எம்.ஜி.ஆர். -ன் பிரதிபிம்பமாக தன்னை காட்டிக்கொள்ள விரும்பும் இவர், அவரைப் போன்ற மேடை நாகரீகத்தையோ, கட்சித் தொண்டர்களிடமுமான அணுகுமுறையையோ கடைபிடிக்கிறாரா? 

இதே ரீதியில் தனிப் பதிவே போடும் அளவிற்கு, விஜயகாந்த் தனது கட்சியின் வாக்கு வங்கியை அதிகப்படுத்துவதை தவிர்த்து வீழ்ச்சியை நோக்கி அழைத்துச் சென்ற விஷயங்களைப் பட்டியலிடலாம்.

ஆகவே... அடுத்த போட்டியாளரான ஸ்டாலினைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம். இந்தப் பதிவின் நான்காம் பத்தியை மீண்டும் ஒருமுறை படித்தாலே பாதி விஷயங்கள் விளங்கிவிடும். அடுத்த 20 வருடங்களுக்கான தகுதியான தமிழக முதல்வர் போட்டியின் முதலிடத்தில் இருப்பவர் இவர் தான் என்று! 

இதைப் படிக்கும் பொழுது இது ஒரு 'சார்புநிலை' வாதம் என்று எண்ணுபவர்கள், இந்த இடத்திற்கு தற்பொழுதைய நிலையில் வேறு ஒருவரை பொறுத்தி வாதிட்டால் பதில் கூற நானும் தயாராயிருக்கிறேன்.

 @ எமர்ஜென்ஸிக்கு முன்னதாகவே ஆரம்பித்து, சற்றேரக்குறைய 40 வருட கால முழுநேர அரசியல் அனுபவம்...

@ ஒரு புது கட்சியை ஆரம்பித்து நடத்துவது போல தி.மு.க வின் இளைஞர் அணியை ஆரம்பித்து, கட்டமைத்து, அதற்கென்று தனி அலுவலக கட்டிடம், அணிவகுப்பு, மாநாடு, இத்தியாதி, இத்தியாதி என்றெல்லாம் வளர்த்து, அதன் பொறுப்பாளர்கள் பலரும் ஆட்சிப் பொறுப்பிலும் பங்கேற்கும் நிலையினை ஏற்படுத்தி.... 

சுதந்திர இந்தியாவில் அறுபது ஆண்டுகால பழமையான பிராந்திய கட்சி இன்றைக்கும் மங்காத பொலிவுடன் அடுத்த தலைமுறைக்கான தலைவர்களை தேர்ந்தெடுத்து முக்கியஸ்தர்களின் வாரிசுகளுக்கு இடம் கொடுக்காமல் மீண்டும் ஒரு முறை புதிதாக கட்டமைத்து.... 

தான் சார்ந்த பேரியக்கம் தொய்வில்லாமல் செயல்படுவதற்கான காரணங்களில் மிக முக்கியமானது ஸ்டாலின் ஈன்றெடுத்து வளர்த்த அந்த இளைஞரணி தான் என்பதை தி.மு.க தலைவர் முதல் அடிமட்டத் தொண்டர்வரை எவரும் மறுப்பதற்கில்லை.

@ கட்சித் தலைவர் கலைஞரின் மகன் என்ற காரணத்தால் தான் இப்படி வளர்ந்தார் என்பவர்களுக்கு, கலைஞரின் மற்ற பிள்ளைகளுக்கு இப்படியொரு பொறுமையும், நிதானமும் இருந்ததில்லை என்று எண்ணிப்பார்க்க வேண்டும் என்ற வேண்டுகோளோடு... இப்பொழுது (அடுத்த முதல்வர் போட்டிக்கான) களத்தில் நிற்பவர்கள் எப்படி வளர்ந்தார்கள் என்பதைப் பற்றிய பதிவல்ல இது என்பதும் கூட என் பதில் தான்.

@ சென்னை மாநகர மேயராக பொறுப்பிலிருந்த போதாகட்டும், உள்ளாட்சித்துறை அமைச்சராக ஆற்றிய பணியாகட்டும், துணை முதல்வராக அனைத்து துறைகளிலும் தனது பங்களிப்பை சிறப்பாக வெளிப்படுத்திய பாங்காகட்டும், இதில் எங்குமே தாந்தோன்றிதனமாக நடந்து கொண்டதான குற்றச்சாட்டோ, ஊழல் போன்ற குற்றச்சாட்டுகளில் சிக்கிக் கொண்டதாக பேச்சோ அடிபடவில்லை. சென்னையில் கட்டிய மேம்பாலங்களில் ஊழல் நடந்ததாக ஜெயலலிதா வழக்குத் தொடர்ந்து, கட்டிய பாலங்களை உடைத்து பரிசோதித்தும் குற்றம் நிரூபிக்கப்படாமல் திருவாளர் பரிசுத்தமாக பரிமளித்தவர் தான் ஸ்டாலின் அவர்கள்.

@ வெளிநாட்டு தொழிற் குழும பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, பெரிய பெரிய தொழிற்சாலைகளை தமிழகத்திற்கு கொண்டுவர அவர் காட்டிய ஆர்வம், அவர் ஆளுகையின் கீழ் தமிழகம் வந்தால் தொழில் துறையில் தமிழகம் தன்னிறைவடையும் என்பதை திட்டவட்டமாக உணர்த்துகின்றது. 

@ 'சிங்காரச் சென்னை' என்ற வார்த்தைப் பிரயோகத்தை பிரபலமாக்கிய அவர் ஆட்சிப் பொறுப்பேற்றால் கூவம் ஆற்றில் குட்டிக் கப்பல் ஓடலாம், மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டம் திட்டமிட்ட காலத்திற்கு முன்பே நிறைவேற்றப் படலாம்,.... இப்படியே இன்னும் பல 'லாம்' கள் சேர்ந்து சென்னை சொர்க்கமாக மாறுமா? மாறாதா? என்பதை... ஸ்டாலின் மனோநிலையை நன்கு அறிந்த சென்னை வாசிகளின் முடிவிற்கே விட்டு விடுகிறேன்! 

ஏனென்றால் கே.ஏ.கே. மறைவிற்குப் பின் நடந்த ஒரு தேர்தலில், ஆயிரம் விளக்கு தொகுதி வாக்காளர் என்ற முறையில் 'சோ' அவர்களிடம் பேட்டி கண்ட பொழுது, கருணாநிதியை முழுமையாக எதிர்த்தாலும், எங்கள் தொகுதிக்கான சிறந்த மக்கள் பிரதிநிதி என்ற வகையில் ஸ்டாலினை ஆதரிப்பதாக சொல்லியிருந்தார். அதேப்போல் சுனாமி நிவாரண நிதியை வீண் கௌரவம் பார்க்காமல், நேரில் சென்று, காத்திருந்து அன்றைய முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து கொடுத்தது... 

இவை எல்லாமே எதிர்ப்பாளர்களிடமும், எதிரிகளிடமும் தன்னுடைய நிதானமான, தெளிவான செயல்பாடுகளால், தமிழகத்தின் பொது பிரச்சினைகளான இலங்கை, காவிரி, முல்லைப் பெரியாறு, போன்ற இன்னபிற பிரச்சினைகளில், முக்கிய எதிர்கட்சிகள் உள்ளிட்ட அனைத்து தமிழக கட்சியினருடனும் ஒன்றிணைந்து செயல்பட்டு, கோரிக்கைகளை ஒரே குரலாக தமிழகத்திலிருந்து எழுப்பி தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் உண்மையான நியாயம் கிடைக்கப் போராடும் தலைவராக திகழ்வார் என்பதையே காட்டுகிறது.

கலைஞரால் தான் ஸ்டாலின் வளர்ந்தார் என்பது ஒரு கோணத்தில் உண்மை என்றாலும், அதுவே தான் அவரது அடுத்தகட்ட வளர்ச்சிக்கான முட்டுக்கட்டை என்பதையும் மறுப்பதற்கில்லை. கலைஞர் அமைச்சரவையில் ஒரு அமைச்சர் என்ற வகையில் அவர் தன்னுடைய கடமைகளை உள்ளாட்சியில் மிகத்திறமையாகவும், எம்.ஜி.ஆருக்கு அடுத்தபடியாக, கிராமத்துப் பெண்களிடம் பெரிய அளவிற்கு அபிமானத்தையும், ஆதரவையும் பெற்ற நபராகத் திகழும் அளவிற்குமாகவும் செயல்பட்டிருக்கின்றார்.

சமுதாயத்தின் அடிமட்டத்திலிருந்து வெடித்துக் கிளம்பி முன்னேறிய கலைஞர், உச்சத்தை அடைய சிலபல சமாதானங்களை செய்திருக்கின்றார் என்று வாதம் செய்பவர்கள்...., வசதி வாய்ப்புகளையும், பதவி பந்தாக்களையும், சிறைக் கொடுமைகளையும், தோல்விகளின் தாக்கங்களையும் மாறி மாறி அனுபவித்து வளர்ந்தவரான ஸ்டாலின், அழகான அளவான குடும்பத்தோடும், தான் மட்டுமன்றி தன் குடும்பத்தாரும் எந்தவொரு குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாத வகையிலும் வழி வகை செய்து கொண்டு.....

தான் ஆட்சிக்கு வந்தால், தமிழகம் மற்றும் தமிழர்களின் வளர்ச்சிக்கு மட்டுமே தன்னை பொறுப்பாளியாக உருவகித்துக்கொண்டு, அதற்கான எந்த மாதிரியான சமரசங்களுக்கும் இடமளிக்காமல் செயல்படுவார் என்பதை அவரது முந்தைய செயல்பாடுகளும் மக்களுக்கு உணர்த்தியிருக்கின்றது. அதேப் போன்று இப்பொழுது எதிர்க்கட்சி அந்தஸ்து இல்லாத நிலையிலும் கூட....

மக்களுக்கோ, கட்சிக்கோ, இயக்கத்திற்கோ ஒரு இக்கட்டான சூழ்நிலை உருவாகும் போது அனைவரையும் ஒருங்கிணைத்து துவண்டுவிழாமல் உற்சாகப்படுத்தி செயல்பட்டு, செயல்பட வைப்பதே....  ஒரு சிறந்த தலைவனுக்கான இலக்கணம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!!!

அந்த இலக்கணத்திற்கு உவமானமாய் இன்றைக்கு திகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு ஒப்பற்ற தலைவனாக தமிழகத்தின் அடுத்த முதல்வராக வரக்கூடிய தகுதி படைத்தவர்....

தளபதி ஸ்டாலின் அவர்கள் மட்டுமே என்பதில் பெரும்பான்மையான தமிழக மக்களுக்கு கூட மாற்றுக் கருத்து இருக்க முடியாது!!!



மேலும் சில மாதங்களுக்கு முன்பாக கலைஞரே, திமுகவின் அடுத்த தலைவராக ஸ்டாலின் அவர்களை நானே முன்மொழிவேன் என்று பொதுக்குழுவில் அறிவித்திருக்கின்றார்......, 

ஆதலால் "வாருங்கள் தளபதியாரே..... பதவி ஏற்க!!!