Saturday, April 12, 2014

தளபதி ஸ்டாலின் பிரச்சாரம் சரியான வழியில் செல்கிறதா???!!!


நாடாளுமன்றத்திற்காக நடைபெறும் தேர்தல் பிரச்சாரங்களில், திமுகவின் வருங்கால தலைவரும், இன்றைய பொருளாளரும், தமிழக பிரச்சார களத்தில் ஜெயலலிதாவின் கவுண்ட்டர் பார்ட் ஆக திமுகவின் சார்பில் பிரச்சாரத்தை முன்னெடுத்துக்கொண்டிருக்கின்றவருமான தளபதி ஸ்டாலின் அவர்கள்....

மத்திய அரசு சார்ந்த செயல்பாடுகள் அல்லது திட்டங்கள் பற்றியோ, மத்தியில் இப்பொழுது ஆண்டு கொண்டிருக்கும் காங்கிரஸ் அல்லது ஆளத்துடிக்கின்ற பாஜக பற்றிய விமர்சனங்களையோ அதிகம் பரப்புரை செய்யாமல் இன்னமும் ஜெயலலிதா ஆட்சியைப் பற்றியே அதாவது மாநில பிரச்சினைகளை முன்வைத்தே பிரச்சாரம் மேற்கொள்வது சரியா?

இது தான் இன்றைக்கு திமுகவின் எதிர்நிலை நிலைப்பாடு கொண்ட கட்சிகள், மனிதர்கள், ஊடகங்களின்  கேள்வி!

மேலோட்டமாகப் பார்க்கும் போது, இளைஞர்களும், நடுநிலையாளர்களும்....  இது நியாயம் தானே? மத்திய அரசினை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் இவர் ஏன் மாநிலப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசி ஜெயலலிதாவுக்கு எதிராக வாக்குகளைத் திரட்டுகிறார் என்று எண்ணக் கூடும்? 

அப்படி அவர்கள் எண்ண வேண்டும் என்பது தான் அதிமுக மற்றும் பாஜக ஆதரவு ஊடகங்களின் நோக்கமே!!

ஆனால் இதை நாம் பார்க்க வேண்டிய கோணமே வேறு!

சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா குடியரசு ஆன பிறகு மத்தியில் தொடர்ந்து ஆட்சி செய்து வந்த காங்கிரஸ், ஒரு கட்டத்தில் அதிகார பலப்பிரயோகம், ஊழல், குறிப்பிட்ட நபர்களிடம் மட்டுமே குவிந்திருக்கும் பதவிகள், நாட்டை வளர்ச்சிப்பாதையில் முன்னெடுக்காத பொறுப்பற்ற தன்மை, தங்களிடம் இருக்கின்ற பொறுப்பைப் பற்றிய உண்மையான மதிப்பீடு இல்லாத தன்மை....

என்று இந்தியாவையே ஒரு வித மந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டிருந்தது. மேலும் மத்திய அரசின் திட்டங்கள் ஒரு சில குறிப்பிட்ட மாநிலங்களுக்குள்ளாகவே அதுவும் வட மாநிலங்களிலேயே குவிக்கப்படுவதும், செயல்படுவதும் என்று செயல்பட்டு, நாட்டின் பல மாநிலங்களில் வறட்சியும், வேலைவாய்ப்பின்மையும் பெருகி, பல மாநிலங்கள் தீவிரவாதிகளின் கைகளுக்குச் செல்வதுமான ஒரு குழப்பநிலை உருவாக ஆரம்பித்தது. 

இந்த நிலையில் காங்கிரஸுக்கான மாற்று என்ற வகையில் இயல்பாகவே நாடும், நாட்டு மக்களும் சிந்திக்க ஆரம்பித்ததன் விளைவு இன்னொரு தேசியக் கட்சிக்கான தேடலாக உருவெடுத்தது. 

இடையில் எமர்ஜென்ஸிக்குப் பிறகு, காங்கிரஸை வீழ்த்துவது ஒன்றே நோக்கம் என்ற வகையில் மிக விரைவாக உருவான ஜனதா கட்சியும்..., அது உருவான நோக்கம் நிறைவேறியவுடன் அதே வேகத்தில் சிதறுண்டும் போனது! 

இதற்கு இடையில் தான் நாட்டை இந்து ராஜ்ஜியமாக மாற்ற முயன்று கொண்டிருந்த இந்து மதவாத அமைப்பான ஆர் எஸ் எஸ், ஆசியுடன்,  பாஜக என்ற தேசியக் கட்சி அதன் சார்பாக முன்னெடுக்கப்படுகின்றது. 

மத்திய காங்கிரஸ் அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையால்.....  இதில் காங்கிரஸ் என்று குறிப்பாக நாம் குற்றம்சாட்ட முடியாதபடிக்கு, எந்தக் கட்சியைச் சார்ந்த வட இந்திய தலைவர்களுமே, தாங்கள் சார்ந்த ஒரு சில வட இந்திய மாநிலங்களுக்கு மட்டுமே மத்திய அரசின் அனைத்து நிதி உதவிகளையும், நலத்திட்டங்களையும் கொண்டு செல்வதில் முனைப்புக் காட்ட, தென்னிந்திய மாநிலங்கள் பெருமளவில் மத்திய அரசால் புறக்கணிக்கப்பட்டே வந்தன. 

இதற்கான சிறந்ததொரு தீர்வாகத்தான் திமுக, “மாநிலத்தில் சுயாட்சி, மத்தியிலே கூட்டாட்சி” என்ற தத்துவத்தை முன்னெடுத்து, அதை மத்திய அரசு நிறைவேற்றுவதற்கான தனது கோரிக்கைகளையும் அழுத்தங்களையும் தீவிரப்படுத்தியது. 

இதற்கான முதல்படியாக மத்தியில் காங்கிரஸ் தவிர்த்து பல்வேறு பிராந்தியக் கட்சிகள் உள்ளடக்கிய கூட்டணி ஆட்சியை கொண்டு வரும் முயற்சியில் திமுக களமிறங்கி அதில் முதல் வெற்றியை 1989 ஆம் ஆண்டு திரு. வி.பி.சிங் அவர்கள் தலைமையிலான தேசிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியை அமைத்ததன் மூலம் பெற்றது. 

அப்படிப்பெற்ற தனது முதல் வெற்றியினைப் பயன்படுத்தி மத்திய அரசு கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்களில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடாக 28 சதவிகிதத்தையும் திமுக அப்பொழுதே சாத்தியமாக்கியது. 

ஆனால் இத்தனைக் காலம் பலனடைந்த காங்கிரஸ் சும்மாயிருக்குமா? இந்த பிராந்தியக் கட்சிகளின் கூட்டணி ஆட்சி முறையை எல்லா இடங்களிலும் இருக்கின்ற சுயநல அரசியல்வாதிகளின் துணை கொண்டு முறியடித்தது. 

அதனால் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியும்... அதன் எதேச்சாதிகாரமான போக்கும் ஏற்பட, மக்களோ முந்தைய கூட்டணி ஆட்சியின் பலனை விரும்பியவர்களாகவும், அதே சமயம் ஒரு நிலையான ஆட்சியினையும் விரும்புவதைப் புரிந்து கொண்ட திமுகழகம்....

1999 ஆம் ஆண்டு இன்னுமொரு தேசியக் கட்சியான பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி கண்டு, மத்தியில் அந்த தேசிய கட்சியின் தலைமையில் பல்வேறு பிராந்தியக் கட்சிகளின் கூட்டணி ஆட்சியை அமைத்தது. மத்திய அரசில் தனது பங்களிப்பை நிறுவ பல்வேறு வழிகளில் முயன்றும், அது 13 நாட்கள், 13 மாதங்கள் என்ற அற்பாயுளோடு முடிவுற்றிருந்த விரக்தியில் இருந்த பாஜக, தனது தேசிய கட்சி பந்தாவை எல்லாம் தூக்கியெறிந்து விட்டு, தன் தலைமையிலான பிராந்திய கட்சிகள் அங்கம் வகிக்கும் தரமான கூட்டணி ஆட்சிக்கு திமுக முன்னெடுத்த அனைத்து குறைந்த பட்ச செயல்திட்டத்திற்கும் ஒத்துக்கொண்டு வந்தது. 

பாரதிய ஜனதா இந்தியாவில் இந்து ராஜ்ஜியத்தை நிறுவ எண்ணுகின்ற ஒரு இந்து மதவாதக் கட்சி எனினும், அன்றைய தேதியில் ஒரு தேசிய கட்சியின் தலைமையிலான பிராந்திய கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைப்பதே நிலையான ஆட்சிக்கு வழி வகுத்து மத்திய அரசு அளவில் கூட்டணி ஆட்சியும் அதன் பலனாக நாட்டின் எல்லா பிராந்தியங்களுக்குமான பலன்களும் நியாயமாக பகிர்ந்தளிக்கப்படும் ஏற்பாடும் என்பதையும் கணக்கிட்டு, திமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. 

அப்படி பாஜகவுடன் கூட்டணி அமைத்தாலும் அக்கட்சி தனது கொள்கைகளை முன்னெடுத்து எந்தவொரு சிறு கொள்கை சார்ந்த முடிவுகளையும் மத்திய அரசு அளவில் எடுத்துவிட முடியாதபடிக்கு, ஒரு குறைந்தபட்ச செயல் திட்டத்துடன் கூடிய கொள்கையுடன் அந்த கூட்டணி ஆட்சி நிறுவப்பட்டது. அதன் காரணமாக இன்றைக்கு பாஜக வெளியிட்டிருப்பது போன்று தனியாக தங்கள் கட்சிக்கு என்று ஒரு தேர்தல் அறிக்கையாக இல்லாமல், அக் கூட்டணியில் பங்கேற்றிருக்கும் அனைத்துக் கட்சிகளின் அடிப்படைக் கொள்கைகளுக்கும் பங்கம் இல்லாமல், சில கட்சிகளின் பிரச்சினைக்குறிய கொள்கைகளை புறம் தள்ளிவிட்டு அனைவரும் முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளத் தக்க விடயங்களை மட்டும் முன்னெடுக்கும், தேர்தல் அறிக்கையை கூட்டாக தயாரித்து அதைத்தான் வெளியிட்டனர். 

1999 இல் அப்படி ஒரு தெளிவான வழிகாட்டுதலின் படி உருவாக்கப்பட்ட தேசியக் கட்சி ஒன்றின் தலைமையிலான, பிராந்தியக் கட்சிகள் அங்கம் வகிக்கின்ற ஒரு கூட்டணி ஆட்சி முறை தான் இன்று வரையிலும் அதாவது 15 ஆண்டுகளாக தொடர்ந்து மத்திய அரசு அளவில் நடந்து வருகின்றது. 

இதில் முதல் ஐந்து ஆண்டுகளில் பாஜக தலைமையிலும், அடுத்த பத்து ஆண்டுகள் காங்கிரஸ் தலைமையிலும் நடைபெற்ற மூன்று ஆட்சிகளிலுமே திமுக பங்கேற்று இருக்கின்றது. 

இந்த மாதிரியான கூட்டணி ஆட்சி என்பது முதலாவதாக..... ஸ்திரத்தன்மை வாய்ந்தது என்பதை தொடர்ந்து மூன்று ஆட்சிகளின் மூலம் நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும், உலகிற்க்கும் எடுத்துக்காட்டப்பட்டிருக்கின்றது. 

இரண்டாவதாக, ஒரு தேசியக் கட்சியானது தனது பலம் வாய்ந்த தலைவர்களின் தன்னிச்சையான முடிவுகளுக்கு தலை வணங்காமலோ, தனது கட்சியின் பொதுவாக அனைத்துத் தரப்பு மக்களாளும் ஏற்றுக்கொள்ள முடியாத சில கொள்கைகளை அமல்படுத்திட இயலாமலோ...  நாட்டின் அனைத்து தரப்பு மக்களுக்கும் பலனளிக்கக் கூடிய, எவருக்கும் பாதிப்புகள் ஏற்படுத்திட இயலாத வகையில் ஆட்சி நடத்தப்பட்டிருக்கின்றது.

மூன்றாவதாக, ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்த நாட்டின் அனைத்து பிராந்தியங்களிலும் சமமாக பிரதிபலிப்பது ஒன்றே நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் என்பதையும், அப்படி நடைபெறாத போது தான் நாட்டில் பிரிவினை வாதமும், தீவிரவாதமும் தலை தூக்குகின்றது என்பதையும் புரிந்து கொண்டு, இந்த 15 ஆண்டுகளின் அனைத்து பிராந்தியங்களுக்கும் மத்திய அரசின் நிதி மற்றும் திட்டங்கள் என்று அனைத்துமே நியாயமான வகையில் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கின்றன. 

அதன் பொருட்டே, 1999 வரையிலு தொழில் துறையைப் பொறுத்தவரை மத்திய அரசின் எந்தவொரு சிறு பலனையும் அனுபவித்திராத தமிழகம், அதே ஆண்டு இந்தியாவுக்கு வந்த 70 ஆயிரம் கோடி வெளிநாட்டு முதலீடுகளில் கிட்டத்தட்ட சரிபாதியை தமிழகத்திற்கு கிடைக்க வழி வகை செய்தது. 

அதன் பொருட்டே 2000 ஆம் ஆண்டு முதல் தமிழத்தின் தொழிற்துறை ஜெட் வேகத்தில் முன்னேற ஆரம்பித்தது. அது வரையிலும் தமிழகம் கண்டிராத நான்கு வழிச் சாலைகளும், அகல ரயில் பாதைகளும், எண்ணற்றை புதிய ரயில்வே வழித்தடங்களும், பெரிய பெரிய தொழிற்சாலைகளும், மத்திய பல்கலைக் கழகங்களும், ஆராய்ச்சி மையங்களும், பறக்கும் சாலைகளும், மெட்ரோ ரயில் திட்டங்களும், உயர்நிலை மேம்பாலங்களும், கடல் நீர் குடிநீராக்கும் திட்டங்களும், கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கான மத்திய அரசின் உதவிகளும்....

என்று கடந்த 15 ஆண்டுகளில் மத்திய அரசின் மூலம் தமிழகம் பெற்ற பலன்கள் ஏராளம்.  67 வருட கால சுதந்திர இந்தியாவில் தமிழகத்திற்கு மத்திய அரசின் மூலமாக கிடைத்திட்ட நிதி மற்றும் திட்டங்களில் ஏறத்தாழ 70 சதவிகிதத்திற்கும் கூடுதலாக இந்த 15 ஆண்டுகளில் தான் தமிழகத்திற்குக் கிடைத்திருக்கின்றது. 

ஆகவே இந்திய அளவிலான மத்திய அரசைப் பொறுத்தவரை ஒரு தேசியக் கட்சியின் தலைமையில் அமைகின்ற, முக்கிய பிரச்சினைகள் அனைத்திலும் மூக்கை நுழைத்து நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் விளைவித்திராத  பிராந்தியக் கட்சிகள் அங்கம் வகிக்கின்ற மத்திய அரசு அமைவது தான் தமிழகம் போன்ற அனைத்து பிராந்தியங்களுக்கும் பயனுள்ளதாக அமையும். 

அந்த வகையில் வரும் பாராளுமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு கிடைக்கின்ற அதிகப்படியான எம் பிக்கள் என்பது, மத்தியில் எந்த கட்சியின் தலைமையில் ஆட்சி அமைந்தாலும், அந்தக் கட்சியின் சுயத்தை விட்டுக் கொடுத்து நாட்டின் எந்தத்தரப்பு மக்களுக்கும் பாதிப்பில்லாத அதே சமயம், தமிழகத்திற்கு மத்திய அரசு சார்ந்த அடுத்தடுத்தக் கட்ட தொலை நோக்குத் திட்டங்களை எந்தத் தொயுவும் இல்லாம் கொண்டு வர வழி வகுக்கும். 

அதே சமயம் அதிமுகவுக்கு ஆதரவாக கிடைக்கின்ற கூடுதல் எம் பிக்கள் என்பது நாம் ஏற்கனவே 1998 இல் கண்டது போன்று நாட்டில் ஸ்திரமான ஆட்சியை அமைக்க உதவாது என்பதும், எப்பொழுதுமே சண்டைக் கோழியாகவும், சுயநலமாகவுமே சிந்திக்கின்ற ஜெயலலிதாவால் தமிழ்கத்திற்கும் மத்திய அரசின் பலன்கள் பெரியதாக கிட்டிவிடாது என்பதையும், இப்பொழுதே அந்த அம்மா தானே பிரதமர் என்ற வகையில் முன்னெடுப்பது, தன் உயரம் தெரியாமல் புதிதாக அமையவிருக்கின்ற மத்திய அரசில் குழப்பத்தை விளைவிப்பதாகவுமே அமையும் என்பதையும்....

கணக்கில் எடுத்துக்கொண்டு, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு கிடைக்கின்ற ஒவ்வொரு கூடுதல் எம்பியும் மத்தியில் ஒரு நிலையான ஆட்சி அமையவும், அந்த ஆட்சியின் மூலம் தமிழகத்திற்கு மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும், எந்த தொய்வும் இன்றி முழுமையாகவும், கூடுதலாகவும் கிடைக்க வழி வகுக்கும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். 

இந்த உண்மையை கடந்த 15 ஆண்டுகளில் திமுக நிரூபித்தும் காட்டியிருக்கின்றது. அதே சமயம் இருக்கின்ற இரண்டு முக்கிய தேசியக் கட்சிகளுமே பிராந்தியக் கட்சிகளுடன் அங்கம் வகிக்கும் மத்திய ஆட்சியை விரும்பவில்லை என்பதையும், தனது பழைய எதேச்சாதிகாரமான ஆட்சி முறையையே மீண்டும் மீட்டெடுக்க விழைகின்றன என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். 

அதற்கு இடையூராக இருக்கின்ற திமுக போன்ற தொலைநோக்கு சித்தாந்தங்கள் கொண்ட கட்சிகளை அப்புறப்படுத்திட வேண்டும் என்பதிலும் அதிக அக்கரையுடன் செயல்படுவதையும் நம்மால் உணர முடிகின்றது. கடந்த 5 ஆண்டுகளில் காங்கிரஸின் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஒரு முறை கூட திமுக தலைவர் கலைஞர் அவர்களை சென்னை வரும் போது நேரில் சந்தித்திடவில்லை என்பதையும், அக் கட்சிக்கு திமுக மேல் இருக்கின்ற வன்மத்தை, அதாவது தங்கள் எதேச்சாதிகார ஆட்சிக்கு வேட்டு வைத்த திமுக மீதிருக்கும் கோபத்தையும் நாம் இங்கே கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். 

இந்த விடயத்தில் காங்கிரஸும் பாஜகவும் ஒரே நேர்க்கோட்டில் தான் பயணிக்கின்றன. ஆகவே இரண்டு கட்சிகளுக்குமே திமுகவை அப்புறப்படுத்துவது என்பது தான் உவப்பான விடயமாகும். திமுக அப்புறப்படுத்தப்பட்டாலே, தேசிய அளவில் பல முக்கிய பிராந்தியக் கட்சிகளை ஒருங்கிணைப்பது என்பது சாத்தியமில்லாமல் போய், மீண்டும் தேசியக் கட்சிகளின் தனிப் பிடியில் இந்தியா வந்துவிடும் (மக்கள் சலித்துப் போய் மீண்டும் தேசியக் கட்சிகளிடம் சரணடைந்துவிடுவார்கள்) என்ற நப்பாசையில் தான் அவ்விரு தேசியக் கட்சிகளும் காய்களை நகர்த்துகின்றன. 

ஆனால் இவற்றையெல்லாம் மீறி தமிழக மக்களின் அமோக ஆதரவு திமுகவுக்கு இருக்குமேயானால், இந்திய அளவில் தமிழகத்தின் வளர்ச்சி என்பது தடையில்லாததாகவும், இன்னும் வேகமானதாகவும் அமையும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதனால் தான் திமுக பொருளாளர், திரு. ஸ்டாலின் அவர்கள், மத்திய அரசுக்கான தேர்தலாக இருந்தாலும், அதில் திமுக அங்கம் வகிக்கின்ற வகையில் இருந்தால் தான் தமிழகத்திற்கு பலன் என்கின்ற வகையில் கூடுதல் வெற்றிக்காக வியூகங்களை வகுத்து அதற்கேற்றாற் போல இங்கே பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றார். 

இங்கே திமுகவின் போட்டியாளரே அதிமுக தான் என்கின்ற போது, தன்னுடைய பாணங்களை பாஜக மற்றும் காங்கிரஸ் மீது வீசி விரயமாக்க அவர் விரும்பவில்லை. ஆனால் ஊடகங்கள் அதைத்தான் விரும்புகின்றன. ஸ்டாலின் பாணங்களை சந்தைக்காமலேயே ஜெயலலிதா வெல்ல வேண்டும் என்று அவை விரும்புகின்றன. ஆனால் தன்னுடைய இலக்கு எது என்பதை தெளிவாக புரிந்துகொண்டு அதைத் தெள்ளத் தெளிவாக தகர்த்தெறிந்து வந்து கொண்டிருக்கின்றார் தளபதி ஸ்டாலின் அவர்கள்.

இரண்டு தேசியக் கட்சிகளுக்கும் ஆதரவாகத்தான் அனைத்து ஊடகங்களும் செயல்படுகின்றன. அந்த ஊடகங்களின் பொய்ப்பரப்புரைகளுக்கு மயங்கி திமுகவின் மேல் சில இளைஞர்களும், நடுநிலையாளர்களும் வெற்றுப்பை மனதில் ஏற்றிக்கொண்டு, இப்பொழுது ஜெயலலிதாவை அரியணையில் ஏற்றியது போன்ற பெரும் தவறை மீண்டும் மீண்டும் செய்து, தமிழகத்தை படுகுழியில் தள்ளாமல், இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கின்ற கருத்துக்களை உள்வாங்கி தெளிவாகச் சிந்தித்தால், நிச்சயம் ஒவ்வொரு தமிழக வாக்காளரும் திமுகவுக்கு ஆதரவாகத்தான் வாக்களிக்கும் முடிவை எடுக்க வேண்டியிருக்கும். 

சிந்திப்பீர்....   செயல்படுவீர்....!!


 
 

4 comments:

paasi said...

vanguna kuulikku nalla kuuppadu.....

வேகநரி said...

ஜெயலலிதாவை மீண்டும் அரியணையில் ஏற்றுவது தமிழகத்தை படுகுழியில் தள்ளும் என்பதில் சந்தேகம கிடையாது.

Unknown said...

very nice

ராவணன் said...

திமுகவா ...?அது அண்ணாவுடன் செத்துப்போச்சு.
…முன்னாடி இருந்தது கருணாநிதி கட்சி.... இப்ப இருப்பது இசுடாலின் கட்சி....

…கருணாநிதியின் மகன் என்ற ஒற்றைத் தகுதி மட்டுமே உள்ளவர் இசுடாலின்.அந்தத் தகுதியினாலே இளவரசு பட்டம் கட்டி ஊர் சுற்றவிட்டால் தலைவர் ஆகமுடியுமா?

…துரைமுருகன் அவரைவிட தரமானவர்...தகுதியானவர்...

…வைகோவின் கால் செருப்பில் இருக்கும் தூசியின் அளவிற்குக்கூட இசுடாலின் தகுதி இல்லாதவர்.

…இசுடாலினைவிட குசுபு அம்மையார் எல்லா வகையிலும் மேலானவர்.