Monday, July 28, 2014

அழிந்துவரும் அரிசிஆலை

தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள் இணைந்த டெல்டா மாவட்டங்களில் விவசாயம் தவிர்த்த பிரதான தொழில் என்றால் அது அரிசி ஆலைகள் தான். இதை நம்பி பல்லாயிரக் கணக்கானோர் வேலை செய்து வந்த நிலையில்....


கடந்த மூன்றாண்டுகளாக இந்த ஆலைகள் ஒவ்வொன்றும் படிப்படியாக இழுத்து மூடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. காரணம், மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து பொய்துப் போயிருக்கும் குறுவை சாகுபடியும், மாநில அரசின் குறைவான நெல் கொள்முதலும் தான்.

இதைத் தவிர, குவிண்ட்டாலுக்கு 21 ரூபாய் மின் கட்டணம் ஆகின்ற நிலையில் அரசு தரும் கூலி வெறும் 20 ரூபாய் தான். அரவையில் எக்ஸ்ட்ராவாக கிடைக்கும் தவிட்டை விற்றுத்தான் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தனர். இந்நிலையில், இந்த வருடம் குறுவை முற்றிலும் முடங்கிப் போயுள்ளதாலும், மோடி கா சர்க்காரின் நெல் கொள்முதல் மானிய கட்டுப்பாட்டினை எதிர்க்காமல் ஜெயலலிதா பதுங்கியிருப்பதாலும், மன்னிக்கவும் பம்மிக் கொண்டிருப்பதாலும், அந்த விலையை மாநில அரசே விவசாயிகளுக்கு வழங்கும் என்ற எந்த உத்திரவாதத்தையும் ஜெயலலிதா வழங்காததாலும், இனி அரசின் நெல் கொள்முதல் என்பது கிட்டத்தட்ட கலைஞர் ஆட்சியில் இருந்ததில் 20 சதவிகித அளவிற்கே இருக்கும் என்பதாலும்.....

...இதற்கு மேல் நட்டத்தில் ஆலையை ஓட்ட முடியாத நிலையில் பெரும்பாலான அரிசி ஆலைகள் மூடப்பட்டுக்கொண்டிருக்கின்றன. பல்லாயிரக் கணக்கானோர் வேலை இழந்திருக்கின்றனர்....!!

ஒரு மோசமான ஆட்சி, திறனற்ற நிர்வாகம் என்பதற்கு இது போன்ற விடயங்கள் தான் சான்று!!!

முதல்வரின் வெற்று அறிக்கைகள், காகித திட்டங்கள், மலிவு விலை சமாச்சாரங்கள் எல்லாம் மிக மோசமான பஞ்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் தமிழகத்தை காப்பாற்றி விடாது. இதெல்லாமே கனவில் சாப்பிடும் பாயாசங்கள் தான்!!

Saturday, July 12, 2014

பதினோரு மாடி கட்டிட சரிவும்... அரசின் மீதான நம்பிக்கைச் சரிவும்..!!


தமிழக தலைநகர் சென்னையில் கட்டிட வேலை முற்றுப்பெறாத நிலையில் 11 மாடி கட்டிடம் அப்படியே பூமியில் புதையுண்டு இடிந்து விழுகிறது. கணக்குத் தெரிந்த வகையிலேயே அறுபதுக்கும் மேற்பட்ட ஏழை பாழைகள், பாட்டாளிகள், தினக்கூலிகள் என்று தங்கள் குடும்பத்தின் அடுத்த வேலை சாப்பாட்டிற்கு கூட உடல் உழைப்பை மட்டுமே நம்பியிருக்கும் மிகச் சாமான்யர்கள் உயிரிழந்திருக்கின்றார்கள்...

மன்னிக்கவும் உயிரோடு புதைக்கப்பட்டிருக்கின்றார்கள்....

இதில் இரண்டு தளங்கள் எங்கிருக்கின்றது என்றே தெரியாத நிலையில் இன்னும் எத்தனைப் பேர் மாண்டு போயிருப்பார்கள் என்பதும் புரியாத புதிராகவே இருக்கின்றது. மேலோட்டமான மீட்புப் பணியை நிறைவு செய்யவே பத்து நாட்களை இந்த மாநில அரசு விழுங்கியிருக்கின்றது.

நியாயமாகப் பார்த்தால் இந்த சம்பவம் நடந்தவுடனேயே அரசு அசுரகதியில் செயல்பட்டு இந்த பாதிப்பின் எல்லையை சற்று தொலைநோக்கில் கூர்மையான..., நடுநிலையான புத்திசாலித்தனத்துடன் உணர்ந்து கொண்டு இதை உடனே ஒரு தேசிய பேரிடர் அளவிற்கு அறிவித்து மத்திய அரசின் உதவி உட்பட பல தொண்டு நிறுவனங்களையும் மீட்புப்பணிக்கு இறக்கிவிட்டிருந்தால் இன்னும் முப்பது நாற்பது பாட்டாளிகளைக் கூட உயிரோடு காப்பாற்றியிருக்கலாம்.

ஆனால் மாநில அரசின் ஏதோ ஒரு தனித்துவமான...
யாரையும் அண்ட விடாமல் பார்த்துக்கொள்வது மாதிரியான...
அதாவது வேறு எந்த அமைப்பு அல்லது நிறுவனத்திற்கும்...
அதாவது அண்டை மாநில அரசுகள், மத்திய அரசுகளின் எந்திரங்கள் எதையும் பயன்படுத்தி உயிரிழப்புகளை குறைக்காததற்கான...
அதாவது ஏதோ ஒன்று மாநில அரசு நிர்வாகத்தை தவிர வேறு யாருக்கும் தெரியாமல் இருக்கும்படியான நடவடிக்கை தான் இங்கே பெரிய கேள்விக்குறியை ஏற்படுத்தியிருக்கின்றது!

அதுமட்டுமின்றி, இறந்து போனவர்களின் 16ஆம் நாள் காரியங்கள் கூட முடியாத சோகத்தில் அந்த குடும்பத்தினர் இருக்கின்ற நேரத்தில் அவசர அவசரமாக மீட்புப் பணியில் ஈடுபட்ட சம்பந்தப்பட்ட துறையின் பணியாளர்களுக்கு பாராட்டுவிழாவை அரசே...  முதல்வரின் ஆணையின் பேரில் நடத்துவது என்பது ஒரு ஆகச்சிறந்த முட்டாள்தனமான மனிதநேயமற்ற ஆட்சிக்கான சான்றாகவே பார்க்க முடிகிறது. ஒரு அரசு ஊழியர் செய்கின்ற வேலைக்கு ஊதியம் வழங்கப்படுகின்றது. கூடுதல் பணியென்றால் அதற்கான படிகளும் வழங்கப்படுகின்றது... அதற்கு மேல் அவர்களது ஊழியத்திற்கு பரிசும், பாராட்டும் அரசே தருவதென்பது மறைமுகமாக அங்கீகரிக்கப்பட்ட லஞ்சமாகவே தான் கருதப்பட வேண்டும்.

அதுவும் இது ஒரு பேரிழப்பு. இதற்கான மீட்புப் பணியில் ஈடுபட அரசு ஒரு அறிக்கை கொடுத்தால், சொந்தக் காசை செலவு செய்து அதில் செயல்பட பல்லாயிரக்கணக்கான தொண்டு நிறுவனங்களும், இளைஞர்களும், மாணவர்களும் தயாராகத்தான் இருக்கின்றார்கள்.

மேலும் உயிரிழப்பு ஒரு பக்கம் என்றால், ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி ஆகிய இருவருமே வேலைக்குச் சென்று வாயைக் கட்டி வயிற்றைக்கட்டி, அடிக்கடி குடி தூக்கிக் கொண்டிருக்கும் அவலத்தில் இருந்து விடுபடுவதற்காக சொந்தவீடு வாங்க வேண்டும் என்ற நிலையில்....  இந்த கட்டிடத்தில் வீடு வாங்குவதற்காக பணத்தைப் போட்டிருக்கும், இந்தியாவின் சபிக்கப்பட்ட அப்பாவிகளான நடுத்தர வர்க்கத்தினரில் ஒரு சில நூறு குடும்பம், இப்பொழுது தங்கள் பணத்திற்கான வழி என்ன என்று தத்தளித்துக் கொண்டிருப்பதையும் காண்கிறோம். இந்தக் கட்டிடம் மட்டுமல்லாது, அதற்கு அருகில் இருக்கின்ற கட்டிடங்களில் பணம் போட்டிருந்தவர்களுக்கும் இதே நிலை தான்!!!

இது ஒரு சாதாரண பிரச்சினை அன்று. கிட்டத்தட்ட ஐநூறில் இருந்து ஆயிரம் குடும்பங்கள் வரை உயிரிழப்பு, பொருள் இழப்பு, சேமிப்பு இழப்பு, அதன் காரணமாக மிச்ச சொச்ச வாழ்க்கையை ஓட்ட வேண்டியது பற்றிய கேள்விக்குறி....   இது எதனால் நடந்தது? இனிமேல் இது மாதிரி நடக்காமல் இருப்பதற்கான பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் என்னென்ன எடுக்க வேண்டும்? என்பது பற்றியெல்லாம், நீதி விசாரணை ஒரு பக்கம், சம்பந்தப்பட்ட துறை சார்ந்த உயர் அதிகாரிகளின் விசாரணை ஒரு பக்கம், இதைத் தவிர்த்து முக்கிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அடங்கிய ஒரு குழு அமைத்து அதன் மூலமான விசாரணை ஒரு பக்கம் என்று மும்முனை விசாரணைக்கு ஒரு அரசு உத்தரவிட்டு, மக்களின் எதிர்கால நிம்மதியான வாழ்விற்கும், பாதிக்கப்பட்டவர்களின் நிரந்தரமான நிவாரணத்திற்குமான வழி வகைகளை வெளிப்படையாக திறந்த மனத்துடன் செய்திருக்க வேண்டும்.

ஆனால் இப்பிரச்சினை பற்றி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு கூட அனுமதியளிக்காததும், அப்படி அனுமதிக்காததை மக்கள் மன்றத்தில் போட்டுடைக்க வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சிகளின் செயலை ஒரு மூத்த அமைச்சரே “ஓடுகாலிகள்” என்று கிண்டல் செய்வதும்....  இந்த அரசினை அதாவது ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசை ஒரு துக்ளக் தர்பாராகவே தான் பார்க்க வைக்கின்றது....!!!

இது நிச்சயமாக தமிழகத்தின் சோதனைக் காலம் தான்!!!

Friday, July 11, 2014

ப்ட்ஜெட்-2014 நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பும் நிலைப்பாடும்


கழுத்தை நெரிக்கும் கட்டு
நாட்டுல ஒழுங்கா வரி கட்டுறவன் இந்த நடுத்தர வர்கத்து அப்பாவிகள் தான்... இவிங்க எல்லாம் ஒன்னு கூடி..., ஒக்காந்து பேசி..., மோடி சர்க்கார் வந்துச்சின்னா, தனிநபர் வருமான வரி வரம்பை அஞ்சு லட்சமா மோடி உயர்த்திடுவாருன்னு நம்பி ஒட்டிக்கா... எல்லா நடுதர வர்க்கமும் தாமரைக்கு ஓட்டு போட்டிச்சி....

இப்ப நம்ம மோடி கா தோஸ்த்து ஜெட்லி வெறும் 50 ஆயிரத்தை மட்டும் உயர்த்தி, நடுத்தர வர்க்க அப்பாவிகளை...., நடுத்தெரு நாராயணர்களாக மாத்திட்டாரு......

என்னவோ போங்க.... எவன் வந்தாலும் பணக்காரனுக்கும், அடித்தட்டு மக்களுக்குமே செய்யறேங்கறான்.... நடுதர வர்க்கம் எப்பவுமே நடுத்தெரு வர்க்கமாவே தான் இருக்குது...!!! ((

Thursday, July 10, 2014

தொட்டால் தொடரும் டீஸர்... ஒரு சின்ன முன்குறிப்பு..!!

தோழர் கேபிள் சங்கரோட “தொட்டால் தொடரும்” படத்தின் அதிகாரப்பூர்வ டீஸர் இது!! கடந்த பத்து ஆண்டுகளா தொடர்ந்து இணையத்துல புழங்குகின்ற தமிழர்கள் யாருக்கும் நண்பர் கேபிள் சங்கரை தெரியாமல் இருக்க முடியாது! அவ்ளோ பிரபலம். பத்து ஆண்டுகளில் தமிழ் திரையுலகில் வந்த் கிட்டத்தட்ட அத்தனை படத்துக்குமே இவர் விமர்சனம் எழுதியிருக்கார். தமிழ்நாட்டுல இருக்குற அத்தனை நல்ல உணவங்களிலும் சாப்பிட்டு அவற்றைப் பற்றியும் எழுதியிருக்கார்.



எதாவது புது ஊருக்கு போனோம்ன்னா, உடனே இவருக்கு ஃபோன் பண்ணி, கேபிள் இந்த ஊர்ல எந்த கடைல சாப்பிடலாம்ன்னு கேட்டுத்தான் நம்ம ஆளுங்க பல பேரு சாப்பிடுவாங்க. இது எதுவும் ஹைப் இல்ல. உண்மையான விஷயம். அதே மாதிரி இந்த வீக் எண்ட் குடும்பத்தோட சினிமா போறதுன்னாலும், கேபிள் விமர்சனம் வந்தோடன போறது தான் புத்திசாலித்தனம், தெரியாம போயி படம் நல்லா இல்லன்னா, காசுக்குத் தான் தெண்டம்ன்னு வீட்டம்மணிகள் எல்லாம் சொல்றது இணைய தளத்தில் புழங்குகின்ற லட்சக்கணக்கான நண்பர்களுக்கு ஒரு இயல்பான விடயம்!



சினிமாவின் இன்றைய தேதிக்கான நுண்ணிய தொழில் நுட்பம் முதல், சினிமா வியாபாரம் வரை அத்தனையுமே...   கரைத்துக் குடித்துவிடவில்லை....   மனுஷன் ரத்தத்திலேயே ஊசி போட்டு ஏற்றி வைத்து விட்டார்!! அது பத்தியெல்லாம் எக்கச்சக்கமா புத்தகம் எல்லாம் எழுதி.... அதெல்லாமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிச்சிருக்கு...



இப்போ... இங்கே தான் இயக்கிய முதல் படத்தை...  அதன் விளம்பரத்தை பரிமாறியிருக்கின்றார். கடந்த ஓராண்டாக இவர் படத்தை ஆரம்பித்ததில் இருந்தே நம் தோழர்கள் அனைவருக்குமே ஒரு பதைபதைப்பு இருந்து கொண்டே இருந்தது.  படம் நல்லாயிருக்கணுமே, நல்லா ஓடனுமேன்னு...



பதினைந்து நாள் முன்னாடி ஒரே ஒரு பாட்டு மட்டும் காமிச்சார்...  கொஞ்சம் நிம்மதி வந்தது.....  இதோ பத்து நிமிடம் முன்பு இந்த டீசர் பார்த்தவுடன், காலரை தூக்கி விட்டுக்கொண்டு இந்த டைரக்டர், என் ஃபிரண்டு தெரியுமான்னு பார்க்குறவங்க எல்லாருட்டையும், அலப்பறை பண்ண தயாராகிட்டேன். டீஸரே சீட்டு நுனியில் உக்கார வச்சிடிச்சி!! கண்டிப்பா படம் ஹிட் அடிக்கும்....!



வாழ்த்துக்கள் கேபிள்...!





Thursday, July 3, 2014

அம்மா ஆட்சியும்...மக்கள் காணும் காட்சியும்..!!!

ஆட்சிக்கு வந்து மூனு வருஷம் முடிந்தது.... இப்ப மூனு மணி நேரமா கரண்ட்டு இல்ல. அடிக்கிற வெய்யில்ல உடம்புல அத்தன பார்ட்டும் வெந்து கருகுது.... மிஷின் எல்லாம் ஓட்டாம நிக்குது, பச்சப் புள்ளைங்க எல்லாம் அழுகுது.....

இதுல பேச்சப்பாரு??? மின் மிகை மாநிலம் ஆக்குவோம், மின் மிகை மாநிலம் ஆக்குவோம்ன்னு...!!!

உபயோகமற்று இருக்கும் எழில்மிகு பூங்கா
கேக்குறவன் கேணையனா இருந்தா நீங்க எத வேணாலும் சொல்லுவீங்களா? மூனு வருஷத்துல முப்பது நாற்பது தடவ மந்திரிய எல்லாம் மாத்துனீங்க, நூற்றுக்கணக்கான தடவை அதிகாரிங்கள மாத்துனீங்க, மொதோ ஒரு வருஷத்துக்கு திமுக காரங்க மேல கேஸு போடுறதுலயே உங்க கவனம் எல்லாம் கழிஞ்சிது, மிச்ச நாள் எல்லாம் உங்க பெங்களூரு கேஸுல எப்படி எப்படியெல்லாம் சொல்லி வாய்தா வாங்குறதுங்கறதுலயே ஓடுச்சி, நடுவால மூனு மாசத்துக்கு

ஒருவாட்டி மாசக்கணக்குல கொடநாட்டுல போயி தங்கிக்கிறது, இதுக்கு மத்தியில கலைஞர் செஞ்சி வச்ச திருவள்ளுவர் சிலை தொடங்கி, சமச்சீர் கல்வி, புதிய தலைமைச் செயலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், செம்மொழிப்பூங்கா, தொல்காப்பியப் பூங்கான்னு இப்புடி எல்லாத்தையும் முடக்கிப் போடுறதுக்கு திட்டம் போடுறதுலயே கொஞ்ச காலம் ஓடிடிச்சி, இதெல்லாம் பத்தாதுன்னு, எந்தெந்த நடிகருங்கள புடிக்கலையோ அவங்க படத்தையெல்லாம் நிப்பாட்ட கேஸு மேல கேஸா போடுறது.......

எந்தவொரு மந்திரிக்கும், அதிகாரிக்கும் பவரே கொடுக்காம எல்லாத்தையும் இவங்களே செய்யனும்ன்னு வச்சிட்டிருந்தா??????

எப்படிய்யா மக்கள் பிரச்சினை எல்லாம் சால்வ் ஆகும்?! கொஞ்சம் சிந்திச்சிப் பாருங்க மக்கா, மேல சொன்ன எல்லாம் கடந்த மூனு வருஷத்துல நடந்திச்சா இல்லியா? இதெல்லாம் மட்டும் செஞ்சிட்டிருந்தா எப்படி நிர்வாகத்தை ஒழுங்கா கவனிக்க முடியும்?!

இப்ப மக்கள் எல்லாம் வெந்து சாகறாங்க!! மந்திரிங்க எல்லாம் கூழக் கும்பிடு போட்டுக்கிட்டும், எப்ப பதவி காலியாகுமோன்னும் பயந்துக்கிட்டிருந்தா எந்த அதிகாரியாவது மதிப்பானா? அவன்கிட்ட வேலை தான் வாங்க முடியுமா?!

எதோ இந்த ஆரிய பத்திரிக்கையெல்லம சொன்னத நம்பி, இருக்குறத விட பெருசா எதோ கிடைக்கப்போகுதுன்னு எதிர்பார்த்து, உன்னைய கொண்டு வந்து உக்கார வச்சதுக்கு இதுவும் வேணும்! இன்னமும் வேணும்!!!

என்ன வேனா சொல்லுங்க....நல்லா யோசிங்க......


வரப்போகும்....

 ஆட்சியை... தன்னிகரில்லா ஆட்சியாக்குவோம்...!!!

Wednesday, July 2, 2014

மலிவு விலையில்....தமிழகம்

ஒரு அரசு என்பது என்ன? 
ஆட்சி என்பது என்ன??
ஆட்சியாளர் என்பவரின் கடமைகள் என்ன???

ஒரு ஆட்சியாளர் அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தைக் கொண்டு ஒரு அரசவையைக் கட்டியமைத்து ஆட்சி செய்வதன் பிரதான கடமைகள்....

முதலில் அந்த அரசாங்கத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் குடிமக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பாதுகாப்பு என்றால் உடனே, எதிரிகள் ஏதோ கத்தியை எடுத்துக் குத்துவதும், அதை இந்த ஆட்சியாளர் பறந்து பறந்து சென்று ஃபைட் பண்ணி காப்பதும் என்பது கிடையாது....

மாறாக, குடிமக்களின் பணம், பொருள் உட்பட அவர்களது அடிப்படை தேவைகளான நல்ல குடிநீர், தரமான உணவு, தங்குவதற்கு அனைத்து காலநிலையையும் சமாளிக்கக் கூடிய வீடு, இவை அனைத்தையும் அந்த குடிமகன் தானே உருவாக்கிக் கொள்ளக் கூடிய வகையில் 


##   அவனுக்கான நியாயமான ஊதியத்தில் வேலை வாய்ப்பு, 
##   அதற்கு ஆதாரமான கல்வி, 
##   போக்குவரத்திற்கு தேவையான சாலை வசதிகள், 
##   அனைத்து பகுதிகளுக்கும் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள், 
##   விவசாயத்திற்கு தேவையான நீர் ஆதாரங்களை உருவாக்குவது, 
##   இருப்பதைப் பேணிப் பாதுகாப்பது, 
##   அதிக வேலை வாய்ப்பளிக்கும் தொழிற்சாலைகளைக் கொண்டுவர பாடுபடுவது, 
##   அவைகளுக்குத் தேவையான மின்சாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும்                                உருவாக்கித் தருவது, 
##   சிறு, குறு தொழிற்சாலைகள் உருவாக்குவதற்கு மக்களை ஊக்கப்படுத்தி 
##   அதன் மூலம் உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்கி... 
##   லட்சக்கணக்கான புதிய வேலை வாய்ப்புக்களையும் ஏற்படுத்த வழி வகுப்பது...., 
##   குடிமக்களுக்கான சுகாதார சீர்கேடு மற்றும் நோய்களுக்கு எதிரான போராட்டத்திற்கு                     அரசே முழு ஒத்துழைப்பு நல்கி தரமான மருத்துவ 
                    சேவையை  உறுதிப்படுத்துவது.....
இப்படியாக ஒரு அரசின் கடமைகள் நீண்டு கொண்டிருக்க....

நம் தமிழகத்தில் ஒரு ஆட்சியாளர் இதையெல்லாம் விடுத்து, ஜனதா டைப்பில் மலிவு விலை.... உணவகங்கள், குடி தண்ணீர், உப்பு, மருந்தகம்... லொட்டு லொசுக்குன்னு.....தொடர்ந்து மூளையைக் கசக்கி, இதே வழியில் சென்று ஒரு சிறு, குறு தொழிற்சாலையாகவே இந்த தமிழக அரசு இயந்திரத்தை மாற்றிவிடும் முடிவோடு செயல்பட்டுக்கொண்டிருக்கின்றது. 

தமிழகம் இதுவரையிலும் கண்டிராத அளவிற்கான ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு இலவசங்களை வாரி இறைத்ததன் காரணமாக மின் உற்பத்தி உள்ளிட்ட வேறு எந்த உட்கட்டமைப்பு மற்றும் தொலை நோக்குத் திட்டங்களுக்கும் பணம் இல்லாத நிலையில் அதையெல்லாம் மக்களிடமிருந்து மறைப்பதற்காக இன்னும் 20 மாதங்களுக்கு தாக்குப் பிடித்து ஓட்டினால் அடுத்த தேர்தலிலும் வெற்றிடலாம் என்ற எண்ணத்தில்....

இந்த மாதிரியான மலிவு விலை சமாச்சாரங்களை விற்பனை செய்யும் நிலைக்கு தமிழக அரசினை கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. போற போக்கைப் பார்த்தால், இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளுக்குப் பதிலாக எம் பி ஏ மாணவர்களை அரசுப் பணிக்கு அமர்த்தி தமிழக அரசை வியாபார ஸ்தாபனமாக மாற்றி ஒட்டுமொத்த தமிழக தமிழர்களின் எதிர்காலத்திற்குப் பக்கத்தில் மிகப் பெரிய கேள்விக் குறியையும், அபாயக் குறியையும் அவர் வரைந்து கொண்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. 

தமிழகத்தின் படித்த இளைஞர்களும், உண்மையான நடுநிலையாளர்களும், சுற்றி வளைத்து அரசின் இந்த மாதிரியான செயல்பாடுகளை ஊக்கப்படுத்திக் கொண்டிராமல், தொலைநோக்கில் இதன் பாதகங்களை உணர்ந்து அரசின் இந்த மாதிரியான செயல்பாடுகளுக்கு எதிராக களம் காண வேண்டும். 

இந்த ஆட்சியில் இதுவரையிலும் எந்த தொலைநோக்குத் திட்டங்களும், தொழிற்சாலைகளும், மின் உற்பத்தி திட்டங்களும், உட்கட்டமைப்பு வசதிகளுக்கான ஒப்பந்தங்களும் போடப்படவில்லை என்பதையும் பொது மக்கள் உணர்ந்து... இப்படியான செயலற்ற அரசின் தன்மையானது அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தை பொட்டல் காடாக மாற்றி, நம்மவர்களை வேலை வாய்ப்பிற்காக வெளி மாநிலங்களுக்கும், வெளி நாட்டிற்கும் கூலி வேலை செய்ய மீண்டும் துரத்துகின்ற சூழ்நிலை உருவாகிவிடும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். 

ஆகவே மக்களே....

சிந்திப்பீர்... செயல்படுவீர்....

இனி... தமிழகத்திற்கு... வரப்போகும் ஆட்சி....

 தன்னிகரில்லா ஆட்சியாக....அமைய செயல்படுவோம்...!!!

Tuesday, July 1, 2014

விஷன் 2016....!!! எப்படி...??

இதோ மோடி ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் கடந்து விட்டிருக்கின்றது. அதற்குள் மோடியை இதற்கு முன்பு ஆதரித்தவர்கள் வாயடைத்துப் போயும், மோடி எதிர்ப்பாளர்கள் மிகக் கடுமையான விமர்சனத்தை மோடி ஆட்சிக்கு எதிராக வைக்கின்ற அளவிற்கும், ஏதோ சிலவற்றை மோடி செய்திருக்கின்றார்...

அதாவது, நல்லதோ கெட்டதோ... ஏதோ ஒரு வகையில் அல்லது திட்டத்தில் மோடி செயல்பட ஆரம்பித்திருக்கின்றார். அவரது செயல்பாடுகள் என்ன மாதிரியான பின் விளைவுகளை ஏற்படுத்தப்போகின்றது என்பது இன்னும் ஆறு மாதம் அல்லது ஒரு வருடம் அல்லது இரண்டு வருடத்தில் தெரிந்துவிட்டிருக்கும்.

இதெல்லாம் போகட்டும்...

இங்கே நம்ம தமிழகத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக ஒரு ஆட்சி அமைந்ததே... அது இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கின்றது???? இது நல்ல ஆட்சியா? அல்லது கெட்ட ஆட்சியா? என்றே யாரும் சொல்ல முடியாத நிலையில் தான் இருக்கின்றது!!! இதற்கான விடை தேடித்தான் இந்தப் பதிவின் பயணம் தொடர்கிறது......

ஆட்சிக்கு வந்தவுடனேயே தன் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்திலும் விலை உயர்வைக் கொண்டு வந்து, கசப்பு மருந்து தருகிறேன் என்று தான் ஆரம்பித்தார்கள்.... “விஷன் 2023” என்று ஒரு மோஷன் கிராஃபிக்ஸ் ஃபிலிம் காட்டினார்கள். அதுக்கு அர்த்தம் என்னன்னா? இந்த ஃபிலிம்ல நாங்க காட்டுற ரீல் எல்லாம் ரியல் ஆகனும்ன்னா 2016லயும் தங்களுக்கு வாக்களித்தால் தான் சாத்தியமாகும்ன்னு அர்த்தம்....!!!

  • ஆனால் இந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில் சொல்லிக்கொள்கின்ற மாதிரியாக ஏதாவது ஒரு தொலை நோக்குத் திட்டமாவது துவங்கப்பட்டிருக்கின்றதா??
  • எத்தனை புதிய மின் உற்பத்தி திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கின்றது??
  • 50 சதவிகிதம் உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணங்களைக் கொண்டு, பழைய திமுக ஆட்சியை விட எத்தனை பேருந்துகளின் தரம் உயர்த்தப்பட்டிருக்கின்றது??? அல்லது முன்பிருந்த போக்குவரத்துக்கழகத்தின் கடன்கள் அடைந்து விட்டிருக்கின்றதா? அல்லது கடன் இன்னும் கூடியிருக்கின்றதா????
  • ஆட்சிக்கு வந்தவுடனேயே உயர்த்தப்பட்ட வாட் வரியினால் வருடத்திற்கு 5200 கோடி ரூபாய் வருவாய் உயர்ந்துள்ள நிலையில், அதைக் கொண்டு அதற்கு முன்பு திமுக ஆட்சியில் பெரிய கடன் சுமை இருப்பதாக கூத்தடித்தீர்களே... அந்தக் கடன்களில் இதுவரை எவ்வளவு அடைத்து வட்டியை மிச்சப்படுத்தியிருக்கின்றீர்களா???
  • இந்த மூன்று ஆண்டுகளில் ஒரே ஒரு பெரிய தொழிற்சாலையையாவது தமிழகத்திற்கு கொண்டு வந்து ஒரு ஆயிரம் இளைஞர்களுக்காவது புதிய வேலை வாய்ப்பை உருவாக்கித் தந்திருக்கின்றீர்களா?
  • முல்லைப் பெரியாறு பிரச்சினை தீர்க்கப்பட்டு பழைய ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட விவசாயிகள் பலனடைந்து கொண்டிருக்கின்றார்களா????
  • காவிரியில் மூன்று வருடமாக தொடர்ந்து உங்களால் ஜூன் 12இல் தண்ணீர் திறந்து விட முடிந்ததா???
  • காவிரி டெல்ட்டாவில்.... விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி, மானியங்கள், குறுகிய கால பயிர்க்கடன், 24 மணி நேர மும்முனை மின்சாரம் போன்றவை வழங்கி கடந்த ஆட்சியை விட விளைச்சலை அதிகப்படுத்தியிருக்கின்றீர்களா? அல்லது கடந்த திமுக ஆட்சியில் இருந்ததை விட விளைச்சல் படுபாதாளத்திற்கு சென்றிருக்கின்றதா?????
  • தாங்கள் ஆட்சிக்கு வர காரணமாக இருந்த மின்வெட்டை இந்த மூன்றாண்டுகளுக்குள் முடிவுக்கு கொண்டு வந்து விட்டீர்களா???? 100 சதவிகிதம் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தைக் கொண்டு மின்சார வாரியத்தின் கடன் அடைக்கப்பட்டிருக்கின்றது??? அல்லது அது இன்னும் அதிகரித்திருக்கின்றதா???
  • தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் கைது செய்வது நின்று போயிருக்கின்றதாஆஆஆ????
  • இலங்கையில் தமிழர்களுக்கு தனி ஈழம் கிடைத்து விட்டதா? அதற்காக தாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்னென்ன? அல்லது குறைந்த பட்சம், அங்குள்ள முள்வேலி முகாம தமிழர்களின் வாழ்க்கையிலாவது ஒரு நிம்மதி ஒளியை ஏற்றி வைத்திருக்கின்றீர்களா???
  • தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கடந்த திமுக ஆட்சியை விட சிறப்பாக இருக்கின்றதா? அதை மக்கள் ஒத்துக்கொள்வார்களா?
  • எத்தனை புதிய அரசு அலுவலக கட்டிடங்கள், புதிய பாலங்கள், புதிய சாலைத் திட்டங்களைப் போட்டு நிறைவேற்றியிருக்கின்றீர்கள்?
  • அரசு அலுவலகங்களில் நிர்வாகம் கடந்த ஆட்சியை விட மேம்பட்டதாகவும், வேகமானதாகவும் செயல்படுகின்றதா??
  • மூன்று ஆண்டுகளில் காவிரியும் அதன் கிளை ஆறுகளும் எத்தனை முறை தூர் வாரப்பட்டிருக்கின்றன?
  • கடந்த மூன்று ஆண்டுகளில் பெருவாரியான இலவசங்கள் அளித்தது தவிர்த்து வேறு என்னென்ன தொலை நோக்குத் திட்டங்களை செயல்படுத்த துவங்கியிருக்கின்றீர்கள்???
  • இப்படி எந்த தொலைநோக்குத்திட்டமுமே இல்லாமல் இருந்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சி 15 ஆண்டுகள் பின் தங்கி விடாதா?????
  • அதைத்தான் இந்த ஆட்சியாளரான ஜெயலலிதா விரும்புகிறாரா??? 

இப்படி எந்த தொலை நோக்குத்திட்டங்களும், தொழிற்சாலைகளும், வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய வேலைவாய்ப்புக்களும் உருவாக்காமல், வேலையில்லா திண்டாட்டத்தை உருவாக்கி அல்லது அதிகப்படுத்தி, மக்களை இலவசங்கள் கொடுத்து மூளையை மழுங்கடித்து, மலிவுவிலை சாமான்கள் விற்பனை என்ற தொழில் முனைவோர் செய்ய வேண்டியதை ஒரு அரசாங்கமே செய்து கொண்டு... அதை ஒரு சாதனையாகவும் கூறிக்கொண்டு..., ஊடகங்களின் பலத்தால் அதை சில பல அப்பாவி மக்களும் நம்புகின்ற சூழ்நிலையை உருவாக்கி......
  • இப்படியே சென்று கொண்டிருந்தால், தமிழகத்தின் அடுத்த தலைமுறையே..., சொந்தமாக உழைத்து சுயமாக வாழ இயலாமல் அல்லது முடியாமல் அரசாங்கத்திடம் அனைத்திற்குமே கையேந்தி நிற்கும் அவலம் ஏற்பட்டு விடாதா????
இதைத் தான் இந்த ஆட்சியாளராகிய ஜெயலலிதா விரும்புகின்றார் என்பது தெள்ளத்தெளிவாக தெரிந்து விட்ட நிலையில்....

இனி தமிழகத்தின் நடுத்தர வர்க்கத்தினர் தான் விழித்துக்கொள்ள வேண்டும். இதற்கு மேலும் அரசாங்கத்தின் இது போன்ற இலவச போதைக்கும், மலிவு விலை சமாச்சாரங்களுக்கும் மயங்கி நின்று தன்னுடைய சந்ததியினரை படுகுழியில் தள்ளி விடாமல்.......

இன்றைக்கு தாம் படித்த படிப்பிற்கும், பார்க்கின்ற வேலைகளுக்கும், எம் ஜி ஆர் ஆட்சிக்காலத்திற்குப் பிறகு தமிழகத்தில் நடைபெற்ற திமுகவின் ஆட்சிக்காலங்களே காரணம் என்பதை திறந்த மனதுடன் யோசித்து உணர்ந்து கொண்டு இந்த ஆட்சியைப் புறம் தள்ளி, மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சியானது தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் உருவாகிட வாய்ப்பளிக்க வேண்டும்...!!