Saturday, September 6, 2014

விஜய் டீவி ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பற்றி... தேவராகம்

விஜய் டீவி ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பற்றி... அதில் நடக்கின்ற பாரபட்சங்கள் பற்றிய ஆயிரம் விமர்சனங்கள் எனக்கு இருந்தாலும், அவ்வப்பொழுது அதில் கிடைக்கின்ற அற்புதமான இசை விருந்துக்காக அதை தொடர்ந்து பார்ப்பதுண்டு....
அந்த நிகழ்ச்சி பற்றிய ஆயிரம் குறைகளில் இசையமைப்பாளர் தேவா அவர்களுக்கு உரிய அங்கீகாரமோ, அவரது பாடல்களை வெகுவாக புறக்கணிப்பது போலவோ எனக்கு பெரிய வருத்தம் இருக்கும். நேற்று அந்த குறையை நிவர்த்தி செய்து விட்டிருக்கின்றார்கள்.


தேவராகம் என்ற தலைப்பிலேயே தேவா அவர்களை வரவழைத்து அவர் முன்னாலேயே அவரது அற்புதமான சில பாடல்களை போட்டியாளர்கள் பாடும் நிகழ்வு அது. மனிதன் ரொம்ப யதார்த்தவாதியாகவும், நான் தான் பிரம்மா, நான் தான் கடவுள், நான் தான் புனிதவான்... லொட்டு லொசுக்குன்னெல்லாம் எந்த பந்தாவும் இல்லாமல் ரொம்ப எளிமையா, எல்லோருக்கும் சமமானவராய் அந்த இடத்தில் அவர் செயல்பட்டது, அவரது பாடல்கள் மேலான மரியாதையை இன்னும் கூட்டியது.
அவரது பாடல்களில் சில மிகுந்த நுணுக்கமானதாகவும், ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களைப் போன்று பாடகர்களுக்கு சவால் விடக் கூடியதாகவும் ஆச்சர்யப்படுத்தும். அந்த வகைப் பாடல்களில் கடோற்கஜா பாடல் எத்தனை முறை கேட்டாலும் என்னை ஆயாசப்பட வைத்திருக்கின்றது. அதை ஒரு சின்னப் பெண் திக்கித் திணறி... தட்டுத்தடுமாறி பாடி முடித்தது...
இன்னொரு குட்டிப்பெண், நேருக்கு நேர் பட ஆஷா போன்ஸ்லே பாடலை அட்டகாசமாக பாடி முடித்த போது அரங்கமே ஆர்ப்பரித்தது. வார்த்தைக்கு வார்த்தை எத்தனை சங்கதிகள், எத்தனையெத்தனை பிருகாக்களை அநாயாசமாக புகுத்தி பிரம்மிக்க வைத்திருக்கிறார் மனுஷன்?!
நேருக்கு நேர் படப் பாடல்கள் எல்லாம் அப்போ வெகு பிரபலம். இளையராஜாவை ஏ.ஆர்.ஆர் தான் ரீப்ளேஸ் செய்தார் என்று இன்றைய இளைஞர்கள்
எண்ணிக்கொண்டிருக்கின்றார்கள். அது ஓரளவிற்கு உண்மை எனினும், அதற்கான அஸ்திவாரத்தைப் போட்டுக்கொடுத்தது தேவா தான். என்பதுகளின் கடைசியில் வந்த..., இளையராஜா பெரிய அளவில் ஸ்கோர் செய்த ராமராஜனின் படங்களுக்கே தேவா உள்ளே நுழைந்து அதே இசை விருந்தை மக்களுக்கு படைக்க ஆரம்பித்து விட்டார்....
அதன்பிறகு அன்றைய உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமல் படங்களுக்கே கூட ஒரு கட்டத்தில் ஆஸ்தான இசையமைப்பாளராக தேவா மாறிப்போனார். ஏ.ஆர்.ஆர் உச்சம் தொட்ட நிலையில் கூட கமலின் அவ்வை ஷண்முகியில் அவர் போட்ட மெலடியை ரஹ்மான மிகவும் ரசித்ததாகச் சொல்லியிருக்கின்றார்.
நம் தமிழர்களிடம்... குறிப்பாக இன்றைய இளைய சமுதாயத்திடம் தான் என்று எண்ணுகிறேன்... யாரையாவது எதற்காவது பிடித்து விட்டால், மற்றவர்களை உதாசீணப்படுத்துவதும், புறக்கணிப்பதும், அவமதிப்பதுமான செயகளிலேயே ஈடுபடுவது எனக்கு விநோதமான பழக்கமாக தெரிகிறது. இளையராஜாவை பிடித்திருந்தால், தேவாவை காப்பி பேஸ்ட் என்று கிண்டல் செய்வது, ரஹ்மானை கேவலமாக பேசுவது என்று தங்களுக்குத் தாங்களே ஒரு சிறைக்குள் அமர்ந்துகொள்கின்றார்கள்.
ஒரு நல்ல இசை ரசிகன், கலை ரசிகன் என்பவன், நிச்சயமாக நல் இசை எங்கிருந்தாலும் அதைத் தேடிப்போய் ஆராதிப்பான், தன் சந்தோஷத்தைப் பெருக்கிக் கொள்வான். நமக்கு காரியம் தான் முக்கியம்... அதாவது நல் இசை தான் முக்கியம். அதற்காக காரணத்தை அதாவது... இசையமைப்பாளர்களை பிடித்துக்கொண்டு மற்ற இசையமைப்பாளர்களின் நல் இசையை எல்லாம் புறக்கணிப்பதால் நட்டம் நமக்குத் தான்.
தமிழகத்தைச் சார்ந்த தமிழ் இசையமைப்பாளர் எவரிடமிருந்து எந்தவொரு நல்ல பாடல் நமக்குக் கிடைத்தாலும் நாம் அதை உலக அளவிற்கு கொண்டு செல்ல வேண்டும். இசையமைப்பாளர்களுக்குள் நல்ல போட்டியை ரசிகர்களான நாம் தான் ஏற்படுத்த வேண்டும். அந்தப் போட்டியின் வெளிப்பாடு நிச்சயமாக மேலும் மேலும் சிறந்த இசையாகத்தான் இருக்கும்.
நமக்கென்று ஒரு கூட்டம், அவர்கள் நாம் எதைக் கொடுத்தாலும் புகழ்வார்கள் என்றால் அவர்களிடம் புதுப்புது இசைக் கோர்வைகளை நாம் எதிர்பார்க்க முடியாது. ஆகவே நம் தமிழ் இசைப் பிரியர்கள் இனி இசையமைப்பாளர்களை பிடித்துக் கொண்டிராமல், இசையை மட்டும் பிடித்துக்கொள்வோம். அவர்களிடம் நல்ல போட்டியை உருவாக்கி இன்னும் பல நல்ல பாடல்களை உலகத்திற்கு நம் தமிழகத்தின் பரிசாக வழங்குவோம்...!