Tuesday, November 24, 2015

பள்ளிக்கூடங்கள் உண்மையிலேயே பலன் தருகின்றனவா?! #1


டீவின்னா ஒன்லி சினிமா நிகழ்ச்சிகள் அல்லது போகோ, கார்ட்டூன் மட்டுமே என்று அட்ராசிடி பண்ணி மற்றவர்களை ஓரம் கட்டிவிட்டு பார்க்கும் பள்ளிக் குழந்தைகள்...

கடந்த 15 நாட்களாக செய்தி சேனல்களையும், குறிப்பாக ரமணன் அறிவிப்புகளையும் மட்டும் கண்கொத்திப் பாம்பாக பார்த்துகொண்டிருப்பது பற்றி பல்வேறு மீம்ஸ் மற்றும் உற்சாக பதிவுகள் இணையம் முழுக்க சுற்றி வருகிறது.

இதை வெறுமனே சிரித்துக் கடந்துவிடும் விஷயமாக என்னால் எடுத்துக்கொள்ள முடியவில்லை. இன்றைக்கு உள்ள குழந்தைகள் மட்டுமல்ல, நான் பள்ளியில் படிக்கின்ற காலத்திலேயே கூட, இந்த மழைக்காலங்களில் தெருவில் ரேடியோ இருகின்ற ஒரே ஒரு வீட்டில் தெருப் பிள்ளைகள் எல்லாம் குவிந்திருப்போம். தஞ்சை மாவட்டத்திற்கு விடுமுறை என்று சொன்னால் தான் குஷியோடு சத்தம் போட்டு மழையில் நனைந்தவாறே கிளம்புவோம்....!

இதே கல்வி பாடத்திட்டம் தொடர்ந்தால்... இப்பொழுது உள்ளதற்கு அடுத்த தலைமுறை கூட இப்படித்தான் மழைக்கால விடுமுறை குறித்த அறிவிப்புக்களுக்கு துள்ளிக் குதிப்பார்கள் என்றே தோன்றுகிறது.

நம் நாட்டில் குறிப்பாக தமிழகத்தில் பிறந்த குழந்தை ஒன்று மூன்று வருடத்தில் எல் கே ஜியில் தன் பயணத்தைத் துவங்கினால், ஒரு இளநிலை பட்டப்படிப்பை முடிக்க வேண்டுமானாலே 17 வருடங்கள் தொடர்ந்து தோல்வியுறாத வெற்றியுடன் படிக்க வேண்டும். அதாவது பிறந்தில் இருந்து மிகக் குறைந்த பட்சமாக இருபது வருடங்கள் தனது அற்புதமான குழந்தைப் பருவம் உள்ளிட்ட ஆரம்ப இளமைக்காலங்களை இந்த கொடூரமான கட்டுப்பாட்டிலேயே கழிக்க வேண்டியதிருக்கிறது.
அந்த 20 அல்லது 23 வருடத்திற்குப் பிறகான தனது மீதம்முள்ள வாழ்க்கையை நிம்மதியாக வாழ்வதற்கே இந்த தண்டனை என்று அந்தக் குழந்தையின் பெற்றோர்கள் மிகப் பலமாக நம்புவதாலேயே அல்லது நம்பவைக்கப்பட்டிருப்பதாலேயே தான் இந்தியக் குழந்தைகள் ஒவ்வொன்றுக்கும் இந்தக் கொடுமை அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

இன்றைய சூழ்நிலையில் ஒரு குழந்தை எல் கே ஜி படித்தாலும், டிகிரி மூன்றாமாண்டு படித்தாலும்... அதையும் அரசு, நகராட்சி, மாநகராட்சி அல்லது அரசு உதவி பெறும் பள்ளி கல்லூரிகளில் படித்தாலுமே ஒரு மாணவருக்கான சீறுடை, புத்தகம், நோட்டு, பேனா, பென்சில், ஸ்கெட்ச் பேனா, கலர் பென்சில், ஜியாமெட்ரி பாக்ஸ், சார்ட் வகைகள், பள்ளி அல்லது கல்வி சார்ந்த இன்ன பிற செலவினங்கள், பள்ளிக்கான போக்குவரத்து செலவுகள் உள்ளிட்டவைகளை கூட்டினாலே ஒரு வருடத்திற்கு சராசரியாக ரூபாய் 20 ஆயிரம் வரை செலவாகும். அதாவது 17 வருடங்களுக்கு மிகக் குறைந்தபட்சமாக இந்த அரசுப் பள்ளி அல்லது கல்லூரிகளில் பயிலும் மாணவர் 3 லட்சத்தி 40 ஆயிரம் ரூபாய்களையாவது கண்டிப்பாக செலவு செய்தே தீர வேண்டும். இதுவே தனியார் பள்ளி கல்லூரி என்றால் அந்த மாணவர் இன்னும் கூடுதலாக 5லிருந்து 20 லட்சம் வரையிலும் கூட செலவு செய்வதை தவிர்க்க முடியாது.

இதெல்லாமே நான் சொல்வது பிஏ, பிஎஸ்ஸி, பிகாம் போன்ற படிப்புக்கள் வரை படிப்பதற்கு மட்டுமே..! ஆனாலும் தன் சராசரி வாழ்வில் மூன்றில் ஒரு பங்கினை விரயம் செய்தும், பெரும் பணத்தை கொட்டி அழுதும், கடும் சிறைவாசம் போன்ற வாழ்வு நிலையை அனுபவித்தும் வெளியேறும் பொழுது அவர்கள் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து அல்லது ஏதோ ஒரு விருப்பமுள்ள தொழிலைச் செய்து தன் மீதமுள்ள வாழ்க்கையை வேறு யாருடைய பொருளாதார உதவியுமின்றி சுயசார்புள்ளவராக நடத்திட தகுதியுள்ளவராய் இருக்கின்றாரா? என்றால் நிச்சயமாக இல்லை என்பது தான் பதில்...!

பிகாம் படித்து சான்றிதழை பெற்ற மாணவர் அடுத்த நாள் ஒரு நிறுவனத்தில் சேர்ந்து அக்கவுண்ட்ஸ் வேலையை உடனடியாக தன் பொறுப்பாக செய்யக் கூடிய நிலையில் இருக்கின்றாரா? கெமிஸ்ட்ரி படித்தவர் அடுத்த நாள் ஒரு ஆய்வுக் கூடத்தில் பணிக்குச் சேர்ந்து உடனடியாக தன் பொறுப்பாக அந்த வேலையைச் செய்யும் நிலையில் இருக்கின்றாரா? அவருக்கு சொந்தமாக ஒரு கார் வாங்கி டிரைவராக பணியாற்றி தன் வருமானத்திற்கு வழி கோலிக்கொள்ள முடியுமா? வேறு ஏதாவது தொழில் செய்து தன் சுய வருமானத்திற்கு ஏற்பாடு செய்து கொள்ள முடியுமா? என்றால் நிச்சயம் முடியாது என்ற பதிலே கிடைக்கிறது.

பிறகு எதைத்தான் 20 வருட கால பள்ளிக், கல்லூரி வாழ்க்கை அவனுக்கு கற்றுக்கொடுத்திருக்கின்றது என்றால்... கிட்டத்தட்ட, பேந்த பேந்த முழிக்கின்ற நிலைதான் இன்றைய கல்வித்திட்டத்தில் இருக்கின்றது.

நேற்று ஒரு வேலைவாய்ப்பு பயிற்சி முகாமுக்கு சிறப்பு அழைப்பாளராக சென்ற பொழுது அங்கே பயிற்றுனராக வந்திருந்த ஒரு நபர் பேசியதும்... அவரது பேச்சை உறுதிப்படுத்தி டி சி எஸ் ஸின் துணைத்தலைவர் பேசியதும் என்னை ஒரு நிமிடம் உறைய வைத்து விட்டது. பி ஈ எலக்ட்ரிகல் முடித்து நேர்காணலுக்கு வரும் மாணவர்களில் பெரும்பாலானோருக்கு வோல்டேஜ் என்றால் என்ன என்பதற்கு கூட சரியான பதில் தெரியவில்லை... பதில் சொன்னாலும் அதற்கான துணைக் கேள்விக்கு புரிதல் இல்லாத மனப்பாட வாந்தி எடுத்தல் தான் இருக்கின்ற காரணத்தால் முட்டுச் சந்தில் முட்டி நிற்பது போல நின்று விடுகின்றார்கள் என்று சொன்ன போது தான் அதிர்ந்து போனேன்.

இன்றைக்கு தமிழகத்தில் வேலை அல்லது சுய தொழில் செய்து சம்பாதிப்பவர்களில் எத்தனை சதவிகிதம் பேர் தாங்கள் 20 வருடம் பயின்ற பள்ளிக் கல்லூரி கல்வி அல்லது பயிற்சியினைக் கொண்டு அந்த வேலையினைச் செய்து சம்பாதிக்கின்றார்கள்? வெறும் பத்து சதவிகிதத்தினர் கூட இருக்கமாட்டார்கள் என்பது தான் என் கணிப்பு.

எதற்குமே உதவாத இந்தக் கல்வி முறை தான் எதற்கு?


தொடர்ந்து அலசுவோம்.....


Monday, November 23, 2015

ஜூவி சர்வே.... என்ன தான் சொல்கிறது?

ஜூனியர் விகடன்ல ஒரு சர்வே...

முதலமைச்சராக ஜெயலலிதாவின் செயல்பாடு எப்படி?... என்று

சூப்பர்..ன்னு 27.95 சதவிகிதம் பேரும்..

மோசம்..., மிக மோசம்ன்னு 32.68 சதவிகிதம் பேரும்...

சுமார் தான் என்று 39.37 சதவிகிதம் பேரும்...
வாக்களித்திருக்கின்றார்கள்.

இதை நேரடியா நாம எப்படி புரிஞ்சிக்கலாம்ன்னா....
சூப்பர்ன்னு சொன்னவங்க அதிமுக ஆதரவாளர்கள்ன்னும்...
மோசம், மிக மோசம்ன்னு சொன்னவங்க திமுக ஆதரவாளர்கள்ன்னும்...
சுமார்ன்னு சொன்னவங்க எந்தக் கட்சியையும் சாராத நடுநிலை வாக்காளர்கள்ன்னும்...

எடுத்துக்கலாம். இந்த அடிப்படையில் பார்த்தால்...

தற்பொழுதைய நிலையில்...

திமுகவின் வாக்கு வங்கி 32.68 சதவிகிதமாகவும்
அதிமுகவின் வாக்கு வங்கி 27.95 சதவிகிதமாகவும்

இருப்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. அதாவது அதிமுகவை விட திமுகவின் வாக்கு வங்கி 4.73 சதவிகிதம் கூடுதலாக இருப்பது அப்பட்டமாக பதிவாகியிருக்கிறது.

மீதமுள்ள அந்த 39.37 சதவிகித நடுநிலை வாக்காளர்கள் அதிக அளவில் எந்தப் பக்கம் சாய்கின்றார்களோ அந்த அணி ஆட்சி அமைக்கும் என்பது தான் யதார்த்த நிலை.

இந்த இடத்தில் தான் நாம் சற்று கவனமாக ஆராய வேண்டும். இந்த நடுநிலையாளர்களுக்கு ஜெயலலிதா ஆட்சியின் மீது திருப்தி இல்லாத காரணத்தால் தான் சுமார் என்று சொல்லியுள்ளார்கள். அதனால் அவர்களது வாக்குகள் மிகப் பெரும்பான்மையாக அதிமுகவுக்கு எதிராகவே விழும்... அல்லது அதிமுகவுக்கு விழாது என்று சொல்லலாம்.

அப்படியான அதிருப்தி நடுநிலையாளர்கள் திமுகவுக்கு வாக்களித்துவிடக் கூடாது என்பதற்காகத் தான் ஆளுங்கட்சியின் ஏற்பாட்டில் வைக்கோ தலைமையில் மக்கள்நல கூட்டியக்கம் ஆரம்பிக்கப்பட்டு செயல்படுவதாக பெரும்பாலான அரசியல் ஆராய்ச்சியாளர்கள் வெளிப்படையாகவே கருத்துக்களை முன் வைக்கின்றார்கள்.

அது உண்மையாகவே இருக்கட்டும் அல்லது இல்லாமல் போகட்டும். எப்படி இருந்தாலும், அந்த நடுநிலையாளர்களை நாம் ஏ பி சி என்ற மூன்று தரப்பாக பிரித்துக் கொள்ளளாம். (அப்படித்தான் பிரிவார்கள்) அந்த மூன்று பிரிவினரும் சற்றேரக் குறைய சம அளவு சதவிகிதத்தில் தான் பிரிந்து நிற்பாகள். 

அதில் ஏ என்ற பிரிவினர் பல்வேறு காரணங்களால் திமுக மீதும் கூட வெறுப்பில் இருப்பவர்களாக இருக்கக் கூடும். அப்படியான குறிப்பிட்ட சதவிகிதத்தினர் ஜெயலலிதா நல்லாட்சி தரவில்லை என்றாலும் பரவாயில்லை, திமுகவுக்கு வாக்களிக்கக் கூடாது என்னும் மனநிலையில் வேறு வழியின்றி அதிமுகவுக்கே மீண்டும் வாக்களிப்போம் என்று எண்ணுகிற அந்த நிலையினை.....
...அந்த நிலையினைத்தான் தற்பொழுது உருவாகியுள்ள மக்கள் நல கூட்டியக்கம் தவிடு பொடியாக்கியிருக்கின்றது. தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் மேற்படி மனநிலை கொண்ட... அதாவது ஜெயலலிதா ஆட்சி பிடிக்கா விட்டாலும் வேறு வழியின்றி அதிமுகவுக்கே வாக்களித்து தொலைய வேண்டும் என்று முடிவெடுக்கக் கூடிய அந்த குறிப்பிட்ட சதவிகித வாக்காளர்களுக்கான புகலிடமாகத்தான் இந்த மக்கள் நல கூட்டியக்கம் மாறப்போகின்றது...!!

அதாவது ஜெயலலிதா - வைக்கோ வின் இந்த ரகசிய ஏற்பாடு, சேம் சைடு கோல் அடித்த கதையாகத்தான் முடியும் என்பது என் அனுமானம்.

அந்த 39.37 சதவிகித நடுநிலையாளர்களில் இன்னொரு பிரிவான பி பிரிவினர்... இயல்பாகவே ஜெயலலிதா ஆட்சி சரியில்லை... அதனால் மீண்டும் திமுகவுக்கே வாக்களிப்பது தான் சரி. வேறு கூட்டணிக்கு வாக்களித்தால் அவர்களும் வெற்றி பெற முடியாது, மீண்டும் அதிமுகவே ஆட்சிக்கு வந்து விடும், ஆகையால் அதிமுகவுக்கு பதில் இந்த முறை திமுகவுக்கே வாக்களிக்கலாம் என்ற முடிவினை தெளிவாக எடுத்து விடுவார்கள்.

இதில் மூன்றாவது பிரிவான சி பிரிவினர் தான் கிட்டத்தட்ட உண்மையான அப்பாவி நடுநிலையாளர்கள். இந்த பிரிவினர் எப்பொழுதுமே நடப்பு ஆட்சி தனிப்பட்ட முறையில் தனக்கு சாதனையைத் தந்ததா? வேதனையைத் தந்ததா? என்ற நேரடிக் கேள்விக்கான பதிலின் அடிப்படையில் தான் வாக்களிப்பர்.
ஜெயலலிதா ஆட்சி சுமார் என்று சொன்ன காரணத்தினாலேயே இந்த பிரிவினரில் பெரும்பான்மையாயானவர்கள் அதிமுகவுக்கு எதிராக வாக்களிக்கும் முடிவைத்தான் எடுக்க முடியும். அப்படி எடுக்கும் பொழுது தங்களது வாக்குகள் எக்காரணம் கொண்டும் விரயமாகக் கூடாது என்பதில் தான் இந்தப் பிரிவினர் மட்டும் குறியாக... கவனமாக இருப்பார்கள்.

ஸோ.... அவர்கள் மூன்றாவது அணிக்கு வாக்களித்து விரயமாக்குவதை விட ஆட்சிக்கு வரும் வாய்ப்புள்ள திமுகவுக்கே வாக்களிக்கலாம் என்ற முடிவையே எடுப்பார்கள்.

இன்னும் கொஞ்சம் புளி போட்டு விளக்க வேண்டுமானால்.... நடுநிலையாளர்கள் மூன்றாக பிரிந்து அதில் ஒரு பிரிவு மக்கள் நல கூட்டியக்கத்திற்கும், ஒரு பிரிவு திமுகவுக்கும் பெரும்பான்மையாக வாக்களிக்க... மூன்றாவது பிரிவில் பெரும்பான்மை திமுகவுக்கும் சிறுபங்கினர் அதிமுகவுக்கும் என்று வாக்களிப்பர். மூன்றில் 1.60 திமுகவுக்கும் 0.40 அதிமுகவுக்கும், 1.00 மக்கள் நல கூட்டியக்கத்திற்கும் வாக்களிப்பர்.

ஆக மொத்தம் திமுக 46 சதவிகிதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்று (மேற் சொன்ன கணக்குப்படி 52 சதவிகிதம் பெற வேண்டும்) அறுதிப் பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும் என்பது உறுதி.

ஏனெனில் ஆண்ட்டி இன்கம்பன்ஸி என்கிற ஆட்சிக்கு எதிரான மனநிலை அதிமுகவுக்குத்தான் இருக்கின்றதே தவிர.... அதாவது கடந்த பாராளுமன்ற தேர்தலில் மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு எதிராக மக்கள் மனநிலை இருந்த காரணத்தால் தான் காங்கிரஸும், அதன் தமிழக கவுண்டர் பார்ட்டாக இருந்த திமுகவும் மண்ணைக் கவ்வின. அதன் பலனை அதிமுக முழுமையாக அறுவடை செய்தது.....! அதே போலத்தான், வரும் சட்ட மன்ற தேர்தல் நடப்பு மாநில ஆட்சிக்கான தேர்வு என்பதால், ஜெயலலிதாவின் ஆட்சிக்கு எதிரான மக்கள் மனநிலை அதன் பலனை அதிமுகவின் நேரடி எதிரியான திமுகவுக்கு வழங்கும்.

இந்த மனநிலையை மக்கள் எப்படி உறுதிப்படுத்துகின்றார்கள் என்றால்..... அதே ஜூனியர் விகடன் கருத்துக்கணிப்பில் கேட்கப்பட்ட இன்னொரு கேள்வியான யார் தமிழகத்தின் சிறந்த எதிர்க்கட்சித் தலைவர் என்ற கேள்விக்கு.....

திமுக தலைவர் கலைஞருக்கு ஆதரவாக 41.7 சதவிகிதம் மக்கள் வாக்களித்துள்ளனர். கலைஞருக்கு அடுத்தபடியாக விஜயகாந்துக்கு அதாவது அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாக அங்கீகாரம் தந்த மக்களே... தற்பொழுது வெறும் 13.81 சதவிகித வாக்குகளை மட்டுமே தந்திருக்கின்றார்கள். கலைஞருக்கும் விஜயகாந்துக்குமான வித்தியாசமே 27.89 சதவிகிதம் இருக்கின்ற போது....

மக்கள் தற்பொழுதைய மனநிலையில் அதிமுகவுக்கு மாற்றாக திமுகவை மட்டுமே முன்நிறுத்துகின்றார்கள் என்பது தெள்ளத்தெளிவாக புரிகிறது.

ஆக 2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப் போவது உறுதி...!!! உறுதி...!!! உறுதி...!!!




Wednesday, November 18, 2015

மழை பாதிப்புக்கு திமுகவும் காரணமா?!

ஆஹா.... ஒவ்வொரு அதிமுக அடிவருடியும் என்னமா எழுதுறாங்கப்பாஆஆ??!

இந்த ஒரு வார மழையில் வட மாவட்டங்களும், சென்னையும் பாதிக்கப்பட்டதுக்கு, அதிமுக ஆட்சியின் செயல்படாத நிலையும், வடிகாலுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் நடந்த பெருமளவிலான முறைகேடுகளும் தான் காரணம் என்பதையும்...,

இந்தத் தவறுகளால் ஏற்பட்ட சேதங்களையும், மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தத்தளிப்பதையும் கூட இந்த அரசு ஒட்டுமொத்த அமைச்சரவை, அதிகாரிகளை களமிறக்கி (அதாவது இடைத்தேர்தலுக்காக அந்தத் தொகுதிகளில் செய்வது போல) மத்திய பாதுகாப்புப் படை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், எதிர்க்கட்சிகள் என்று அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்பட வைத்து....

மத்திய அரசு, பெரிய நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடம் உதவிகளைப் பெற்று... பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உடனடியாக உரிய நிவாரணங்களை செய்து முடித்து நிலைமையை... மக்களை காப்பாற்றியிருக்கலாம்.

ஆனால் இவற்றை எல்லாம் செய்யத் தவறிய ஒரு அரசினை, அதன் ஆட்சியாளர் மேல் தனக்கிருக்கும் ஏதோவொரு பாசம் அல்லது ஈர்ப்பு அல்லது சிலபல பலன்களைக் குறிவைத்ததன் காரணமாக கண்டித்து, குறைகூறி, விமர்சித்து எழுதாமல், பேசாமல் கை கட்டி, வாய் மூடி மௌன சாட்சியாய் ஊடகங்கள் நின்று கொண்டிருக்கின்ற நிலையில்...

நடுநிலையாளர் முகமூடி அணிந்து அதிமுகவின் விசுவாசிகளாக உலாவரும் அதிமுக அடிவருடிகள் சமூக வலைத்தளங்களில் அதிமுக அரசுக்கு எதிராக எழும் விமர்சனங்களை அப்பாவி பொது மக்கள் மற்றும் இளைஞர்களிடம் சென்றடையாமல் மடைமாற்றும் முயற்சியாக எழுதுவதையெல்லாம் பார்த்ததும் தான் இந்தப் பதிவின் முதல் பத்திக்கான காரணமாக அமைந்தது...!

ஒருத்தர் எழுதறார்... அமெரிகாவுல எல்லாம் புயல் வந்துச்சின்னா, ஒரு வாரம் கரண்ட் இருக்காதாம்... அப்பக் கூட மக்கள் தங்கள் தேவையை தாங்களே நிறைவேத்திக்குவாளாம்..., அரசாங்கம் செய்யவில்லை என்று அங்கலாய்க்க மாட்டார்களாம்... தமிழ்நாட்டு மக்களும் அப்படித்தான் இருக்காங்களாம்... ஆனா, எதிர்க்கட்சிகள் தான் அரசியலுக்காக அலப்பறை செய்கின்றார்களாம்...!

இன்னொருத்தர் எழுதறார்... பிரிட்டிஷ் கால வடிகால் வசதிகளைத் தவிற வேற எந்த கழக ஆட்சியிலும் வசதியே செய்யவில்லையாம்... அதனால், இதற்கு அதிமுகவை மட்டும் குற்றம் சொல்லவே முடியாதாம்...!

ஒரு கேணையன் எழுதறான், வெள்ளத்தைப் பார்வையிடச் செல்லும் ஸ்டாலின் நீரில் நனையாத முழங்கால் அளவு ஷூ போட்டுட்டு போறாரம்... அதனால இது அரசியல் நாடகமாம்....

ஏய் பண்ணாட, ஃபோட்டோவுக்கு போஸ் குடுத்து ஷோ காமிக்க மட்டும் போறவன் தாண்டா, நீ சொல்ற மாதிரி எல்லாம் போவான். இவரு ஆளுங்கள கூட்டிக்கிட்டு, ஒவ்வொரு இடமா போயி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யணும்ன்னு போகும் போது, அதுக்கு ஏத்த மாதிரி இலகுவா வேலை செய்யற மாதிரியான ஆடைகள், உபகரணங்களோட போனாத்தான் வேலை செய்ய முடியும். மக்களுக்கு உதவி செய்யணும்ன்னு போனா இப்படித்தான் போகனும், வேன்ல போறதுக்கே தண்ணி நிக்காத இடத்துக்குத்தான் போவேன்னு அடம்பிடிச்ச உன் ஆத்தா மாதிரியா போவாங்க... லூஸு பயலே...!

சாக்கடைய சுத்தம் பண்ண போறவன் சாராயம் குடிக்கிறது, அவன் ஜாலிக்காக இல்லடா. அந்த நாற்றம் அவனுக்குத் தெரியாம இருக்கனும், அருவறுப்பு அவனை அண்டாம இருக்கணும்ங்கறதுக்காக தாண்டா.

இன்னொருத்தன் எழுதறான்.... மூனு மாசத்துல பெய்ய வேண்டிய மழை மூனே நாள்ல பேய்ஞ்சிடிச்சாம்...! அதுனால எந்த ஆட்சியா இருந்தாலும் எதுவும் செய்ய முடியாதாம்.

இத மாதிரி திரும்பத் திரும்ப நீங்க சொன்னா மக்களை நம்ப வைத்து விடலாம் என்ற எண்ணமா? தமிழ்நாட்டில் அக்டோபர், நவம்பரை மையப்படுத்தி மூன்று மாதங்களுக்கு வடகிழக்குப் பருவமழை பெய்யும் என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வரும் இயற்கை விதி தான். அதில் குறிப்பாக ஒரு பத்து நாட்கள், ஒன்றோ இரண்டோ அல்லது மூன்று புயல் சின்னங்களுக்கான அதிக மழை கொட்டித் தீர்ப்பதும், அந்த புயல் சின்னம் பெரும்பாலும் மூன்று அல்லது நான்கு வருடங்கள் ஆந்திரா, ஒடிசா என்று சென்று கரையைக் கடப்பதும், நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை தமிழகத்தை செம்மையாக பதம் பார்ப்பதும் என்பது நாம் காலம் காலமாக கண்டு அனுபவித்து வரும் ஒரு நிகழ்வு தான்.

புயல் காற்று அல்லது சுனாமி போன்ற பேரிடர்களால் ஏற்படும் சேதங்களை நாம் அனுபவித்துத் தான் ஆக வேண்டும் அதற்கு நிவாரணம் தான் செய்ய முடியும் என்றாலும்...

எப்படிப் பட்ட கன மழை பெய்தாலும் அதற்கான முன்னெச்சரிக்கையோடு இருந்தால் நிச்சயம் உயிர்ச் சேதங்களை முற்றிலும் தவிர்க்கலாம். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதை முழுமையாக தடுத்து நிறுத்தலாம். இதற்கெல்லாம் மேலாக அந்த மழை நீரை நல்ல விதமாக பாசனத்திற்கும், குடிநீருக்குமாக அடுத்து வரும் கோடைக்காலத்திற்காக பயன்படுத்தவும் முடியும்

இதற்கெல்லாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக, காவிரி மற்றும் கொள்ளிடம் நீர்ப்பாசன பகுதிகளில் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் அனைத்து ஆறுகள், ஏரிகள், குளங்கள், குட்டைகள் என்று இருக்கின்றவற்றை சுத்தமாக இந்த அரசு தூர் வாறியிருக்க வேண்டும். சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பரில் இம் மாவட்டங்களில் உள்ள அனைத்து ஏரிகளையும், குளங்களையும், வடிகால் வாய்க்கால்களையும் சுத்தமாக தூர்வாறி, வடிகால்களில் ஏற்பட்டிருக்கும் அடைப்புகள் மற்றும் பழுதுகளை மாநகர நிர்வாகம் சரி செய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

எப்பொழுதுமே இது போன்ற பேரழிவுகள் அதிமுக ஆட்சி நடக்கின்ற போது மட்டுமே ஏற்படுகின்றனவே? என்ற கேள்வியை இந்த நடுநிலை நாதாறிகள் கேட்டுக்கொள்ள வேண்டும். ஏனெனில் அதிமுக அரசு இந்த மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரியாக மேற்கொள்வதில்லை என்பது தான் இதற்கான காரணம். அதை மறைத்து விட்டு பொத்தாம் பொதுவாக இந்த அவலங்களுக்கு அதிமுகவோடு சேர்த்து திமுக ஆட்சியையும் குற்றம் சொல்வது அயோக்கியதனத்தின் உச்சம்.

மேலும் ஒரு அப்பாடக்கர் சொல்கிறார், தனியார் சுயநிதிக் கல்லூரிகளும், உறைவிடப் பள்ளிகளும் தான் பெரும்பாலான ஏரிகளை ஆக்கிரமித்துள்ளதாம், அதனால் தான் இந்த மழையினாலான பாதிப்பாம். அந்த கல்வி நிலையங்கள் எல்லாம் திமுக அதிமுகவினரின் ஊழல் பணத்தில் வந்ததாம், அதிலும் கடந்த 15 ஆண்டுகளில் வந்தது தானாம்...!!

அட லூஸு பன்னாட, தனியார் சுயநிதிக் கல்லூரிகளின் பொற்காலமே எம் ஜி ஆர் ஆட்சி தான். அன்றைக்கு துவங்கப்பட்ட கல்லூரிகள் தான் இன்றைக்கு பல்கலைக் கழகங்களாக உருவெடுத்து இன்றைக்கு பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்புக்களை கபளீகரம் செய்து நிற்கின்றன என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல் எழுதுகின்றார்கள்.

சரி அனைத்துக் கல்லூரிகளையும் வேண்டாம், திமுக ஆட்சிக்காலத்தில் அனுமதி கொடுக்கப்பட்டு கட்டப்பட்ட கல்லூரிகளில் இது போன்ற ஏரி, குளம் ஆக்கிரமிப்புக்கள் செய்யப்பட்டிருந்தால், இன்றைக்கு ஆட்சியில் இருக்கும் ஜெயலலிதா அதை உடனடியாக கையகப்படுத்திவிடலாமே?! ஆட்சி ஜெயலலிதா கைகளில் தானே இருக்கிறது? இந்தக் கோரிக்கையை முன்வைத்து இந்த கூமுட்டைகள் எழுதலாம் அல்லது போராட்டம் கூட நடத்தலாமே?!

1996 இல் ஆட்சிக்கு வந்த கலைஞர், காவிரி மற்றும் அதன் முப்பதுக்கும் மேற்பட்ட கிளை ஆறுகள் மற்றும் ஆயிரக்கணக்கான வாய்க்கால்களை மூன்று மாதகாலத்தில், நமக்கு நாமே திட்டம், அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் மற்றும் வேலைக்கு உணவு திட்டங்களின் மூலம் தூர் வாறி, நவீன ராஜராஜ சோழன் என்று மக்களும் ஊடகங்களும் அவரை புகழ்ந்த உன்னதமான நிலையை அடைந்தார்.

ஏன்? இன்றைக்கு சென்னையில் இவ்வளவு பெரிய அழிவிலும் மக்கள் ஓரளவிற்கு போக்குவரத்தை தொடர முடிகின்றது என்றால், திமுக ஆட்சிக்காலங்களில் கட்டப்பட்ட 42 தரமான பாலங்கள் தான் காரணம் என்பதை சென்னையில் முப்பாதாண்டுகளாக வசிக்கின்ற எந்த உண்மையான நடுநிலையாளராலாவது மறுக்க முடியுமா?

மக்கள் நலனுக்கான இயக்கம் நடுத்துறோம்ன்னு சொல்ற ஒரு கருங்காலி ஒன்று... அரசை இந்த நேரத்தில் குறை சொல்லக் கூடாதுன்னு, பொத்தாம் பொதுவாகப் பேசி..., அதிமுக ஜெயலலிதா அரசினை மக்கள் கோபத்திலிருந்து விலக்கி வைக்கும் மாமா வேலையை தன் அளவிற்கு செய்து ராஜ விசுவாசத்தை காண்பித்திருக்கின்றது.

ஆனால் இந்த இக்கட்டான நேரத்திலும் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாக இல்லாவிட்டாலும், திமுகவும், அதன் தலைவரும், வருங்காலத் தலைவரும், மாவட்ட செயலாளர்களும், தொண்டர்களும் தான், களத்தில் இறங்கி நின்று மக்களோடு மக்களாக நின்று பணியாற்றி, நிவாரண உதவிகளை உடனுக்குடன் தேவைப் படுவோருக்கு, தேவை அறிந்து வழங்கி, அரசுக்கும் ஒத்துழைப்பு தருவதாக அறிவித்து...., செம்மையாக சேவைபுரிந்து வருகின்றார்கள்.

இதை உண்மையிலேயே பாதிக்கப்பட்ட மக்கள் நன்கு உணர்ந்து கொண்டுள்ளார்கள். அறிவுஜீவிகளாக காட்டிக்கொண்டு, நடுநிலை போன்று நடித்துக்கொண்டு;;;, வெளிநாடுகளிலும், ஏஸி ரூமில் அமர்ந்து காசுக்காக எழுதும் கட்டுரையாளர்களாலும்..., நடப்பு ஜெயலலிதா ஆட்சியின் மீது பாதிக்கப்பட்ட பொதுமக்களால் வீசப்படும் கணைகளை திமுக பக்கமும் திருப்பி விடச்செய்யும் முயற்சி ஒருக்காலும் பலிக்காது.


Friday, November 13, 2015

நமக்கு நாமே நாடகம்

நமக்கு நாமே நாடகத்தின் நேற்றைய சீன்...

ஸ்டாலின் சீன் ஸ்பாட்டுல வந்து நிக்குறாரு. நாளஞ்சு குடிசை வீடு பிய்ந்து போன நிலையில் அங்கே செட் போடப்பட்டிருக்கு, ஐந்தாறு பேர் கிராமத்து கெட்டப்பில் அழுக்கு வேட்டி, சட்டையுடன் நிற்கிறார்கள், கேமெரா லைட்டிங் எல்லாம் ரெடியா? என்று இயக்குனர் சபரீஷ் கேட்கிறார், ரெடி சார்ன்னு குரல் வந்தவுடன், இயக்குனர் கை அசைக்க, வரிசையாக நான்கு டேங்கர்களில் மினரல் வாட்டர் அங்கு கொட்டப்படுகிறது....
இப்பொழுது அந்த இடம் வெள்ளம் சூழ்ந்த குடிசைப்பகுதி போல் காட்சியளிக்கிறது. இயக்குனர் ரெடி ஆக்‌ஷன் என்றவுடன்...
அந்த ஐந்தாறு பேரும் ஸ்டாலினிடம் ஏதேதோ பேசுவது போல் பாவனை செய்கிறார்கள்..., அவரும் அதைக் கேட்பது போல பாவனை செய்கிறார். இந்தக் காட்சியை பல்வேறு கோணங்களில் ஸ்டில் மற்றும் மூவி கேமராக்கள் பதிவு செய்கின்றன. எல்லாம் திருப்தியாக முடிந்தவுடன் இயக்குனர் கட் சொல்கிறார்.
இந்தக் காட்சியின் ஒரு படத்தைத்தான் நீங்கள் இங்கே பார்க்கின்றீகள். நமக்கு நாமே படத்தில் புதிதாக இணைக்கப்பட்டிருக்கும் காட்சி தான் மேலே நடந்த உண்மைச் சம்பவம்....!!!
கடலூர்ல என்னவோ மழை பேஞ்சுதாமா... அங்க வெள்ளக்காடா ஆயிட்டுதாமா.... மக்கள் வீடுகள் எல்லாம் இடிஞ்சி போயி ரோட்டுல நிக்கிறாங்களாமா... சாப்பாடுக்கே வழி இல்லாம அல்லாடுறாங்களாமா... அமைச்சருங்க, அதிகாரிங்க எல்லாம் அவங்கள வந்து பார்க்கலயாமா.... இவரு மட்டும் போயி பார்த்தாராமா...

யாருட்ட காது குத்துறீங்க...! தமிழ் நாட்டுல பாலாறும், தேனாறும் ஓடுறது எங்களுக்குத் தெரியாதா? தெரியலன்னா போயி ஜெயா டீவி பாருங்கய்யா. தமிழ்நாட்டுல சின்னதா ஒரு தூவானம் போட்டாக் கூட, அமைச்சருங்க ஓடிப்போயி, அங்க இருக்குற மக்களுக்கு அரிசி கொடுக்குறது என்ன? பருப்பு குடுகுறது என்ன? வேட்டி சேலை கொடுக்குறது என்ன? இதெல்லாம் போய் ஜெயா டீவில பாருங்கய்யா.., அதுல தெளிவா காட்டுறாங்க.

அத விட்டுட்டு இப்புடி டிராமா போட்டுக்கிட்டு இருக்கீங்களே... இதெல்லாம் நியாயமா? இதுல ஆயிரம் பேருக்கு காசு கொடுத்து சாலை மறியல் டிராமா வேற போடுறீங்க. அதான் போலீஸ வச்சி அடி அடின்னு அடிச்சி வச்சாங்கள்ல ஆப்பு?!

இனிமே இப்புடி டிராமா கீமா போட்டீங்க... இப்புடித்தான் போலீஸ் லத்தி சார்ஜ் வரும்... ஆமா...!
இப்படிக்கு....

300 வருடங்களாக திமுகவுக்கே வாக்களித்து வந்த பரம்பரையைச் சேர்ந்த இப்பொழுதைய நட்டநடுநிலையாளர்..!!

உடையவன் இல்லன்னா ஒரு முழம் கட்டை...


உடையவன் இல்லன்னா ஒரு முழம் கட்டை...

இது எங்க ஊருல ரொம்ப ஃபேமஸான பழமொழி. அதாவது ஆட்சில இருக்குறவங்க, ஏ சி ரூமுல உட்கார்ந்துகிட்டு, அஞ்சு ஐ ஏ எஸ்ஸ அனுப்பினேன், பத்து கலெக்டர அனுப்பினேன்..., போர்க்கால வேகத்தில் நிவாரணப் பணிகள் முடக்கிவிடப்பட்டுள்ளதுன்னு அறிக்கை மட்டும் கொடுத்தா போதாது...

அப்படி செஞ்சா, நாலு நாள் ஆனாலும் வெள்ளத்துக்கு நடுவுல தத்தளிக்கிற மக்களுக்கு குடி தண்ணி கிடைக்கல, சாப்பாடு கிடைக்கல, உட்கார வீடு கூட இல்ல, மாத்து துணி இல்ல, குழந்தைங்களுக்கு பால் இல்ல, மின்சாரம் இல்ல....

இதையெல்லாம் அங்க போற ஊடகங்களிடம் மக்கள் தெரிவிக்கிறாங்க..., கதறுறாங்க..., ஆனா அதிகாரிகள் மட்டும் இன்னும் அங்க போக முடியலன்னு புலம்புறாங்க.
இது தான் ஆட்சியாளருக்கும் (உடையவனுக்கும்) அதிகாரிகளுக்கும் (மற்றவர்களுக்கும்) உள்ள வித்தியாசம்.

இதோ..........


இப்ப ஆட்சில இல்லன்னாலும், தளபதி மு.க.ஸ்டாலின் களத்துல இறங்கிட்டார். வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நேரா வந்து நிக்கிறார். இனிமே இந்த அரசாங்கம், இறங்கி வேலை செஞ்சே ஆகணும். அதிகாரிகள் சுற்றிச் சுழன்றே ஆகணும்...!

ஏன்னா?

உடையவர்... கீழே இறங்கி விட்டார். மாத சம்பளத்திற்கு வேலை செய்யும் அதிகாரிகளை விட, மக்கள் மேல் உண்மையான அக்கறை கொண்ட ஆட்சியாளருக்குத் தான் பொறுப்பு அதிகம். அவர் மக்களிடம் சென்றால் தான், அதிகாரிகளும் செல்வார்கள், அரசு இயந்திரமும் முழுமையாக வேலை செய்யும்.

ஜெயலலிதா செய்ய வேண்டியதை, மு.க. ஸ்டாலின் செய்கிறார்.

இனி அந்த மக்களுக்கு எல்லாம் தானாகவே, கிடு கிடுவென நடக்கும்.

இது தான் தளபதி எஃபக்ட்...!


Thursday, November 12, 2015

பீகார் தேர்தல் முடிவுகளும்... ராகுல் காந்திக்கான பாடமும்...!


பீகார் தேர்தல் முடிவுகள் சொல்ற சேதிய வச்சி, யாரு பாடம் படிக்கணுமோ இல்லியோ, ராகுல் காந்தி தான் முக்கியமா படிசிக்கணும்..!

ராகுல் அரசியலுக்கு வந்ததில் இருந்து இப்பொழுது தான் முதல் முறையாக தங்கள் கட்சியின் யதார்த்த பலம் என்ன என்பதை உணர்ந்து, தங்கள் கட்சியை சுறுக்கிக்கொண்டு, பலம்மிக்கவர்களை இணைய வைத்து, அருமையாக கோஆர்டினேட் பண்ணி பீகாரில் வெற்றியை உறுதி செய்திருக்கின்றார்.

இது ஒன்றும் புது ஃபார்முலா கிடையாது. ஏற்கனவே, சோனியா காந்தி கட்சித் தலைவராக அவதாரம் எடுத்து வந்த போது, காங்கிரஸின் நிலை இருந்த கேவலத்தைப் புரிந்து கொண்டு, பிரந்திய கட்சித் தலைவர்களோடு இணக்கமாக இருந்து அவர்களது பலத்தைப் புரிந்து அவர்களுக்கான மரியாதையையும், இடங்களையும் தந்து, பாராளுமன்ற தேர்தல் வரும் போது, அவர்கள் தாமாகவே காங்கிரஸுக்கு விட்டுக்கொடுக்கும் நிலையை உருவாக்கி, பிராந்திய கட்சி தலைவர்களிடம் அரசியல் கடந்து பாசமான நட்புணர்வை பலமாக்கி வைத்து இரண்டு முறை காங்கிரஸை அரியணை ஏற்றினார்.

ஆனால் இரண்டாவது முறை காங்கிரஸுக்கு கிடைத்த கூடுதல் பலத்தை மட்டுமே கண்டு அரசியலுக்குள் முழுமையாக நுழைந்த ராகுல் காந்தி, பிராந்தியக் கட்சிகளை எச்சில் துப்பி வம்பிழுத்து எட்டி உதைத்ததன் விளைவே, கடந்த பாராளுமன்ற தேர்தலில், அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி ஆவதற்கே காங்கிரஸுக்கு அல்லுவிட்டுப்போகும் நிலை ஏற்பட காரணமாயிற்று...!!

அதன் பிறகு இப்பொழுது தான் பீகார் தேர்தலில், சரியான முடிவை எடுத்து காங்கிரஸ் கூட்டணி வெற்றி என்ற பேச்சு இந்திய அளவில் எழ வழி வகுத்திருக்கின்றார். இதே நிலைப்பாட்டில் அவர் தமிழக தேர்தலிலும் செயல்பட்டால், அடுத்த பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும்.

அதற்கு, தமிழகத்தில், தான் கூட்டணி அமைக்கவிருக்கின்ற....

அதாவது சில்லறைக் கட்சிகளோடு சேர்ந்து யாருமே வெல்ல முடியாத ஒரு கூட்டணியை பொழுது போக்கிற்காக அமைக்காமல்...,

வெல்லக்கூடிய வாய்ப்புள்ள, பாஜகவுக்கு எதிர்நிலையில் உறுதியாக இருக்கக் கூடிய கட்சியோடு பலமாக விட்டுக்கொடுத்து கூட்டணியை இப்பொழுது பேசி முடிவெடுத்து, அக் கூட்டணித் தலைமையோடு இணக்கமாக இருக்கின்ற மாநிலத் தலைமையையும் அமர்த்தி, காங்கிரஸ் அந்த அந்தக் கூட்டணிக் கட்சிகளோடு இணைந்து இப்பொழுதிலிருந்தே பிரச்சாரம், போராட்டம் எல்லாம் பண்ணுகின்ற அஜெண்டாவை முன்னெடுக்க வேண்டும்

அதை விடுத்து, நாளை கூட்டணி அமைக்கவிருக்கும் கட்சியை கடைசி நாள் வரை திட்டிக்கொண்டிருந்து விட்டு, அல்லது அலட்சியமாக நடந்து கொண்டு, அந்த தலைமையினை மதிக்காமல் தன்னிச்சையாக நடந்து கொண்டு, தன் பலத்திற்கு மீறிய தொகுதிகளைக் கேட்டுக்கொண்டு....

இப்படி செய்து கொண்டிருந்தால், தானும் கெட்டு நம்பி வந்தவனையும் கெடுத்தது போலத்தான் ஆகிவிடும். கடந்த 2011 தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி தோற்றதன் காரணமே இது தான்.

புத்தியுள்ள புள்ள பொழச்சிக்கும்ன்னு எங்க பக்கத்துல ஒரு சொலவடை உண்டு...!


Saturday, October 31, 2015

ஃபீனிக்ஸ் மால்... ஆயிரம் கோடி... ஜெ. சசி... இன்னபிற...!

இதோ எனக்கு முன்னால் நான் சொல்வதை எல்லாம் வாய் பிளந்து கேட்டுக்கொண்டிருக்கும் குத்தத்தின் குத்தங்களே....
நான் கேட்கிறேஏஏஏன்ன்ன்....

இந்த திமுக காரவிங்க எல்லாம்..., என்னவோ அவிங்க தலைவர் ஆயிரம் கோடி ரூபாய்க்கு புதிய தலைமைச் செயலகம் கட்டியதாக பீற்றிக்கொள்கிறார்களே....

அதை அவர் என்ன தன் சொந்த காசில் கட்டினாரா? அரசாங்க பணத்தில் தானே கட்டினார்...! அதை அவர் பெயரில் ரிஜிஸ்டர் செய்துகொள்ள முடியுமா? இல்லை அவர் நினைத்தால் வேறு யாருக்காவது விற்கத்தான் முடியுமா?!

அதெல்லாம் போகட்டும் அவர் ஆட்சி போனவுடன், அதை எங்காத்தா சின்னாபின்னப் படுத்தி, கடைசியில் மருத்துவமனையாகவும் மாற்றினாரே... குறைந்த பட்சம் அதையாவது உங்க தலைவரால் தடுக்க முடிந்ததா?! முடியாது... ஏன்னா? அது அரசாங்க சொத்து....!

அரசாங்க காசை வைத்து உங்களுக்கு ஒரு செங்கல் கூட சொந்த்தம் கொண்டாட முடியாத ஒரு கட்டிடம் கட்டியதையே பெருமையாக பேசுகின்றீர்களே....

இதோ எங்காத்தா... ஆத்தான்னா... ஆத்தாவோட கூட பொறக்காத சின்னாத்தா... சொந்த காசப்போட்டு ஆயிரங்கோடி ஓவாவுக்கு ஒக்கே ஒக்க பில்டிங்க் உள்ளாற பதினோரு சினிமா கொட்டாய எவனோ கட்டி வச்சிருந்தத... சொம்மா கைய சொடுக்குற நேரத்துல வாங்கியிருக்காங்களே... இந்த சாதனைய உங்க தலைவரால ஈடு செய்ய முடியுமா???!!!

எங்காத்த நெனச்சா, அதை எப்ப வேணா யாருக்கு வேணா காசுக்கு விக்கலாம், இல்லன்னா அப்புடியே சும்மா வச்சிக்கலாம்... ஆனா எங்க ஆட்சியே போனாலும் ஒரு பய அதுல கைய வக்க முடியுமா சொல்லுங்க திமுககாரவிங்களே.....!!!

அரசங்கத்து காசுல ஆயிரம் கோடிக்கு கட்டிடம் கட்டினவிங்க பெரிய ஆளுங்களா? இல்லின்னா தன் சொந்த காசுல ஆயிரம் கோடிக்கு சொந்தமா பில்டிங் வாங்குன எங்காத்தா பெரிய ஆளா???!!!

சொல்லுங்க மக்கா... சொல்லுங்க....!!!

இப்படிக்கு :  மைக் டைசன்..!


Friday, October 30, 2015

சாதி கலவரங்களை நோக்கி நகர்கின்றதா தமிழகம்?!


ஒரு மாநிலத்தில் மத ரீதியிலான கலவரங்களை தூண்டிவிட்டு பலனடையும் பாஜகவின் உத்தியை பயன்படுத்தி... தமிழகத்தில் சாதி மோதல்களை உருவாக்கி அதிமுக குளிர்காய நினைக்கிறதோ என்று தான் சமீப காலமாக தமிழகத்தில் அரங்கேறி வரும் நிகழ்வுகள் சந்தேகப்பட வைக்கின்றது. 

இளவரசன், கோகுல்ராஜ், விஷ்ணுபிரியா...  போன்றவர்கள் கொலையுண்டதோ அல்லது தூண்டப்பட்ட தற்கொலைகளோ அரசால் போதுமான அளவில் கண்டுகொள்ளப்படாமல், உண்மையான குற்றவாளிகள் சரியாக கண்டிக்கப்படாமலோ அல்லது கண்டுபிடிக்கப்படாமலோ அல்லது தண்டிக்கப்படாமலோ இருப்பதும்...

சில அடாவடி சாதி சார்பு ஆட்களை சில பல பொதுப் பெயர்களில் கட்சி ஆரம்பிக்க வைத்து, அவர்களை தங்கள் கண்ணசைவிற்கு ஏற்ப ஆட்டம் போட வைத்தும், தங்கள் அரசியல் எதிரிகளை அவர்களை வைத்து கடுமையாக விமர்சனம் செய்ய வைப்பதும், தங்கள் தரப்பு வாதங்களை நியாயப்படுத்தும் பிரச்சார பீரங்கிகளாக அவர்களை பயன்படுத்திக் கொண்டும்....

இப்படியெல்லாம் செயல்படுவதற்காக அவர்களுக்கு ஒன்றிரண்டு எம் எல் ஏ சீட்டுக்களை தூக்கிப் போடுவதும்,  அல்லது இன்னபிற லௌகீக உதவிகள் உட்பட அந்த கட்சித் தலைவர்களின் சாதி வெறி அட்டகாசங்களை கண்டுங்காணாமல் இருப்பதும்.....

என்று ஆளுங்கட்சியான அதிமுகவின் அல்ட்ரா மாடர்ன் ஃபார்முலா தான் இந்தக் கட்டுரையின் முதல் பத்திக்கான காரணமாக சந்தேகம் கொள்ள வைக்கின்றது...!

வேல் முருகன், சரத்குமார், சீமான், தனியரசு...   போன்று இப்படிச் சிலர், திமுக என்ற கட்சி ஆட்சியில் இருக்கும் போதும் சரி, ஆட்சியில் இல்லாத போதும் சரி திமுகவை மட்டுமே வசை பாடுவதும், அதிமுகவை அவ்வப்பொழுது புகழ்ந்து சாமரம் வீசுவதும் அல்லது மறுக்க முடியாத அதிமுகவின் தவறுகளுக்குக் கூட பட்டும் படாமல் ஒரு சில துறை சார்ந்த அதிகாரிகளை கண்டித்து கடந்து போவதுமாக இருப்பதைக் கொண்டே இந்த வாதத்தை நாம் ஊர்ஜிதம் செய்து கொள்ளலாம். 

இவர்களின் இந்த மாதிரியான போக்கினால் இது வரையிலும் அதிமுகவின் எதிர்க்கட்சிகள்... குறிப்பாக திமுக போன்ற கட்சிகள் மட்டுமே காயங்களை சுமந்து வந்த நிலையில்...  இதன் எல்லை எது என்பதை தற்பொழுது தமிழகம் அதாவது பொது மக்கள் அனுபவிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து கடைசியில் மனிதனையே கடிக்க வந்து விட்ட கதையாக....

நடிகர் சங்க தேர்தலில் இதுவரை இல்லாத இயல்பாக, மிக அறுவருக்கத்தக்க வகையில் சாதியை முன்னெடுத்து ஒரு சாரார் மிகக் கேவலமாக, அடாவடித்தனமாக பேசி வந்ததும்...

தங்கள் அலுவலக வாசலை ஒட்டி வாகனங்களை நிறுத்திய கீழ் நடுத்தர வர்க்கத்து விற்பனை பிரதிநிதிகளின் வாழ்வாதாரமாக விளங்கக் கூடிய இரு சக்கர வாகனங்களை அடித்து நொறுக்கியதும்...

அதை சட்ட ரீதியாக காவல்துறை பாதுகாப்புடன் அணுகிய அந்த அப்பாவிகளை காவல் துறையினர் முன்பே அரிவாள், உருட்டுக்கட்டை போன்றவற்றால் ஒரு சாதிக்கட்சியினர் கொடூரமாகத் தாக்கியதும்...

அதைவிடக் கொடுமையாக அப்படி தாக்கியவர்களை காவல்துறையினர் கெஞ்சிக் கூத்தாடி சமாதானப்படுத்துவதும்,  காவல் துறையினரையே அந்த ரௌடிகள் எச்சரிப்பதும்....

இவை அனைத்திற்கும் மேலாக சீமான என்ற கட்சித் தலைவர், ஒரு தொலைபேசி உரையாடலில், ஒரு சாதி நபரை தரக்குறைவாக பேசியும், தன் சாதியை உயர்த்திப் பிடித்தும், அடுத்து அவர் சீமானை கேவலமாகப் பேசியும்....  அதற்கு மீண்டும் சீமான் அதை விட கேவலமாக பதிலளிப்பதும் என்று....

ஒரு அசாதாரண சூழல் தமிழகத்தில் நிறுவப்படுவதை தற்பொழுது நுண்ணியமான அரசியல் நோக்கர்களால் உணரமுடிகிறது.  ஆனால் இதுவரையிலும் இப்பிரச்சினைகள் குறித்து அரசு மௌனமாய் இருப்பது,...

இந்த சாதி அடிப்படையிலான உரையாடல்கள் மூலம் தமிழகத்தில் மிகப் பலமான இதுவரையிலும் கண்டிராத சாதி மோதல்கள் ஏற்பட்டுவிடுமோ என்ற ஐயத்தை அடிமனத்தில் உருவாக்குகிறது.

அதிமுக ஆட்சியின் செயலற்ற தன்மையையும், அதன் மீதான மக்கள் அதிருப்தியும், அதை அழகாக திமுகவின் வருங்காலத் தலைவர் அறுவடை செய்து வருவதையும், நேர்மையான வழியில் எதிர்கொள்ள இயலாத ஜெயலலிதா அரசு, இப்படி சாதி மோதல்களை தமிழகம் முழுவதும் உருவாவதன் மூலம், மக்கள் கவனத்தை திசை திருப்பும் குயுக்தியை கையாள்கின்றதோ என்று தான் பொதுவான அரசியல் நோக்கர்களால் கணிக்கப்படுகின்றது.

எது எப்படி இருந்தாலும் கடந்த ஐம்பது ஆண்டுகளாக..   நடுவில் கோவை குண்டு வெடிப்புக் கலவரமும் அதைத்தொடர்ந்தான பாஜகவின் கோவை மண்டல வளர்ச்சியையும் தவிர்த்து வேறு எந்த சாதி மத கலவரங்களும் மக்களை பாதிக்காத நிலையில்...

இப்பொழுது தமிழகத்திற்குப் புதியதான...  தமிழகம் தழுவிய  இடைநிலை சாதிகளுக்கிடையிலான மோதல் உருவானால், அது தமிழகத்தில் வசிக்கும் அனைத்துச் சாதி மதத்தைச் சேர்ந்த அப்பாவி பொது மக்களையும், தத்தமது வீடுகளை விட்டே வெளியில் கால் வைக்க பயப்படும் சூழ்நிலையை உருவாக்கி விடுவதோடு,  தமிழகத்தை 100  ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிவிடும் ஆபத்தும் இருப்பதை ஒவ்வொரு தமிழக குடிமகனும் உணர்ந்து கொள்ள வேண்டிய தருணம் இது..!

பேயாட்சி செய்தால்...   பிணம் தின்னும் சாத்திரம்...

எவ்வளவு தொலைநோக்கிலான சொல்லாடல் என்பது இப்பொழுது புரிகிறது...!



Tuesday, October 27, 2015

அரசியல் கதம்பம் - ஈழ வியாபாரம் மற்றும் மின் மிகை மாநில புரட்டு..!

***02.10.2015***
ஈழப்போர் விவகாரத்தில் திமுகவையும், கலைஞரையும் குறை கூறி வாய் கிழிய விமர்சித்து, திமுகவுக்கு எதிராக தேர்தலில் கடும் பிரச்சாரமும் செய்து ஈழப்பாசத்தைக் காட்டிக்கொண்டு விட்டு.....
இன்றைக்கு ஐநா தீர்மானத்தில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்து வெற்றிபெறச் செய்த மோடி அரசினையும், அந்த மோடி அரசுக்கு ஆதரவாக களமாடுகின்ற ஜெயலலிதாவையும் விமர்சிக்காமல் மௌனம் காக்கும் அனைவரையும், பொட்டைகள் என்றும் சொல்லலாம், அல்லது காசுக்காக ஈழத்தைக் காட்டிக்கொடுத்தவர்கள் என்றும் சொல்லலாம்.
ஈழப்போரில் திமுகவால் எதையுமே செய்ய முடியாது என்பது தான் யதார்த்த நிலை. அப்படியிருந்தும் அது சம்பந்தமான தனது எதிர்ப்பை திமுக எப்பொழுதுமே பதிவு செய்து தான் வந்திருக்கின்றது. போருக்குப் பிறகான ஐநா தீர்மானங்களில் அன்றைய மத்திய அரசு இலங்கைக்கு ஆதரவாக செயல்பட முடியாத அளவிற்கு திமுக கடைசி வரை தடை ஏற்படுத்தியும் வைத்திருந்ததை உண்மையான ஈழ உணர்வாளர்கள் இன்றைக்கு உணர முடியும்.
காமன்வெல்த் மாநாட்டுக்கு கூட பிரதமர் மன்மோகன் சிங்கை இலங்கை செல்ல விடாமல் தடுத்ததில் திமுகவின் பங்கு அளப்பறியது.
ஆனால் வைக்கோ, ராமதாஸ் போன்றவர்கள் எல்லாம் ஆதரித்து ஆட்சிக்கு வந்த மோடி தன் பதவியேற்ப்புக்கே ராஜபக்‌ஷேவை அழைத்து ஷாக் கொடுத்ததும், ஐநாவில் இலங்கைக்கு ஆதவரவாக களமாடி வெற்றிபெற வைத்ததும், தமிழக அரசியல் கட்சிகளின் விருப்பத்திற்கு ஏற்ப மத்திய அரசு இலங்கை விவகாரத்தில் செயல்பட முடியாது என்று பொன். ராதாகிருஷ்ணன் சொல்வதும், 37 எம் பிக்களை வைத்துக்கொண்டு, மத்திய அரசுக்கு பாதுகாப்பு அரணாக செயல்படும் ஜெயலலிதா, இது பற்றியெல்லாம் மோடி அரசை நிர்ப்பந்திக்காமல் இருப்பதும்.....
ஈழத்தை வைத்து பிழைப்பு நடத்தும் வைக்கோ, நெடுமாறன், சீமான், தா.பா, தமிழருவி, இன்னபிற ஈழ வியாபாரிகளுக்கு வேண்டுமானால் உரைக்காமல் இருக்கலாம் அல்லது உரைக்காதது போல் நடிக்கலாம்...
ஆனால் இவர்கள் பேச்சைக்கேட்டு, திமுகவை விமர்சித்த உண்மையான உணர்வுள்ள நடுநிலை இளைஞர்கள், திமுக மட்டுமே அனைத்து தரப்பு, அனைத்துப் பகுதி தமிழர்களுக்குமான பாதுகாப்பு இயக்கம் என்பதை இப்பொழுதாவது உணர வேண்டும். திமுக இம்மாதிரியான பிரச்சினைகளை அரசியல் ரீதியாக மட்டுமே எதிர்கொள்ளும் என்றும், அது மட்டுமே இப் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வைத் தரும் என்றும் அழுத்தமாக நம்புகிறது என்பதையும் இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
வைக்கோ, சீமான் போன்றவர்களின் சுயநலத்திற்காக உணர்ச்சிவயப்பட்டு செய்யப்படும் செயல்கள், பேரழிவை ஏற்படுத்துவதோடு, அந்த அழிவிற்குப் பிறகான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தகர்த்து விடும் என்பதை இப்பொழுதாவது உணர்ந்துகொள்ள வேண்டும்.
கலைஞரின் உண்ணாவிரதத்தை குறை கூறும் முன்பாக அப்படியொரு உண்ணாவிரதத்தை இருந்து வைக்கோ, சீமான் போன்ற யாராவது ஒருவர் உயிர் துறந்திருக்கின்றார்களா என்ற கேள்வியைக் கேட்டுவிட்டே கிண்டல், கேலியைத் துவங்க வேண்டும்.
***30.09.2015***
ஆட்சிக்கு வந்தால் மூன்றே மாதத்தில் மின் தடையை நீக்கும்வோம் என்றும், ஆட்சிக்கு வந்து ஒரே வருடத்தில் மின்மிகை மாநிலமாக மாற்றுவோம் என்றும் வாக்குறுதி தந்து தான் ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சிக்கு வந்தது.
ஆனால் இந்த ஆட்சி முடிவதற்கு இன்னும் ஏழே மாதங்கள் தான் இருக்கின்ற நிலையிலும், இன்றைக்கும் நகர்ப்புரங்களில் மூன்று மணி நேரமும், கிராமப்பகுதிகளில் 5 மணி நேரமும் அறிவிக்கப்படாத மின் வெட்டு இருந்து கொண்டு தான் இருக்கின்றது.
நகர்ப்புற எல்லையைத் தாண்டிவிட்டால் கிராமப்புரங்களில் ஒரு நாளைக்கு வெறும் 10 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. அதாவது கிராமப்புரங்களில் மின்சாரத்தை நம்பி, ரைஸ் மில், வெல்டிங் பட்டரை இப்படி எந்த சின்ன சின்ன தொழில் கூட செய்ய முடியாத நிலை தான் இன்றைக்கும் தொடர்கிறது.
இந்த நிலையில் தமிழகத்தை எப்படி மின் மிகை மாநிலமாக ஜெயலலிதா அறிவித்தது போல் ஏற்றுக்கொள்ள முடியும்?
ஒரு மாநிலத்தில் கிராமம், நகரம், மாநகரம் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் 24 மணி நேரமும் வீடுகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் தடையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும். அதேப் போன்று மும்முனை மின்சாரம் பயன்படுத்துகின்ற தொழிற்சாலைகள், பட்டரைகள், விவசாய பம்ப்புசெட்டுகள், இப்படி அனைத்திற்கும் தடையில்லா மின்சாரம் 24 மணி நேரமும் கிடைக்க வேண்டும்.
இந்த நிலை வந்தால் மட்டுமே அம்மாநிலத்தை மின் மிகை மாநிலம் என்று அறிவிக்க முடியும். அது மட்டுமன்றி அம் மாநிலம், இத் தேவைகளுக்கான மின்சாரத்தை வெளியில் இருந்து விலை கொடுத்து வாங்காமல், தங்கள் சொந்த தயாரிப்பில் அல்லது மாநில அரசும் பங்குதாரராக இருக்கும் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்தும் பயன்படுத்தி இந்த நிலையை அடைந்தால் மட்டுமே அது மின் மிகை மாநிலமாக அறியப்படும்.
ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்த இந்த நான்கரை ஆண்டுகளில் ஒரே ஒரு மின் உற்பத்தி திட்டத்தைக் கூட இதுவரை புதிதாக ஆரம்பித்து நிறைவேற்றி ஒரே ஒரு யூனிட் மின்சாரத்தினைக் கூட உற்பத்தி செய்யவில்லை என்பது தான் யதார்த்தம்.
ஸோ.... பொய்யான வாக்குறுதிகளைக் கூட பொறுத்துக்கொள்ளலாம். ஆனால் அந்த வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டு, அவற்றை நிறைவேற்றி விட்டதாக பொய் பிரச்சாரம் செய்வோரை மக்கள் மன்னித்தால், மிகப் பெரும் தவறான பின்விளைவுகளை மக்கள் சந்திக்க வேண்டியதிருக்கும்.
கடந்த திமுக ஆட்சியில் போடப்பட்டு, செயல்படுத்தப்பட்ட மின் உற்பத்தி திட்டங்களின் பலனாகத் தான் இந்த நான்கரை ஆண்டுகளில் வீடுகளுக்கான மின்சாரை தேவையை ஓரளவிற்காவது இந்த ஆட்சியினரால் ஈடு செய்ய முடிகின்றது. அந்த திட்டங்கள் அனைத்தையும் முழுமையாக நிறைவேற்றியிருந்தாலே இந்நேரம் தமிழகம் உண்மையான மின் மிகை மாநிலமாக மாறியிருக்கும்.
சிந்திப்பீர் செயல்படுவீர்....!!

***

தளபதியின் நமக்கு நாமே மக்களின் கைகளில்...!!!

தளபதியின் நமக்கு நாமே முதற்கட்ட பயணம் கன்னியா குமரியில் துவங்கிய போது, திமுகவினர் மட்டுமே... அதிலும் குறிப்பாக காலத்திற்கு ஏற்ப கொள்கை மாறாமல் தம்மை புதுமைப் படுத்திக்கொள்ளும் எண்ணமுடையவர்களும், இணையதள திமுகவினரும் தான் முதல் நாள் முதல் நொடியில் இருந்து தளபதியின் ஆரல்வாய் மொழியில் ஆரவாரமாக ஆர்ப்பரித்துக் கிளம்பிய எழுச்சி அலையினை உன்னிப்பாக உற்றுக்கவனித்து... அதை அப்படியே மக்கள் மன்றத்தின் முன்பாக பதிவு செய்யவும் செய்தனர்.
ஒவ்வொரு நாளும் கடந்து போக... கடந்து போக, அந்த எழுச்சிஅலையின் உற்சாகம் ஒட்டுமொத்த திமுகவினர் மத்தியிலும் தீயாக பற்றிக்கொண்டு, பொது மக்களிடம் நம்ம ஊருக்கு எப்ப வருவார் என்ற எதிர்பார்ப்பையும் எகிற வைத்து, எதிர்க்கட்சிகளுக்கு வயிற்றுப்போக்கையும் கிளப்பி விட்டு.... ஒரு வழியாக முதற்கட்ட நமக்கு நாமே சூறாவளி சென்னை அண்ணா அறிவாலயத்தில் கரை ஏறியது...!!
இதோ இன்றைக்கு நமக்கு நாமேவின் இரண்டாம் கட்ட பயணம் மேற்குத் தொடர்ச்சி மலையில் மைய்யம் கொண்டு, கூடலூரில் அனலைக் கூட்டி தரை இறங்க ஆரம்பித்து விட்டது.
இந்த இரண்டாம்கட்ட துவக்க நிகழ்ச்சியை, திமுகவினரையும் தாண்டி ஒட்டுமொத்த தமிழக பொது மக்களும் கவனிக்க ஆரம்பித்து விட்டனர். 17 ஆம் தேதி நாகைன்னு போட்டிருக்கே, நம்ம மாயவரத்துக்கு வரமாட்டாரா? இது நேற்று என்னிடம் ஒரு நடுநிலை நண்பர்... கடந்த தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்த வாக்காளர் கேட்ட கேள்வி.
கண்டிப்பாக மாலை மாயவரம் வருவார். ஏன்? என்ன விஷயம்? என்றேன்.
ஒன்னுமில்ல... நம்ம ஊருக்கு ஒரு சூப்பர் பஸ்ஸ்டாண்டும், ஊரைச் சுற்றி நல்ல ரிங் ரோடும், நம்ம ஜி.ஹச் ஐ மாவட்ட மருத்துவமனையாகவும் மாத்தனும்ன்னு சொல்லி மனு தயாரிச்சி வச்சிட்டேன். அதை ஸ்டாலின் கிட்ட கொடுக்கனும். பேப்பர்ல நாகைன்னு போட்டுருந்ததுனால, மாயவரம் இல்லியோன்னு நினைச்சுத்தான் உங்க கிட்ட கேட்டேன் என்றார்.
அவருக்கும் எனக்கும் கடந்த 6 ஆண்டுகளில் நடந்த பல சூடான விவாதங்கள் நினைவில் ஆட, சற்றே ஒரு புன்முறுவலுடன் அவரைப் பார்த்தேன்....
..அவரும் என்னை ஒரு கணம் உற்றுப்பார்த்து, இலேசாக புன்னகைத்து, நான் என்றைக்காவது உங்கள் ஸ்டாலினைப் பற்றி ஒரு குறையாவது சொல்லியிருக்கேனா? அவர் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. உங்க தலைவரும் அவரை முதல்வராக அறிவிப்பார்ன்னு நம்பறேன்.... என்று அவர் பேசும் பொழுதே அவர் கைகளைப் பற்றிக்கொண்டேன்.
உங்கள் நம்பிக்கை வீண் போகாது. கண்டிப்பா அந்த மனுவை உங்கள் கையாலேயே அவரிடம் கொடுங்கள். அவர் அதை நிச்சயம் நிறைவேற்றுவார் என்று சொல்லும் போது என் கண்கள் குளமாகிவிட்டன.
இப்பொழுது தளபதியின் நமக்கு நாமே மக்களின் கைகளுக்குப் போய் விட்டது...!!

Monday, October 26, 2015

திக Vs ஆர் எஸ் எஸ்..! & திமுக Vs பாஜக..!!


ஆர் எஸ் எஸ் என்ற இந்துத்துவா மதவாத இயக்கம், தனது அரசியல் அமைப்பாக உருவாக்கி இயக்கிக் கொண்டிருப்பது தான் பா ஜ க என்ற அரசியல் கட்சி..!

ஆனால் திக விடமிருந்து சமூகநீதி என்ற அடிப்படைக் கொள்கையில் இருந்து ஒரு சிறு மாற்றத்தைக் கூட செய்யாமல், இன்னும் சொல்லப்போனால் அந்த சமூக நீதியை அரசு சட்டத்தின் மூலம் மக்களுக்குக் கிடைக்கச் செய்திட வேண்டும் என்ற நோக்கத்திற்காக...

இறைமறுப்பு உள்ளிட்ட சில விஷயங்களில் மட்டும் மாற்றங்களைச் சேர்த்துக்கொண்டு தனியாக பிரிந்து வந்து துவங்கப்பட்ட இயக்கம் தான் திராவிட முன்னேற்ற கழகம் என்ற அரசியல் கட்சி...!!

இளைஞர்களையும், பெண்களையும், பெரும்பகுதி இந்துக்களையும் திமுகவை விட்டு வெகு தூரம் விலகிப் போக வைக்க... இந்துத்துவாவின் மூளை கட்டமைத்து பரப்புரை செய்திருக்கும், திக Vs ஆர் எஸ் எஸ் - திமுக Vs பாஜக என்ற தவறான கட்டமைப்பை உடைத்தெடுக்கும் முயற்சியின் வெளிப்பாடு தான்...

மு.க. ஸ்டாலின் அவர்களுடைய..., திமுகவினரில் 90 சதவிகிதம் பேர் இந்துக்கள் என்ற பேட்டி...!!

பெரும்பான்மை இந்துக்களுக்கு எதிரான கட்சி, கோவிலுக்குப் போகின்றவர்களை அடித்து விரட்டும் கூட்டம் என்று திமுக பற்றி ஆரிய குறுக்கு புத்தியால் கட்டமைக்கப்பட்டிருக்கும் பிம்பத்தை அடித்து நொறுக்கியிருக்கின்றது...

திமுகவை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி சமூகநீதியை யாரும் அசைத்துப் பார்த்துவிட முடியாத அளவிற்கு உறுதியாக நிலைநாட்டிடும் பயணத்தில் திமுகவின் அடுத்த தலைவர் மிகத் தெளிவான தடத்தில் கால் பதித்திருக்கின்றார்.

வாழ்த்துக்கள் தளபதியாரே... பெண்களும் இளைஞர்களும் உங்களை புரிந்துகொண்டிருக்கின்றார்கள்...!!

ஆரிய அடிவருடி ஊடகங்கள் தான் பதறிப்போய் இதை பிரச்சினையாக்கி பிரச்சாரம் செய்ய முயல்கின்றார்கள், அதில் சில திகவினரும் பலியாகின்றனர்.


Sunday, October 25, 2015

2010 -11 இல் இங்கிருந்த நடுநிலையாளர் எல்லாம் எங்கேய்யா போனாங்க?!


என்ன தான் நடக்குது இங்க நம்ம தமிழ்நாட்டுல? ஆட்சின்னு ஒன்னு நடக்குதா இல்லியா?
கடந்த 2011இல் திமுக ஆட்சியை விட்டு விலகும் போது வெளிச்சந்தையில் வெறும் 62 ரூபாய்க்கும், ரேஷனில் 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்த துவரம் பருப்பு,..,

இன்றைக்கு வெளிச்சந்தையில் 220 ஐ கடந்து உயரே சென்று கொண்டிருக்கின்றது. கொடநாட்டிலிருந்து ஜெயலலிதா, தமிழகம் முழுவதும் மாநகரங்களில் மட்டும் வெறும் 91 கடைகளில் 110 ரூபாய்க்கு மலிவு விலையில் 1ஆம் தேதி முதல் துவரம் பருப்பு தமிழக அரசால் விற்பனை செய்யப்படும் என்கிறார்...!!

ஒரு நாள் கூட தமிழர்களின் உணவு வகைகளில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பயித்தம் பருப்பு, கடலை பருப்பு போன்றவற்றை தவிர்த்து சமைக்கவே முடியாது. என்கிற நிலையில்....

இவ்வகைப் பொருட்களின் விலை திமுக ஆட்சிக்காலத்தில் இருந்ததை விட 200 லிருந்து 300 சதவிகிதம் வரை கூடியிருக்கின்றது என்றால் என்ன அர்த்தம்?????

இதை எந்த ஒரு ஊடகமாவது தட்டிக்கேட்டிருக்கின்றதா? அல்லது விவாதப் பொருளாக்கி அரசை உடனடியாக இந்த விலை உயர்வை கட்டுப்படுத்தும் படி நெருக்கடி கொடுத்திருக்கின்றதா?
இந்த ஆட்சி வந்ததில் இருந்து, நடுத்தர மக்களின் மாத பட்ஜெட்டில் மிகப்பெரிய அளவில் ஜமுக்காளமே விழுந்திருக்கின்றது.

திமுக ஆட்சிக்காலத்தில் ஒரு குடும்பத்தின் பேருந்து கட்டணத்திற்காக மாதச் செலவு 300 ரூபாயாக இருந்தால் அது ஜெயலலிதாவின் புண்ணியத்தில் 660 ரூபாயாக உயர்ந்துள்ளது.

திமுக ஆட்சிக் காலத்தில் ஒரு குடும்பத்தின் பால் செலவு 600 ரூபாயாக இருந்தால், அது ஜெயலலிதாவின் புண்ணியத்தில் 1500 ரூபாயாக உயர்ந்துவிட்டது.
திமுக ஆட்சிக் காலத்தில் ஒரு குடும்பத்தின் மின் கட்டணம் 600 ரூபாயாக இருந்தால் அது ஜெயலலிதாவின் புண்ணியத்தில்2000 ஐ கடந்திருக்கின்றது.

இவை அனைத்துமே தமிழகத்தில் உள்ள ஒரு கீழ் நடுத்தர வர்க்கத்து குடும்பத்தின் மாதா மாதம் தவிர்க்க முடியாத அதிகரிக்கப்பட்ட செலவுகள்... அதாவது இப்படியான ஒரு குடும்பத்தின் மாதச் செலவில் கிட்டத்தட்ட 3000 அதாவது மூவாயிரம் ரூபாயை ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஒவ்வொரு கீழ் நடுத்தர குடும்பமும் மொய் வைத்துக்கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் தான் தற்பொழுதையை இந்த அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு. அரசின் அலட்சியத்தால் அல்லது ஏதோ ஒரு வகையில் கமிஷன், கிமிஷன் என்ற தவறுகளால் இப்படி திடீரென உயர்ந்திருக்கும் இந்த விலையேற்றம் வரும் தீபாவளிக்கு ஒவ்வொரு தமிழக குடும்பத்திற்கும், கூடுதலாக 1500 லிருந்து 10000 ரூபாய் வரை சூடு வைக்க்கும் என்பது சாதாரண கூட்டல் கழித்தல் கணக்கு தெரிந்தவர்களுக்கே புரியும்.

ஆக மொத்தம் அதிமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, இது நாள் வரை ஒவ்வொரு தமிழக குடும்பமும் சராசரியாக மாதத்திற்கு மூவாயிரம் ரூபாய் என்றால் வருடத்திற்கு 36 ஆயிரம் ரூபாயும், நான்கு வருடத்தில் கிட்டத்தட்ட ஒன்னரை லட்ச ரூபாயும், ஜெயலலிதாவின் நிர்வாக சீர்கேட்டால் கூடுதலாக செலவு செய்து விட்டது.

இதில் சொந்தமாக இந்த நான்கரை ஆண்டுகளில் வீடு கட்டியவர்களின் நிலை அதைவிட பரிதாபம். சிமெண்ட் மற்றும் மணல் விலை மட்டுமே திமுக ஆட்சியில் இருந்ததை விட 100 சதவிகிதம் விலை உயர்த்தப்பட்டிருக்கின்றது.

இதை ஏதோ திமுக ஆதரவாளின் பதிவாக கருதாமல், உழைத்து சம்பாதித்து, பட்ஜெட் போட்டு நேர்மையக வாழும் ஒரு தமிழக குடும்பத் தலைவர் தன் மனைவியுடன் அமைதியாக உட்கார்ந்து கணக்கெழுதிப் பார்த்தாலே தெளிவாகப் புரியும்.
ஏன் வர வேண்டும் திமுக ஆட்சி என்ற காரணம் தெளிவாகும்...!!

Saturday, October 24, 2015

நமக்கு நாமே...!!! ஈர்ப்பு...!!!!


அடுத்து தமிழகத்தில் ஆட்சியமைக்க வாய்ப்புள்ள ஒரு கட்சியின் தலைவன்... தற்பொழுது ஆட்சிப் பணியோ, அரசுப் பொறுப்போ இல்லாத நிலையில், அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சிப் பணியும் இல்லாத நிலையில்....
அங்கே, இங்கே சென்று ஓய்வெடுத்து பொழுதைக் கழிக்காமலோ அல்லது சுற்றுலா வாசஸ்தலங்களில் சொந்தமாக 800 ஏக்கரில் எஸ்டேட்டும் மாடமாளிகையும் கட்டிக்கொண்டு அங்கிருந்துகொண்டு பணியாற்றுகின்றேன் என்று பீலா விட்டுக்கொண்டிருக்காமல்....
அடுத்ததாக தங்களை ஆள மக்கள் இன்னொரு முறை தமக்கு வாய்ப்புத் தருவார்களேயானால், அதை முன் எப்பொழுதையும் விட சிறப்பாகச் செய்யும் பொருட்டு, மக்களாலேயே கொடுக்கப்பட்டிருக்கும் இந்த ஓய்வு காலத்தை வீணடிக்காமல் மக்களோடு மக்களாக.., அவர்கள் இருப்பிடத்திற்கே... வசிப்பிடத்திற்கே சென்று...
விவசாய நிலத்தின் சேறு என்றால் எப்படி இருக்கும்? அதில் கால் வைத்தால் என்னென்ன மாதிரியான உணர்வு ஏற்படும்? அந்தச் சேற்றில் இருக்கும் புழு, பூச்சிகள், கல்லு முள்ளுகள் எப்படி காலை பதம் பார்க்கும்? உடலும், உடையும் எப்படி அழுக்காகும்?....,
ஒரு டிராக்டர் ஓட்டுவது எவ்வளவு சிரமமான காரியம்? மோசமான சாலைகளில் சைக்கில் ஓட்டுவதும், ஸ்கூட்டி ஓட்டுவதும் எவ்வளவு கடுமையான செயல்? அரசுப் பேருந்துகளின் தரம் எப்படி இருக்கின்றது? அதில் பயணம் செய்வது எவ்வளவு ஆபத்தான எக்ஸர்ஸைஸ், ரோட்டோர டீக்கடை, இட்லி கடை எல்லாம் எப்படி இருக்கின்றது? அதை நடத்துபவர்களின் கஷ்ட நஷ்டங்கள் என்னென்ன? அவர்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகள் என்னென்ன?....
10 பேர் முதல் 100 பேர் வரை வேலைக்கு அமர்த்தி தொழில் செய்யும் சிறு குறு தொழிற்சாலைகள் உண்மையில் எப்படி இருக்கின்றன? அதில் வேலை செய்பவர்களின் நிலை எப்படி இருக்கின்றது? அதை நடத்துகின்றவர்கள் அன்றாடம் சந்திக்கின்ற பிரச்சினைகள் என்னென்ன?...,
ஒவ்வொரு ஊரிலும் தினம் தினம் கடைத்தெருவில் பல்வேறு காரணங்களுக்காக வந்து செல்லும் மக்களின் தேவைகள் என்னென்ன? அவர்களுக்கு இன்னும் தேவைப்படும் வசதிகள் என்னென்ன? மகளிர் சுய உதவிக் குழுவைச் சார்ந்த பெண்களின் இன்றைய நிலை என்ன, அவர்களின் தேவைகள் என்னென்ன?...,
மாணவ, மாணவிகளின் எண்ணங்கள் என்ன, அவர்களுக்கான கோரிக்கைகள் என்னென்ன? விவசாயிகள் படும் பாடு என்ன, அவர்களது உண்மையான தேவைகள் என்னென்ன? ஓய்வு பெற்ற முதியோர்களின் பிரச்சினைகள் என்ன, அவர்களுக்கான தேவைகள் என்னென்ன? வேலையில்லா பட்டதாரிகளின் நடப்பு நிலை என்ன, அவர்களின் மனக்குமுறல்கள் என்னென்ன?...,
குடும்பத்தலைவிகளாக மட்டுமே இருக்கின்ற பெண்கள் அரசாங்கத்திடம் என்ன எதிர்பார்க்கின்றனர்...,, மலைக்கிராமத்து மக்களின் பிரச்சினைகளும், தேவைகளும் என்ன, கடற்கரையோர மக்கள் மற்றும் மீனவர்களின் பிரச்சினைகள், தேவைகள் என்னென்ன? வறட்சி மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் என்ன, தேவைகள் என்னென்ன?...
இப்படியாக, அனைத்தையும் அனைவரையும், அங்கங்கேயே தேடிச் சென்று, முழுமையான கள ஆய்வை, அந்தத் தலைவன் செய்து கொண்டிருக்கின்றான்.
மக்கள் அந்தத் தலைவனை தேடி ஓடி வருகின்றார்கள். ஒரே மாவட்டத்தில் ஒரு பகுதியில் விவசாயிகளைச் சந்தித்து குறைகளைக் கேட்டுவிட்டார், இன்னொரு பகுதியில் மீனவர்களைச் சந்திக்க மட்டுமே நேரம் இருக்கின்றது, என்கிற போது, இங்கிருக்கும் விவசாயிகளுக்கு கோபம் வருகின்றது. இல்லையில்லை, நாங்கள் அவரைப் பார்த்து எங்கள் குறைகளை நேரில் சொன்னால் தான் திருப்தியாக இருக்கும் என்று உரிமையோடு சண்டையிடும் போது...
பெரிய அளவில் அதிர்ந்து தான் போக வேண்டியிருக்கின்றது. இவர் தான் நம்பிக்கைக்குறிய மனிதர், இவரைத்தான் அடுத்து ஆட்சியில் அமர்த்தவிருக்கின்றோம், இவரிடம் இப்பொழுதே, நம் குறைகளை, தேவைகளை சொல்லிவிட வேண்டும் என்ற அந்த விவசாயிகளின், தொழில் முனைவோர்களின், வியாபாரிகளின், பெண்களின், மாணவ, மாணவிகளின் ஆர்வத்தையும், அவசரத்தையும் நன்றாக உணர முடிகின்றது.
இவர் செல்லும் இடங்களில் எல்லாம் நடப்பு ஆட்சியாளர்கள், தங்களது சாதனையாக சில காமெடிகளை எழுதி பேனர் வைத்து நிறப்பிக்கொண்டிருக்க, மக்களோ, தஙகளது கோரிக்கைகளை மனுக்களாக எழுதி இவரிடம் தந்து விட ஓடி வருகின்றார்கள்.
இவர் வாயால், கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்ற உத்திரவாதம் பெற்றவுடன், வாழ்க்கையைத் துவங்கும் போதே கடனாளியாக தவித்து நிற்கின்றோமே என்று எண்ணித் தவித்துக்கொண்டிருக்கும் மாணவ, மாணவிகளும், பட்டதாரிகளும் துள்ளிக் குதித்து இவருக்கு செம்மையாக ஒரு ஓ போடுகின்றனர்.
இப்படி நேரடியாக ஒரு கள ஆய்வினை முடித்து நாளை ஆட்சிக்கு வரும் வாய்ப்புக் கிட்டிடுமேயானால், நிச்சயமாக மக்கள் தேவைகளை இவருக்கு எடுத்துச் சொல்ல, புத்தகப் புழுக்களான அதிகாரிகளின் உதவியோ, பல்வேறு நிலைப்பாடுகளில் இருக்கும் அமைச்சர்களின் உதவியோ இவருக்குத் தேவையில்லை. அனைத்தையும், அனைவரையும் நேராகக் கண்டு, பேசி, கருத்துப் பறிமாற்றம் செய்து வந்திருக்கின்றார். இவருக்கும் மக்களுக்கும் இடையில் இனி எந்த இடைத்தரகரும் தேவையில்லை...!
நிச்சயம் ஒரு நல்லாட்சியை இவர் தந்தே தீருவார். மக்களிடம் அந்த நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது.
திமுக தொண்டர்கள் எல்லோரும், இவர் வருவதற்கான ஆயத்தப்பணிகளை செய்து விட்டு, இவர் வரும் பொழுது, மக்களிடம் இவரை விட்டுவிட்டு தாமாக விலகிச் சென்று நிற்கின்றார்கள். அவர்களுக்கு இது புது அனுபவம் தான்.... ஆனாலும் இதை ரொம்ப சந்தோஷமாகத்தான் செய்கின்றார்கள். காசு கொடுக்காமல், குவாட்டர் வாங்கித்தராமல், வேன் வைக்காமல் இவ்வளவு பேர் அவரைப் பார்க்க வேண்டும் என்று தங்களிடம் கோரிக்கை வைப்பதை பெருமையாக உணர்கின்றார்கள்.
தங்களது செயல்பாடுகளிலும் தங்கள் தலைவனைப் போன்று பக்குவமான, முதிர்ச்சியான, மக்கள் விரும்புகின்ற வகையிலான மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்று பலர் முனைப்பு காட்ட ஆரம்பித்துவிட்டனர்.
எதிர்களின் கிண்டல், கேலிகள், விமர்சனங்கள் அனைத்தையும் புறம் தள்ளி விட்டு முழுமையான வெற்றிப் பயணமாக, இதோ மூன்றாவது கட்டத்தில் நாளை மறுநாள் சேலத்தில் மையம் கொள்கிறது...!!

வாருங்கள்...   மக்கள் மனங்களை வெல்லுங்கள் தளபதியாரே...!



மு.க.ஸ்டாலின் - நமக்கு நாமே...! முதல் பார்வை


திராவிட முன்னேற்ற கழகத்தின் இன்றைய பொருளாளரும்..., அடுத்த தலைவருமான தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களுடைய நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம், தமிழக மக்கள் மத்தியில் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி தமிழகத்தின் மொத்த சட்டமன்ற தொகுதிகளில் சரிபாதியை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கின்ற நிலையில்...
அதிமுக உள்ளிட்ட தமிழகத்தின் கிட்டத்தட்ட அனைத்து மாற்றுக்கட்சித் தலைவர்களும்..., அவர்களுக்கு ஆதரவான அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடகங்களும், இந்த பிரச்சாரப் பயணத்தை ஆரம்பத்தில் கிண்டலும், கேலியும் செய்து வந்த நிலை மாறி தற்பொழுது விமர்சனங்களை வைக்கின்ற அளவிற்கு நிலைமை முன்னேற்றம் கண்டிருக்கின்றது.
நமக்கு நாமே பயணத்திற்கு எதிராக மாற்றுக்கட்சி தலைவர்களால் வைக்கப்படும் விமர்சனங்களில் முக்கியமானதாக ஒரு சிலவற்றைச் சொல்ல வேண்டுமானால், இத்தனை நாளாக இப்படி மக்களை வந்து சந்திக்காமல், இப்பொழுது திடீர் என்று வந்து சந்திப்பதன் காரணம் என்ன? இது தேர்தலுக்கான நாடகம் தானே? இதனால் திமுகவுக்கு எந்த பலனும் கிடைக்காது... இப்படியாகத்தான் செல்கிறது அந்த விமர்சனங்கள்.

இந்த விமர்சனத்தின் அடிப்படையான கருப்பொருள் ஒன்றே ஒன்று தான். அதாவது இத்தனை நாளாக செய்யாத ஒரு நல்ல காரியத்தை இப்பொழுது மட்டும் செய்வதன் காரணம் என்ன என்ற கேள்வியில்..., தளபதியின் இந்த மக்கள் சந்திப்பு என்பது ஒரு தவறான செயல் கிடையாது என்பதை முதலில் அந்த விமர்சகர்கள் ஏற்றுக்கொள்கின்றார்கள். மேலும் இதை ஒரு நல்ல செயலாக அவர்களே ஒத்துக்கொள்ளவும் செய்கின்றார்கள்.

இன்னும் ஒரு படி மேலே போய், காலம் தாழ்ந்து செய்தாலும், ஒரு நல்ல செயலை இந்தத் தலைவர் செய்வதால் மக்கள் மத்தியில் இவருக்கு நல் ஆதரவு பெருகிவிடுமோ என்ற பதற்றத்திலும், பயத்திலும் தான், இதை ஒரு நாடகம் என்று முத்தாய்ப்பு வைக்கின்றார்கள்.
அதாவது எதிரிகளின் விமர்சனங்கள், அவர்களுக்கே திருப்தி தராத நிலையில் தான், மக்களே..., இதை நம்ப வேண்டாம், இது வெறும் நாடகம் என்று வாதாடுகின்றார்கள்.
கடைசியாக இந்தப் பயணத்தினால் திமுகவுக்கு எந்தப் பயனும் இல்லை என்று தங்களைத் தாங்களே திருப்திப் படுத்திக்கொள்வதோடு, தளபதியின் இந்த பயணத்தினால் திமுகவுக்கு மக்கள் மத்தியில் கிடைத்திருக்கின்ற பெரும் வரவேற்பைக் கண்டு தங்கள் கட்சித் தொண்டர்கள் துவண்டு விடக் கூடாது என்பதற்காகவும், இப்படியொரு சப்பைக்கட்டையும் கட்டுகின்றார்கள்.
இதெல்லாம் எது எப்படி இருந்தாலும், தளபதி ஏன் இத்தனை ஆண்டுகளாக இல்லாமல் இப்பொழுது மட்டும் மக்களை அவர்கள் இருப்பிடத்திற்கே சென்று சந்திக்கின்றார் என்ற எதிரிகளின் கேள்விக்கு சரியான விளக்கம் தந்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடு தான் இக் கட்டுரை.
இந்த விமர்சகர்கள் எல்லாம் சொல்வது போல தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏதோ இத்தனை காலமும் ஏசி ரூம், சில்வர் ஸ்பூன் என்று சென்னையில் மட்டுமே வாழ்ந்து காலம் தள்ளியவர் கிடையாது. தனது தந்தை கட்சியின் தலைவர் ஆவதற்கு முன்பே கழகத்தின் இளைஞர் அணியை உருவாக்கி தமிழகத்தை வலம் வர ஆரம்பித்தவர் தான் ஸ்டாலின்.
நாற்பத்தைந்து ஆண்டுகளாக... கிட்டத்தட்ட அரை நூற்றாண்டைக் கடந்து கொண்டிருக்கின்றது, அன்றைக்குத் துவங்கிய அவரது தமிழகப் பயணம். அவரது தந்தை முதல்வராக இருந்து மத்திய அரசின் பெரும் அடக்கு முறைக்கு எதிராக வெகுண்டெழுந்து போராடிய போதே, முதல் நபராக அதில் கலந்து கொண்டு, திருமணமான நான்கே மாதத்தில் ஓராண்டு காலம் சிறை சென்றவர் தான் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள்.
எம் ஜி ஆர் திமுகவை விட்டுப் பிரிந்து 13 ஆண்டு காலம், திமுக எதிர்க்கட்சியாகக் கூட இல்லாமல் இருந்த நிலையில், தமிழகம் முழுவதும் சுற்றித்திரிந்து, இளைஞர்களைத் திரட்டி, கழகத்தின் இளைஞரணியை ஒரு கட்டுக்கோப்பான அமைப்பாக உருவாக்கி, கழகம் மீண்டும் 89 இல் ஆட்சியைப் பிடிக்க பெரும் பக்க பலமாக இருந்தவர் தான் தளபதி ஸ்டாலின்.
மீண்டு(ம்) ஆட்சிக்கு வந்த திமுகவை வீழ்த்த நவீன எம் ஜி ஆராக ஆரியர்களால் உருவாக்கப்பட்ட வைக்கோ, திமுகவை விட்டு வெளியேறிய போது, எம் ஜி ஆர் ஏற்படுத்திய அந்த தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் போனதற்கு, வலுவான இளைஞரணியை தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் கட்டமைத்து வைத்திருந்தது தான் காரணமாக அமைந்தது.
சென்னை மாநகர மேயராக இருந்த போதும் கூட அவர் இதோ இன்றைக்கு மக்களைத் தேடி ஓடி வருவது போலத்தான் சென்னை மாநகர் முழுவதும் சுற்றிச் சுற்றி அற்புதமான பாலங்களை தனது நேரடி மேற்பார்வையில்... திட்டமிட்ட காலத்திற்கு முன்னதாகவும், திட்டச் செலவை விட குறைவான செலவிலும் கட்டி முடித்து, சாதாரண சென்னையை சிங்காரச்சென்னையாக மாற்றும் முதற்படியில் ஏறி நின்றார்.
உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த பொழுது தமிழகம் முழுவதும் சுற்றித்திரிந்து இதே அடித்தட்டு மகளிரை நேரடியாக சந்தித்து அத்தனை லட்சம் பேருக்கும் தனது கரங்களாலேயே சுழல்நிதியை வழங்கி கிராமப்புற பெண்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தியவர் தான் தளபதி. அதை முழுமையாக இன்றைக்கு உணர்ந்துள்ள அந்தப் பெண்கள் தான், ”அந்த நாளும் வந்திடாதோ” என்ற ஏக்கத்தில் இன்றைக்கு தங்கள் தங்கள் ஊருக்கு வரும் தளபதியை நேரில் சந்தித்து, தங்கள் குமுறல்களை கொட்டித்தீர்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
துணை முதல்வராக இருந்த பொழுது எங்கெங்கு எல்லாம் சென்று நிதியைத் திரட்ட முடியுமோ அங்கெல்லாம் நேரடியாகச் சென்று பேசி நிறுவனங்களையும், நிதியையும் திரட்டிக்கொண்டு வந்து, மெட்ரோ ரயில், ஒக்கேனகல் கூட்டுக் குடிநீர் திட்டம், எட்டு மின் உற்பத்தி திட்டங்கள், கடல்நீர் குடிநீராக்கும் திட்டம், பறக்கும் பாலங்கள், தென்னக நதி நீர் இணைப்புத் திட்டங்கள், புறவழிச் சாலைகள், அரசு அலுவலகங்களுக்கு அருமையான கட்டிடங்கள், ஒவ்வொரு நகரத்திலும் சுற்றுச் சாலைகள்... இப்படியாக தமிழகத்திற்குத் தேவையான எண்ணற்ற தொலைநோக்குத் திட்டங்களையும், முதலீட்டாளர்களைக் கவர்ந்திழுக்கும் உட்கட்டமைப்பு வசதிகளையும், பெரிய பெரிய தொழிற் பூங்காக்களையும் உருவாக்கி..., இன்றைய ஜெயலலிதா அரசு அவற்றைக் காட்டித்தான் உலக முதலீட்டாளர்களை அழைக்கும் நிலையை உருவாக்கியவர் தான் தளபதி மு.க. ஸ்டாலின்.
ஒரு நாட்டில் உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் பொழுது, பல லட்சம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு உருவாக்கப்படுவதும், அதைச் சார்ந்த எண்ணற்ற தொழிற்சாலைகள் உருவாகுவதும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதும், மக்களிடம் வெகுவான பணப்புழக்கம் ஏற்படுவதும் என்று.... இவர் செய்த காரியங்கள் அனைத்துமே நேரடியாக அடித்தட்டு மக்களுக்கே பயனுள்ளதாக சென்றடைந்ததை, மனசாட்சி உள்ள எவருமே மறுக்க முடியாது.
சரி... இவற்றையும் மீறி, திமுகவில் சிலர் மூலம் நடந்த தவறுகளுக்காக மக்களால் மாற்றம் கொண்டு வரப்பட்டு, திமுக என்பது அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாகக் கூட இல்லாத நிலையில்.....
ஆட்சி பறிபோன அடுத்த நாளில் இருந்தே, அவர் தனது பயணத்தை துவக்கி விட்டார். முதலில் திமுக தொண்டர்களை சோர்ந்து போக வைக்க, அவர்கள் மீது தொடுக்கப்பட்ட பொய் வழக்குகளில் இருந்து மீட்க, அவர்களை நேரடியாகச் சென்று சந்தித்து, கட்சி உருக்குலைந்து போகாமல் கட்டிக் காப்பாற்றினார்....!
திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட சமச்சீர் கல்வி, புதிய தலைமைச் செயலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம்... ஆகியவை பறிபோகாமல் இந்த அரசிடம் இருந்து காப்பாற்ற சட்டப் போராட்டத்தையும் வெற்றிகரமாக நடத்திக் காப்பாற்றினார். தன்னை எம் எல் ஏ வாக தேர்ந்தெடுத்த கொளத்தூர் தொகுதி மக்களை மாதம் தவறாமல் நேரடியாக சந்தித்து குறைகளைக் கேட்டுப் பெற்று, அவற்றுக்கான நிவாரணங்களை சட்டப்பூர்வமாக வழங்கி, ஒட்டுமொத்த தமிழக எம் எல் ஏக்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகின்றார்.
வருடாவருடம் அண்ணா பிறந்த நாளில் இளைஞர் அணியின் சார்பாக அந்தந்த ஆண்டு 10வது மற்றும் +2 தேர்வுகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்கள் மற்றும் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகளை அவர்கள் பெற்றோருடன் அழைத்து, அழைத்து என்றால், அந்தந்த மாவட்டத்திலும் பேருந்துகளை ஏற்பாடு செய்து, ஒரு பைசா செலவில்லாமல் அழைத்து வந்து தக்க மரியாதையுடன் தங்க வைத்து பணம் மற்றும் சான்றிதழ்களை தனது கரங்களாலெயே அளித்து, உணவுடன் மீண்டும் அவர்கள் வீடு வரை கொண்டு சென்று விட்டு வரும் நிகழ்வையும் நடத்தி வருகின்றார்.
அதேப் போன்று கலைஞர் பிறந்தநாளிலும், தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளிகளில் மாணவ, மாணவிகளிடையே பேச்சுப்போட்டி நடத்தி, மாவட்ட வாரியாக முதல் மூன்று இடங்களைப் பெரும் மாணவச் செல்வங்களை இதேப் போன்று அழைத்து பரிசுகளும், சான்றிதழும் தன் கரங்களாலேயே கொடுத்து மாணவர்களை ஊக்கப்படுத்தும் நவீன அப்துல் கலாமாக திகழ்பவர் தான் தளபதி.
ஏதோ பேச வேண்டும் என்பதற்காக எதிரிகள், தளபதியைப் பார்த்து இன்றைக்கு திடீர் என மக்களை வந்து சந்திப்பதாக புலம்புவது தான் அபத்தத்தின் உச்சம். ஆட்சியில் இருக்கும் போது செய்ய வேண்டிய தனது கடமைகளை தவறாமல் செய்த ஸ்டாலின் அவர்கள், ஆட்சியில் இல்லாமல், அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி அந்தஸ்த்து கூட இல்லாத நிலையில்...
செய்ய வேண்டிய தமது கடமைகளை மிகத் தெளிவாக எந்தத் தொய்வும் இன்றி செய்து வருகின்றார். இதோ இன்னும் 7 மாதத்தில் தேர்தல் வரவிருக்கின்ற நிலையில், நடப்பு ஜெயலலிதா ஆட்சியின் அவலங்களால், தினம் தினம் நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கும் மக்களை அவர்கள் இருப்பிடத்திற்கே நேரடியாகச் சென்று சந்திக்கின்ற அவகாசமும் அவருக்கு இருக்கின்ற நிலையில்...

அதை வீணாக்காமல், போய் மலை உச்சியில் ஓய்வெடுத்துக்கொண்டிராமல், இந்த தனது அவகாச காலத்தையே ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு, மக்களைத் தேடி, அவர்களை நாடி அவர்கள் இடத்திற்கே சென்று பார்த்து, பேசி, கலந்துரையாடி, தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்புக்கொடுத்தால், அவர்கள் குறைகளை எல்லாம் நிவர்த்தி செய்வோம் என்று வெளிப்படையாக அவர்கள் முன்னனியிலேயே வாக்குறுதி கொடுத்து வருகின்றார்.

அவர் மீது நம்பிக்கை இருப்பதால் தான், மக்களும் அவரை நம்பி வந்து தங்களது கோரிக்கைகளை முன் வைக்கின்றார்கள். மனுக்கள் தருகின்றார்கள், வாக்குறுதிகளைக் கேட்கின்றார்கள்.
கடந்த திமுக ஆட்சியில் சில தவறுகள் நடந்திருப்பதை மனதார மக்களிடம் ஏற்றுக்கொண்டிருக்கின்றார். அடுத்து வரும் தங்கள் ஆட்சியில் அது முற்றிலும் அகற்றப்படும் என்று வாக்குறுதி தந்துள்ளார். 15 நாட்களுக்கு ஒரு முறை அமைச்சர்களும், எம் எல் ஏக்களும் மக்களை நேரடியாக சந்திக்கும் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். மாணவர்களின் கல்விக்கடன் நீக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
திமுகவுக்கு எதிரானவர்கள் என்று கருதப்படும் கோவில் குருக்கள்கள் கூட அவரைச் சந்தித்து மனு கொடுக்கின்ற அளவிற்கு அவர் மீதான நம்பிக்கை மக்களிடம் வேரூன்ற ஆரம்பித்து விட்டது.
கடைசியாக, அவர் கலர் கலராக சட்டை பேண்ட் அணிந்து செல்கின்றார் என்று கூட விமர்சனம் வைக்கின்றார்கள்....
மக்களோடு மக்களாக...., நமக்கு நாமே என்று அவர் செல்லும் பொழுது, மக்களுடைய அண்ணனாக, தம்பியாக, தந்தையாக, தனையனாக, அவர்களோடு ஒருவராகச் செல்வதில் என்ன தவறு இருக்கின்றது? பொதுவாகவே வெள்ளை வேட்டி, மொட மொட சட்டை அரசியல் வாதிகளிடமிருந்து மக்கள் சற்று தள்ளி நிற்கவே விரும்புகின்ற நிலையில், மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப மக்களோடு ஒருவனாக அவர் செல்வதில் எந்தத் தவறும் இல்லை. அதைத் தவறு என்று மக்கள் சொன்னால் அதையும் அவர் மாற்றிக்கொள்வார். எதிரிகள் அதைச் சொல்லக் கூடாது.!
தமிழக அரசியலில்... ஏன்? ஒட்டுமொத்த இந்திய அரசியலிலும், மக்களோடு நெருங்கிப் பழகி, அவர்களின் குறைகளைக் களைய, தனியொரு பாதை அமைத்து....
இனி இப்படித்தான் ஒவ்வொரு அரசியல்வாதியும் செயல்பட வேண்டும் என்ற புது இலக்கணத்தை... புத்தம் புதிய அரசியல் இலக்கணத்தை....
தனியொருவனாக..... தளபதி எழுதிக்கொண்டிருக்கின்றார்....

அதன் பெயர் தான்...
நமக்கு நாமே...!!