Saturday, October 31, 2015

ஃபீனிக்ஸ் மால்... ஆயிரம் கோடி... ஜெ. சசி... இன்னபிற...!

இதோ எனக்கு முன்னால் நான் சொல்வதை எல்லாம் வாய் பிளந்து கேட்டுக்கொண்டிருக்கும் குத்தத்தின் குத்தங்களே....
நான் கேட்கிறேஏஏஏன்ன்ன்....

இந்த திமுக காரவிங்க எல்லாம்..., என்னவோ அவிங்க தலைவர் ஆயிரம் கோடி ரூபாய்க்கு புதிய தலைமைச் செயலகம் கட்டியதாக பீற்றிக்கொள்கிறார்களே....

அதை அவர் என்ன தன் சொந்த காசில் கட்டினாரா? அரசாங்க பணத்தில் தானே கட்டினார்...! அதை அவர் பெயரில் ரிஜிஸ்டர் செய்துகொள்ள முடியுமா? இல்லை அவர் நினைத்தால் வேறு யாருக்காவது விற்கத்தான் முடியுமா?!

அதெல்லாம் போகட்டும் அவர் ஆட்சி போனவுடன், அதை எங்காத்தா சின்னாபின்னப் படுத்தி, கடைசியில் மருத்துவமனையாகவும் மாற்றினாரே... குறைந்த பட்சம் அதையாவது உங்க தலைவரால் தடுக்க முடிந்ததா?! முடியாது... ஏன்னா? அது அரசாங்க சொத்து....!

அரசாங்க காசை வைத்து உங்களுக்கு ஒரு செங்கல் கூட சொந்த்தம் கொண்டாட முடியாத ஒரு கட்டிடம் கட்டியதையே பெருமையாக பேசுகின்றீர்களே....

இதோ எங்காத்தா... ஆத்தான்னா... ஆத்தாவோட கூட பொறக்காத சின்னாத்தா... சொந்த காசப்போட்டு ஆயிரங்கோடி ஓவாவுக்கு ஒக்கே ஒக்க பில்டிங்க் உள்ளாற பதினோரு சினிமா கொட்டாய எவனோ கட்டி வச்சிருந்தத... சொம்மா கைய சொடுக்குற நேரத்துல வாங்கியிருக்காங்களே... இந்த சாதனைய உங்க தலைவரால ஈடு செய்ய முடியுமா???!!!

எங்காத்த நெனச்சா, அதை எப்ப வேணா யாருக்கு வேணா காசுக்கு விக்கலாம், இல்லன்னா அப்புடியே சும்மா வச்சிக்கலாம்... ஆனா எங்க ஆட்சியே போனாலும் ஒரு பய அதுல கைய வக்க முடியுமா சொல்லுங்க திமுககாரவிங்களே.....!!!

அரசங்கத்து காசுல ஆயிரம் கோடிக்கு கட்டிடம் கட்டினவிங்க பெரிய ஆளுங்களா? இல்லின்னா தன் சொந்த காசுல ஆயிரம் கோடிக்கு சொந்தமா பில்டிங் வாங்குன எங்காத்தா பெரிய ஆளா???!!!

சொல்லுங்க மக்கா... சொல்லுங்க....!!!

இப்படிக்கு :  மைக் டைசன்..!


Friday, October 30, 2015

சாதி கலவரங்களை நோக்கி நகர்கின்றதா தமிழகம்?!


ஒரு மாநிலத்தில் மத ரீதியிலான கலவரங்களை தூண்டிவிட்டு பலனடையும் பாஜகவின் உத்தியை பயன்படுத்தி... தமிழகத்தில் சாதி மோதல்களை உருவாக்கி அதிமுக குளிர்காய நினைக்கிறதோ என்று தான் சமீப காலமாக தமிழகத்தில் அரங்கேறி வரும் நிகழ்வுகள் சந்தேகப்பட வைக்கின்றது. 

இளவரசன், கோகுல்ராஜ், விஷ்ணுபிரியா...  போன்றவர்கள் கொலையுண்டதோ அல்லது தூண்டப்பட்ட தற்கொலைகளோ அரசால் போதுமான அளவில் கண்டுகொள்ளப்படாமல், உண்மையான குற்றவாளிகள் சரியாக கண்டிக்கப்படாமலோ அல்லது கண்டுபிடிக்கப்படாமலோ அல்லது தண்டிக்கப்படாமலோ இருப்பதும்...

சில அடாவடி சாதி சார்பு ஆட்களை சில பல பொதுப் பெயர்களில் கட்சி ஆரம்பிக்க வைத்து, அவர்களை தங்கள் கண்ணசைவிற்கு ஏற்ப ஆட்டம் போட வைத்தும், தங்கள் அரசியல் எதிரிகளை அவர்களை வைத்து கடுமையாக விமர்சனம் செய்ய வைப்பதும், தங்கள் தரப்பு வாதங்களை நியாயப்படுத்தும் பிரச்சார பீரங்கிகளாக அவர்களை பயன்படுத்திக் கொண்டும்....

இப்படியெல்லாம் செயல்படுவதற்காக அவர்களுக்கு ஒன்றிரண்டு எம் எல் ஏ சீட்டுக்களை தூக்கிப் போடுவதும்,  அல்லது இன்னபிற லௌகீக உதவிகள் உட்பட அந்த கட்சித் தலைவர்களின் சாதி வெறி அட்டகாசங்களை கண்டுங்காணாமல் இருப்பதும்.....

என்று ஆளுங்கட்சியான அதிமுகவின் அல்ட்ரா மாடர்ன் ஃபார்முலா தான் இந்தக் கட்டுரையின் முதல் பத்திக்கான காரணமாக சந்தேகம் கொள்ள வைக்கின்றது...!

வேல் முருகன், சரத்குமார், சீமான், தனியரசு...   போன்று இப்படிச் சிலர், திமுக என்ற கட்சி ஆட்சியில் இருக்கும் போதும் சரி, ஆட்சியில் இல்லாத போதும் சரி திமுகவை மட்டுமே வசை பாடுவதும், அதிமுகவை அவ்வப்பொழுது புகழ்ந்து சாமரம் வீசுவதும் அல்லது மறுக்க முடியாத அதிமுகவின் தவறுகளுக்குக் கூட பட்டும் படாமல் ஒரு சில துறை சார்ந்த அதிகாரிகளை கண்டித்து கடந்து போவதுமாக இருப்பதைக் கொண்டே இந்த வாதத்தை நாம் ஊர்ஜிதம் செய்து கொள்ளலாம். 

இவர்களின் இந்த மாதிரியான போக்கினால் இது வரையிலும் அதிமுகவின் எதிர்க்கட்சிகள்... குறிப்பாக திமுக போன்ற கட்சிகள் மட்டுமே காயங்களை சுமந்து வந்த நிலையில்...  இதன் எல்லை எது என்பதை தற்பொழுது தமிழகம் அதாவது பொது மக்கள் அனுபவிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து கடைசியில் மனிதனையே கடிக்க வந்து விட்ட கதையாக....

நடிகர் சங்க தேர்தலில் இதுவரை இல்லாத இயல்பாக, மிக அறுவருக்கத்தக்க வகையில் சாதியை முன்னெடுத்து ஒரு சாரார் மிகக் கேவலமாக, அடாவடித்தனமாக பேசி வந்ததும்...

தங்கள் அலுவலக வாசலை ஒட்டி வாகனங்களை நிறுத்திய கீழ் நடுத்தர வர்க்கத்து விற்பனை பிரதிநிதிகளின் வாழ்வாதாரமாக விளங்கக் கூடிய இரு சக்கர வாகனங்களை அடித்து நொறுக்கியதும்...

அதை சட்ட ரீதியாக காவல்துறை பாதுகாப்புடன் அணுகிய அந்த அப்பாவிகளை காவல் துறையினர் முன்பே அரிவாள், உருட்டுக்கட்டை போன்றவற்றால் ஒரு சாதிக்கட்சியினர் கொடூரமாகத் தாக்கியதும்...

அதைவிடக் கொடுமையாக அப்படி தாக்கியவர்களை காவல்துறையினர் கெஞ்சிக் கூத்தாடி சமாதானப்படுத்துவதும்,  காவல் துறையினரையே அந்த ரௌடிகள் எச்சரிப்பதும்....

இவை அனைத்திற்கும் மேலாக சீமான என்ற கட்சித் தலைவர், ஒரு தொலைபேசி உரையாடலில், ஒரு சாதி நபரை தரக்குறைவாக பேசியும், தன் சாதியை உயர்த்திப் பிடித்தும், அடுத்து அவர் சீமானை கேவலமாகப் பேசியும்....  அதற்கு மீண்டும் சீமான் அதை விட கேவலமாக பதிலளிப்பதும் என்று....

ஒரு அசாதாரண சூழல் தமிழகத்தில் நிறுவப்படுவதை தற்பொழுது நுண்ணியமான அரசியல் நோக்கர்களால் உணரமுடிகிறது.  ஆனால் இதுவரையிலும் இப்பிரச்சினைகள் குறித்து அரசு மௌனமாய் இருப்பது,...

இந்த சாதி அடிப்படையிலான உரையாடல்கள் மூலம் தமிழகத்தில் மிகப் பலமான இதுவரையிலும் கண்டிராத சாதி மோதல்கள் ஏற்பட்டுவிடுமோ என்ற ஐயத்தை அடிமனத்தில் உருவாக்குகிறது.

அதிமுக ஆட்சியின் செயலற்ற தன்மையையும், அதன் மீதான மக்கள் அதிருப்தியும், அதை அழகாக திமுகவின் வருங்காலத் தலைவர் அறுவடை செய்து வருவதையும், நேர்மையான வழியில் எதிர்கொள்ள இயலாத ஜெயலலிதா அரசு, இப்படி சாதி மோதல்களை தமிழகம் முழுவதும் உருவாவதன் மூலம், மக்கள் கவனத்தை திசை திருப்பும் குயுக்தியை கையாள்கின்றதோ என்று தான் பொதுவான அரசியல் நோக்கர்களால் கணிக்கப்படுகின்றது.

எது எப்படி இருந்தாலும் கடந்த ஐம்பது ஆண்டுகளாக..   நடுவில் கோவை குண்டு வெடிப்புக் கலவரமும் அதைத்தொடர்ந்தான பாஜகவின் கோவை மண்டல வளர்ச்சியையும் தவிர்த்து வேறு எந்த சாதி மத கலவரங்களும் மக்களை பாதிக்காத நிலையில்...

இப்பொழுது தமிழகத்திற்குப் புதியதான...  தமிழகம் தழுவிய  இடைநிலை சாதிகளுக்கிடையிலான மோதல் உருவானால், அது தமிழகத்தில் வசிக்கும் அனைத்துச் சாதி மதத்தைச் சேர்ந்த அப்பாவி பொது மக்களையும், தத்தமது வீடுகளை விட்டே வெளியில் கால் வைக்க பயப்படும் சூழ்நிலையை உருவாக்கி விடுவதோடு,  தமிழகத்தை 100  ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிவிடும் ஆபத்தும் இருப்பதை ஒவ்வொரு தமிழக குடிமகனும் உணர்ந்து கொள்ள வேண்டிய தருணம் இது..!

பேயாட்சி செய்தால்...   பிணம் தின்னும் சாத்திரம்...

எவ்வளவு தொலைநோக்கிலான சொல்லாடல் என்பது இப்பொழுது புரிகிறது...!



Tuesday, October 27, 2015

அரசியல் கதம்பம் - ஈழ வியாபாரம் மற்றும் மின் மிகை மாநில புரட்டு..!

***02.10.2015***
ஈழப்போர் விவகாரத்தில் திமுகவையும், கலைஞரையும் குறை கூறி வாய் கிழிய விமர்சித்து, திமுகவுக்கு எதிராக தேர்தலில் கடும் பிரச்சாரமும் செய்து ஈழப்பாசத்தைக் காட்டிக்கொண்டு விட்டு.....
இன்றைக்கு ஐநா தீர்மானத்தில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்து வெற்றிபெறச் செய்த மோடி அரசினையும், அந்த மோடி அரசுக்கு ஆதரவாக களமாடுகின்ற ஜெயலலிதாவையும் விமர்சிக்காமல் மௌனம் காக்கும் அனைவரையும், பொட்டைகள் என்றும் சொல்லலாம், அல்லது காசுக்காக ஈழத்தைக் காட்டிக்கொடுத்தவர்கள் என்றும் சொல்லலாம்.
ஈழப்போரில் திமுகவால் எதையுமே செய்ய முடியாது என்பது தான் யதார்த்த நிலை. அப்படியிருந்தும் அது சம்பந்தமான தனது எதிர்ப்பை திமுக எப்பொழுதுமே பதிவு செய்து தான் வந்திருக்கின்றது. போருக்குப் பிறகான ஐநா தீர்மானங்களில் அன்றைய மத்திய அரசு இலங்கைக்கு ஆதரவாக செயல்பட முடியாத அளவிற்கு திமுக கடைசி வரை தடை ஏற்படுத்தியும் வைத்திருந்ததை உண்மையான ஈழ உணர்வாளர்கள் இன்றைக்கு உணர முடியும்.
காமன்வெல்த் மாநாட்டுக்கு கூட பிரதமர் மன்மோகன் சிங்கை இலங்கை செல்ல விடாமல் தடுத்ததில் திமுகவின் பங்கு அளப்பறியது.
ஆனால் வைக்கோ, ராமதாஸ் போன்றவர்கள் எல்லாம் ஆதரித்து ஆட்சிக்கு வந்த மோடி தன் பதவியேற்ப்புக்கே ராஜபக்‌ஷேவை அழைத்து ஷாக் கொடுத்ததும், ஐநாவில் இலங்கைக்கு ஆதவரவாக களமாடி வெற்றிபெற வைத்ததும், தமிழக அரசியல் கட்சிகளின் விருப்பத்திற்கு ஏற்ப மத்திய அரசு இலங்கை விவகாரத்தில் செயல்பட முடியாது என்று பொன். ராதாகிருஷ்ணன் சொல்வதும், 37 எம் பிக்களை வைத்துக்கொண்டு, மத்திய அரசுக்கு பாதுகாப்பு அரணாக செயல்படும் ஜெயலலிதா, இது பற்றியெல்லாம் மோடி அரசை நிர்ப்பந்திக்காமல் இருப்பதும்.....
ஈழத்தை வைத்து பிழைப்பு நடத்தும் வைக்கோ, நெடுமாறன், சீமான், தா.பா, தமிழருவி, இன்னபிற ஈழ வியாபாரிகளுக்கு வேண்டுமானால் உரைக்காமல் இருக்கலாம் அல்லது உரைக்காதது போல் நடிக்கலாம்...
ஆனால் இவர்கள் பேச்சைக்கேட்டு, திமுகவை விமர்சித்த உண்மையான உணர்வுள்ள நடுநிலை இளைஞர்கள், திமுக மட்டுமே அனைத்து தரப்பு, அனைத்துப் பகுதி தமிழர்களுக்குமான பாதுகாப்பு இயக்கம் என்பதை இப்பொழுதாவது உணர வேண்டும். திமுக இம்மாதிரியான பிரச்சினைகளை அரசியல் ரீதியாக மட்டுமே எதிர்கொள்ளும் என்றும், அது மட்டுமே இப் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வைத் தரும் என்றும் அழுத்தமாக நம்புகிறது என்பதையும் இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
வைக்கோ, சீமான் போன்றவர்களின் சுயநலத்திற்காக உணர்ச்சிவயப்பட்டு செய்யப்படும் செயல்கள், பேரழிவை ஏற்படுத்துவதோடு, அந்த அழிவிற்குப் பிறகான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தகர்த்து விடும் என்பதை இப்பொழுதாவது உணர்ந்துகொள்ள வேண்டும்.
கலைஞரின் உண்ணாவிரதத்தை குறை கூறும் முன்பாக அப்படியொரு உண்ணாவிரதத்தை இருந்து வைக்கோ, சீமான் போன்ற யாராவது ஒருவர் உயிர் துறந்திருக்கின்றார்களா என்ற கேள்வியைக் கேட்டுவிட்டே கிண்டல், கேலியைத் துவங்க வேண்டும்.
***30.09.2015***
ஆட்சிக்கு வந்தால் மூன்றே மாதத்தில் மின் தடையை நீக்கும்வோம் என்றும், ஆட்சிக்கு வந்து ஒரே வருடத்தில் மின்மிகை மாநிலமாக மாற்றுவோம் என்றும் வாக்குறுதி தந்து தான் ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சிக்கு வந்தது.
ஆனால் இந்த ஆட்சி முடிவதற்கு இன்னும் ஏழே மாதங்கள் தான் இருக்கின்ற நிலையிலும், இன்றைக்கும் நகர்ப்புரங்களில் மூன்று மணி நேரமும், கிராமப்பகுதிகளில் 5 மணி நேரமும் அறிவிக்கப்படாத மின் வெட்டு இருந்து கொண்டு தான் இருக்கின்றது.
நகர்ப்புற எல்லையைத் தாண்டிவிட்டால் கிராமப்புரங்களில் ஒரு நாளைக்கு வெறும் 10 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. அதாவது கிராமப்புரங்களில் மின்சாரத்தை நம்பி, ரைஸ் மில், வெல்டிங் பட்டரை இப்படி எந்த சின்ன சின்ன தொழில் கூட செய்ய முடியாத நிலை தான் இன்றைக்கும் தொடர்கிறது.
இந்த நிலையில் தமிழகத்தை எப்படி மின் மிகை மாநிலமாக ஜெயலலிதா அறிவித்தது போல் ஏற்றுக்கொள்ள முடியும்?
ஒரு மாநிலத்தில் கிராமம், நகரம், மாநகரம் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் 24 மணி நேரமும் வீடுகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் தடையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும். அதேப் போன்று மும்முனை மின்சாரம் பயன்படுத்துகின்ற தொழிற்சாலைகள், பட்டரைகள், விவசாய பம்ப்புசெட்டுகள், இப்படி அனைத்திற்கும் தடையில்லா மின்சாரம் 24 மணி நேரமும் கிடைக்க வேண்டும்.
இந்த நிலை வந்தால் மட்டுமே அம்மாநிலத்தை மின் மிகை மாநிலம் என்று அறிவிக்க முடியும். அது மட்டுமன்றி அம் மாநிலம், இத் தேவைகளுக்கான மின்சாரத்தை வெளியில் இருந்து விலை கொடுத்து வாங்காமல், தங்கள் சொந்த தயாரிப்பில் அல்லது மாநில அரசும் பங்குதாரராக இருக்கும் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்தும் பயன்படுத்தி இந்த நிலையை அடைந்தால் மட்டுமே அது மின் மிகை மாநிலமாக அறியப்படும்.
ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்த இந்த நான்கரை ஆண்டுகளில் ஒரே ஒரு மின் உற்பத்தி திட்டத்தைக் கூட இதுவரை புதிதாக ஆரம்பித்து நிறைவேற்றி ஒரே ஒரு யூனிட் மின்சாரத்தினைக் கூட உற்பத்தி செய்யவில்லை என்பது தான் யதார்த்தம்.
ஸோ.... பொய்யான வாக்குறுதிகளைக் கூட பொறுத்துக்கொள்ளலாம். ஆனால் அந்த வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டு, அவற்றை நிறைவேற்றி விட்டதாக பொய் பிரச்சாரம் செய்வோரை மக்கள் மன்னித்தால், மிகப் பெரும் தவறான பின்விளைவுகளை மக்கள் சந்திக்க வேண்டியதிருக்கும்.
கடந்த திமுக ஆட்சியில் போடப்பட்டு, செயல்படுத்தப்பட்ட மின் உற்பத்தி திட்டங்களின் பலனாகத் தான் இந்த நான்கரை ஆண்டுகளில் வீடுகளுக்கான மின்சாரை தேவையை ஓரளவிற்காவது இந்த ஆட்சியினரால் ஈடு செய்ய முடிகின்றது. அந்த திட்டங்கள் அனைத்தையும் முழுமையாக நிறைவேற்றியிருந்தாலே இந்நேரம் தமிழகம் உண்மையான மின் மிகை மாநிலமாக மாறியிருக்கும்.
சிந்திப்பீர் செயல்படுவீர்....!!

***

தளபதியின் நமக்கு நாமே மக்களின் கைகளில்...!!!

தளபதியின் நமக்கு நாமே முதற்கட்ட பயணம் கன்னியா குமரியில் துவங்கிய போது, திமுகவினர் மட்டுமே... அதிலும் குறிப்பாக காலத்திற்கு ஏற்ப கொள்கை மாறாமல் தம்மை புதுமைப் படுத்திக்கொள்ளும் எண்ணமுடையவர்களும், இணையதள திமுகவினரும் தான் முதல் நாள் முதல் நொடியில் இருந்து தளபதியின் ஆரல்வாய் மொழியில் ஆரவாரமாக ஆர்ப்பரித்துக் கிளம்பிய எழுச்சி அலையினை உன்னிப்பாக உற்றுக்கவனித்து... அதை அப்படியே மக்கள் மன்றத்தின் முன்பாக பதிவு செய்யவும் செய்தனர்.
ஒவ்வொரு நாளும் கடந்து போக... கடந்து போக, அந்த எழுச்சிஅலையின் உற்சாகம் ஒட்டுமொத்த திமுகவினர் மத்தியிலும் தீயாக பற்றிக்கொண்டு, பொது மக்களிடம் நம்ம ஊருக்கு எப்ப வருவார் என்ற எதிர்பார்ப்பையும் எகிற வைத்து, எதிர்க்கட்சிகளுக்கு வயிற்றுப்போக்கையும் கிளப்பி விட்டு.... ஒரு வழியாக முதற்கட்ட நமக்கு நாமே சூறாவளி சென்னை அண்ணா அறிவாலயத்தில் கரை ஏறியது...!!
இதோ இன்றைக்கு நமக்கு நாமேவின் இரண்டாம் கட்ட பயணம் மேற்குத் தொடர்ச்சி மலையில் மைய்யம் கொண்டு, கூடலூரில் அனலைக் கூட்டி தரை இறங்க ஆரம்பித்து விட்டது.
இந்த இரண்டாம்கட்ட துவக்க நிகழ்ச்சியை, திமுகவினரையும் தாண்டி ஒட்டுமொத்த தமிழக பொது மக்களும் கவனிக்க ஆரம்பித்து விட்டனர். 17 ஆம் தேதி நாகைன்னு போட்டிருக்கே, நம்ம மாயவரத்துக்கு வரமாட்டாரா? இது நேற்று என்னிடம் ஒரு நடுநிலை நண்பர்... கடந்த தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்த வாக்காளர் கேட்ட கேள்வி.
கண்டிப்பாக மாலை மாயவரம் வருவார். ஏன்? என்ன விஷயம்? என்றேன்.
ஒன்னுமில்ல... நம்ம ஊருக்கு ஒரு சூப்பர் பஸ்ஸ்டாண்டும், ஊரைச் சுற்றி நல்ல ரிங் ரோடும், நம்ம ஜி.ஹச் ஐ மாவட்ட மருத்துவமனையாகவும் மாத்தனும்ன்னு சொல்லி மனு தயாரிச்சி வச்சிட்டேன். அதை ஸ்டாலின் கிட்ட கொடுக்கனும். பேப்பர்ல நாகைன்னு போட்டுருந்ததுனால, மாயவரம் இல்லியோன்னு நினைச்சுத்தான் உங்க கிட்ட கேட்டேன் என்றார்.
அவருக்கும் எனக்கும் கடந்த 6 ஆண்டுகளில் நடந்த பல சூடான விவாதங்கள் நினைவில் ஆட, சற்றே ஒரு புன்முறுவலுடன் அவரைப் பார்த்தேன்....
..அவரும் என்னை ஒரு கணம் உற்றுப்பார்த்து, இலேசாக புன்னகைத்து, நான் என்றைக்காவது உங்கள் ஸ்டாலினைப் பற்றி ஒரு குறையாவது சொல்லியிருக்கேனா? அவர் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. உங்க தலைவரும் அவரை முதல்வராக அறிவிப்பார்ன்னு நம்பறேன்.... என்று அவர் பேசும் பொழுதே அவர் கைகளைப் பற்றிக்கொண்டேன்.
உங்கள் நம்பிக்கை வீண் போகாது. கண்டிப்பா அந்த மனுவை உங்கள் கையாலேயே அவரிடம் கொடுங்கள். அவர் அதை நிச்சயம் நிறைவேற்றுவார் என்று சொல்லும் போது என் கண்கள் குளமாகிவிட்டன.
இப்பொழுது தளபதியின் நமக்கு நாமே மக்களின் கைகளுக்குப் போய் விட்டது...!!

Monday, October 26, 2015

திக Vs ஆர் எஸ் எஸ்..! & திமுக Vs பாஜக..!!


ஆர் எஸ் எஸ் என்ற இந்துத்துவா மதவாத இயக்கம், தனது அரசியல் அமைப்பாக உருவாக்கி இயக்கிக் கொண்டிருப்பது தான் பா ஜ க என்ற அரசியல் கட்சி..!

ஆனால் திக விடமிருந்து சமூகநீதி என்ற அடிப்படைக் கொள்கையில் இருந்து ஒரு சிறு மாற்றத்தைக் கூட செய்யாமல், இன்னும் சொல்லப்போனால் அந்த சமூக நீதியை அரசு சட்டத்தின் மூலம் மக்களுக்குக் கிடைக்கச் செய்திட வேண்டும் என்ற நோக்கத்திற்காக...

இறைமறுப்பு உள்ளிட்ட சில விஷயங்களில் மட்டும் மாற்றங்களைச் சேர்த்துக்கொண்டு தனியாக பிரிந்து வந்து துவங்கப்பட்ட இயக்கம் தான் திராவிட முன்னேற்ற கழகம் என்ற அரசியல் கட்சி...!!

இளைஞர்களையும், பெண்களையும், பெரும்பகுதி இந்துக்களையும் திமுகவை விட்டு வெகு தூரம் விலகிப் போக வைக்க... இந்துத்துவாவின் மூளை கட்டமைத்து பரப்புரை செய்திருக்கும், திக Vs ஆர் எஸ் எஸ் - திமுக Vs பாஜக என்ற தவறான கட்டமைப்பை உடைத்தெடுக்கும் முயற்சியின் வெளிப்பாடு தான்...

மு.க. ஸ்டாலின் அவர்களுடைய..., திமுகவினரில் 90 சதவிகிதம் பேர் இந்துக்கள் என்ற பேட்டி...!!

பெரும்பான்மை இந்துக்களுக்கு எதிரான கட்சி, கோவிலுக்குப் போகின்றவர்களை அடித்து விரட்டும் கூட்டம் என்று திமுக பற்றி ஆரிய குறுக்கு புத்தியால் கட்டமைக்கப்பட்டிருக்கும் பிம்பத்தை அடித்து நொறுக்கியிருக்கின்றது...

திமுகவை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி சமூகநீதியை யாரும் அசைத்துப் பார்த்துவிட முடியாத அளவிற்கு உறுதியாக நிலைநாட்டிடும் பயணத்தில் திமுகவின் அடுத்த தலைவர் மிகத் தெளிவான தடத்தில் கால் பதித்திருக்கின்றார்.

வாழ்த்துக்கள் தளபதியாரே... பெண்களும் இளைஞர்களும் உங்களை புரிந்துகொண்டிருக்கின்றார்கள்...!!

ஆரிய அடிவருடி ஊடகங்கள் தான் பதறிப்போய் இதை பிரச்சினையாக்கி பிரச்சாரம் செய்ய முயல்கின்றார்கள், அதில் சில திகவினரும் பலியாகின்றனர்.


Sunday, October 25, 2015

2010 -11 இல் இங்கிருந்த நடுநிலையாளர் எல்லாம் எங்கேய்யா போனாங்க?!


என்ன தான் நடக்குது இங்க நம்ம தமிழ்நாட்டுல? ஆட்சின்னு ஒன்னு நடக்குதா இல்லியா?
கடந்த 2011இல் திமுக ஆட்சியை விட்டு விலகும் போது வெளிச்சந்தையில் வெறும் 62 ரூபாய்க்கும், ரேஷனில் 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்த துவரம் பருப்பு,..,

இன்றைக்கு வெளிச்சந்தையில் 220 ஐ கடந்து உயரே சென்று கொண்டிருக்கின்றது. கொடநாட்டிலிருந்து ஜெயலலிதா, தமிழகம் முழுவதும் மாநகரங்களில் மட்டும் வெறும் 91 கடைகளில் 110 ரூபாய்க்கு மலிவு விலையில் 1ஆம் தேதி முதல் துவரம் பருப்பு தமிழக அரசால் விற்பனை செய்யப்படும் என்கிறார்...!!

ஒரு நாள் கூட தமிழர்களின் உணவு வகைகளில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பயித்தம் பருப்பு, கடலை பருப்பு போன்றவற்றை தவிர்த்து சமைக்கவே முடியாது. என்கிற நிலையில்....

இவ்வகைப் பொருட்களின் விலை திமுக ஆட்சிக்காலத்தில் இருந்ததை விட 200 லிருந்து 300 சதவிகிதம் வரை கூடியிருக்கின்றது என்றால் என்ன அர்த்தம்?????

இதை எந்த ஒரு ஊடகமாவது தட்டிக்கேட்டிருக்கின்றதா? அல்லது விவாதப் பொருளாக்கி அரசை உடனடியாக இந்த விலை உயர்வை கட்டுப்படுத்தும் படி நெருக்கடி கொடுத்திருக்கின்றதா?
இந்த ஆட்சி வந்ததில் இருந்து, நடுத்தர மக்களின் மாத பட்ஜெட்டில் மிகப்பெரிய அளவில் ஜமுக்காளமே விழுந்திருக்கின்றது.

திமுக ஆட்சிக்காலத்தில் ஒரு குடும்பத்தின் பேருந்து கட்டணத்திற்காக மாதச் செலவு 300 ரூபாயாக இருந்தால் அது ஜெயலலிதாவின் புண்ணியத்தில் 660 ரூபாயாக உயர்ந்துள்ளது.

திமுக ஆட்சிக் காலத்தில் ஒரு குடும்பத்தின் பால் செலவு 600 ரூபாயாக இருந்தால், அது ஜெயலலிதாவின் புண்ணியத்தில் 1500 ரூபாயாக உயர்ந்துவிட்டது.
திமுக ஆட்சிக் காலத்தில் ஒரு குடும்பத்தின் மின் கட்டணம் 600 ரூபாயாக இருந்தால் அது ஜெயலலிதாவின் புண்ணியத்தில்2000 ஐ கடந்திருக்கின்றது.

இவை அனைத்துமே தமிழகத்தில் உள்ள ஒரு கீழ் நடுத்தர வர்க்கத்து குடும்பத்தின் மாதா மாதம் தவிர்க்க முடியாத அதிகரிக்கப்பட்ட செலவுகள்... அதாவது இப்படியான ஒரு குடும்பத்தின் மாதச் செலவில் கிட்டத்தட்ட 3000 அதாவது மூவாயிரம் ரூபாயை ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஒவ்வொரு கீழ் நடுத்தர குடும்பமும் மொய் வைத்துக்கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் தான் தற்பொழுதையை இந்த அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு. அரசின் அலட்சியத்தால் அல்லது ஏதோ ஒரு வகையில் கமிஷன், கிமிஷன் என்ற தவறுகளால் இப்படி திடீரென உயர்ந்திருக்கும் இந்த விலையேற்றம் வரும் தீபாவளிக்கு ஒவ்வொரு தமிழக குடும்பத்திற்கும், கூடுதலாக 1500 லிருந்து 10000 ரூபாய் வரை சூடு வைக்க்கும் என்பது சாதாரண கூட்டல் கழித்தல் கணக்கு தெரிந்தவர்களுக்கே புரியும்.

ஆக மொத்தம் அதிமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, இது நாள் வரை ஒவ்வொரு தமிழக குடும்பமும் சராசரியாக மாதத்திற்கு மூவாயிரம் ரூபாய் என்றால் வருடத்திற்கு 36 ஆயிரம் ரூபாயும், நான்கு வருடத்தில் கிட்டத்தட்ட ஒன்னரை லட்ச ரூபாயும், ஜெயலலிதாவின் நிர்வாக சீர்கேட்டால் கூடுதலாக செலவு செய்து விட்டது.

இதில் சொந்தமாக இந்த நான்கரை ஆண்டுகளில் வீடு கட்டியவர்களின் நிலை அதைவிட பரிதாபம். சிமெண்ட் மற்றும் மணல் விலை மட்டுமே திமுக ஆட்சியில் இருந்ததை விட 100 சதவிகிதம் விலை உயர்த்தப்பட்டிருக்கின்றது.

இதை ஏதோ திமுக ஆதரவாளின் பதிவாக கருதாமல், உழைத்து சம்பாதித்து, பட்ஜெட் போட்டு நேர்மையக வாழும் ஒரு தமிழக குடும்பத் தலைவர் தன் மனைவியுடன் அமைதியாக உட்கார்ந்து கணக்கெழுதிப் பார்த்தாலே தெளிவாகப் புரியும்.
ஏன் வர வேண்டும் திமுக ஆட்சி என்ற காரணம் தெளிவாகும்...!!

Saturday, October 24, 2015

நமக்கு நாமே...!!! ஈர்ப்பு...!!!!


அடுத்து தமிழகத்தில் ஆட்சியமைக்க வாய்ப்புள்ள ஒரு கட்சியின் தலைவன்... தற்பொழுது ஆட்சிப் பணியோ, அரசுப் பொறுப்போ இல்லாத நிலையில், அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சிப் பணியும் இல்லாத நிலையில்....
அங்கே, இங்கே சென்று ஓய்வெடுத்து பொழுதைக் கழிக்காமலோ அல்லது சுற்றுலா வாசஸ்தலங்களில் சொந்தமாக 800 ஏக்கரில் எஸ்டேட்டும் மாடமாளிகையும் கட்டிக்கொண்டு அங்கிருந்துகொண்டு பணியாற்றுகின்றேன் என்று பீலா விட்டுக்கொண்டிருக்காமல்....
அடுத்ததாக தங்களை ஆள மக்கள் இன்னொரு முறை தமக்கு வாய்ப்புத் தருவார்களேயானால், அதை முன் எப்பொழுதையும் விட சிறப்பாகச் செய்யும் பொருட்டு, மக்களாலேயே கொடுக்கப்பட்டிருக்கும் இந்த ஓய்வு காலத்தை வீணடிக்காமல் மக்களோடு மக்களாக.., அவர்கள் இருப்பிடத்திற்கே... வசிப்பிடத்திற்கே சென்று...
விவசாய நிலத்தின் சேறு என்றால் எப்படி இருக்கும்? அதில் கால் வைத்தால் என்னென்ன மாதிரியான உணர்வு ஏற்படும்? அந்தச் சேற்றில் இருக்கும் புழு, பூச்சிகள், கல்லு முள்ளுகள் எப்படி காலை பதம் பார்க்கும்? உடலும், உடையும் எப்படி அழுக்காகும்?....,
ஒரு டிராக்டர் ஓட்டுவது எவ்வளவு சிரமமான காரியம்? மோசமான சாலைகளில் சைக்கில் ஓட்டுவதும், ஸ்கூட்டி ஓட்டுவதும் எவ்வளவு கடுமையான செயல்? அரசுப் பேருந்துகளின் தரம் எப்படி இருக்கின்றது? அதில் பயணம் செய்வது எவ்வளவு ஆபத்தான எக்ஸர்ஸைஸ், ரோட்டோர டீக்கடை, இட்லி கடை எல்லாம் எப்படி இருக்கின்றது? அதை நடத்துபவர்களின் கஷ்ட நஷ்டங்கள் என்னென்ன? அவர்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகள் என்னென்ன?....
10 பேர் முதல் 100 பேர் வரை வேலைக்கு அமர்த்தி தொழில் செய்யும் சிறு குறு தொழிற்சாலைகள் உண்மையில் எப்படி இருக்கின்றன? அதில் வேலை செய்பவர்களின் நிலை எப்படி இருக்கின்றது? அதை நடத்துகின்றவர்கள் அன்றாடம் சந்திக்கின்ற பிரச்சினைகள் என்னென்ன?...,
ஒவ்வொரு ஊரிலும் தினம் தினம் கடைத்தெருவில் பல்வேறு காரணங்களுக்காக வந்து செல்லும் மக்களின் தேவைகள் என்னென்ன? அவர்களுக்கு இன்னும் தேவைப்படும் வசதிகள் என்னென்ன? மகளிர் சுய உதவிக் குழுவைச் சார்ந்த பெண்களின் இன்றைய நிலை என்ன, அவர்களின் தேவைகள் என்னென்ன?...,
மாணவ, மாணவிகளின் எண்ணங்கள் என்ன, அவர்களுக்கான கோரிக்கைகள் என்னென்ன? விவசாயிகள் படும் பாடு என்ன, அவர்களது உண்மையான தேவைகள் என்னென்ன? ஓய்வு பெற்ற முதியோர்களின் பிரச்சினைகள் என்ன, அவர்களுக்கான தேவைகள் என்னென்ன? வேலையில்லா பட்டதாரிகளின் நடப்பு நிலை என்ன, அவர்களின் மனக்குமுறல்கள் என்னென்ன?...,
குடும்பத்தலைவிகளாக மட்டுமே இருக்கின்ற பெண்கள் அரசாங்கத்திடம் என்ன எதிர்பார்க்கின்றனர்...,, மலைக்கிராமத்து மக்களின் பிரச்சினைகளும், தேவைகளும் என்ன, கடற்கரையோர மக்கள் மற்றும் மீனவர்களின் பிரச்சினைகள், தேவைகள் என்னென்ன? வறட்சி மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் என்ன, தேவைகள் என்னென்ன?...
இப்படியாக, அனைத்தையும் அனைவரையும், அங்கங்கேயே தேடிச் சென்று, முழுமையான கள ஆய்வை, அந்தத் தலைவன் செய்து கொண்டிருக்கின்றான்.
மக்கள் அந்தத் தலைவனை தேடி ஓடி வருகின்றார்கள். ஒரே மாவட்டத்தில் ஒரு பகுதியில் விவசாயிகளைச் சந்தித்து குறைகளைக் கேட்டுவிட்டார், இன்னொரு பகுதியில் மீனவர்களைச் சந்திக்க மட்டுமே நேரம் இருக்கின்றது, என்கிற போது, இங்கிருக்கும் விவசாயிகளுக்கு கோபம் வருகின்றது. இல்லையில்லை, நாங்கள் அவரைப் பார்த்து எங்கள் குறைகளை நேரில் சொன்னால் தான் திருப்தியாக இருக்கும் என்று உரிமையோடு சண்டையிடும் போது...
பெரிய அளவில் அதிர்ந்து தான் போக வேண்டியிருக்கின்றது. இவர் தான் நம்பிக்கைக்குறிய மனிதர், இவரைத்தான் அடுத்து ஆட்சியில் அமர்த்தவிருக்கின்றோம், இவரிடம் இப்பொழுதே, நம் குறைகளை, தேவைகளை சொல்லிவிட வேண்டும் என்ற அந்த விவசாயிகளின், தொழில் முனைவோர்களின், வியாபாரிகளின், பெண்களின், மாணவ, மாணவிகளின் ஆர்வத்தையும், அவசரத்தையும் நன்றாக உணர முடிகின்றது.
இவர் செல்லும் இடங்களில் எல்லாம் நடப்பு ஆட்சியாளர்கள், தங்களது சாதனையாக சில காமெடிகளை எழுதி பேனர் வைத்து நிறப்பிக்கொண்டிருக்க, மக்களோ, தஙகளது கோரிக்கைகளை மனுக்களாக எழுதி இவரிடம் தந்து விட ஓடி வருகின்றார்கள்.
இவர் வாயால், கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்ற உத்திரவாதம் பெற்றவுடன், வாழ்க்கையைத் துவங்கும் போதே கடனாளியாக தவித்து நிற்கின்றோமே என்று எண்ணித் தவித்துக்கொண்டிருக்கும் மாணவ, மாணவிகளும், பட்டதாரிகளும் துள்ளிக் குதித்து இவருக்கு செம்மையாக ஒரு ஓ போடுகின்றனர்.
இப்படி நேரடியாக ஒரு கள ஆய்வினை முடித்து நாளை ஆட்சிக்கு வரும் வாய்ப்புக் கிட்டிடுமேயானால், நிச்சயமாக மக்கள் தேவைகளை இவருக்கு எடுத்துச் சொல்ல, புத்தகப் புழுக்களான அதிகாரிகளின் உதவியோ, பல்வேறு நிலைப்பாடுகளில் இருக்கும் அமைச்சர்களின் உதவியோ இவருக்குத் தேவையில்லை. அனைத்தையும், அனைவரையும் நேராகக் கண்டு, பேசி, கருத்துப் பறிமாற்றம் செய்து வந்திருக்கின்றார். இவருக்கும் மக்களுக்கும் இடையில் இனி எந்த இடைத்தரகரும் தேவையில்லை...!
நிச்சயம் ஒரு நல்லாட்சியை இவர் தந்தே தீருவார். மக்களிடம் அந்த நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது.
திமுக தொண்டர்கள் எல்லோரும், இவர் வருவதற்கான ஆயத்தப்பணிகளை செய்து விட்டு, இவர் வரும் பொழுது, மக்களிடம் இவரை விட்டுவிட்டு தாமாக விலகிச் சென்று நிற்கின்றார்கள். அவர்களுக்கு இது புது அனுபவம் தான்.... ஆனாலும் இதை ரொம்ப சந்தோஷமாகத்தான் செய்கின்றார்கள். காசு கொடுக்காமல், குவாட்டர் வாங்கித்தராமல், வேன் வைக்காமல் இவ்வளவு பேர் அவரைப் பார்க்க வேண்டும் என்று தங்களிடம் கோரிக்கை வைப்பதை பெருமையாக உணர்கின்றார்கள்.
தங்களது செயல்பாடுகளிலும் தங்கள் தலைவனைப் போன்று பக்குவமான, முதிர்ச்சியான, மக்கள் விரும்புகின்ற வகையிலான மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்று பலர் முனைப்பு காட்ட ஆரம்பித்துவிட்டனர்.
எதிர்களின் கிண்டல், கேலிகள், விமர்சனங்கள் அனைத்தையும் புறம் தள்ளி விட்டு முழுமையான வெற்றிப் பயணமாக, இதோ மூன்றாவது கட்டத்தில் நாளை மறுநாள் சேலத்தில் மையம் கொள்கிறது...!!

வாருங்கள்...   மக்கள் மனங்களை வெல்லுங்கள் தளபதியாரே...!



மு.க.ஸ்டாலின் - நமக்கு நாமே...! முதல் பார்வை


திராவிட முன்னேற்ற கழகத்தின் இன்றைய பொருளாளரும்..., அடுத்த தலைவருமான தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களுடைய நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம், தமிழக மக்கள் மத்தியில் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி தமிழகத்தின் மொத்த சட்டமன்ற தொகுதிகளில் சரிபாதியை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கின்ற நிலையில்...
அதிமுக உள்ளிட்ட தமிழகத்தின் கிட்டத்தட்ட அனைத்து மாற்றுக்கட்சித் தலைவர்களும்..., அவர்களுக்கு ஆதரவான அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடகங்களும், இந்த பிரச்சாரப் பயணத்தை ஆரம்பத்தில் கிண்டலும், கேலியும் செய்து வந்த நிலை மாறி தற்பொழுது விமர்சனங்களை வைக்கின்ற அளவிற்கு நிலைமை முன்னேற்றம் கண்டிருக்கின்றது.
நமக்கு நாமே பயணத்திற்கு எதிராக மாற்றுக்கட்சி தலைவர்களால் வைக்கப்படும் விமர்சனங்களில் முக்கியமானதாக ஒரு சிலவற்றைச் சொல்ல வேண்டுமானால், இத்தனை நாளாக இப்படி மக்களை வந்து சந்திக்காமல், இப்பொழுது திடீர் என்று வந்து சந்திப்பதன் காரணம் என்ன? இது தேர்தலுக்கான நாடகம் தானே? இதனால் திமுகவுக்கு எந்த பலனும் கிடைக்காது... இப்படியாகத்தான் செல்கிறது அந்த விமர்சனங்கள்.

இந்த விமர்சனத்தின் அடிப்படையான கருப்பொருள் ஒன்றே ஒன்று தான். அதாவது இத்தனை நாளாக செய்யாத ஒரு நல்ல காரியத்தை இப்பொழுது மட்டும் செய்வதன் காரணம் என்ன என்ற கேள்வியில்..., தளபதியின் இந்த மக்கள் சந்திப்பு என்பது ஒரு தவறான செயல் கிடையாது என்பதை முதலில் அந்த விமர்சகர்கள் ஏற்றுக்கொள்கின்றார்கள். மேலும் இதை ஒரு நல்ல செயலாக அவர்களே ஒத்துக்கொள்ளவும் செய்கின்றார்கள்.

இன்னும் ஒரு படி மேலே போய், காலம் தாழ்ந்து செய்தாலும், ஒரு நல்ல செயலை இந்தத் தலைவர் செய்வதால் மக்கள் மத்தியில் இவருக்கு நல் ஆதரவு பெருகிவிடுமோ என்ற பதற்றத்திலும், பயத்திலும் தான், இதை ஒரு நாடகம் என்று முத்தாய்ப்பு வைக்கின்றார்கள்.
அதாவது எதிரிகளின் விமர்சனங்கள், அவர்களுக்கே திருப்தி தராத நிலையில் தான், மக்களே..., இதை நம்ப வேண்டாம், இது வெறும் நாடகம் என்று வாதாடுகின்றார்கள்.
கடைசியாக இந்தப் பயணத்தினால் திமுகவுக்கு எந்தப் பயனும் இல்லை என்று தங்களைத் தாங்களே திருப்திப் படுத்திக்கொள்வதோடு, தளபதியின் இந்த பயணத்தினால் திமுகவுக்கு மக்கள் மத்தியில் கிடைத்திருக்கின்ற பெரும் வரவேற்பைக் கண்டு தங்கள் கட்சித் தொண்டர்கள் துவண்டு விடக் கூடாது என்பதற்காகவும், இப்படியொரு சப்பைக்கட்டையும் கட்டுகின்றார்கள்.
இதெல்லாம் எது எப்படி இருந்தாலும், தளபதி ஏன் இத்தனை ஆண்டுகளாக இல்லாமல் இப்பொழுது மட்டும் மக்களை அவர்கள் இருப்பிடத்திற்கே சென்று சந்திக்கின்றார் என்ற எதிரிகளின் கேள்விக்கு சரியான விளக்கம் தந்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடு தான் இக் கட்டுரை.
இந்த விமர்சகர்கள் எல்லாம் சொல்வது போல தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏதோ இத்தனை காலமும் ஏசி ரூம், சில்வர் ஸ்பூன் என்று சென்னையில் மட்டுமே வாழ்ந்து காலம் தள்ளியவர் கிடையாது. தனது தந்தை கட்சியின் தலைவர் ஆவதற்கு முன்பே கழகத்தின் இளைஞர் அணியை உருவாக்கி தமிழகத்தை வலம் வர ஆரம்பித்தவர் தான் ஸ்டாலின்.
நாற்பத்தைந்து ஆண்டுகளாக... கிட்டத்தட்ட அரை நூற்றாண்டைக் கடந்து கொண்டிருக்கின்றது, அன்றைக்குத் துவங்கிய அவரது தமிழகப் பயணம். அவரது தந்தை முதல்வராக இருந்து மத்திய அரசின் பெரும் அடக்கு முறைக்கு எதிராக வெகுண்டெழுந்து போராடிய போதே, முதல் நபராக அதில் கலந்து கொண்டு, திருமணமான நான்கே மாதத்தில் ஓராண்டு காலம் சிறை சென்றவர் தான் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள்.
எம் ஜி ஆர் திமுகவை விட்டுப் பிரிந்து 13 ஆண்டு காலம், திமுக எதிர்க்கட்சியாகக் கூட இல்லாமல் இருந்த நிலையில், தமிழகம் முழுவதும் சுற்றித்திரிந்து, இளைஞர்களைத் திரட்டி, கழகத்தின் இளைஞரணியை ஒரு கட்டுக்கோப்பான அமைப்பாக உருவாக்கி, கழகம் மீண்டும் 89 இல் ஆட்சியைப் பிடிக்க பெரும் பக்க பலமாக இருந்தவர் தான் தளபதி ஸ்டாலின்.
மீண்டு(ம்) ஆட்சிக்கு வந்த திமுகவை வீழ்த்த நவீன எம் ஜி ஆராக ஆரியர்களால் உருவாக்கப்பட்ட வைக்கோ, திமுகவை விட்டு வெளியேறிய போது, எம் ஜி ஆர் ஏற்படுத்திய அந்த தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் போனதற்கு, வலுவான இளைஞரணியை தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் கட்டமைத்து வைத்திருந்தது தான் காரணமாக அமைந்தது.
சென்னை மாநகர மேயராக இருந்த போதும் கூட அவர் இதோ இன்றைக்கு மக்களைத் தேடி ஓடி வருவது போலத்தான் சென்னை மாநகர் முழுவதும் சுற்றிச் சுற்றி அற்புதமான பாலங்களை தனது நேரடி மேற்பார்வையில்... திட்டமிட்ட காலத்திற்கு முன்னதாகவும், திட்டச் செலவை விட குறைவான செலவிலும் கட்டி முடித்து, சாதாரண சென்னையை சிங்காரச்சென்னையாக மாற்றும் முதற்படியில் ஏறி நின்றார்.
உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த பொழுது தமிழகம் முழுவதும் சுற்றித்திரிந்து இதே அடித்தட்டு மகளிரை நேரடியாக சந்தித்து அத்தனை லட்சம் பேருக்கும் தனது கரங்களாலேயே சுழல்நிதியை வழங்கி கிராமப்புற பெண்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தியவர் தான் தளபதி. அதை முழுமையாக இன்றைக்கு உணர்ந்துள்ள அந்தப் பெண்கள் தான், ”அந்த நாளும் வந்திடாதோ” என்ற ஏக்கத்தில் இன்றைக்கு தங்கள் தங்கள் ஊருக்கு வரும் தளபதியை நேரில் சந்தித்து, தங்கள் குமுறல்களை கொட்டித்தீர்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
துணை முதல்வராக இருந்த பொழுது எங்கெங்கு எல்லாம் சென்று நிதியைத் திரட்ட முடியுமோ அங்கெல்லாம் நேரடியாகச் சென்று பேசி நிறுவனங்களையும், நிதியையும் திரட்டிக்கொண்டு வந்து, மெட்ரோ ரயில், ஒக்கேனகல் கூட்டுக் குடிநீர் திட்டம், எட்டு மின் உற்பத்தி திட்டங்கள், கடல்நீர் குடிநீராக்கும் திட்டம், பறக்கும் பாலங்கள், தென்னக நதி நீர் இணைப்புத் திட்டங்கள், புறவழிச் சாலைகள், அரசு அலுவலகங்களுக்கு அருமையான கட்டிடங்கள், ஒவ்வொரு நகரத்திலும் சுற்றுச் சாலைகள்... இப்படியாக தமிழகத்திற்குத் தேவையான எண்ணற்ற தொலைநோக்குத் திட்டங்களையும், முதலீட்டாளர்களைக் கவர்ந்திழுக்கும் உட்கட்டமைப்பு வசதிகளையும், பெரிய பெரிய தொழிற் பூங்காக்களையும் உருவாக்கி..., இன்றைய ஜெயலலிதா அரசு அவற்றைக் காட்டித்தான் உலக முதலீட்டாளர்களை அழைக்கும் நிலையை உருவாக்கியவர் தான் தளபதி மு.க. ஸ்டாலின்.
ஒரு நாட்டில் உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் பொழுது, பல லட்சம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு உருவாக்கப்படுவதும், அதைச் சார்ந்த எண்ணற்ற தொழிற்சாலைகள் உருவாகுவதும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதும், மக்களிடம் வெகுவான பணப்புழக்கம் ஏற்படுவதும் என்று.... இவர் செய்த காரியங்கள் அனைத்துமே நேரடியாக அடித்தட்டு மக்களுக்கே பயனுள்ளதாக சென்றடைந்ததை, மனசாட்சி உள்ள எவருமே மறுக்க முடியாது.
சரி... இவற்றையும் மீறி, திமுகவில் சிலர் மூலம் நடந்த தவறுகளுக்காக மக்களால் மாற்றம் கொண்டு வரப்பட்டு, திமுக என்பது அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாகக் கூட இல்லாத நிலையில்.....
ஆட்சி பறிபோன அடுத்த நாளில் இருந்தே, அவர் தனது பயணத்தை துவக்கி விட்டார். முதலில் திமுக தொண்டர்களை சோர்ந்து போக வைக்க, அவர்கள் மீது தொடுக்கப்பட்ட பொய் வழக்குகளில் இருந்து மீட்க, அவர்களை நேரடியாகச் சென்று சந்தித்து, கட்சி உருக்குலைந்து போகாமல் கட்டிக் காப்பாற்றினார்....!
திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட சமச்சீர் கல்வி, புதிய தலைமைச் செயலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம்... ஆகியவை பறிபோகாமல் இந்த அரசிடம் இருந்து காப்பாற்ற சட்டப் போராட்டத்தையும் வெற்றிகரமாக நடத்திக் காப்பாற்றினார். தன்னை எம் எல் ஏ வாக தேர்ந்தெடுத்த கொளத்தூர் தொகுதி மக்களை மாதம் தவறாமல் நேரடியாக சந்தித்து குறைகளைக் கேட்டுப் பெற்று, அவற்றுக்கான நிவாரணங்களை சட்டப்பூர்வமாக வழங்கி, ஒட்டுமொத்த தமிழக எம் எல் ஏக்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகின்றார்.
வருடாவருடம் அண்ணா பிறந்த நாளில் இளைஞர் அணியின் சார்பாக அந்தந்த ஆண்டு 10வது மற்றும் +2 தேர்வுகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்கள் மற்றும் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகளை அவர்கள் பெற்றோருடன் அழைத்து, அழைத்து என்றால், அந்தந்த மாவட்டத்திலும் பேருந்துகளை ஏற்பாடு செய்து, ஒரு பைசா செலவில்லாமல் அழைத்து வந்து தக்க மரியாதையுடன் தங்க வைத்து பணம் மற்றும் சான்றிதழ்களை தனது கரங்களாலெயே அளித்து, உணவுடன் மீண்டும் அவர்கள் வீடு வரை கொண்டு சென்று விட்டு வரும் நிகழ்வையும் நடத்தி வருகின்றார்.
அதேப் போன்று கலைஞர் பிறந்தநாளிலும், தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளிகளில் மாணவ, மாணவிகளிடையே பேச்சுப்போட்டி நடத்தி, மாவட்ட வாரியாக முதல் மூன்று இடங்களைப் பெரும் மாணவச் செல்வங்களை இதேப் போன்று அழைத்து பரிசுகளும், சான்றிதழும் தன் கரங்களாலேயே கொடுத்து மாணவர்களை ஊக்கப்படுத்தும் நவீன அப்துல் கலாமாக திகழ்பவர் தான் தளபதி.
ஏதோ பேச வேண்டும் என்பதற்காக எதிரிகள், தளபதியைப் பார்த்து இன்றைக்கு திடீர் என மக்களை வந்து சந்திப்பதாக புலம்புவது தான் அபத்தத்தின் உச்சம். ஆட்சியில் இருக்கும் போது செய்ய வேண்டிய தனது கடமைகளை தவறாமல் செய்த ஸ்டாலின் அவர்கள், ஆட்சியில் இல்லாமல், அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி அந்தஸ்த்து கூட இல்லாத நிலையில்...
செய்ய வேண்டிய தமது கடமைகளை மிகத் தெளிவாக எந்தத் தொய்வும் இன்றி செய்து வருகின்றார். இதோ இன்னும் 7 மாதத்தில் தேர்தல் வரவிருக்கின்ற நிலையில், நடப்பு ஜெயலலிதா ஆட்சியின் அவலங்களால், தினம் தினம் நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கும் மக்களை அவர்கள் இருப்பிடத்திற்கே நேரடியாகச் சென்று சந்திக்கின்ற அவகாசமும் அவருக்கு இருக்கின்ற நிலையில்...

அதை வீணாக்காமல், போய் மலை உச்சியில் ஓய்வெடுத்துக்கொண்டிராமல், இந்த தனது அவகாச காலத்தையே ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு, மக்களைத் தேடி, அவர்களை நாடி அவர்கள் இடத்திற்கே சென்று பார்த்து, பேசி, கலந்துரையாடி, தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்புக்கொடுத்தால், அவர்கள் குறைகளை எல்லாம் நிவர்த்தி செய்வோம் என்று வெளிப்படையாக அவர்கள் முன்னனியிலேயே வாக்குறுதி கொடுத்து வருகின்றார்.

அவர் மீது நம்பிக்கை இருப்பதால் தான், மக்களும் அவரை நம்பி வந்து தங்களது கோரிக்கைகளை முன் வைக்கின்றார்கள். மனுக்கள் தருகின்றார்கள், வாக்குறுதிகளைக் கேட்கின்றார்கள்.
கடந்த திமுக ஆட்சியில் சில தவறுகள் நடந்திருப்பதை மனதார மக்களிடம் ஏற்றுக்கொண்டிருக்கின்றார். அடுத்து வரும் தங்கள் ஆட்சியில் அது முற்றிலும் அகற்றப்படும் என்று வாக்குறுதி தந்துள்ளார். 15 நாட்களுக்கு ஒரு முறை அமைச்சர்களும், எம் எல் ஏக்களும் மக்களை நேரடியாக சந்திக்கும் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். மாணவர்களின் கல்விக்கடன் நீக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
திமுகவுக்கு எதிரானவர்கள் என்று கருதப்படும் கோவில் குருக்கள்கள் கூட அவரைச் சந்தித்து மனு கொடுக்கின்ற அளவிற்கு அவர் மீதான நம்பிக்கை மக்களிடம் வேரூன்ற ஆரம்பித்து விட்டது.
கடைசியாக, அவர் கலர் கலராக சட்டை பேண்ட் அணிந்து செல்கின்றார் என்று கூட விமர்சனம் வைக்கின்றார்கள்....
மக்களோடு மக்களாக...., நமக்கு நாமே என்று அவர் செல்லும் பொழுது, மக்களுடைய அண்ணனாக, தம்பியாக, தந்தையாக, தனையனாக, அவர்களோடு ஒருவராகச் செல்வதில் என்ன தவறு இருக்கின்றது? பொதுவாகவே வெள்ளை வேட்டி, மொட மொட சட்டை அரசியல் வாதிகளிடமிருந்து மக்கள் சற்று தள்ளி நிற்கவே விரும்புகின்ற நிலையில், மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப மக்களோடு ஒருவனாக அவர் செல்வதில் எந்தத் தவறும் இல்லை. அதைத் தவறு என்று மக்கள் சொன்னால் அதையும் அவர் மாற்றிக்கொள்வார். எதிரிகள் அதைச் சொல்லக் கூடாது.!
தமிழக அரசியலில்... ஏன்? ஒட்டுமொத்த இந்திய அரசியலிலும், மக்களோடு நெருங்கிப் பழகி, அவர்களின் குறைகளைக் களைய, தனியொரு பாதை அமைத்து....
இனி இப்படித்தான் ஒவ்வொரு அரசியல்வாதியும் செயல்பட வேண்டும் என்ற புது இலக்கணத்தை... புத்தம் புதிய அரசியல் இலக்கணத்தை....
தனியொருவனாக..... தளபதி எழுதிக்கொண்டிருக்கின்றார்....

அதன் பெயர் தான்...
நமக்கு நாமே...!!


Friday, October 23, 2015

பழ கருப்பையாவின் பல் இளிக்கும் திராவிட காதல்..!

நேற்று திராவிடத்தின் மீதுள்ள காதலால் சொல்கிறேன் என்ற போர்வையோடு பழ. கருப்பையா எழுதியதாக ஒரு கட்டுரையை, இணையதளத்தில் குறிப்பாக திக ஆதரவு மனப்பான்மையுள்ள திமுகவினர் பகிர்ந்திருந்தனர். அதைச் சில அப்பாவி திமுகவினரும் உச்சுக்கொட்டி விருப்பச்சொடுக்கு இட்டும், கருத்துச் சொல்லியும், மீண்டும் அதைப் பகிர்ந்தும் கடமையாற்றியிருந்தனர்.
சுற்றி வளைத்து எழுதப்பட்டிருந்த அந்தக் கட்டுரையின் கடைசி பத்தியில் தளபதி மு.க.ஸ்டாலின் 90 சதவிகித திமுகவினர் இந்துக்கள் என்று சொன்னதை தவறு என்று பறைசாற்றியிருந்தது தான் அக் கட்டுரையின் மையக் கருத்து..!
இந்தக் கருத்தைச் சொன்ன பழ. கருப்பையா யார் என்று நாம் கவனிக்க வேண்டும். ஒட்டுமொத்த ஆரியத்தின் அதாவது திராவிட எதிரியின் தமிழக பிரதிநிதியாகவும், இந்திய அரசு சார் ஆரிய பிரதிநிதியான மோடியின் அன்புச் சகோதரியுமாக விளங்கக் கூடிய ஜெயலலிதாவின் ஆகச் சிறந்த அடிவருடியாக விளங்கி....
கடந்த 2011 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழகம் முழுவதும் சுற்றித் திரிந்தும், ஊடகங்களில் விவாதித்தும், பத்திரிக்கைகளில் எழுதியும், ரோட்டரி, லயன் போன்ற தன்னார்வ இயக்க மாநாடுகளில் போய் பேசியும், திமுகவும் கலைஞரும் கருவறுக்கப்பட வேண்டிய விஷ ஜந்துக்கள், தமிழகத்தைப் பிடித்த பிணிகள் என்றெல்லாம் பேசி, நடுநிலையான அப்பாவி நடுத்தரவர்க்கத்தினரை, மூளைச்சலவை செய்து திமுகவுக்கு எதிராக திருப்பி விட்டு....
அதற்கு சன்மானமாக ஒரு எம் எல் ஏ சீட்டையும் ஜெயலலிதாவிடம் பெற்று அனுபவித்து வருபவர் தான் இந்த பழ. கருப்பையா.
சரி..., திமுகவை எதிர்த்த காரணத்தாலேயே அவர் திராவிடத்திற்கு எதிரானவராக நாம் கருதலாமா என்று சிலர் கேட்பது என் காதில் விழுகிறது...!!
உண்மை தான். திமுகவை எதிப்பவர்கள் எல்லாம் திராவிடத்திற்கு எதிரிகள் என்று சொல்லும் பத்தாம் பசலி நான் அல்ல. ஆனால், அவர் எங்கு நின்று கொண்டு அதைப் பேசுகின்றார்? யாருக்காக இப்பொழுது அதைப் பேசுகின்றார் என்பது தான் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம்.
தமிழக சட்டசபையிலேயே நான் பாப்பாத்தி என்று பகிரங்கமாக அறிவித்ததன் மூலம், ஒட்டுமொத்த திராவிடமே ஆரியத்தின் காலடியில் என்று டவுசர் பாண்டிகள் எக்காளமிடும் நிலையை உருவாக்கிய..., கரசேவைக்கு கல் அனுப்பிய திராவிடத் தாயை(?!)...,, மதமாற்ற தடைச்சட்டம் கொண்டு வந்தவரை..., கோவில்களில் ஆடு, மாடு பலி தடைச்சட்டம் கொண்டு வந்தவரை..., இட ஒதுக்கீட்டிற்கு எதிராக பற்பல காரியங்களை... குறிப்பாக ஆசிரியர் பணித்தேர்வுக்கு டெட் எக்ஸாம் கொண்டு வந்து ஆப்படித்தவரை....., யாகம், பூஜை, காவடி, தீச்சட்டி, பால்குடம் என்று தனக்காக ஒட்டுமொத்த கட்சியினரையும் அலைய வைத்தவரை..., தமிழை விட சமஸ்கிருதத்தின் மீது தீராத பற்றுக்கொண்டவரை..., ஒரு இனத்தை அழிக்க அந்த இனம் பேசும் மொழியை அழிக்க வேண்டும்.., அந்த மொழியை அழிக்க அம்மொழியில் வந்திருக்கின்ற நூல்களை அழிக்க வேண்டும்..., அம்மக்கள் அம் மொழியினை படிக்காமல் செய்ய வேண்டும், அம் மொழியினால் பலனில்லை என்று நம்பவைக்க வேண்டும்.... இப்படியான ஆரிய சூழ்ச்சியின் ஒரு அங்கமாக ஆசியாவிலேயே தலை சிறந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தை சிங்களர்கள் யாழ்ப்பான தமிழ் நூலகத்தை அழித்தது போன்று... சின்னாபின்னமாக்கியவரை..., திராவிடத்தின் மிக முக்கிய கொள்கையான உண்மையான சமூகநீதியை நிறுவிடக் கூடிய சமச்சீர் கல்வியை குலைக்கப் பார்த்தவரை....,
இப்படியாக திராவிட இயக்கத்தை கருவறுக்க எறும்பு புற்றில் நுழைந்த பாம்பைப்போன்று செயல்படும் ஜெயலலிதாவின் பாதங்களை தினம் சேவித்து புலகாங்கிதம் அடைந்து கொண்டிருக்கும் பழ. கருப்பையா.... திராவிடத்திற்காக வடிக்கும் கண்ணீரைத்தான் நீலிக்கண்ணீர் என்கிறேன்.!
அவரது வாதப்படியே...., 67இல் திராவிடத்தை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க அண்ணா ராஜாஜியுடன் கூட்டணி அமைத்தது சரி என்றால் அதை உணர்வுள்ள திமுகவினர் புரிந்துகொள்வார்கள் என்றால்....,
இன்றைக்கு மத்திய அரசில் அக் மார்க் ஆரியம் ஆர் எஸ் எஸ் கட்டுப்பாட்டில் ஆட்சி செய்கின்ற நிலையில், இந்தியும், சமஸ்கிருதமும் கும்மாளமிட்டு தமிழ் மற்றும் இன்னபிற மொழிகளை அழித்தொழுக்க ஆயத்தப்பணிகள் நடைபெறும் வேளையில், யார் யாருடன் விளையாட வேண்டும், யார் என்ன சாப்பிட வேண்டும், யார் என்னென்ன சாப்பிடக் கூடாது, யார் யார் எதை பூஜிக்க வேண்டும், இன்னின்னார் உரிமை உடையோர்... இன்னின்னார் அடிமைகள்... என்றெல்லாம் சட்டமும், சத்தமும் பலமாக எழுப்பப்படுகின்ற நிலையில்....
அப்படிச் செய்பவர்கள், பெரும்பான்மையாக இருக்கின்ற இந்துக்களை தன் வயப்படுத்தி, திமுக என்ற கட்சி அவர்களுக்கு எதிரானது என்ற பிம்பத்தை தங்களது ஊடக பலத்தால் கட்டமைத்து விட்டிருக்கின்ற நிலையில்......
நாளை திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்ற இலக்கோடு களம் கண்டிருக்கும் திமுகவின் வருங்கால தலைவர், தங்கள் கட்சியில் இருப்பவர்களில் 90 சதவிகிதம் பேர் இந்துக்கள் என்று சொன்னதன் மூலம், இந்துத்துவா அமைப்புக்களால், திமுக மீது சுமத்தப்பட்டிருக்கும் இந்து விரோதிகள் என்ற மாயை முகமுடியை கிழித்துத் தொங்கவிட்டிருக்கின்றார் என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அவரது நமக்கு நாமே பயணத்தால் எந்தப் பிரயோஜனமும் இல்லை, நாடகம், ஏமாற்று வேலை... என்றெல்லாம் ஜெயலலிதாவின் அல்லக்கைகள் தினம் ஒருவராக புலம்புகின்ற நிலையில், பாஜகவின் தமிழக தலைமையோ, ஸ்டாலின் இந்துக்களுக்கு ஆதரவானவர் போல வேஷம் கட்டுகின்றார் என்று பதறுகின்ற நிலையில்....
வாழைப்பழத்தில் ஊசி ஏறுவது போல பழ. கருப்பையா, திமுக தொண்டர்களிடையே கலகத்தை ஏற்படுத்திடும் பொறுட்டு திராவிடத்திற்காக நீலிக்கண்ணீர் வடித்து ஒரு கட்டுரையை வெளியிடுகின்றார்.
திராவிடத்தைப் பொறுத்தவரை இந்து என்ற மதமே இல்லை என்கிற பொழுது, ஸ்டாலின் இந்துக்கள் என்று சொல்லி உண்மையான திமுக தொண்டர்களை அசிங்கப்படுத்திவிட்டார் என்றும் புலம்புகின்றார்.
திராவிடம் பற்றிய அடிப்படை புரிதலே இல்லாமல் தான் இருக்கிறது அவரது இந்தப் புலம்பல். திராவிடம் என்பதும், திராவிடர் என்பதும் இந்து, முஸ்லிம், கிருத்துவ மற்றும் ஏனைய மதம் சாந்தோ அவற்றுக்கு எதிராகவோ என்றைக்கும் கிடையாது. அது ஆரியர்களுக்கு எதிரானது... இன்னும் கொஞ்சம் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் ஆரியர்களால் திணிக்கப்பட்ட வர்ணாசிரமம், பெண் அடிமைத்தனம், சாதியால் மனிதனை கூறு போடுதல், மூட பழக்கவழக்கங்கள், அனைவருக்கும் கல்வி மறுக்கப்படுதல்.... இப்படியான அடக்குமுறை கலாச்சாரத்திற்கு எதிரானது தான் திராவிடம் என்பது.
ஆரியர் அல்லாத... குறிப்பாக பார்ப்பனர் அல்லாத அனைவரும்.., அவர் எந்த சாதியைச் சேர்ந்தவர், மதத்தைச் சேர்ந்தவர் என்றாலும் அவரும் திராவிடரே என்ற கருத்தோடு செயல்படுவது தான் திராவிடம். இஸ்லாம், கிருத்துவ, சீக்கிய மதத்தைச் சாராத அனைவருமே இந்துக்கள் என்ற பெயரோடு அழைக்கப்படுவதாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்லி, அதனை அனைவரும் ஏற்று செயல்பட்டு வரும் நிலையில், பழ. கருப்பையாவே அந்த அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டு சத்தியப்பிரமாணம் செய்து பதவி ஏற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில், திமுகவில் உள்ள இஸ்லாமியர், கிருத்தவர் தவிர்த்தவர்களை இந்துக்கள் என்று தளபதி மு.க. ஸ்டாலின் சொன்னதில் வருத்தம் கொள்வது என்பது ஆடு நனைவதற்கு ஓனாய் வருந்தியதாகத்தான் அர்த்தம் கொள்ளப்படும்.
ஆகவே திமுகவினர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களும் சற்று சிந்தித்து இது போன்ற மறைமுக கலகக்காரர்களிடமிருந்து உஷாராக தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டிய தருணம் இது என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன்.