Tuesday, February 26, 2019

ராஜாஜியின் குலக்கல்வியும்... எடப்பாடியின் பொது தேர்வுகளும்..!


இப்ப தமிழ்நாட்டுல நடப்பது எடப்பாடி ஆட்சியில்லை....  மாறாக இது பாஜகவின் எடுபுடி ஆட்சி தான்னு சொன்னா சொன்னா நம்பாதவங்களுக்கு இதை விட சிறப்பா எப்படி புரிய வைக்க முடியும்?!








Monday, February 18, 2019

திமுக - காங்கிரஸ்.... வெற்றிக் கூட்டணியா?!


திமுக - காங்கிரஸ் என்பது வெற்றிக் கூட்டணியா?!

இந்த கேள்விக்கான பதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல் காந்தியிடம் தான் இருக்கின்றது. 

ஜனவரி முதல் வாரத்தில் இந்தியாவின் முன்னணி ஊடகங்கள் எடுத்து வெளியிட்ட பாராளுமன்ற தேர்தலுக்கான கருத்துக் கணிப்புகள் அனைத்திலும் தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக - காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்று கிட்டத்தட்ட ஃபுல் ஸ்வீப் அடிக்கும் என்றே தெள்ளத் தெளிவாக பதிவு செய்தன. ஆனால் ஓரிரு நாட்கள் முன்பாக டீவி விவாதம் ஒன்றில் பேசிய சுமந்த் சி ராமன் இரண்டு மாதங்கள் முன்பாக அப்படியொரு நிலை இருந்தது உண்மை தான். ஆனால் இப்பொழுது நிலைமை வேறு... என்று பல்வேறு காரணங்களை அடுக்குகிறார். அவர் சொல்வதை முழுமையாக ஏற்றுக்கொள்ள இயலாது எனினும், அது மாதிரியான ஒரு ஃபீல் ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டு, அது மக்கள் மனதில் பதிவதையும் நாம் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. 

ஆகவே, இக்கட்டுரைத் தலைப்புக் கேள்விக்கான விடை காண, தற்பொழுது வரை தொடர்ந்து கொண்டிருக்கும் இக் கூட்டணி உருவான கால கட்டத்தையும் அதிலிருந்து இன்று வரையிலான பதினான்கு வருட கால சிறு வரலாற்று நிகழ்வுகளையும் சற்று உன்னிப்பாக கவனித்து அலசினாலே போதும். அதை தான் இபபொழுது நாம் செய்யப் போகிறோம்.




அது 2004 பாராளுமன்ற தேர்தலுக்கான முஸ்தீபுகளின் உச்சத்தில் தேர்தல் கமிஷன் உட்பட அனைத்து கட்சிகளும் இருந்த நேரம். காங்கிரஸ் இந்த தேர்தலில் வெற்றி பெறாவிட்டால்  வேரோடும் வேரடி மண்ணோடும் இந்திய அரசியலில் இருந்து பிடுங்கி எரியப்பட்டுவிடும் என்ற நிலை. அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா? என்ற விவாதப் பொருளுக்குள் கூட ராகுல் வராத நேரமது. இன்னும் சொல்லப்போனால் பிரியங்கா தான் அரசியலுக்கு வருவார் என்று கூட பரவலாக எதிர்பார்க்கப்பட்ட காலம்.

கலைஞர் முயற்சியால் வி.பி.சிங் தலைமையில் உருவாக்கப்பட்ட தேசிய முண்ணனியிடம் தோற்றுப் போய் ராஜீவ் காந்தி பறிகொடுத்த காங்கிரஸ் ஆட்சி,  ராஜீவ் இறப்பு அனுதாப அலையில் 91 -96 இல் ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் அது நரசிம்மராவின் செயல்பாடுகளால் ஒரு உறுதியான தலைமையை காங்கிரஸுக்கு காட்ட முடியாமல் காங்கிரஸையும் பலவீனப்படுத்தி...  அதன் பிறகு எட்டு ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சிக்கே வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்த நிலையில் தான் சோனியா காந்தி அவர்கள் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுக் கொள்கிறார்.

தேசிய அளவிலும், பிராந்திய அளவிலும் செல்வாக்கான கட்சிகளை கூட்டணிக்காக தேடி அலையும் பரிதாபமான நிலை சோனியா காந்திக்கு. இந்த நிலையில் தான் தமிழகத்திலிருந்து தி.மு.க வின் சார்பாக காங்கிரஸுக்கு ஆதரவாக தெள்ளத்தெளிவான குரலை அழுத்தம் திருத்தமாக எழுப்புகிறார் கலைஞர்..! 

அவர் சொன்ன அந்த மந்திரச் சொல் தான்...   

இந்திராவின் மருமகளே வருக, இந்தியாவின் திருமகளே வெல்க..! 

அதுதான் ஆரம்பம், அதன் பிறகு எல்லாமே அமர்க்களம் தான் காங்கிரஸுக்கு..!
2004 ல் காங். க்கு ஆதரவாக ஓங்கி ஒலித்த கலைஞரின் குரலாகட்டும், தேர்தலுக்குப் பின் காங். தலைமையில் ஆட்சி அமைய புதுடெல்லி சென்று தங்கி அவர் செய்த அரசியல் அதிரடி சித்து வேலைகளாகட்டும், பின்னர் சில பல கூட்டணி கட்சிகளால் ஆட்சிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட போது தன்னுடைய உறுதியான ஆதரவை வெளிப்படுத்தி அதை முறியடித்த பாங்காகட்டும், இவைகளெள்லாம் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு சிறந்த நிலைப்புத் தன்மையை ஏற்படுத்தித் தந்ததோடு... சோனியாவையும் இந்திய ஆட்சி அதிகாரத்தின் ஏக போக தலைவியாக்கியது. 

காங்கிரஸின் இந்த வளர்ச்சி நிலை தான் இலங்கையில் தனித் தமிழ் ஈழம் என்ற கனவு தவிடு பொடியாக்கப்பட்டு, புலிகள் அழிப்பு, பிரபாகரன் இழப்பு என்று போய் கடைசியில் முள் வேலி சித்ரவதை வரை கொண்டு வந்து நிறுத்தியது! இது தான் ஈழத் தமிழர்களின்/ஆதரவாளர்களின் கண்மூடித்தனமான கலைஞர் எதிர்ப்புக்கு வித்திட்டு விட்டது.

அடுத்தது தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி வரலாற்றின் இரண்டாவது அத்தியாயம் 2009 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலோடு ஆரம்பமாகிறது. இதில் தான் நம்முடைய முதல் பாரா கேள்விகளுக்கு காரணமான நிகழ்வுகள் தொடங்குகிறது. இந்த அத்தியாயத்தின் 'நெகடிவ் ஹீரோ' தான் ராகுல். அவரைச் சொல்லி குற்றமில்லை..., 

கடந்த முறை அதிகமான கட்சிகளின் துணை மற்றும் வெளி ஆதரவோடு கடும் நெருக்கடிக்கு மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ், இந்த முறை குறைந்த அளவிலான நல்ல (நெருக்கடி கொடுக்காத) கட்சிகளுடைய ஆதரவோடு நிம்மதியான ஆட்சி செய்கிறது.  இந்த நிலையில் தான் ராகுலுக்கு கட்சியை வளர்ப்பதற்கான முக்கிய பொறுப்புக்கள் கொடுக்கப்படுகிறது. 

கூட்டணி ஆட்சி அமைக்கவே அவரது அன்னை சோனியா மாநிலக் கட்சிகளோடு எந்த அளவிற்கு கீழிறங்கி வந்து சமரசம் செய்து கொண்டார். அவருடன் அணி சேர்ந்த திமுக உள்ளிட்ட மாநிலக் கட்சிகள் மற்றும் அந்த  கூட்டணி ஆட்சியை வெற்றிகரமான ஆட்சியாக மாற்றிய கலைஞர் போன்றவர்கள் எப்படி அதற்கு உறுதுணையாக இருந்தார்கள் என்பதையெல்லாம் ராகுல் அறிந்திருக்கவில்லை.

ராகுலுக்கு முன்பாக இருந்த கனவு / ஆசை எல்லாம் காங்கிரஸை தனிப்பெரும் கட்சியாக மீண்டும் உருவாக்கி தனிக்கட்சி ஆட்சியை மத்தியில் கொண்டு வர வேண்டும் என்பது தான். துரதிருஷ்டவசமாக அந்த கனவுக்கு தடையாக இருப்பது தங்கள் நண்பர்களான பிராந்தியக் கட்சிகள் மற்றும் கலைஞர் என்று அவர் நம்பியதன் விளைவு தான் மீண்டும் காங்கிரஸின் மாபெரும் வீழ்ச்சிக்கும், பாஜகவின் தனிக்கட்சி ஆட்சிக்கும் ராஜபாட்டை அமைத்துக் கொடுத்தது..!

தமிழகம் வந்தால் கலைஞரை அவர் சந்திப்பதில்லை அதனால் கூட்டணிக்குள் குழப்பம் என்றார்கள்..!   அது தவறு, அவர் கலைஞரை சந்திக்காததால் தான் கூட்டணி அப்பொழுது உடையாமல் இருந்தது! தமிழகத்தில் இந்த வெற்றி கூட்டணியை விளங்காத கூட்டணி லெவலுக்கு கொண்டு சென்றதில் ராகுல் காந்தியின் பங்கு அளப்பரியது. 

2009 பாராளுமன்ற தேர்தலில் இக் கூட்டணி 60 சதவீத வெற்றி மட்டுமே பெற்றதற்கு காரணம் இலங்கை பிரச்சினையில், சம்பந்தப்பட்ட பிராந்திய கூட்டணி கட்சியான திமுகவின் வழிகாட்டுதல் / கோரிக்கைகளை மதிக்காமல் செயல்பட்ட மத்திய காங்கிரஸ் தலைமையிலான அரசின் தாந்தோன்றித்தனமான வெளியுறவு கொள்கை தான். அதற்கு மேல் திமுக அழுத்தம் கொடுத்தால், அதிமுகவின் 12 எம்பிக்களின் ஆதரவை ஜெயலலிதா அளிப்பதாக வெளிப்படையாக அறிவித்ததை ராகுல் காந்தி பயன்படுத்த தயாரானதும் தான்..! 

கூட்டணி தர்மம் மற்றும் இன்னபிற கருமாந்திர காரணங்களுக்காக இப் பிரச்சினையில் மெளனம் காத்ததற்கான விலையை தி.மு.க வும் கொடுத்தது. இல்லையென்றால், 2009இலும் கூட திமுக - காங்கிரஸ் கூட்டணி நாற்பதுக்கு நாற்பது அடித்திருக்கும்..!

அதன் பிறகு மற்ற கூட்டணி பிராந்திய கட்சிகள் மீதான இவரது ஆட்டம் ஆரம்பமாக... 

காங்கிரஸ் கட்சி ஆந்திராவில் அதகளப்பட்டு, பீகாரில் புரட்டி எடுக்கப்பட்டு, கேரளாவில் கலகலத்து, குஜராத்தில் கொஞ்சம் கூட முன்னேராமல்... இப்படியே இது ஒரு தொடர் கதையாகிவிட்டது.  அவர் தொட்டது எதுவுமே துலங்கவில்லை என்றும், பப்பு என்ற பட்டப்பெயரும்  அவரை மட்டுமல்லாது காங்கிரஸ் கட்சியையே நிலை குலையச் செய்து விட்டது..!

அதற்கெல்லாம் பிறகும் கூட....   இவருக்கு திமுக மீது என்ன கோபமோ.....  இவர் அனுமதி கொடுத்ததாலோ அல்லது அடக்கி வைக்காததாலோ, 2011 சட்டமன்ற தேர்தல் வரை தமிழக காங்கிரஸ்  (தரு)தலைகள் அடித்த கூத்துக்கள் தான் அந்த தேர்தலில் இக் கூட்டணியின் வெற்றியை பதம் பார்த்து அதல பாதாளத்திற்கு கொண்டு சென்றது.  ஈவிகேஎஸ். இளங்கோவனில் ஆரம்பித்து, தனித்து ஒரு தேர்தலில் நின்றால் டெப்பாசிட் கூட வாங்க அருகதையற்ற தமிழக காங்கிரஸ் பிரதான கோஷ்டியின் தலைவர் வாசன், அவருடைய அடிப்பொடி இளைஞர் காங்கிரஸ் யுவராஜ், குபீர் குபீர் என பொங்கி அடங்கும் கார்த்திக் சிதம்பரம் இப்படியாக இன்னும் பல கோமாளிக் கூட்டம் வரை அடித்த கூத்துக்கள் தனக்குத் தானே குழிபறித்துக் கொள்ளும் விபரீத நிலையை இக் கூட்டணிக்கு ஏற்படுத்தி விட்டன.



அப்பொழுது சீமான் என்ன காரணத்திற்காக தி.மு.க வை எதிர்த்து அ.தி.மு.க வை ஆதரிக்கிறார் என்ற அடிப்படை ஞானம் கூட இல்லாமல் இந்த த(வளை)லைகள் காங்கிரஸை அ.தி.மு.க அணிக்கு கொண்டு செல்ல முயன்றது,  அகில இந்திய காங். க்கு பலம் பொருந்திய தலைமை ஒன்று இருக்கிறதா? என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விட்டது. 

தென் தமிழகத்தில் தமது கட்சியின் மூன்றாம் கட்ட பேச்சாளர் ஒருவர், இதையெல்லாம் கண்டு பொறுக்க முடியாமல் காங்கிரஸ் தலைவர்களை குறை கூறி பேசினார் என்பதற்காக கட்சியிலிருந்து கட்டம் கட்டிய தி.மு.க தலைமை எங்கே..?!  தமக்குத்தாமே குழி பறிப்பவர்களை தும்பை விட்டு வாலை கூட பிடிக்க முற்படாத காங்கிரஸ் தலைமை எங்கே?

இன்றைக்கு  கூட்டணிக்கு ஒத்துக்கொள்ளும் என்ற நம்பிக்கையிலேயே...  அயோக்கிய அதிமுக அரசை அனைத்து ஜனநாயக படுகொலைகளையும் செய்து காப்பாற்றிக் கொண்டிருக்கும் மோடியின் பாஜகே எங்கே....?!  

ஆனால் பொய்யான 2ஜி வழக்கை இஷ்டத்திற்கு ஆட வைத்து....  அதன் விசாரணையை மேல் தளத்திலும்...,  கூட்டணி பேச்சுவார்த்தையை கீழ் தளத்திலும் மேற்கொள்ளச் செய்த ராகுலின் ப. சிதம்பரம் வகையறாக்கள்  எங்கே..?!  அதைச் சொல்லித்தானே...  இன்னமும் கூட அனைத்து ஊடக விவாதங்களிலும் திமுக எதிர்ப்பாளர்கள் திமுகவினரை தலைகுனிய வைக்கின்றார்கள்..!

அதன் பிறகு...  அதாவது 2011 தேர்தலுக்குப் பிறகு கடந்த எட்டு ஆண்டுகளாக நடப்பது எல்லாம், அனைவருக்கும் சமீப காலம் என்பதால் நன்றாக நினைவில் இருக்கும் என்றே நம்புகிறேன். 

ராகுல் காந்தி அதுவரை செய்து வந்த காரியங்கள் அனைத்தும் 2014 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலையில் மொத்தமாக வந்து இறங்கியது. அதுவரை காங்கிரஸுக்கு ஆதரவளித்து வந்த பிராந்திய கட்சிகளில் கிட்டத்தட்ட திமுக தவிர்த்து ஏனைய அனைத்துக் கட்சிகளுமே பாஜகவின் தேசிய முண்ணனி கூட்டணிக்கோ அல்லது தனித்து நிற்கவோ தயாராகி தேர்தலை சந்திக்க...    காங்கிரஸோ அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சிக்கு தேவையான எண்ணிக்கையில் கூட எம் சீட்டை பெறாமல் போன சோகம் தான் நிகழ்ந்தது. 

காலம் கடந்து வந்த கோபத்தில்...  திமுகவும் கூட கொள்கை என்கிற நிலைப்பாட்டில் பாஜகவோடு கூட்டணி அமைக்கா விட்டாலும், காங்கிரஸை கழட்டி விட்டு தனியாகவே கடந்த 2014 பாராளுமன்ற தேர்தலை சந்தித்தது.  

இந்த அளவிற்கான ஃப்ளேஷ் பேக் போதும் என்றே நினைக்கிறேன்..!  இனி தலைப்பு மேட்டருக்கு வருவோம் 

தன்னுடைய முதல் அரசியல் பிரவேசத்தில், தான் எடுத்த வியூகங்கள் அனைத்துமே வீணாகிப் போய்...  தன்னுடைய அன்னை தன்னை மிக மிக வறுத்திக் கொண்டு, கீழிறங்கி சமரசங்கள் செய்து மீண்டும் கட்டமைத்த காங்கிரஸ் இயக்கத்தை  தன்னுடைய தவறான வியூகம் அதல பாதாளத்திற்கு தள்ளி விட்ட அந்த பெரும் தோல்வியானது ராகுல் காந்தியை முழுமையாக புரட்டிப் போட்டுவிட்டது.!  

மெல்ல மெல்ல அவருக்கு அரசியலும்...  அதன் சித்தாந்தமும், மக்களும், நண்பர்களும், எதிரிகளும், துரோகிகளும் புரிய ஆரம்பித்தார்கள்.  யாரை மதிக்க வேண்டும்....  எவர் அலட்சியப்படுத்தும் தகுதி கொண்டவர் என்பதெல்லாம் அவருக்கு புரிய ஆரம்பித்தது..!

விளைவு....  அடுத்ததாக வந்த பீகார் சட்டமன்ற தேர்தலில்,  மிக மிக கீழிறங்கி, தொகுதி எண்ணிக்கை பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல், தான் அமைத்த அணி வெல்ல வேண்டும்....  அதாவது காங்கிரஸ் கூட்டணி வென்றதாக இந்தியா முழுவதும் செய்தி பரவ வேண்டும் என்ற ஒற்றை இலக்கோடு செயல்பட்டார். அதில் வெற்றியும் கண்டார். காங்கிரஸுக்கு அதில் தனிப்பட்ட வகையில்...  அதாவது எம் எல் ஏக்கள் கிடைப்பதில் எந்த சிறு லாபமும் இல்லையென்றாலும், அகில இந்திய அளவில் சோர்ந்து போயிருந்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு உயிர் தண்ணீர் ஊற்றி துளிர்த்தெழச் செய்த அந்த பெரும் பலன் கிடைத்தது..!

அதேப் போன்று தமிழக 2016 சட்டமன்ற தேர்தலிலும் திமுகவோடு நிறைய சமரசங்கள் செய்து....  அதாவது முன்பு போல 63 தொகுதிகள் வேண்டும், இன்னின்ன தொகுதிகள் வேண்டும் என்ற நிலைப்பாட்டினை எல்லாம் எடுக்காமல், திமுக கொடுத்த 42 தொகுதிகளில் நின்று.... அக்கூட்டணி முன்பிருந்ததை விட மிகப் பெரிய அளவில் வெற்றி வாகை சூடியது.  ஆட்சியைப் பிடிக்க வெறும் 1.1 சதவிகித வாக்குகளே அக்கூட்டணிக்கு குறைவாகிப் போனதற்கு வைக்கோ, திருமா, கம்யூனிஸ்ட்டுகள் அமைத்த மக்கள் நல கூட்டணி என்கிற ஜெயலலிதா நலச் சங்கமும்...  தேர்தலுக்கு முந்தின தினம் 144 போன்று தமிழகம் முழுவதும் மின் தடை ஏற்படுத்தி அரங்கேற்றப்பட்ட அட்டகாசமான பண விநியோகமும் தான் காரணம் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்று...!

அதற்குப் பிறகு ஜெயலலிதா மரணமும், ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள ஓபிஎஸ், ஈபிஎஸ், சசிகலா, தினகரன் அடித்த கூத்துக்களும். சசிகலா சிறை சென்றதும், அதிமுக நெட்டுக்குத்தாக பிளவுபட்டு தினகரன் தலைமையில் சென்றிருப்பதும், மக்கள் நல கூட்டணி திமுகவோடு தோழமையாகியிருப்பதும், விஜயகாந்த் மிகப்பலமாக பலவீனப்பட்டுப் போயிருப்பதும்.....  அனைத்திற்கும் மேலாக அதைச் செய்வார், இதைச் செய்வார் என்று பெரிதும்  எதிர்பார்க்கப்பட்ட மோடி, முழுமையாக ஏமாற்றமளித்ததும்....

இப்படியாக அனைத்து நிகழ்வுகளும், அடுத்ததாக எந்த தேர்தல் வந்தாலும் அது திமுக - காங்கிரஸ் கூட்டணியை அமோகமாக வெற்றியடையச் செய்யும் என்ற பொதுப்புத்தியை ஒட்டுமொத்த வாக்காளர்களின் மனதிலும் ஆழமாக பதிய வைத்து விட்டது. 

இதற்கு முன்னதாக கலைஞர் உடல்நலம் குன்றி வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்த நிலையில்...   அதற்கு முன்பு பத்து ஆண்டுகள் தங்கள் கூட்டணி ஆட்சியில் பங்கேற்ற ஒரு மூத்த அரசியல் தலைவரை ஒரே ஒரு முறை கூட அவர் இல்லத்திற்கோ, கட்சி அலுவலகத்திற்கோ வந்து நேரில் சந்தித்திராத....  இன்னும் சொல்லப்போனால் பிரதமர் மன்மோகன் சிங்கும், சோனியாவும் புதிய தலைமைச் செயலக கட்டிட திறப்பு விழாவுக்கு சென்னை வந்திருந்த பொழுது... அவர்கள் உடன் வந்திருந்தும்,  விமானநிலையத்திலிருந்து நேரடியாக காங்கிரஸ் அலுவலகத்திற்கு சென்ற அந்த ராகுல் காந்தி..... ஓராண்டுக்கு முன்பாகத்தான் முதல் முறையாக கலைஞரை நேரில் வந்து அவரது இல்லத்தில் சந்தித்து ஆசி பெறுகின்றார். 



அதன் பிறகு தான் பப்பு என்று வர்ணிக்கப்பட்ட ராகுல் காந்தி....  அரசியல் அரங்கில் பாஜகவுக்கு பெரிய ஆப்பாக மாறிப்போனார்.  அதன் பிறகு ரஃபேல் விவகாரத்தில் மோடிக்கு எதிராக பாராளுமன்றத்தில் அவர் ஆடிய தனி ஆவர்த்தனம் தான் அவரது அரசியல் வாழ்வில் ஒரு மைல் கல்..!  பின்பு குஜராத்தில் பாஜகவின் வளர்ச்சியை மட்டுப்படுத்தி, காங்கிரஸை வளர்த்திருக்கின்றார்...  கர்நாடகவில் பாஜகவின் தில்லாலங்கடி வேலைகளுக்கு மத்தியிலும் மிகப் பெரிய சமரசம் செய்து பாஜக ஆட்சி அமைப்பதை தவிடு பொடியாக்கியிருக்கின்றார். சமீபத்தில் நடந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்களில் மூன்றில் பாஜகவை விரட்டி அடித்து காங்கிரஸை வெற்றி வாகை சூட வைத்துள்ளார். 

ராகுலின் கடந்த ஓராண்டு ப்ராக்ரஸ் தான்....  தங்களுக்கு எதிரிகளே இல்லை என்று மார்தட்டிக் கொண்டிருந்த பாஜகவை மெகா கூட்டணிக்காக எடப்பாடி காலில் எல்லாம் விழ வைத்திருக்கின்றது..!

இந்த மாற்றம் ஒரு மாயை போல திடீரென்று ஒரே வருடத்திற்குள்ளாக எப்படி நிகழ்ந்தது?!  அவர் கூற்றின் வாயிலாகவே இதற்கான விடையை நாம் கண்டு பிடித்துவிடலாம். ஆம், கலைஞர் சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் அவர் பேசும் பொழுது,  தலைவர் கலைஞரை முதன் முதலாக சந்திக்க அவர் இல்லம் செல்கின்றேன்.  நான் எண்ணியிருந்தேன் அதிக காலம் முதல்வராக இருந்தவர், மத்திய ஆட்சியில் வெகுகாலம் பங்கேற்ற கட்சித் தலைவர், இந்தியாவின் மிக மூத்த அரசியல்வாதி....  அவரது இல்லம்....  எப்படியெல்லாமோ இருக்கும் (ராகுலின் பாடி லாங்குவேஜ்...  அந்த இல்லம் மும்பையில் உள்ள அம்பானி வீட்டினைப் போல் இருக்கும் என்று நினைத்திருப்பார் போல) என்று எண்ணியிருந்தேன்.....    ஆனால் அவரது இல்லமோ, ஒரு சாதாரண நடுத்தர வர்க்கத்து மனிதரின் வீட்டினைப் போன்று, நிறைய வீடுகள் அடுத்தடுத்து இருக்கின்ற ஒரு தெருவில்  இருக்கின்ற இன்னொரு வீடு போல் தான் இருந்தது என்கிறார். அவர் மக்களுக்காகவே வாழ்ந்திருக்கிறார், மக்களுக்காகவே போராடியிருக்கின்றார்.....  இப்படியாக ராகுல் காந்தி அவர்கள் வானத்தைப் பார்த்து பேசிக்கொண்டே சென்று.... 

அதற்கு முன்னதாக கலைஞர் பற்றி தனக்கு இருந்த மதிப்பீடு சுத்தமான பொய்...  அன்று அவர் பார்த்த கலைஞர் என்பது தான் நிஜம் என்று உணர்ந்தவராய்...  அவரைப் போலத்தான் இனி தன்னுடைய அரசியலை முன்னெடுப்பேன் என்று பட்டவர்த்தனமாக அந்த மேடையிலேயே அறிவித்தார்..!

கலைஞர் தரிசனத்திற்குப் பிறகு ஞானம் பெற்று வெற்றிகளை ஈட்டும் தகுதியோடு இருக்கும் அந்த ராகுல் காந்தியைத் தான் அன்றைக்கு அதே மேடையில் திமுகழக தலைவர் ஸ்டாலின் அவர்கள்...  வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளராக தங்கள் கட்சியின் சார்பாக அறிவித்தார். காங்கிரஸே கூட இன்று வரையிலும் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கத் தயங்குகின்ற ராகுலை...  ஸ்டாலின் அவர்கள் பகிரங்கமாக அன்று அறிவித்தார். அதன் பிறகு காட்சிகள் தேசிய அளவில் மெல்ல மெல்ல மாறின... முதலில் எதிர்ப்புகள் ஆங்காங்கே முளைத்தாலும்...  இன்றைக்கு ஆந்திரா, கர்நாடகா, பீகார் என்று ஒவ்வொன்றாக அவரை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள துவங்கிவிட்டனர்..!

ஆனால் அதற்கான விதையைப் போட்டது திமுக..!

இப்பொழுது வருவோம் இந்த கட்டுரையில் தலைப்புக் கேள்விக்கு...!

திமுக - காங்கிரஸ் இம்முறை வெற்றிக் கூட்டணியா என்றால்...   ஆம் அது வெற்றிக் கூட்டணி தான்....  ஆனால் அது ராகுல் காந்தியின் செயல்பாட்டில் தான் ஒழிந்துகொண்டுள்ளது என்பது தான் நிதர்சனமான பதில்..!

ஆம்...  கடந்த சட்டமன்ற தேர்தலையே நாம் கணக்கில் எடுத்துக்கொள்வோம்.  திமுக தான் நின்ற தொகுதிகளில்  52 சதவிகித இடங்களில் (89/173) வென்றுள்ளது. அதே சமயம் காங்கிரஸோ  தான் நின்ற தொகுதிகளில் வெறும் 19 சதவிகித இடங்களில் மட்டுமே (9/42) வெற்றி பெற்றுள்ளது. 

இன்னுமொரு கணக்கையும் கூட நாம் பார்க்கலாம்.  திமுக தான் நின்ற தொகுதிகளில் வாங்கிய ஓட்டு சதவிகிதத்தை விட 1.1 சதவிகிதம் குறைவாகவே காங்கிரஸ் ஓட்டு வாங்கியுள்ளது.  ஆகவே அதிமுக ஆட்சி அமைக்க ஏதுவான கூடுதல் தொகுதிகள் அனைத்துமே காங்கிரஸிடமிருந்து பறிக்கப்பட்டவையே..!

இந்த இடத்தில் ராகுல் காந்தி ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும்.  பாஜகவுக்கு கூட தமிழகம் முழுவதும்  கட்சி அமைப்புக்கள் உண்டு. ஊராட்சி மற்றும் வார்டு கிளைக்கழக அளவில் இல்லை என்றாலும் கூட பகுதி, ஒன்றிய, நகர அமைப்புக்கள் வரையிலும் உண்டு. மேலும் கடந்த நான்கு ஆண்டுகளில் அனைத்து தொகுதிகளிலும் உள்ள வாக்குச் சாவடிகளிலும் பூத் கமிட்டியும் போட்டுள்ளது. இது தவிர  பாஜகவுக்கு அனைத்து வகைகளிலும் உதவிட ஆர் எஸ் எஸ், இந்துமுண்ணனி போன்ற சார்பு அமைப்புக்கள் இருக்கின்றன. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி இருக்கின்றது, தேர்தல் கமிஷன் இருக்கின்றது, பணம் இருக்கின்றது, ஊடகங்கள் இருக்கின்றது..!

இவை எதுவுமே காங்கிரஸுக்கு கிடையாது. தமிழகம் முழுவதும் கட்சிக்கான அமைப்போ, தொண்டர்களோ கூட கிடையாது.  அவர்கள் எந்த தொகுதியில் நின்றாலும், முழுக்க முழுக்க கூட்டணிக் கட்சியான திமுகவை மட்டுமே நம்பி நின்றாக வேண்டும். திமுகவினர் இல்லாமல் அவர்களால் ஒரு அடியைக் கூட எடுத்து வைக்க முடியாது. 

ஆனால் இவ்வளவு பலமும் இருக்கின்ற பீகார், கர்நாடகாவிலேயே கூட நிறைய விட்டுக்கொடுத்து நிற்கும் போது... தமிழகத்தில் காங்கிரஸ் இருக்கின்ற நிலையில் கூட்டணி விவகாரங்களில் ராகுல் காந்தி எப்படி செயல்பட வேண்டும் என்பதை நாம் சொல்லவே தேவையில்லை. 

ஒரு மாதம் முன்பு வரையிலும் கூட நீங்கள் இந்த மனநிலையில் தான் இருந்தீர்கள்.  அப்பொழுதெல்லாம் காங்கிரஸின் எந்த தமிழக தலைவரிடமிருந்தும் சிறு முனுமுனுப்புக் கூட வந்திருக்கவில்லை. மக்கள், எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகங்கள் அனைவரும் நம்பினர் இது உடைக்க இயலாத கூட்டணி என்று. 

ஆனால் இன்றைக்கு புதிய தலைவர் கே.எஸ். அழகிரி, திமுகவை கமல் விமர்சித்த பிறகும் அவரை கூட்டணிக்கு அழைத்ததும், இன்னும் பல கட்சிகள் கூட்டணிக்குள் வர வேண்டும் என்று அழைப்பதும்...  வசந்த குமார், எங்களுக்கு 16 சீட்டுக்கள் வேண்டும் என்று கேட்பதும், இந்த கூட்டணி பலவீனமாக இருப்பது போன்ற தோற்றத்தை மக்களிடம் கொண்டு செல்கின்றது. அதை தெளிவாக செய்து முடிக்க பாஜக ஆதரவு ஊடகங்களும் அற்புதமாக துணை போகின்றன. 

இன்றைக்கு இந்திய அளவில் மற்ற கட்சித் தலைவர்களை விட...  இன்னும் ஒரு படி தெளிவாக சொல்ல வேண்டுமானால் உங்கள் காங்கிரஸ் கட்சியின் சில தலைவர்களை விட...   காங்கிரஸ் தலைமையிலான ஒரு கூட்டணி ஆட்சியும் அதில் நீங்கள் தான் பிரதமர் வேட்பாளர் என்றும் உறுதியாகச் சொல்லக் கூடிய தலைவர் திரு மு.க. ஸ்டாலின் மட்டுமே.  அவர் தன்னுடைய நேர்மையை இன்னும் ஒரு படி மேலே சென்று....  ஒருவேளை பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு ஏற்பட்டால் கூட நாங்கள் பாஜக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க மாட்டோம்  என்று போஸ்ட் போல் முடிவையும் கூட பகிரங்கமாக அறிவித்து விட்டார். 

அப்படிப்பட்ட தெளிவான பாஜக எதிர்ப்பாளரைப் பார்த்து மக்கள் செல்வாக்கு கொண்ட கட்சியின் தலைவரைப் பார்த்து மோடி - அமித்ஷா கூட்டணியே அலறுகின்றது. ஆகையால் அவர்கள் வகுத்த திட்டமே, திமுக - காங்கிரஸ் கூட்டணி வென்றாலும் கூட திமுக அதிக இடங்களில் வெல்லக் கூடாது என்பதாகும்..!

ஆனால் கள யதார்த்தமோ, வாக்கு வங்கி கூட்டல் கழித்தல்களோ சொல்லக்கூடிய விஷயம் என்னவென்றால், திமுக எத்தனை தொகுதிகளில் நின்றாலும் வெல்லும் என்பது தான். ஆகவே தான் பாஜக காங்கிரஸை பல்வேறு வகைகளில் உசுப்பேற்றி விட்டு, மற்ற சிறு, குறு கட்சிகளையும் பேச வைத்து திமுக நிற்கின்ற தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க முற்படுகின்றது. அதற்காகவே அதிமுக தலைமையில் ஒரு பலமான கூட்டணி அமைப்பது போல தோற்றத்தை உருவாக்கி, அந்த அணி அமைந்தால் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்க்கு பலத்த சவாலாக இருக்கும் என்ற கருத்தாக்கத்தை உருவாக்கி....  அதைக் கொண்டு திமுகவை குறைந்த எண்ணிக்கையிலான தொகுதிகளில்  போட்டியிட வைத்து விடலாம் என்று கணக்குப் போட்டு...  மோடி - அமித்ஷா கூட்டணி அதை செயல்படுத்தியும் வருகின்றது..!

உங்களுக்கே கூட அந்த சபலம் ஏற்பட்டிருக்கலாம். உங்கள் மாநில தலைவர்கள் திமுகவை வளரவிட்டால் மத்திய ஆட்சியில் நம்மை ஆட்டிப் படைப்பார்கள் அதனால் அவர்கள் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று உங்களை வளைத்திருக்கலாம். ஆனால் உண்மை என்னவெனில், திமுகவுக்கு கிடைக்கின்ற அதிகப்படியான எம்பிக்கள் தான் மாயாவதி, முலாயம்சிங், மம்தா போன்றவர்களுக்கு கடிவாளம் போட்டு இழுக்க உங்களுக்கு உதவும்.  திமுகவின் எண்ணிக்கை குறைந்து மேற் சொன்னவர்களின் எண்ணிக்கை கூடினால், அது உங்கள் தலைமையிலான கூட்டணி ஆட்சியாக இருக்காது. அப்படியே அமைந்தாலும் அவர்களிடம் தினம் தினம் மல்லுக்கட்ட வேண்டியிருக்கும். இன்னும் சொல்லப்போனால் அது பாஜக மீண்டும் கூட்டணி ஆட்சி அமைக்க கூட வழி வகுத்துவிடும் அபாயமும் இருக்கின்றது..!

ஆகவே மீண்டும் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைய ராகுல் காந்தி செய்ய வேண்டியது எல்லாம், தமிழக கூட்டணி விவகாரங்களை முழுக்க முழுக்க திமுக தலைவர் ஸ்டாலினிடமே விட்டு விடுவது தான்.  நீங்கள் எதையும் செய்யுங்கள் ஆனால் நாற்பது தொகுதிகளையும் சிந்தாமல் சிதறாமல் கொண்டு வாருங்கள் என்ற நிபந்தனையோடு, திமுகவிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு,  நிம்மதியாக மற்ற மாநிலங்களில் இன்னும் கூடுதலாக கவனம் செலுத்துவது தான்..!

இதைச் செய்தாலே திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றிக் கூட்டணி தான்..!


Friday, February 15, 2019

பண மதிப்பிழப்பு தீவிரவாதிகளை ஒழிக்கவில்லையா?!

தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான 45 இந்திய வீரர்களுக்கு #வீரவணக்கம்

மோடி ஆட்சி.... அது சொன்ன ஸ்வாட்ச் பாரத் என்கிற தூய்மை இந்தியா திட்டம், கங்கையை சுத்தமாக்குவது, ராமர் கோவில் கட்டுவது, கருப்பு பணத்தை ஒழித்து பொருளாதாரத்தை சீரமைத்து மேம்படுத்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டது, தொழில்துறையை வளமாக்கிட ஜி எஸ் டியை நடைமுறப்படுத்தியது, மேக் இன் இந்தியா திட்டம் கொண்டுவந்தது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தைக் கொண்டு வந்து இன்னும் ஒரே ஒரு ஸ்மார்ட் சிட்டி கூட கண்ணுக்கு எட்டின தூரம் தெரியாம செஞ்சது, 13 எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு அடிக்கல் மட்டும் நாட்டிட்டு நிதி கொடுக்காம நொட்டினது....
இப்படி நாலே முக்கால் ப்ளஸ் வருஷத்துல அவர்கள் செய்வதாகச் சொன்ன ஒரே ஒரு திட்டத்தைக் கூட வெற்றிகரமாக நடத்திடாமல், அல்லது மக்கள் தலையில் மண் அள்ளிப் போடுகின்ற அளவில் தான் நடைமுறைப்படுத்தியிருந்தாலும்...
இந்த ஒரு விஷயத்தில் அவர்கள் சமரசமே செய்து கொள்ள மாட்டார்கள் என்றே எல்லோரும் நம்பியிருந்த நிலையில்.... அந்த நம்பிக்கையும் நேற்று தர்ந்து விட்டது..! அவர்களே தம்பட்டம் அடித்துக் கொண்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு தீவிரவாதிகள்... பணம் கிடைக்காமல் தீவிர வியாதியில் சிக்கிக் கொண்டார்கள் என்ற பிரச்சாரமும் பொய்துப் போயிருக்கின்றது..!
அங்க அடிப்பட்டு 45 (எண்ணிக்கை இன்னும் சரியாக தெரியவில்லை) ராணுவ வீரர்கள் வீர மரணம் எய்தியிருக்கின்றார்கள்...
பிரியங்கா காந்தியோ இது அரசியல் பேசுவதற்கான நேரமில்லை என்று பத்திரிக்கையாளர்களிடம் கூறிக்கொண்டிருக்கும் போதே...
நிதி அமைச்சர் ஃபியூஷ் கோயல்... தேர்தல் கூட்டணி பற்றிப் பேச வந்துள்ளேன் என்று சிரித்தவாறே பேட்டி கொடுக்கின்றார்..!
திமுக பங்கேற்ற வாஜ்பாய் ஆட்சியில் கூட இந்தியா ஒளிர்கிறது என்று கம்பிரமாக தேர்தலுக்கு முன்பாக விளம்பரம் கொடுத்தார்...
அதற்கு ஏற்றார்போல, இன்றைக்கும் நினைவில் கொள்ளத்தக்க வகையில், அவர் ஆட்சியில் அமைக்கப்பட்ட காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒன்றாக இணைத்த தங்க நாற்கர சாலை ஒளிர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.
(ஒரே இந்தியா என்று சொல்லி, இந்தியாவையும் இந்தியர்களையும் ஒன்றிணைக்க வேண்டுமானால் இப்படியான திட்டங்கள் தான் உதவும்..! அதை விடுத்து ஒரே மொழி, ஒரே சாப்பாடு, ஒரே சாமி, ஒரே பண்டிகை, ஒரே உடை.... இப்படியெல்லாம் பேசினால் உடைந்து தான் போகும்... இல்லை என்றால் அப்படி பேசுபவர்களுக்கு இந்தியர்களின் உதை தான் கிடைக்கும்..!)
கடும் நிதி நெருக்கடியிலும், உலக பொருளாதார தடை விதிக்கப்படும் அபாயம் இருப்பதை உணர்ந்தும்..., போக்ரானில் அணுகுண்டு சோதனையை நடத்தி பாகிஸ்தானை மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகத்துக்கே உதறல் கொடுத்து, இந்தியர்களை கொஞ்சம் கம்பீரமாக ஃபீல் செய்ய வைத்து, அந்த ஃபீலுங்குக்காகவே உலக பொருளாதார தடையால் ஏற்பட்ட சிறு கஷ்டங்களைக் கூட இஷ்டப்பட்டு ஏற்க வைத்தார்..!
அப்படிப்பட்ட வாஜ்பாயின் ஆட்சி மீண்டும் வர முடியாமல் போனதற்கு காரணமே, அந்த ஆட்சிக்காலத்தின் கடைசி ஓராண்டில் அப்போதைய ஆர் எஸ் எஸ் டார்லிங்கான அத்வானியை அனைத்திலும் மூக்கை நுழைக்க அனுமதிக்கப்பட்டதால் தான்..!
அதனால் தான் திமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகள் அக்கூட்டணியில் இருந்து விலகி சோனியாவால் ஒன்றிணைக்கப்பட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு அடுத்த பத்து ஆண்டு காலம் ஆட்சி ஆளும் வாய்ப்பினைப் பெற்றன..!
மீண்டும் ஒரு முறை இந்தியர்கள் ஆர் எஸ் எஸ் டார்லிங்கான மோடிக்கு முழு அதிகாரத்துடன் ஆட்சி ஆளும் வாய்ப்பினை நல்கிய நிலையில்... அவர்கள் அனைத்து துறையிலும் கோட்டை விட்டு, இப்பொழுது ஆட்சி முடிய முப்பது நாட்களே இருக்கின்ற நிலையில் கையை பிசைந்து கொண்டு நிற்பது... இந்தியாவை உண்மையாகவே நேசிக்கும்.... இந்தியர்கள் யாராலும் ஏற்க முடியாத ஒன்று..!
தேர்தலை மனதில் வைத்து இவ்விஷயத்திற்காக பாகிஸ்தானுடன் போர் தொடுப்பது, இந்தியர்களின் உணர்ச்சிகளை தூண்டி விட்டு பதற்றத்தை ஏற்படுத்துவது எல்லாம், இந்த பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்வினை தரவே தராது..!
புதிய தலைமுறை போன்ற பாஜக ஆதரவு ஊடகங்கள் இவ்விஷயத்திற்காக பாகிஸ்தானுடன் இந்தியா போர் தொடுக்க வேண்டும் என்று இந்தியர்கள் கொந்தளிப்பது போல செய்திகள் வெளியிடுவது.... இந்தியாவின் மீதும், இந்திய மக்கள் மீதும் கொஞ்சம் கூட அக்கறை இல்லாத செயல்..!

Monday, February 11, 2019

தேர்தல் T 20... நொடிக்கு நொடி விறுவிறுப்பு - பரபரப்பு..!


இன்னும் ஒரு மண்டலம்...
அதாவது கிட்டத்தட்ட 48 நாட்கள்...
அரசியலை படிக்க விரும்பும்..., பழக விரும்பும்..., புரிந்துகொள்ள விரும்பும் இளைஞர்கள் உற்று கவனிக்க வேண்டிய காலம்..!

இதை ஒரு விரதம் போல் இருந்து கவனிக்க வேண்டும். ஒவ்வொரு பெரிய கட்சியிலிருந்து, லெட்டர் பேட் கட்சி வரையிலும், அவர்கள் கொடுக்கின்ற அறிக்கைகளை, விடுகின்ற சவால்களை, செய்கின்ற சமாதானங்களை, கடந்து போகின்ற முக்கிய பிரச்சினைகளை, தூக்கி வைத்துக் கொண்டாடுகின்ற அல்ப விஷயங்களை....
இப்படியாக ஒவ்வொன்றையும் மனதில் பதிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இவர்கள் உண்டு என்றால் அது இல்லை என்றும்.... இல்லை என்றால் அது உண்டு என்றும்... கூடாது என்றால் அது வேண்டும் என்றும்.... வேண்டும் என்றால் அது ஆகாது என்றும்... அழைத்தால் அவர்களை அரவணைக்கவே போவதில்லை என்றும்... அரவணைக்கப் போகின்றவர்கள, கண்டுகொள்ளாமல் நாள் கடத்துவதும்....
இவை அனைத்துமே இல்லாத கயிற்றின் மேல் நடந்து காட்டுகின்ற அரசியல் சாகசங்கள்..!
ஒரு சாதாராண அரசாங்க வேலைக்கே.... எத்தனை பெரிய உழைப்பு..., பணம்..., சமரசங்கள்..., சமாதானங்கள்..., போட்டிகள்... பொறாமைகள்.....

அப்படியிருக்க ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமாகின், இங்கு எதுவுமே தப்பில்லை... இது எக்ஸாம் ஹால்... இங்கு வெற்றி மட்டுமே குறிக்கோள்... தோற்றால் அதல பாதாளத்திற்கு சென்று விடுவார்கள்.... ஆகவே வெற்றிக்கான அனைத்துமே இங்கு புனிதப்படுத்தப்பட்டு விட்டும். தோற்றவர்களை ஏன் தோற்றாய் என்று காறி உமிழ்வார்கள்.

ஸோ.... இன்னும் ஒரு மண்டலத்திற்கு இங்கு எதுவுமே தப்பில்லை..!

கடந்த தேர்தலில் கடைசிவரை கூட இருந்து, அனைவரையும் கூட்டிக் கொடுத்த வைக்கோவுக்கு அவர் கேட்ட அளவு தொகுதிகளை கனத்த இதயத்துடன் ஜெயலலிதா மறுத்து... வெற்றியை ஈட்டினார். அங்கு மனிதாபிமானம், நியாய தர்மம் எல்லாம் பார்த்துக் கொண்டிருந்திருந்தால், வைக்கோவாலேயே தோற்றுப்போயிருப்பார்.

அதே வைக்கோ அதற்கு முன்பு ஒரு முறை கடைசி வரை திமுக கூட்டணியில் இருப்பதாக வாக்குக் கொடுத்து கலைஞரை நம்ப வைத்து, அவர் அசந்திருந்த வேளையில் அனைவரையும் தூக்கிச் சென்று ஜெயலலிதாவிடம் அடமானம் வைத்து மண்டியிட்டவர் தான் அந்த வைக்கோ. 2001இல் அவர் கலைஞருக்கு கொடுத்ததை, 2011இல் ஜெயலலிதா அவருக்கு திருப்பிக் கொடுத்தார்..!

ஆகையால் இது எதுவுமே இன்னும் ஒரு மண்டலத்திற்கு தவறில்லை. வெற்றி மட்டுமே இங்கு குறிக்கோள்... வெற்றியாளன் மட்டுமே இங்கு திறமைசாலியாக கருதப்படுவான். ஏனெனில் இது வரலாறாக பதிவாகப் போகின்ற விஷயம். இன்னும் 100 வருடம் கழித்தும் எடப்பாடி முதல்வராக இருந்ததை படிப்பார்கள். ஆனால் அவர் யார் காலை பிடித்து, டயரை நக்கி வந்தார் என்றெல்லாம் வரலாறு பதிவு செய்யாது..!

இதோ சதுரங்க ஆட்டம் ஆரம்பமாகி விட்டது. இந்தப் பக்கத்து ராஜாவும் எதிர்தரப்பு ராஜாவும் கடைசி வரை காப்பாற்றப்பட வேண்டும். இருவரும் நேருக்கு நேர் மோதவே மாட்டார்கள். சுற்றி வளைத்து யார் யாரோ யார் யாருடனோ, சம்பந்தமே இல்லாமல் சண்டையிட்டுக் கொண்டிருப்பார்கள்.

வியூகங்கள் மாறிக்கொண்டே இருக்கும். அருகிலேயே இருக்கின்ற பலம் மிக்க ராணி கூட பலி கொடுக்கப்படுவார்.... ராஜாவைக் காப்பாற்ற. ஏனெனில் ராஜாக்கள் முக்கியம்..! எத்தனை முறை வேண்டுமானாலும் ராஜாக்களுக்கு செக் வைக்கலாம்.
ஆனால் அவற்றையெல்லாம் அனாயாசமாக கடந்து சென்று எதிர் ராஜாவுக்கு தன் சிப்பாயைக் கொண்டே செக் மேட் வைக்கும் லாவகம் இறுதி வெற்றியை அடையப்போகும் ராஜாவுக்கு மட்டுமே உண்டு..!

அந்த ராஜா யார்?

அவர் இந்த ஒரு மண்டலமும் ஒர் டேக்ஸ் ஃப்ரீ ஸோன் என்ற புரிதலோடு செயல்படுபவராக இருப்பவர் தான் அந்த ராஜா..!
இந்த ஒரு மண்டலமும் கொள்கைக்கோ, கோட்பாடுகளுக்கோ, நியாய தர்மங்களுக்கோ, மனிதாபிமானங்களுக்கோ இடமே கிடையாது என்று புரிந்து வைத்திருப்பவர் அந்த ராஜா..!
ராஜா என்றால் வெல்ல வேண்டும், இல்லை என்றால் வெட்டப்படுவார் என்ற புரிதோடு இந்த ஒரு மண்டலமும் செயல்படுவார் அந்த ராஜா..!

உதாரணத்திற்கு திமுக யாரை எதிர்த்து கொள்கையாடியதோ, அந்த குலத்தலைவனோடு ஒப்பந்தம் போட்டு முதல் வெற்றியை ஈட்டித் தந்து, அந்த வெற்றியை தன் குலத் தலைவனிடம் காணிக்கையாக வைத்தாரே பேரறிஞர் அண்ணா... அந்தவொரு மகா யுக்தியோடு இந்த ஒரு மண்டலமும் செயல்படுவார் அந்த வெற்றியாளர் ராஜா..!
இந்த ஒரு மண்டலமும் விதிவிலக்குகள் மட்டுமே வெற்றியாளருக்கான ஆகப் பெரிய ஆயுதம்..!
இதைத்தான் அரசியல் மாணக்கர்கள் உன்னிப்பாக கவனித்து பதிவு செய்ய வேண்டும்..! ஒரு டென்னிஸ் மேட்ச் பார்ப்பதை விட, வேர்ல்ட் கப் ஃபுட் பால் ஃபைனல் மேட்ச் பார்ப்பதை விட, டி 20 கிரிக்கெட் மேட்ச் பார்ப்பதை விட, ஸ்பீட் திரைப்படம் பார்ப்பதை விட...

இந்த ஒரு மண்டலமும் நொடிக்கு நொடி மாறிக்கொண்டே, பிரேக்கிங் நியூஸ்களையும், பிக் பிரேக்கிங் நியூஸ்களையும், மாற்றங்களையும், ஆச்சரியங்களையும், அதிசயங்களையும் நமக்கு அளித்துக் கொண்டே இருக்கும்..!
கெட் ரெடி.... எல்லோரும் இந்த அற்புதமான அனுபவத்திற்கு தயாராவோம்..!


Saturday, February 9, 2019

அந்த நாற்பத்தி ஓராயிரம் கோடியை என்ன தான்யா பண்ணுணீங்க..?!


தமிழக அரசின் இந்த ஆண்டு பட்ஜெட் பற்றி அறிவுஜீவிகள் எல்லாம் விவாதித்து ஒரு முடிவுக்கு வரட்டும்...
ஆனால் ஒரு ஆர்டினரி குடிமகனா ஓபிஎஸ் சொன்ன கணக்குலேர்ந்தே எனக்கு வருகின்ற கேள்வி இது தான்...
போன வருஷ கடன் 3 லட்சத்தி 56 ஆயிரம் கோடியா இருந்துச்சாம்...
இந்த வருஷ கடன் 3 லட்சத்தி 97 ஆயிரம் கோடியா உயர்ந்திருக்காம்...

ஒரே வருஷத்துல நம்ம எடப்பாடியும் பன்னீரும் சேர்ந்து 41 ஆயிரம் கோடி கடன் வாங்கியிருக்காங்களாம்...

இருந்துட்டு போவட்டும்... வாங்குன கடனை என்ன பண்ணினாய்ங்க..?! இது தான் என்னைய மாதிரி அப்பாவி குடிமகனின் கேள்வி.
தமிழ்நாட்டுல ஒரே ஒரு ரோடு கூட உருப்படியா இல்ல.

கலைஞர் ஆட்சியில கட்டுன மாதிரி மதுரவாயல் பறக்கும் சாலையோ, கத்திப்பாரா பட்டர்ஃபளை பாலமோ, கொள்ளிடம் ஆற்றுக்கு குறுக்கே கட்டுன மாதிரியோ, எல்லா ஊருலயும் ரிங் ரோடு போட்டாரே அது மாதிரியோ... இப்புடி இந்த ஒரு வருஷத்துல இவிங்க எதையுமே போடல..!

அது போவட்டும், கலைஞர் ஆட்சியில 8 மின் உற்பத்தி திட்டங்கள் போட்டு 7400 மெகாவாட் மின் உற்பத்தி செஞ்சு கொடுத்தாரே... அதே மாதிரி ஒரே ஒரு திட்டமாவது போட்டு நிதி ஒதுக்கினீங்களா? அவர் போட்ட திட்டத்துல வர்ற மின்சாரத்தை இப்ப பயன் படுத்தி மின் வெட்டு இல்ல... மின் மிகை மாநிலம்ன்னு எல்லாம் வேற பீத்திக்கிறீங்க..! உரான் வீட்டு நெய்யே... என் பொண்டாட்டி கையேங்கற மாதிரி..!

சரி போகட்டும், கலைஞர் எல்லா அரசு அலுவலகங்களையும் சொந்த கட்டிடமா மாத்தி... ஒவ்வொரு மாவட்டத்துலயும் கலெக்ட்டர் ஆஃபீஸ், ஊராட்சி ஒன்றிய கட்டிடங்கள், ஒருங்கிணைந்த அரசுத்துறை அலுவலகங்கள் என்று தமிழ்நாடு முழுக்க நிதி ஒதுக்கி சூப்பர் சூப்பரா கட்டிக் கொடுத்தாரு. இந்த உட்கட்டமைப்பு எல்லாம் செய்யும் போது பணப்புழக்கம், பல லட்சம் பேருக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பு, இது சம்பந்தப்பட்ட சிறு, குறு, மத்திய தர நிறுவனங்களுக்கான உற்பத்தி, அதன் மூலமான வேலை வாய்ப்பு, அது மூலமான வரி வருவாய்... இப்படியாக மக்கள் கிட்ட நல்ல பணப்புழக்கமும், சுபிட்சமும் இருந்திச்சி... அது மாதிரி எதாவது ஒரு உட்கட்டமைப்பு வேலையாவது புதுசா நீங்க பண்ணிணீங்களா?! நாடே ஏதோ மந்திரிச்சி வுட்ட மாதிரி கையில பணம் இல்லாம ஒவ்வொருத்தனும் சுத்திக்கிட்டிருக்கான்..!

இதெல்லாம் கூட விடுங்கப்பா.... அவர் பண்ணின மாதிரி ஒரு ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம், நதி நீர் இணைப்பு, கடல் நீரை குடி நீராக்குறது, மெட்ரோ ரயில்... இப்படி எதையாச்சும் புதுசா பண்ணி நிதி ஒதுக்கியிருக்கீங்களாய்யா...?!
அது கூட பரவாயில்லை... திருவள்ளுவர் சிலை, அண்ணா நூற்றாண்டு நூலகம், புதிய தலைமைச் செயலகம், செம்மொழி மாநாடு, அதை காரணமா வச்சி கோம்புத்தூருக்கு எக்கச்சக்கச்சக்க நிதி ஒதுக்கியது, செம்மொழி பூங்காக்கள்... இப்படியெல்லாம் எதுனாச்சும் செஞ்சீங்களாய்யா..?!
இப்படி எதுவுமே சொல்லிக்கிறா மாதிரி ஒரு நல்ல திட்டமும் செய்யாம அதுக்கு பணம் ஒதுக்கினதா எங்களுக்கும் தெரியாம... ஒரே வருஷத்துல நாற்பத்தி ஓராயிரம் கோடி கடன் வாங்கி என்ன தான்யா பண்ணுணீங்க..?!
அந்த ஆளு, விவரம் தெரியாம... அஞ்சு வருஷத்துக்கு வெறும் 46 ஆயிரம் கோடி மட்டும் கடனை வாங்கி மேல சொன்ன அவ்ளோத்தையும் செஞ்சி... இதைத்தவிரவும், இலவச கான்கிரீட் வீடு திட்டம், டீவி, மருத்துவ காப்பீடு திட்டம்... இப்டி எல்லாம் கூட நிறைய செஞ்சுட்டு... இதையெல்லாம் விளம்பரப்படுத்தாமலேயே... உங்க கிட்ட ஆட்சியை கொடுத்துட்டு தெய்வமாயிட்டார்..!

உங்களை மாதிரி ஒரே வருஷத்துல நாற்பத்தி ஓராயிரம் கோடி கடனை வாங்கிக்கிட்டு...
ஒரு இலவச திட்டமும் புதுசா போடாம, ஒரு உட்கட்டமைப்பு வேலையும் புதுசா செய்யாம, இருக்குற ரோட்டையும் பராமரிக்காம, யாருக்கும் ஊதிய உயர்வும் கொடுக்காம, விவசாயிகளுக்கு கொள்முதல் விலையை ஏத்திக் கொடுக்காம, போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய பணம் எதையும் கொடுக்காம, அரசு ஊழியர்கள் ஆசிரியர்களோட சேமிப்பையும் ஆட்டைய போட்டுட்டு...
கெத்தா யோக்கியனுங்க மாதிரியே பேட்டி குடுக்குறீங்க பாருங்க... உங்க திறமை எல்லாம் திமுககாரவிங்களுக்கு பத்தாதுய்யா...!

திமுக தலைவர் நீங்க போட்டத ஒரு உதவாக்கரை பட்ஜெட்டுன்னு லைட்டா திட்டிட்டு விட்டுட்டார். நியாயமா பார்த்தா அவரு நாலு நல்ல கெட்ட வார்த்தைல திட்டியிருந்தா, குடிமக்களுக்கு இன்னும் கொஞ்சம் திருப்தியா இருந்திருக்கும்..!

Tuesday, February 5, 2019

நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் அமோக வெற்றி - இதற்கு காரணம் திராவிட சிஸ்டமா? சங்கிகளின் திட்டமா?!


நீட் முதுகலை தேர்வில் வெற்றிபெற்ற 79,633பேரில், 11,121 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் - செய்தி..!
அதாவது MBBS படித்து முடித்து விட்டு, அதற்கு மேல் முதுகலை படிப்பிற்காக... அதாவது எம் டி, எம் எஸ்... இப்படியான படிப்புக்கு இந்தியா முழுவதும் நீட் தேர்வு எழுதியவர்களில் தமிழக மாணவர்கள் பதினோராயிரத்தி நூற்றி இருபத்தி ஓரு பேர் வென்றுள்ளார்கள்..!
ஒட்டுமொத்தமாக இத்தேர்வினை எழுதிய இந்திய மாணவர்களில் 14 சதவிகிதம்... அதாவது 100 மாணாக்கர்களுக்கு 14 பேர் தமிழர்கள்..!
மக்கள் தொகையின் படி பார்த்தால் 100 இந்தியர்களில் 6 லிருந்து 7 பேர் மட்டுமே தமிழர்கள். ஆனால் மருத்துவ மேல் படிப்பு தேர்வில் 100க்கு 14 பேர் தமிழர்கள் வரும் வாய்ப்பு இருக்கின்றது..!
ஓக்கே மேட்டருக்கு வருவோம்..!
இப்போ சங்கிகள் இந்த தேர்வு முடிவினை கைகளில் வைத்துக் கொண்டு ஆட்டம் போடுகின்றார்கள்.
பார்த்தீர்களா மக்களே... நீட் தேர்வு வந்தால் தமிழர்கள் மருத்துவமே படிக்க முடியாது.. தோற்று விடுவார்கள்... அனைத்து சீட்டினையும் இந்திக்காரன் அபகரித்துவிடுவான் என்றெல்லாம் திமுகவினர் ஓலமிட்டார்களே... இப்பொழுது புரிகிறதா? நீட்டால் அதிகம் பயன் பெற்றது தமிழக மாணவர்களே...! ஆகவே திமுக சொல்வதை நம்பாதீர்கள்..!
இப்படிக்கா.... இல்லாத கடையில் டீ ஆற்றுவது போல இணையமெங்கும் கூத்தடிக்க ஆரம்பித்து விட்டார்கள்..!
சரி... உண்மையில் இதை யார் தான் கொண்டாட வேண்டும்?!
தமிழக மாணவர்கள் தான்....! ஆம் திராவிடத்தால் வாழ்ந்தோம் என்று தமிழக மாணவர்கள் தான் இதை கொண்டாட வேண்டும்.
நீங்க சொல்றது சரிதான் சார்... ஆனால் நீட்டால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படவில்லையே...?! பிறகு ஏன் திமுக நீட்டால் பாதிப்பு என்று போராடுகிறது?!
சார்... இப்போ பாஸ் பண்ணியிருக்கின்ற மாணவர்கள் அனைவருமே, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பாக மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படித்து MBBS பட்டம் பெற்றவர்கள் தான்.
அவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேரும் போது நீட் தேர்வு இல்லை. தமிழக பாடத்திட்டத்தில் மட்டுமே படித்து... கிராமம், நகரம் என்ற பாகுபாடு இல்லாமல்...
+2வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற அடிப்படையில் மட்டுமே, அதிலும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலேயே மருத்துவக் கல்லூரிகளில் இடம் பிடித்து இன்றைக்கு MBBS பட்டம் பெற்று... நீட் அடிப்படையில் முதுகலை படிப்பதற்கான தேர்வில் வென்றுள்ளார்கள்..!
ஆனால் தமிழகத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்தும் +2 முடித்து வரும் மாணவர்களுக்கு திடீரென்று நீட் போன்ற தேர்வுகளை எதிர்கொள்வது இயலாத காரியம். ஆகையினால் அவர்கள் பழைய முறைப்படி மெடிக்கல் சேர்வர்தற்கு தேவையான மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் கூட அதில் சேர முடியாமல் போகின்றது..!
அதே சமயம் நகரப்புற மாணவர்களோ, அல்லது மத்திய பாடத்திட்டமான சி பி எஸ்ஸியில் படித்தவர்களோ கூட லட்சங்களில் ஃபீஸ் கட்டி தனியார் இன்ஸ்டிடியூட்டில் படிக்காமல் அந்த நீட் தேர்வில் வெல்லவோ.... அதிக மதிப்பெண்கள் பெறவோ முடியவில்லை என்பது தான் இன்றைய யதார்த்தம்..!
ஆகையால் இங்கே கவனிக்கப்பட வேண்டியது கிராமப்புற மாணவர்கள் அல்லது நகரப்புர மற்றும் சிபிஎஸ்ஸி மாணவர்கள் என்பதல்ல...
நீட்டில் தேர்ச்சி பெற அந்த மாணவன் பணக்காரனாக இருக்க வேண்டுமா? அல்லது ஏழையாக இருந்தாலும் போதுமா?! என்ற வாதத்தைத் தான்..!
ஆகவே பழைய திராவிட சிஸ்டத்தின் படி, ஏழை / பணக்காரன், கிராமத்தான் / நகரத்தான், சி பி எஸ்சி / தமிழக பாடத்திட்டம்... இந்த எந்த கந்தாயமுமே... மருத்துவக் கல்லூரியில் இடம்பிடிக்க தமிழக மாணவர்களுக்கு தடையாக இல்லை..!
நீட் மூலமாக அந்த தடை ஏற்பட்ட காரணத்தினால் மட்டுமே அனித்தாக்கள் உயிர் விடவும்.... இன்னும் பல அனித்தாக்கள் தாங்கள் விரும்பிய மருத்துவப் படிப்பு அதிக மதிப்பெண் எடுத்தும் கிடைக்காமல் போன காரணத்தினால் நடைப் பிணமாகவும் ஆக வேண்டியதாயிற்று..!
நீட் தேர்வு போராட்டத்தின் போது இதே சங்கிகள் இன்னுமொரு முக்கிய வாதத்தினை வைத்தார்கள். தமிழக பாடத்திட்டத்தில் படித்துவிட்டு மட்டுமே வந்தால் தரமான மருத்துவர்களை உருவாக்க முடியாது.... ஆகவே தான் அவர்களை மதிப்புக் கூட்டி தரம் உயர்ந்த மருத்துவர்களை உருவாக்க இடைநிலையில் இந்த நீட் தேர்வு அவசியமாகிறது என்பது தான் அந்த அடிமுட்டாள்களின் வாதம்..!
ஆனால் மோடிக்கு கருப்புக் கொடி காட்டி வெளியேறச் சொன்னது போல, இந்த வாதம் வைத்த சங்கிகளின் முகத்தில் கரியைப் பூசும் வண்ணமாகத்தான்...
இன்றைக்கு தமிழக பாடத்திட்டத்தில் பயின்று.... மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்து 6 ஆண்டுகளில் தங்களை பல்வேறு வகைகளில் மேம்படுத்திக் கொண்டு.... இன்றைக்கு மருத்துவ மேல் படிப்புக்கான நீட் தேர்வில் இந்திய அளவில் மிக அதிகமாக நம் திராவிடத்தால் வாழ்ந்த தமிழ் மாணவர்கள் வெற்றிக்கொடி நாட்டியுள்ளார்கள்..!
ஆகவே தமிழக பாடத்திட்டமே போதுமானது.... நீட் என்ற இடைச்செறுகல் தேவையே இல்லாத ஆணி என்பது தான் இன்றைய நீட் தேர்வின் முதுகலை படிப்புக்கான முடிவுகள் உணர்த்துகின்ற படிப்பினை..!!
ஆகவே... ஆல் சங்கீஸ்.... நீங்க ஓரமா போய் உட்கார்ந்து ஒப்பாரி வையுங்கள்..! நீட் எங்களுக்கு டோண்ட் நீட் என்று நாங்கள் ஆட வேண்டிய காலம் இது..!