Wednesday, April 3, 2019

தேர்தலுக்கு முன்பாகவே திமுக பெற்ற வெற்றி...!


ஆம்... இன்னும் தேர்தல் நடக்கவில்லை, வாக்குகள் எண்ணப்படவில்லை ஆனாலும் தெள்ளத்தெளிவாக திமுக வென்றுள்ளது..!

புரியவில்லையா..?

அதற்கு திமுகவின் வரலாறு தெரிந்திருக்க வேண்டும். திமுக என்ற இயக்கம் ஏன் துவங்கப்பட்டது என்ற காரணம் தெரிந்திருக்க வேண்டும்.
திமுகழகம் துவங்குவதற்கு காரணமான சமூகநீதி, சமத்துவம் உள்ளிட்ட மிக மிக முக்கியமான முதல் ஐந்து காரணங்களில் ஒன்று தான் மாநில சுயாட்சி..!
திமுக துவங்கிய காலத்தில் மாநில சுயாட்சி என்ற கொள்கையோ அதற்கான கோரிக்கையோ வைக்கப்படவில்லை. காரணம், இந்த சந்து பொந்து சமரசங்கள் எல்லாம் வேண்டாம், எங்களை தனியா அத்து விட்டுடு என்று சொல்லி தனி திராவிட நாடு கோரிக்கையோடு தான் களம் இறங்கியது.
வடக்கு வாழ்கிறது... தெற்கு தேய்கிறது என்ற மாபெரும் முழக்கத்துடன் தான் பேரறிஞர் அண்ணா தன் தம்பிமார்களுடன் களம் கண்டார்.
காலம் இவ்வளவு மாறிய பின்பும் கூட, ரயில்வே துறையில் உருவாகிய 2000 தமிழக பணியிடங்களுக்கு வடநாட்டு இளைஞர்கள் பணி அமர்த்தப் படுகின்ற நிலை தான் உள்ளது என்றால், 60 ஆண்டுகளுக்கு முன்பான நிலையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்..!
தென்னகம் ஒருவித அடிமைத்தனத்துடன் வடவர்களின் ஆளுமையில், அவர்களுக்கு அடிமைச் சேவகம் செய்யவும், நமது வளங்கள் அங்கே சுரண்டிச் செல்லப்பட்டுக் கொண்டிருந்த நிலையும் தான் இருந்து வந்தது.
இதைத்தான் பேரறிஞர் அண்ணா எதிர்த்தார், எங்களை தனியாக பிரித்து விட்டுவிடுங்கள், நாங்கள் எங்களை சுயமாக பார்த்துக் கொள்கின்றோம் என்றார்...!
அதற்காகத் தான் தனி திராவிட நாடு என்ற கோரிக்கையை முன் வைத்து போராட்டத்தை முன்னெடுத்தார்.
ஆனாலும் ஐநூற்று சொச்சம் சிறு குறு சமஸ்தானங்களை, குறுநில மன்னர்களை அதட்டி உருட்டி அடிபணிய வைத்து, ஒற்றை இந்தியாவாக கட்டமைத்த சர்தார் வல்லபபாய் பட்டேலின் அந்த டீம் இதற்கு ஒத்துக்கொள்ளுமா?!
இப்பத்தான் கஷ்டப்பட்டு ஒன்றாக சேர்த்திருக்கின்றோம்..., இப்போ போய் தனிக்குடித்தனம் போவேன் என்கிறாயே..? இதை எப்படி ஏற்றுக்கொள்ள இயலும் என்றது அந்த டீம்.
அதற்கு அண்ணாவின் பதில்....
தனிக்குடித்தனம் போவது எங்களுக்கும் முக்கிய பிரச்சினை இல்லை. ஆனால் எங்கள் உரிமைகள் பறிக்கப்படும் பொழுது, எங்கள் பண்பாடு, கலாச்சாரம் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகி அவை நீத்துப் போக வைக்கப்பட்டு ஒரு புது வாழ்க்கை முறை திணிக்கப்படும் பொழுது, எங்கள் மொழிகள் எழுத்து, பேச்சு வழக்கில் இருந்து ஒழித்துக்கட்டப்பட்டு புதிய ஒரு மொழி திணிக்கப்படும் பொழுது, எங்கள் வளங்கள் சுரண்டி எடுத்துக்கொள்ளப்பட்டு, அதிலிருந்து ஒரு சிறு பகுதி எங்களுக்காக பிச்சை போல் இடப்படும் பொழுது, நாங்களும் படித்து முன்னேறக் கூடாது என்று சொல்கின்ற பொழுது, விளையாட்டு, இசை, கலைகள் உள்ளிட்ட எங்கள் திறமைகள் எதுவுமே இந்திய அளவில் நிராகரிக்கப்படுகின்ற பொழுது....
இப்படி அனைத்திலும் நாங்கள் அடிமைகளாக பயன்படுத்தப்படும் நோக்கோடு.... குறிப்பாகச் சொன்னால் வடவர்களை தூக்கிச் சுமக்கும் கழுதைகளாக தென்னவர்கள்... அதாவது திராவிடர்கள் பயன்படுத்தப்படுகின்ற பொழுது...
அதை ஏற்றுக்கொள்ள எங்களால் இயலவில்லை... எல்லோரும் இந்தியராக சம உரிமையோடு... அவரவர் சுயமரியாதையோடு வாழ்வோம் என்று கூறினோம், நீங்கள் கேட்கவில்லை அதனால் தான் நாங்கள் தனிக்குடித்தனம் செல்கின்றோம் என்றார் அண்ணா..!
ஏற்றுக்கொள்வார்களா வடநாட்டு சங்கிகள்?!
போராட்டம் இரும்புக்கரம் கொண்டு நசுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட திமுகழக இளைஞர்களில் சில ஆயிரம் பேர் காணாமல் போனார்கள்.
அரசு இயந்திரம்... அதைக் கொண்டு நடத்தப்படும் அல்லது நசுக்கப்படும் அரச பயங்கரவாதத்தின் கோர முகம் எப்படி இருக்கும் என பேரறிஞர் அண்ணா கண்டு கொண்டார்...
உரிமைக்காகத் தான் போராடுகிறோம்... அதற்கு முதலில் உயிரோடு இருக்க வேண்டும். உயிரே போன பின்பு உரிமை கிடைத்து என்ன பயன்?
ஆகவே உரிமைக்காக போராடுவோம்... ஆனால் சட்டம் அனுமதிக்கின்ற வகையில்... அதிலும் அரசியல் ரீதியிலாக... என்ற முடிவினை எடுக்கின்றார்.
உடனடியாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்காத அந்த தனி திராவிடநாடு கோரிக்கையை கை விடுவதாக அறிவிக்கின்றார்.... ஆனால் கோரிக்கை தான் கை விடப்படுகிறதே தவிர, அந்த கோரிக்கைக்கான... போராட்டத்திற்கான காரணங்கள் இன்னமும் அப்படியே இருக்கின்றன.
அந்த கோரிக்கைகளை... அதாவது எங்கள் உரிமைகளை சட்டத்திற்கு உட்பட்டு அரசியல் ரீதியாக நாங்கள் வென்றெடுப்போம் என்ற உறுதியோடு கைவிடுகின்றார்..!
அதன் பிறகு தனி திராவிடநாடு கோரிக்கைக்கு மாற்றாக...
திமுக முன்னெடுத்த விஷயம் தான் அதன் கொள்கை முழக்கங்களில் முக்கியமான ஒன்றாக மாறிப்போனது. அது தான்...

மாநில சுயாட்சி..!

பேரறிஞர் அண்ணாவுக்குப் பிறகு திமுகழக தலைவராக பொறுப்பேற்ற தலைவர் கலைஞர்...
தன்னுடைய ஐம்பெரும் முழக்கங்களில் ஒன்றாக... திமுகழகத்தின் மிக முக்கிய, முதன்மையான ஐந்து கொள்கை முழக்கங்களில் ஒன்றாக...
மத்தியிலே கூட்டாட்சி... மாநிலத்தில் சுயாட்சி என்ற முழக்கத்தை முன்னெடுத்து, அதற்காகவே தெள்ளத்தெளிவாக காய்களை நகர்த்த ஆரம்பித்தார்.
இதை உடனடியாக அமலுக்கு கொண்டு வந்துவிட முடியாது, அதனால் நீண்ட கால இலக்குடன், படிப்படியாக... அதிகார மையத்தின் ஒவ்வொரு செங்கல்லாக உறுவி... இதன் தேவையை அனைத்து மாநிலங்களும் உணர வைத்து... இது ஏதோ தமிழக மக்களுக்கான தனிப்பட்ட கோரிக்கை மட்டுமல்ல... மாறாக ஒட்டுமொத்த இந்தியாவின் அனைத்து பிராந்திய மக்களுக்குமான அத்தியாவசிய கோரிக்கை என்பதையும்...
படிப்படியாக இந்திய அளவில் உணர வைத்து, தேசியக் கட்சிகளையும் இந்த புள்ளியை நோக்கி நகர வைத்து... மாநில சுயாட்சியை சாத்தியப்படுத்தும் பணிக்கான திட்டங்களை வகுக்க ஆரம்பித்தார்.
இந்தப் பணியில் மறைந்த முன்னால் மத்திய அமைச்சர் ஐயா முரசொலி மாறன் அவர்களின் பங்கு அளப்பறியது.

அந்த திட்டத்தின் அடிப்படையில்...

திராவிட முன்னேற்ற கழகம் ஒரு பிராந்திய... அதாவது மாநில கட்சியாகவே செயல்பட்டுக் கொண்டு, இந்தியா முழுவதும் ஒவ்வொரு பகுதியிலும் பல்வேறு பிராந்தியக் கட்சிகள் தோன்றுவதையும் அவைகள் ஆட்சியை பிடிப்பதற்குமான அனைத்து வகையான உதவிக் கரங்களையும் நீட்டுவது. அவர்களுடன் நட்புறவாக செயல்படுவது...  இது முதல் நிலை..!
அடுத்ததாக, அந்த மாநில கட்சிகள் நாடாளுமன்ற தேர்தல்களிலும் தீவிரமாக போட்டியிட்டு அதிக இடங்களைக் கைப்பற்றி, மத்தியில் ஒரு தனி தேசியக் கட்சியின் ஆட்சி என்ற நிலையினை மாற்றி அமைப்பது... இது இரண்டாம் நிலை..!
தொடர்ந்து மத்தியில் ஒரு தேசிய கட்சியின் தலைமையில் பல்வேறு மாநில கட்சிகளின் ஆதரவுடனான கூட்டணி அரசை அமைப்பது. அந்த கூட்டணி ஆட்சியினை ஐந்து ஆண்டுகளுக்கு தொடர்ந்து எந்த சிக்கலும் இன்றி நடத்திக் காட்டுவது. அதேப் போன்று தொடர்ந்து கூட்டணி ஆட்சியையே அடுத்தடுத்து மத்திய அரசில் ஏற்படுத்துவது....  இது மூன்றாம் நிலை..!
இப்படியான நிலை தொடரும் பொழுது, இந்தியாவின் அனைத்து பிராந்தியங்களும் அவரவர்க்கு உரிய உரிமைகளையும், கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், மொழியையும்... எந்த சேதாரமும் இல்லாமல் பேணிப் பாதுகாத்து... தனித்தன்மையுடனும் அதே சமயம் இந்தியர் என்று நல் உணர்வுடனும் இருப்பதை உணர வைப்பது....  இது நான்காம் நிலை..!
இப்படியாக தொடரும் பட்சத்தில் தேசிய கட்சிகளே மாநில கட்சிகளின் சிந்தனைகளோடு.... அந்த சித்தாந்தத்திற்குள் தங்களை உட்படுத்திக் கொள்வார்கள் என்று நம்பினார் கலைஞர்...  இதுவே இறுதி நிலை..!

இந்த தெளிவான திட்டமிடலின் பொருட்டே....
தலைவர் கலைஞர் அவர்கள் பிராந்திய கட்சிகளான என் டி ஆரின் தெலுங்கு தேசம், அஸாம் கன பரிஷத், ராஷ்டிரிய ஜனதா தள், சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, தேசிய மாநாட்டுக் கட்சி, தேசியவாத காங்கிரஸ், ஜனதா தளம், அகாலி தளம், ஐக்கிய ஜனதா தளம், பிஜு பட்னாயக், மம்தா பேர்னர்ஜி, கம்யூனிஸ்ட்டுகள், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம்....
இப்படியாக பல்வேறு பிராந்திய கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகளாக அறியப்பட்டாலும் குறிப்பிட்ட பகுதி மக்களுக்காக போராடுகின்ற கட்சிகள் என்று அன்றைய தேதியில் அசைக்க முடியாத தேசிய கட்சியாக விளங்கிய..., மற்றும் காங்கிரஸுக்கு மாற்றானவர்களை தொடர்ந்து ஒன்று கூட்டி, ஒருங்கிணைத்து... பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள், ஒருங்கிணைந்த போராட்டங்கள் என்று முன்னெடுத்து....
ஒரு கட்டத்தில் காங்கிரஸில் இருந்து பிரிந்து வந்த வி.பி. சிங் என்ற தேசிய அடையாளத்துடன் இவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து தேசிய முன்னணி என்ற அகில இந்திய அமைப்பை உருவாக்கி.... அந்த அமைப்பின் மூலம் அவரவர் அவரவருக்கு பலமுள்ள பகுதிகளில் போட்டியிட்டு அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்று....
முதன் முறையாக பல்வேறு பிராந்திய கட்சிகளின் கூட்டமைப்பாக வி.பி. சிங் தலைமையில் ஒரு கூட்டணி அரசை மத்தியில் அமைக்க மிக முக்கிய காரணியாக அமைந்தார் தலைவர் கலைஞர்.
முதல் முறையாக ஒரு கூட்டணி ஆட்சி, அதுவும் பல்வேறு பிராந்தியக் கட்சிகள் கொண்டு.... விட்டுவிடுமா காங்கிரஸ்..?!
அது தொடர்ந்து அதிகாரத்தில் இருந்த கட்சி... இவர்களுக்கோ மத்திய ஆட்சி என்பது புது அனுபவம்... தேசிய முன்னணியின் உள்ளேயே இருந்த சந்திரசேகரைப் பிடித்து அவருக்கு பிரதமர் ஆசையை காட்டி, தங்கள் கட்சியின் ஆதரவைக் கொடுத்து அவரை பிரித்து... அவரைக் கொண்டே தமிழகத்தில் சிறப்பாக ஆண்டு கொண்டிருந்த திமுக ஆட்சியையும் விடுதலைப் புலிகள் ஆதரவு என்ற காரணம் காட்டி கலைத்து விட்டு... சிறிது காலத்திற்குப் பிறகு அவர் ஆட்சியையும் கவிழ்த்து காங்கிரஸ்..!
கலைஞரின் முதல் முயற்சியில் உருவான மத்திய கூட்டணி ஆட்சி இரண்டரை ஆண்டு கால ஆயுளோடு முடிவுக்கு வந்தது. அது தான் வீழ்ந்தாலும் கூட பரவாயில்லை.... அத்தோடு சேர்த்து தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடித்த திமுகவின் ஆட்சியையும் இரண்டே ஆண்டுகளில் பலி கொண்டது தான் மிச்சம்..!
ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பிறகு வந்த தேர்தலில்... அந்த பிரச்சாரத்தில் ராஜீவ் காந்தி அவர்கள் விடுதலைப் புலிகளால் தமிழகத்தில் வைத்து கொல்லப்பட, அந்த அனுதாப அலையில் இந்தியா முழுவதும் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. அதன் காரணமாகவே முதன் முறையாக தமிழகத்தில் ஜெயலலிதாவும், மத்தியில் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியும் அமைந்தது..!
ஆனாலும் சற்றும் மனம் தளராத தலைவர் கலைஞர், அந்த ஐந்து ஆண்டுகளும் (1991 - 96) தொடர்ந்து தேசிய முன்னணியை தக்க வைத்துக் கொண்டு, 96இல் அடுத்த தேர்தலை அதே கூட்டணியோடு சந்திக்க ஏற்பாடு செய்தார். அவர் செய்தார் என்றால், முக்கிய ஒருங்கிணைப்பாளராக இருந்து அனைவரையும் தொடர்ந்து ஒரு குடையின் கீழ் நிற்க வைத்த பெருமை கலைஞரைச் சாரும் என்பதாகும்..!
இந்த நேரத்தில் நரசிம்மராவின் காங்கிரஸ் ஆட்சியும் ஒரு ஸ்திர தலைமை இல்லாத காங்கிரஸ் கட்சியும் செய்த பல்வேறு குளறுபடிகளால்... கடந்த தேர்தலில் 2 எம்பிக்களை மட்டுமே கொண்டிருந்த பாஜக என்ற கட்சி கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பித்தது..!
அடுத்து வந்த 96 தேர்தலில் தேசிய முன்னணி தலைமையில் மீண்டும் கூட்டணி ஆட்சி அமைந்தாலும், இரண்டு மூன்று பிரதமர்கள் என்று மாறி... கடைசியில் பாஜகவின் 52 எம்பிக்கள் சதியால் அந்த ஆட்சியும் இரண்டே ஆண்டுகளில் வீழ்ந்தது.
மீண்டும் 98இல் தேர்தல் வரவே... இதில் பாஜக கூடுதல் இடங்களைப் பிடித்து, மற்ற பிராந்திய கட்சிகளின் துணையோடு கூட்டணி ஆட்சியை அமைத்தது. அப்பொழுது திமுகவுக்கு தேவையான எம்பிக்கள் கிடைக்காததால், ஜெயலலிதா ஆதரவோடு அமைந்த அந்த ஆட்சியும் பதின்மூன்றே மாதத்தில் ஜெயலலிதா புன்னியத்தால் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் கவிழ்க்கப்பட்டது.
மீண்டும் 99இல் தேர்தல்... இதில் பாஜக கூடுதல் இடங்களைக் கைப்பற்றவே... திமுக தனது மாநில சுயாட்சி கொள்கையை நிலைநாட்ட வகுத்துக் கொண்ட தொலைநோக்குத் திட்டத்தின் அடிப்படையில்....
அதன் மூன்றாம் படி நிலையான... மத்தியில் ஒரு தேசியக் கட்சியின் தலைமையில் பல்வேறு பிராந்தியக் கட்சியின் ஆதரவோடு கூட்டணி ஆட்சி அமைப்பது என்ற திட்டத்தின் படி...
99இல் வாஜ்பாய் தலைமையிலான மத்திய ஆட்சிக்கு தங்களோடு ஏற்கனவே இணைந்திருந்த பல்வேறு மாநிலக் கட்சிகளையும் ஆதரவு தரவைத்து, ஒரு கூட்டணி ஆட்சியை அமைக்க அடித்தளம் போட்டார்.
ஆனால் பாஜகவின் கொள்கைகள் மீது இன்றளவிலும் இருக்கின்ற அந்த ஒவ்வாமைக்கு மாற்று மருந்தாக... குறைந்தபட்ச செயல் திட்டம் என்ற ஒன்றை உருவாக்கி, அதில் பாஜகவின் அடிப்படைக் கொள்கைகள் எதுவும் செயல்படுத்தக் கூடாது என்ற விதியோடு, அந்தந்த மாநிலக் கட்சிகளுக்கான அந்தந்த மாநில மக்களுக்கான அடிப்படை கோரிக்கைகளையும் இணைத்து... இந்த அடிப்படையில் தான் இந்த ஆட்சி செயல்படும் என்ற உறுதிமொழியோடு தான் அந்த ஆட்சி அமைக்கப்பட்டது..!
அதில் சற்றும் பிறழாமல் வாஜ்பாய் ஆட்சி செய்யவே, இந்திய வரலாற்றில் முதல் முறையாக பல்வேறு பிராந்தியக் கட்சிகளின் ஆதரவுடன் ஒரு தேசிய கட்சியின் தலைமையிலான கூட்டணி ஆட்சி எந்த விதமான சிறு சலசலப்பும் இல்லாமல் அமைதியுடனும் வெற்றிகரமாகவும் முழு ஐந்து ஆண்டுகளை பூர்த்தி செய்தது..!
அதாவது திமுக தனது மாநில சுயாட்சி கொள்கையை அடைதலின் மூன்றாம் படியில் வெற்றிகரமாக தடம் பதித்து விட்டது..!
ஆனால் முதல் முறை ஆட்சியை ருசித்த பாஜகவின் மூளையான ஆர் எஸ் எஸ், வாஜ்பாய்க்கு பதிலாக அந்தக்கால மோடியான அத்வானியை முன்னிலைப்படுத்தி, அடுத்து வரும் தேர்தலில் இந்துத்துவாவுக்கு நேர் எதிர் சிந்தனை கொண்ட திமுகவை தவிர்த்து விட்டு அடுத்த கூட்டணி ஆட்சியை அமைத்து தனது இந்துத்துவா அஜெண்டாவை நிறுவ வெளிப்படையாகவே செயலாற்ற...
இதைப் புரிந்து கொண்ட கலைஞர், காங்கிரஸின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட சோனியா காந்தியுடன் பேசி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியை உருவாக்கி, அதில் தன் ரெகுலர் பிராந்திய கட்சி சகாக்களையும் இணைத்து....
2004 தேர்தலை எதிர்கொண்டு, அமோக வெற்றி பெற, மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மீண்டும் திமுக பங்கேற்றது. அடுத்து வந்த 2009 தேர்தலிலும் அதே கூட்டணியே வென்று ஆட்சியைப் பிடித்தது..!
ஆக, மொத்தம் பதினைந்து ஆண்டுகள் தொடர்ந்து பாஜக மற்றும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய கூட்டணி ஆட்சியில் திமுக அங்கம் வகித்தது.
ஆனால் முதல் முறையே பாஜக செய்த அந்த தவறை, இரண்டாவது ஆட்சிக்காலத்தில் காங்கிரஸ் செய்ய, காத்திருந்த பாஜக சைக்கிள் கேப்பில் தனித்தே 2014இல் ஆட்சியைப் பிடித்து.... இப்பொழுது நமக்கு பெரும் தலைவலியாக வந்து நிற்கின்றது.
இப்பொழுது இந்திய மக்களே கூட ஒரு விஷயத்தை புரிந்து கொண்டு விட்டனர். ஒரு தனிக்கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தை கொடுத்தால்... அவர்கள் கேள்வி கேட்க ஆள் இல்லாததால் ஆடித் தீர்ப்பார்கள். மக்கள் நலனை பேண மாட்டார்கள் என்பதை..!
ஆகவே தேசியக் கட்சி ஆட்சியாளருக்கு ஒரு கடிவாளமாக சில நல்ல பிராந்தியக் கட்சிகளின் ஆதரவோடு கூடிய கூட்டணி ஆட்சியே இந்திய ஒன்றியத்துக்கு உகந்தது என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டு விட்டனர்.
அதெல்லாம் போகட்டும் சார்... இந்த கட்டுரையின் தலைப்பாகவே திமுக வென்று விட்டதாக கூறினீர்களே.... அந்த வெற்றி எங்கே சார்?! மாநில சுயாட்சி கிடைத்து விட்டதா என்ன? என்று கேட்பீர்களேயானால் உங்களுக்கான விடை தான் கீழே...
திமுக தனது மாநில சுயாட்சி கொள்கையினை ஈன்றெடுக்க, ஈடுபடும் முயற்சிகளில் கடைசி படிநிலையாக வைத்திருந்தது....
ஒரு தேசிய கட்சியின் தலைமையிலான பிராந்திய கட்சிகளின் ஆதரவோடு கூடிய கூட்டணி ஆட்சி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில்...
ஏதேனும் ஒரு தேசியக் கட்சியே மாநில சுயாட்சி கொள்கைகளை நோக்கி மெல்ல அடி எடுத்து வைக்கும். அதில் உள்ள நியாயங்களைப் புரிந்து கொள்ளும்... இந்தியா என்பது நாடு என்பதைக் கடந்து ஒன்றியம் என்ற நிலையினை உணரும்...
அப்படியொரு நிலை உருவாகும் பொழுது வெகு விரைவில் மாநில சுயாட்சியும், மத்தியில் கூட்டாட்சியும் (கூட்டணி ஆட்சி அல்ல) சாத்தியமாகும் என்ற திட்டத்தை தலைவர் கலைஞர் வகுத்திருந்தாரே....
அதை இன்றைக்கு சாத்தியமாகியிருக்கின்றது, நேற்று காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கை...
அதிகாரப் பகிர்வு... அதாவது மாநில சுயாட்சியை அக்கட்சி ஏற்றுக் கொண்டிருப்பதையே அந்த தேர்தல் அறிக்கை காட்டுகின்றது..!
ஒரே ஒரு உதாரணம்... கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு முன்பு மத்திய பட்டியலுக்கு கொண்டு செல்லப்பட்ட பள்ளிக் கல்வியை.... மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்றுவோம் என்று நேற்றைய காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது..!
இந்த ஒரு அறிவிப்பு போதும்.... மாநில சுயாட்சி விரைவில் சாத்தியமாகிவிடும் என்பதற்கு..!
இதுவே திமுகவுக்கு கிடைத்த வெற்றி. ஒரு இயக்கத்தின் மூன்றாம் தலைமுறை தலைவர்... அதாவது பேரறிஞர் அண்ணா... அடுத்ததாக தலைவர் கலைஞர்.... அவருக்குப் பிறகு தலைவராக பொறுப்பேற்றிருக்கும் தலைவர் தளபதியார்....
தன்னுடைய இயக்கம் உருவாக்கிக் கொடுத்த கொள்கையில் இருந்து சற்றும் வழுவாமல், உறுதியாக நின்று அதைத் தொடர்ந்து முன்னெடுத்த காரணத்தினால் தான்... மீண்டும் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியை முன் மொழிந்து... முன் மொழிந்ததோடு நில்லாமல் அதற்கான அத்தனை அடித்தளங்களையும் அமைத்துக் கொண்டிருப்பதால் தான்...
(கடந்த ஓராண்டில் மட்டும், மூன்று முறை சிதறிக் கிடந்த இந்திய அளவிலான எதிர்க்கட்சித் தலைவர்களை ஒன்று கூட்டி, சென்னையில் மாநாடு நடத்தியிருக்கின்றார்..!)
திரு. ராகுல் காந்தி அவர்கள் அதிகாரப் பரவலை தங்கள் தேர்தல் அறிக்கையில் தெளிவுபடுத்தியிருக்கின்றார். அடுத்து அமையவிருக்கும் கூட்டணி ஆட்சிகளில் மாநில சுயாட்சியை திமுக நிலை நாட்டியே தீரும்..!

வாழ்த்துக்கள் தலைவரே...! நீங்கள் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு தாங்கள் அடைந்திருக்கும் முதல் வெற்றி இது. இயக்க அரசியலில் முதல் வெற்றியினை ஈட்டியிருக்கும் தாங்கள் அடுத்ததாக தேர்தல் அரசியலிலும் அமோக வெற்றியை ஈட்டிட வாழ்த்துக்கள்..!