Monday, August 26, 2019

பொருளாதார மந்தநிலை 2019 - ஒரு சாமான்யன் பார்வையில்..!


இந்தியாவின் பொருளாதார மந்தநிலை பற்றி இரண்டு வாரங்களாக பல்வேறு விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீத்தாராமனும் செய்தியாளர்களைச் சந்தித்து சில சீர்திருத்த அறிவிப்புக்களையும் வெளியிட்டுள்ளார்... இன்னும் அடுத்தடுத்த வாரங்களில் மேலும் சில அறிவிப்புகள் வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.

ஆனால் இது ஏதோ திடீரென்று வந்த பிரச்சினை போலவும், பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சில வரிச்சலுகைகளையும், ஜி எஸ் டி குளறுபடிகளில் ஒன்றிரண்டை சரி செய்வதாக அளித்த வாக்குறுதிகளும் இப்பிரச்சினைக்கான தீர்வு இல்லை என்று, பொருளாதார வல்லுநர்கள் பலர் கூறுவது ஊடகங்களால் தற்செயலாக மறைக்கப்படுகின்றனவா? அல்லது திட்டமிட்டே மறைக்கப்படுகின்றனவா என்றே புரியவில்லை..!

உடல் உபாதைக்காக மருத்தவரிடம் செல்லும் பொழுது அப்பொழுதையை வலியை நீங்கள் உணராமல் இருக்க தற்காலிக மரப்பு மருதைக் கொடுப்பார். ஆனால் அது நிரந்தர தீர்வு அல்ல... அடுத்த மூன்று மணி நேரத்தில் மீண்டும் அந்த வலி வந்து விடும். திரும்பத் திரும்ப அதே மரப்பு மருந்தைக் கொடுத்தால் கொஞ்சம் கொஞ்சமாக நோய் முற்றி உயிரிழக்க நேரிடும்.

ஆனால் அந்த உடல் உபாதை அல்லது வலி எதனால் ஏற்பட்டது என்பதைக் கண்டறிய வேண்டும். அதற்கு தான் எக்ஸ் ரே, ஸ்கேன் போன்றவை எடுக்கப்பட்டு, நோயை கண்டுபிடித்து அதற்கு தேவையான மருந்துகளையோ, அறுவை சிகிச்சையையோ மேற்கொண்டால், அந்த நோயிலிருந்தும் உடல் உபாதையிலிருந்தும் நிரந்தரமாக மீண்டு வரலாம்.

அதேப் போன்ற தற்காலிக மரப்பு மருந்து தான் நம் நிதி அமைச்சர் அறிவித்திருக்கும் சில சலுகைகள் அறிவிப்பும். அவருக்கே அது நிரந்தர தீர்வல்ல என்று தெரிவதனால் தான் அடுத்தடுத்து அறிவிப்புகள் வரும் என்று கூறியிருக்கின்றார்.
வெறும் அறிவிப்புகள் மட்டும் அடுத்தடுத்து கொடுப்பதற்கு முன்பாக பக்காவாக ஸ்கேன், எக்ஸ் ரே எடுப்பது தான் புத்திசாலித்தனம்.

இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பாக அறிவிக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையும், அதனைத் தொடர்ந்தான பெரும் குழப்படியான ஜி எஸ் டியும் தான் இந்த பிரச்சினைக்கு காரணம் என்பது ஸ்கேன் பண்ணினால் தான் புரியும்.

மோடியோ, நிர்மலா சீத்தாராமனோ உண்மையாகவே அவர்கள் கூறிக்கொள்வது போல உண்மையான நாட்டுப் பற்றாளர்கள் என்றால் எந்த ஈகோவும் இல்லாமல் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும். எதோ ஒரு ஆர்வத்தில் கூட அவசரகோலத்தில் அந்த இரண்டு நடவடிக்கைகளையும் மோடி எடுத்திருக்கலாம். அது பலன் தராமல் போய் விட்டது. ஆனாலும் மீண்டும் உங்கள் மீது நம்பிக்கை வைத்து மக்கள் முழு பலத்தோடு உங்களை ஆட்சியில் அமர்த்தியுள்ளனர். அந்த மக்களை உங்கள் ஈகோ காவு வாங்கிவிடக் கூடாது..!

நல்லதை நினைத்து அதைச் செய்தோம் ஆனால் அது பலன் தரவில்லை. ஆகவே மாற்று ஏற்பாட்டினை இன்னும் வேகமாகச் செய்கின்றோம் என்று மக்களிடம் வெளிப்படையாகச் சொன்னால், அதை மக்கள் புரிந்துகொள்வார்கள்... ஏற்றுக்கொள்வார்கள்... முன்னை விட இன்னும் கூடுதலாக உங்களை நம்புவார்கள்..!

  • இந்தப் பிரச்சினையின் அடிநாதமே, மக்களின் வாங்கும் சக்தி குறைந்தது தான்...
  • அதற்கு காரணம் விவசாயம் மற்றும் சிறு குறு மற்றும் மத்தியதர தொழில்கள் பாதிக்கப்பட்டது தான்...
  • அதற்கு காரணம் பண மதிப்பிழப்பும், தவறான ஜி எஸ் டி நடைமுறையும் தான்..!


இன்னும் ஒரு படி மேலே சென்று, இந்த இரண்டு பிரச்சினைகளில் இருந்தும் (GST & Demonitisation) அவர்கள் தட்டுத் தடுமாறி அதை இதை பிடித்து எழுந்து வரும் நிலையில்....

ஃபைனான்ஷியல் டிஸிப்ளின் என்ற கோஷத்தோடு வங்கித் துறையினர் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும் அதை அவர்கள் இந்த சிறு, குறு மற்றும் மத்திய தர தொழில் நிறுவனங்கள் மீது பாய்ச்சியதும் தான், இன்றைக்கு பல லட்சம் MSME தொழில் நிறுவனங்கள் இழுத்து மூடப்பட காரணமாக அமைந்து விட்டது.

கடந்த இரண்டரை ஆண்டுகளாக உயிரைப் பிடித்து போராடி வந்த அந்த நிறுவனங்கள், இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக உயிர்விட ஆரம்பித்து விட்டன... அதாவது இழுத்து மூடப்பட்டு வருகின்றன..!

இப்படி மூடப்பட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நிறுவனமும் குறைந்தபட்சமாக பத்து முதல் அதிக பட்சமாக 200 பேருக்கு நிரந்தரமான வேலை வாய்ப்பினை நேரடியாக வழங்கிக் கொண்டிருந்தவை தான்..! விவசாயத்தை விட மிக அதிகமான வேலை வாய்ப்பினை இந்த MSME நிறுவனங்களே மக்களுக்கு வாரி வழங்கி வந்திருக்கின்றன.

உதாரணத்திற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் இங்கே வரும் ஒரு கார்ப்பரேட் நிறுவனம் மிக அதிக பட்சமாக 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பினை அளித்தாலே பெரிய விஷயம். ஆனால் அவர்களுக்கு நம் அரசுகள் செய்து கொடுக்கும் நன்மைகளோ ஏராளம்.

ஆனால் ஏதோ ஒரு வகையில் இப்பொழுது ஏற்பட்டிருப்பது போல... லாபக்குறைவு ஏற்பட்டால்... நன்றாக புரிந்து கொள்ளுங்கள் இப்பொழுது ஆட்குறைப்புச் செய்வதாகச் சொல்லும் நிறுவனங்கள் இன்னும் நட்டமடையவில்லை. மாறாக லாபம் குறைந்துள்ளது, அதை ஈடு கட்ட உற்பத்தியைக் குறைத்து பணியாளர்களை வீட்டுக்கு அனுப்புவேன் என்றும் விடுமுறை அளித்து பெஞ்சில் வைப்பேன் என்றும் கூறுகின்றன..!

உடனடியாக அரசும் பணிந்து போய் அவர்களுக்கு பல வரிச்சகலுகைகளையும் தொழில் ரீதியான சில கால அவகாச சலுகைகளையும் (உதாரணத்திற்கு BS 6 வாகனங்கள் விற்பனைக்கான கால அளவை நீட்டித்து உதவுவது) வழங்குகிறது.
உடனே அந்த நிறுவனங்கள் எங்களை மேம்படுத்து ஒரு லட்சம் கோடி ஃபண்ட் ஒதுக்குங்க என்று கேட்கிறார்கள்.

ஆனால் இன்னொரு பக்கம், ரூபாய் 1 கோடியிலிருந்து 50 கோடி ரூபாய் முதலீட்டில் செயல்படும் MSME நிறுவனங்கள் 10 ஆயிரம் கோடி முதலீட்டில்.... கிட்டத்தட்ட 1000 நிறுவனங்களுக்கு மேல் உருவாகும்.

அவற்றின் மூலம் கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் பேருக்கு மேல் வேலை வாய்ப்பினை அளிக்கின்றன. இதில் இருக்கின்ற பல்வேறு முக்கிய நல்ல பலன்கள் என்னவென்றால்...

  1. இவை அனைத்துமே இந்தியர்களின் நிறுவனங்கள். ஆகவே இதன் மூலம் கிடைக்கின்ற லாபம் முழுவதும் இந்தியாவிலேயே இருப்பதால் இந்திய பண மதிப்பீட்டுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை..!
  2. அடுத்ததாக இந்த நிறுவனங்கள் எதற்கும் அரசு எந்தவொரு சிறு சலுகையும் அளிப்பது இல்லை. அதனால் அரசு பட்ஜெட்டில் இதன் பொறுட்டு எந்த துண்டோ போர்வையோ விழவே விழாது..!
  3. மூன்றாவதாக, இந்த நிறுவனங்களில் படித்தவர்கள், பொறியாளர்கள், ப்ரொஃபஷனல்கள் என்றில்லாமல் கிராமப்புற மக்களுக்கும், ஸ்கில்ட் லேபர்களுக்கும், அதிகமான பெண்களுக்கும்... அதாவது வெகு வேகமாக குறைந்து வரும் விவசாய தொழிலாளர்களுக்கு இந்த நிறுவனங்கள் மிகப் பெரிய புகலிடமாக இருக்கின்றன..!
  4. நான்காவதாக, வங்கிகளின் மிகப் பெரிய லாபங்களே இந்த நிறுவனங்களுக்கு அவை வழங்கியிருக்கின்ற கடன்கள் மூலமாகத்தான். இன்னும் சொல்லப் போனால் பெறு நிறுவனங்களுக்கு இந்த வங்கிகள் கொடுக்கும் கடனுக்கான வட்டிக்கும் இந்த MSME நிறுவனங்களுக்கான வட்டிக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் உள்ளது.
  5. மேலும் இந்த சிறு குறு நிறுவனங்கள் தான் இந்தியாவின் கிட்டத்தட்ட 30 கோடி மக்களுக்கு வேலை வாய்ப்பினை நல்கி வருகின்ற நிலையில்...

இந்த நிறுவனங்களின் அழிவானது பல கோடி வேலை இழப்புக்களையும், அரசுக்கான ஜி எஸ் டி வரி இழப்பையும், வங்கிகளுக்கான வட்டி இழப்புக்களையும் ஏற்படுத்தியுள்ளதோடு... புதிதாக பல கோடி இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பினையும் தடுத்துள்ளது.

இன்றைய பொருளாதார மந்தநிலையை ஸ்கேன் செய்தால்... இது இது இது.... இந்த நோய் தான் நிதி அமைச்சருக்கு கண்ணில் படும்..!

கடந்த இரண்டரை ஆண்டுகளில் துவங்கி இந்த கடைசி மூன்று மாததில் நாடு முழுவதும் பல கோடிப் பேர்... குறிப்பாக கிராமத்து மற்றும் இரண்டாம் நிலை நகரத்து சாமான்ய மக்கள் வேலை வாய்ப்பினை இழந்துள்ளனர்... இதைத் தவிர கட்டுமான தொழிலில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சியினால் அமைப்பு சாரா தொழிலாளர்களில் கிட்டத்தட்ட 10 கோடிக்கும் அதிகமானோருக்கு மாதத்தில் 10 நாட்களுக்கான வேலை கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருக்கின்றது..!

இந்த மக்களை நம்பித்தான் கிராமப்புற வணிகமும்... அதனை நம்பியுள்ள FMCG துறை சார்ந்த Self Employed எனப்படும் பல கோடி சுய தொழில் முனைவோரும் இருந்தனர்..!
அது தான் இப்பொழுது பெரும் பாதிப்புள்ளாகி இருக்கின்றது..!

இவர்கள் கைகளில் பணப்புழக்கம் நின்று விட்ட நிலையில் அல்லது குறைந்து போய்விட்ட நிலையில்...

இந்தியாவின் மதிப்பே அதன் வாங்கும் திறன் தான்...! அதாவது அதன் சந்தை தான்..! அதன் மனித வளம் தாம்..! உழைப்பதற்கும் இங்கே மக்களுக்கு பஞ்சமில்லை... அதேப் போன்று வாங்கி உபயோகிக்கவும் இங்கே மக்களுக்கு பஞ்சமில்லை..!

ஆகவே தான் ஒரு ரூபாய் சாஷே பாக்கெட்டிலிருந்து ஒரு கோடி ரூபாய் கார்கள் வரை இங்கே ஜஸ்ட் லைக் தட் விற்பனை ஆகின்றன..! அதன் பொருட்டே உலகின் எத்தனை பெரிய நிறுவனமும் இங்கே கால் பதிக்க தயங்குவதில்லை..!

இந்தியாவின் மக்கள் தொகை தான் அதன் பலவீனம் என்று நம்பிக்கொண்டிருந்த நிலையில்... மனித வளம் தான் இந்தியாவின் சொத்து என்பதை 1999க்குப் பிறகு பன்னாட்டு வர்த்தக உலகம் நம்பிற்று... அதை இந்திய ஆட்சியாளர்களும் அங்கீகரித்தனர்..!

இன்றைக்கு அந்த மக்கள்.... இந்தியாவின் அடித்தட்டு மக்கள் உழைபதற்கான வழியின்றி, வாங்குவதற்கான தகுதியின்றி மாறிப் போயிருப்பதன் காரணமே இந்த பொருளாதார மந்தநிலை..!
இதைச் சரி செய்வது தான் இன்றைக்கு மிக மிக அத்தியாவசிய மற்றும் அவசரத் தேவை..!

இப்பொழுது உயிரை கையில் பிடித்துக் கொண்டிருக்கும் MSME நிறுவனங்களுக்கு ஜி எஸ் டியை சரி செய்தால் போதாது,...

தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நல்ல நிலையில் செயல்பட்டு வந்து அரசுக்கு வரி கட்டி வந்து... இந்த ஜி எஸ் டி மற்றும் வங்கிக் கடன் பிரச்சினையால் கடந்த ஓராண்டில் இழுத்து மூடப்பட்ட சிறு குறு மற்றும் மத்தியதர நிறுவனங்களை அழைத்துப் பேசி அவர்களுக்கும்...

வங்கிக் கடனில் ரீ ஸ்ட்ரக்சர் மற்றும் தேவைப்பட்டால் ரீ ஃபைனான்ஸிங், வட்டித் தள்ளுபடி அல்லது அதற்கான விடுமுறைக் காலம் என்று அறிவித்து... ஜி எஸ் டி தொடர்பான அத்தனை பிரச்சினைகளையும் இலகுவாக்கி...

அவர்கள் இருந்தால் தான், தொழில் செய்தால் தான் அரசுக்கு வரி வருமானமே வரும் என்ற உண்மையை உணர்ந்து அரசாங்கம் அவர்களோடு இணைந்து பயணிக்கும் நிலையை உருவாக்க வேண்டும்..!

இந்த நாட்டில் மீண்டும் சிறு குறு மற்றும் மத்திய தர நிறுவனங்கள் புத்தெழுச்சியோடு செயல்பட துவங்கினால் மட்டுமே இந்தியாவும் இந்தியர்களும் செழிப்படைய முடியும்..!
கொக்கரக்கோ சௌமியன்
25-08-2019