Thursday, October 18, 2012

திரா சார் வீட்டு கொலு

என் தாய் வழிப் பாட்டியின் ஊர் பெருஞ்சேரி. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் ஒரு உதாரணமாயிருக்கும் அழகிய கிராமம். அந்த ஊரைப் பற்றி நிறைய பல முறை எழுதிவிட்டதால் அப்படியே அதை கட் பண்ணிட்டு திரா சார் வீட்டுக்கு வருவோம்.

ஊரின் தென்பக்கமாக ஓடும் வீரசோழன் ஆற்றிலிருந்து நேராக கிராமத்துக்குள் நுழையும் ஒற்றையடிப் பாதையைக் கடந்து வரிசையாக பக்கத்திற்கு  பத்து வீடுகளைக் கொண்டிருக்கும் திருமஞ்சன வீதியையும் கடந்தால் ஊருக்குள் ஒரு நாளைக்கு 5 முறை வந்து செல்லும் ஒரே பேருந்தான எட்டம் நம்பர் பஸ்ஸுக்காகவே போடப்பட்டிருக்கும் கருங்கல் ரோட்டை வந்து முட்டலாம்.

ரோட்டின் கிழக்குப் பக்கம் திரும்பி நடந்தால் வலப்பக்கத்தில் இருக்கும் முதல் ஓட்டு வீடு தான் திரா சார் வீடு. அந்த வீட்டின் கொல்லை திருமஞ்சன வீதியில் முன்னூறு அடிக்கு நீண்டிருக்கும். அந்த வீதியின் மேலண்டை பக்கத்தில் இருக்கும் முதல் நான்கு வீடுகளுக்கு திரா சார் வீட்டுக் கொள்ளை தான் எதிர் வீடு!

ஊரில் இருக்கும் மூன்று பிராமணக் குடும்பங்களில் இவருடையதும் ஒன்று. ஆனால் மற்ற இரண்டு குடும்பங்களுக்கும் இவருக்கும் வித்தியாசம் உண்டு. திரா சார் ஊர் மக்கள் அனைவருக்கும் மிகுந்த பரிச்சயமானவர். மற்ற இரண்டு பிராமனாள் வீட்டிற்கும் எல்லோராலயும் உள்ளே நுழைந்து விட முடியாது. அவர்களும் ஊரில் உள்ள எல்லோருடனும் சகஜமாகப் பேசிவிட மாட்டார்கள். அவர்கள் முகத்தில் சிரிப்பை வரவழைத்துப் பேசுவார்கள் என்றால், அது ஊரில் இருக்கும் ஐந்தாறு பிள்ளைமார் வம்சத்து மிராசுதாரர் குடும்பத்தினரோடு மட்டும் தான்!

இந்தக் காரணத்தினாலேயே திரா சார் மேல் ஊர் மக்கள் அனைவருக்கும் கூடுதல் வாஞ்சை இருப்பது யதேச்சையாக அமைந்து விட்டது. அது மட்டுமல்லாமல் அவர் பெருஞ்சேரி மாணவர்கள் மட்டுமல்லாது, சுத்துப்பட்டு நாற்பது ஐம்பது கிராம மக்களும் பயிலுகின்ற மங்கைநல்லூர் கே.எஸ்.ஓ உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்ததும் ஒரு முக்கிய காரணம்.

இயற்கையிலேயே அப்பொழுது கிராமத்தைச் சேர்ந்த உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, குறிப்பாக தமிழாசிரியர்களுக்கு நல்ல மரியாதை இருந்தது. அதனாலேயே, அவர் பெருஞ்சேரி எல்லையையும் கடந்து நாற்பது கிராமங்களிலும் பெயர் சொன்னால் விளங்கும் அளவிற்கு பிரபலம் ஆகியிருந்ததும், மக்களுக்கு அவர் மேல் அதிக மதிப்பு ஏற்பட காரணமாக அமைந்து விட்டது.

இதுக்கு மேல அவர் வீட்டுல வைக்கின்ற கொலு பற்றி சொல்லாவிட்டால் அடிக்க வருவீங்க...!

புரட்டாசி ஐப்பசி மாதங்கள் என்றாலே அந்த ஊரில் எல்லோருக்குமே திரா சார் நினைவு தானாகவே வந்து விடும். கொலு வைப்பதற்கு முதல் நாளோ அல்லது சில வருடங்களில் நவராத்திரியின் முதல் நாளான அன்றைய தினத்தின் காலையிலோ, அம்பாள் படி இறங்கும் வைபவம் என்று அமர்க்களப் படுத்திவிடுவார்.

அந்த வைபவத்திற்கு 12 நாட்களுக்கு முன்னதாகவே (அது என்ன கணக்கோ தெரியவில்லை) வீடே......! சாமான்கள் சுத்தம் செய்வது, ஒட்டடை அடிப்பது, கழுவி விடுவது, துணி துவைப்பது என்று ஒரே களேபரமாகிவிடும். வீடு சுத்தம் பண்ணுவது முடிந்தவுடன், மச்சியிலிருந்து முதலில் கொலுப்படிக்கான பலகைகளைத் தான் இறக்குவார்.

இதற்கெல்லாம் ஒத்தாசை செய்ய ஊரில் அவருக்கு அந்த வருடத்தில் பிடித்த ஐந்தாறு மாணவர்களை வைத்துக் கொள்வார். அவர்களுக்கு அந்த வருடம் பூராவும் ஊரில் பெரிய மரியாதை கிடைப்பதாக அவர்களே எண்ணிக் கொள்வார்கள்!

பலகைகளையும் அதன் கால்களையும் சுத்தம் செய்து, அதில் இருக்கின்ற சிறு சிறு உடைப்புகளைச் சரி செய்து, இதற்கு மேல் தாங்காது என்பவற்றை தூக்கி கடாசி விட்டு, அதற்குப் பதிலாக புதிதாக ஒன்றைச் செய்து பொருத்திக் கொள்வது என்று......!  அதற்குள் கொலுவிற்கு இன்னும் நான்கைந்து நாட்களே இருக்கும் என்ற நிலை வந்து விடும்.

கொலுப் படிகள் அவருக்கு முழு திருப்தி தந்துவிட்டது என்றதும் தான் கொலு பொம்மைகள் மச்சியிலிருந்து கீழிறக்கப்படும். பெரிய பொம்மைகள் எல்லாம் தனித்தனியாக வைத்திருப்பார். சின்ன பொம்மைகள் எல்லாம் ஐந்தாறு மரப் பெட்டிகளில் இருக்கும்.

மச்சி வாசல் அருகில் உள்ள உத்திரத்தில் ஏணியைச் சாற்றி, மச்சியில் இரண்டு பேர் உட்கார்ந்து ஒவ்வொரு பொம்மையாக எடுத்துக் கொடுக்க, அதை ஏணியில் நின்று கொண்டிருக்கும் ஒரு பையன் வாங்கி, கீழே நின்று கொண்டிருக்கும் திரா சாரிடம் தர அதை அவர் தன்னருகே நிற்கும் பையனிடம் கொடுத்து அவன் பத்திரமாக ஒவ்வொரு பொம்மையாக கீழே வைப்பான்.

அரை மணி நேரம் நடக்கின்ற இந்த நிகழ்வுக்கு சம்பந்தப்பட்ட அனைவருமே, வழக்கத்தை விட படு வாஞ்சையோடு குளித்து முடித்து சுத்தபத்தமாக வந்திருந்து, இந்த வேளையைக் கவனிப்பார்கள். 

கொலு பொம்மைகள் கீழே இறக்கப்பட்டவுடன், கொலு வைப்பதற்கான முழு களையும் அந்த வீட்டிற்கு வந்து விடும். அதன் பிறகு ஐந்தாறு பெண் பிள்ளைகளையும் களத்தில் இறக்கி விட்டுவிடுவார் திரா சார். அவைகள், அந்த பொம்மைகளை மிகவும் நாசுக்காக சுத்தம் செய்யும். பலவற்றை பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதில் துணியை நனைத்து அதைக் கொண்டு பொம்மைகளைத் துடைத்தும் சுத்தம் செய்வர்கள். சில பொம்மைகளை வெறும் உலர்ந்த துணியால் மட்டுமே சுத்தம் செய்வார்கள்.

ஊரிலுள்ள குயவர் வீட்டு பையனோ பெண்ணோ வரவழைக்கப்பட்டு வர்ணம் போன பொம்மைகளுக்கெல்லாம் புதிதாக வண்ணம் வைக்கப்படும். மர பொம்மைகளுக்கும் அவர்களே வண்ணம் வைத்து விடுவார்கள். ஐயர் வீட்டின் உள்ளேயே வந்து வண்ணம் வைப்பதாலோ என்னவோ அவர்கள் அதற்கு கூலி கூட வாங்கிக் கொள்ள மாட்டார்கள்!

அம்மன் படியிறங்கும் வைபவம் நாளை மறு நாள் நடைபெற இருக்கிறது. எல்லோருக்குமே ஒரு வித பரபரப்பு தொற்றிக் கொள்ளும். மொத்தமாக இருநூறிலிருந்து இருநூற்றி ஐம்பது பொம்மைகள் வரை இருக்கும். ஒவ்வொரு வருடமும் குறைந்தது பத்துப் பதினைந்து பொம்மைகள் வரை சேர்த்துவிட வேண்டும் என்று திரா சார் விரும்புவதை மாணவர்கள் நிறைவேற்றி விடுவார்கள்.

ஊர் பெரிய மனிதர்களிடம் எல்லாம் சென்று இதற்காக ஊண்டி குலுக்கி காசு சேர்த்து, மாயவரம் சென்று புது பொம்மைகள் வாங்கி வந்து விடுவார்கள். அவர்களுக்கெல்லாம் கொலு என்பது வெறுமனே சாமி சம்பந்தப் பட்டது என்பது போக, ரயில் வண்டி பொம்மையைக் கூட கொலுவில் சேர்க்கலாம் என்பது அவர்கள் நினைத்திருந்த ஆன்மீகத்திற்கு புது வடிவம் அல்லது வர்ணம் கொடுத்தது போலிருந்தது.

புது பொம்மைகளுக்கென்றே இரண்டு பக்க வாட்டிலும் படிகள் வைக்கப் பட்டிருக்கும். அந்த வருடத்தில் அந்த இரண்டு படிகளிலும் உள்ள பொம்மைகளுக்குத் தான் அதிக மவுசு!

அம்மன் படியிறங்கும் வைபவத்திற்கு அதிகம் யாரும் வரமாட்டார்கள். ஆரம்பத்திலிருந்து இந்த வேலையில் சம்பந்தப்பட்ட மாணவ மாணவிகள் மட்டுமே வருவார்கள். ஊரிலிருந்து அவர் சித்தப்பா என்றழைக்கும் ஒரு முதிய பிராமணர் வந்திருந்து புரியாத மொழியில் மந்திரங்கள் சொல்ல, சர்க்கரைப் பொங்கல் எல்லாம் வைத்து படையல் போட்டு, இன்னும் என்னென்னவோ சாங்கியங்கள் எல்லாம் செய்து, வெற்றிகரமாக அந்த வருடத்திய கொலு ஆரம்பமாகிவிடும்.

நவராத்திரியின் முதல் நாள், புது பொம்மைகளைப் பார்ப்பதற்கென்றே பெரிய கூட்டம் கூடும். கிட்டத்தட்ட 100  பேர் வரையிலும் கூட வருவார்கள். திருமணமான பெண்களும் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு வருவார்கள். அனைவரையும் கூடத்தில், தாழ்வாரங்களில், (மழை இல்லை என்றால்)முற்றத்தில், வெளித் திண்ணையில் உட்கார வைத்து, அவரே எதாவது தமிழ் பாடல்கள் ஒன்றிரண்டு பாடுவார்.

வந்திருப்பவர்களையும் பாடச் சொல்வார். குறைந்தது பத்து பேராவது பாடினால் தான் அன்றைக்கு தீப ஆராதனை காட்டி, சுண்டல் தருவேன் என்பார். அதற்காகவாவது பிள்ளைகள் பாடுவார்கள். வெளியூரிலிருந்து இந்த ஊருக்கு திருமணம் செய்து வந்திருக்கும் சில பெண்களும் பாடி, தங்கள் மேதமையை ஊருக்கு அறிவிப்பார்கள். நீராரும் கடலொடுத்து பாடல் கூட சில மாணவச் செல்வங்கள் பாடும். சிலர் திருக்குறள் மனப்பாடப் பகுதியை ஒப்புவிப்பார்கள். 

வீட்டிலும், ஊரிலும் தண்ணி தெளித்து விடப்பட்ட சிலதுகள் கூட நல்ல சினிமா பாட்டைப் பாடி கைத்தட்டல் பெற்று, ஊரோடு ஒத்து வருவார்கள்! எல்லாம் முடிந்து அவருக்கே ஒரு வித திருப்தி ஏற்பட்ட பிறகு, கடைசியாக அவர் வடமொழியில் ஏதோ பாடல் பாடி விட்டு தீபாராதனை காட்டி அனைவருக்கும் வாசலில் நின்று சுண்டல் தருவார்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சுண்டலும், யாராவது அன்பர்கள் கொடுக்கும் தானியத்தைக் கொண்டு சமைத்த சாதமும் கொடுப்பார். அவ்வளவு ருசியாக இருக்கும். மாலை 6.30 லிருந்து 7.30 வரை அந்த வைபவமும், அதன் பிறகு அரை மணி நேரம் விநியோகமும் என்று 8 மணிக்கெல்லாம் ஒவ்வொரு நாள் நிகழ்வும் இனிதே நிறைவுறும்.

ஒவ்வொரு நாளும் கூட்டம் அதிகரித்த வண்ணம் தான் இருக்கும். அங்கு நிறைய பாடல்கள் அறங்கேறும். சாதி மத பேதமின்றி அனைவரும் அங்கு வருபவர் எல்லோரிடமும் ஒரு வித உற்சாகமும், சந்தோஷமும் பீறிட்டு பொங்கி வழியும். உண்மையான சமதர்மம் அங்கு ஓங்கியிருக்கும்.  ஆன்மீகம், ஆண்டவன் என்பதற்கான ஒரு புதிய  அல்லது உண்மையான வடிவம் அங்கு கட்டமைக்கப்படும்.

சாமான்யனின் திறமைகள் அங்கு வெளிக்கொணரப்படும், தாழ்வு மனப்பான்மைகள் அகற்றப்படும், என் தமிழ் அங்கு கொலு வீற்றிருக்கும்.

தி. ராமலிங்கம் என்கிற திரா சார் அவர்களே, உங்கள் உடலை மட்டும் தான் காலம் கொண்டு போக முடியும், உங்கள் நினைவுகளை, உங்கள் உணர்வுகளை, நீங்கள் விதைத்து வளர்ந்திருக்கும் எண்ணற்ற விருட்சங்களை என்றைக்கும் அழிக்க முடியாது,

நன்றிகள் திரா சார்!!!


No comments: