Thursday, January 31, 2019

தந்தி டீவி நடத்தியது கருத்து கணிப்பா? கருத்து திணிப்பா?!


தமிழ்நாட்டுல எல்லா விஷயத்துலயும் தோத்துப் போய், மக்களின் கடும் கோபத்தை சம்பாதித்து வைத்திருக்கும் அதிமுகவும், இந்திய அளவில் இதே நிலையில் இருக்கின்ற பாஜகவும், அடுத்து எந்த தேர்தல் வந்தாலும் தமிழகத்தில் ஒரே ஒரு சீட்டு கூட வாங்க முடியாதுங்கறது தான் கள யதார்த்தம்.

இதைத்தான் அகில இந்திய அளவில் உள்ள முக்கியமான பெரிய தேசிய ஊடகங்கள், உலகின் பெரிய சர்வே நிறுவனங்களோடு இணைந்து எடுத்து வெளியிட்ட ஐந்து வெவ்வேறு கருத்துக் கணிப்புக்களும் துல்லியமாக உறுதிப்படுத்தியிருக்கின்றன.

இந்த நிலையில் தான் தந்தி டீவி ஒரு கருத்துக் கணிப்பை வெளியிடுகிறது. தமிழகத்தில் 20 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் அதில் 10 தொகுதிகளுக்கான கருத்துக்கணிப்பை மட்டும் வெளியிட்டிருக்கிறது.

அதில் பொதுவாக சொல்லப்பட்டிருக்கும் விஷயம்... 10இல் 7 தொகுதிகளில் திமுக வெல்லும், இரண்டில் இழுபறி என்று சொல்லியிருக்கிறது. மேலோட்டமாகப் பார்த்தால், தேசிய ஊடகங்களும், தரமான சர்வே நிறுவனங்கள் சொன்ன கணிப்பை இது உறுதிப்படுத்துவது போலவும், அது மட்டுமின்றி தமிழகத்தின் பெரும்பாலான மக்களுக்கு தெளிவாகத் தெரியும் அந்த முடிவுகளோடு ஒத்துப் போவது போலவும் தான் இருக்கும்.

ஆனால் அந்த கருத்து திணிப்பில் ஒவ்வொரு கட்சியும் எத்தனை சதவிகிதம் வாக்குகள் வாங்கும் என்று தந்தி டீவி சொல்லியிருக்கும் விஷயம் தான் விஷம் கலந்தது..! அது தான் பாஜகவுக்கு தந்தி டீவி செய்யும் அடிமை வேலைக்கான சான்று..!

இந்த கருத்து திணிப்பில் தந்தி செய்திருக்கும் விஷ(ம)த்தனங்களை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

முதலில் தினகரனின் பதிவு கூட செய்யப்படாத... தொண்டர்கள் உட்பட முக்கிய தலைவர்கள் எல்லாம் தினம் தினம் வெளியேறிக் கொண்டிருக்கின்ற கட்சியை திமுக மற்றும் அதிமுகவுக்கு இணையாக பட்டியலிட்டு மக்களிடம் கருத்துக் கேட்டதாகச் சொல்வது ஆகச் சிறந்த அயோக்கியத்தனம்.

இரண்டாவதாக.., திமுக மட்டுமல்ல அதிமுகவும் ஒரு கூட்டணி அமைத்துத் தான் போட்டியிடும். தினகரனோ எதாவது ஒரு மூன்றாவது அணியுடன் தன்னை இணைத்துக் கொள்வார் என்ற நிலையில்..., திமுகவை குறிப்பிடும் போது மட்டும் திமுக காங்கிரஸ் அணி என்றும்... அதிமுக மற்றும் அமமுகவை தனித்தனி கட்சியாக காட்டுவதும் மிகப் பெரிய மோசடி.

இதனால் என்ன வந்தது என்று கேட்பீர்களேயானால்...,

பொது மக்களிடம் திமுக தனித்து நின்று வெல்லவே முடியாது அதற்கென்று தனித்த பெரிய வாக்கு வங்கி இல்லை என்ற எண்ணத்தை பலமாக உருவாக்குவது ஒரு நோக்கம்.

மற்றொரு நோக்கம் என்னவென்றால், திமுக கூட்டணி தமிழகத்தில் அனைத்து தொகுதிகளையும் வெல்லும் என்று நேர்மையான கருத்துக் கணிப்புகள் உறுதி செய்து விட்ட நிலையில், காங்கிரஸின் சீட் பேரத்தை தூண்டி விட்டு, நாங்க உங்களோட இல்லன்னா நீங்க பல இடங்களில் தோத்துடுவீங்கன்னு சொல்லி பேரத்தை அதிகப்படுத்தி திமுகவை குறைவான தொகுதிகளில் நிற்க வைப்பது. அதன் மூலம் கடந்த 2016 சட்டமன்ற தேர்தல் போல, காங்கிரஸ் மற்றும் சிறு கட்சிகள் நின்ற இடங்களில் அதிமுக மிகப்பெருமளவில் வென்றதைப் போல, காங்கிரஸ் மற்றும் திமுகவின் மற்ற சின்ன கூட்டணிக் கட்சிகள் நிற்கின்ற இடங்களில், பாஜக - அதிமுக கூட்டணி அதிகமாக அறுவடை செய்யலாம் என்ற கணக்கு தான் இதில் பிரதானம்...!

மூன்றாவதாக..., அரவக்குறிச்சி தொகுதி தவிர மற்ற தொகுதிகளில் அதிமுக மற்றும் அமமுக வுக்கு தந்தி திணித்திருக்கும் வாக்கு சதவிகிதங்களைக் கூட்டினால் திமுகவை விட அதிகம் இருப்பதாக காட்டப்பட்டிருக்கின்றது.

2016இல், ஜெயலலிதா உயிரோடு இருந்த நிலையிலேயே..., தமிழகம் முழுக்க ஓட்டுக்கு 500 ரூபாய் வரை பணம் கொடுத்து அதிமுக தேர்தலை சந்தித்த செய்திகள் வந்த நிலையிலேயே... தமிழகம் தழுவிய அளவில் 1.1 சதவிகித வாக்கு வித்தியாசம் மட்டுமே திமுக மற்றும் அதிமுகவுக்கு இருந்த நிலையில்...

கடந்த இரண்டரை ஆண்டுகளில் ஜெயலலிதாவும் இறந்து போய், அந்த இறப்பும் மர்மம் நிறைந்ததாக இருக்கின்ற நிலையில், அதற்கான கோபங்கள் ஓபிஎஸ், ஈபிஎஸ், தினகரன் மீது உண்மையான 

அதிமுகவினருக்கே இருக்கின்ற நிலையில்..., அவர்கள் செய்த ஊழல் நிரூபிக்கப்பட்டு சசிகலா சிறைவாசம் அனுபவிக்கின்ற நிலையில்..., உள்ளாட்சி தேர்தலைக் கூட நடத்த வக்கில்லாமல் அதிமுக இருக்கின்ற நிலையில்..., அனைத்து துறைகளிலும் மக்களின் கடும் கோபத்தோடு அதிமுக ஆட்சி செய்கின்ற நிலையில்....

அதிமுக மற்றும் அமமுகவுக்கு எப்படி வாக்கு சதவிகிதம் அதிகரிக்கும்?!
அதேப் போன்று...

கடந்த இரண்டரை ஆண்டுகளில் கலைஞர் மறைந்திருந்தாலும், அவர் மறைவிற்குப் பிறகு... அவர் செய்த சாதனைகள் அனைத்தையும் மக்களிடம் கொண்டு சென்று, அவர் உயிரோடு இருந்த காலத்தை விட, இப்பொழுது பெருவாரியான நடுநிலை பொதுமக்களும், இளைஞர்களும் அவரது சாதனைகளை தேடிப்பிடித்து படித்து தெரிந்து கொண்டு... திமுகவுக்கு ஆதரவாக மாறிக்கொண்டிருக்கின்ற நிலையில்...

திமுகவின் புதிய தலைவர் தளபதியார், கட்சியை மிகக் கட்டுக்கோப்பாக எந்த சிறு சேதாரமும் இல்லாமல் கொண்டு சென்று... ஒவ்வொரு தொகுதியிலும் கடைசி பூத் வரையிலும் 20 பேர் கொண்ட கமிட்டிகளை அமைத்து, இன்றைக்கு ஒட்டுமொத்த திமுகவினரையும் கிராம சபை நிகழ்ச்சியின் மூலம் கிராமத்து மக்களிடம் நெருங்கிப் பழக வைத்துக் கொண்டிருக்கும் நிலையில்...

இனி அதிமுகவை தொடர விட்டால், தமிழகம் கெட்டுக் குட்டிச் சுவராகிப் போய்விடும்... வேறு ஆப்ஷன்கள் தேடி வாக்கினை விரயம் செய்து ரிஸ்க் எடுப்பதைக் காட்டிலும் நல்ல ஆட்சி அனுபவமும், சிறந்த நிர்வாக திறனும், எண்ணற்ற தொலைநோக்குத் திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்த திமுகவுக்குத் தான் இம்முறை ஆட்சி அதிகாரத்தை வழங்கிட வேண்டும் என்று.... கொள்கை ரீதியாக திமுகவின் எதிர்நிலையில் உள்ள... அதே சமயம் நாட்டின் மேல் உண்மையான அக்கறை கொண்ட ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் பேரும் கூட வெளிப்படையாகப் பேசுகின்ற நிலையில்....

திமுகவின் வாக்கு சதவிகிதம் எப்படி கடந்த தேர்தலை விட குறைவாக இருக்கும்?!

இந்த இடத்தில் தான் தந்தி டீவியின் மட்டமான அயோக்கியத்தனம் வெளிப்படுகிறது. பாஜகவுக்கு அடிமை சேவகம் செய்யும் கேவலமான புத்தி வெளிப்படுகிறது.
ஒரே ஒரு உதாரணம் மட்டும் நாம் பார்க்கலாம்...

எம் ஜி ஆர் காலத்திலிருந்தே எம் ஜி ஆரோ, ஜானகியோ, ஜெயலலிதாவோ சேஃப்டியாக நிற்கும்... அதிமுகவின் இரும்புக் கோட்டை போன்ற தொகுதி ஆண்டிப்பட்டி..!

இத்தொகுதியில் கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் திமுக பெற்ற வாக்குகள் 37 சதவிகிதம்.

ஆனால் நேற்றைய தந்தி டீவி கருத்துக் கணிப்பில் திமுகவுக்கு வெறும் 31 சதவிகிதம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது..!

அப்பொழுது ஜெயலலிதா தலைமையில் இருந்த ஒன்று பட்ட அதிமுக பெற்ற வாக்கு 53 சதவிகிதம் தான்..! இன்றைக்கு அதிமுக + அமமுக வுக்கு தந்தி டீவி கொடுத்திருக்கும் சதவிகிதமோ 60%...!

இப்போ புரிகிறதா... தந்தி டீவி எடுத்திருப்பது கணிப்பு அல்ல திணிப்பு என்று..?!

இன்னும் ஒரே ஒரு திணிப்பு மோசடியை மட்டும் பார்த்து விட்டால் போதும்...

அரவக்குறிச்சி தொகுதில் மட்டும் அதிமுக + அமமுக வாக்குகளை விட திமுகவுக்கு பலமான வாக்கு வங்கி இருப்பதாக தந்தியின் திணிப்பு சொல்கிறது.

இதன் மூலம் மக்கள் மூளையில் அது... அது Means பாஜக திணிக்க நினைக்கும் விஷயம் இது தான்...
திமுகவுக்கு என்று தனித்த பலம் எங்கும் கிடையாது. கொஞ்சநஞ்சம் இருப்பதும் காங்கிரஸ் போன்ற கூட்டணிக் கட்சிகளால் மட்டுமே இருக்கின்றது. இப்போ அதிமுக தினகரனோடு ஒன்றிணைந்து, அதில் பாஜகவும் சேர்ந்தால், ஒட்டுமொத்த சீட்டுகளையும் அள்ளிவிடுவார்கள்.

அதிமுக அல்லது அமமுகவிலிருந்து யாரையாவது இழுத்தால் தான் திமுகவின் பலமே கூடும்..! என்பது தான் அது..!

அதாவது திமுகவே வெல்லும் என்கிற நிலையில் அதன் வெற்றியை இழிவு செய்வது தான் அவாள்களின் காலம் காலமாக இருந்து வரும் கோயபல்ஸ் வேலை..!

அரவக்குறிச்சிக்கு மட்டும் கூடுதல் சதவிகிதம் கொடுத்தது இந்த அடிப்படையில் தான்..!



Monday, January 14, 2019

திமுகவுக்கு எதிரான பாஜகவின் புது வியூகம் - எடுபடுமா?!


இன்றைய டீவி விவாதங்கள் மூலம் பாஜகவும்.... பாஜகவின் ஸ்லீப்பர் அல்லக்கைகளான சுமந்த் சி ராமன் போன்றொர்களும், பாஜகவின் அடிமைகளான அதிமுகவினரும்.....

திமுக எதிர்ப்பு வாக்கு வங்கி.....

என்று ஒரு கான்செப்ட்டை பலமாக முன்வைக்கின்றனர்.
இதை திமுக மிகத் தீவிரமாக கவனத்தில் எடுத்து பார்ப்பனர்களை விட.... ஆர் எஸ் எஸ்ஸை விட.... பாஜகவினரை விட.... சங்கிகளை விட.... சங்கிகளால் மூளைச்சலவை செய்யப்பட்ட பார்ப்பனரல்லாத பக்தாஸை விட....

ஒருபடி மேலே சிந்தித்து செயல்பட்டு முறியடிக்க வேண்டும்..!
ஏனெனில் வாக்கு வங்கி என்பது ஆதரவுக்கானது..! எதிர்ப்பு வாக்கு வங்கி என்ற பதம் முதன்முறையாக இப்பொழுது உருவாக்கப்படுகிறது.

ஒவ்வொரு கட்சிக்கும் தனித்த... அசைக்க முடியாத ஆதரவு வாக்கு வங்கி இருக்கும். ஆனால் ஒவ்வொரு தேர்தலிலும் சூழ்நிலைக்கு ஏற்ப ஆதரவு அல்லது எதிர்ப்பு அலை என்பது மட்டுமே உருவாகும். அந்த அலையானது பொதுவாக அந்த தேர்தலோடு முடிவுக்கு வந்துவிடும்..!

உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமானால் 91 தேர்தலில், திமுக சொல்லித்தான் விடுதலைப் புலிகள் ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்று மக்களை நம்ப வைத்து... திமுகவுக்கு எதிரான அலையை உருவாக்கி முதன் முறையாக பார்ப்பன லாபி அதிமுகவின் பார்ப்பன முகமாக ஜெயலலிதாவை வெற்றிபெற வைத்தது..!

ஆனால் இந்த தேர்தலில் அப்படியான திமுக எதிர்ப்பு அலை என்பது எதுவுமே இல்லாத நிலையில்.....

ஆளும் அதிமுகவிற்கும், மோடிக்கும் எதிரான அலை மட்டுமே மிகக் கடுமையாக வீசிக் கொண்டிருக்கின்ற நிலையில்....

திமுக கூட்டணியை பலவீனப்படுத்த திமுக எதிப்பு வாக்கு வங்கி என்ற ஒரு இல்லாத கான்செப்ட்டை ஆர் எஸ் எஸ் தமிழகத்தில் முன்னெடுக்கின்றது..!

திமுகவின் எதிர்ப்பு வாக்கு வங்கி என்பது வெறும் மூன்று சதவிகிதமே உள்ள பார்ப்பனர் வாக்குகள் மட்டுமே..! அந்த எதிர்ப்பு வாக்கு வங்கியை மார்பில் தாங்கிய எதிரி ஆயுதத்தின் வடுக்கலாகவே திமுக சந்தோஷமாக பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளும்..!

ஆனால் பார்ப்பனரல்லாதோரை திமுகவின் எதிர் நிலைப்பாட்டில் தொடர்ந்து நிறுத்தி... அதை நிரந்தர திமுக எதிர்ப்பு வாக்கு வங்கியாக நிறுவ முனையும் இந்த சதியினை திமுக முளையிலேயே கிள்ளி எரிய திமுகவும் மிகப் பலமாக தனது பிரச்சாரத்தினை முன்னெடுத்து விட்டதாகவே தெரிகிறது..!

இணையதள திமுகவினரும்.....  திமுக ஐடி விங்கும்.....கலைஞர் டீவியும்.... ஒட்டுமொத்த இணையதளத்தையும்.... அதாவது சமூக வலைத்தளங்களையும் தங்கள் கைகளில் கொண்டு வந்து, இது மாதிரியான அவதூறுகளுக்கு உடனுக்குடன் ஆதாரத்துடன் மறுத்து பல்வேறு வகைகளில் பரப்புரை செய்து வருகின்றனர்..!

திமுக தலைவரும், இரண்டாம் கட்ட தலைவர்களும்,.. அவதூறுகளுக்கு ஏற்ற வகையில் உடனுக்குடன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியாகவும் அறிக்கையாகவும் வெளியிட்டு.....  அதுவும் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களின் மூலம் மக்களிடம் கொண்டு செல்லப்படுக்கொண்டிருக்கின்றது..!

மஞ்சள் பை, சர்க்காரியா, ஈழப்பிரச்சினை, 2ஜி போன்றவற்றில் அலட்சியமாக இருந்து விட்டு ஆட்சியை இழந்தது போல் இல்லாமல்....   இப்பொழுது திமுக அதிரடியாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

அத்தனை புகழும் திமுகவின் புதிய தலைவர் மு.க. ஸ்டாலினையே சாரும்..!



மாஸ் காட்டிய ரஜினி - மரண மொக்கையான கார்த்திக் சுப்புராஜ்..!

பேட்டை....

மரண மாஸ்ன்னு சொல்லிட்டு மரண மொக்கைய கொடுத்திருக்காய்ங்க..!

இந்த வயசுல ரஜினி தன்னோட வயசையும், உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் கடுமையாக உழைச்சிருக்காருன்னா... நிச்சயமா சொல்றேன் அவர் பணம் சம்பாதிக்கிறதுக்காக மட்டும் செய்யல.... மாறாக நடிப்பின் மேல் அவருக்கு இருக்கின்ற அதீத காதல் தான் காரணம் என்பது என் கருத்து..!

ஆனா அவ்ளோ உழைப்பையும் கெடுத்து குட்டிச்சுவராக்கி விட்டார் கார்த்திக் சுப்புராஜ். இணைய இலக்கிய மொண்ணைகள் தான் சுப்புராஜ் மாதிரி.... சின்ன சின்னதா பத்து படம் எடுத்து பழகி வளர வேண்டிய ஆட்களை மொதோ படத்துலேயே ஆஹா ஓஹோன்னு புகழ்ந்து... முத்தி பழுப்பதற்கு பதிலாக, பிஞ்சிலேயே வெம்ப வைத்து விடுகின்றார்கள்..!

படத்துல கதை கிடையாது, லாஜிக் கிடையாது, விறுவிறுப்பு கிடையாது... கடேசி வரைக்கும் அந்த சிறப்பான, தரமான சம்பவம் எப்ப நடக்கும்ன்னே கேட்டுக்கிட்டு தான் தியேட்டரை விட்டு வெளிய வர வேண்டியிருக்கு.

இணையத்துல சில இளைஞர்கள் பழைய ரஜினிய கார்த்திக் சுப்புராஜ் காட்டிட்டாருன்னு எழுதுறாங்க. இவிங்க எல்லாம் பழைய ரஜினிய பார்த்ததே இல்லைன்னு நினைக்கிறேன்..!

தப்புத்தாளங்கள், பைரவி, முள்ளும் மலரும், தீ, ஆறிலிருந்து அறுபது வரை, முரட்டுக்காளை, மனிதன், தங்கமகன், புதுக்கவிதை, தம்பிக்கு எந்த ஊரு, தில்லு முள்ளு, படிக்காதவன், தர்மதுரை.... இப்படியான ரஜினியை எல்லாம் இவர்கள் பார்த்ததே இல்லைன்னு நினைக்கிறேன்.

இதையெல்லாம் பார்த்த ரசிகர்கள் தான் ரஜினியை சூப்பர் ஸ்டாராக்கினாங்க..!

அருணாச்சலம், அண்ணாமலை, முத்து, பாட்சா, பணக்காரன், படையப்பா.... போன்ற படங்களை பார்த்த ரசிகர்கள் தான் அவரை உலக லெவலுக்கு கொண்டு சென்றார்கள்..!

இந்த படங்களில் வந்த எந்த ரஜினியை கார்த்திக் சுப்புராஜ் காட்டியிருக்காருன்னு கொஞ்சம் விம் போட்டு விளக்கினால் நன்றாக இருக்கும்..!

பாலச்சந்தர், பாரதிராஜா, மகேந்திரன் கிட்டயிருந்து எஸ். பி முத்துராமன் கைகளுக்கு வந்தவர் வெகுஜன நடிகராக மாறினார். அவரை அப்படியே பி. வாசு, சுரேஷ் கிருஷ்ணா, சுந்தர். சி, கே.எஸ். ரவிக்குமார், ஷங்கர் போன்றோர் கைப்பற்றி உலக அளவிற்கு கொண்டு சென்றனர்..!

ஆனால் இப்பொழுதோ சவுந்தர்யா, ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ் போன்றோர்... அவரை தரமா வச்சி செஞ்சிக்கிட்டிருக்காய்ங்க..!



ரஜினி சார்.... நீங்க இன்னும் நாலைஞ்சு படம் பண்ணப்போறாதா சொல்றாங்க. ஆனா இந்த இணைய மொண்ணைகள் கொண்டாடும் உலகப்படம் எடுக்கும் இந்த மாதிரி அரைவேக்காடுகள் கிட்ட மாட்டிக்கிட்டு விரயம் பண்ணிடாதீங்க.... அட்லீஸ்ட் அட்லிகிட்டயாவது போங்க சார். நல்ல தரமான, சிறப்பான சம்பவங்களை எங்கேயிருந்தாவது கொண்டு வந்து வச்சி படத்தையும் உங்களையும் காப்பாத்திடுவார்..!

ஹாங்... அப்பறம் கார்த்திக் சுப்புராஜ் சார்... நீங்க இப்ப வளர்ந்துருக்குற விஜய் சேதுபதிய வச்சிக்கூட படம் எடுக்குமளவிற்கு வளரல....! முனீஸ் மாதிரி ஆளுங்களை வச்சி அஞ்சாறு படம் பண்ணிட்டு வாங்க..!


Sunday, January 13, 2019

ஊடக அறம் தமிழகத்தில் செத்துப் போய் விட்டதா?!

ஒரு ஜனநாயக நாட்டில்...

ஜனநாயகம் என்பது ஒரு அற்புதமான கட்டிடம். பலமான மேற்கூரை, நேர்த்தியான சுற்றுச்சுவர் கொண்ட அழகான கலைக்கூடம்.

இந்த கட்டிடத்திற்குள் அந்நாட்டு மக்கள் முழு பாதுகாப்புடன், சுயமரியாதையுடன், சம உரிமையுடன், கருத்து சுதந்திரத்துடன், மானம் மரியாதையோடு வாழலாம்.

அக்கட்டிடத்தை தாங்கி நின்று அதைப் பாதுகாக்கும்... அதாவது ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் நான்கு தூண்களாக...
சட்டமன்றம், நிர்வாக கட்டமைப்பு, நீதிமன்றம் மற்றும் ஊடகங்கள் தான் திகழ்கின்றன.

அம்மக்களுக்கு தேவையான அனைத்தினையும் செய்து தர வேண்டியது சட்டமன்றம்.... அதாவது ஆட்சியாளர்கள்.... அதாவது அரசியல் கட்சிகள் / அரசியல்வாதிகள்.

அவர்கள் உருவாக்கும் திட்டங்களை போடும் சட்டங்களை முறைப்படி நிறைவேற்றி கடைகோடி மக்கள் வரையிலும் கொண்டு போய் சேர்க்க வேண்டிய பொறுப்பு, நிர்வாக கட்டமைப்பிற்கு... அதாவது அதிகாரிகளுக்கு உண்டு.

ஜனநாயக நாட்டில் வாழுகின்ற அம்மக்களை பாதுகாப்பாக, மகிழ்ச்சியாக, மானம் மரியாதையோடு வாழ வைக்க, இந்த இரு தூண்கள் தான். அதாவது மக்கள் நலனுக்கான திட்டங்களும் சட்டங்களும் போடுவது ஒரு தூண். அவற்றை நிறைவேற்றிக் கொடுப்பது இன்னொரு தூண்..!

இந்த கட்டிடத்தைத் தாங்க இரு தூண்கள் போதுமே? இதற்கு மேலும் ஏன் இன்னும் இரண்டு தூண்கள் தேவையில்லாமல்? என்று சிலர் எண்ணக் கூடும்..!

இந்த இரண்டு தூண்களிலும் செயல்படுபவர்கள் மனிதர்கள் தானே? சபலம் உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் இயல்பாகவே அனைத்து மனிதர்களிடமும் உண்டு. கைகளில் அதிகாரம் கூடும் பொழுது நிச்சயம் தடுமாற்றம் வரும். அப்படி தடுமாற்றம் வந்தால் அவர்களை சீர்படுத்தி சரி செய்யத்தான் மூன்றாம் தூணான நீதிமன்றம்..!

தவறு செய்தால் நிச்சயம் தண்டணை உண்டு. நம்மை மூன்றாம் கண் ஒன்று கண்காணித்துக் கொண்டே இருக்கின்றது. அது இந்த நீதிமன்றத்தின் மூலம் தண்டித்துவிடும் என்று பெரும்பான்மையான குற்றங்கள் இந்த பயத்தினாலேயே அரசு மற்றும் நிர்வாக துறைகளால் நடைபெறமலேயே இருந்துவிடும்.

அதையும் மீறி நடைபெறும்... அதாவது யாருக்கும் தெரியாமல் நடைபெறும் தவறுகளை பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு வந்து, மக்களிடம் தெரியப்படுத்தி அடுத்தமுறை இந்த தவறான ஆட்சியாளர்கள் ஆட்சிக்கு வரமுடியாமல் தடுக்கச் செய்தவது தான் நான்காம் தூணான ஊடகங்களின் பணி..!

இந்தப் பணிக்கு ஊடகங்கள் எப்பொழுதுமே தங்களது நிரந்தர கூட்டாளியாக வைத்துக்கொள்வது எதிர்க்கட்சிகளைத் தான்..!

இந்த இடத்தில் தான் எதிர்க்கட்சிகளின் பணி ஜனநாயகத்தில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அதனால் தான் ஜனநாயகச் சட்டம் எதிர்க்கட்சித் தலைவருக்கு கேபினட் அமைச்சருக்கு இணையான அனைத்து உரிமைகளையும் வசதிகளையும் அளிக்கின்றது..!

ஆகவே தான் ஊடகவியலாளர்கள் சட்டமன்றத்தில் வாதாடுவது, நீதிமன்றத்திற்கு ஆட்சியாளர்களின் தவறுகளை வழக்குகளாக பதிவு செய்து நடத்துவது உள்ளிட்ட தங்களால் இயலாத பல்வேறு செயல்களுக்கு எதிர்க்கட்சிகளோடு இணைந்து செயல்படுவார்கள்..!

இதில் எதிர்க்கட்சிகளுக்கு நிச்சயம் ஒரு சுயநலம் உண்டு. அது என்னவென்றால், ஆட்சியாளர்களின் தவறுகள் அனைத்தையும் வாட்ச் டாக்... அதாவது காவல் நாய்கள் போன்று கண்காணித்துக் கொண்டே இருந்து, அதை வெளிக்கொணர்ந்து, அதற்காக சட்டமன்றத்தில் வாதாடி, ஊடகங்கள் மூலம் மக்கள் மன்றத்தில் கொண்டு போய்ச் சேர்த்து, நீதிமன்றத்தில் வழக்குகளாக பதிவு செய்து, இந்த ஆட்சியை அகற்றி தாங்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற அந்த சுயலம் தான் அது..!

இதில் தவறில்லை. ஜனநாயகம் இந்த சுயநலத்தை தான் ஆட்சியாளர்கள் செய்யும் தவறுகளிலிருந்து மக்களை பாதுகாக்க இந்த ஒரு வசதியாக செய்து கொடுத்துள்ளது..!

ஆனால் இன்றைக்கு தமிழ்நாட்டில் நடப்பது என்ன?!

ஒரு முன்னால் முதல்வர் மரணத்தில் மர்மம் இருப்பதாக மிகப்பலமான சந்தேகங்கள் வந்துள்ள நிலையில், அதற்காக ஒரு கமிஷனே போடப்பட்டு அதன் விசாரணையும் நடந்துகொண்டிருக்கின்ற நிலையில்...

அந்த முன்னால் முதல்வர் கொல்லப்பட்டிருப்பார் என்ற நம்பப்படுகின்ற நிலையில், அவரது ஆயிரக்கணக்கன கோடி ரூபாய் மதிப்பிலான மர்ம மலை பங்களா ஒன்று கொள்ளை அடிக்கப்பட்டதாக புகார் வந்து, அது சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட...

அதில் தொடர்புடையவர்களாக கருதப்படும் அந்த முன்னால் முதல்வரின் கார் டிரைவர், பங்களா காவலாளி உள்ளிட்ட ஐந்து நபர்கள் மர்மமான முறையில் திடீரென்று அடுத்தடுத்து இறந்து போக அல்லது கொல்லப்பட....

அந்த வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கின்ற நிலையில்.... அதுவும் கூட அரசின் அக்கறையின்மையால், கிட்டத்தட்ட நத்தை வேகத்தில் ஊர்ந்து கொண்டிருக்க...

இப்பொழுது இந்தியாவில் பல்வேறு மிகப்பெரிய ஊழல்களை வெளிக்கொணர்ந்து தண்டனை பெற்றுத் தந்த ஒரு இணையதள பத்திரிக்கையின் முன்னால் ஆசிரியர்...

இந்த சம்பவங்களை புலன் விசாரணை செய்து, இந்த கொலைகளுக்கும் தமிழக முதல்வருக்கும் தொடர்பிருப்பதாக இந்திய தலைநகர் டெல்லியில் பேட்டி கொடுக்க....

இன்றைக்கு தமிழக ஊடகங்கள் அலறி தீர்த்திருக்க வேண்டாமா?! ஈட்டி முனைகளாக, வேல் முனைகளாக, கத்தி முனைகளாக தங்கள் மைக்குகளை ஆட்சியாளர்கள் முகத்துக்கு நேரே நீட்டி கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்து... மக்கள் மன்றத்தில் உண்மைகளை போட்டு உடைத்திருக்க வேண்டாமா?!

இந்த குற்றச்சாட்டினை ஆதாரத்தோடு வெளியிட்டதும் ஒரு பத்திரிக்கயாளர் தானே?! அதிலும் இதேப் போன்று பல்வேறு புலன் விசாரணைகளிலும் வெற்றிகண்டவர் தானே?!

மேலும் ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடகத்தின் பணியே ஆட்சியாளர்கள் செய்கின்ற ஒவ்வொரு சிறு தவறுக்கும் எதிராக களமாடுவது தானே?!

அப்படியிருக்க, அந்த நான்காம் தூண் தமிழகத்தில் செல்லரித்துப் போய், அதாவது ஆட்சியாளர்கள் போடும் பிச்சைகளுக்கும் இன்னபிற வசதிகளுக்கும் வாய் பிளந்து மல்லாந்து கிடப்பது மிகக் கேவலம்..!

அப்படி மயங்கி மல்லாக்கபடுத்திருக்கும் அந்த கேடுகெட்ட நான்காம் தூண் அப்படியே கிடந்தால் கூட... அதாவது இந்த மாதிரி கேடுகெட்ட செயல் நடந்ததே தெரியாதது போல மானத்தை விட்டு மௌனமாக நின்றால் கூட, சரி பிச்சையெடுத்த அயோக்கியன் இபடித்தான் இருப்பான் என்று கூட மக்கள் கடந்து சென்றிருப்பார்கள்.....

ஆனால் இன்றைக்கு ஒரு ஊடகம் ஆட்சியாளருக்கு அதாவது முதல்வருக்கு எதிராக யார் சதி செய்கின்றார்கள் என்று விவாதம் வைப்பதெல்லாம் வேற லெவல் கேடுகெட்டத்தனம்..!


Wednesday, January 9, 2019

மோடி கடேசியா பெத்து போட்ட பிள்ளை - ரிஸர்வேஷன்..!


மோடி கடேசியா பெத்து போட்டிருக்கும் இடஒதுக்கீட்டு பிரச்சினையை பார்ப்போம்...!

மத்ததை எல்லாம் விட்டுடுங்க... அவர் என்ன சொல்றாருன்னு மட்டும் பாருங்க....

“பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு”
பத்து பர்செண்ட் செண்ட்ரல் கவர்ன்மெண்ட் ஜாப்ல ரிசர்வேஷனாம்...!
ஓக்கே....

அது என்னாங்கானும்.... பொருளாதாரத்தில் பின் தங்கிய..... #முன்னேறிய வகுப்பு....?!

பொருளாதாரத்துல தான் பின் தங்கிட்டான்.... அதாவது பின் தங்கிட்டான்னா,

பிச்ச காசு எழுவத்தஞ்சாயிரம் கூட மாசத்துக்கு அவனால சம்பாதிக்க முடியல.... முக்கி முக்கி அறுவத்தஞ்சாயிரம் வரைக்கும் தான் அந்த பாவப்பட்டவனால சம்பாதிக்க முடியுது...!

குந்த குச்சின்னு பார்த்தா வெறும் ஆயிரம் சதுர அடில.... என்னாத்த கட்டிட முடியும்?! அட்டாச்சுடு பாத்ரூமோட ரெண்டே ரெண்டு ரூம்பு. ஒரு ஹால், ஒரு கிச்சன், ஒரு போர்ட்டிகோ, ஒரு வராண்டா, பின்னாடி சின்ன புழக்கடை, அத ஒட்டி இன்னோரு பாத்ரூம் டாய்லெட்.... இவ்ளோத்தூண்டு வீடு தான் வச்சிருக்கான்.

முன்னாடி லான், பின்னாடி ஸ்விம்மிங் பூல், வீட்டுக்கு உள்ளாறயே படிவச்ச டியூப்ள்க்ஸ் மாடி, அதுல பெரிய்ய ஹால், பால்கனி, அல்ட்ரா மாடர்ன் ரூம்.... பார் கேபின்... இத்தியாதியெல்லாம் வச்சி அவனால வீடு கட்ட முடியல பாவம்..!

சோத்துக்கு என்ன பண்றான்?!

கிராமத்துல பிசாத்து அஞ்சு ஏக்கரா நிலம் மட்டும் தான் சார் இருக்கு. குத்தகைக் காரன் ரெண்டு போகம் போடுறான், உளுந்து பயறு தெளிக்கிறான்.

ஒரு போகத்தை அவனே வச்சிக்கிட்டு ஒரே ஒரு போகத்துல விளையற 150 மூட்டை நெல்லை தான் குடுக்குறான். அதை அரைச்சா வெறும் 75 மூட்டை தான் வருது..! அதுல இவன் சாப்பாட்டுக்கு வச்சிக்கிட்டது போவ மீதிய வித்தா... வருஷத்துக்கு பிச்ச காசு ஒரு லட்சத்தை தான் எஃப்டில போட முடியுது...!

இப்ப சொல்லுங்க சார்.... இந்த பாவப்பட்ட, பொருளாதாரத்தில் மேற்படி கேவலமாக பின் தங்கியுள்ள... #முன்னேறிய தோழனுக்கு மத்திய அரசு வேலைல இடஒடுக்கீது கொடுத்தா தப்பா சார்...?!


ஆமாம் மோடி சார்.... தப்பு தான்..! முன்னேறிய வகுப்புன்னு நீங்களே சொல்லிட்டு அவனுக்கு இடஒதுக்கீடு தர்றது சட்டப்படி மட்டுமல்ல.... மனசாட்சிப் படியும் குற்றம் தான்..!

இது பற்றி சற்று அறச்சீற்றத்தோடு அடுத்தடுத்து விரிவா பேசுவோம்..!


Tuesday, January 8, 2019

திருவாரூர் தேர்தலைக் கண்டு திமுக அஞ்சுகிறதா?! - ஒரு விரிவான பார்வை


திருவாரூர் இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுக அஞ்சுகிறது....

இது தான் அரசியல் புரியாத அரைவேக்காடுகளின் மண்டையில் ஏற்ற வேண்டிய செய்தியாக, கடந்த மூன்று நாட்களாகவும்..., அடுத்து வரும் மூன்று நாட்களுக்கும் பரப்புரை செய்வதற்கான விஷயமாக....
சங்கிகளுக்கும், சங்கிஸ் அடிமைகளுக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் அசைன்மெண்ட்..!

இந்த அசைன்மெண்ட்டை கொடுத்தது யார்? இதனால் அவர்களுக்கு என்ன லாபம்?!

இந்த இரண்டு கேள்விகளுக்குமான பதிலை இந்த பதிவின் இறுதியில் சொல்கிறேன், நான் கூட சொல்லத்தேவையில்லை, இந்தப் பதிவை கவனமாக வாசித்தால், நீங்களே கூறிவிடுவீர்கள்..!

ஓக்கே.... அதற்கு நாம் இரண்டு செய்திகள் அல்லது பரப்புரைகளுக்கான விளக்கங்களை தந்தாக வேண்டும்.

ஒன்று.... திமுக உண்மையிலேயே திருவாரூர் இடைத்தேர்தலைக் கண்டு அஞ்சுகின்றதா?

இரண்டு... அப்படி அஞ்சவில்லை என்றால், தேர்தலை தள்ளி வைக்கச் சொல்லி, ஏன் தேர்தல் அதிகாரி கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் வலியுறுத்த வேண்டும்?!

முதலில் ஒன்றாம் கேள்விக்கு வருவோம்....

திருவாரூர் இடைத்தேர்தலைக் கண்டு திமுக அஞ்சுகிறதா?!

இந்தக் கேள்விக்கு பதில் சொல்வதை விட, இதற்கு பதிலாக.... இந்தக் கேள்வியைக் கேட்பவர்களிடம் அல்லது கேட்கச் சொன்னவர்களிடமே நாம் ஒரு கேள்வியை முன் வைப்போம்..!

திருவாரூர் தேர்தலைக் கண்டு திமுக ஏன் அச்சப்பட வேண்டும்? அதற்கான காரணங்களை உங்களால் பட்டியலிட முடியுமா என்று அழுத்தம் திருத்தமாகக் கேட்டால் அவர்கள் பதறி விடுவார்கள்.

ஆனால் நாமே இங்கு அதற்கான பதிலை கண்டுபிடிப்போம். திமுக அங்கே களம் காண அஞ்சுவதற்கு.....

1. ஏற்கனவே அந்த தொகுதி அதிமுக வசம் இருக்கின்றதா?

பதில் : இல்லை அது திமுக வசம் தான் இருக்கின்றது. அதிலுல் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் (68336) அதன் மறைந்த தலைவர் கலைஞரால் வென்றெடுக்கப்பட்ட தொகுதி.

2. சரி... பலம் மிக்க திமுக தலைவரான கலைஞர் நின்றதால் வென்றிருக்கலாம். ஆனால் அது பாரம்பரியமாக திமுகவுக்கு எதிரான (உதாரணத்திற்உ ஆர்.கே.நகர் போன்று) அல்லது அதிமுகவுக்கு கோட்டை போன்ற தொகுதியாகக் கூட இருக்கலாம் அல்லவா?

பதில் : நிச்சயம் இல்லை. சுதந்திர இந்தியாவில் நடந்த ஒரே ஒரு தேர்தலில் கூட அதிமுகவோ அல்லது அதிமுக ஆதரவு பெற்ற கூட்டணிக் கட்சியோ கூட அங்கு வென்றதே இல்லை. இன்னும் சொல்லப் போனால், ராஜீவ் கொலையை திமுக மீது சுமத்தி 1991இல் ஜெயலலிதா தமிழகம் முழுவதும் வென்ற போது கூட திருவாரூரில் திமுக கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட் தான் வென்றது. அப்பொழுது கூட திருவாரூர் மக்கள் அதிமுக பக்கம் சாயவில்லை.

3. ஓக்கே... அங்கே கம்யூனிஸ்ட்டுகளுக்கு கொஞ்சம் பலம் இருக்கின்றது என்று சொல்கின்றார்கள். அவர்கள் அதிமுகவுக்கு ஆதரவளிக்கின்றார்களா???

பதில் : கடந்த இரண்டு தேர்தல்களிலேயும் (2011 மற்றும் 2016) கம்யூனிஸ்ட்டுகள் திமுக கூட்டணியில் இல்லாமல், திமுகவுக்கு எதிராக மிகப் பலமாக பிரச்சாரத்தை மேற்கொண்ட நிலையிலும் திமுக தலைவர் கலைஞர் ஐம்பதாயிரம் வாக்குகளுக்கு மேலான வித்தியாசத்தில் தான் இரண்டு தேர்தல்களிலுமே வென்றுள்ளார். ஆனால் இன்றைக்கு கம்யூனிஸ்ட்டுகள் திமுகவுக்கு அத்தொகுதியில் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து களமிறங்கியும் விட்டார்கள்.

4. ஓக்கே நீங்க சொல்றது எல்லாம் சரி தான், ஆனால் கடந்த தேர்தல் வரை நிலைமை இப்படி இருக்கலாம் ஆனால் இன்றைய நிலையில் அதிமுகவோ அல்லது வேறு கட்சிகளோ கூட அங்கு பலம் பெற்றிருக்கலாம் அல்லது திமுக தனது பலத்தை இழந்திருக்கலாம் தானே?!

பதில் : இது வேடிக்கையான கேள்வி என்பதை விட, குயுனித்தியான கேள்வி என்றே சொல்லலாம். எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சி தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களின் எதிர்ப்பையும் மிகப் பலமாக சம்பாதித்து மிகக் கேவலமாக ஆட்சி செய்து வரும் நிலையில்..., இந்த தொகுதில் இன்னும் கூடுதல் எதிர்ப்பு நிலையாக கஜா புயல் நிவாரணத்தில் எடப்பாடி அரசு காட்டிக் கொண்டிருக்கும் அலட்சியமும் அயோக்கியத் தனமும், அத் தொகுதி மக்களை அதிமுகவுக்கு எதிராக முன்னெப்பொழுதையும் விட மிகப் பலமாக கோபம் கொள்ளச் செய்துள்ளது.

அதே சமயம், திருவாரூர் மக்கள் கனவிலும் எதிர்பார்க்க முடியாத தனி மாவட்டம், அரசு மருத்துவக் கல்லூரி, மத்திய பல்கலைக் கழகம், உள்ளிட்ட... புத்தகம் போடும் அளவிற்கான எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை திமுக அத் தொகுதியில் நிறைவேற்றியிருக்கின்றது.

இன்னும் கூடுதலாக... கம்யூனிஸ்ட்டுகள், விடுதலை சிறுத்தைகள், மதிமுக போன்று கடந்த தேர்தல்களில் திமுகவுக்கு எதிரணியில் இருந்த கட்சிகள் இப்பொழுது திமுகவுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து களமிறங்கியும் விட்டனர்.

மேலும் அதிமுக இரண்டாக உடைந்து டிடிவி தலைமையில் இன்னொரு அணியும் அங்கே களம் கண்டு அதிமுகவின் பலத்தை பாதியாக குறைத்துள்ளது.

ஆக திமுக முன்னெப்பொழுதையும் விட பலம் பெற்றுள்ளது.... அதே சமயம் அதிமுக பலவீனப்பட்டுப் போய் நிற்கின்றது..!

5. சரி வேட்பாளர் தேர்வில் திமுக கோட்டை விட்டுவிட்டதோ?

பதில் : தலைவர் கலைஞர் இரண்டு முறை அரை லட்சம் வாக்குகளுக்கு அதிகமாக வெல்ல களம் அமைத்துக் கொடுத்து களப் போராளியாக வலம் வந்த..., கலைஞரால் அதற்காக பாராட்டப்பட்ட மாவட்ட செயலாளர் தான் திமுகவின் வேட்பாளர். அறிவித்த அடுத்தநாளே களத்தில் இறங்கி பலமாக பிரச்சாரமும் செய்ய ஆரம்பித்து விட்டார். மக்கள் அவருக்கே 50, 100 என்று பணம் கொடுத்து தங்கள் அன்பை வெளிப்படுத்தியதையும் ஊடகங்கள் பார்த்துக்கொண்டு தான் இருந்தன..!

உண்மை தான்..... நீங்கள் சொல்கின்ற பதில்கள், காரணங்கள் அல்லது விளக்கங்கள் அனைத்துமே நிரூபிக்கப்பட்ட உண்மைகள் தான்..!

ஆனாலும் தேர்தலை தள்ளி வைக்கச் சொல்லி திமுக ஏன் அனைத்துக் கட்சி கூட்டத்தில் கோரிக்கை வைத்தது?!

சார்... இந்த கேள்விக்கு பதில் சொல்வது எனக்கே கூட சற்று கவலையாகத்தான் இருக்கின்றது. ஆனாலும் வேறு வழியில்லை, சங்கிகளின் அவதூறுகளுக்கு அப்பாவி மக்கள் பலியாகிவிடக் கூடாதே என்பதற்காக இதை வெளிப்படையாக சொல்லித்தான் ஆக வேண்டியுள்ளது.

சமீப காலமாக தமிழகத்தில் இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சி தான் வெற்றி பெறும் என்ற நிலை தான் உள்ளது. சங்கரன்கோவில், திருப்பரங்குன்றம், தஞ்சாவூர் இடைத்தேர்தல்களில் ஆளும் அதிமுக எப்படி வென்றது என்பது அனைவருக்குமே தெரியும்.

பணம்... பணம்... பணம் மட்டுமே..! ஓட்டுக்கு பணம் என்று மக்களை மயக்கி.... அவர்கள் மயங்குகின்ற அளவிற்கு ஒவ்வொரு தேர்தலிலும் உயர்த்திக் கொடுத்து.....

இது ஒரு கட்டத்தில் பணம் கொடுத்தால், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்றில்லை.... ஒரு சுயேட்சைக்கு கூட.... வாக்களிக்கும் மனநிலைக்கு வாக்காளர்கள் வந்துள்ளதை யாருமே மறுக்க முடியாது..!

தேர்தல் ஆணையம், அதிகாரிகள் எல்லாம் என்ன செய்துகொண்டுள்ளார்கள் என்றே தெரியாத அளவிற்கு...... திருவாரூர் தேர்தலை அறிவித்து.... பிறகு காரணம் கேட்டு திடீரென தள்ளி வைத்ததில் இருந்தே, தெரியவில்லையா? டோக்கன் கொடுத்து பணம் கொடுத்ததும், அம்மக்கள் இன்னமும் டிவிக்களில் பேட்டி கொடுப்பதும் எல்லாம் தேர்தல் ஆணையத்திற்கு தெரியாதா?!

அதேப் போன்று இந்த தேர்தலிலும் நம்ப முடியாத பெரும் பணம் ஆட்சியாளர்களாலோ அல்லது ஆர். கே. நகரில் பால் குடித்த டிடிவி பூனையாலோ இங்கேயும் நிச்சயம் அரங்கேற்றப்படும்..!

என்னய்யா இது.... நீங்க தான் மேலே பட்டியல் போட்டு திமுக அங்கே வெல்வதற்கான காரணங்களை அடுக்கினீர்களே?!

அங்கே பெரிய வாக்கு வங்கி, கூட்டணி பலம், பாரம்பரிய திமுக தொகுதி, அம்மக்கள் நம்பவே முடியாத நலத்திட்டங்கள், சூப்பர் வேட்பாளர்.... லொட்டு லொசுக்குன்னெல்லாம் சொல்லி விட்டு, இப்போ அப்படியான மக்கள் பணத்திற்கு மயங்கி திமுகவுக்கு எதிராக வாக்களிப்பார்களா?!

சார்... நீங்க சீரியஸா இந்தக் கேள்வியைக் கேட்டாலும் சரி.. நக்கலாக கேட்டாலும் சரி. உண்மை இது தான்.

நேர்மை, நியாயம், கொள்கை இத்தியாதிகள் அனைத்திற்குமே ஒரு கொதிநிலை அதாவது பாயிலிங் பாய்ண்ட் இருக்கின்றது. தன்னுடைய குடும்ப அத்தியாவசிய தேவைக்கு கூட ரெண்டாயிரத்திலிருந்து ஐயாயிரம் வரை அடகு கடையில் நகையை அடகு வைத்து நிறைவேற்றும் நிலையிலுள்ள மக்களுக்கு, 5 ஓட்டு உள்ள குடும்பத்திற்கு ஐம்பதாயிரம் கிடைக்கின்ற போது, கிட்டத்தட்ட தனது ஒட்டுமொத்த கடனே அடைந்து போகும் என்ற நிலை வரும் போது எல்லாமே மாறித்தான் சார் போகும்..!

வங்கிக்கு பணம் கட்டமுடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயியின் கடன் எவ்வளவு இருக்கும் என்று நினைக்கின்றீர்கள்? வெறும் ஐம்பதாயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரை தான் சார் இருக்கும்..!

மேலும் இது இடைத்தேர்தல் தானே? இதில் என்ன ஆட்சியா மாறிவிடப் போகிறது?! பொதுத் தேர்தலில் நாம் விரும்பும் கட்சிக்கு வாக்களித்துக்கொள்ளலாம்... என்ற மனநிலைக்கு மக்கள் இயல்பாகவே தள்ளப்பட்டு விடுகின்றனர்.

இதில் இன்னும் கூடுதலாக அத்தொகுதி மக்கள் கஜா புயலால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றார்கள். இதுவரையிலும் அரசால் அவர்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. இப்பொழுது மத்திய அரசு பணத்தை ரிலீஸ் செய்து, அதை மாநில அரசு விநியோகிக்கலாம் என்று தேர்தல் ஆணையமும் சொல்லி விட்டது. இதுவும் கூட சந்தேகத்திற்கு உரிய விஷயம் தான்.

இந்த நிவாரண தொகையை வைத்தே பல்வேறு வகையில் ஆளுங்கட்சியினர் மக்களை மடக்க ஏகப்பட்ட வழிகள் இருப்பது அனைவருக்குமே தெரியும்.

இந்த நேரத்தில் நிவாரண தொகையை தேர்தலுக்குப் பிறகு கொடுக்கலாம் என்று திமுகவோ, கம்யூனிஸ்ட்டுகளோ சொல்ல முடியுமா? தாங்கள் தோற்றாலும் பரவாயில்லை நிவாரணத்தை மக்களுக்கு உடனே வழங்குங்கள் என்று இரண்டு கட்சிகளுமே பகிரங்கமாக அறிவித்து விட்டன..!

இந்த நிலையில் வரும் இடைத்தேர்தலில் வெற்றி பெற திமுக மிகக் கடுமையாக போராட வேண்டியிருக்கும். வெற்றிபெரும் நிலையில் வாக்கு வித்தியாசம் சற்று குறைவாகத்தான் இருக்கும்..!

ஆனால் இதைத்தான்.... இந்த நிலையைத் தான் பாஜக ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.

தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக மூன்றாவது அணி மட்டுமே பேசப்பட்டு வந்த நிலையில், திமுக தலைவர் தளபதியார் அவர்கள் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து....

அவர் அப்படி அறிவித்ததற்கு பின்னால் தேசிய ஊடகங்களில் வருகின்ற கருத்துக் கணிப்புக்கள் எல்லாம்... குறிப்பாக பாஜக ஆதரவு ஊடகங்கள் கூட திமுக கூட்டணி இங்கே நாற்பது தொகுதிகளையும் வெல்லும் என்றும், அடுத்த முதல்வராக தளபதியார் வருவதற்கு மக்கள் ஆதரவு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகின்றது என்று புள்ளி விவரங்களோடு (43%) அலசுகின்ற நிலையில்...

பாராளுமன்ற தேர்தல் நடப்பதற்கு முன்பே காங்கிரஸுக்கு 40 சீட்டுகள் கன்ஃபர்ம் ஆகியுள்ள நிலையில்.... தேசிய அளவில் காங்கிரஸை நோக்கி முக்கிய பிராந்திய கட்சிகள் நகருகின்ற நிலையில்.... பாஜகவின் கூட்டாளிகள் தங்கள் பங்கீட்டினை உயர்த்தி அடம்பிடித்து வாங்குகின்ற நிலையில்....

திருவாரூரில் இடைத்தேர்தல் நடந்து, கடந்த தேர்தலில் வாங்கிய வாக்கு வித்தியாசமான 68 ஆயிரம் வாக்குகளில் ஒரு சில ஆயிரங்கள் குறைந்தாலும்....
அதை திமுகவின் வீழ்ச்சியாக ஊடகங்கள் மூலம் பாஜக முன்னெடுக்கும்..!

இந்த நுண்ணரசியலை புரிந்து கொண்டு தான், திமுக திருவாரூர் மக்களுக்கு உரிய நேரத்தில் கஜா புயர் நிவாரண நிதியாவது கிடைக்கட்டும் என்று திருவாரூர் இடைத்தேர்தலை பாராளுமன்ற தேர்தலோடோ அல்லது மற்ற 19 தொகுதிகளுடன் சேர்த்தோ நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை அனைத்துக் கட்சி கூட்டத்தில் வைத்தது..!

திருவாரூர் இடைத்தேர்தலைக் கண்டு திமுக அஞ்சுகின்றதா? என்ற கேள்வியைக் கேட்டு பரப்புரை செய்யும் அசைன்மெண்ட்டைக் கொடுத்தது யார்? அதனால் அவர்களுக்கு என்ன லாபம்? என்று இந்த பதிவில் ஆரம்பத்தில் கேட்டிருந்தோமே...
அதற்கான விடை இப்பொழுது உங்களுக்கு புரிகின்றதா தோழர்களே...?!

இந்தப் பதிவு இத்துடன் முற்றுப் பெற்றாலும்.... இதைப் படித்து சங்கிகள் இன்னுமொரு வினாவை எழுப்புவார்கள், அதற்கும் பதில் சொல்லி விடுகின்றேன்.

ஏன்யா... நீங்க இவ்ளோ பேசுறீங்களே... ஓட்டுக்கு பணம் கொடுக்கும் திருமங்கலம் ஃபார்முலாவை கொண்டு வந்ததே நீங்க தானேய்யா? என்பது தான் அந்தக் கேள்வி!!

திருமங்கலம் இடைத்தேர்தலுக்கு முன்பாக 2001 -06 ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற...ஆண்டிப்படி, சைதாப்பேட்டை, வாணியம்பாடி, அச்சிரப்பாக்கம், கும்மிடிப்பூண்டி, காஞ்சீபுரம் மற்றும் சாத்தான்குளம் இடைத்தேர்தல்களில் ஜெயலலிதா - சசிகலா டீம் மிகப் பெரிய பணத்தை இறைத்துத் தான் வென்றது என்பதை திமுகவினர் கதறிக் கதறிச் சொன்னாலும் அதெல்லாம் ஊடகங்கள் காதுகளில் விழவேயில்லை..!

அதேப் போன்று அதன் பிறகு திருமங்கலம் ஃபார்முலாவில் திமுக தலைமைக்கு என்றைக்கு உடன்பாடில்லை என்றாலும், அந்த அதிரடிகளுக்கு பெயர் பெற்றவர்கள் இன்றைக்கு கழகத்தில் இல்லை என்பதும், திமுகழக தலைவர் தளபதியார் இதுபோன்ற ஜனநாயக விரோத செயல்களுக்கு என்றுமே ஆதரவாளர் கிடையாது என்பதை ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் மூலமே நேர்மையான பொதுமக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.!

எம் எல் எக்களை விலை பேசி ஆட்சி மாற்றம் செய்வதையே விரும்பாத தளபதியாரா, மக்களுக்கு பணம் கொடுத்து வாக்குகளையும் வெற்றியையும் விலை பேசுவார்?!

இன்றைக்கு கூட அந்த ஃபார்முலாவை பயன்படுத்தி திருவாரூரில் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெல்ல முடியும். இரண்டு பேரிடமோ, ஐந்து பேரிடமோ கையைக் காட்டி வெற்றியோடு வாருங்கள் என்று அவர் கண்ணசைத்தால் போதும்... ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திருவாரூரில் திமுக வெல்லும்..!

ஆனால் நாளை ஆட்சிக்கு வரும் போது அவர் தான் விரும்பும் நேர்மையான ஆட்சியை, அதாவது யாருக்காகவும், எதற்காகவும் சமரசம் செய்து கொள்ளாத உண்மையான மக்கள்நல ஆட்சியை மக்களுக்குத் தரவேண்டும், மாநில உரிமைகளை அதட்டிப் பேசி மத்திய அரசிடம் வாங்கி தமிழகத்தை வளமாக்கிட வேண்டும் என்று விரும்புகின்றார்.

அதானல் அவர் பொதுத்தேர்தல் வரை காத்திருந்து மக்களிடம் பேசி மக்கள் வாக்குகளைப் பெற்று நல்ல மக்களாட்சியைத் தரவேண்டும் என்று விரும்புகின்றார்.

இதை பொது மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதி இந்த நீண்ட பதிவின் விருப்பம்..!