Thursday, January 10, 2013

விஸ்வரூபம் - திரை விமர்சனம்

எண்ணித் துணிய வேண்டும் ஒரு காரியத்தில்....

இறங்கிய பின்பு அது பத்தி யோசிச்சி பின் வாங்குறது ரொம்ப கேவலம்!!!

இரண்டாயிரம் வருஷத்துக்கு முந்தியே இத இவ்ளோ தெளிவா திருவள்ளுவர் சொன்னதே நம்ம கமல்ஹாசனுக்குத் தானோ என்று தான் தோன்றுகிறது!

அவர் ஒரு படத்தை எடுக்கறார், 90 கோடி பணம் போட்டிருக்கேன் என்கிறார். படம் அற்புதமாக வந்திருப்பதாக சொல்கிறார்.  இந்த இடத்துல அப்டியே கட் பண்ணி கீழ வாங்க.......

சினிமாத்துறை என்பது ஒரு தொழிற்களம். அதில் சினிமா தயாரிப்பு, விநியோகம், திரையிடுதல் என்ற முக்கிய மூன்று பிரிவுகள் ஒன்றுக்குள் ஒன்று இழையோடி பின்னிப் பிணைந்திருப்பவை. இதில் ஒரு படம் வந்து அது தோல்வி என்றாலும் அதில் பாதிக்கப்படாமல் பல சந்தர்ப்பங்களில் தயாரிப்பு தரப்பு தப்பித்துக் கொள்ளும் வாய்ப்புகள் இருந்தாலும், விநியோகம் மற்றும் திரையிடல் ஆகிய இரு தரப்புக்களும் பெரும்பாலும் அந்த நட்டத்தை பங்கிட்டுக் கொண்டு கையை சுட்டுக்கொள்ளும் நிலைமை தான் பரிதாபத்திற்குறியது.

இதில் சினிமா தயாரிப்பு என்ற பிரிவில் நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, இசை, இத்தியாதிகள் என்று கிட்டத்தட்ட ஒரு சதம் அளவிற்கு வெவ்வேறு துறைகளின் பங்களிப்பு இருந்து கொண்டிருக்கிறது. அத்துனை துறைகளுக்கும் வலுவான சங்கங்கள் தனித்தனியாகவும் இருக்கின்றன. அதைத் தவிர்த்து ஒட்டுமொத்த துறைகளுக்கென்றும் தனியாக ஒரே அமைப்புச் சங்கமும் இருக்கிறது.

இந்தச் சங்கங்களின் மூலம் அந்தத்த துறைகளைச் சார்ந்த தொழிலாளர்களுக்கு தனித் திறன், உழைப்பு விகிதம் மற்றும் நுணுக்கங்களுக்கு ஏற்ப நியாயமான சம்பள விகிதம் நிர்ணயிக்கப்பட்டு,  அவைகள் யாவும் பழுதில்லாமல் அவர்களுக்கு வந்து சேர வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.

அதனால் இந்த தயாரிப்பு பிரிவில் இயங்கும் துறைகள் சார்ந்த தொழிலாளர்களுக்கு, சம்பந்தப்பட்ட படத்தின் வெற்றி தோல்வி என்பது எந்த விதத்திலும் பொருளாதார ரீதியாக எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பது தான் உண்மை. அது போகட்டும்!

ஆனால் இந்த தயாரிப்பு பிரிவில் வரும் நடிப்புத் துறையில், பல நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் சம்பந்தப்பட்டிருந்தாலும்,  அதிக பட்ஜெட் படங்களில் ஒரே ஒரு நடிகர் சமபந்தப்பட்ட செலவுகள் என்பது அந்த படத்தின் பட்ஜெட்டில் பாதியைச் சில சமயங்களில் கடந்து விடுவது கண்கூடு.

இங்கே நான் அந்த நடிகரின் சம்பளம் என்று குறிப்பிடவில்லை. அவர் சம்பந்தப்பட்ட செலவுகள் என்றே குறிப்பிடுகின்றேன். காரணம், அவருடைய சம்பளம் மட்டுமல்லாது, அவர் சுட்டிக்காட்டும் நடிகையைத்தான் கதாநாயகியாக புக் செய்யும் நிர்ப்பந்தம் ஏற்படுவதால், சம்பந்தப்பட்ட நடிகையின் சம்பளம் தயாரிப்பு செலவுகள் பட்ஜெட்டை மீறி போய்விடும். அது தவிர அவர் சொல்லும் வெளிநாடுகளில் பாடல் காட்சிகள், அவர் சம்பந்தப்பட்ட மற்ற (கேரவன் வசதி போன்ற) இன்னபிற செலவினங்கள், அவருக்காக காத்திருக்கும் நாட்களுக்கான நஷ்டங்கள்... என்று, அந்த பெரிய நடிகருக்கான செலவுகள் படத்தின் மொத்த பட்ஜெட்டில் ஒரு பெரும் பகுதியை ஆக்கிரமித்துக் கொள்கிறது.

சரி, ஏன் அவருக்கு அவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்று ஒரு கேள்வி இயல்பாக எழுந்தாலும், அந்த நடிகருக்கென ஒரு குறிப்பிட்ட ரசிகர் வட்டம் இருக்கிறது, அதனால் அந்தப் படம் மினிமம் கியாரண்டி நாட்கள் திரையில் ஓடுவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதாலேயே தான் அவர் சம்பந்தப்பட்ட செலவினங்களுக்கு தயாரிப்பு தரப்பு மண்டையை ஆட்ட வேண்டியிருக்கிறது.

ஆனால் படம் வெளி வந்தவுடன், சம்பந்தப்பட்ட நடிகர் குடும்பத்துடன் கிளம்பி வெளி நாட்டுச் சுற்றுலாவுக்குச் சென்றுவிடுவார்! படத்தின் வெற்றி தோல்வி பற்றி அவருக்குக் கவலை இல்லை. இதற்குத் தான் கடிவாளம் போடும்படியாக படம் மினிமம் கியாரண்டி அளவிற்கு ஓடவில்லை என்றால், அந்த நடிகரிடமே பணத்தை திரும்ப கேட்கும் உத்தியை சமீப காலமாக கையாண்டு கொண்டிருக்கின்றார்கள்......

அப்டியே இந்த இடத்தில் கட் பண்ணி மேலே உள்ள கமல்ஹாசன் மேட்டருக்கு இப்ப நாம போவோமா?

கமல் எப்பவுமே இந்த மாதிரியான டிபிகல் நடிகர் தான். அன்பே சிவம், மன்மதன் அம்பு என்றால் நல்ல பிள்ளையாக தன் அடுத்த வேளையைக் கவனிக்க போய்விடுவதும், மருதநாயகம், மர்மயோகி என்று அவ்வப்பொழுது கட்டிங், குவாட்டர், ஆஃப்ன்னு தடுக்கி விழுவதும்....   ஆனால் தேவர் மகன், விருமாண்டி என்றால் அலப்பரை பண்ணுவதுமாக இருப்பது தமிழ் சினிமா ரசிகர்கள் காணாத ஒன்று அல்ல!

அந்த வரிசயில் இப்பொழுது லேட்டஸ்ட் அலப்பரை தான் விஸ்வரூபம். தானே கைக்காசு போட்டு எடுத்திருப்பதால், எப்படியாவது நல்ல விற்றுமுதல் பார்த்து விட வேண்டும் என்று துடிக்கிறார். அதில் தப்பில்லை. நியாயம் தான். அப்படி இந்தப் படத்தில் நல்ல லாபம் வந்தால், அவரை வைத்து நட்டமடைந்த பழைய தயாரிப்பாளர்களில் தரவரிசை அடிப்படையில் பத்து பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பிரித்துக் கொடுத்து விடுங்கள் என்றும் யாரும் கேட்கவில்லை.

இப்படி இருக்கும் சூழ்நிலையில், இது வரை தாயும் பிள்ளையுமாக இருந்த, நட்டம் என்று வந்தால் பல சந்தர்ப்பங்களில் தயாரிப்பு தரப்பை காப்பாற்றி விட்டு தாங்கள் மட்டுமே விஷத்தை உண்ட விநியோகம் மற்றும் திரையிடல் தரப்பினரை நட்டாற்றில் விட்டு விட்டு, இந்தப் படத்தின் லாபம் முழுமையும் தனக்கே, அதுவும் நேரிடையாகவே வந்து விட வேண்டும் அதுவும் ஒரே வார காலத்திற்குள் அனைத்தும் நடந்து முடிந்து விட வேண்டும் என்று தொலைத் தொடர்பில் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி சாதிக்க வேண்டும் என்ற முனைப்போடு களம் இறங்கினார்.

ஆனால் கமல் சொல்வது போல, அவரது பொருளை எப்படி சந்தைப்படுத்த வேண்டும் என்ற உரிமை அவரிடம் மட்டுமே உள்ளது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. அனைவரும் அதை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். அதே சமயம் அவர் தனது பழைய சந்தையிலும் அதை விற்பனைக்கு கொண்டு வருவேன் என்கிற போது தான் பிரச்சினை ஆரம்பமாகிறது.

இதைப் புரிந்துகொள்ள நல்ல உதாரணம் சொல்லலாம். கோல்கேட் கம்பெனி ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஸ்டாக்கிஸ்ட்டை நியமனம் செய்து அந்த ஊர்களில் உள்ள கடைகளுக்கு விநியோகம் செய்யச் சொல்கிறது. அந்த ஸ்டாக்கிஸ்ட்டும் கடை கடையாக ஏறி தினம் வசூல் என்ற அடிப்படையில் கடனுக்கு பொருட்களைப் போட்டு விற்பனை செய்கிறார். கடைக்காரர்களும் ஷோகேஸ்களில் அழகாக அடுக்கி மக்களுக்கு அதை விற்பனை செய்கின்றார்கள்.

இப்போ, அந்த கோல்கேட் கம்பெனி ஊருக்கு ஐந்து பேரை களம் இறக்கி வீடு வீடாகச் சென்று கோல்கேட்டை அதாவது தனது தயாரிப்பை நேரடியாக விற்பனை செய்கிறது என்று வைத்துக் கொள்வோம்......

இதைத் தான் இப்பொழுது விஸ்வரூபம் படத்தில் கமல் செய்ய முற்பட்டிருக்கின்றார். சரி அதில் தவறில்லை தனது பொருளை எப்படி சந்தைப் படுத்த வேண்டும் என்கிற உரிமை அவரிடமே இருக்கிறது என்பது ஒத்துக் கொள்வோம். ஆனால் மக்களிடமும் நேரடியாக விற்பனை செய்வேன், ஸ்டாக்கிஸ்ட்டுகள் மூலமாக கடைகள் வழியாகவும் விற்பனை செய்வேன். ஏனென்றால் அந்த ஐந்து பேரால் எல்லா தரப்பு மக்களையும் நேரடியாக சென்று சந்தித்து விற்பனை செய்ய முடியாது, அதனால் மீதமிருப்போருக்கு பழைய வழக்கப்படியே விற்பனை செய்கிறேன் என்று சொல்கிறார்...!

இங்கு தான் பிரச்சினையே ஆரம்பம் ஆகிறது. உன்னுடைய பொருள் புதிதாக மக்களுக்கு அறிமுகமில்லாமல் இருந்த காலத்திலிருந்தே விற்பனை செய்கின்றோம். அப்பொழுது ஏற்பட்ட நட்டத்தையெல்லாம் நாங்களே சுமந்திருக்கின்றோம், உங்களை மக்களுக்கு யார் என்று தெரியாத போதே வீதி வீதியாகச் உங்கள் சரக்கை தலையில் தூக்கிச் சென்று விற்றவர்கள் நாங்கள். அப்போ போணியாகாததையெல்லாம் நாங்களே நீலகண்டர்களாக இருந்து உங்களை வளர்த்தெடுத்தோம், இப்பொழுது எங்களை மீறி நேராக மக்களை சந்தித்து விற்பதாக சொல்கின்றீர்கள், பரவாயில்லை விற்றுக் கொள்ளுங்கள், ஆனால் பாதி விற்று விட்டு மீதியை எங்களிடம் கொடுத்து விற்கச் சொன்னால் என்ன நியாயம்?

அது முடியாது? முடிந்தால் முழுவதையும் நீங்களே கீழிறங்கி விற்றுக் கொள்ளுங்கள், முடியாவிட்டால்,  முழுமையாக எங்களிடம் கொடுத்து விற்கச் சொல்லுங்கள். ஆனால் உலக்கைப் பிடியை நீங்கள் பிடித்துக் கொண்டு அருவாப் பிடியை எங்களைப் பிடிக்கச் சொன்னால் அதற்கு ஏமாறுகின்ற கேணைகள் நாங்கள் அல்ல.....

இது தான் விநியோக மற்றும் திரையிடல் தரப்பின் வாதம்....!!

இதுவும் சரியாத்தானே இருக்கு? அப்பறம் என்ன கமல் சார், நீங்க பல உலக நாடுகளைச் சுற்றிப் பார்த்து அந்த  சினிமாக்கள் மற்றும் சந்தைப்படுத்துதல் நுணுக்கங்களையெல்லாம் கற்றறிந்து தானே நேரடியாக மக்களிடம் செல்லும் டிடிஹச் முறையை கொண்டு வந்திருப்பீர்கள். அப்படியே செய்யுங்கள், அறிவியல் வளர்ச்சியில் எதையும் யாரும் தடுத்துவிட முடியாது என்ற தத்துவத்தை நாங்களும் ஏற்கிறோம் என்று மக்களும் கமலுக்கு ஆதரவாக கொஞ்சம் கொஞ்சமாக கைதூக்க ஆரம்பித்து விட்டார்கள்.

எல்லாமே சரியாத்தான் போயிட்டிருப்பதாக எல்லோரும் நினைத்தார்கள். ஆயிரம் ரூபாய் கட்டுப்படியாகுமா? அந்த நேரத்தில் கரண்ட் போனால் என்ன செய்வது? என்று பலதையும் அலசி ஆராய்ந்து, பத்து பேர் சேர்ந்து பார்த்தால் லாபம் தான், கரண்ட்டு பிரச்சினைக்கு இன்வெர்ட்டர் பயன்படுத்திக்கலாம் என்றெல்லாம் முடிவெடுத்து டிடிஹச் காரர்களிடம் பணமும் கட்ட ஆரம்பித்து விட்டார்கள்....

கமலும் எல்லா டிடிஹச்சிலும் தோன்றி கால் மணிக்கு ஒரு முறை 1000 ரூபாய் கட்டி படம் பார்க்கச் சொன்னார், முக்கிய நிகழ்ச்சிகளுக்கு தலைகாட்டாத கமல், விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஜூனியருக்கெல்லாம் வந்து மணிக்கணக்கில் உட்கார்ந்து, குழந்தைகளின் பாடல்களை விமர்சனம் செய்து தன் படத்தைப் பார்க்க மக்களிடம் ஆதரவு திரட்டினார்.....

இவ்வளவு தெளிவாக வேலைகள் நடக்கின்றன, கமலும் பெரிய நாணயஸ்த்தர், டிடிஹச் காரர்களும் பெரிய தொழிலதிபர்கள் தவறிழைக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் பல்லாயிரக் கணக்கானோர் படம் பார்க்க பணம் கட்ட ஆரம்பித்து விட்டார்கள், இன்னும் லட்சக்கணக்கானோர் கட்டத் தயாராகி விட்டார்கள்......

இந்த நிலையில் படம் இப்பொழுது சொன்ன தேதியில் சின்னத்திரையில் திரையிடப்படாது என்று அறிவிக்கிறார் கமல். பணம் கட்டியவர்கள் பதபதைத்து கம்பெனிக்காரனிடம் கேட்டால் எப்போ படம் போடுகிறோமோ பார்த்துக் கொள்ளுங்கள், பணமெல்லாம் வாபஸ் கிடையாது என்கிறார்கள்...

என்ன கொடும சார் இது?

உங்களை நம்பித்தானே சார் பணம் கட்டினோம்? முதல் நாள் படம் பார்க்கும் ஆசையில் தானே கட்டினோம்? பொங்கல் விடுமுறையில் ஊருக்குச் சென்று குடும்பத்தோடு சேர்ந்து முதல் நாளே பார்க்கும் ஆசையில் தானே பணம் கட்டினோம்? இப்பொழுது அந்தத் தேதியில் இல்லை, பிறகொரு உங்களுக்குச் சௌகரியமான தேதியில் காட்டப்போவதாக சொல்கின்றீகள்... அதுவும் தியேட்டரில் போட்ட பிறகு தான் சின்னத் திரையில் காட்டப் போவதாகவும் சொல்கின்றீர்கள்...

இது அநியாயம் இல்லையா கமல் சார்? உங்கள் நாணயத்திற்கு இது அழகா?

உங்கள் நிலையைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு பெரிய முதலீட்டில் புதிய முயற்சியில் இறங்கும் போது, கண்ணால் பார்க்க முடியாத இடத்திலிருந்தெல்லாம் பிரச்சினைகள் வரும். அதேப் போல் உங்களுக்கும் வந்திருக்கலாம். ஆனால் உங்களது அந்தப் பிரச்சினையில், சம்பந்தமே இல்லாமல் அப்பாவி ரசிகர்கள் அல்லது பொது மக்களின் பணத்தை அவர்கள் சம்மதமே இல்லாமல் எப்படி நீங்கள் பணயம் வைக்கலாம்?

உங்களுக்கு எதிர் தரப்பிலிருந்து சிக்கல்கள் வந்து அதை சமாளிக்க முடியாமல் போயிருந்தால், உடனடியாக நீங்கள் செய்திருக்க வேண்டிய காரியம் என்ன? உங்கள் புது முயற்சிக்கு கண்ணை மூடிக்கொண்டு கை நீட்டிப் பணம் தந்தவர்களுக்கு அதைத் திருப்பித் தர ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.

அதைச் செய்ய தவறியதோடு மட்டுமல்லாமல், அது பற்றி வாயே திறக்காமல் இன்னமும் உங்களைப் பற்றியே யோசித்து பேசிக்கொண்டிருக்கும் நீங்கள் தமிழ்ச் சமுதாயத்தின் முன்னால் ஒரு குற்றவாளியே!

எண்ணித் துணிந்திருக்க வேண்டும்! துணிந்த பிறகு பின்வாங்கினாலே இழுக்கு என்கிறார் திருவள்ளுவர். ஆனால் நாங்கள் அதைக் கூடச் சொல்லவில்லை, பின்வாங்கும் போது நம்பி பணம் போட்டவர்களை நட்டாற்றில் விட்டு விட்டீர்களே அதைத் தான் குற்றம் என்கிறோம்!!!

உலகநாகயகன் இனி தமிழக மக்கள் மனதில் வில்லனாகவோ, காமெடியனாகவோ தான் வலம் வருவார்!



17 comments:

anbhooo said...

Tamizhgha makkal manasula kamal yepdiyo irundhutu poghatum....ipdi popular ah irukavangha name spoil pandra madhiri paesi... Paesiyae famous aaganumnu nu naenaikira cheap mentality people's patthi neengha yenna naenalkereengho.... Pudikalae na moooditu irukka vaendiyadhanae? Nallla kodukkuraanugha detailsu... Thooooo...

anbhooo said...

Tamizhgha makkal manasula kamal yepdiyo irundhutu poghatum....ipdi popular ah irukavangha name spoil pandra madhiri paesi... Paesiyae famous aaganumnu nu naenaikira cheap mentality people's patthi neengha yenna naenalkereengho.... Pudikalae na moooditu irukka vaendiyadhanae? Nallla kodukkuraanugha detailsu... Thooooo...

கொக்கரக்கோ..!!! said...

ஐயா அன்பூஊ, ஊரான் காசை பொய் சொல்லி வாங்கிட்டு இப்ப வேற மாதிரி பேசறதனால தான் அந்த பிரபலத்தைப் பற்றியெல்லாம் எல்லாரும் பேச வேண்டியிருக்கு. இவரை வச்சு பிரபலம் ஆகனும்ன்னு இங்க எவனுக்கும் தேவையில்லை. இவர் தான் எங்களை மாதிரி மக்களை வைத்து பிரபலம் ஆகி பிறகு அந்த புகழை வைத்து எங்களிடமே ஆட்டையை போட்டுள்ளார். அதனால் தான் பேசவேண்டியிருக்கு.

இப்படி உங்களைப் போன்ற சிலர் கேவலமாக துப்புவதால் தான் அவர் பிம்பம் முழுவதும் எச்சிலாக இருக்கிறது.

Paleo God said...

இது ஒரு நல்ல முயற்சி, கமல் சொதப்பிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும், பல சிறிய பட்ஜெட் படங்களுக்கு எதிர்காலத்தில் இந்த டிடிஎச் முறை வரப்பிரசாதமாக இருக்கும்.

இன்னும் பிரச்சனையாகாமலும், படம் நன்றாகவும் டிடிஎச்சின் முதல் படமாகவும் இருக்கவேண்டும். பார்க்கலாம்.

கொக்கரக்கோ..!!! said...

உண்மை தான் பபாஷா. இந்த முயற்சியையும் யாரும் குறை சொல்லவில்லை. அதில் ஏற்பட்ட பின்னடைவையும் யாரும் எள்ளி நகையாடவில்லை. ஆனால் பொது மக்களின் பணம். அதுவும் கோடிக்கணக்கில் என்கிற போது, அதில் அவர்களுக்கு நட்டம் ஏற்படாதவது கமல் நடவடிக்க எடுத்திருக்க வேண்டும். அதில் தவறியது தான் இங்கு குற்றமாக பார்க்கப்படுகிறது.

கும்மாச்சி said...

நல்ல அலசல், கமல் நல்ல கலைஞர்தான், ஆனால் அடுத்தவன் பணத்தில் ஆட்டையைப் போடுவது ஏற்க முடியாதது.

Senthil Kumaran said...

நீங்கள் படம் பார்க்க பணம் கட்டி இருக்கிறீர்களா என்பது தெரியாது. அப்படி கட்டி இருந்தாலும் உங்களால் கமலை ஒன்றும் செய்து விட முடியாது. சட்டம் நீங்கள் கமலை நம்பி ஏமாந்ததாக கருதாது.

நீங்கள் உங்களுக்கும் உங்கள் DTH சேவை வழங்குபவருக்கும் இருக்கும் ஒப்பந்தத்தின் படி தான் பணம் செலுத்தி இருக்கிறீர்கள். நீங்கள் வழக்கு தொடர்ந்தாலும் உங்கள் DTH சேவை வழங்கியின் மீது தான் வழக்கு தொடர முடியும். அதிலும் ஆர்பிட்ரேஷன் க்ளாஸ் இருந்தால் அது அவர்களை பாதுகாக்கும்.

DTH சேவை வழங்கிகளுக்கு அதிக நஷ்டம் வந்தால் அவர்கள் கமல் மீது வழக்கு தொடர கூடும்.

ஒரு வேளை நீங்கள் பணம் கட்டி இருந்தால், நீங்களும் பணம் கட்டும் முன்பு சிறிது எண்ணி துணிந்து இருக்கலாம் என்பதே எனது பதில்.

கொக்கரக்கோ..!!! said...

வணக்கம் செந்தில் குமரன், இப்போ பிரச்சினை கமலை சட்ட ரீதியாக தண்டிக்க முடியுமா? முடியாதா? என்பது அல்ல. அவர் மேல் வைத்த நம்பிக்கையில் தான் லட்சக்கணக்கானவர்கள் பணம் கட்டியிருக்கின்றார்கள். அவர்கள் டிடிஹச் காரனை நம்பி கட்டவில்லை.

இதில் அம்மக்களுக்கு ஏற்படும் நட்டம் கமல் காரணம் சொல்லக்கூடியதாகத் தான் தார்மீக ரீதியில் அமையும். பணம் திரும்ப கிடைக்கா விட்டாலோ, சொன்ன தேதியிலிருந்து மாறி படம் போட்டாலோ, அல்லது தியேட்டரில் வந்த பிறகு போட்டாலோ ஒரு பிச்சைக் காரனுக்கு போட்ட காசுன்னு நினைச்சுக்கிட்டு தான் மக்கள் போவார்கள். ஆனால் அது கமலின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல.

கொக்கரக்கோ..!!! said...

வாருங்கள் கும்மாசி. வணக்கம்.

rasu said...

புத்தர் ஒரு ஊர் வழியாக போய்க்கொண்டிருந்தார். அந்த ஊர் மக்களுக்கு அவரையும் அவரின் எண்ணங்களையும் பிடிக்காது. அதனால் எல்லோரும் சேர்ந்து அவரை வாய்க்கு வந்தபடி திட்டினர். வந்தவன் போனவன் எல்லாம் திட்டி தீர்த்துகொண்டிருக்க அவரது சீடரில் ஒருவரான ஆனந்தனுக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்தது.

புத்தரிடம் சென்று வேறு ஊருக்கு செல்லலாம் இங்கே ஒரு நிமிடம் கூட இருக்க வேண்டாம் என்றான்.

அதற்குள் மாலை நேரம் ஆக புத்தர் மக்களிடம் வேறு ஊருக்கு வருவதாக சொல்லிவிட்டேன். அங்கே சென்று பிச்சை எடுத்துவிட்டு பிறகு வருகிறேன். அதற்குப்பின் நீங்கள் பேச வேண்டியதை பேசுங்கள் என்றார்.

சீடனோ ஏன் இவ்வளவு பேசுயும் அமைதியாக இருக்கிறீர்கள் என்று கேட்க அதற்கு புத்தர் சொன்னது.

"மக்களுக்கு திட்டுவது மிகவும் பிடித்திருக்கிறது. அவர்கள் வேலையை செய்கிறார்கள். அப்படி திட்டுவதால் சந்தோசமாக இருப்பதாக எண்ணுகிறார்கள். பேசிவிட்டு போகட்டும்.

இவர்கள் பேசுவதால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை. அதனால் என் வேலையே நான் செய்கிறேன்" என்றார்.

Senthil Kumaran said...

//
ஆனால் பொது மக்களின் பணம். அதுவும் கோடிக்கணக்கில் என்கிற போது, அதில் அவர்களுக்கு நட்டம் ஏற்படாதவது கமல் நடவடிக்க எடுத்திருக்க வேண்டும். அதில் தவறியது தான் இங்கு குற்றமாக பார்க்கப்படுகிறது.
//
குற்றமாக என்று நீங்கள் சொல்லியதால் அந்த பதிலை அளித்தேன்.

//
அவர் மேல் வைத்த நம்பிக்கையில் தான் லட்சக்கணக்கானவர்கள் பணம் கட்டியிருக்கின்றார்கள்.
//
இந்த 'லட்சக்கணக்கு' என்பதில் எவ்வளவு உண்மை என்பதை பிறகு பார்க்கலாம். சத்யராஜ் மீது நம்பிக்கை வைத்து ஈமு கோழியில் பணம் போட்டதற்கும், கமல் மீது நம்பிக்கை வைத்து DTH பணம் செலுத்தியதற்கும் ஒரு வேறு பாடும் கிடையாது.

Senthil Kumaran said...

டிஸ்கி: பணம் கொடுத்தவர்கள் ஒவ்வொருவரும் DTH காரனின் சட்டையை பிடித்து செருப்பால் அடியுங்கள். உங்கள் பணமும் திரும்ப கிடைக்கும், அடுத்த முறை லூசுகளுக்கு தங்கள் வியாபார பேரத்துக்காக பொதுமக்களை உபயோகிக்க தைரியமும் வராது.

Kalaimani said...

படத்தை பார்க்க பணம் கட்டியவர்கள் பணம் வாபஸ் பெற விரும்பினாலும் தரப்படும், இல்லை படம் ரிலீஸ் ஆகும் தேதியில் பார்த்துக் கொள்ளலாம் என முடிவு செய்தால், பணத்தை திரும்பப்பெறாமல் பார்த்துக் கொள்ளலாம். " என்று அவர் மேலும் கூறினார். .


http://news.vikatan.com/index.php?nid=11950#cmt241

ராஜ நடராஜன் said...

கொக்கரக்கோ!நலமா?

எனக்கென்னமோ டெசோ மாநாடுதான் நினைவுக்கு வருகிறது:)

கொக்கரக்கோ..!!! said...

வாங்க ராஜ நடராஜன். நல்ல நலம்.

உங்களுக்கு அதெல்லாம் நினைவுக்கு வரவில்லை என்றால் தான் அது செய்தி )))

mohamedali jinnah said...

"உலகநாகயகன் இனி தமிழக மக்கள் மனதில் வில்லனாகவோ, காமெடியனாகவோ தான் வலம் வருவார்!" முத்தாய்ப்பு

mohamedali jinnah said...

முத்தாய்ப்பு
என்ன சொல்றதா இருந்தாலும் இங்க வந்து சொல்லணும். பேச்சு பேச்சா இருக்கணும்..! நீங்களும் திட்டக்கூடாது(?!) நானும் திட்டு வாங்கக்கூடாது..!!! ஆமா சொல்லிட்டேன்!!