Tuesday, February 4, 2014

மூவர் தூக்கு தண்டனையும், காங்கிரஸ் மற்றும் ஈழ உணர்வாளர்கள் நிலைப்பாடுகளும்!

பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்கு தண்டனைக்கு தடை விதிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அழுத்தமாக வாதிட்டிருப்பதாக செய்தி வந்ததையடுத்து....

தமிழகத்தில் இருக்கின்ற ஈழ உணர்வாளர்களும், வைக்கோ வகையறா ஆதரவாளர்களும், உடனடியாக காங்கிரஸுக்கு எதிராக போர்க்கொடியைத் தூக்கி ஓட்டுக்கேட்டு காங்கிரஸ் தமிழகத்தின் உள்ளே வரக்கூடாது என்று வீரவேசம் காட்டி வருகின்றனர். 

மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டில் நமக்கும் சிறிதளவு கூட உடன்பாடில்லை என்பதை தெளிவுபடுத்திவிட்டு, இது தொடர்புடைய சில விடயங்களையும் இங்கே தெளிவுபடுத்திக்கொள்ள விரும்புகிறோம்.

தேசிய அளவில் இந்தப் பிரச்சினையை அணுகும் காங்கிரஸ் கட்சி, அந்தப் பார்வையில் தங்களுடைய நிலைப்பாட்டிற்கு நியாயம் கற்பிக்கின்றது. அதனால் இப்பொழுது காங்கிரஸுக்கு எதிராக தமிழக தமிழர்கள் எடுக்கும் நடவடிக்கையின் பலனை நேரடியாக அனுபவிக்கப்போவது, பாஜக மட்டுமே.

ஆகவே தமிழக தமிழர்கள் எடுக்கின்ற இந்த முடிவினால் மத்தியில் ஆட்சியே அமைக்கக்கூடிய வாய்ப்பைப் பெறவிருக்கின்ற பாஜகவை இந்த ஈழ உணர்வாளர்களும், அந்த பாஜகவோடு கூட்டணி அமைத்து அகில இந்திய அளவில் அதற்காக பிரச்சாரமும் மேற்கொள்ளப்போவதாக அறிவித்திருக்கின்ற வைக்கோ அவர்களும்.....

பாரளுமன்றம் துவங்கவிருக்கின்ற இந்த அரிய வாய்ப்பைப் பயன் படுத்தி காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரும் நெருக்கடியை பாஜகவை விட்டு தரச்சொல்ல வேண்டும். அத்தோடு மட்டுமல்லாமல், ஈழத்தமிழர் விவகாரத்தில் தமிழக தமிழர்களின் விருப்பத்திற்கிணங்க, அவர்களுக்குஆதரவான பாஜகவின் நிலைப்பாட்டினையும் பாராளுமன்றத்தில் பிரகடனப்படுத்தச் சொல்ல வேண்டும்.

இது பாஜகவுக்கு மட்டுமல்லாமல், ஆம் ஆத்மி, கம்யூனிஸ்டுகள் போன்ற தமிழகத்தில் வாக்குக்கேட்டு வரவிருக்கின்ற அனைத்துக் கட்சிகளுக்குமான தங்கள் கோரிக்கையாக அல்லது கட்டளையாக தமிழக்த்தில் இருக்கின்ற வைக்கோ வகையறாக்கள் உள்ளிட்ட அனைத்து ஈழ உணர்வாளர்களும் அறிவிக்க வேண்டும்.

இதை ஏற்று அதன் படி பாரளுமன்றத்தில் இன்னும் ஒரு வார காலத்திற்குள் செயல்படாத எந்தக் கட்சியையும், அதனுடன் கூட்டணி வைக்கின்ற எந்த தமிழக கட்சியையும் புறக்கணிக்கப் போவதாக இந்த கூட்டமைப்பு பிரகடனம் செய்ய வேண்டும்.

அதைத் தவிர்த்து, காங்கிரஸை மட்டும் குடைந்து கொண்டிருந்தால், தமிழக மீனவர் பிரச்சினை மற்றும் ஈழத்தமிழர் பிரச்சினைகளில் காங்கிரஸ் போன்று ஒரே கண்ணோட்டமும் செயல்திட்டமும் கொண்டிருக்கின்ற பாஜக போன்ற கட்சிகள் தமிழக வாக்காளர்களின் பலனைப் பெற்று தமிழர்கள் கண்களையே குத்துகின்ற நிலையை தவிர்க்க இயலாது.

ஆகவே உண்மையான உணர்வுகள் கொண்ட தமிழர்கள், தங்களது கோரிக்கையை ஆட்சிக்கு வர வாய்ப்பிருக்கின்ற அனைத்து தேசியக் கட்சிகளுக்கும் முன்பாக
பொதுவானதாகத்தான் வைக்க வேண்டும்.

அதை விடுத்து காங்கிரஸுக்கு மட்டும் எதிராக இப்பிரச்சினையை மக்களிடம் காட்ட முயற்சிப்பது, தங்களது மிகக் கேவலமான சுயநல ஆதாயத்திற்கான முயற்சியாகத்தான் பார்க்கப்படும். அது தான் உண்மை.



1 comment:

வேகநரி said...

//மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டில் நமக்கும் சிறிதளவு கூட உடன்பாடில்லை என்பதை தெளிவுபடுத்திவிட்டு//
கொக்கரக்கோ தனது நிலைபாட்டை தெளிவு படுத்த வேண்டும். மனிதாபமான அடிப்படையில் மரண தண்டனையே யாருக்கும் இருக்க கூடாது என்பது நியாயமானது. குற்றவாளிகள் தமிழ் பேசுபவர்கள் அதனாலே அவர்களுக்கு மரண தண்டனை கூடாது என்பது எற்று கொள்ள முடியாதது.
//ஈழ உணர்வாளர்களும்//
அது என்னங்க ஈழ உணர்வு. தமிழகத்தில் பாலும் தேனும் ஓடி தமிழக எல்லா மக்களும் உலகத்திலே உள்ள மற்றய மக்களை விட சிறப்பாக வாழ்வதினால் மற்றய மக்களுக்கேல்லாம் இல்லாத ஒரு புதுமையான உணர்வு தமிழகத்திலே மட்டும் வந்துவிட்டதோ!!!