Friday, March 28, 2014

மலை காக்கும் பூதமும்... தடை தாண்டும் பெரியவரும்..!!


ஒரு உயரமான மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கின்றது திரையூர் என்ற அந்தக் கிராமம். அந்த மலை முழுவதும் அடர்ந்த காடும், மிருகங்களும் நிறைந்து அதை ஒரு பூதமும் காவல் காத்து நின்றது. 

மலைக்கு இன்னொரு பக்கத்தில் சொர்க்கலோகம் மாதிரியான அனைத்து வசதிகளையும் கொண்ட ஆரையூர் நகரமும் அதில் நாகரீகமான மனிதர்களும் வாழ்ந்து வந்தனர். 

திரையூர் கிராமம் நன்கு வளம் கொழிக்கின்ற பூமியாக இருந்தாலும், இங்குள்ள மக்கள் அங்கே இயற்கையாகவே கிடைக்கின்ற பழம், காய்கறிகள், சில சிறிய விலங்குகளின் மாமிசங்கள் ஆகியவற்றை உண்டே வாழ்க்கையை நடத்தி வந்தனர். அங்கே பெருமளவிலான மக்கள் வசித்துக்கொண்டிருக்கின்ற காரணத்தால், தானாகவே விளைந்து கிடைக்கின்ற உணவுப் பொருட்கள் அம்மக்களுக்கு போதுமானதாக இல்லாமல் அனைவருமே பசிக் கொடுமையில் தவித்து வந்தனர். 

ஆனால் ஆரையூரில் இருந்து தினம் ஒரு பறக்கும் களத்தில் இங்கு வந்து இறங்கும் சிலர், இம்மக்களின் உழைப்பைப் பயன்படுத்தி திரையூரில் இருக்கும் பல வளமான வஸ்துக்களை எடுத்துச் செல்வதும் அதற்கு ஈடாக அவர்களுக்கு கொஞ்சம் ரொட்டித் துண்டும், உடுத்திக் கொள்ள சில பயன்படுத்தப்பட்ட கிழிந்த ஆடைகளையும் தந்துவிட்டுச் செல்வதும் வழக்கம். 

அந்த ரொட்டித்துண்டுகளும், கிழிந்த ஆடையுமே திரையூர்வாசிகளுக்கு பெரும் பரிசாக தெரிந்த காரணத்தால் அவர்களுக்காகவே தங்கள் உழைப்பை கொட்டிக் கொடுத்து அவர்கள் கேட்கின்ற அனைத்தையுமே இங்கிருந்து அவர்களுக்கு தாரை வார்த்துக்கொண்டிருந்தனர். 

இந்த நிலையில் திரையூரில் வசித்த பெரியவர் ஒருவர் இதில் இருக்கின்ற சூட்சுமத்தையும் சுரண்டலையும் புரிந்து கொண்டவராய், தனக்கென்று ஒரு ஆதரவாளர் படையை இது பற்றிப் பேசி புரிய வைத்து திரட்டினார். அவர்கள் இம்மக்களுக்கு அவர்களே புதிய புதிய உணவுப் பொருட்களை விளைவிக்கும் வழி முறைகளையும், ஆடைகள் நெய்துகொள்ளும் நுணுக்கங்களையும் கற்றுக்கொடுத்து, அம்மக்கள் தாங்களாகவே தங்களுக்குத் தேவையான உணவையும், உடையையும் உற்பத்தி செய்துகொள்ளும் நிலைமைக்கு கொண்டு வந்தார். 

இதனால் ஆரையூர் சுரண்டல் பேர்வழிகளுக்கான இம்மக்களின் உழைப்பு சுத்தமாக நின்று போய், இவர்கள் அனைவருமே தங்களுக்குத் தேவையானவற்றுக்கு ஓரளவிற்கு தன்னிறைவு பெறும் நிலைக்கு வந்து விட்டிருந்தனர்.

அடுத்ததாக திரையூர் மக்களுக்குத் தேவையான சில அடிப்படைக் கல்வியையும் கற்பித்த அந்தப் பெரியவர்...., 

மலைக்கு அந்தப்பக்கம் சென்றால் ஒரு பெரிய சொர்க்க பூமி இருக்கின்றது. அங்கே இருப்பவர்கள் இங்கிருந்து கொண்டு செல்லப்பட்ட பற்பல வஸ்துக்களை வைத்து எண்ணற்ற இயந்திரங்கள் செய்து, அவற்றின் மூலம்  தங்கள் பகுதியையும், வாழ்க்கையையும் சொர்க்கமாக மாற்றி அமைத்துக் கொண்டிருக்கின்றனர்.... 

அது யார் வேண்டுமானாலும் சென்று தங்கி பயிற்சி பெறவும், வாழ்வதற்குமான பொது இடம். ஆனால் அங்கு சென்று முதலில் தங்கிய அவர்கள் வேறு யாரும் அங்கே நுழைந்து விடாதபடிக்கு வழிகளை அடைத்து வைத்திருக்கின்றனர். நாம் அங்கு செல்வதற்கான வழியை மட்டும் ஏற்படுத்திக் கொண்டோமானால் அங்கு சென்று அனைத்தையும் பயின்று, நம்முடைய திரையூரையும் ஆரையூர் மக்களைப் போன்று சொர்க்க பூமியாக மாற்றி சுகமாக வாழலாம் என்று அந்தப் பெரியவர் கூற அனைவரும் அதற்கு சம்மதிக்கின்றனர். 

பெரியவரும் தம்முடைய தோழர்களை அழைத்துச் சென்று அந்த மலையைக் குடைந்து ஆரையூர் இருக்கின்ற பகுதிக்குச் செல்வதற்கான வழியை ஏற்படுத்தி, இங்கிருந்து அங்கு செல்வதற்கு ரயில் பாதை அமைத்து, குட்டி ரயிலையும் அதில் இயங்க வைக்க ஏற்பாடு செய்கின்றார். 

ஒரு நாள் தம் மக்களை எல்லாம் ரயிலில் ஏற்றிக் கொண்டு அந்த சொர்க்க பூமிக்கும் கிளம்புகின்றார். ரயில் ஓட ஆரம்பித்தவுடன், அந்த வேகத்தில் கொஞ்சம் பயம் தொற்றிக்கொள்ளும் மக்கள் பிறகு சுதாரித்துக்கொண்டு அந்த வேகத்தை அனுபவித்தவாறு சந்தோஷமாக பயணத்தைத் தொடர்கின்றனர். 

ஆனால் இம்மக்கள் அங்கு வருவதை தெரிந்து கொண்ட  ஆரையூர்க்காரர்கள், இவர்கள் வந்தால் தமக்கான மதிப்பும் மரியாதையும் குறைந்து போய்விடுவது மட்டுமல்லாமல், தங்களுக்காக இலவசமாகவும், வெறும் சாப்பாட்டிற்கே உழைப்பதற்குமான ஆட்கள் இல்லாமல் போய்விடுவார்களே என்று எண்ணி, மலையைக் காக்கின்ற தங்கள் ஆதரவு பூதத்தை ஏவி விடுகின்றார்கள். 

நம் கதாநாயகர்கள் செல்லுகின்ற ரயிலானது மலையின் குகைப் பாதையில் நுழைந்தவுடன், இயல்பாக சூரியனின் கதிர்கள் மறைந்த காரணத்தால் திடீரென்று ரயில் முழுவதும் கும்மிருட்டு சூழ்ந்துகொள்கின்றது. உடனே மக்கள் பதறியடித்து பயத்தில் அலறுகின்றனர். அவர்கள் அறியாமையால் கும்மிருட்டு சூழ்ந்த நிகழ்வை யூகிக்க முடியாமல் தங்கள் கண்களே குருடாகிப்போனதாக சிலர் நம்ப ஆரம்பித்துவிட்டனர்!

சரியாக அப்பொழுது மலையில் இருந்து இறங்கிய அந்தப் பூதமானது ரயிலுக்குள் நுழைந்து, மக்களே இந்தப் பெரியவர் உங்களை எல்லாம் ஏமாற்றி பாதாளச் சிறையில் அடைத்து அடிமைகளாக்கப் பார்க்கின்றார். இப்பொழுது உங்கள் கண்கள் குருடாகிவிட்டது புரிகிறதா? யார் யாரெல்லாம் மீண்டும் வெளிச்சம் நிறைந்த உங்கள் பூமிக்கு திரும்ப வேண்டுமோ அவர்கள் என் கைகளைப் பற்றிக்கொள்ளுங்கள், உங்கள் கண் பார்வையும் திரும்பிவிடும், உங்கள் ஊருக்கும் கொண்டு போய்ச் சேர்த்துவிடுகின்றேன் என்று கூறுகின்றது.

அதை நம்பிய பயந்து போன மக்களும் பெரியவரை திட்டித் தீர்த்துவிட்டு பூதத்தின் கைகளைப் பற்றிக்கொள்கின்றனர். பூதமும் ரயிலை நிறுத்தி அவர்களை நடத்தியே மீண்டும் அவர்கள் பூமிக்கு கொண்டு வந்து சேர்த்து விடுகின்றது. 

குகையிலிருந்து வெளியேறிய மக்கள்....   தங்கள் குருடு நீங்கப் பெற்றவர்களாக நினைத்து பாதுகாப்பான இடத்திற்கு வந்தது போல் உற்சாகக் கூச்சல் எழுப்புகின்றனர்!!

ஆரம்பத்தில் பெரியவர் சொன்னதையெல்லாம் கேட்ட மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வந்தார்கள்

நிரந்தரமான சுகத்தையும் வாழ்வின் வெளிச்சத்தையும் அனுபவிக்க வேண்டிய நேரத்தில், 

இன்னும் சற்று நேரம் பொறுமை காத்திருந்தால்... 

பெரியவர் பேச்சைக் கேட்டு அவரை நம்பி உறுதியாக நின்றிருந்தால்...  

அந்த பூதத்தின் பேச்சைக் கேட்காமல் இருந்திருந்தால்....

இன்றைக்கு மீண்டும் தொடங்கிய இடத்திற்கே, வந்து நின்று, மீண்டும் பழைய மோசமான வாழ்க்கைக்கு வந்திருக்க வேண்டிய தேவை இருந்திருக்காது.....

ஆகவே மக்களே....

இப்பொழுது மீண்டும் அந்தப் பெரியவர் ரயிலை சரி செய்து வைத்துக்கொண்டு காத்திருக்கின்றார். அதில் ஏறி மலைக்கு அந்தப் பக்கம் சென்று திரையூருக்கு மலையால் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்ற சூரியனின் கதிர்களை காணப் போகின்றார்களா? 

இல்லை இந்த முறையும் பூதத்திற்கு படையல் போட்டு விட்டு வெறும் கையுடன் திரும்பப் போகின்றார்களா?????? 



No comments: