Tuesday, November 24, 2015

பள்ளிக்கூடங்கள் உண்மையிலேயே பலன் தருகின்றனவா?! #1


டீவின்னா ஒன்லி சினிமா நிகழ்ச்சிகள் அல்லது போகோ, கார்ட்டூன் மட்டுமே என்று அட்ராசிடி பண்ணி மற்றவர்களை ஓரம் கட்டிவிட்டு பார்க்கும் பள்ளிக் குழந்தைகள்...

கடந்த 15 நாட்களாக செய்தி சேனல்களையும், குறிப்பாக ரமணன் அறிவிப்புகளையும் மட்டும் கண்கொத்திப் பாம்பாக பார்த்துகொண்டிருப்பது பற்றி பல்வேறு மீம்ஸ் மற்றும் உற்சாக பதிவுகள் இணையம் முழுக்க சுற்றி வருகிறது.

இதை வெறுமனே சிரித்துக் கடந்துவிடும் விஷயமாக என்னால் எடுத்துக்கொள்ள முடியவில்லை. இன்றைக்கு உள்ள குழந்தைகள் மட்டுமல்ல, நான் பள்ளியில் படிக்கின்ற காலத்திலேயே கூட, இந்த மழைக்காலங்களில் தெருவில் ரேடியோ இருகின்ற ஒரே ஒரு வீட்டில் தெருப் பிள்ளைகள் எல்லாம் குவிந்திருப்போம். தஞ்சை மாவட்டத்திற்கு விடுமுறை என்று சொன்னால் தான் குஷியோடு சத்தம் போட்டு மழையில் நனைந்தவாறே கிளம்புவோம்....!

இதே கல்வி பாடத்திட்டம் தொடர்ந்தால்... இப்பொழுது உள்ளதற்கு அடுத்த தலைமுறை கூட இப்படித்தான் மழைக்கால விடுமுறை குறித்த அறிவிப்புக்களுக்கு துள்ளிக் குதிப்பார்கள் என்றே தோன்றுகிறது.

நம் நாட்டில் குறிப்பாக தமிழகத்தில் பிறந்த குழந்தை ஒன்று மூன்று வருடத்தில் எல் கே ஜியில் தன் பயணத்தைத் துவங்கினால், ஒரு இளநிலை பட்டப்படிப்பை முடிக்க வேண்டுமானாலே 17 வருடங்கள் தொடர்ந்து தோல்வியுறாத வெற்றியுடன் படிக்க வேண்டும். அதாவது பிறந்தில் இருந்து மிகக் குறைந்த பட்சமாக இருபது வருடங்கள் தனது அற்புதமான குழந்தைப் பருவம் உள்ளிட்ட ஆரம்ப இளமைக்காலங்களை இந்த கொடூரமான கட்டுப்பாட்டிலேயே கழிக்க வேண்டியதிருக்கிறது.
அந்த 20 அல்லது 23 வருடத்திற்குப் பிறகான தனது மீதம்முள்ள வாழ்க்கையை நிம்மதியாக வாழ்வதற்கே இந்த தண்டனை என்று அந்தக் குழந்தையின் பெற்றோர்கள் மிகப் பலமாக நம்புவதாலேயே அல்லது நம்பவைக்கப்பட்டிருப்பதாலேயே தான் இந்தியக் குழந்தைகள் ஒவ்வொன்றுக்கும் இந்தக் கொடுமை அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

இன்றைய சூழ்நிலையில் ஒரு குழந்தை எல் கே ஜி படித்தாலும், டிகிரி மூன்றாமாண்டு படித்தாலும்... அதையும் அரசு, நகராட்சி, மாநகராட்சி அல்லது அரசு உதவி பெறும் பள்ளி கல்லூரிகளில் படித்தாலுமே ஒரு மாணவருக்கான சீறுடை, புத்தகம், நோட்டு, பேனா, பென்சில், ஸ்கெட்ச் பேனா, கலர் பென்சில், ஜியாமெட்ரி பாக்ஸ், சார்ட் வகைகள், பள்ளி அல்லது கல்வி சார்ந்த இன்ன பிற செலவினங்கள், பள்ளிக்கான போக்குவரத்து செலவுகள் உள்ளிட்டவைகளை கூட்டினாலே ஒரு வருடத்திற்கு சராசரியாக ரூபாய் 20 ஆயிரம் வரை செலவாகும். அதாவது 17 வருடங்களுக்கு மிகக் குறைந்தபட்சமாக இந்த அரசுப் பள்ளி அல்லது கல்லூரிகளில் பயிலும் மாணவர் 3 லட்சத்தி 40 ஆயிரம் ரூபாய்களையாவது கண்டிப்பாக செலவு செய்தே தீர வேண்டும். இதுவே தனியார் பள்ளி கல்லூரி என்றால் அந்த மாணவர் இன்னும் கூடுதலாக 5லிருந்து 20 லட்சம் வரையிலும் கூட செலவு செய்வதை தவிர்க்க முடியாது.

இதெல்லாமே நான் சொல்வது பிஏ, பிஎஸ்ஸி, பிகாம் போன்ற படிப்புக்கள் வரை படிப்பதற்கு மட்டுமே..! ஆனாலும் தன் சராசரி வாழ்வில் மூன்றில் ஒரு பங்கினை விரயம் செய்தும், பெரும் பணத்தை கொட்டி அழுதும், கடும் சிறைவாசம் போன்ற வாழ்வு நிலையை அனுபவித்தும் வெளியேறும் பொழுது அவர்கள் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து அல்லது ஏதோ ஒரு விருப்பமுள்ள தொழிலைச் செய்து தன் மீதமுள்ள வாழ்க்கையை வேறு யாருடைய பொருளாதார உதவியுமின்றி சுயசார்புள்ளவராக நடத்திட தகுதியுள்ளவராய் இருக்கின்றாரா? என்றால் நிச்சயமாக இல்லை என்பது தான் பதில்...!

பிகாம் படித்து சான்றிதழை பெற்ற மாணவர் அடுத்த நாள் ஒரு நிறுவனத்தில் சேர்ந்து அக்கவுண்ட்ஸ் வேலையை உடனடியாக தன் பொறுப்பாக செய்யக் கூடிய நிலையில் இருக்கின்றாரா? கெமிஸ்ட்ரி படித்தவர் அடுத்த நாள் ஒரு ஆய்வுக் கூடத்தில் பணிக்குச் சேர்ந்து உடனடியாக தன் பொறுப்பாக அந்த வேலையைச் செய்யும் நிலையில் இருக்கின்றாரா? அவருக்கு சொந்தமாக ஒரு கார் வாங்கி டிரைவராக பணியாற்றி தன் வருமானத்திற்கு வழி கோலிக்கொள்ள முடியுமா? வேறு ஏதாவது தொழில் செய்து தன் சுய வருமானத்திற்கு ஏற்பாடு செய்து கொள்ள முடியுமா? என்றால் நிச்சயம் முடியாது என்ற பதிலே கிடைக்கிறது.

பிறகு எதைத்தான் 20 வருட கால பள்ளிக், கல்லூரி வாழ்க்கை அவனுக்கு கற்றுக்கொடுத்திருக்கின்றது என்றால்... கிட்டத்தட்ட, பேந்த பேந்த முழிக்கின்ற நிலைதான் இன்றைய கல்வித்திட்டத்தில் இருக்கின்றது.

நேற்று ஒரு வேலைவாய்ப்பு பயிற்சி முகாமுக்கு சிறப்பு அழைப்பாளராக சென்ற பொழுது அங்கே பயிற்றுனராக வந்திருந்த ஒரு நபர் பேசியதும்... அவரது பேச்சை உறுதிப்படுத்தி டி சி எஸ் ஸின் துணைத்தலைவர் பேசியதும் என்னை ஒரு நிமிடம் உறைய வைத்து விட்டது. பி ஈ எலக்ட்ரிகல் முடித்து நேர்காணலுக்கு வரும் மாணவர்களில் பெரும்பாலானோருக்கு வோல்டேஜ் என்றால் என்ன என்பதற்கு கூட சரியான பதில் தெரியவில்லை... பதில் சொன்னாலும் அதற்கான துணைக் கேள்விக்கு புரிதல் இல்லாத மனப்பாட வாந்தி எடுத்தல் தான் இருக்கின்ற காரணத்தால் முட்டுச் சந்தில் முட்டி நிற்பது போல நின்று விடுகின்றார்கள் என்று சொன்ன போது தான் அதிர்ந்து போனேன்.

இன்றைக்கு தமிழகத்தில் வேலை அல்லது சுய தொழில் செய்து சம்பாதிப்பவர்களில் எத்தனை சதவிகிதம் பேர் தாங்கள் 20 வருடம் பயின்ற பள்ளிக் கல்லூரி கல்வி அல்லது பயிற்சியினைக் கொண்டு அந்த வேலையினைச் செய்து சம்பாதிக்கின்றார்கள்? வெறும் பத்து சதவிகிதத்தினர் கூட இருக்கமாட்டார்கள் என்பது தான் என் கணிப்பு.

எதற்குமே உதவாத இந்தக் கல்வி முறை தான் எதற்கு?


தொடர்ந்து அலசுவோம்.....


No comments: