Showing posts with label உதயநிதி ஸ்டாலின். Show all posts
Showing posts with label உதயநிதி ஸ்டாலின். Show all posts

Tuesday, July 16, 2019

உதயநிதி நியமனமும்... சமஸ் ஊளையிடலும்...!

Image may contain: 1 person, smiling, standing
தமிழ் இந்துவில் அகில உலக தமிழ் அரசியல் எழுத்தாளர்களின் முடிசூடா மன்னன், திரு. சமஸ் ஒரு பெரிய்ய்ய்ய கட்டுரையை எழுதியிருக்கின்றார்..!
திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை திமுகழக இளைஞரணி செயலாளராக நியமித்ததற்கு பத்து நாட்களாக அன்னம் தண்ணி புழங்காமல், கீழே விழுந்து புரண்டு அழுது... கலைஞர்களை உதயநிதிகள்... என்னவோ செஞ்சுட்டாங்கன்னெல்லாம் புலம்பி தள்ளியிருக்கின்றார்..!
அதை படிக்கப் படிக்க பேரானந்தமாக இருந்தது.... காரணம் நரி ஊளையிட்டால் நல்ல சகுனம் தானே..?!
இதை ஏதோ உதயநிதிக்கு ஆதரவு தரும் நிலைப்பாட்டிற்கான டெம்ப்ளேட்டான எள்ளல் எதிர்வினை என்று யாரும் கருதிவிட வேண்டாம்.
காரணத்தோடு தான் சொல்கிறேன்...! ஆம், மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக 2016 தேர்தல் சமயத்தில்... அஸ்தமிக்கும் பேரியக்கம் என்ற தலைப்பில்... இதேப் போன்று மிகப் பெரிய்ய கட்டுரை ஒன்றினை திமுகழகத்திற்கு எதிராக இதே சமஸ் தான் எழுதினார்..!
அதைப் படிக்கின்ற அப்பாவி பொது மக்கள் அனைவரும்... இன்னும் சொல்லப்போனால்... திமுகவினர் பலரே கூட திமுக அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கின்றதோ என்று தான் எண்ணினர்..! உண்மையைச் சொல்லப்போனால் 2016 தோல்விக்குப் பின் திமுக தொண்டர்களே கூட கொஞ்சம் களங்கித்தான் போயிருந்தார்கள்... அந்த நேரத்தில் வந்த இவரது கட்டுரை திமுக எதிர்ப்பாளர்களுக்கு கொண்டாட்டத்தையும், திமுக ஆதரவாளர்களுக்கு பெரும் வருத்தத்தையும் ஏற்படுத்த தவறவில்லை..!
ஆனால் இவர் கட்டுரை வெளிவந்த பிறகு திரும்பவும் திமுக டாப் கியருக்குச் செல்கிறது... இன்னும் சொல்லப்போனால், இந்த சமஸே தனது வயிற்றுப் பிழைப்புக்கு தலைவர் கலைஞரை வைத்து... அவரைப் பற்றிய பல்வேறு பிரபலங்களின் கருத்துக்களை தொகுத்து... தெற்கிலிருந்து ஒரு சூரியன் என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டு... திமுகவினரின் ஏகோபித்த ஆதரவோடு வெகுவாக கல்லா கட்டுகின்றார்..!
அதன் பிறகு கலைஞர் மறைந்த நிலையில்... அவருக்கான பத்திரிக்கையாளர்கள் நடத்திய புகழஞ்சலியில் கூட அத்தனை பேரும் கலைஞர் என்று விளித்தே அஞ்சலி செலுத்த... கலைஞரை வைத்து கல்லா கட்டிய இந்த சமஸ் மட்டும் தன் சாதி சனாதன தர்மத்தின் நியதிப்படி... கலைஞரை கருணாநிதி என்று பெயர் சொல்லி அழைத்து பேசவே... அங்கேயே திமுகழக தொண்டர்களின் கண்டிப்புக்கும் ஆளானார்..!
இந்த நிலையில் தான்... அஸ்தமிக்கவிருப்பதாக இவர் எழுதிய திமுக... இன்றைக்கு தமிழக அரசியலில் மட்டுமல்லாது, இந்திய அளவிலும் பாஜகவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கக் கூடிய பலம்மிக்க கட்சியாக விஸ்வரூபம் எடுத்து நிற்கின்ற நிலையில்...
உதயாவின் இளைஞரணி செயலாளர் நியமனத்தை கைகளில் எடுத்துக் கொண்டு... ஒரு பெரிய்ய கட்டுரையை வார்த்து, திமுகவினர் மத்தியில் கலகத்தையும், பொது மக்கள் மத்தியில் திமுக மீதான வெறுப்பையும், எதிர்க்கட்சியினர் மத்தியில் உற்சாகத்தையும் தூண்டி விட எத்தனிக்கின்றார்..!
ஆனால் வழக்கமாக அண்ணனின் ராசிப்படி... அவர் ஊளையிட்டு விட்டதால்... இனிமேல் தான் திரு. உதயநிதி அவர்கள் டாப் கியருக்கு செல்லவிருக்கின்றார் என்பது தெளிவாகப் புரிகின்றது..! ஒருவேளை இந்த நியமனத்தை சமஸ் ஆதரித்து எழுதியிருந்தால் தான் நாம் கவலை கொள்ள நேரிடும்..!
இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்து இதே சமஸ் தெற்கிலிருந்து இன்னுமொரு சூரியன்னு ஒரு புத்தம் எழுதினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை...!
அல்லது... இந்த சமஸ்ஸை விட மிகக் கேவலமாக திமுகவையும், கலைஞரையும், தளபதையையும் விமர்சித்து எழுதிக் கொண்டிருந்த திருமாவேளனை கலைஞர் டீவியில் கட்டிப் போட்டது போல... இந்த சமஸ்சுக்கு ஒரு பொறையைக் காட்டி முரசொலியில் கட்டிப் போட்டாலும் போடலாம்... யார் கண்டது..?! தலைமையின் பல்வேறு ராஜதந்திர உத்திகளில் இதுவும் கூட ஒன்று தானே..?!

Sunday, June 29, 2014

உதயநிதி ஸ்டாலினும் அரசியல் பிரவேசமும்

உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தில் வளர்ந்து வரும் ஒரு நல்ல சினிமா நடிகர். மற்ற நடிகர்களுக்கு இருப்பது போன்று அவருக்கும் ரசிகர் மன்றங்களும், அதில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களும் இருக்கின்றார்கள்.
அவர் திராவிட முன்னேற்ற கழகத்தின் அடுத்த தலைவரான தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் மகன்.
ஆனாலும் அவர் இதுவரையிலும் நேரடியாக திமுகவின் எந்த அரசியல் நடவடிக்கைகளிலும் இறங்கியது கிடையாது. அப்படி அவருக்கு ஒரு எண்ணம் எழுந்தால், நேரடியாகவே அவர் திமுக சார்பாக அரசியலில் களம் இறங்கும் முழு உரிமையும் அவரையே சார்ந்தது. அவர் அரசியலில் இறங்கக் கூடாது என்று சொல்லும் எந்த அதிகாரமும் எவருக்குமே கிடையாது.
ஆனால் அரசியலில் நுழைந்தால் அவரை அக் கட்சியின் தொண்டர்களும் அடுத்ததாக தமிழகத்தின் பொது மக்களும் ஏற்றுக்கொண்டு அவருக்கு ஆதரவளிக்கின்றார்களா? அதற்கு ஏற்றார் போன்று அவரும் உழைக்கின்றாரா என்பதும்... கட்சித் தொண்டர்களுக்கும், பொது மக்களுக்கும் ம்ற்றும் அவருக்கும் இடையிலான பிரச்சினை.
அவர் சினிமா துறையில் இறங்கி முதலில் பட விநியோகம் செய்தார்... அடுத்ததாக படத் தயாரிப்பில் இறங்கினார்... அதற்கடுத்தபடியாக கதாநாயகனாக நடிக்கவும் ஆரம்பித்தார். இதில் ஒவ்வொன்றையுமே அவர் செய்ய முற்படும் போதும் அவரை சிலர் விமர்சிப்பதை ஒரு ஆகச் சிறந்த கொள்கையாகவே வைத்துக்கொண்டிருந்தாலும், அவர் ஒவ்வொரு படியிலுமே தெளிவான வெற்றிகளை படிப்படியாக சந்தித்தே வந்து கொண்டிருக்கின்றார்.
அவர் கதாநாயகனாக நடித்த இரண்டு படங்களுமே வியாபார ரீதியில் வெற்றிப்படங்களாகவே அமைந்திருக்கின்றன. திமுக ஆட்சியில் இருந்த காலத்தில் அவர் விநியோகஸ்தர்களை மிரட்டுகிறார்... திரையரங்குகளை மிரட்டுகிறார்... அதனால் தான் படத்தை ஓட வைக்கின்றார் என்றார்கள். ஒரு சிலர் இன்னும் ஒரு படி மேலே போய், அவர் மக்களையே மிரட்டி படம் பார்க்க வைக்கின்றார் என்ற அளவிற்கு எல்லாம் எழுதித் தள்ளியதையும், இதே இணையத்தில் நான் தலையில் அடித்துக்கொண்டவாறே பார்த்து கடந்து சென்றிருக்கின்றேன்.
திமுக ஆட்சி போனால், இவரு திரைத்துறையில் இருந்து வெளியேற்றப்பட்டுவிடுவார் என்றவர்களின் முகத்தில் கரி பூசுவது போன்று, இவர் கதாநாயகனாக நடித்த இரண்டு படங்களுமே அதிமுக ஆட்சியில் தான் வெளி வந்து வெற்றியடைந்திருக்கின்றது.
இந்த அதிமுக ஆட்சியிலும் அவர் படத்தயாரிப்பையும், விநியோகத்தையும் கைவிடாமல் அதையும் வெற்றிகரமாகவே செய்து வருகின்றார்....
இந்நிலையில், இன்றைக்கு அவர் மனைவியின் பிறந்த நாள். அதற்கு வாழ்த்துச்சொல்லி அவர் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்களோ, திமுகவைச் சார்ந்த சிலரோ இங்கே பதிவிட்டால், ஏன் சிலருக்கு எரிச்சல் ஏற்படுகின்றது என்றுதான் புரியவில்லை?!
இங்கே நம் இணைய நண்பர்களின் பிள்ளைகள், பெற்றோர், உடன்பிறந்தவர்கள் இப்படி யாருக்காவது பிறந்த நாள், திருமண நாள் என்று எந்த நிகழ்வாக இருந்து அவர்கள் பதிவிட்டாலும், நாம் அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதை இயல்பான வழக்கமாகக் கொண்டிருக்கின்றோம்.
அதே நிலைப்பாட்டின் அடிப்படையில், தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களை திமுகவின் அடுத்த தலைவராக ஏற்றுக்கொண்டவர்களில் சிலர் அன்பு மிகுதியாலோ அல்லது வேறு ஏதோ சில எதிர்பார்ப்புகளின் காரணத்தாலோ (அப்படியும் சிலர் தவறான எண்ணத்தில் இருக்கலாம்) அவருடைய மருமகளின் பிறந்த நாளுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்றே எனக்குப் புரியவில்லை!
ஒரு கட்சித் தலைவரின் மனைவியோ, மகனோ, மகளோ, மருமகனோ, மருமகளோ எந்தத் தொழில் செய்தாலும் விமர்சிப்பதும், அந்த தலைவர் பிரச்சாரப் பயணம் செல்லும் போது உதவிக்காக பின் செல்வதும், அவர்கள் பிறந்த நாள், திருமண நாள் போன்றவைகளை கொண்டாடுவதும், அதற்கு யாரேனும் வாழ்த்துச் சொல்வதும்.....
இதெல்லாம் கூடாது என்று சொல்வது என்ன மாதிரியான மனநிலை???
ஒரு கட்சியையோ, அதன் தலைவரையோ விமர்சிப்பதற்கு எவ்வளவோ அளவுகோல்களும், வழிமுறைகளும், காரண காரியங்களும் இருக்கும் போது, இந்த மாதிரியான அவர் குடும்பத்தினர் மீதான விமர்சனம் என்பது வெறும் காழ்ப்புணர்ச்சியாகவே என்னால் கருதமுடிகிறது.
இப்படியே போச்சுன்னாஆஆஆஆ... ஏன்? நான் அரசியலுக்கு வந்தால் தான் தப்பென்ன? என்று கூட திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை சிந்திக்க வைத்துவிடுவார்கள் போலிருக்கிறது. அவர் சிந்திப்பது இருக்கட்டும், கட்சித் தொண்டர்களையும், பொது மக்களையுமே அப்படி இந்த நபர்கள் சிந்திக்க வைத்து விடுவார்கள் என்றே நான் நினைக்கிறேன்.