இணையத்தை திறந்து மற்ற சொந்த வேலைகளை எல்லாம் முடித்த பின்பு, பொழுது போக்கிற்கான வெட்டி அரட்டை வேண்டி சமூக வலைத்தளங்களுக்குள் நுழைந்தாலே, நாட்டின் அன்றாட பிரச்சினைகள் குறித்து வெட்டுக் குத்து விவாதங்கள் தான் களை கட்டுகின்றன.
இப்போ சமீபமாக களை கட்டியிருக்கும் இரு பிரச்சினைகள் கூடங்குளமும், தமிழக முதல்வரையும், இந்திய பிரதமரையும் இழிவு படுத்தி சிங்கள பத்திரிகை ஒன்று வெளியிட்டிருக்கும் கேலிச்சித்திரமும் தான்!
இதேப் போன்று எந்தப் பிரச்சினையானாலும், இணைய இளைஞர்களில் மிகக் குறைந்த சதவிகிதத்தைச் சேர்ந்தவர்களுக்கே, இரு எதிர்நிலைக் கருத்துக்களில் ஏதோ ஒன்றினை வலுவாக ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ பேசக்கூடிய ஆற்றலும் துணிச்சலும் இருக்கிறது.
இதில் பெரும்பாலான சதவிகிதத்தினர், மெஜாரிட்டி எந்தப் பக்கமோ அந்த ஸ்டாண்டை எடுத்து விடுகின்றனர். இது கூட பரவாயில்லை, ஒரு குறிப்பிட்ட சதவிகித இளைஞர்களுக்கு என்ன ஸ்டாண்டு எடுப்பது என்பதிலேயே குழப்பம் அதிகமிருப்பது தான் வேடிக்கையின் உச்சம்!
ஆனால் இது மாதிரியாக இணையத்தில் சூடாக விவாதிக்கப்பட்டு தீர்ப்பெழுதப்படும் பல விடயங்களில் பொது மக்களின் கருத்து என்ன மாதிரியாய் இருக்கின்றது என்று பார்த்தோமானால் நமக்கு மிகப் பெரிய ஆச்சர்யமே பதிலாக காத்திருக்கிறது.
கூடங்குளம் பிரச்சினையைப் பொருத்தவரை நான் சந்தித்தித்த அத்தனைப் பேரின் நிலைப்பாடும், போராட்டக் காரர்களுக்கு எதிரானதாகவே இருக்கிறது. அவர்களில் பெரும்பாலானோருக்கு பகல் இரவு என்று பாராமல் கண்ட நேரங்களில் ஒரு நாளைக்கு 8 மணி நேரத்திற்கும் அதிகமாக ஏற்படும் மின் தடை மிகப்பெரிய சங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதை கண்கூடாகக் காண முடிகின்றது.
சாதாரணமாக இது போன்ற விடயங்களில் அரசுக்கு எதிராக கம்யூனிச சிந்தனையுடன் போராட்டக் காரர்களுக்கு ஆதரவாகப் பேசக் கூடியவர்கள் கூட, “சார், இன்னிக்கு வீட்டை விட்டு கீழ இறங்குறவங்க, உசிரோட வீடு திரும்பறதுக்கு என்ன சார் உத்தரவாதம் இருக்கு? பஸ்ஸுலயோ, ரயிலிலோ போனால் கூடத்தான் விபத்து ஏற்பட்டு சாகுறாங்க, அதனால அதுல போகாம இருக்கோமா? அது மாதிரி தான் அணு உலையையும் எடுத்துக்கனும்”. என்று பக்காவாக லாஜிக் பேசுகிறார்கள்.
அரசு இவ்விஷயத்தில் மிகவும் மெத்தனமாக செயல்படுவதாகவும் சிலர் கூறுவதைக் கேட்டால் அதிர்ச்சியாகத் தான் இருக்கின்றது. அதேசமயம் மிகப் பெரும்பான்மையான மக்களின் கருத்துக்களை ஒதுக்கித் தள்ளிவிடவும் முடியாது.
மேலும் இவ்விஷயத்தில் போராட்டக் காரர்களுக்கு ஆதரவாக இணையத்தில் ஆவேசமாக எழுதுகின்ற பெரும்பாலானோரைப் பார்த்தால் அவர்கள் வெளி நாடுகளில் பல வருடங்களாக தங்கள் குடும்பத்தோடு செட்டில் ஆனவர்களாகத் தான் இருக்கின்றார்கள்.
அளவுக்கு அதிகமான மின் தடையால் தான் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசியும் ஏறியிருப்பதாக மக்கள் நம்புகின்றார்கள். அதனால் தான் விவசாயம் தடைபட்டதாகவும் வாதிடுகின்றனர். விலைவாசி ஏற்றம் மிகப் பெரிய அளவில் மக்களை கோபப்படுத்தியிருப்பதை கண்கூடாகக் காண முடிகிறது.
கூடங்குளத்திலிருந்து மின்சாரம் வந்தால், மின் தடை நேரம் பெருமளவில் குறையும் என்றும் நம்புகின்றார்கள். என்னைக் கேட்டால், கூடங்குளத்து போராட்டக் காரர்களின் ஆவேசத்துக்கு நிகரானதொரு பெருங்கோபம் நீரு பூத்த நெருப்பாய் பொது மக்களிடமும் மேற் சொன்ன காரணங்களுக்காக ஏற்பட்டிருப்பதையும் மறுப்பதற்கில்லை.
இதேப் போன்று தான் சிங்கள பத்திரிகையின் கேலிச் சித்திரம் பற்றி பெரும்பான்மையான பொது மக்களுக்கு தெரிந்திருக்கவே இல்லை. அது பற்றி அறிந்திருந்த ஒரு சிலரும், அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. “சாமி கும்புட வந்தவன துரத்தியடிச்சா அவன் படம் போட்டுத் தான் காறித் துப்புவான்” என்று சர்வ சாதாரணமாகச் சொல்கின்றார்கள்.
ஆனால் இணையப் போராளிகளைப் பொருத்தவரை இதில் நகை முரண் என்னவென்றால், எதற்கெடுத்தாலும் சுற்றி வளைத்து ஜெயலலிதவை ஆதரிக்கின்றவர்களும், அப்படி முடியாதபட்சத்தில் அதில் கலைஞரை சம்பந்தப்படுத்தி அவரை திட்டித் தீர்ப்பவர்களும், சிங்கள கேலிச் சித்திரத்திற்கு எதிராக பொங்கித் தீர்த்தவர்களும், இடிந்தகரை மக்களுக்கு ஆதரவாக பொங்கும் பொழுது நாசுக்காக ஜெயலலிதாவை நகர்த்தி வைத்து விட்டு போலீஸ்காரர்களை மட்டும் கண்டமேனிக்கு திட்டித் தீர்க்கின்றார்கள்.
என்னே ஒரு நடுவுநிலை இவர்களது?!