Showing posts with label பழ கருப்பையா. Show all posts
Showing posts with label பழ கருப்பையா. Show all posts

Friday, October 23, 2015

பழ கருப்பையாவின் பல் இளிக்கும் திராவிட காதல்..!

நேற்று திராவிடத்தின் மீதுள்ள காதலால் சொல்கிறேன் என்ற போர்வையோடு பழ. கருப்பையா எழுதியதாக ஒரு கட்டுரையை, இணையதளத்தில் குறிப்பாக திக ஆதரவு மனப்பான்மையுள்ள திமுகவினர் பகிர்ந்திருந்தனர். அதைச் சில அப்பாவி திமுகவினரும் உச்சுக்கொட்டி விருப்பச்சொடுக்கு இட்டும், கருத்துச் சொல்லியும், மீண்டும் அதைப் பகிர்ந்தும் கடமையாற்றியிருந்தனர்.
சுற்றி வளைத்து எழுதப்பட்டிருந்த அந்தக் கட்டுரையின் கடைசி பத்தியில் தளபதி மு.க.ஸ்டாலின் 90 சதவிகித திமுகவினர் இந்துக்கள் என்று சொன்னதை தவறு என்று பறைசாற்றியிருந்தது தான் அக் கட்டுரையின் மையக் கருத்து..!
இந்தக் கருத்தைச் சொன்ன பழ. கருப்பையா யார் என்று நாம் கவனிக்க வேண்டும். ஒட்டுமொத்த ஆரியத்தின் அதாவது திராவிட எதிரியின் தமிழக பிரதிநிதியாகவும், இந்திய அரசு சார் ஆரிய பிரதிநிதியான மோடியின் அன்புச் சகோதரியுமாக விளங்கக் கூடிய ஜெயலலிதாவின் ஆகச் சிறந்த அடிவருடியாக விளங்கி....
கடந்த 2011 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழகம் முழுவதும் சுற்றித் திரிந்தும், ஊடகங்களில் விவாதித்தும், பத்திரிக்கைகளில் எழுதியும், ரோட்டரி, லயன் போன்ற தன்னார்வ இயக்க மாநாடுகளில் போய் பேசியும், திமுகவும் கலைஞரும் கருவறுக்கப்பட வேண்டிய விஷ ஜந்துக்கள், தமிழகத்தைப் பிடித்த பிணிகள் என்றெல்லாம் பேசி, நடுநிலையான அப்பாவி நடுத்தரவர்க்கத்தினரை, மூளைச்சலவை செய்து திமுகவுக்கு எதிராக திருப்பி விட்டு....
அதற்கு சன்மானமாக ஒரு எம் எல் ஏ சீட்டையும் ஜெயலலிதாவிடம் பெற்று அனுபவித்து வருபவர் தான் இந்த பழ. கருப்பையா.
சரி..., திமுகவை எதிர்த்த காரணத்தாலேயே அவர் திராவிடத்திற்கு எதிரானவராக நாம் கருதலாமா என்று சிலர் கேட்பது என் காதில் விழுகிறது...!!
உண்மை தான். திமுகவை எதிப்பவர்கள் எல்லாம் திராவிடத்திற்கு எதிரிகள் என்று சொல்லும் பத்தாம் பசலி நான் அல்ல. ஆனால், அவர் எங்கு நின்று கொண்டு அதைப் பேசுகின்றார்? யாருக்காக இப்பொழுது அதைப் பேசுகின்றார் என்பது தான் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம்.
தமிழக சட்டசபையிலேயே நான் பாப்பாத்தி என்று பகிரங்கமாக அறிவித்ததன் மூலம், ஒட்டுமொத்த திராவிடமே ஆரியத்தின் காலடியில் என்று டவுசர் பாண்டிகள் எக்காளமிடும் நிலையை உருவாக்கிய..., கரசேவைக்கு கல் அனுப்பிய திராவிடத் தாயை(?!)...,, மதமாற்ற தடைச்சட்டம் கொண்டு வந்தவரை..., கோவில்களில் ஆடு, மாடு பலி தடைச்சட்டம் கொண்டு வந்தவரை..., இட ஒதுக்கீட்டிற்கு எதிராக பற்பல காரியங்களை... குறிப்பாக ஆசிரியர் பணித்தேர்வுக்கு டெட் எக்ஸாம் கொண்டு வந்து ஆப்படித்தவரை....., யாகம், பூஜை, காவடி, தீச்சட்டி, பால்குடம் என்று தனக்காக ஒட்டுமொத்த கட்சியினரையும் அலைய வைத்தவரை..., தமிழை விட சமஸ்கிருதத்தின் மீது தீராத பற்றுக்கொண்டவரை..., ஒரு இனத்தை அழிக்க அந்த இனம் பேசும் மொழியை அழிக்க வேண்டும்.., அந்த மொழியை அழிக்க அம்மொழியில் வந்திருக்கின்ற நூல்களை அழிக்க வேண்டும்..., அம்மக்கள் அம் மொழியினை படிக்காமல் செய்ய வேண்டும், அம் மொழியினால் பலனில்லை என்று நம்பவைக்க வேண்டும்.... இப்படியான ஆரிய சூழ்ச்சியின் ஒரு அங்கமாக ஆசியாவிலேயே தலை சிறந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தை சிங்களர்கள் யாழ்ப்பான தமிழ் நூலகத்தை அழித்தது போன்று... சின்னாபின்னமாக்கியவரை..., திராவிடத்தின் மிக முக்கிய கொள்கையான உண்மையான சமூகநீதியை நிறுவிடக் கூடிய சமச்சீர் கல்வியை குலைக்கப் பார்த்தவரை....,
இப்படியாக திராவிட இயக்கத்தை கருவறுக்க எறும்பு புற்றில் நுழைந்த பாம்பைப்போன்று செயல்படும் ஜெயலலிதாவின் பாதங்களை தினம் சேவித்து புலகாங்கிதம் அடைந்து கொண்டிருக்கும் பழ. கருப்பையா.... திராவிடத்திற்காக வடிக்கும் கண்ணீரைத்தான் நீலிக்கண்ணீர் என்கிறேன்.!
அவரது வாதப்படியே...., 67இல் திராவிடத்தை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க அண்ணா ராஜாஜியுடன் கூட்டணி அமைத்தது சரி என்றால் அதை உணர்வுள்ள திமுகவினர் புரிந்துகொள்வார்கள் என்றால்....,
இன்றைக்கு மத்திய அரசில் அக் மார்க் ஆரியம் ஆர் எஸ் எஸ் கட்டுப்பாட்டில் ஆட்சி செய்கின்ற நிலையில், இந்தியும், சமஸ்கிருதமும் கும்மாளமிட்டு தமிழ் மற்றும் இன்னபிற மொழிகளை அழித்தொழுக்க ஆயத்தப்பணிகள் நடைபெறும் வேளையில், யார் யாருடன் விளையாட வேண்டும், யார் என்ன சாப்பிட வேண்டும், யார் என்னென்ன சாப்பிடக் கூடாது, யார் யார் எதை பூஜிக்க வேண்டும், இன்னின்னார் உரிமை உடையோர்... இன்னின்னார் அடிமைகள்... என்றெல்லாம் சட்டமும், சத்தமும் பலமாக எழுப்பப்படுகின்ற நிலையில்....
அப்படிச் செய்பவர்கள், பெரும்பான்மையாக இருக்கின்ற இந்துக்களை தன் வயப்படுத்தி, திமுக என்ற கட்சி அவர்களுக்கு எதிரானது என்ற பிம்பத்தை தங்களது ஊடக பலத்தால் கட்டமைத்து விட்டிருக்கின்ற நிலையில்......
நாளை திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்ற இலக்கோடு களம் கண்டிருக்கும் திமுகவின் வருங்கால தலைவர், தங்கள் கட்சியில் இருப்பவர்களில் 90 சதவிகிதம் பேர் இந்துக்கள் என்று சொன்னதன் மூலம், இந்துத்துவா அமைப்புக்களால், திமுக மீது சுமத்தப்பட்டிருக்கும் இந்து விரோதிகள் என்ற மாயை முகமுடியை கிழித்துத் தொங்கவிட்டிருக்கின்றார் என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அவரது நமக்கு நாமே பயணத்தால் எந்தப் பிரயோஜனமும் இல்லை, நாடகம், ஏமாற்று வேலை... என்றெல்லாம் ஜெயலலிதாவின் அல்லக்கைகள் தினம் ஒருவராக புலம்புகின்ற நிலையில், பாஜகவின் தமிழக தலைமையோ, ஸ்டாலின் இந்துக்களுக்கு ஆதரவானவர் போல வேஷம் கட்டுகின்றார் என்று பதறுகின்ற நிலையில்....
வாழைப்பழத்தில் ஊசி ஏறுவது போல பழ. கருப்பையா, திமுக தொண்டர்களிடையே கலகத்தை ஏற்படுத்திடும் பொறுட்டு திராவிடத்திற்காக நீலிக்கண்ணீர் வடித்து ஒரு கட்டுரையை வெளியிடுகின்றார்.
திராவிடத்தைப் பொறுத்தவரை இந்து என்ற மதமே இல்லை என்கிற பொழுது, ஸ்டாலின் இந்துக்கள் என்று சொல்லி உண்மையான திமுக தொண்டர்களை அசிங்கப்படுத்திவிட்டார் என்றும் புலம்புகின்றார்.
திராவிடம் பற்றிய அடிப்படை புரிதலே இல்லாமல் தான் இருக்கிறது அவரது இந்தப் புலம்பல். திராவிடம் என்பதும், திராவிடர் என்பதும் இந்து, முஸ்லிம், கிருத்துவ மற்றும் ஏனைய மதம் சாந்தோ அவற்றுக்கு எதிராகவோ என்றைக்கும் கிடையாது. அது ஆரியர்களுக்கு எதிரானது... இன்னும் கொஞ்சம் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் ஆரியர்களால் திணிக்கப்பட்ட வர்ணாசிரமம், பெண் அடிமைத்தனம், சாதியால் மனிதனை கூறு போடுதல், மூட பழக்கவழக்கங்கள், அனைவருக்கும் கல்வி மறுக்கப்படுதல்.... இப்படியான அடக்குமுறை கலாச்சாரத்திற்கு எதிரானது தான் திராவிடம் என்பது.
ஆரியர் அல்லாத... குறிப்பாக பார்ப்பனர் அல்லாத அனைவரும்.., அவர் எந்த சாதியைச் சேர்ந்தவர், மதத்தைச் சேர்ந்தவர் என்றாலும் அவரும் திராவிடரே என்ற கருத்தோடு செயல்படுவது தான் திராவிடம். இஸ்லாம், கிருத்துவ, சீக்கிய மதத்தைச் சாராத அனைவருமே இந்துக்கள் என்ற பெயரோடு அழைக்கப்படுவதாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்லி, அதனை அனைவரும் ஏற்று செயல்பட்டு வரும் நிலையில், பழ. கருப்பையாவே அந்த அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டு சத்தியப்பிரமாணம் செய்து பதவி ஏற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில், திமுகவில் உள்ள இஸ்லாமியர், கிருத்தவர் தவிர்த்தவர்களை இந்துக்கள் என்று தளபதி மு.க. ஸ்டாலின் சொன்னதில் வருத்தம் கொள்வது என்பது ஆடு நனைவதற்கு ஓனாய் வருந்தியதாகத்தான் அர்த்தம் கொள்ளப்படும்.
ஆகவே திமுகவினர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களும் சற்று சிந்தித்து இது போன்ற மறைமுக கலகக்காரர்களிடமிருந்து உஷாராக தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டிய தருணம் இது என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன்.