அன்புள்ள அம்மா அவர்களுக்கு தமிழகத்தின் ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தலைவன் எழுதும் நன்றி மடல்:
அம்மா..., கடந்த ஆட்சிக்காலங்களில் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை எங்கள் வீட்டிற்கான மின் கட்டணம் சராசரியாக ரூபாய் இரண்டாயிரத்து ஐநூறு வரையிலும் கட்டிவந்தேன்.
ஆனால் தாங்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்னால் படிப்படியாக மின் தடை நேரம் அதிகரித்த படியாலும், கடந்த ஆட்சிக் காலத்தில் எங்கள் வீட்டில் உள்ள மின் விளக்குகள், மின் விசிறிகள் மற்றும் மின் சாதனங்களை அதிகம் பயன்படுத்தாத பட்டப்பகல் நேரத்தில் மட்டுமே மின் தடை செய்துவந்த நிலையில்....,
தங்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்பு, எங்கள் வீட்டில் உள்ள அனைத்து மின் விளக்குகள், மின்விசிறிகள், டி.வி மற்றும் மின் சாதனக்களையும் முழுமையாக உபயோகப்படுத்தும் நேரமான மாலை ஆறு முப்பதுக்கு மேல் இரவு பத்து மணிக்குள் 2 மணி நேரம் மின் தடை செய்யப்படுவதால், நாங்கள் தினமும் உபயோகிக்கும் மின்சாரத்தின் அளவு வெகுவாக குறைந்து விட்டது.
இதன் காரணமாக தற்பொழுதெல்லாம் இரண்டு மாதத்திற்கொருமுறை ரூபாய் ஆயிரத்து ஐநூறிலிருந்து ஆயிரத்து எண்ணூறு வரையிலும் மட்டுமே மின் கட்டணம் செலுத்தும் உன்னதமான வாய்ப்பு எங்கள் குடும்பத்திற்கு வாய்த்திருக்கின்றது.
இதன் காரணமாக தாங்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இது வரையிலும் மூவாயிரம் ரூபாய் வரையிலும் மின் கட்டணம் மூலமாக மிச்சமாகி எங்கள் சேமிப்புக் கணக்கில் வரவு வைத்திருக்கின்றோம்! இதே நிலையில் மின் தடை நேரத்தை நீங்கள் தக்கவைத்துக் கொண்டிருந்தீர்களேயானால், தங்களின் ஐந்து வருட ஆட்சி முடிவுறும் தருவாயில் என்னைப் போன்ற ஊதாரித்தனமாக செலவு செய்யாத ஒவ்வொரு தமிழக குடிமகனுக்கும் கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் ரூபாய் வரையிலும் மின் சிக்கனத்தால் மட்டுமே சேமிப்பு கிடைத்துவிடும்!
இது ஒரு நேரிடையான பொருளாதார சேமிப்பு என்றல், இன்னும் மறைமுகமான எண்ணற்ற பலன்களையும், நல்ல பழக்கவழக்கங்களையும், உடல் ஆரோக்கியத்தையும் எங்கள் குடும்பத்தார் பெற்று சொல்லொனா இன்பத்தில் திளைத்துக் கொண்டிருக்கின்றனர்.
குறிப்பாக என் மகன் மாலையில் விளையாடி முடித்து கை, கால் கழுவி படிக்க உட்காரும் பொழுது சரியாக மின் தடை ஏற்பட்டுவிடுவதால்..., முன்பெல்லாம் வீட்டு ஹாலில் ஓடிக்கொண்டிருக்கும் டீ.வி யிலேயே கவனம் சென்று கொண்டிருந்தது இப்பொழுது நிவர்த்தியாகி, மெழுகுவர்த்தி ஒளியிலேயே படிப்பதால், கண்ணும் மனமும் (வேறு வாய்ப்பிலாததால்) பாடப்புத்தகத்தின் மேலேயே லயித்து மனதை மிக விரைவாக ஒரு நிலைப் படுத்தி நன்றாக படித்து அதிக மதிப்பெண்களைப் பெற ஆரம்பித்திருக்கின்றான்!
அது மட்டுமா, முன்பெல்லாம் படித்து முடித்துவிட்டேன் பேர்வழி என்று இரவு 9.00 மணிக்கெல்லாம் டீ.வி பார்க்க உட்கார்ந்து பதினொன்று அல்லது பன்னிரெண்டு மணி வரையிலும் பார்த்து விட்டு, அதன் காரணமாக காலை ஏழரைக்கு மேல் தான் விழித்து அவசரமாக பள்ளிக்கு கிளம்பிச் செல்லும் என் மகன், இப்பொழுதெல்லாம் (மின்சாரம் இல்லாததால்) இரவு 9.00 மணிக்கெல்லாம் சரியாகப் படுத்து விடுகின்றான்.
அதன் காரணமாக மறுநாள் அதிகாலை ஐந்தரைக்கே எழுந்து ஒரு மணி நேரம் படித்து விட்டுத் தான் பள்ளிக்கு கிளம்பிச் செல்கிறான். இதைப் பார்க்கும் பொழுது எனக்கும் என் மனைவிக்கும் என் பெற்றோர்களுக்கும் கண்கள் பணிக்கின்றன... இதயம் இனிக்கின்றன!!
இது மட்டுமா, காலை எட்டு மணிக்கெல்லாம் மின் தடை செய்யப்பட்டு விடுவதால், அவசரமாக பள்ளி மற்றும் அலுவலகம் செல்லும் எங்களுக்கு (வேறு வழியின்றி) அம்மியிலேயே சட்னி அரைக்கும் நிலை என் மனைவிக்கு ஏற்பட்டுவிட்டது.
ஆரம்பத்தில் இது சிரமமாகத் தோன்றிய அவளுக்கு இப்பொழுது இது ஒரு நல்ல உடற்பயிற்சியாகத் தெரிய ஆரம்பித்து விட்டது. இப்பொழுது அவளுடைய (அதிக கொழுப்பினால் குண்டாகியிருந்த) கைகள் எல்லாம் மெலிந்து இடுப்பு சதைகள் குறைந்து ...., தான் ஸ்லிம்மாகவும் அழகாகவும் மாறிக்கொண்டிருப்பதாக அடிக்கடி சொல்லிக் கொள்கிறாள்!
என் மகனைப் போலவே அவளும் என்னோடு காலை ஐந்தரை மணிக்கெல்லாம் (இரவு சீக்கிரமாக படுத்து விடுவதால் விழிப்பு தானாக வந்து விடுகிறது) எழுந்து (சும்மா உட்கார்ந்திருப்பதற்கு பதில்) வீடு, வாசல் பெருக்கி காலை ஆறரை மணிக்கெல்லாம் என் பெற்றோருக்கும் எனக்கும் காஃபி கொடுத்து விடுகின்றாள். (உன் உடம்பு மெலிந்து அழகாக தோற்றமளிக்க இந்த உடற்பயிற்சியும் ஒரு காரணம் என்று அவளிடம் நான் சொல்லி வைத்திருப்பது தனிக்கதை)
ஆகவே அம்மா அவர்களே உங்கள் ஆட்சியில், மிக முக்கிய தருணங்களிலெல்லாம் மின் தடை செய்து, எங்கள் குடும்பத்திற்கு நல்லதொரு பொருளாதார சேமிப்பை உருவாக்கிக் கொடுத்திருப்பதோடு, என் மகன், மனைவி உட்பட அனைவரும் தத்தமது கடமைகளை மிகச் சிறப்பாக செய்து, "நல்லதொரு குடும்பம் பலகலைக் கழகம்" என்பது போல் மிகுந்த மகிழ்ச்சியுடனும், குதூகலத்தோடும், ஆரோக்கியத்தோடும் வாழ வழி செய்த உங்களுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக கோடானு கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்!!
14 comments:
உண்மை
SUPERB
Well said keep it up
Well said keep it up
ஹா ஹா ஹா ஹா
ஆதங்கத்தை இப்படி சொல்வதை விட வேறு வழி இல்லை....
நீங்கள் வீட்டிலேயே நன்றாக உறங்கி விடுவதால், அலுவலகத்தில் உறங்கும் கெட்ட பழக்கம் போய்விட்டதையும் குறிப்பிட்டிருக்கலாம்.
உண்மைதான்...
இதற்கு பெயர் தான் உள்குத்து கட்டுரையோ சௌம்மி அண்ணா...
உண்மை தான் பொ.முருகன்!! )))
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் முரளி கண்ணன் & கேசவ பாஷ்யம்.
அம்மா விரைவில் முழுமின்சாரத்தையும் நிறுத்தினால்...இன்னும் நிறைய நாம் சேமிக்க முடியும் அதற்கு நன்றி கடனாக இனி வரும் தேர்ந்தலில் அம்மாவை...ஹிஹி
கேலிக்கூத்து போல இருந்தாலும், இது உண்மை தானே!!
அதுக்குத்தான் மின் கட்டணத்தை ஏத்தி வச்சிட்டோம்ல ஆப்பு
Post a Comment