Monday, December 29, 2014

மாதொரு பாகனும்... திராவிட அரசியலும்..!


இத்தனை காலமாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கொஞ்சம் கொஞ்சமாக கால் ஊன்றி தமிழகத்தில் மட்டும் ஒரு சிறிய ஆளுமையைக் கூட பதிவு செய்ய இயலாமல் இருந்த பாஜக....
இப்பொழுது மத்திய அரசில் அறுதிப் பெரும்பான்மையுடன் கூடிய மிருகபலத்துடன் ஆட்சியைப் பிடித்து அமர்ந்து விட்ட பிறகு... இது தான் தமிழகத்தில் காலூன்ற சரியான தருணம் என்று திட்டமிட்டு, தனக்கிருக்கும் அதிகார பலத்தை பயன்படுத்தி அனைத்துவிதமான உபாயங்களையும் இங்கே இறக்கிவிட்டிருக்கிறது என்றே தோன்றுகிறது.
அந்த உபாயங்களில் ஒன்று தான் பாஜகவின் கொள்கைகளுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்ட புத்தகங்கள், திரைப்படங்கள் மற்றும் இன்னபிற பரப்புரைகளை சாம, பேத, தான, தண்டங்களைக் கொண்டு தடை செய்கின்ற நடவடிக்கைகள்.
அந்த வகையில் பிகே என்ற பகுத்தறிவுப் பாடத்தைச் சொல்லும் திரைப்படத்தை தடை செய்த கையோடு......
நான்காண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்ட மாதொருபாகன் என்ற நூலை இந்துமத அடிப்படைவாதத்திற்கு எதிரான கருத்துக்களைக் கொண்டதாகச் சொல்லி, வன்முறை வெறியாட்டங்கள் மூலமாகவும், அறிக்கைகள் வாயிலாகவும் தடை செய்ய தமிழக பாஜக தன் கிளைக் கழகங்கள் மூலமாக களமிறங்கியிருக்கின்றது.
அந்தப் புத்தகத்தை படித்தவர்கள் எல்லாம் அப்படியே பாஜகவுக்கு எதிராக வாக்களித்துவிடப் போகின்றார்களா? அல்லது அந்தப் புத்தகம், அப்படி என்ன அவ்வளவு வேகமாக விற்றுத் தீர்ந்து கொண்டிருக்கின்றதா? அல்லது இதற்கு முன்பாக தமிழகத்தில் ஆரியத்தையும், இந்து மதத்தையும் எதிர்த்து இதைவிட மோசமாகவும், நேரிடையாகவும் எழுதப்பட்ட புத்தங்களை வெளி வந்திருக்கத்தான் இல்லையா???
இப்படி ஒரு புத்தகம், அதிலும் இந்து அடிப்படைவாதத்திற்கு எதிரான கருத்துக்களோடு வெளி வந்திருப்பதே, இப்பொழுது பாஜகவின் பலமான எதிர்ப்புக்குப் பிறகு தான் இங்கே பலபேருக்கு தெரியவே வந்திருக்கின்றது...!
மேலும் இதற்கெல்லாம் முன்னதாக, ஆரிய மாயை, கம்பரசம், அர்த்தமற்ற இந்துமதம்...... இப்படியாகவெல்லாம் எண்ணற்ற இந்து மத எதிர்ப்புப் புத்தகங்கள் தமிழகத்தில் வெளி வந்து அவை அனைத்தும் இன்றுவரையிலும் கூட விற்பனையில் சக்கைபோடு போட்டுக்கொண்டு தான் இருக்கின்றது...!
ஆனால் பாஜக இன்றைக்கு, அந்தப் புத்தங்களை தடை செய்ய முன்வரவில்லையே ஏன்? அதைச் செய்தால், தமிழகத்தில் இன்றளவிலும் பலமாக இருக்கின்ற திராவிட இயக்கங்கள், குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகம், அதை வெறுமனே வேடிக்கப் பார்த்துக்கொண்டிருக்காது. அதை காரணமாக வைத்தே, தமிழகத்தில் நீர்த்துப் போயிருப்பதாக பாஜகவினரால் நம்பவைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் திராவிட இயக்க சித்தாந்தங்கள், வெகு வேகமாக காட்டுத் தீ போன்று இங்கே இளைஞர்கள் மத்தியில் பரவ வைக்கப்பட்டுவிடும்...!
திராவிட இயக்கங்களை, சித்தாந்தங்களை இங்கே நீர்த்துப்போக வைத்தால் தான், தமிழகத்தில் பாஜகவினால் காலூன்ற முடியும் என்ற நிலையில் தான், முன்னதாக தமிழ் தேசியம் மற்றும் ஜாதிக் கட்சிகள் என்ற இரட்டைக் குழல் துப்பாக்கியை தமது ஊடக பலத்தைக் கொண்டு இங்கே வளர்த்தெடுத்துக் கொண்டிருக்கின்றது பாஜக.

ஆனால் அந்தப் பக்கத்திலிருந்தே பாஜகவின் கொள்கைகளுக்கு எதிராக ஒரு இங்கே ஒரு நூல் வெளியாவதை அவர்களால் பொறுத்துக்கொள்ள இயலுமா? அது மட்டுமின்றி, உனக்கு கொடுக்கப்பட்ட வேலை திராவிட இயக்கங்களை, சித்தாந்தங்களை நீர்த்துப்போக வைப்பது மட்டுமேயன்றி, ஆரியத்திற்கு எதிராக உன் துப்பாக்கி முனையை திருப்புவது அல்ல என்பதை அவர்களுக்கு ஆணித்தரமாக புரிய வைக்க வேண்டாமா???
அதைத்தான் இப்பொழுது பாஜக செய்ய ஆரம்பித்திருக்கின்றது.
இனி தமிழகத்தில் உள்ள உண்மையான பொது நலனுடன் செயல்படக்கூடிய தமிழ் தேசியவாதிகளும், ஜாதியக் கட்சிகளின் பின்னால் அணி வகுத்திருக்கும் நியாயமான இளைஞர்களும், ஆரியத்தால் போஷாக்கோடு வளர்க்கப்பட்டுக்கொண்டிருக்கும் உங்கள் தலைவர்களின் பேச்சை நம்பி ஏமாறாமல், திராவிடத்தின் அணியில் ஒன்றிணைய வேண்டும்.
தனியாக நின்று உங்களால் ஆரிய அடக்குமுறையை நிச்சயமாக தாக்குப் பிடிக்க முடியாது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். நம் பங்காளி சண்டைகளை எப்பொழுது வேண்டுமானாலும் தீர்த்துக்கொள்ளலாம், ஆனால் ஆரிய சதியில் சிக்கினால், மீண்டும் அடிமையாக நேரிடும் என்ற உண்மையை உணர்ந்து ஓரணியில் திரளுங்கள்.


2 comments:

vijayan said...

முகமது பின் துக் ளக்,தண்ணீர் தண்ணீர் போன்ற திரைப்படங்கள் ஆனந்தவிகடன் அட்டைப்பட விசயத்தில் நீதிமன்றத்தில் கிடைத்த பரிசு எல்லாம் திராவிட இயக்கங்கள் விமர்சனங்களை எந்தவிதத்தில் ஆண்மையுடன் எதிர்கொண்டன என்பதை சரித்திரத்தில் பதிவு செய்ய வேண்டும்.

கொக்கரக்கோ..!!! said...

தாராளமாக பதிவு செய்யுங்களேன். நீங்கள் சொல்லுகின்ற அனைத்துமே எதிர் தரப்பினரின் கருத்துச் சுதந்திரங்கள். ஆனால் திராவிட இயக்கத்தின் கருத்துக்களுக்கு தடை விதிப்பதை எதிர்த்து ஆரிய மாயைகு எதிரான தடைக்கு திமுக போராடிய விதத்திலேயே வரலாற்றினை தெளிவாக புரிந்துகொள்ளலாம், திராவிட இயக்கங்கள் தங்கள் கருத்துச் சுதந்திரத்தை பறிக்கும் போது எப்படி எதிர்வினை ஆற்றினார்கள் என்று!