Thursday, February 16, 2012

ஆட்டம் காண்கிறதா அதிமுக?!

அறுதிப் பெரும்பான்மை, மிருக பலம், வெகுஜன ஊடகங்களின் ஆதரவு என்று போய்க்கொண்டிருக்கும் 9 மாதங்களே ஆன அதிமுக ஆட்சிக்கு என்ன கஷ்டம்? அது ஏன் ஆட்டம் காணப்போகிறது? என்ற எண்ணத்துடன் யாராவது இக்கட்டுரையை வாசிக்க வந்திருந்தால்... ஸாரி!

இது அதிமுகவின் ஆட்சியைப் பற்றிய அலசலோ, விமர்சனமோ அல்ல. மாறாக அதிமுக என்னும் தமிழகத்தின் பிரதான இரு அரசியல் கட்சிகளில் ஒன்றினைப் பற்றிய ஊடுறுவல் பார்வையே.

எந்தவொரு மாநிலமானாலும் அதில் ஒரு கட்சி ஆட்சியமைக்கக் கூடிய அளவில் பெரிய இயக்கமாக தொடர்ந்து இருக்க வேண்டுமானால் பல்வேறு காரணிகளை நாம் அடுக்கிக் கொண்டே செல்லலாம். உதாரணமாக அக் கட்சியின் கொள்கைகள், ஆளுமைத்திறன் மிக்க தலைவர்கள், ஊழலுக்கு அப்பாற்பட்ட தலைவர்கள், இளமையும் சுறுசுறுப்புமிக்க தலைவர்கள்... என்று நிறைய சொல்லலாம்.

ஆனால் இந்த குணாதிசயங்களையெல்லாம் கொண்ட எத்தனையோ கட்சிகள் தமிழகத்தில் துறும்பைக்கூட கிள்ள முடியாத நிலையில் தான் இருந்து காணாமல் போயிருக்கின்றன அல்லது இன்னமும் சில அந்த நிலையை நோக்கி நகர்ந்த வண்ணம் இருந்து கொண்டிருக்கின்றன!

அப்படியென்றால் ஒரு கட்சி ஆட்சியைப் பிடிக்குமளவிற்கு தகுதியுடையதாக இருக்க வேண்டுமென்றால் அதற்கு இருக்க வேண்டிய அந்த முக்கியமான தவிர்க்க முடியாத தகுதி தான் என்ன?

ரொம்ப சிம்ப்பிள்! மாநிலத்தின் மூலை முடுக்கு, இண்டு இடுக்கு என்று சொல்வார்களே அத்தனையிலும் அதாவது மாநில அளவில் ஆரம்பித்து, மாவட்டம், வட்டம், ஒன்றியம், கிளைக் கழகங்கள் என்று மாநிலத்தின் நிலப்பரப்பு முழுமைக்கும் வியாபித்திருக்கக் கூடிய அளவிற்கு அந்த கட்சியின் கிளைகள் பரந்து விரிந்து மண்ணோடு... மன்னிக்கவும் மக்களோடு பின்னிப் பிணைந்திருக்க வேண்டும்!

இது தான், இந்தத் தகுதிதான் எந்தவொரு கட்சியாக இருந்தாலும் அதை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தக்கூடிய சூட்சுமம் அல்லது சூத்திரமாக இருக்கின்றது. இந்த தகுதியுள்ள ஒரு கட்சியின் தலைவர்களோ மற்ற பொருப்பாளர்களோ என்ன மாதிரியான அடாவடித்தனம், மொள்ளமாறித் தனம், அல்லது முடிச்சவிக்கித் தனம் செய்து கொண்டிருந்தாலும் அது பிரச்சினையில்லை!

இந்த டேஷ்..தனங்களையெல்லாம் ஆட்சியிலிருக்கும் ஒரு கட்சி செய்வதாக குபீரென்று குதித்தெழுந்த எதாவது ஒரு குழு அல்லது இயக்கம் அல்லது நன்கு பேச்சு அல்லது எழுத்துத் திறமையுள்ள ஒருவர் தேர்தலுக்கு சமீபமாக புறப்பட்டால், அவர்களுக்கு வெகுஜன ஊடக துணையுமிருந்தால் இந்தக் கட்சியின் ஆட்சி மக்களால் அகற்றப்பட்டுவிடும்.

இந்தக் கட்சி ஆட்சியை விட்டு வெளியேற்றப்படுகிறது என்றால் அதற்கு காரணமான அந்த குபீர், திடீர் குழுக்களோ, இயக்கங்களோ அல்லது எழுச்சி நாயகனோ..... என்று யாரும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துவிட முடியாது! மாறாக புறந்தள்ளப்பட்ட கட்சியைப் போன்று மாநிலத்தின் குக்கிராமங்கள் வரையிலும் கிளை பரப்பி மக்களோடு பின்னிப் பிணைந்திருக்கும் இன்னொரு கட்சிதான் ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியும்!

இது தான் நிதர்சனம்! இது தான் எதார்த்தம்!! இது தான் இன்று வரையிலும் நடைமுறையில் இருந்து கொண்டிருக்கிறது.

அதெல்லாம் சரி, அதிமுக பற்றி எழுதுவதாக சொல்லிவிட்டு, வேறு ட்ராக் மாறி போவது போல் தோன்றுகிறதே என்று யாராவது கேட்பீர்களேயானால்.... வெயிட்டீஸ்! அங்கு தான் வருகிறோம்.

நம் தமிழகத்தை எடுத்துக் கொண்டால் மேலே சொன்ன தகுதிகளோடு இருந்து கொண்டிருக்கும் கட்சிகள் திமுகவும் அதிமுகவும் மட்டுமே என்பது அரசியல் விழிப்புணர்வு இல்லாதவர்கள் கூட தெரிந்து வைத்திருக்கும் ஒரு அடிப்படை விஷயம்!

கடந்த திமுக ஆட்சி பெரிய அளவில் ஊழல் செய்துவிட்டது, நிறைய அடாவடித் தனங்கள் செய்யப்பட்டன, இலங்கைப் பிரச்சினையில் துரோகம் இழைக்கப்பட்டது... என்றெல்லாம் பிரச்சாரம் செய்து தான் அந்த ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

அப்படியென்றால் இந்த தவறுகளையெல்லாம் செய்யாத ஒரு வரலாற்றைக் கொண்ட கட்சியோ அல்லது இவ்வாறெல்லாம் பெரிய அளவில் பிரச்சாரம் அல்லது பரப்புரை செய்த நாம் தமிழர், மே 17, போன்ற இயக்கங்களோ அல்லது தமிழருவி மணியன், வைக்கோ, நெடுமாறன், தா.பாண்டியன் போன்றோர்களோ தானே ஆட்சிக்கு வந்திருக்க வேண்டும்?!

ஆனால் அறுதிப் பெறும்பான்மையோடு ஆட்சி அமைத்திருப்பது ஜெயலலிதா தலைமையிலான அதிமுக தானே?!  இது எதைக் காட்டுகின்றது?. ஆட்சியமைக்க தகுதியான காரணமாக மேலே நாம் சுட்டிக் காட்டிய சூத்திரம் மிகச் சரியானது என்பதைத் தானே?!

ஆகவே நாற்பது வருடங்களுக்கு முன்பாக அமரர் எம்ஜிஆர் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட அதிமுக, தமிழகத்தின் குக்கிராமங்கள் வரை கிளைகள் பரப்பி பொருப்பாளர்களை நியமித்து மக்களோடு பின்னிப் பிணைந்து செயல்பட்டு வருவதாலேயே தான் இன்றைக்கு திமுகவுக்கு மாற்று என்று வரும் பொழுது ஆட்சி அதிகாரத்தை தன்னகத்தே வசீகரித்துக் கொண்டிருக்கிறது.

இப்படி தமிழகத்தின் ஆளத்தகுதியுள்ள இரண்டு கட்சிகளில் ஒன்றான அதிமுக இந்த முறை ஆட்சிக்கு வந்த பிறகு இன்றைக்கு அக்கட்சியின் நிலை என்ன என்பதை சற்று தெளிவாகப் பார்ப்போம்.

ஒரு கட்சிக்கு மாநில அளவிலான பொருப்பாளர்கள் எந்த அளவிற்கு முக்கியமோ அதைவிட அக்கட்சி ஆட்சி அதிகாரத்தைப் பிடிப்பதற்கு மாவட்ட கழக பொருப்பாளர்களும், நகர கழக, ஒன்றிய கழக மற்றும் கிளைக் கழகங்களின் பொருப்பாளர்களும் மிக மிக முக்கியமானவர்களாகின்றனர்.

மாநில பொருப்புகளைத் தவிர்த்து, சற்றேரக்குறைய, 40 மாவட்ட கழகத்திற்கான (நிர்வாக வசதிக்காக கட்சி மாவட்டம் என்பது கைக்கடக்கமாக அமைத்துக் கொள்வார்கள்) நிர்வாகிகள்,  இருநூற்றுக்கும் அதிகமான நகரக்கழகத்திற்கான  நிர்வாகிகள், 300 க்கும் அதிகமான ஒன்றிய கழகத்திற்கான நிர்வாகிகள், நகர கழகமென்றால் வார்டுகளும், ஒன்றிய கழகமென்றால் பஞ்சாயத்துகளுமாகச் சேர்ந்து சற்றேரக்குறைய ஐம்பதினாயிரத்திற்கும் அதிகமான கிளைக் கழகங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும்... என்று ஒவ்வொரு கழகத்திற்கும் குறைந்தது அல்லது சராசரியாக 6 பொருப்பாளர்கள் என்று வைத்துக் கொண்டால் கூட ..... ஆட்சியமைக்க தகுதியுள்ள ஒரு கட்சிக்கு கிட்டத்தட்ட ஒன்பது லட்சம் பொருப்பாளர்கள் பதவி வகித்துக் கொண்டிருப்பார்கள்!!!

இதெல்லாமே தலைமை கழகத்தின் மேலிருந்து கீழான அனைத்து கிளைகளின் நிர்வாகிகள் அல்லது பொறுப்பாளர்கள் மட்டுமே. இதைத் தவிர்த்து, கட்சியின் துணை அமைப்புகளான இளைஞர் அணி, மகளிர் அணி, சிறுபான்மையினர் அணி, மாணவரணி, வழக்கறிஞர்கள் அணி, மருத்துவரணி, தொழிற்சங்க அமைப்பு.... இப்படி ஒரு நீஈஈண்ட பட்டியலே அணி வகுத்து நிற்கும்.

இதில் இளைஞர் அணி, மாணவரணி, மகளிரணி, சிறுபான்மையினரணி போன்றவை தலைமைக் கழகங்கள் போலவே குக்கிராமங்கள் வரையிலும் கிளைகளைப் பரப்பி, பொறுப்பாளர்கள் செம்மையாக செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

இப்படி துணை அமைப்புகள் அனைத்திலும் மட்டுமே தனியாக பத்து லட்சத்திற்கும் அதிகமான பொறுப்பாளர்கள் பதவியில் வலம் வந்து கொண்டிருப்பார்கள்.

இதில் இருக்கின்ற இன்னும் பல வகையான துணை அமைப்புகளையும் பற்றி முழுமையாக எழுத ஆரம்பித்தால், படிப்பவர்களுக்கு தலை சுற்றி மயக்கமே வந்து விடும்!

இப்படி ஒரு ஸ்திரமான கிளைகளையும், அமைப்புகளையும் கொண்ட ஒரு கட்சி அல்லது இயக்கத்தின் தலைமை சென்னையில் அமர்ந்து கொண்டு அரசுக்கு எதிரான ஒரு போராட்டத்தை அறிவிக்கிறது என்று சொன்னால், அது கன்னியாகுமரியிலிருந்து ஒரு டவுன் பஸ் ஏறி 15 கிமீ தூரத்திலிருக்கும் ஒரு ஊரில் இறங்கி, அங்கிருந்த ஒரு மினி பஸ் ஏறி 7 கிமீ தள்ளியிருக்கும் கிராமத்தில் இறங்கி, அங்கிருந்து பொடி நடையாக 2 கிமீ நடந்து சென்றால் வருமே ஒரு குக்கிராமம், அங்கிருக்கும் அக்கட்சியின் கிளைக்கழகத்திலிருக்கும் ஐந்தாறு பொருப்பாளர்கள், தங்களோடு இன்னும் பத்து உறுப்பினர்களையாவது சேர்த்துக் கொண்டு அந்த ஊரின் பஞ்சாயத்து போர்டு அலுவலகம் முன்பு கூடி கட்சிக் கொடிகளை கையிலேந்திக் கொண்டு, தலைமைக் கழகம் முதல் நாள் கட்சியின் அதிகாரப்பூர்வ தினசரியில் வெளியிட்டிருக்கும் வாசங்களை கோஷமிட்டவாறு ஆர்ப்பாட்டம் செய்வார்கள்!

இது அந்த குக்கிராமத்திலிருக்கும் சில நூறு பொது மக்களின் கவனத்திற்கும் கட்டாயமாய் சென்று சேரும்!! அது மட்டுமா? அந்த ஊரில் நடக்கும் நல்லது கெட்டது திருவிழா என்று எதுவானாலும் இந்த கட்சி பொறுப்பாளர்கள் முன்னின்று நடத்தி அரசாங்கத்திலிருந்து பெற இயலும் அனைத்து விதமான சலுகைகளையும், உதவிகளையும் பெற்றுத் தர ஆவண செய்வார்கள்.

அப்படி செய்யத் தவறினால் அடுத்தடுத்து வரும் எந்த தேர்தலிலும் அந்த ஊர் மக்களிடம் சென்று வாக்கு கேட்க இயலாது. அரசாங்க உதவி என்றால் ஆளுங்கட்சியினரையும், அரசு முறைகேட்டுக்கு எதிரான போராட்டம் என்றால் அந்த இன்னொரு மாற்றுக் கட்சியினரையும் மக்கள் அரவணைத்துச் செல்லும் பழக்கம் இங்கு மிகவும் சகஜம்.

உண்மையில் சொல்லப் போனால் இந்த மாதிரி பொது ஜனம் தான் உண்மையான நடுநிலை வாதிகள். எந்த கட்சியின் மீதும் தேவைக்கு அதிகமான விருப்போ அல்லது அதீத வெறுப்போ இல்லாமல் பொதுவான நிலையில் வைத்தே பழகுவார்கள். இப்படிப் பட்டவர்கள் தான் வெற்றி தோல்வியையே நிர்ணயிக்கின்றார்கள்.

இதுவரையிலு அதிமுக என்ற கட்சிக்கு இந்த கட்சி அமைப்பு என்பது ஓரளவிற்கு திமுகவிற்கு ஈடு கொடுக்கும் வகையில் பலம் வாய்ந்ததாக இருந்திருக்கிறது என்றாலும், கடந்த மூன்று மாதங்களாக கட்சியின் அந்த அசைக்க முடியாத உறவு வலை நைந்து போக ஆரம்பித்திருக்கிறதோ என்ற ஐயப்பாடு எழுவதை நடப்பவைகளை பார்க்கும் போது தவிர்க்க இயலவில்லை.

நான் மேலே சொன்ன கட்சியின் அடி வேர் வரையிலான கிளைகளின் பொறுப்பாளர்களையும், உறுப்பினர்களையும் ஒரு சொல்லுக்கு கட்டுப்பட்டு செயலாற்ற வைப்பது என்பது ஒரு மிகப் பெரிய கலை. கட்சியின் தலைமை என்பது எப்பொழுதும் அவர்களுக்கு அருகிலேயே இருப்பதான தோற்றத்தையும், எந்த நேரத்திலும் கட்சி தங்களை கைவிட்டு விடாது என்ற நம்பிக்கையையும் வளர்க்கும் படி ஒரு உறவுப் பாலத்தை மேம்படுத்தி வைத்திருக்க வேண்டும்.

கடைக்கோடி கிளைகளின் நிர்வாகிகளும் தங்களுக்குள்ள பிரச்சினையை, நகர அல்லது ஒன்றிய நிர்வாகிகளிடமோ, அவர்கள் சரியில்லாத பட்சத்தில் மாவட்ட நிர்வாகிகளிடமோ பேசி சரிசெய்து கொள்ளும் வாய்ப்போடு அந்த நிர்வாகிகளை இவர்கள் எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளும் நெருக்கத்தோடு இருக்க வேண்டும். 

அப்படி தொடர்பிலிருப்பதோடு அவர்களின் நல்லது கெட்டதுகளிலும் அக்கரை கொண்டிருந்தால் தான் மாவட்ட அளவில் நடத்தப்படும், போராட்டங்கள், மாநாடுகள் போன்றவற்றில் கிளைக்கழக நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொண்டு அவற்றை வெற்றியடையச் செய்து பொது மக்களை பிரமிக்க வைத்து கட்சிக்கான பலத்தை நிரூபித்துக் காட்டுவார்கள். 

அப்படி தங்கள் மாவட்டத்தை சிறப்பாக வழிநடத்திக் கொண்டிருப்பவர்களால் தான் தலைமைக் கழகத்தில் நல்ல பெயரோடும், தொடர்ந்து அதே பொருப்பில் பணியாற்றும் வாய்ப்போடும் இருக்க முடியும்.!!

ஆக, ஆள்வதற்கு தகுதியுள்ள ஒரு கட்சியின் தலைமை முதல் அடிமட்டத்திலிருக்கும் ஒரு கிளையின் நிவாகி வரையிலும் ஒரு வித பின்னலுடன் மிக லாவகமாகவும், ஒட்டுறவோடும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் நிதர்சனம்.

இந்த நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியின் போது ஜெயலலிதா, கட்சியினரோடு பெரிய அளவில் எந்தவிதமான உறவும் வைத்துக் கொண்டிருக்கவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. பெரும்பான்மை நேரத்தை அவர் பையனூரிலும், கொடநாட்டிலுமே கழித்தார் என்பதை நாடு நன்றாக அறியும்.

ஆனாலும் திமுகவின் பலவீனங்களாக பரப்புரை செய்யப்பட்டவற்றை தனக்கு சாதகமாக மாற்றி அறுவடை செய்து கொள்ளும் அளவிற்கு கட்சியை மேற் சொன்ன உட்கட்டமைப்போடு வைத்திருந்ததில் சசிகலா & கோவிற்கு மிகப் பெரும் பங்கிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

இப்பொழுது திமுகவின் தளபதி சுற்றிச் சுழன்று 30 வயதுக்குட்பட்டவர்களை சேர்த்து இளைஞரணியை மிகப் பெரும் சக்தியாக உருவாக்கிக் கொண்டிருப்பது போல, அப்பொழுது வெங்கடேஷ் என்ற சசிகலா உறவினர் அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை என்ற ஒரு அமைப்பை உருவாக்கி, நிறைய இளைஞர்களை அதன் உறுப்பினர்களாக்கி கட்சியை உயிரோட்டமாக வைத்திருக்க உதவியிருக்கின்றார்.

அதேப் போன்று சசிகலாவின் உறவினர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிவாரியாக கட்சியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் முதல் கடைமடை கிளைக்கழக நிர்வாகிகள் வரை கட்சி உட்கட்டமைப்பை எந்த இடைவெளியும் இல்லாமல் சிறப்பாக நடப்பதற்கு செயலாற்றிக் கொண்டிருந்தனர்.

அப்படி எல்லா மட்டத்திலுமே கட்சி உயிர்ப்போடு இருந்த காரணத்தினால் தான் திமுகவுக்கு மாற்று என்று மக்கள் நினைக்கும் போதே வேறு வாய்ப்பே இல்லாமல் அவர்கள் மனதில் அதிமுக வந்து உட்கார்ந்து கொண்டது! அதனால் ஆட்சியதிகாரத்தையும் கைப்பற்றியது.

ஆனால் சசிகலா எப்பொழுது கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டாரோ அன்றிலிருந்து நிலைமை தலைகீழாய் மாறிவிட்டது.

சசிகலாவையோ அல்லது அவர் உறவினர்களையோ வெளியேற்றியதால் அதிமுக என்ற கட்சி ஆட்டம் காண்கிறது என்று சொன்னால் என்னைவிட ஒரு முட்டாள் யாரும் இருக்க முடியாது!

ஆனால் உதாரணத்திற்கு சசியின் ஒரு உறவினரான ராவணன் என்பவர் மேற்கு மண்டலத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து ஆட்களை நியமித்திருந்தார். ஆனால் அந்த நிர்வாகிகள் தான் கட்சிக்கு அந்த பகுதியில் பெரும் வெற்றியை ஈட்டித் தந்தார்கள் என்பதை மறுக்க முடியாமா? முடியாது!

ஆகையினால், அந்த ராவணனை கட்சியிலிருந்து தூக்குவதால் எந்த பிரச்சினையும் வந்து விடாது. ஆனால் அந்த துரோகியால் நியமிக்கப்பட்டவர்கள் என்ற காரணத்திற்காக மட்டுமே அந்த மண்டலத்திலிருக்கும் அனைத்து அமைப்பு மற்றும் கிளைக் கழகங்களைச் சார்ந்த நிர்வாகிகளையும் மாற்றுவதோ அல்லது மட்டம் தட்டி வைத்திருப்பதோ என்று ஒவ்வொரு பகுதியிலும் செய்ய ஆரம்பித்திருப்பது தான் அதிமுக என்ற பெரும் இயக்கத்தை அடி வேரில் ஆட்டம் காண வைத்திருக்கின்றது!

அந்தந்த மாவட்ட கழக, நகர, ஒன்றிய கழக, கிளைக்கழக பொறுப்பாளர்கள் எல்லாம் என்ன பாவம் செய்தார்கள்? அதிமுக எதிர்க்கட்சியாய் இருந்த போது எவ்வளவு அவமானங்களையும், அடக்குமுறைகளையும் சந்தித்து, பொருட்செலவும் செய்து கட்சியை உயிர்ப்போடு வைத்திருந்திருப்பார்கள்?!

இவர்கள் இப்பொழுது வகிக்கின்ற பொருப்புக்களுக்கெல்லாம் ஆட்களை நியமிக்கும் அதிகாரத்தைக் கொடுத்து ராவணனையோ, திவாகரனையோ அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பி வைத்தது யார்? இவர்கள் தான் தங்களை நியமிக்கவோ அல்லது தூக்கியெறியவோ அதிகாரம் பெற்றவர்கள் என்கிற போது அவர்களின் விசுவாசிகளாகவும்,  அடிமைகளாகவும் இந்த நிர்வாகிகள் இருந்ததில் ஆச்சர்யமில்லை தானே? 

இப்பொழுது அவர்கள் துரத்தியடிக்கப்பட்டு விட்டார்கள் என்ற நிலையில் தலைமையாகிய ஜெயலலிதா அந்த பகுதிக்கு யாரை கை காட்டுகிறாறோ அவர்களுக்கு ஒத்துழைப்பாய் இருந்து கழகத்தை வழிநடத்தப் போகின்றார்கள்!

கட்சியின் பொறுப்பாளர்கள் அனைவரும் அதிமுக என்ற கட்சிக்கும் அதன் தலைவருக்கும் மட்டுமே என்றென்றைக்கும் நிரந்தர  விசுவாசிகள். இதைப் புரிந்து கொள்ளாமல் மேலிடம் எல்லோரையும் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது தான் கட்சியை அமைப்பு ரீதியாக அல்லாட வைத்துக் கொண்டிருக்கிறது.

இது தான் சமயமென்று பலர், யாருக்கும் கட்டுப்படாமல், அல்லது கேட்பதற்கு நாதியில்லை என்று தன்னிச்சையாக செயல்படுவதும், பிடிக்காதவர்களை சசிகலா பெயரைச் சொல்லி கட்டம் கட்டுவதும் என்று.... ஆணி வேர் இற்றுப் போய் தாய்மரம் பட்டுப்போன நிலையில், விழுதுகள் தாங்கிக் கொண்டிருப்பது போன்ற தோற்றத்திலேயே இன்றைய அதிமுக அறியப்படுகிறது.

இதே நிலை தொடர்ந்தால் பெரும் புயல் கூட வேண்டாம், ஒரு பலமான காற்று வீசினால் கூட அதிமுக என்னும் ஆலமரம் சாய்ந்து விடும் அபாயமிருக்கிறது!

சசிகலா பெயரைச் சொல்லி கட்டம் கட்டப்பட்டதால் உண்மையான அதிமுக தொண்டரொருவர் எம்ஜிஆர் சமாதியில் தீக்குளித்ததும், சட்டசபையில் நேருக்கு நேர் நாக்கை துறுத்தி எச்சரித்த விஜயகாந்த்தின் படைகள் இன்னமும் தெனாவட்டாக வலம் வந்து அதிமுகவுக்கு ஒரு படி மேலே போய் போஸ்டர் யுத்தம் நடத்துவதும். அதிமுகவின் அடிமட்ட தொண்டர்களையும், கிளைக்கழகங்களின் பொருப்பாளர்களையும் ஒருங்கிணைத்து வழி நடத்திச் சென்று என்றென்றும் கட்சியை உயிர்ப்போடு வைத்திருக்கக் கூடிய சக்திபடைத்த ஒரு நபரோ அல்லது குழுவோ அங்கு இல்லை என்பதுதான்  பொது மக்களாகிய நமக்கு உணர்த்துகின்ற உதாரணங்கள்.!!!

ஆகவே தோழர்களே அதிமுக என்னும் கட்சி அமைப்பு ரீதியாக ஆட்டம் காண ஆரம்பித்திருக்கிறது. உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து கவனிக்காவிட்டால்,  அடுத்தடுத்த தேர்தல்களில் வெற்றிக்கனி என்பது அதிமுகவுக்கு எட்டாக்கனியாகிவிடும!!!!!!!!












6 comments:

Anonymous said...

நல்ல,ஆழமான ஓர் அலசல்.நன்றி.வாழ்க

கொக்கரக்கோ..!!! said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுஜி!!!

KOMATHI JOBS said...

Nice Analysis! But ADMK SLaves not grasp this.., beware! Lady Wing may start the action like NAKKHEERAN!

Anonymous said...

Hi all visitors) who becomes the champion of England's football?
[url=http://medsonlinenoprescription.net/category/erectile-dysfunction]erectile dysfunction pills[/url]

Anonymous said...

hello, who would win in the Champions League? Barcelona or Real Madrid?
[url=http://medsonlinenoprescription.net/category/antibiotics]buy antibiotics no prescription[/url]

Anonymous said...

[url=http://buypropeciaonlinerx.com/#11424]generic propecia[/url] - propecia 5 mg , http://buypropeciaonlinerx.com/#1987 cheap propecia