கிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் ஆகிவிட்டது, பிராமணரல்லாத படித்த இளைஞர்கள் மற்றும் அரசு ஊழியர், அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட "மெட்ராஸ் யுனைடெட் லீக்" என்ற அமைப்பு. அந்த அமைப்பு தான் இன்றளவும் "திராவிடம்" என்ற வார்த்தையை முன்னாலோ, பின்னாலோ அல்லது நடுவிலோ இணைத்துக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட, அரசியல் சார்ந்த அல்லது சாராத இயக்கங்கள் அனைத்திற்குமான அஸ்திவாரமாக அமைந்தது என்று சொன்னால் அது நிச்சயம் மிகையில்லை.
இன்றைய இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் உட்பட சிறு சிறு நாடுகளை உள்ளடக்கிய அகண்ட பாரதமானது முற்றிலுமாக ஆங்கிலேயர்களின் ஆளுமைக்குள் வந்துவிட்டிருந்த பொழுது, அதுவரையிலும் நூற்றுக்கணக்கான தனி நாடுகளாக பிரிந்து கிடந்த பிரதேசங்கள் அனைத்துமே ஒரு குடையின் கீழ், ஒரே சட்ட திட்டங்களுடன் கூடிய ஓரிழையில் கோர்க்கப்பட்ட பல வண்ண மணிகள் கொண்ட நிர்வாகமாக கட்டமைக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
இதற்கிடையே, ஆரம்பத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக தனித்தனியே சுதந்திரத்திற்காக குரல் கொடுத்துக் கொண்டிருந்தது போக, ஒட்டுமொத்த இந்திய சுதந்திரத்திற்காகவும் வேண்டி ஒரு பேரியக்கமாக இணைந்து நாடு முழுவதுமே ஒரே இயக்கத்தின் தலைமையிலான சுதந்திரப் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. இந்த போராட்டக்காரர்களின் வாயை அடைப்பதற்காகவே, ஆளும் உரிமையை உங்களுக்கும் வழங்குகிறோம் பேர்வழி என்று மாகாணங்கள் பிரிக்கப்பட்டு, அதற்கான சட்டமன்றங்கள் அமைக்கப்படுவதும் அதற்கான பிரதிநிதிகளாக நாட்டின் குடிமகன்களும் பங்கேற்கும் வசதியும் ஆங்கிலேயர்களால் செய்து தரப்பட்டன.
அதெல்லாம் சரி, தலைப்புக்கும், இந்த நிகழ்வுகளுக்கும் என்னய்யா சம்பந்தம்? என்ற உங்கள் எரிச்சலான கேள்வி புரிகிறது. வெய்ட்டீஸ். இதோ அதற்குத்தான் வருகிறேன்.
இப்படி ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட நாடு முழுமைக்குமான நிர்வாகச் சங்கிலியிலும், ஆட்சிமன்றங்கள், நீதிமன்றங்கள் உட்பட அனைத்து பிரதிநிதித்துவங்களிலும், பல்நெடுங்காலமாகவே ஆட்சியாளர்களின் அருகாமையிலும், வேதம், பாராயணம் போன்ற கல்வி சம்பந்தப்பட்டவற்றிலும் தங்களை எப்பவும் முன்னிலைப்படுத்திக் கொண்டிருக்கும் பிராமணர்கள் இயற்கையாகவே அதிகமான வாய்ப்புகளைப் பெற்றனர்.
அதிகமான வாய்ப்புகள் என்று சாதாரண வெறும் வார்த்தைகளாகச் சொல்வதை விட, கிட்டத்தட்ட 75 சதவிகிதத்திற்கும் அதிகமான ஆட்சி மற்றும் அரசு நிர்வாகங்களில் மட்டுமல்லாது கல்வி மற்றும் புதிய வேலை வாய்ப்புக்களிலும் அந்த பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்களின் ஆதிக்கம் மிகவும் பலமாக வேறூன்றியிருந்ததாகத் தான் சொல்ல வேண்டும்.
மன்னராட்சி நடைபெற்ற காலங்களிலும் கூட பிராமணர்கள் ராஜ குருவாகவோ, முக்கிய மந்திரிப் பிரதானிகளாகவோ இருந்தார்களே தவிர பெரும்பான்மையான பணியிடங்களை அவர்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருந்ததாகத் தெரியவில்லை. அதேப் போன்று கல்வி என்ற ஒரு விஷயம், அவரவர் தத்தமது குலத்தொழில்களான, தங்கள் பாட்டன் முப்பாட்டன்கள் செய்து வந்ததை, அவர்களிட்ம் பயில்வது என்பதாகவே கருதப்பட்டதால், அது ஒரு முக்கிய பிரச்சினையாக யாருக்கும் படவில்லை.
ஆனால் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டுமானத்திலிருந்து, கைத்தறித்துறை வரையிலும் கொஞ்சம் கொஞ்சமாக அனைத்திற்குமே தனிதனி இயந்திரங்கள், அவற்றுக்கென்று தனித் தனி படிப்புகள், அதைப் படிப்பவர்கள் அத்துறையில் வல்லுநர்களாகவும், அதிகாரிகளாகவும் பணியமர்த்தப் பட்டு, பரம்பரையாக அந்தந்த தொழில்களை செய்து வந்தவர்கள் புறந்தள்ளப்படுவதும் இயல்பாகவே ஒரு உலகளாவிய சீர்திருத்தம் அல்லது வளர்ச்சி என்ற வகையில் நடந்தேறின.
இவற்றையும் தவிர, ஒரு பரந்த தேசத்தின், சங்கிலித் தொடர் போன்ற நிர்வாகத்தின் வரவு செலவுகளை கவனிக்க கணக்காளர்களும், நிர்வாக செயல்பாட்டினை பதிவு செய்ய குமாஸ்தா வகையறாக்களுமாக மிகப் பெரிய அளவிலான பணியிடங்களுக்கு, எழுதப் படிக்கத் தெரிந்திருந்தாலே போதும் என்ற அளவில், முக்காலும் மூணுவீசம் என்கிற அளவிற்கு பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே பணியமர்த்தப்படும் வாய்ப்பினைப் பெற்றார்கள்!
18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஏற்படத் துவங்கியிருந்த, மன்னராட்சிக்கும் - மக்களாட்சிக்கு இடைப்பட்ட காலத்திலான் "அடைகாத்தல்" மாதிரியான் இந்த மாற்றத்தை, பிராமணரல்லாத சமுதாயத்தவர்களால், உணர ஆரம்பிக்கவே அரை நூற்றாண்டுக் காலத்தை வீணடிக்க வேண்டியதாயிருந்தது! இந்த இடைப்பட்ட காலத்திலேயே இவ்வகைப் பணிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ளே நுழைந்து விட்டிருந்த ஒரு சில பிராமணரல்லாத வகுப்பினர், 'யானைக் கூட்டதோடு பயணிக்கும் எருதுகள்' போன்று எண்ணற்ற இன்னல்களையும், தடைகளையும் தாண்ட வேண்டியிருந்தது.
அத்தகையோர், தங்கள் மனக்குறைகளை கொட்டித் தீர்த்து நிம்மதியடைய மாலை நேரங்களிலும், ஓய்வு நாட்களிலும், யாராவது ஒருவர் வீட்டிலோ அல்லது பொது இடங்களிலோ ஒன்று கூடிப் பேசி ஆறுதல் அடைந்தனர்.
நாட்கள் செல்லச் செல்ல, தாங்கள் ஒரு குழுவாகவோ அல்லது இயக்கமாகவோ இணைந்து செயல்பட்டால், தங்களுக்கு இழைக்கப்படும் இன்னல்களுக்கு எதிராக குரல் எழுப்பி தற்காத்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல், பெரும்பான்மையாக உள்ள பிராமணரல்லாத சமுதாயத்து இளைஞர்களிடன் உண்மையை எடுத்தியம்பி, உணர்வு கொள்ளச் செய்து, கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் அவர்களையும் உள்ளே கொண்டுவந்து, சமுதாய நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று திட்டமிடலாயினர்.
இத்தகையோரின் திட்ட வேட்கையினால் உருவானது தான் 1912 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட "Madras United Legue" என்று பெயர் சூட்டப்பட்ட 'சென்னை ஐக்கிய சங்கம்' ஆகும். இந்த சங்கத்தின் பரிணாம வளர்ச்சி தான் "நீதிக்கட்சி"யாக சுதந்திரத்திற்கு முன்னதான சென்னை மாகாணத்தின் ஆட்சிப் பொறுப்புகளில் முக்கிய சக்தியாக உருவெடுத்தது.
இந்த காலகட்டத்தில் தான் தந்தை பெரியார் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட "திராவிடர் கழகம்" உருவானது. நீதிக் கட்சியின் பிரதானக் கொள்கையான பிராமணரல்லாத சமுதாயத்தினருக்கு கல்வி, வேலை வாய்ப்பு, அரசுப்பணி மற்றும் ஆட்சிப் பொறுப்புகளில் அதிக முக்கியத்துவமும், சட்ட ரீதியான அங்கீகாரப் பாதுகாப்பும் என்பதை அப்படியே வார்ப்பெடுத்துக் கொண்டதோடு, தமிழகமும், தமிழர்களும் இன்னமும் அடைய வேண்டிய விழிப்புணர்வையும், பகுத்தறிவையும், உணரச் செய்து, அந்த உணர்வுகளை ஊட்டி, மற்றவர்களோ அல்லது அரசாங்கமோ செய்யும் என்று காத்துக் கிடக்காமல், தங்கள் சுயமரியாதையை தாங்களே நிலைநிறுத்திக் கொள்ளும்படியான தெளிவினை வழங்கும் 'சுயமரியாதை'க் கொள்கைகளையும் இணைத்துக் கொண்டு வெகு வேகமாக வளர ஆரம்பித்தது திராவிடர் கழகம். அதே சமயம் அரசியல் இயக்கமாக இல்லாமல், மக்கள் இயக்கமாகவே, யாரையும் எப்பவுமே கேள்வி கேட்கும் உரிமையோடு இருக்கும் ஒரு தொலை நோக்கு சிந்தனையோடும் செயல்பட ஆரம்பித்தது!
தந்தைப் பெரியார் அவர்களின் பேச்சாற்றலும், அவர் கருத்துக்களில் உள்ள அடிப்படை நியாயங்களையும், உண்மைகளையும் உணர்ந்த, தமிழகம் முழுவதிலுமுள்ள பிராமணரல்லாத படித்த இளைஞர்கள், அவர்பால் ஈர்க்கப்பட்டு, அந்த இயக்கத்தின் செயல்பாடுகளில் தங்களை இணைத்துக் கொண்டு செயல்பட ஆரம்பித்தனர். இதனால் தமிழகமெங்கும், பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் கல்வியின் மேன்மையும், அவசியமும் மற்றும் அது சாத்தியப்படக்கூடியது தான் என்ற நம்பிக்கையும் துளிர்விட ஆரம்பித்தது.
இந்த எழுச்சியானது, பெருமளவிலான தமிழக இளைஞர்களை தட்டி எழுப்பி கல்வி கற்கத் தூண்டினாலும், வசதி வாய்ப்பு உள்ளவர்களைத் தவிர மற்றவர்களுக்கு, பொருளாதாரச் சுமையினால் கல்வி என்பது எட்டாக்கனியாகவே இருந்தது. அப்படியும் முட்டி மோதி படிக்க வருபவர்களுக்கும், பல தலைமுறைகளாக கல்வியைத் தனதாக்கி வைத்திருக்கின்ற அனுபவசாலிகளான பிராமண மாணவர்களோடு போட்டி போடுவது, மிகவும் பிரம்ம பிரயத்தனமாகவே இருந்தது.
அப்படி தட்டுத்தடுமாறி கல்விக் கடலில் நீராடி வந்தவர்களும், ஏற்கனவே அரசுப் பணிகளில் பெருவாரியாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் பிராமண சமுதாயத்தினரை மீறி உள்ளே நுழைவது என்பதும் குதிரைக் கொம்பாகவே இருந்தது. இந்த நிலையில் தான் இதற்கான தீர்வைக் காண வேண்டிய நிலைக்கு திரவிடர் கழகம் தள்ளப்பட்டது என்று சொல்லலாம்.
பேரறிஞர் அண்ணாதுரை போன்ற பெரியாரின் முதன்மை தளகர்த்தர்களின் எண்ணமான, அரசில் மூலமாக, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி நம் இளைஞர்களுக்கு சட்ட ரீதியிலான அங்கீகாரமும், பாதுகாப்பும், உரிய பிரதிநிதித்துவ ஒதுக்கீடும் கல்வி வேலைவாய்ப்புகளில் வழங்கினால் மட்டுமே, அடுத்தடுத்த தலைமுறைகளாவது, பிராமண சமுதாயத்தினரோடு தாங்களாகவே போட்டி போட்டு முன்னேறும் நிலைமைக்கு வருவார்கள் என்ற கருத்தை, தந்தை பெரியார் அவர்கள் முற்றிலுமாக நிராகரித்தார்.
ஒரு கட்டத்தில், தன்னுடைய கருத்தியலில் எந்த சமாதானமும் அடையமுடியாத நிலையில், திராவிடர் கழகத்திலிருந்து பேரறிஞர் அண்ணாதுரை தலைமையில் பிரிந்து வந்த பெரிய இளைஞர் கூட்டத்தினால் 1949 ஆம் ஆண்டு, செப்டம்பர் 17 ஆம் தேதி தோற்றுவிக்கப்பட்டது தான் திமுக என்று அழைக்கப்படும் "திராவிட முன்னேற்றக் கழகம்".
அன்றிலிருந்து கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் இடைவிடாத போராட்டங்களுக்குப் பிறகு 1967 ஆம் ஆண்டு தான் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழக அரசின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்ந்த அறிஞர் அண்ணாவிற்குப் பிறகு, திமுகவின் தலைமைப் பதவியும், தமிழக அரசின் ஆட்சி அதிகாரமும் டாக்டர் கலைஞர் அவர்கள் வசமானது.
அதன் பிறகு இன்று வரையிலான நாற்பத்து மூன்று வருட தமிழக அரசியல் வரலாற்றில், பல வகையான சோதனைகளையும், தடைகளையும், சதிகளையும், துரோகங்களையும் கடந்து, பத்தொன்பது வருடங்கள் தமிழக அரசின் ஆட்சியாளராக செயல்பட்டு, எண்ணற்ற சாதனைகளைச் செய்ததோடு மட்டுமல்லாமல், திராவிட முன்னேற்றக் கழகத்தை எவராலும் அழிக்க முடியாத, அசைக்க முடியாத அளவிற்கு பலம் வாய்ந்த விழுதுகளும், மிக நீண்ட ஆணி வேரும் கொண்ட ஆல விருட்சமாக வளர்த்து வைத்திருக்கின்றார் என்றால் அது மிகையில்லை.
சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களால் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு கல்வி, அரசுப் பணி மற்றும் ஆட்சிப் பொறுப்புகளில் உரிய பிரதிநிதித்துவம் அரசியல் சாசனம் வாயிலாகவே வழங்கப்பட்டுவிட்ட நிலையில், நீதிக் கட்சியின் கொள்கையான பிராமணரல்லாத மற்ற சமுதாய மக்களுக்கும் இவ்விஷயங்களில் சட்ட ரீதியிலான அங்கீகாரத்தையும் உரிமையையும், மாநில மற்றும் மத்திய அரசு இரண்டிலும் பெற்றுத் தந்ததில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பங்கு அளப்பறியது. அதிலும் மத்திய அரசுப் பணிகளில் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நிறைவேற்றி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை சட்ட ரீதியாக பெற்றுத் தந்ததில் டாக்டர் கலைஞர் அவர்களுடைய உழைப்பும், பங்களிப்பும் வேறு எவரையும் விட முன்னிலை வகிப்பதாகும்.
நூறு ஆண்டுகளுக்கு முன்பு, கல்வி, அரசுப்பணி, ஆட்சியதிகாரம் என்று எதிலுமே பிராமண சமுதாயத்தினரை எதிர்த்து உள்ளே தலைகாட்ட முடியாத அல்லது இயலாத நிலையிலிருந்த மற்ற சமுதாய மக்கள், திராவிட இயக்கங்களின் போராட்டங்களால், அவைகள் ஏற்படுத்திய அரசியல் விழிப்புணர்வால் முதல் தலைமுறையினர், அவர்களுக்கு இணையாகவும், இரண்டாம் தலைமுறை அவர்களை விட அதிக எண்ணிக்கையிலும் கல்வி, அரசுப்பணி மற்றும் ஆட்சி அதிகாரங்களில் உள்ளே நுழைந்தார்கள் என்றால் இன்றைக்கு மூன்றாம் தலைமுறையினரோ, தனியார் நிறுவனங்கள் மற்றும் உலக அளவிலும் மருத்துவர்களாகவோ, பொறியாளர்களாகவோ, வழக்குறைஞர்களாகவோ, கணினித்துறை வல்லுநர்களாகவோ, ஆராய்ச்சியாளர்களாகவோ எங்கெங்கும் ஊடுறுவி பரிமளித்துக் கொண்டிருக்கின்றார்கள்!!
இப்படிப்பட்ட இந்த இளைய தலைமுறையினர், தங்களுடைய நாலாந்தலைமுறை பட்ட பாட்டினையும், தங்கள் மூன்றாம் தலைமுறையும், இரண்டாம் தலைமுறையும் கடந்து வந்த பாதையையும், ஐயம் திரிபுர உணர்ந்து அறிந்து கொண்டு, இன்றைக்கு தமக்கு கிட்டியிருக்கும் ஒப்புயர்வற்ற உயர் நிலையும், சமதர்ம சமுதாயம் என்கிற சமூக நீதியும் எவ்வாறு வந்தது என்பதை உணர்ந்தவர்களாய், இந்த மேன்மையை எப்படிப் போற்றி பாதுகாக்க வேண்டும் என்று உணர்ந்தவராய், புரிந்தவராய் இருக்க வேண்டும் என்று தான் "திராவிட இயக்க நூற்றாண்டு விழாவினை" கொண்டாடிட டாக்டர் கலைஞர் அவர்கள் அழைப்பு விடுத்திருக்கின்றார்.
எல்லாம் தான் கிடைத்து விட்டதே? அரசியல் செய்வதைத் தவிர வேறு என்ன நோக்கம் இருக்க வேண்டும் இந்த விழாவுக்கு? என்று கேட்போருக்கெல்லாம் ஒரே பதில் தான்:
"எண்ணை கொதி நிலையில் இல்லா விட்டால் கொஞ்சம் கடுகைப் போட்டாலும் கதறிடுமா?"
நூற்றாண்டு விழா அறிவிப்புக்கே ஆடி தீர்த்துவிட்டார்களே சிலர்...., இதிலிருந்தே புரிந்து கொள்ள வேண்டாமா இளைஞர்கள்?!
13 comments:
தேவையான நேரத்தில் அருமையான பதிவு!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அபி அப்பா.
நல்லதொரு பதிவு தல ;-)
வாங்க கோபிநாத். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி )
கொக்கரக்கோ சொன்ன காரணங்களைவிட திராவிட இயக்கம் நூற்றாண்டு விழா கொண்டாட கிழ்கண்ட காரணங்கள் இன்னும் பொருத்தமாயிருக்கும்.1 .பொருக்கி தின்பதற்கு ஆட்சி அதிகாரம் இருந்தால்தான் முடியும் என்று கண்டு அது பெரியாரிடம் இருக்கும் வரை இயலாது என்று பொருந்தா திருமணம் என்ற நொண்டி காரணம் சொல்லி dmk -வை ஆரம்பித்தது.2 .கல்வி,தொழில்,விவசாயம் முதலிய துறைகளில் புரட்சி செய்து பிராமண சமுகத்திற்கு இணையாக பிற்பட்ட சமூகத்தையும் முன்னேற்ற உழைத்த காமராஜரை தோற்கடிக்க குல்லுக பட்டர் என்று முதல்நாள்வரை அழைக்கப்பட்ட ராஜாஜியை மூதறிஞர் என்று அழைத்து கூட்டணி வைத்தது.3 .சூத்திரன் சஞ்சீவி ரெட்டியை தோற்கடித்து பிராமண கிரியை குடியரசு தலைவர் ஆக வேலை செய்தது.4 .வாழ்நாளெல்லாம் வடவர் எதிர்ப்பு என்று முழக்கமிட்டு விட்டு பச்சை தமிழன் காமராஜை வீழ்த்த எண்ணிய வட தேசத்து இந்திராவிற்கு தோள் கொடுத்தது.5 .பதவி சுகத்திற்க்காக பிஜேபி யுடன் தாமரை படுக்கையில் புரண்டது.இது போதுமா,இன்னும் வேண்டுமா.
உங்களிடம் நல்ல நகைச்சுவை உணர்வு இருக்கிறது விழ்ழி அவர்களே!
பொருக்கித் தின்பதற்காகவெ ஒரு கட்சியை ஆரம்பித்தது, அதுவும் பேரறிஞர் அண்ணா என்பது.......
எப்படியாவது வரலாற்றை திரித்து புதிய தலைமுறையினரின் மூளையை திமுகவுக்கு எதிராக சலவை செய்யும் கூட்டத்தினரின் ஒரு அங்கம் தான் நீங்கள் என்பது நன்றாகவே புரிகிறது!!!
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு எந்த பொருக்கித் தின்னும் ஆட்சி சட்ட ரீதியிலான அனைத்து துறைகளிலும் பிரதிநிதித்துவ உரிமை பெற்றுத் தந்தது என்பது உண்மை வரலாறு. அதை மறைக்க இந்த ஜவ்வு மிட்டாய் காட்டி மயக்கும் வித்தையெல்லாம் இனி கதைக்கு உதவாது.
அருமையான பதிவு! ஒரு நீண்டகால
அரசியல் வரலாற்றை மிகமிகத் தெளி
வாக அழகாக ஆணித்தரமாக அனைவரும் புரிந்து கொள்ளும்படி எழு
தியுள்ள உங்களை பாராட்டி வாழ்த்துகிறேன்.
புலவர் சா இராமாநுசம்
மிகச் சிறந்த பதிவு .இன்றைய தலைமுறையினருக்கு அவர்களை இந்நிலைக்கு கொண்டு செலுத்திட செய்யப்பட்ட அரும்பணிகளும் போராட்டங்களும் சொல்லமலேயே வளர்த்தது நாம் செய்த தவறு . அந்த படிப்பினையை தந்துகொண்டே இராமல் திடீரென இப்போது சொல்லப் போக பலருக்கு அதன் தாக்கமும் வேர்களும் விளங்கவில்லை .அதோடு இன்றைய கால திமுகவை பார்க்கும் எவருக்கும் இவர்கள் கொள்கை சார்ந்தவர்கள் என்று நம்ப இயலுமா என்ன ?
மிகச் சிறந்த பதிவு .இன்றைய தலைமுறையினருக்கு அவர்களை இந்நிலைக்கு கொண்டு செலுத்திட செய்யப்பட்ட அரும்பணிகளும் போராட்டங்களும் சொல்லப்படாமலேயே வளர்த்தது நாம் செய்த தவறு . அந்த படிப்பினையை தந்துகொண்டே இராமல் திடீரென இப்போது சொல்லப் போக பலருக்கு அதன் தாக்கமும் வேர்களும் விளங்கவில்லை .அதோடு இன்றைய கால திமுகவை பார்க்கும் எவருக்கும் இவர்கள் கொள்கை சார்ந்தவர்கள் என்று நம்ப இயலுமா என்ன ?
பாரட்டுக்கு நன்றி, புலவர் சா. இராமாநுசம் அவர்களே ))
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பூங்குழலி ))
வாழ்த்துக்கள் (வலையோசை)
9944450474-க்கு சென்ற 04.04.2012-ல் மெஸ்ஸேஜ் அனுப்பினேன்....
இன்னும் வந்து சேரலையா????
Post a Comment