Wednesday, July 11, 2012

மோட்டுவலையப் பார்த்து யோசிச்சது..!! தமிழக தனியார் துறையும் - வேலை வாய்ப்பும்.

வேலையில்லா திண்டாட்டம், வேலையில்லா திண்டாட்டம்னு தமிழ்நாட்டுல புலம்புறவங்களை கூட ஒரு விதத்தில் சரி போன்னு ஒதுக்கிவிடலாம். ஆனால் குஜராத்துல ஒரு சதவிகிதம் தான் வேலை இல்லாதவங்க இருக்காங்க, நிதிஷ்குமார் நிறைய வேலை வாய்ப்பை உருவாக்கியிருக்கார், ஒரிஸாவைப் பாருங்கன்னு, காக்ரான் மேக்ரான் கம்பெனி சர்வேயை எல்லாம் எடுத்துப்போட்டு தமிழ் நாட்டைக் குத்தம் சொல்றவங்களை எல்லாம் பார்த்தா கொஞ்சம் கோவமாத் தான் வருது.

ஏன்னா? இங்க வேலை செய்ய ஆள் கிடைக்காம தான் பல தொழிற்சாலைகளும், விவசாய நிலங்களும், கடை கன்னிகளும் கூட தவித்துக் கொண்டு, மூடுவிழா நடத்தும் நிலைக்கு வந்து கொண்டிருக்கின்றன.

தமிழகத்தில் பல கனரக தொழிற்சாலைகளுக்கும், கட்டுமானப் பணிகளுக்கும், சாலைப் பணிகளுக்கும், என்றே லட்சக்கணக்கான தொழிலாளர்கள், பீகார், ஒரிஸ்ஸா, குஜராத், ராஜஸ்த்தான், உத்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களிலிருந்து வந்து வேலை செய்கின்றார்கள்.

உணவகங்கள், பெட்ரோல் பங்குகள், ஆஃபீஸ் பாய் வேலை போன்றவற்றுக்கு நேப்பாளிலிருந்து லட்சக்கணக்கில் தமிழகம் வந்து ஆண்களும் பெண்களுமாய் வேலை செய்து கொண்டிருக்கின்றார்கள்.

ஒரு காலத்தில், விவசாய வேலைகள் அதிகம் நடைபெறும் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்திலும், தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியான கோயம்புத்தூர் மாவட்டத்திலும் சரி, கம்யூனிஸ்ட்டுகள் காலூன்றி வளர்ந்ததே தமிழக தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை வேண்டும், அவர்களுக்கு நியாயமான ஊதியம் மற்றும் இன்னபிற சலுகைகள் எல்லாம் சரியாக வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வைத்து நடத்தப்பட்ட போராட்டங்களின் மூலமாகத்தான்!

ஆனால் இன்றைய சூழ்நிலையில் லட்சக்கணக்கில் வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாட்டிலிருந்தும் இங்கு சாரை சாரையாக தொழிலாளர்கள் வந்து குவிந்து வேலை செய்து கொண்டிருக்கும் போது, தமிழக தமிழர்களுக்கு அல்லது இந்தியர்களுக்கு முதலில் வேலை கொடு என்று ஒரே ஒரு போராட்டம் கூட கம்யூனிஸ்ட்டுகளால் நடத்தப்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை.

இதற்கு என்ன அர்த்தம்? தமிழ் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் என்ற எந்த சமாச்சாரமும் இல்லை என்பதோடு, வேலை வாய்ப்பில் தன்னிறைவு பெற்ற மாநிலமாகத் திகழ்கிறது என்று தானே பொருள் கொள்ள வேண்டும்?

ஒரு பொது இடத்தில், இரண்டு தொழில் முனைவோர் அல்லது சிறு பெட்டிக்கடை முதல் ஏஜென்ஸிகள்  வரை நடத்துவோர், விவசாயிகள் அல்லது வீட்டிலோ, அலுவலகத்திலோ சின்னச்சின்ன மராமத்து வேலைகளைச் செய்ய வேண்டியிருப்போர் என யார் சந்தித்துக் கொண்டாலும்.....

.....பரஸ்பரம் நலன் விசாரித்துக் கொண்ட பின் பேசும் முதல் விஷயம், "சார் வேலைக்கு ஒரு ஆள் இருந்த சொல்லுங்களேன்!!" என்பதாகத்தான் இன்றைய தமிழகத்தின் நிலை இருக்கிறது.

ஆகவே, அரசு அலுவலகங்கள் தவிர்த்து மற்ற எந்த தனியார் நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு லொட்டு லொசுக்கு, புண்ணாக்கு இதெல்லாம் இன்றைக்கு வெறும் வெற்று வார்த்தைகளாகத் தான் உலா வருகின்றன. வேலைக்கு முதல்ல ஆளை அனுப்புங்க ஆப்பீஸர், அப்பறமா இன்னின்னாருக்கு வேலை தருவதைப் பற்றி பேசலாம்" என்று துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நக்கல் அடிக்கும் தொழில் முனைவோர் தான் இன்று அதிகம் இருக்கின்றார்கள்!

சரி வேலைக்கு ஆள் கிடைக்காத திண்டாட்டம் ஒரு பக்கம் என்றால், தமிழகத்தில் தொழிலாளர் நலச் சட்டங்களை தனியார் துறையில் மிகச் சரியாக செயல்படுத்துவது எந்த நிலையில் இருக்கிறது என்று பார்க்கலாம்.

எந்த துறையும் சாராத அடிப்படை உதவியாளராகப் பணிபுரியும் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 128 ரூபாய் சம்பளமாக வழங்க வேண்டும். வாரத்தில் 6 நாட்கள் அவர் வேலை செய்திருப்பின் ஒரு நாள் விடுப்பு ஊதியத்தை இலவசமாக தர வேண்டும். இதைத் தவிர அவருக்கு PF & ESI எல்லாமும் முறைப்படி பிடித்தம் செய்து வழங்க வேண்டும்.

இதெல்லாம் , அடிப்படை உதவியாளர் பணிக்கான சாதாரண தொழிலாளர் நலனுக்கான சட்டப் பாதுகாப்பு. இதைத் தவிர இன்னும் சில வழக்கமான சலுகைகளும் இருக்கின்றன. அவற்றை எல்லோருமே செய்துவிடுவார்கள், ஆனால் மேற்கூறிய இரண்டு இனங்களில் தான் தவறு நிகழ வாய்ப்பு இருக்கிறது.

ஆனா இப்ப என்ன நடக்குதுன்னா....? எந்தவொரு சிறப்புத் தகுதியுமே இல்லாத அடிப்படை உதவியாளர் பணிக்கு ஒரு நபருக்கு குறைந்த பட்சமாக ஒரு நாளைக்கு ரூபாய் 150 க்கு மேல் தான் சம்பளம் வழங்கப்படுகிறது. அது மட்டும் இல்லாமல், இலவச உணவு, வீட்டிலிருந்து வந்து செல்ல வாகன வசதி அல்லது போக்குவரத்துப் படி எல்லாம் தனியாக தரப்படுகின்றது.

அவர்களிடம் பிஎஃப் கட்ட வேண்டும் அதற்கு 15 ரூபாய் கொடு, கம்பெனி ஒரு 15 ரூபாய் போட்டு உனக்காக 30 ரூபாய் சேமிப்பில் தினமும் செலுத்துவோம் என்றால், அதெல்லாம் வேண்டாம் என்கிறார்கள்.

அதெல்லாம் ஒரு இடத்துல என்னால மாட்டிக்கிட முடியாது சார்.  போர் அடிச்சிதுன்னா வேற வேலைக்குப் போயிடுவேன், அதுவும் பிடிக்காட்டி, கொஞ்ச நாளைக்கு வீட்டிலேயே இருப்பேன். இப்புடி சேக்குற பணத்தை எல்லாம் அங்க இங்க அலைஞ்சி என்னால வாங்க முடியாது சார். அப்பப்ப என்னோட கூலிய எனக்கு வெட்டி விட்டுடுங்க என்று சொல்கிறார்கள்.

அரசாங்க அதிகாரிங்க சோதனை போட வந்தால், “தம்பி உனக்கு தினமும் 130 ரூவா சம்பளம் தர்றாங்களா? இல்ல சார், 150 தர்றாங்க சார். அது போகட்டும், பி எஃப் பத்தி உன்கிட்ட சொல்லி அத கட்டுறியா? எனக்கு அதெல்லாம் வேணாம் சார்......

அதிகாரி......ஙேஏஏ!!!!!

இந்த மாதிரி பழைய காயிலாங்கடை சட்டத்தை எல்லாம் வச்சிக்கிட்டு தான் இந்த அரசு வண்டிய ஓட்டுது.

இன்னிக்கு நாட்டுல என்ன மாதிரியான சூழ்நிலை நிலவுது? மக்கள் என்ன நினைக்கிறார்கள்...? அவர்களின் உண்மையான தேவை தான் என்ன? என்று எதுவுமே தெரியாமல் இந்த அரசும், அதற்கு அறிவுரை சொல்ல வேண்டிய அதிகாரிகளும் என்னத்தை தான் புடுங்குகிறார்கள் என்றே புரியவில்லை.

விட்டத்தைப் பார்த்து படுத்திருக்கும் போது தோனுனத எல்லாம் அப்பிடியே உங்க முன்னாடி கொட்டிட்டேன் மக்கா. இனிமே நிம்மதியா தூங்கலாம்.


No comments: