Saturday, June 22, 2013

தில்லுமுல்லு.......!! இது ப்ரூம்மாஆஆ!!!!

ஒரு வழியா தில்லு முல்லு பார்த்தாச்சு. படம் ஆரம்பித்து 20 நிமிடம் கழித்துத்தான் பார்க்க ஆரம்பித்தேன். நாக்குல ஒட்டிட்டிருந்த பழைய ஃபில்டர் காஃபி டேஸ்ட்டு மாறிப்போயிடுமோன்னு கொஞ்சம் தயக்கத்தோடதான் பார்க்க ஆரம்பித்தேன்.

தெளிவாவே சொல்லிடுறேன். இது இன்ஸ்டண்ட் காஃபி தான் என்றாலும் அந்த ஃபில்டர் காஃபி மாதிரி இல்லியேன்னு எல்லாம் ஏங்க வைக்கவில்லை!!

அந்த படம் வந்த பொழுது ரஜினி பெரிய சூப்பர் ஸ்டார் எல்லாம் கிடையாது. இப்பத்திக்கி நடிகர்களில் ஜெயம் ரவி, விஷால் ரேஞ்சில் தான் அப்போ ரஜினியும் இருந்தார். அதனால் அவர் இடத்தில் மிர்ச்சி சிவாவை பொருத்திப் பார்ப்பதில் எந்த நெருடலும் எனக்கு ஏற்படவில்லை. சிவாவும் கொஞ்சம் கூட கூச்சநாச்சமில்லாமல் ரஜினி மாதிரியே ஸ்டைல் எல்லாம் பண்ணி நடித்திருந்தார்.

யாரும் சண்டைக்கு வராதீங்க மக்கா. ரஜினி சூத்தாமட்டையை பின்னுக்கு தள்ளி நெளிச்சிக்கிட்டு தோள்பட்டையை தூக்கிக் கொண்டு அசட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டே நடப்பதை ஸ்டைல்ன்னும் சொல்லலாம், கூச்சநாச்சமில்லாம நடிக்கிறான்னும் சொல்லலாம்! பொதுவா, நல்ல மனநிலையில் இருக்கும் மனிதர்கள் யாரும் இப்படியெல்லாம் நாலு பேருக்கு முன்னால நடக்க மாட்டார்கள் தானே? அதனால தான் அப்படி சொல்றேன்.!

அடுத்ததா ஹீரோயின் செலக்‌ஷன் பத்தி சொல்லியே ஆகணும். அப்போல்லாம் மாதவி டாப் லெவல் ஹீரோயின். அவர் கால்ஷீட்டுக்காகத்தான் கமல் ரஜினி ரெண்டு பேரும் வெய்ட் பண்ணி ப்ராஜெக்ட் பண்ணுவதாக ராணி புக்குலயே போட்டுருந்தாங்க. அப்படிப்பட்ட அகண்ட கண்ணழகி மாதவி இடத்தில் ஒரு ஒல்லிப்பிச்சானை...  உவ்வே சகிக்கல. சரி அது போகட்டும். இப்போ வர்ற பெரும்பாலான படங்கள்ல இப்புடித்தான் இருக்காங்க.

மியூசிக் தான் யாருன்னு டைட்டில் கார்டு பார்க்காததால தெரியல. ஆனா அந்த ராகங்கள் பதினாறு பாட்டை இன்னும் கொஞ்சம் பேஸ் வாய்ஸ் உள்ள பாடகரிடம் கொடுத்திருந்தா, அந்த பழைய பாட்டுக்கு நியாயம் செய்தமாதிரி இருந்திருக்கும். மூக்கால பாடுறமாதிரி பாடி அதை கெடுத்து குட்டிச்சுவராக்கி விட்டார்கள்.

அடுத்ததா டைரக்டர் பத்ரிகிட்டதான் வரணும். மனசார சொல்லனும்ன்னா, பழைய படத்தை சீன் பை சீன் காப்பியடிக்காம இன்றைய சூழலுக்கு ஏத்தமாதிரியும், சில பல காட்சிகளை அப்படியே முற்றிலும் மாறுபட்ட சம்பவங்களை வைத்து எடுத்திருப்பது பாராட்டுக்குறியது தான்.

எக்கச்சக்கமாக பணத்தைப் பையில் வைத்துக்கொண்டு, அவ்ளோ ரிலாக்ஸ்டா படம் எடுத்திருக்கிறார் டைரக்டர். அவர் கேட்டதெல்லாம் கிடைத்திருக்கிறது. அவரும் வஞ்சகம் செய்யாமல் செலவுக்கேற்ற ரிச் லுக்குடன் ஒவ்வொரு காட்சியையும் சுட்டுத்தள்ளியிருக்கிறார்.

அந்த துபாய் காட்சிகளில் தான் நிறைய சொதப்பிவிட்டார்கள். அந்தப் பாட்டும் சரியில்லை. அங்கு வைத்த காட்சிகளில் இன்னும் கொஞ்சம் யோசித்திருக்கலாம். இவ்ளோ சம்பளம் வாங்குறீங்க, மூளையை கொஞ்சம் கசக்கினால் தான் என்ன டைரக்டர் சார்?

க்ளைம்மெக்ஸில் பழைய படத்திற்கும் இதற்கும் கொஞ்சம் கூட சம்பந்தமில்லாமல் புது சம்பவங்களோடு காட்சிப்படுத்தியமைக்கு நிச்சயம் டைரக்டருக்கு ஒரு ஷொட்டு வைக்கத்தான் வேண்டும்!

சுறுக்கமா சொல்லணும்ன்னா, சபாஷ்மீனா படத்தோட ரீமேக் தான்னு சொல்லாம சுந்தர் சி உள்ளத்தை அள்ளித்தா எடுத்தமாதிரி செய்யாம, பழைய தில்லு முல்லு வோட ரீமேக்குன்னு தெளிவா சொல்லிட்டு செஞ்ச அந்த நேர்மைக்கும் ஒரு பாராட்டு.

இன்னோரு விஷயத்தையும் சொல்லியே ஆகணும். எங்க தமிழன் தேங்காய் சீனிவாசனிடம் நீங்கள் தோற்றுப் போய் விட்டீர்கள் திரு பிரகாஷ் ராஜ் அவர்களே! நிச்சயமாக இருவர் நடிப்பிலும் நல்ல வித்தியாசம் இருக்கு. நம்மவரிடம் இருந்த யதார்த்தம், பிரகாஷ்ராஜிடம் நடிப்பாக தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

இன்னொன்னும் இருக்கு. சௌகார்ஜானகி அம்மா இடத்தில் கோவை சரளாவை பொறுத்திப்பார்க்கவே முடியவில்லை. பத்ரி சார் இதை நிச்சயம் நீங்க தவிர்த்திருக்க வேண்டும். படத்தின் மிகப்பெரிய வீக்பாய்ண்ட்டே இது தான். சில இடங்களில் சகிக்கவில்லை. அவரை உங்களால் சில இடங்களில் கண்ட்ரோல் செய்யவே முடியவில்லைன்னு நினைக்கிறேன்.



அடுத்ததா சந்தானமும், பரோட்டா சூரியும் நடித்திருப்பதை சொல்லாவிட்டால்,  இந்தப் பதிவு முழுமை அடைந்ததாக இருக்காது. சூரியின் நடிப்பில் நல்ல முன்னேற்றம்.  நல்லா வருவீங்க தம்பி!

பொதுவா சொல்லனும்ன்னா, எல்லோரும் குடும்பத்தோடு சென்று பார்த்து வரலாம். நல்ல ட்ரீட் கிடைக்கும்.

டிஸ்கி: அந்த தில்லு முல்லு தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் உச்சத்தில் இருந்த பொழுது வந்தது. அந்தக்கதையின் கரு யாருக்கும் அப்போ வித்தியாசமாக தெரிந்திருக்கவில்லை. ஆனால் அதே கருவோடு இப்போ இந்தப்படம் வந்திருப்பதும் அதை இளைஞர்கள் ஏற்றுக்கொண்டிருப்பதும், இப்பொழுது தமிழகத்தில் இருக்கும் யதார்த்த நிலையை உணர வைப்பதாக இருப்பது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது. இது யோசிக்க வேண்டிய விஷயம் தான்.

2 comments:

vimalanperali said...

நல்ல விமர்சனம்.

கொக்கரக்கோ..!!! said...

நன்றி திரு விமலன்.