Monday, November 25, 2013

சீரியஸான அரசியல் பதிவு எழுதனும் பாஸ்...!

சீரியஸ் அரசியல் பதிவுகளை எழுதலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றேன். கடந்த திமுக ஆட்சியின் இதேப் போன்று இரண்டரை ஆண்டுகள் கடந்த நிலையில் என் மனசாட்சிப் படியான நடுநிலையுடன் அரசியல் பதிவுகளை எழுதிக் கொண்டிருந்த நான், திமுக தேர்தலில் தோல்வி அடைந்ததாக முடிவுகள் வெளிவந்து கொண்டிருந்த நாளில் தான் திமுகவுக்கு மிகத் தெளிவான ஆணித்தரமான ஆதரவுடன் கூடிய பதிவுகளையும், நிலைத் தகவல்களையும் எழுதத் துவங்கினேன்....

திமுக ஆட்சியிலிருந்த கால கட்டத்தில் நடந்த சில குறைபாடுகளை நேர்மையுடன் விமர்சித்து எழுதிக் கொண்டிருந்த நான், அந்த காரணங்கள் எல்லாம் ஆட்சி மாற்றத்திற்கும், குறிப்பாக ஜெயலலிதாவை அரியணையில் அமர்த்துவதற்கும் போதுமான காரணங்கள் என்பதை ஒருக்காலும் ஏற்றுக் கொண்டதில்லை.

ஆனால் திமுகவின் இருப்பை குறிப்பாக அதன் சமூக நீதிக் கருத்துக்களில் ஆழ்ந்த பிடிமானம் கொண்டிருக்கும் அதன் தலைவர் கலைஞர் அவர்களின் இருப்பை தங்களுக்கான இழப்பாக ஆணித்தரமாக நம்பிக்கொண்டிருக்கும் ஆரிய அடிப்படை வாதிகள்.....

திமுக அரசின் அதாவது ஆட்சியின் பல்வேறுதரப்பட்ட பங்களிப்பார்களின் தவறுகளை எல்லாம் பூதாகரமாக்கி அதை திமுகவுக்கும், கலைஞருக்கும் எதிராக முழுமையாக ஃபோகஸ் செய்து புத்தம் புதிய இளைய தலைமுறையினர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் மனங்களில் அழுத்தமாக பதிய வைக்கும் வேலையை கன கச்சிதமாக செய்து முடித்து விட்டிருந்தனர். 

இதில் வேடிக்கை என்னவென்றால், இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்றெல்லாம் கூட சீரியஸாக நம்பும் அளவிற்கு நம்ம இளைய தலைமுறையினரின் அரசியல் அறிவை தமக்கு ஏற்றவாறு வடிவமைத்து மூளைச் சலவை செய்து வைத்திருந்தன இந்த ஆரிய சக்திகள்!

தாங்கள் சொல்வதையெல்லாம் இவ்ளோ முட்டாள் தனமாகக் கூட நம்புவார்களா என்று அவர்களுக்கே சந்தேகம் இருந்த நிலையில், தங்கள் சிந்தனைகளை எல்லாம் அடமானப் பத்திரம் எழுதி கை நாட்டு வைத்து அவர்கள் காலில் வைத்துவிட்டு நின்ற நம் மக்களைப் பார்த்து அந்த ஆரிய சக்திகள் தாலியை எடுத்து கண்களில் ஒற்றிக்கொள்ளாத குறையாக ஆனந்தக் கண்ணீர் வடிக்கும் அளவிற்கு நம்ம மக்களின் பர்ஃபார்மென்ஸ் அவ்ளோ பக்காவாக இருந்தது!

இந்த அளவிற்கு தம்மை நம்பி வந்திருக்கும் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமே என்று அந்த சக்திகள் அடுத்தடுத்து எடுத்து விட்ட அஸ்திரங்கள் தான் அபாரம். அதாவது இன்றைக்கு சாதி, சமய அரசியல் என்பது எல்லாம் ஒரு வித புனிதமான விடயங்கள் மாதிரியாக உருவகப்படுத்தப்பட்டு அவை முன்னெடுக்கப்படுவதும், அவற்றையும் சில இளைஞர்கள் நம்பி களம் இறங்குவதும் தான் வேதனையான விடயமாக இருக்கின்றது....

இதற்குத் தோதாக இன்றைய இந்தியாவின் பிரதான பிரச்சினையே சாதி, மத அடிப்படை வாதங்களை விட ஊழல் தான் என்று இளைஞர்கள் மத்தியில் பரப்புரை செய்யப்படுவதை ஒரு ஆதாரமாகச் சொல்லலாம்.

அப்படியானால் ஊழல் என்பது அவ்வளவு முக்கியமான பிரச்சினை இல்லையா? என்று சிலர் முஷ்டியை உயர்த்திக்கொண்டு வரலாம்.  அது ஒரு முக்கிய பிரச்சினை தான் என்றாலும் அது எளிதாக கண்டுபிடிக்கப்பட்டு நிவர்த்தி செய்யப்படலாம் என்பதும், கொள்ளையடிக்கப்பட்ட பணம் என்பது மீட்டெடுக்கப்பட்டு மீண்டும் கஜானாவுக்குள் கொண்டுவரப்படலாம் என்பதும், அல்லது மீண்டும் இது போன்று நடக்காமல் தடுக்கப்படலாம் என்பதும் தான் இந்த “ஊழல்” என்ற பிரச்சினையில் நமக்கு சாதகமான விடயமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஆனால் சாதி, மத ரீதியிலான பிரிவினை வாதம் என்பது ஒரு நாட்டையோ, ஒரு பிராந்தியத்தையோ, அதனைச் சார்ந்த மக்கள் அனைவரையும் பல நூற்றாண்டுகளுக்கு பின் தங்கியவர்களாக நிறுத்தி வைத்திருப்பதோடு, யாருக்கும் நிம்மதியற்ற பயந்து பயந்து வாழும் நிலையை மக்களுக்கு பரிசாக வழங்கிவிடும் என்பதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கின்றது....

உலக அளவில் நமக்கு அருகிலேயே உதாரணம் சொல்ல வேண்டுமானால பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட மத தீவிரவாதம் கொண்ட நாடுகளும், இந்திய அளவில் ஜாதி அரசியலை மட்டுமே முன்னெடுத்து ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கும் உத்திரபிரதேசம், பீகார் போன்ற அளவற்ற இயற்கை வளங்கள் கொண்டிருந்தாலும் இன்னமும் வளராமல் மிகப் பின் தங்கிய நிலையில் இருக்கும் மாநிலங்களையும் சொல்லலாம்.

இதைப் படித்துக் கொண்டிருப்பவர்கள் ஏதோ, இதை ஒரு திமுக ஆதரவு பதிவு என்ற ரீதியில் முடிவெடுத்து தொடர்வதை விட, இது ஒரு மிக முக்கியமான பொதுப் பிரச்சினை என்ற அளவு கோலில் உற்று நோக்க வேண்டும்.இங்கே திமுக அல்லது அதிமுக என்பதெல்லாம் ஒரு பேசு பொருள் கிடையவே கிடையாது.

சாதி, மத அடிப்படைவாதங்களை தகர்த்தெறிந்து ஓரம் கட்டி அது அதற்கான இடங்களில் நிற்க வைத்து விட்டு பொதுவான சமூக நீதியை நிலை நாட்டுவதன் மூலம், கல்வியும் அதைத் தொடர்ந்ததான உலக அறிவும், முக்கிய வேலை வாய்ப்புகளும், அந்த பிராந்தியத்தில் வசிக்கும் அனைத்துப் பிரிவினருக்கும் சாத்தியப்படக்கூடிய விடயமாக மாற்றியமைக்கப் பட்டதனால் பாதிக்கப் பட்டிருப்பது யார்????

அந்த யாரோ வுக்குத் தான் சமூக நீதி தகர்த்தெறியப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது. அது தகர்த்தெறியப்பட்டால் தான்....  மீண்டும் சாதி, மதம் என்று அனைவரும் சிறு சிறு பிரிவுகளுக்குள் தங்களை சிறைப்படுத்திக் கொண்டு தனித்தனிக் குழுக்களாக பிரிந்து கிடக்க முடியும்.... அப்படிப் பிரிந்து கிடந்தால் தான் இவற்றையெல்லாம் ஆதி காலத்திலிருந்தே அரங்கேற்றி மற்ற அனைவரையும் பிரித்துப் பிரித்து, பகுத்துப் பகுத்து அவர்களின் உழைப்பைச் சுரண்டி தான் மட்டும் உயர் பதவிகளில் அமர்ந்து கொண்டும், அரசன் என்ற ஒரு பொம்மையை வைத்துக்கொண்டு அவனை பொம்மலாட்ட பதுமை போல ஆட்டி வைத்ததைப் போன்று இப்பொழுது மீண்டும் அரங்கேற்ற முடியும்.

அதற்கு அந்த சக்திகள் செய்த முதல் செயல் திட்டம், இந்த மாதிரியான சமூக நீதி கொள்கைகளில் இன்னமும் பிடிப்புடன் செயல்படும் திமுகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும், அடுத்ததாக தங்கள் இனத்துத் தலைமையை ஏற்றிருக்கும் அதிமுகவை அரியணையில் அமர வைக்க வேண்டும்.

இது நடத்தப்பட்டு விட்டது. இந்தச் செயல் திட்டம் ஏற்கனவே பல முறைகள் அரங்கேற்றப்பட்டிருந்தாலும், அதிமுக தலைமையின் தவறுகளால் மீண்டும் மீண்டும் திமுக ஆட்சிப் பீடத்திற்கு வருவது அவர்களுக்கு பெரும் எரிச்சலைத் தந்திருக்கின்றது. இந்த முறை அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் அந்த சக்திகள் முழு மூச்சுடன் செயல்படுவது தான் நாம் இங்கே கவலையுடனும், கவனமுடனும் உற்று நோக்கி உணர்ந்து அதற்கு எதிராக நமது கடமையை ஆற்றுவதற்கான அவசியத்தை உருவாக்கியிருக்கின்றது.

இந்த தடவை, திமுக ஆட்சி அகற்றப்பட்டதும், அதிமுக ஆட்சி அமைக்கப்பட்டதும் முதல் படி என்றால் வழக்கம் போல அதிமுகவின் தவறுகளால் மீண்டும் திமுக அரியணை ஏறும் வாய்ப்பை தகர்த்தெறிய வேண்டும். ஆகையால் அதற்காக இப்பொழுது ஒரே கல்லில் திமுக, அதிமுக என்ற இரண்டு காய்களையும் அடித்தெறிய வேண்டும். அந்த இடத்தில் சாதி, மத கூட்டமைப்பை இட்டு நிரப்ப வேண்டும்.....!

இது தான் அஜெண்டா. ஆகவே இந்த சாதிக் கூட்டமைப்பை தள்ளி வைத்து தமிழகத்தை இன்னுமொரு பீகாராகவும், உத்தரப் பிரதேசமாகவும் மாற்றும் முயற்சியை தகர்த்தெறிய வேண்டிய கடமை நம் இளைஞர்களுக்கு இருப்பதை உணர வைக்க வேண்டும்....!

அதனால தான் சொல்றேன் பாஸ்....  இனிமே கொஞ்சம் சீரியஸா அரசியல் பதிவுகளை எழுதப் போறேன்னு....!


No comments: