Thursday, November 14, 2013

மாயவரம் முழுக்குக்கு வர்றீயளா.....?!


எங்க மாயவரத்து மக்களுக்கெல்லாம், ஐப்பசி மாசம் பொறந்துச்சின்னாவே ஒரு குஷி பிறந்திடும். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் முழுமை பெற்ற பிரதான அடையாளமே மாயவரம் என்று சொல்லலாம். விவசாயம், ஆன்மீகம், காவிரி, திருத்தலங்கள், தமிழ் பதிகங்கள், சைவ மடங்கள், தெளிவான உலகம், பொது, அரசியல் அறிவு நிறைந்த மக்கள், பழமையை மாற்றிக்கொள்ள விரும்பாத கலாச்சார ப்ரியர்கள், நீண்ட அகலமான வீதிகள், ஊரை இரண்டாக பிளந்து கொண்டு நகரின் பிரதான கடைத்தெருவிலேயே ஓடிக் கொண்டிருக்கும் காவிரி, அற்புதமான ஃபில்டர் காஃபி, அதிகாலை பொங்கல், வாசம் வீசும் ரவா தோசை, அதிகம் ஆசைப்படாத மக்கள், எங்கு சென்றாலும் ஊர்ப்பாசம் விடாத மண்ணின் மைந்தர்கள்.....



இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.  ஊர் முழுவதிலும் அதைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான ஆயிரம் வருடங்களுக்கும் மேலான தொன்மை வாய்ந்த கற்றளிக் கோவில்கள் இருந்தாலும், ஊரைச் சரிபாதியாகப் பிரித்து நடுவில் ஓடிக்கொண்டிருக்கும் காவிரியின் தென் பகுதியில் இருக்கும் மாயூரநாத ஸ்வாமி திருக்கோவிலும், காவிரியின் வடகரையில் இருக்கும் வதான்யேஸ்வரர் திருக்கோவிலும் ஆன்மீகத்தை வளர்த்ததை விட தமிழையும், தமிழ் கலாச்சாரத்தையும் தொய்வில்லாமல் வளர்த்து வந்திருக்கின்றன.

எனக்குத் தெரிந்து தமிழ்க்குறவர்கள் நால்வர் அணியின் தேவார, திருவாசக பதிகங்கள் எங்கள் மாயவரத்து மக்கள் வாயிலும் மனதிலும் அன்றாடம் புகுந்து புறப்பட்டு வருவதைப் போன்று வேறு எந்த ஊரிலும் காணமுடியாது. 

ஐப்பசி மாதம் வந்தால் இங்கே முப்பது நாட்களும் விசேஷம் தான். ஐப்பசி முதல் தேதியில் இருந்தே மேற்சொன்ன இரண்டு கோவில்களில் இருந்தும், குடும்பத்தலைவர், தன்னுடைய மனைவி, பிள்ளைகள், சேனாதிபதிகள், நண்பர்கள் புடை சூழ ரொம்ப ரிலாக்ஸ்டா காவிரிக்கு வந்து தீர்த்தமாடுவார்கள்.

மாயூரநாதர் ரஜினின்னா, வதான்யேஸ்வரர் கமல்ஹாசன். ரெண்டு பேருமே நண்பர்கள் தான் என்றாலும், இருவரும் இரு கரைகளிலும் தீர்த்தமாடும் போது, அவர்களது ஆதரவாளர்கள் இடையே முட்டிக்கொள்வது போன்ற பரபரப்பு தொற்றிக்கொள்ளும். இந்த வாக்குவாதங்கள் ஒன்னாங்கிளாஸ் முதல் பன்னெண்டாம் கிளாஸ் மாணவ, மாணவிகள் வரை தீவிரமாக நடைபெரும்!

பகலில் காவிரிக்குச் சென்று நீராடிவிட்டு வரும் குடும்பம், மதியம் கொஞ்சம் கண்ணயர்ந்த பிறகு மாலையில் திரும்பவும் கிளம்பி கடைத்தெரு வழியாக காவிரிக்கரையில் இருக்கின்ற மண்டபங்களில் அமர்ந்து அங்கிருக்கும் நண்பர்களுடன் அளவலாவிவிட்டு, மீண்டும் இரவு முக்கிய வீதிகளின் வழியாக ஒவ்வொரு வீட்டாரையும் குசலம் விசாரித்துக்கொண்டே..  தம் இருப்பிடமான திருக்கோவிலை வந்தடைவர்.

போகும் போது பட்டமங்களம் வழியாகச் சென்றால் வரும் போது மகாதானம் வழியாக வருவார்கள். எல்லா நாட்களிலும் நான்கு முக்கிய வீதிகளிலும் பிரயாணம் உண்டு என்றாலும் சில குறிப்பிட்ட நாட்களில் மாடவீதிகள், திருமஞ்சன வீதிகளில் எல்லாமும் உள்ளே புகுந்து அங்கிருக்கும் மக்களையும் சமாதானப்படுத்தி விடுவார்கள்....!

இப்படியே இருபது நாட்கள் கடந்த நிலையில் 21 ஆம் நாளில் இருந்து விசேஷம் மிகக் கடுமையாக சூடு பிடித்துவிடும். இரவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பு விசேஷ வைபவங்கள் அரங்கேறும். சப்பரத்தில் வீதி உலா, சூர சம்ஹாரம், மயிலம்மன் பூசை, வேல் வாங்குதல், திருக்கல்யாணம், பிரம்மாண்ட தேர் உலா என்று நீண்டு முப்பதாம் நாள் “முழுக்கு” என்று அழைக்கப்படும் கடைமுக தீர்த்தவாரி திருவிழாவாகவும், அதற்கு அடுத்தநாள் “கடை முழுக்கு” என்று அழைக்கப்படும் முடமுக தீர்த்தவாரி திருவிழாவாகவும் மிகச் சிறப்பாக நடைபெற்று, மாயவரத்தின் ஒட்டுமொத்த மக்களும் காவிரிக்கு வந்து இறையோடு நீராடிவிட்டுச் செல்வார்கள்....!

இந்த முப்பது நாள் விழாவிற்கும், அதிலும் ஒவ்வொரு நாளின் தனித்தனி நிகழ்வுகளையும் பிரித்தெடுத்து அவற்றுக்கான செலவுகளை சமாளிக்க ஊரில் உள்ள முக்கியஸ்தர்கள், பெரிய குடும்பத்தினர், வியாபாரிகள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், குழுவாக இணைந்து சாமான்யர்கள்...  என்று அனைத்து தரப்பினரும் போட்டி போட்டு ஸ்பான்ஸர் செய்துவிடுவார்கள்....

எங்க ஊர் முழுக்கு கடை ரொம்ப பிரசித்தம். முன்னெல்லாம் சின்னக்கடைத்தெருவில் ஆரம்பித்து காவிரிக்கரை வரை மகாதானத்தெருவின் இரண்டு பக்கமும் போடப்பட்டிருக்கும் கடைகள், சமீபகாலமாக நகராட்சியால் ஒதுக்கப்பட்டிருக்கும் பெரிய மைதானத்தில் போடப்படுகிறது. கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு இந்தக் கடைகள் விரிக்கப்பட்டிருக்கும். இங்கே விற்காத பொருட்களே இல்லை என்று சொல்லலாம். எந்த மதத்தைச் சார்ந்தவர்கள் என்றாலும் ஊரில் உள்ள அனைவருமே குடும்பத்துடன் முழுக்கு கடைக்கு சென்று வருவது தவிர்க்க முடியாத ஒரு அஜெண்டா. 

ஒவ்வொரு வீட்டிலும் பசங்களுக்கு முழுக்கு காசு கொடுப்பது இங்கே பிரஸித்தம். 

இந்த அற்புத திருவிழா தற்பொழுது எங்கள் மாயவரத்தில் களைகட்டி உச்சம் தொடும் தருவாயில் இருக்கின்றது.  நேற்று திருக்கல்யாணம் முடிஞ்சாச்சு, நாளை தேர், நாளை மறுநாள் முழுக்கு........

இன்றைக்கு எட்டாம் நாள் திருவிழா, நலுங்கு உற்சவம்... இந்தியா முழுவதிலும் இருந்து இந்துக்கள் வந்து மாதத்தில் ஏதோ ஒரு நாள் இங்கே காவிரியில் நீராடிவிட்டுச் செல்கின்றனர். முப்பது நாட்களும் காலையில் சென்று காவிரியில் நீராடிவிட்டு சொட்டச் சொட்ட வரும் வயது முதிர்ந்த ஆண்களையும் பெண்களையும் சாரை சாரையாக இன்றைக்கும் காணலாம்....

நீங்களும் ஒரு எட்டு எங்க மாயவரம் முழுக்குக்கு வந்துட்டுப் போங்க மக்கா.....!

2 comments:

vylsn silwr said...
This comment has been removed by the author.
vylsn silwr said...

i too welcome you all to mayavaram.
apdi vanthingana, konjam koranadu pakkamum vaanga..