Friday, June 27, 2014

நாளைய திமுக

திமுகவில் இருந்து விரட்டியடிக்கப்பட்டிருக்கும் சில புறம்போக்க்குகளின் பேட்டியை எடுத்துப் போட்டு சில ஊடகங்கங்கள், நடந்து முடிந்திருக்கும் பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு தளபதி ஸ்டாலினுடைய அனுபவமின்மையும், சரியான கூட்டணி அமைக்காததுமே காரணம் என்று பரப்புரை செய்து கொண்டிருக்கின்றன....

இன்றைய நிலையில் நாளை திமுகவை ஆட்சிக்கட்டிலில் அமர்த்த வேண்டுமானால், மக்கள் முன்னே திமுகவின் சார்பான ஒரே ஈர்ப்பு சக்தி என்றால் அது ஸ்டாலின் மட்டுமே. அந்த சக்தி பலம் வாய்ந்ததாக இருக்கின்ற வரை ஜெயலலிதாவுக்கும் சரி, மற்ற தமிழகத்தின் சில்லரைக் கட்சிகளின் தலைவர்களுக்கும் சரி திமுக மீதான பயம் இருந்து கொண்டே தான் இருக்கும்.

ஆகவே தான் இப்பொழுது ஒட்டுமொத்த திமுக எதிர்ப்பாளர்களின் கவனமும் தளபதி ஸ்டாலினுடைய புகழை கலங்கப்படுத்துவதிலேயே குறியாக இருக்கின்றது.

நடந்து முடிந்த தேர்தலில், அதிமுக எந்தக் கூட்டணியும் அமைக்காமலேயே திமுக வாங்கியதை விட மிகச் சரியாக ஒரு மடங்கு... அதாவது 100% அதிகமான வாக்குகளை வாங்கியிருக்கின்றது. மக்கள் வாக்குப்பதிவுக்கு முன்பே மிகத் தெளிவானதொரு மனநிலையோடு தான் அதிமுகவுக்கு வாக்களித்திருக்கின்றார்கள் என்பதைத் தான் இந்த 100 சதவிகித வாக்கு வித்தியாசம் நமக்கு உணர்த்துகின்றது.

இதை மீறி அதிமுக என்ற கட்சியைத் தவிர்த்த தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளையும் இணைத்து கூட்டணி கண்டு திமுக இந்த தேர்தலை சந்தித்திருந்தாலும், நிச்சயம் வென்றிருக்க முடியாது. இது தான் எதார்த்தம்.

ஆகவே கூட்டணி விஷயத்தில் தளபதி எந்த தவறான முடிவையும் எடுக்கவில்லை என்பதும், விசி, மமக, புத போன்ற கட்சிகளோடு திமுக கூட்டணி அமைக்காமல் போட்டியிட்டிருந்தாலும் கூட இதே 22.6 சதவிகித வாக்குகளைத்தான் திமுக பெற்றிருக்கும் என்பதும் கண்கூடு...!

மேலும் விசிக்களோடு கூட்டணி என்பது தலைவர் கலைஞரின் தனிப்பட்ட விருப்பம் என்பதும்..., மமக மற்றும் புத போன்ற கட்சிகளோடு கூட்டணி என்பது கனிமொழியின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான பதில் மொய் என்பதும் தான் உண்மை. ஆகவே இதில் தளபதியைக் குறை கூற எந்த முகாந்திரமும் இல்லை. ஆகவே தளபதி தவறான கூட்டணியை அமைத்ததே தேர்தல் தோல்விக்கு காரணம் என்பது அடிப்படையே இல்லாத அர்த்தமற்ற பேச்சாகும்.

அடுத்ததாக, கடந்த நாற்பது ஆண்டுகளாகவே திமுகவின் அடிப்படை கட்சிப்பணிகளிலிருந்து படிப்படியாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, திமுகவின் உணர்வுமிக்க ஒரு அடிப்படைத் தொண்டன், கட்சிக்காக அறிவிக்கப்பட்ட சிறை நிரப்புப் போராட்டம் உட்பட அனைத்து போராட்டங்களிலும் கடந்த 40 ஆண்டுகளாக தொடர்ந்து ஈடுபட்டு, தமிழகம் முழுவதும் தலைவர் கலைஞருக்கு இணையாக மூளை முடுக்கு, இண்டு இடுக்கு என்று அனைத்து பகுதிகளுக்கும் சுற்றிச் சுழன்றி, கழகம் ஆட்சியில் இல்லாத காலங்களிலும் மிகக் கூடுதலாக கட்சிப்பணியாற்றி....

கழகத்தின் கடைகோடித் தொண்டனையும், நம் தலைவர் கலைஞர் போலவே பெயர் சொல்லி அழைக்கும் அளவிற்கு கழகத்தோடு ஐக்கியமாகியிருக்கும் தளபதி ஸ்டாலினுக்கு இல்லாத அனுபவம் வேறு யாருக்குமே இருக்க வாய்ப்பில்லை என்பது தான் என் நிலைப்பாடு.

தலவர் கலைஞர் அடைந்த தேர்தல் வெற்றிகளை விட தோல்விகளே அதிகம். அதற்காக அவருக்கு அனுபவம் இல்லை என்று நாம் சொல்ல முடியாது.

தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளில் ஒரு மிகப் பெரிய கலாச்சார மாற்றம் நிகழ்ந்திருக்கின்றது. அந்த மாற்றத்தை எதிர்கொள்கின்ற அளவிற்கு திமுக தன்னை மாற்றியமைத்துக்கொள்ளவில்லை என்பது தான் இந்த தோல்விக்கான காரணம். இன்னமும் அழகிரி, கனிமொழி, மாறன் பிரதர்ஸ், 2ஜி, ஈழ துரோகம், குறுநில மன்னர்களின் அராஜகம் என்று பற்பல பிரச்சினைகளுக்கு பதில் சொல்வதிலேயே திமுக தொண்டர்களின் 90 சதவிகித சக்தி விரயமாகிக் கொண்டிருக்கின்றது.....

கட்சியை அதன் தொண்டர்கள் நேர்மறையாக (பாஸிடிவ் ஆக) முன்னெடுத்துச் செல்லுகின்ற வகையில் கட்சித் தலைமை அதை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு வாக்காளரிடமும் வாக்குச் சேகரிக்கச் செல்லும் ஒவ்வொரு திமுக தொண்டனும், அந்த வாக்காளரிடம்......

அழகிரியின் அராஜகம், தினகரன் அலுவலக எரிப்பு, தா.கி கொலை, 2ஜி ஊழல், அதன் காரணமாக ஈழ விவகாரத்தில் விட்டுக்கொடுத்தது, அந்ந்தந்த மாவட்ட செயலாளர்களின் அடிப்பொடிகளின் அராஜகங்கள்.... என்று இப்படியாக பல பிரச்சினைகளுக்கு சப்பைக்கட்டு கட்டிவிட்டுத்தான், நாம் செய்த சாதனைகளை அந்த வாக்காளரிடம் எடுத்துக் கூற வேண்டியதாக இருக்கின்றது.

உடனடியாக... ஜெயலலிதா குற்றம் இழைக்கவில்லையா? அராஜகம் செய்யவில்லையா? ஊழல் செய்யவில்லையா? என்று சிலர் கேட்பார்கள். அதற்கெல்லாமான தண்டனையை 96இல் ஜெயலலிதாவுக்கு மக்கள் தந்துவிட்டார்கள். ஆனால் அதன் பிறகு அதிமுகவைப் பொறுத்தவரை இந்த மாதிரியான தவறான நபர்களாக ஜெயலலிதாவைத் தவிற வேறு யாரையும் மக்களால் உடனடியாக கை காட்ட முடியாத அளவிற்கு பார்த்துக்கொள்கிறார்.

மக்களின் மனநிலை எப்படி இருக்கின்றது என்றால்.... “நான் மாநில தலைமை அராஜகம் செய்தால் பொறுத்துக்கொள்கிறேன். காரணம், 8 கோடிப்பேரில் நானும் ஒருவன். அந்த பெரிய ஆளுமையின் அராஜகத்தினால் நான் நேரடியாக பாதிக்கப்படப்போவதில்லை. ஆனால் என் வார்டில், என் நகரத்தில், என் ஒன்றியத்தில், என் மாவட்டத்தில்... அதைத்தவிரவும் மாநில அளவில் பல்வேறு அதிகார மையங்கள் என்று தினம் தினம் ஏதாவது ஒரு பிரச்சினையில் ஒரு அராஜகப் பேர்வழியிடம் நான் மண்டியிடவோ, அடிமைப்பட்டுக்கிடக்கவோ, பயந்து நடுங்கி வாழவோ விரும்பவில்லை....!”

இது தான் இன்றைய மக்களின் மனநிலை. அதிகார மையம் என்பது மாநில அளவில் ஒன்று இருந்தால் போதும் என்று நினைக்கின்றார்கள் மக்கள்! தன் வார்டில், தன் நகரத்தில், தன் மாவட்டத்தில் இருக்கின்ற ஒரு கட்சிக்காரன் தன்னை அச்சுறுத்துபவனாக இருக்கக் கூடாது என்று விரும்புகிறான். இது இயல்பான ஒரு நடுத்தர வர்க்க மனநிலை தான். இதில் குறை கூற எதுவும் இல்லை.

இதற்கு ஏற்றார் போன்ற மாற்றத்தை திமுகவின் தலைவர் கலைஞர் தான் கழகத்தில் நிறுவ வேண்டும். அப்பொழுது தான் மக்கள் திமுகவின் பக்கமாக மீண்டும் தமது பார்வையை திருப்புவார்கள். இதற்கு ஒரே வழி.... தளபதி ஸ்டாலின் அவர்களை கட்சியின் செயல் தலைவராக அறிவித்து, முதவர் வேட்பாளராகவும் மக்கள் முன் நிறுத்த வேண்டும். அப்படிச் செய்தால் திமுகவின் அழகிரி, கனிமொழி, மாறன், ராஜாத்தி என்று தனித்தனி கோஷ்டிகள் இல்லாமல், தளபதி தலைமையில் ஒரே அணியாக இருக்கும். கீழ் நிலையில் உள்ள பொறுப்பாளர்களும், தான் தவறு இழைத்தால் இன்னொரு கோஷ்டித் தலைமையைப் பிடித்து தப்பித்துக்கொள்ள வழியில்லாமல், செவ்வனே தத்தமது கடமையை ஆற்றுவார்கள்....!!!

ஆகவே தலைவர் கலைஞர் மாற்றத்தை மேலே இருந்து கொண்டுவர வேண்டும். அதாவது பன்முக தலைமையை ஒழித்துக்கட்டி... திமுகவில் ஒரே முகம்... அது தளபதியின் முகம் என்ற ஒற்றைத் தலைமை முறையைக் கொண்டு வந்தால்... கட்சியின் அனைத்து பொறுப்பாளர்களும், தொண்டர்களும் தளபதி தலைமையில் ஒரே அணியாக செயல்பட்டு கழகத்தை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர வைப்பார்கள்.

6 comments:

Anonymous said...

poda loosu dmk sombu pavam summa vidathu

Anonymous said...

திமுக மூழ்கும் கப்பல். இனி மேல் அதை காப்பாற்ற் யாருமே இல்லையப்பா......

Anonymous said...

A post after a long time -- the first after the Parliamentary election results does not contain substantive. A typical Kalignar Arikkai!

Anonymous said...

திமுக மூழ்கும் கப்பல். இனி மேல் அதை காப்பாற்ற் யாருமே இல்லையப்பா

mohamed salim said...

ஆனால் என் வார்டில், என் நகரத்தில், என் ஒன்றியத்தில், என் மாவட்டத்தில்... அதைத்தவிரவும் மாநில அளவில் பல்வேறு அதிகார மையங்கள் என்று தினம் தினம் ஏதாவது ஒரு பிரச்சினையில் ஒரு அராஜகப் பேர்வழியிடம் நான் மண்டியிடவோ, அடிமைப்பட்டுக்கிடக்கவோ, பயந்து நடுங்கி வாழவோ விரும்பவில்லை....!”........... தன் வார்டில், தன் நகரத்தில், தன் மாவட்டத்தில் இருக்கின்ற ஒரு கட்சிக்காரன் தன்னை அச்சுறுத்துபவனாக இருக்கக் கூடாது என்று விரும்புகிறான். இது இயல்பான ஒரு நடுத்தர வர்க்க மனநிலை தான். இதில் குறை கூற எதுவும் இல்லை.

.....சத்தியமான வார்த்தைகள், தி. மு. க. உறப்பினர்கள் செய்யும் அராஜகம் அளவில்லாதது .மாநகராட்சிக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து அனுமதி பேரு வீடு கட்டும் நடுத்தர வர்க்கத்தை துயரத்திற்கு ஆலக்கினர்கள்..மாமன்ற உறப்பினர் முதற்கொண்டு குறுநில மன்னர்கள் போல உலா வந்தார்கள் ..மக்களின் தீராத வெறுப்பு சம்பாதித்து கொண்டார்கள்... முதலில் பல அதிகார மையங்களை ஒழித்து கட்டினால் தான் விடிவுகாலம்

Balamurugan BALU said...

அருமையான பதிவு. இப்படி நடந்தால் மிக நல்லது. பாலமுருகன் , கோவை.