பாஜகவின் இல. கணேசன், தமிழகத்தில் இந்தி ஆதரவு போராட்டம் வெடிக்கும் என்று கூறியிருப்பதைப் பார்த்து எனக்கு எந்தக் கோபமும் வரவில்லை. மாறாக அவரது அறியாமையின் மீதான பச்சாதாபமும், இந்த மாதிரியான வாதங்களால் பாஜகவை தமிழகத்தில் மீண்டும் தனது ஒரிஜினலான பழைய நிலைக்கே திரும்பக் கொண்டு போய் சேர்க்கும் அந்த நிகழ்வையும் காணும் ஆவல் தான் ஏற்படுகின்றது..!
அறுபதுகளில் தமிழகத்தில் மிகப் பலமாக நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டமானது, திராவிட முன்னேற்ற கழகம் மட்டுமே நடத்தி அதை நம்பி மக்கள் திமுகவுக்கு ஆதரவாக வாக்களித்து அரியணையில் முதன் முதலாக அமர வைத்தார்கள் என்று யாராவது நினைத்தால் அது தவறு...!!
இந்தி திணிப்பு எதிர்ப்பு என்பது ஒட்டுமொத்த தமிழர்களின் ரத்தத்தில் அல்ல..... குரோமோசோம்களில்.. ஜீன்களில் இயல்பாகவே வடிவமைக்கப்பட்ட ஒரு தீர்மானம். அதற்கு ஆதரவான போராட்டத்தை அதாவது இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கும் எந்த அமைப்பு அல்லது இயக்கத்துடனும் தமிழக இளைஞர்கள் இயல்பாகவே ஒருங்கிணைந்து போராடுவார்கள்.... இது தான் உண்மை.
திமுக முன்னெடுத்த அந்த இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக ஒட்டுமொத்த தமிழக மாணவ சமுதாயமும் சாரை சாரையாக வந்து தானாகவே தன்னை இணைத்துக் கொண்டது. ஒட்டுமொத்த தமிழக மக்களும் தார்மீக ரீதியிலான தங்களது ஆதரவினை அந்த போராட்டத்திற்கு வழங்கினர். அதை மிகச் சரியாக நாடி பிடித்துப் புரிந்து கொண்ட திராவிட முன்னேற்றக் கழகம், தனது மாணவர் அணியையே அப்போராட்டத்தை முன்னெடுக்க பணித்து... அப்போராட்டத்தை மிகத் தெளிவாக முன்னெடுக்கவும் பக்கபலமாய் நின்றது.
ஒரு கட்டத்தில் திமுகவின் பெரும் தலைவர்களாலேயே மாணவர்களின் அந்த எழுச்சியையும் அதனால் ஏவிவிடப்பட்ட அடக்குமுறைகளால் மாணவர்கள் பலியாவதையும் கட்டுப்படுத்தக் கூட இயலாத அளவிற்கு தமிழகத்தின் இள ரத்தங்கள் சூடேறிக் கிடந்தன.
ஆகவே அன்று நடந்த அந்த இந்தித் திணிப்பு எதிப்புப் போராட்டமானது, ஒட்டுமொத்த தமிழர்களும் முன்னெடுத்ததொரு போராட்டம். அதை மக்களுக்காக நடத்திக் கொடுத்து வெற்றி பெற வைத்தது திமுக அவ்வளவு தான்!!!
அன்றைக்கு காணாமல் போன காங்கிரஸ் தமிழகத்தில் இன்னமும் எழ முடியவில்லை. அன்றைக்கு அன்னாசிப் பழத்தைக் கொண்டு சென்று தோற்றுப் போய் ஆப்பு வாங்கிய காங்கிரஸார்.... இன்றைக்கு மோடியின் முடிவையும், இல. கணேசன்களின் பேச்சையும் கேட்டு.... பலாப்பழத்தோடு போட்டிக்குச் செல்லும் பாஜகவுக்கு கிடைக்கப்போகும் பலனை நினைத்து சிரித்துக் கொண்டிருக்கின்றனர்....!!!
இல. கணேசன்களே, இப்பொழுது புரிகிறதா? உங்கள் அறிக்கையின் மீது எனக்கு ஏன் கோபம் வரவில்லை என்று???!!!
No comments:
Post a Comment