Monday, November 20, 2017

தீரன் அதிகாரம் ஒன்று... விமரசனம் மாதிரி..!


சதுரங்க வேட்டை எனக்கு பிடித்த படங்களில் ஒன்று, அதன் இயக்குனர் வினோத்தின் இயக்கத்தில் வந்துள்ள படம் என்பதால், நேற்று குடும்ப சகிதம் மாயவரம் ரத்னா தியேட்டரில் ஆஜர்..!



கடந்த சில ஆண்டுகளாக தமிழில் வெறிப்பிடித்த சினிமா ரசிகன் ஒருவனுக்கான படம் வரவேயில்லை என்பது தான் என் கருத்து. அதிலும் இப்போ ஐந்தாறு வருடங்களாக ஒரு குரூப்... சினிமான்னாலே இப்படித்தான் என்று தமிழர்களை எல்லாம் சினிமா மோகத்திலிருந்து வெளியெ இழுத்துப் போட்டுக்கொண்டிருக்கும் வேலையை கண கச்சிதமாக செய்து கொண்டிருக்கும் வேலையில்...
இதற்கு முன்பாக நான் பார்த்த சற்றேரக் குறைய 100 தமிழ் புது படங்கள் எதுவுமே அதி தீவிர சினிமா ரசிகனான என்னை முழுமையாக திருப்திப்படுத்திடாத நிலையில்... தமிழ் சினிமா உலகின் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையற்ற கவலையில் இருந்த நேரத்தில் தான்...
நேற்று இந்தப்படமும் அதில் ஒன்றாகத்தான் இருக்கும் என்ற அங்கலாய்ப்போடு தான் தியேட்டரில் படம் பார்க்க ஆரம்பித்தேன்...!
என் நம்பிக்கையை பொய்யாக்கமல், படமும் முதல் கால் மணி நேரத்திற்கு வழமையான பெரிய ஈர்ப்பில்லாத காதல் காட்சிகளுடனும், மொக்கை ஜோக்குகளுடனும் கடந்த நிலையில்....
ரன்வேயில் காமாஞ்சோமான்னு உருட்டிக்கிட்டிருக்கும் விமானம், எதிர்பாராத நேரத்தில் திடுக்கென்று வேகம் கூட்டி டேக் ஆஃப் ஆகி அதிர்ச்சியும், பரபரப்பும், ஒரு வித பயத்தையும் கூட்டி, நம்மை இனம் காண முடியாத ஒரு பரவசத்தில் ஆழ்த்துமே.... அதேப் போன்று தான்.. இது வேற லெவல் படம்... என்பதை அழுத்தமாக பதிவு செய்கிறது.
முரட்டுத் தனமான கொலைத்தாக்குதல்களுடன் கூடிய கொள்ளைகள்... எந்த தடயமும் கிடையாது, சாட்சியும் கிடையாது, பாதிக்கபடுவதோ, இதைக் கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்ற அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடிய மதிப்பு மிக்கவர்களும் கிடையாது...
எல்லாவற்றுக்கும் மேலாக சம்பவங்கள் நடப்பது அனைத்துமே இன்றைக்கு இருப்பது போல, தொலைத்தொடர்பு வசதிகளும், மக்களிடம் பிரச்சினைகளைக் கொண்டு சென்று அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வைக்கும் சமூகவலைத்தளங்களும் இல்லாத, அது பற்றி தெரியவே தெரியாத காலக்கட்டம்...!
இதை வைத்துக்கொண்டு, டி எஸ் பி லெவலில் இருக்கும் ஒரு இளம் போலீஸ் அதிகாரி துப்புத்துலக்கி, அட்வென்ச்சர்ஸ் செய்து, இந்தியா முழுக்க தடம்பத்திருக்கும், எதற்குமே கவலை கொள்ளாத, நாடோடித்தனமான, பெரிய சொகுசு வாழ்க்கை வாழாத... கூட்டத்தையும் அதன் தலைவனையும் அழித்தொழித்து சட்டத்தின் முன் நிறுத்துவது தான் இந்த படத்தின் படா ஒன் லைன்...!
பருத்தி வீரனுக்குப் பிறகு கார்த்தியின் மேல் ஈர்ப்பே இல்லாமல் அல்லது பிடிக்காத நிலையே இருந்த நேரத்தில் இந்தப் படம் அவர் மீதான ஈர்ப்பை மீண்டும் உருவாக்கிவிட்டிருக்கிறது..!
மெர்ஸல் படம் பார்த்த பிறகு தான் தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றிய மிகப்பெரிய பயம் என்னுள் தொற்றிக் கொண்டுவிட்டது. காரணம், எந்த கலை, கதை, ஞானம் பற்றிய அறிவுமே இல்லாத ஒரு இயக்குனரின் பின்னால் வேறு வழியே இல்லாமல் மாஸ் ஹீரோக்கள் மாட்டிக்கொண்டு விட்டார்களே என்ற கவலை தான் அது...! பத்து படத்தோட கதையை, காட்சிகளைத் திருடி எடுப்பது தான் இனி தமிழ் சினிமாவாக இருக்குமோ என்ற பயம் கூட வந்து விட்டது...!
அந்த பயத்தை ஒரு நேர்மையான தமிழ் சினிமா ரசிகனின் மனதில் இருந்து இயக்குனர் வினோத் பிடுங்கி எறிந்திருக்கின்றார் என்று தான் சொல்வேன்..!
ராஜஸ்தானின் ஒரு பாலைவன கிராமத்தில் கொள்ளைக்காரர்களை சுற்றி வளைக்க, அந்த கிராமமே இந்த போலீஸ் கூட்டத்தை சுற்றி வளைத்து ரவுண்டு கட்ட.... அதிலிருந்து அதிரி புதிரியாக கார்த்தி அன் கோ தப்பிக்கும் அந்த சீன் மரண மாஸ்...! தமிழ் சினிமா எதிலுமே நான் இதுவரை பார்த்திராத அதகளம் அது...! அந்த காட்சிகளில் எல்லாம் இசையமைப்பாளர் ஜிப்ரான்... இது தான் பின்னனி இசையின் இலக்கணம் என்று புது இசையமைப்பாளர்களுக்கு பாடம் எடுத்திருக்கின்றார்...!
கேப்டன் பிரபாகரன் போன்ற படங்கள் எல்லாம் தமிழில் இனி சாத்தியமே இல்லையா.... ராஜமௌலி போன்ற தெலுங்கு இயக்குனர்களின் தமிழ் டப்பிங் பாகுபலி படங்களைப் பார்த்துத்தான் இனி சினிமா ஆசையை தீர்த்துக்கொள்ள வேண்டியிருக்குமோ என்ற என்னைப்போன்றோரின் கனவுகளை வினோத் இப்படம் மூலம் தகர்த்தெரிந்திருக்கின்றார்.
கேப்டன் பிரபாகரன் போன்ற படங்களுக்கு விஜயகாந்த்தின் பொருளாதார பின்புலம் இருந்து அப்போவே அப்படி பிரம்மாண்டம் காட்ட முடிந்திருக்கின்றது என்பது உண்மையானாலும், இந்த படத்தில் வரும் போலீஸுக்கு கொடுக்கப்படும் ரேஷன் தொகையினைக் கொண்டு இந்தியா முழுவதும் அலைந்து திரிந்து, டப்பா வேன்களையும், சுயசமையல் சாப்பாட்டினையும் வைத்துக்கொண்டு ஆகப்பெரிய பரம்பரை கொள்ளைக் கூட்டத்தை பிடித்தது போலத்தான்...
இப்படத்தில் காட்டியிருக்கும் பிரம்மாண்டத்திற்கு தயாரிப்பாரின் முதலீடு ரேஷன் தொகை என்றே தோன்றுகிறது.... ! இந்த இயக்குனருக்கெல்லாம் ராஜமௌலியின் தயாரிப்பாளர்கள் கிடைத்தால் தீரன் அதிகாரம் இரண்டை பத்து பாகுபலிக்கு இணையாக இந்திய சினிமாவுக்கு தமிழ் திரையுலகின் சார்பாக கொடுப்பார் என்று சத்தியம் செய்கிறேன்...!
இரண்டாம் பாதியில் வட மாநிலங்களின் பாலை வனங்களிலும், பொட்டல் வெளிகளிலும் ராஜபுதனத்து கால வரலாற்றுப் பின்புலத்தோடும், மொகலாயர் காலத்து நிகழ்வுகளோடும், ஆங்கிலேயர்களின் ஆட்சிமுறை நேர்க்கோட்டின் அழகினையும்... அழகியதொரு கதைச்சொல்லியாக, சாண்டில்யன் கதைகளைப் போன்று, நிகழ்கால படத்தின் காட்சிகளை நம் மனதில் இன்னொரு பின்புல சரித்திர மனப்பதிவுகளோடு கொள்ளைக்காரர்கள் பயணிப்பதை பார்வையாளர்கள் மங்களில் ஊடுறுவச் செய்து.... படத்தோடு ஒன்ற வைத்து, அற்புதமாக படமாக்கியிருக்கின்றார் இயக்குனர்...!

தமிழ் சினிமாவுக்கு அடுத்த நாசர்...   போஸ் வெங்கட்டாகத்தான் இருப்பார் என்று நம்புகிறேன். உடல் மொழியை இன்னும் கொஞ்சம் மெறுகேற்றி முழு ஈடுபாட்டோடு இறங்கினால், நிச்சயம் அவர் நாசரின் இடத்தைப் பிடிப்பார்..!



இல்லாத பாகுபலி வரலாற்றை இவ்ளோ பிரம்மாண்டமாக தரமுடியும் என்றால், வரலாற்றோட்டு பின்னிப்பிணைந்த இச்சம்பவங்களை இதைவிட நூறுமடங்கு பிரம்மாண்டமாக ஒரு பெரிய தயாரிப்பாளர் கிடைத்தாலும் வினோத்தால் படமாக்க முடியும்...!
விஜய் அஜித் போன்றோர் இவர் கைகளைப் பற்றிக்கொண்டு கைக்கட்டி வேலை செய்தால் அடுத்த பத்தாண்டுகளுக்கு மாஸ் ஹிட்டோடு சம்பாதிக்க முடியும்...!
படத்தில் குறையே இல்லையா என்றால்... நிச்சயம் இருக்கு...! இரண்டரை மணி நேரம் படம் பார்க்கும் பலர்... கிட்டத்தட்ட ஒன்னரை மணி நேரமாவது இயல்பாக சாய்ந்து உட்கார முடியாமால் சீட்டு நுனியிலும், அவ்வப்பொழுது கை கால்களை எல்லாம் முறுக்கிக் கொண்டும்.... டென்ஷனை ஏற்றிக்கொண்டும் இருக்க வேண்டியிருப்பதால்... அதன் காரணமான உடல் உபாதைகள் தான் இப்படத்தின் ஆகப் பெரிய குறை என்பேன்..!
நல்ல படம்ன்னா சில குறைகளையும், லாஜிக் மீறல்களையும் தள்ளி வச்சிட்டு பார்க்கணும்ங்கறதும்... நூத்துல தொண்ணூறு பசங்களுக்கு அஞ்சுலேர்ந்து பத்து வயசுக்குள்ள வர்ற லட்சியக் கனவுகளில் நிச்சயம் ஒரு போலீஸ் ஆஃபீஸர் இருப்பார் என்பது போல.... அந்த போலீஸ் ஆஃபீஸரை இங்கே நீங்கள் முழுமையாக காணலாம் என்று சத்தியம் அடித்துச் சொல்லமுடியும்..!
இதற்கு மேல் இந்த படம் பற்றி காட்சிக்கு காட்சி விமர்சனத்தை எழுதினால் அது போரடிக்கும் என்பதால்... தமிழ் சினிமா ரசிகர்கள் திரையரங்கம் சென்று இந்த சுகானுபாவத்தை அனுபவிக்கும் படியும்... அதன் மூலம் தமிழ் சினிமாவை வாழ வைக்கும் படியும் கேட்டுக்கொள்கிறேன்..!


No comments: