Tuesday, June 21, 2016

முரண்பாடுகளின் மொத்த உருவம்.. கலைஞரா? ஜெயலலிதாவா?!


இப்படி ஒரு வாக்கியத்தை கலைஞருக்கு எதிராகச் சொன்னால், தன்னுடைய தலைவி ஜெயலலிதாவின் ஒட்டு மொத்த முரண்பாடுச் செயல்களும் மக்கள் மனக்கண் முன்னே வரிசை கட்டி கடந்து போகுமே என்று செம்மலைக்கு தெரியாமல் போனது தான் வியப்பாக இருக்கிறது..!

எம் ஜி ஆர் இனி சரிப்பட்டு வர மாட்டார், அவரை நீக்கி விட்டு என்னை முதல்வராக்கவும் என்று அன்றைய பிரதமர் ராஜீவ் காந்திக்கு எழுதிய கடிதத்தை மறை(ற)த்(ந்)து விட்டு... அவர் இறந்த பின்னால், தானும் அவரோடு உடன்கட்டை ஏறி விடலாம் என்று எண்ணினேன் என்று ப(வி)ம்மியதை விடவா ஒரு முரண் இருந்துவிடப் போகிறது?!

எம் ஜி ஆருக்கு ஜானகி அம்மாள் தான் மோரில் விஷம் வைத்துக் கொன்றார் என்று வாய் கூசாமல் சொல்லிவிட்டு, கொஞ்ச நாளிலேயே அவருடன் சமரசமாகி இணைந்து அதிமுகவை கைப்பற்றியதை விடவா இன்னொரு முரண்பாடு இருந்துவிடப் போகிறது?!

ராஜீவ் காந்தி கொலைக்கு திமுகவின் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான செயல்பாடு தான் காரணம் என்று சொல்லி மக்களை மதி கலங்கச் செய்து முதல் முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு....
ராஜீவ் காந்தி கொலையால் தான் ஆட்சியைப் பிடித்து முதல்வராகவில்லை என்று ஒரே போடாக போட்டதை விடவா வேறொரு முரண்பாடு இருக்கப் போகிறது?!

91 தேர்தலில் விடுதலைப் புலிகளுக்கு திமுக ஆதரவளித்ததாகச் சொல்லி ஆட்சியைப் பிடித்து விட்டு..., 2011 தேர்தலில் அதே விடுதலைப் புலிகளுக்கு திமுக ஆதரவளிக்கவில்லை என்று கூறி ஆட்சியைப் பிடித்ததை விடவா மோசமான முரண்பாட்டை நாம் காணப்போகிறோம்?!

ஒரு இளைஞனை வளர்ப்பு மகனாக தத்தெடுத்து, உடனடியாக அவனுக்கு பிரம்மாண்டமாக திருமணமும் நடத்தி.... கொஞ்ச காலத்திற்குப் பிறகு அவன் மேலேயே கஞ்சா கேஸ் போட்டு உள்ளே தள்ளி, மகன் அங்கீகாரத்தை ரத்து செய்ததை விடவா இன்னொரு முரண்பாட்டை நாம் காணப் போகிறோம்?!

உதிர்ந்த ரோமங்கள் என்று வசை பாடிய நெடுஞ்செழியன் உள்ளிட்டோரை மீண்டும் தலையில் ஒட்ட வைத்துக் கொண்டதை விடவா வேறு முரண்பாடு இருக்கிறது?!

டான்ஸி வழக்கில் தன்னுடைய கையெழுத்தே அது இல்லை என்று சொல்லி குட்டுப் பட்டு மாற்றிக் கொண்டதை விடவா இன்னொரு முரண்பாட்டை தமிழகம் கண்டுவிடப் போகிறது?!

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசினார் என்று விரட்டி விரட்டி கைது செய்து தடா, பொடா என்றெல்லாம் வருடக் கணக்கில் உள்ளே தள்ளிய வைக்கோவை 2001 வெற்றிக்காக கூட்டணியில் சேர்த்துக்கொண்டதை விடவா இன்னொரு முரண்பாடு இருந்துவிடப் போகிறது?!

மதமாற்ற தடைச் சட்டம், கோவில்களில் ஆடு, கோழி பலியிட தடைச் சட்டம் போன்றவற்றை ஆரவாரமாக கொண்டு வந்து விட்டு, 2004 தேர்தலில் கிடைத்த ஆப்பிற்குப் பிறகு தடாலடியாக வாபஸ் பெற்றதை விடவா இன்னொரு முரண்பாட்டை மக்கள் கண்டிடப் போகிறார்கள்?!

திமுக ஆட்சியில் சோனியா காந்தி, நளினிக்கு காட்டிய கருணையை அசிங்கமாக விமர்சித்து விட்டு, இப்பொழுது ஏழு பேர் விடுதலைக்காக தீர்மானம், இத்தியாதியெல்லாம் போட்டு நீலிக்கண்ணீர் வடிப்பதை விடவா இன்னொரு நகை முரண் இருந்துவிடப் போகிறது?!

மெட்ரோ ரயில் வேஸ்ட்... மோனோ ரயில் தான் பெஸ்ட்.. அதை நான் கொண்டு வருவேன்னு சொல்லிட்டு, கடைசி வரை அதற்காக சிறு துரும்பைக்கூட எடுத்துப் போடாமல், மெட்ரோ ரயிலுக்கு பச்சைக்கொடி காட்டி போஸ் கொடுத்ததை விடவா வேறொரு முரண் இருந்துவிடப் போகிறது?!

இப்பொழுது கூட கலைஞர் சட்டமன்றத்திற்கு வருவதற்கான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்ன்னு சொல்லி ஊடகங்களின் பாராட்டினைப் பெற்று விட்டு.... சட்டமன்ற விதிகளை காரணம் காட்டி சின்னபுள்ளத்தனமான அரசியல் விளையாட்டு விளையாடுவதை விடவா வேறொரு முரண்பாட்டை தமிழக மக்கள் கண்டுவிடப் போகிறார்கள்?!

கலைஞர் முரண்பாடுகளின் மொத்த உருவம்ன்னு சொன்ன செம்மலைக்கு.... அவர் தலைவின் முரண்பாட்டுப் பட்டியலில் ஒரு சிறு சாம்ப்பிள் மட்டுமே மேலே உள்ளது என்பதும் நன்றாகத் தெரியும்...!!

இனிமேயாச்சும் சட்டமன்றத்தில் இந்த மாதிரி சின்னத்தனமான அரசியல் செய்யாமல், சீரியஸான மக்கள் பிரச்சினையை பேசுங்க ஆஃப்பீஸர்...!


2 comments:

வேகநரி said...

முரண்பாடுகளின் மொத்த உருவமே ஜெயலலிதா தான்.

Anonymous said...

யாரங்கே ! விமர்சனம் காவிரி மைந்தனின் கவனத்துக்கு இதை யாராவது கொண்டு போங்களேன்.புண்ணியம் கிடைக்கும்