Friday, February 22, 2013

டாலர் நகரம்.... ஒரு புத்தக விமர்சனம்!

இதுவரை  சினிமா விமர்சனம் கூட ஒன்றிரண்டு எழுதியிருக்கின்றேன் ஆனால புத்தக விமர்சனம் என்று எதையும் தனி பதிவாக நான் எழுதியதில்லை. காரணம் ஒரு புத்தகம் என்பதே, ஏதாவது ஒரு விடயத்தைப் பற்றிய விமர்சனம் அல்லது கருத்து அல்லது பதிவு அல்லது .....  என்கிற போது, அந்த நூல் ஆசிரியரின் அந்த குறிப்பிட்ட விடயம் பற்றிய தனிப்பட்ட கருத்தை விமர்சனம் செய்வது என்ன நியாயம் என்பது என் நிலைப்பாடு!

அதேப் போன்று தான் இந்த “டாலர் நகரம்” புத்தகம் பற்றியும் எனது நிலைப்பாடு என்றாலும், என்னுடைய சக இணைய பதிவர், ஒரு நூலாசிரியராக புது பரிமாணம் எடுத்திருக்கும் இந்த நூல் பற்றி எழுதுவது அதாவது அது பற்றிய எனது கருத்துக்களை மற்றவர்களுடன் பரிமாறிக் கொள்வது என்பது, தமிழ் எழுத்துலகுக்கு இணைய உலகம் புடம் போட்டு தந்து கொண்டிருக்கும் புதிய எழுத்தாளர்களைப் பற்றிய கருத்துக்களை அல்லது விமர்சனங்களை பகிர வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து தான் இந்த நூல் விமர்சனத்தை எழுத முன் வந்திருக்கின்றேன்.

நடப்பு கால மாணவ சமுதாயத்திற்கு வாசிப்பு அனுபவம் என்பது மிகவும் குறைவாக, கிட்டத்தட்ட இல்லை என்கிற அளவிற்கே இருக்கிறது என்பதாக சமீபத்தில் எல்லோராலும் பரவலாக கவலைக்குறிய விஷயமாக விவாதிக்கப்பட்டு வருகின்றது. அதே சமயம் இன்றைய தேதியில் 35 வயதினைத் தாண்டியவர்களில் பெரும்பாலானோருக்கு சம காலத்திய இளைஞர்களோடு ஒப்பிடும் போது இந்த வாசிப்பு அனுபவம் இன்றைக்கும் சற்று அதிகமாகவே இருப்பது கண் கூடு.

இதற்கு காரணம், அப்பொழுது வாஸந்திகளும், சிவசங்கரிகளும், சுஜாதாக்களும், பால குமாரன்களும்....., பேரிலக்கியம், புண்ணாக்கு என்றெல்லாம் பீற்றிக் கொண்டிருக்காமல், வாசிப்பவர்களுக்கு அவர்கள் தளத்திலிருந்து புரிந்துகொள்ளக் கூடிய நடையில் எழுதியது தான் என்பதை யாரும் மறுக்க இயலாது.

சமீப காலமாக தோன்றியிருக்கும் இலக்கியவாதிகள், பேரிலக்கியவாதிகள், முன்நவீனத்துவவாதிகள், பின் நவீனத்துவவாதிகள் என்றெல்லாம் வகைப்படுத்தப்பட்டிருக்கின்ற எழுத்தாளர்கள், சாமான்ய வாசிப்பாளர்களை அல்லது மாணவப் பருவத்திலிருக்கும் இளைய சமுதாயத்தினரை போட்டு படுத்தி எடுத்து, புத்தகங்களைக் கண்டாலே அவர்களைக் காத தூரத்திற்கு ஓட  வைத்தது தான் நடப்பு கால இளைஞர்களின் வாசிப்பு அனுபவத்தை செயலிழக்கச் செய்திருக்கிறது என்பது என் தனிப்பட்டக் கருத்து.

இந்த மாய பிம்பங்களை உடைத்தெறிந்து சாமான்யர்களும் படித்துப் பயன்பெறும் அளவிலான் எழுத்து நடையோடு அவ்வப்பொழுது சில படைப்புகளும் வந்து கொண்டு தான் இருக்கின்றன. அந்த வரிசையில் நண்பர் ஜோதிஜி எழுதியிருக்கும் இந்த டாலர் நகரம்  புத்தகமும் முக்கிய இடத்தினைப் பெற்றுள்ளது என்பதை இங்கு பதிவு செய்து விட்டும் நாம் முன்னகர்வோம்.

தன் சுய சரிதம் போல எழுத முற்பட்டு, திருப்பூரின் கடந்த 20 வருட செயல்பாடுகளை, வளர்ச்சி - வீழ்ச்சிகளை தன் பார்வையின் ஊடாக பதிவிட்டிருக்கிறார் ஆசிரியர் ஜோதிஜி!

திருப்பூர்வாசிகளுக்கும், திருப்பூரோடு தொழில்முறை உறவு வைத்திருக்கும் வெளியூர் வாசிகளுக்கும், உள்ளூரில் வேலை கிடைக்காமல் திருப்பூர் சென்று வேலையிலமர்ந்து புது வாழ்வைத் தொடங்கலாம் என்று நினைப்பவர்களுக்கும் அந் நகரைப் பற்றிய நல்லதொரு புரிதலை தரும் நூலாக இது அமைந்திருக்கிறது.

இதெல்லாம் இந்நூலைப் பற்றிய பொதுவான பார்வைகள் என்றாலும், புத்தகத்தை படிக்க ஆரம்பித்தவுடன் அது கொஞ்சம் கொஞ்சமாக நம்மை கைப்பிடித்து திருப்பூர் தெருக்களின் ஊடாகவும், அங்குள்ள பல்வேறு வகை தொழில் கூடங்களின் உள்ளேயும் அழைத்துச் செல்வதை காணொளியின் ஊடாக காண்பது போன்ற பிரேமையை உண்டு பண்ணுவதை மறுப்பதற்கில்லை.

இங்கு தான் ஜோதிஜியின், ”சிறந்த எழுத்தாளர்” என்ற அந்த பிம்பம் அறங்கேற்றப் படுகிறது.

உள்ளே சென்று இன்னும் கொஞ்சம் நுணுக்கமாக ஆராயும் பொழுது, சில இடங்களில் சில விஷயங்கள் ஆங்காங்கே தொங்கலாக நிற்பது போன்ற பிரமை ஏற்படுகிறது. உதாரணத்திற்கு தயாநிதி மாறன் செய்த எந்த மாதிரியான தவறு இந்த துறையை முடக்கிப் போடுகிறது என்பதற்கான விளக்கம் சுத்தமாக இல்லை.  அதேப் போன்று பொருளாதார உலகமயமாக்கல் ஒப்பந்தத்தில் நரசிம்மராவ் கையெழுத்திட்டது எந்த விதத்தில் இந்தத் துறையை பாதித்தது என்பது பற்றியும் தெளிவான விளக்கம் இல்லாமல் இருக்கின்றது.

ஒரு கட்டத்தில் அதே பொருளாதார உலகமயமாதல் நல்ல பலன்களை தந்து கொண்டிருப்பதையும், அதன் மூலமாக ராக்கெட் வேகத்தில் ஏற்றுமதி அளவு வளர்ந்திருப்பதையும் இந்தப் புத்தகத்தின் மூலமாகவே அறிந்து கொள்ளவும் முடிகிறது.

ஜோதிஜி ஏதாவது ஒரு தளத்தில் தன்னை நிலை நிறுத்திக்கொண்டு தன் பார்வையை படர விட்டு எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. அல்லது வெவ்வேறு தளங்களின் நல்லது கெட்டதுகளையும் தெளிவாக பட்டியலிட்டு, அதன் மூலம் களையப்பட வேண்டிய குறைகளை அது எவ்வாறு களையப்பட வேண்டும் என்ற தீர்வோடு சொல்லியிருந்தால், இது ஒரு ஆகச் சிறந்த படைப்பாக, திருப்பூர் தொழில் துறையினருக்கான பொக்கிஷமாக அமைந்திருந்திருக்கும்!

ஆனால் ஜோதிஜியிடம் இது பற்றிப் பேசிய பொழுது, 600 பக்கத்திற்கு எழுதப்பட்ட புத்தகம், சில பல காரணங்களால் இருநூற்று சொச்சமாக குறைந்து விட்டது அதனால் ஏற்பட்ட விளைவுகள் தான் இதெல்லாம் என்று கூறியதையும் நாம் கணக்கில் எடுக்க வேண்டும். எந்தவொரு படைப்பாளிக்குமே தான் பிரபல்யம் ஆவதற்கு முன் வரும் ஆரம்பகால படைப்புகளில் இது போன்ற சங்கடங்கள் வருவது இயல்பு தான். தன்னுடைய அடுத்தடுத்த நூல்களில் ஜோதிஜி இவற்றையெல்லாம் இலகுவாக கடந்துவிடுவார் என்று நம்பலாம்.

அடுத்ததாக இன்னும் கொஞ்சம் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், ஒவ்வொரு அத்தியாயமும் தனித்தனி பதிவுகளைப் படிப்பது போன்ற உணர்வை ஏற்படுதுகிறது. பொதுவாக ஒரு தேர்ந்த நூலில் அடுத்தடுத்த அத்தியாயங்கள் உணரப்படுகின்ற ஒரு இழையில் கோர்க்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி இயலதபட்சத்தில், வேறு ஒரு அத்தியாயத்துடன் அது கண்டிப்பாக இணைக்கப்பட்டுவிட வேண்டும். மொத்தத்தில் அனைத்து பகுதிகளுமே ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக,  ஏதாவது ஒரு காரணத்துடன்இணைப்பில் வந்து விட வேண்டும்.  அப்படியிருந்தால் தான் படிப்பவர்களுக்கு தொண்டை நனைய நீர் குடித்த திருப்த்தி கிடைக்கும்.

இந்த நூலில் பல சம்பவங்கள் அப்படி தொடர்பில்லாமல் அறுந்து போகும் நிலையில் இருப்பது தவிர்க்கப்பட வேண்டியது. குறிப்பாக சொந்த ஊர் விவசாய சம்பவங்கள், பள்ளிச் சம்பவங்கள் போன்றவற்றை தவிர்த்திருக்கலாம். திருப்பூரைத் தவிர்த்து நம்மை வெளியில் கொண்டு செல்லும் போது கொஞ்சம் அசூயை வருகிறது.

மேலும் எழுத்துப் பிழைகள் ஒரு எல்லையைக் கடந்து நம் கண்களை உறுத்துகின்றன. அது பதிப்பகத்தார் சரி செய்ய வேண்டிய விஷயம். அடுத்தடுத்த பதிப்புகளில் அது சரி செய்யப்பட்டுவிடலாம்.

இதெல்லாமே நூலின் ஆசிரியர் நமது நண்பர் என்ற வகையில் எடுத்துச் சொல்லப்பட வேண்டிய, பொதுவாக சாதாரணமாக வாசிப்பவர்களுக்கு எளிதில் புடிபடாத குறைகள் மட்டுமே!

பொதுவாக இந்த புத்தகத்தைப் பற்றிய பார்வையாக நாம் வைக்க வேண்டுமானால், ஒரு அசாத்திய உழைப்பாளியின்  அனுபவங்களை படித்து முடித்தவுடன், கொஞ்ச நேரத்திற்கு நம்மை ஒரு வித பிரம்மிப்பிலேயே ஆழ்த்திவிடுகிறது, என்பதைத் தான்.

எழுத்து நடையும், அவலங்களைக் கண்டு கொதிக்கும் அவரது கோபமும், படிக்கின்ற நம்மையும் அப்படியே தொற்றிக் கொண்டு விடுகிறது. கொஞ்சம் ஒதுக்கக்கூடிய நேரம் அமையப்பெற்றவர்கள், ஒரே மூச்சில் படித்து முடித்து விடக் கூடிய அளவிற்கு விறுவிறுப்பாக புத்தகத்தில் விவரிக்கப்பட்டிருக்கும் சம்பவங்களும், அதைப் பகிர்ந்திருக்கும் முறையும் அருமை.

புத்தகத்தின் விலைக்கு அதிகமாக தரத்தை தந்திருக்கின்றார்கள். நல்ல காகிதம், பெரிய எழுத்துக்கள், வண்ண புகைப்படங்கள்....  இதெல்லாம் சமீபத்தில் வெளிவந்த புத்தகங்களில் இத்தனை பக்கங்களில் இந்த விலையில் நிச்சயம் வெளி வந்திருக்கவில்லை. அதனால் கொடுத்த காசுக்கு பைசா வசூல்...

தன்னுடைய  முதல் இன்னிங்ஸிலேயே வெற்றிக் கோட்டை தொட்டிருக்கிறார், தோழர் ஜோதிஜி......  வாழ்த்துக்கள்!!






Friday, February 8, 2013

கடல் பா(தி)ர்த்த விமர்சனம்

ப்பேஏஏஏ....   படமாய்யா அது?!

நேற்று முன் தினம் நைட் ஷோ தியேட்டருக்கு போனவுடனேயே பக்குன்னு ஆயிடிச்சி! நாங்க குடும்ப சகிதமா பத்து பேர் போயிருந்தோம். ஆனா இதுல விசேஷம் என்னன்னா? நாங்க பத்து பேர் மட்டும் தான் தியேட்டருக்கே போயிருந்தோம்ங்கிறது தான்! அது தெரிஞ்சோடுனதான் கெதக்குன்னு ஆயிப் போச்சு!

எங்களை விட தியேட்டர் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகமா இருந்தது அவிங்களுக்கே கொஞ்சம் வெட்கமா உணர்ந்த மாதிரி தான் தெரிஞ்சிது. ஒரு வழியா மனச தேத்திக்கிட்டு உள்ள போய் உட்கார்ந்துட்டோம்.

படம் போட்டாங்க. மொதோ சீன் கொஞ்சம் மெறட்டலாத்தான் இருந்திச்ச்சி. நீண்ட நாளைக்கப்பறம் அரவிந்த் சாமியை பார்க்குற சந்தோஷத்தை ஓவர் டேக் செய்றா மாதிரி அர்ஜூனோட கெட்டப்பும், நடிப்பும் ஆஆ...ன்னு வாயப் பொளந்து பார்க்க வச்சிடிச்சி!

ச்சீ நம்ம மக்கள் எல்லாம் எழுதனமாதிரி படம் மோசமால்லாம் இருக்காதுன்னு தெம்போட நிமிந்து உட்கார்ந்தா, அடுத்ததடுத்த சீன்ல படம் அதளபாதாளத்துக்கு கீழ போக ஆரம்பிச்சிடிச்சி! ஒரு கட்டத்துக்கு மேல, இத நம்மாள ஃபாலோ பண்ண முடியாதுன்னு, ஒவ்வொருத்தரா தூங்க ஆரம்பிச்சிட்டாங்க!

எங்க குழுவுல ஒரு புது மண ஜோடியும் வந்திருந்தாங்க. கல்யாணம் ஆகி நாலு நாள் தான் ஆகியிருந்தது. கல்யாணத்துக்கு அப்பறம் பாக்குற மொதோ படம். பொண்ணு ஆந்திரா, தமிழ் சுத்தமா தெரியாது. இருந்தாலும் மணிரத்னம் படம்ன்னு ஆவலா வந்திருந்துச்சி.....

மாப்ள எங்க அக்கா பையன். சுகமா தூங்க ஆரம்பிச்சிட்டான். பொண்ணு மட்டும் கொட்ட கொட்ட விழிச்சி பார்த்துட்டிருந்துச்சு. இடைவேளையின் போது, என்னம்மா படம் புரியுதா? இவ்ளோ ஆர்வமா பார்க்கிறியேன்னு கேட்டதுக்கு....

சீன்லாம் நல்லா இருக்கு, தமிழ் தெரிஞ்சிருந்தா புரிஞ்சிருக்கும்ன்னு சொன்னுச்சி! அப்ப ஏன் தமிழ் தெரிஞ்ச எங்களுக்கும் புரியலன்னு....

...கேகணும்ன்னு தோனிச்சி, ஆனா ஜெமோவ பத்திய புரிதல் எனக்கு இருந்ததால, அப்படி கேட்காமலேயே ஙே... என விழிச்சதோட நிறுத்திக்கிட்டேன்.

சாதாரணமா, மணி சார், பாடல் காட்சிகளை அற்புதமா எடுப்பார், ஜெமோ அதுல கூட மூக்கை நுழைச்சிருப்பார் போலருக்கு. பாடல் வெளியீட்டு விழாவுல சுஹாசினி தான் ஓவரா ஸ்டேஜு பர்ஃபார்மன்ஸ் கொடுத்தாங்க. அப்பவே நான் சுதாரிச்சிருக்கனும்.

அர்விந்த் சாமிய பேக் பண்ணி அனுப்பியதுல அந்தம்மாவுக்கு முக்கிய பங்கு உண்டு. அவர் மீண்டும் தெளிஞ்சவுடனே அழச்சுட்டு வந்து செமையா மாத்து கொடுத்துருக்காங்க! நானெல்லாம் இன்னும் அந்த இந்திரா பட கிலியிலேர்ந்து மீளவே இல்லை, அத மெள்ள மறந்துக்கிட்டிருந்தப்ப இந்தப் படம் மூலமா மீண்டும் ஒரு தாக்குதல் நடத்தியிருக்காங்க.

நான் ஒரு விஷயத்தை மட்டும் தெளிவா நம்பறேன் ஒன்னு அந்த இந்திரா படத்தை மணி டைரக்ட் பண்ணிருக்கனும், இல்லன்னா இந்த கடல் படத்தை சுஹாசினி டைரக்ட் பண்ணியிருக்கனும்!

சாதாரணமா எப்பவுமே ஏ.ஆர். ரஹ்மான் வெளி நாட்டுல போயி ரூம் போட்டு மெட்டமைப்பார், ஆனா இந்தப் படத்தைப் பார்த்து தன்னோட பாட்டெல்லாம் பட்ட பாட்டைப் பார்த்து வெளி நாடு போய் ரூம் போட்டு அழுதிருப்பாருன்னு நினைக்கிறேன்.

ஆரம்பத்துல அவரும் அபாரமா தான் ரீரெக்கார்டிங்ல ஆரம்பிச்சாரு, அதுக்கப்பறம் கிளீனரை உட்கார வச்சிட்டு எழுந்து போய்ட்டாரு போலருக்கு. ஆனா ராஜீவ் மேனனால அப்படி போக முடியல. வேற வழியில்லாம கடேசி வரைக்கும் பிரமாதமா சுட்டுத் தள்ளியிருக்கார். அவர் சீன் பை சீனாத்தான பார்த்திருப்பார், அதனால தப்பிச்சிட்டாருன்னு நினைக்கிறேன்.

இந்த ராதா பொண்ணைப் பத்தி சொல்லியே ஆகணும். என்னா பல்லுய்யா அது? ஒவ்வொன்னும் ஒவ்வொரு சைஸுக்கு. இதையெல்லாம் ஹீரோயினாப் போட்டு படம் எடுத்து பார்க்கறவங்கள படுத்தியெடுக்கணும்ன்னு என்ன நெருக்கடி வந்தது இந்த மணிரத்தினத்துக்கு? கார்த்திக் பையன் கூட துறுதுறுன்னு நல்லா இருகார். 

எனக்கு இதெல்லாம் பிரச்சினை இல்ல. இந்தப் படம் ஓடாததுனால மணி ரத்தினத்தின் சொத்து மதிப்பு ஒரு ரூபாய் கூட குறையப் போறதில்லை. ஆனா டிஸ்ட்ரிபியூட்டர்ல தொடங்கி தியேட்டர் ஓனருங்க, சைக்கில் ஸ்டேண்டு ஏலம் எடுத்தவன் முதற்கொண்டு தமிழகம் முழுக்க ஆயிரத்துக்கும் அதிகமானவங்க தங்கள் சொத்து மதிப்பில் பல லட்சங்களை இழந்தோ அல்லது, பல லட்சங்களுக்கு கடன்காரர்களாக மாறியோ இருப்பார்களே, அவர்களை நினைத்தால் தான் கவலையாக இருக்கின்றது.

நாங்க பார்த்த அந்த தியேட்டர் ஓனருக்கு அன்றைய ஒரு நாள் நிர்வாகச் செலவு மட்டுமே இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் நட்டமாகியிருக்கும். எவ்வளவு பணம் கொடுத்து படப் பொட்டியை வாங்கினாரோ தெரியவில்லை. அந்த நட்டக்கணக்கு தனி!

மணி சார், உங்களை மாதிரி ஆளுங்களால தான் இந்த சினிமா தொழிலே அழிந்து கொண்டிருக்கிறது. உங்கள் போதைக்கெல்லாம் எத்தனை பேரை ஊருகாய் ஆக்கியிருக்கின்றீர்கள் என்று ஒரு கள ஆய்வு செய்து பாருங்கள். அந்த சப்ஜெக்டை வைத்தே கூட குறைந்த பட்ஜெட்டில் நல்ல படத்தை தரலாம்!

Monday, January 28, 2013

மோட்டுவலையப் பார்த்து யோசிச்சது...!!

அப்பப்ப நடக்குற சமுக மற்றும் நமது சொந்த பிரச்சினைகள் அல்லது நிகழ்வுகளை ஒட்டி, என் மனம் ஏற்றுக் கொண்ட கருத்துக்களை எல்லோரையும் போல் சமூக வலைதளங்களில் பதிவிடுவது வழக்கம்.....

அவற்றிலிருந்து ஒரு சிலவைகளின் தொகுப்பு தான் மேற்படி தலப்பில் சமீபமாக நான் பதிவு செய்யும் வரிசையில் இந்தப் பதிவும். மற்ற தளங்களில் பதிவிடப்படாத சில விஷயங்களும் கூட இதில் வரிசை கட்டும்!
***********************************************


சன் டீவியில் நேற்றிலிருந்து (27-01-13) சன் சிங்கர்என்ற ஒரு நிகழ்ச்சியை ஒ(லி)ளி பரப்புகின்றார்கள்......   பாதியிலிருந்து தான் பார்க்க ஆரம்பித்தேன்... ஏனோ மனசுல பச்சக்குன்னு உட்காரல!

ஆனா இன்னிக்கு தேதில உச்ச பாடகர்களான கார்த்திக், ரஞ்சித் எல்லாம் வந்திருந்து பாடியது பிடிச்சிருந்திச்சி. அவங்கள்லாம் பத்து ஆண்டுக்கு முந்தி சன் டீவில வந்த சப்தஸ்வரங்களின் தயாரிப்புகள் தான் என்று சொல்லி காட்டப்பட்ட அந்த க்ளிப்பிங்ஸைப் பார்த்த போது ரொம்ப வியப்பாக இருந்தது!

அப்போ அது ரொம்ப ஃபேமஸ். ஒட்டு மொத்த தமிழகமும் அந்தக்கால ஒளியும் ஒலியும்முக்கு பிறகு டீவி முன் திரண்டிருந்தது என்றால் அது சப்தஸ்வரங்களுக்காகத் தான் இருக்கும். இப்பொழுது விஜய் டீவியை சொல்வது போல, அப்பொழுதும் பாடகர்களை தேர்வு செய்வதில் ரமணன் பார்ஷியாலிடியோட தலையிடுவதா பேச்சு இருந்தது.....

ஆனாலும் ராமாயணம், மஹாபாரதத்தை விட அந்த ஷோவை அனைத்து தரப்பு மக்களும் ஆவலோடு பார்த்ததை மறுக்க முடியாது....

ஆனந்த கீதன், ரெகோ, ஜேம்ஸ் வசந்த், ரபி பெர்னார்ட், பெப்சி உமா, என்று ரியாலிடி ஷோக்களில் வெளுத்து வாங்கிய வல்லுனர்கள் பலர் சன் டீவியை விட்டு வெளியேறிய அல்லது வெளியேற்றப்பட்ட வரிசையில் ரமணனும் சேர்ந்தது தான் துரதிருஷ்டம்.....

ஆனால் சினிமாக்களும், சீரியல்களும் மட்டும் போதும் என்று அடுத்தடுத்து வந்த நிர்வாகிகள் எடுத்த முடிவு தான் சன் டீவிக்கு போட்டியாக விஜய் மற்றும் இன்னபிற சேனல்களும் நிலைத்து நிற்பதற்கும் வளர்ந்து வருவதற்கும் காரணமாய் அமைந்து விட்டது என்பதையும் மறுப்பதற்கில்லை.....

இன்றைக்கு அழுது வடிந்த சன் சிங்கரைப் பார்த்தவுடன் இதையெல்லாம் எழுதனும்ன்னு தோனியது....  அதான்!!!!

****************************************************** 

ச்சே இந்த அம்மா தான் கமலுக்கு எதிரா படத்தை தடைசெஞ்சிட்டாங்கன்னா, இந்த கலைஞரும் கமலுக்கு எதிரா இருக்குறத நெனச்சா தான் கடுப்பு கடுப்பா வருது...!!!

பின்ன என்னா சார்????

கமலை கடுமையா விமர்சிச்சி, விஸ்வரூபத்துக்கு எதிரா காட்டமான அறிக்கை ஒன்னு விட்ருந்தாருன்னாஆஆ.....

இந்நேரம் இந்தம்மா ராவோட ராவா படத்தை ரிலீஸ் செய்ய அனுமதி தந்திருக்க மாட்டாங்களா இல்லியா??????

போங்க கலைஞரே நீங்களும் இந்தம்மாவோட சேர்ந்து கமலை கவுத்திட்டீங்க!!!!!
********************************************

வீர சைவ பேரியக்க... நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்!!!

வைணவரான கமல்ஹாசன் தனது தசாவதாரம் படத்தில் வீர சைவராகிய குலோத்துக்க சோழ மன்னனை ஒரு மோசமான வில்லனாக நேரிடையாகவே தாக்கி சித்தரிப்பதை வன்மையாக கண்டித்து, அந்தப் படத்தை இனி எந்தத் திரையரங்கிலோ அல்லது சேட்டிலைட் சேனலிலோ திரையிட தடை விதிக்க வேண்டும் என்று கோருகிறது இந்த எங்களுடைய பேரவை......!

அது மட்டுமின்றி, ஏற்கனவே அந்தப் படத்தை திரையிட்ட வகையில் யார் யார் எவ்வளவு லாபம் பார்த்தார்களோ அவ்வளவையும் வட்டியும் முதலுமாக எங்கள் வீர சைவ பேரியக்கத்தின் அக்கவுண்ட்டில் டெபாசிட் செய்யவும் தமிழக அரசு ஆவண செய்ய வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்....

மேலும் விபூதியை பட்டையாக இட்டுக் கொள்ளும் வழக்கமுடைய எங்கள் வீர சைவர்கள், அந்தப்படம் வெளிவந்த பிறகு, அப்படி பட்டையோடு வெளியில் செல்லவே அச்சப்பட்டும், வெட்கப்பட்டும் பட்டையடித்து வீட்டிலேயே மட்டையாகிக் கிடப்பதால், வீர சைவ குடும்பங்கள் அனைத்திற்கும் தலா ஐம்பதாயிரம் நஷ்ட ஈடு தருமாறும் அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறோம்....

ஆனால் அந்தப் படத்தில் சைவர்களை இழிவாக சித்தரிக்கவில்லை என்று எங்களையெல்லாம் நம்ப வைக்கும் படி கமல்ஹாசன் விளக்கமளித்தால் அவருக்கு சிவனுக்கு நைவேத்யம் செய்த வெண்பொங்கல் விநியோகித்து பிரச்சினையை சுமுகமாக முடித்துக் கொள்வோம் எனவும் பல்டியடிக்கிறோம்.....    )))))))))

*********************************************

அது நேத்து நடந்திடுச்சி......

நான் அபுதாபில போய் இறங்குன கொஞ்ச நாள் கழிச்சு தான் மொதொ தடவையா அது நடந்துச்சி. அப்பறமா கல்யாணத்துக்காக ஊருக்கு வர்றப்ப தான், இதெல்லாம் ஊர்க்காரங்க பார்த்தா தப்பா நினைச்சி, ஊர் பரிகாசத்துக்கு ஆளாயிடுவோம்ன்னு பயந்து அதுக்கு ஒரு முடிவு கட்டிட்டு, போன மாதிரியே திரும்ப வந்துட்டேன்.

ஆனா கல்யாணத்துக்கு அப்பறம் மனைவியிடம் அதை மெதுவாகச் சொல்லி விட்டேன். காதலிச்ச பெண் தான் மனைவியா வந்ததாலோ என்னவோ அதை பெருசா எடுத்துக்கல. ஒரே ஒரு கண்டிஷன் தான், என்னோட இருக்கும் போது அதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன் என்பது தான் அது. அதுவே அந்த விஷயத்தைப் பற்றிய தைரியத்தை மனசுக்கு தந்துடிச்சி....

அதனால திரும்பவும் இந்தியாவுல வந்து செட்டில் ஆகுனும்ன்னு முடிவெடுத்தவுடனேயே, மீண்டும் அதை விட்டுட்டேன். என்ன தான் பொண்டாட்டிக்கு தெரிஞ்சிருந்தாலும், ஊர் உலகத்தின் வாய்க்குப் பயந்து அதைத் தவிர்த்து விட்டுத் தான் இந்தியாவுக்கு வந்தேன்....

அது ஆச்சு பதினாறு வருஷம். அப்பப்ப அந்த எண்ணம் மனசுக்குள்ள வந்து சபலம் தட்டினாலும் குடும்பம், கம்பெனி, சுற்றம் என்றெல்லாம் நினைத்து அந்த எண்ணம் எழுந்தவுடனேயே தூக்கியெறிந்து விடுவேன்.

ஆனா என் பையனுக்கு அவன் அஞ்சாவது படிக்கும் போதே இந்த விஷயம் என் மனைவியின் மூலமா தெரிஞ்சிடிச்சி. அதிலிருந்து அவனுக்கும் என் மனைவிக்கும் படிப்பு சம்பந்தமா சண்டை வரும் போதெல்லாம், அவங்க அம்மாவை டீஸ் பண்ணனும்கறதுக்காவே அவன் என்னிடம் வந்து, அப்பா நீங்க அந்த விஷயத்தை ஆரம்பிச்சிடுங்கப்பா என்று நச்சரித்து அவளை எரிச்சலூட்டுவான்...

இது இப்படியே போய்க் கொண்டிருக்க, அவன் பத்தாம் வகுப்பும் வந்துவிட, வழக்கம் போல படிப்பு சம்பந்தமாக அவனுக்கும் மனைவிக்கும் வாய்க்கா தகறாறு ஆரம்பமாயிற்று. பஞ்சாயத்துக்குப் போன என்னிடம், நான் 425க்கு மேல அரையாண்டுத் தேர்வில் எடுத்துட்டா, எனக்காக அந்த விஷயத்தை நீங்க பண்ணனும்ன்னு அவன் சொல்ல, நான் நல்ல பிள்ளையாக மனைவியைப் பார்த்தேன்.

அவளும் ஒரு முடிவுக்கு வந்தவளாய், எப்படியாவது தன் பிள்ளை நல்ல மார்க் வாங்கணுமேன்னு டீலுக்கு ஒத்துக்கிட்டா! மார்க் எல்லாம் வந்து விட கூட்டிப் பார்த்தா 428! எல்லோருமே வாயடைத்துப் போனோம்....

நேற்று காலை என்று, அதற்கான மூகூர்த்தம் குறிக்கப்பட்டது, மனைவியும் மகனும் பதற்றத்துடன் அருகே நிற்க, கண்ணாடிக்கு முன் நின்று கொண்டு மீசையில் ஷேவிங் ஃபோமை தடவ ஆரம்பித்தேன்.......!!

***************************************************

டீசலுக்கு இரட்டை விலை சோஷலிஸ சிந்தனைக்கு எதிரானது -  கலைஞர்

இதே மாதிரி நிறைய விஷயங்கள்ல லொள்ளு பண்ணிட்டிருக்குற மத்திய அரசுலேர்ந்து உங்க மந்திரிங்களை எல்லாம் வெளில வரச் சொல்லிட்டு களத்தில் இறங்குங்க.....

இல்லன்னா அதிமுகவோட சேர்ந்து நாங்களும் மத்திய அரசுக்கு எதிரா போராடப்போறோம்ன்னு அறிக்கை விடற கேவலமான நிலை வந்துடும்ங்கறதாவுது புரியுதா கலைஞர் அவர்களே?

***************************************************** 

செல்ஃபோன் கட்டணம் இனி நிமிடத்திற்கு 2 ரூபாய்...  செய்தி((((

ஸ்பெக்ட்ரம் ஊழல்ன்னு வாழ்கிழிய பேசுனவங்க எல்லாம் இப்ப மானியம் த்ருவாங்க......., 
அதை நம்புனவங்க எல்லாம் போய் க்யூ கட்டி நில்லுங்க மக்கா.....!!
பத்தொம்பதாயிரம் கோடிக்கே 30 காசுங்கறது ரெண்டு ரூபாயா ஆச்சுன்னா????......

ஒரு லட்சத்தி எழுபத்தஞ்சாயிரம் கோடிக்கு ஏலம் போயிருந்திச்சின்னா?????????

பத்து ரூவாய தாண்டிடுமே??????

அடங்கொன்னியா.......   இதுக்காகவாய்யா இவ்ளோ போராட்டம் பண்ணுனீங்க.......?????

Monday, January 21, 2013

திமுக Vs அதிமுக - பாராளுமன்ற தேர்தல்?!

இந்தியாவின் மிகப் பெரிய ஜனநாயகத் திருவிழா கன ஜோராய் ஆரம்பித்து விட்டது. அகில இந்திய அளவில் பார்த்தால், காங்கிரஸ் தனது உயர்மட்டக் குழு மாநாட்டைக் கூட்டி ராகுலை துணைத்தலைவராக அறிவித்து அவரை வெளிப்படையாக களம் இறக்கி விட்டிருக்கிறது. பாஜகவும் தனது தலைவரை தேர்ந்தெடுக்கும் முஸ்தீபுகளில் இறங்கிவிட்டது.

ஆனால் நமக்கு அதெல்லாம் இப்பொழுது பிரச்சனை இல்லை. தமிழ்நாட்டில் திமுக அல்லது அதிமுக இரண்டில் யார் அதிக இடங்களைக் கைப்பற்றப் போகிறார்கள்? என்பது தான் ஒட்டுமொத்த இந்தியாவின் எதிர்ப்பாப்பாகவுமே இப்பொழுது இருந்து கொண்டிருக்கிறது. வடக்கர்கள் அப்படி எதையும் காட்டிக் கொண்டிருக்காவிட்டாலும் தேசியக் கட்சிகள் மற்றும் மத்திய அரசைக் கட்டியமைக்கும் சூத்திரதாரிகள் அனைவரது அடி மனதுமே இப்படி ஒரு மன நிலையோடு தான் திக் திக் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது.

ஏனெனில் கடந்த இருபத்தியிரண்டு ஆண்டுகளாக (நடுவில் நரசிம்மராவ் ஆட்சிக்காலம் தவிர்த்து) திமுக அல்லது அதிமுகவின் ஆதிக்கம் தான் மத்திய அரசை அமைப்பதில் அதீதமாய் இருந்திருப்பதை அனைவரும் உணராமல் இருக்க முடியாது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், வாஜ்பாயில் ஆரம்பித்து, இரண்டு முறை மன்மோகன் சிங் அமைச்சரவை வரை ஆக மொத்தம் 15 ஆண்டுகளாக தொடர்ந்து திமுகவின் ஆளுமை மத்திய அரசில் இருந்ததை யாரும் மறுக்க இயலாது.

அதே எதிர்ப்பாப்பு வரும் பாராளுமன்ற தேர்தலிலும் தமிழகத்தின் முக்கிய கட்சிகள் மீது இருப்பதை தவிர்த்து விட்டு அடுத்த மத்திய ஆளும் அமைச்சரவை பற்றி யாரும் எந்த கணிப்பையும் வெளிப்படுத்த முடியாது.

சரி, நம்ம விஷயத்துக்கு வருவோம்! தமிழகத்தைப் பொறுத்த வரை வரும் பாராளுமன்றத் தேர்தல் என்ன மாதிரியான முடிவுகளைத் தரும்? அச்சு அசலாக யாரும் அதை இப்பொழுதைக்கு கணிக்க முடியாது எனினும், இது எந்தப் பாதையை நோக்கி நகரும் என்பதை ஓரளவிற்கு ஊகிக்க இயலும்.

அதிமுக வைப் பொறுத்த வரை, சமீபத்தில் அதன் பொதுக்குழுவில், ஜெயலலிதா அறிவித்ததைப் போன்று, 40 தொகுதிகளிலும் தனித்து நின்று தேர்தலை சந்திப்போம் என்ற நிலைப்பாடு தற்பொழுது வரை தொடர்ந்தாலும், அதிகபட்சம் 10 தொகுதிகள் வரை, சிறிய அல்லது சில்லறைக் கட்சிகளுக்கு ஒதுக்கும் மனநிலையில் இருப்பதாகத் தான் பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலான கட்சி நிர்வாகிகளின் எண்ண ஓட்டமும் அவ்வாறே இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. கூட்ட்ணியின்றி போட்டியிடுவதை அவர்களே ஒரு கேலிப்பேச்சாக எண்ணி கடந்து போவதைத் தான் பார்க்க முடிகிறது. அது தற்கொலைக்குச் சமம் என்றே பலர் வெளிப்படையாகக் கருத்துத் தெரிவிக்கிறார்கள். ஜெயலலிதாவிடம் இதை நேரிடையாக சொல்லும் தைரியம் அவர்களுக்கு இல்லை என்றாலும், அம்மாவுக்கு எல்லாம் தெரியும், இப்போ சும்மா ல்லுல்லாவுக்குத் தான் இப்படிச் சொல்லியிருக்கிறார்கள், என்பது போல் தான் பேசுகின்றார்கள்!

அதே சமயம் திமுகவைப் பொறுத்தமட்டில் தற்பொழுது வரை காங்கிரஸுடன் கூட்டணி என்பதில் மிகத் தெளிவாக இருப்பதை அனைவரும் உணர்ந்துள்ளனர். அதிமுகவுடன் குறைந்தபட்சம் வரும் தேர்தலிலாவது கூட்டணி வைக்கும் வாய்ப்பு நிச்சயம் கிடையாது என்பதால் விஜயகாந்த் திமுகவின் பக்கமாக சாயும் வாய்ப்புகள் தான் அதிகம்.

நாட்கள் நகர நகர எதிர்பாராத மாற்றங்கள், புதிய கூட்டணிகள் எல்லாம் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு என்றாலும், இப்பொழுதைய நிலையில் வரும் பாராளுமன்றத்திற்கான கூட்டணி என்பது......

திமுக - காங்கிரஸ் - தேமுதிக - விசி என்ற ஒரு அணியும், அதிமுக - இரு கம்யூனிஸ்ட்டுகள் - பாமக - மதிமுக - மற்றும் சில லெட்டர்பேடு கட்சிகள் என்ற இன்னொரு அணியும் தான் நம் கண் முன்னே குத்து மதிப்பாக தெரிகின்றன. இந்த அமைப்பிலேயே தமிழகத்தின் தேர்தல் களம் அமையும் என்றால் என்ன மாதிரியான தேர்தல் முடிவுகள் ஏற்படும் என்பதை நாம் கொஞ்சம் அலசலாம். 

எவ்வளவோ மக்கள் நலத் திட்டங்கள், உட்கட்டமைப்புகள், நல்ல நிர்வாகம், பணப்புழக்கம், தடையில்லா விவசாயம் என்று கடந்த திமுக ஆட்சியில் மக்கள் அனுபவித்திருந்தாலும், ஊடகங்களாலும், எதிர்க்கட்சிகளாலும் சரியாக திட்டமிடப்பட்டு பரப்புரை செய்யப்பட்ட ஐந்து விஷயங்களில் தான் தமிழக வாக்காளர்கள் மிகப் பெரிய மாற்றத்திற்கான எதிர்பார்ப்போடு இந்த அதிமுக ஆட்சியை கொண்டு வந்திருந்தார்கள்.

1. மின் தடை, 2. ஸ்பெக்ட்ரம், 3. குடும்ப அரசியல், 4. குறுநில மன்னர்களின் (நீண்ட கால மாவட்ட செயலாளர்கள்) அதிகார துஷ்பிரயோகங்கள் மற்றும் 5. விலைவாசி உயர்வு.....    இந்த ஐந்து விடயங்கள் தான் மக்களை திமுகவுக்கு எதிராக வாக்களிக்கத் தூண்டிய காரணிகளாகும்.

ஆனால் புதிய ஆட்சியில் முன்பை விட ஐந்து மடங்கு அதிகமான மின் தடை நடைமுறையில் இருப்பதும், ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் பிசுபிசுத்துப்போய் ஏலம் விட்டும் சொல்லப்பட்ட அந்த அதீத தொகை வராமல் ஏமாற்றியதும், திமுகவின் குடும்ப அரசியல் குழப்பங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு அடுத்தது ஸ்டாலின் தான் அதன் தலைவர் என்று கலைஞராலேயே அறிவிக்கப்பட்டிருப்பதும், குறுநில மன்னர்கள் எல்லாம் இப்பொழுது ஸ்டாலின் வருகையால் பல் பிடுங்கப்பட்ட நிலையில், வாரிசு அரசியலில் இல்லாத இளைஞர் அணி புது எழுச்சியுடன் கட்டமைக்கப்பட்டிருப்பதும், கடந்த ஆட்சியில் நியாயமாக சீரான வளர்ச்சியுடன் இருந்த விலை வாசி இப்பொழுது மடங்குகளில் உயர்த்தப்பட்டு விண்ணை முட்டி மக்களிடமும் பணப்புழக்கம் இல்லாத நிலையைக் கொண்டு வந்திருப்பதும்........

....தமிழக வாக்காளர்களின் மனநிலையை கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முந்தைய மனநிலையில் இல்லாமல் மாற்றியிருப்பது கண்கூடான விஷயம்.......

விவசாயமும், சிறு குறு தொழில்களும் முற்றிலுமாக முடக்கப்பட்ட நிலையில், அதிகாரமற்ற வாய்மூடி அமைச்சர்களால் அந்தந்தப்பகுதிக்குத் தேவையான தொலைநோக்குத் திட்டங்கள் மட்டுமல்லாது, உடனடித் தேவையான பல திட்டங்களும் அப்படியே கிடப்பில் போடப்பட்டிருப்பதால்....  மக்களின் மன நிலை ஆட்சிக்கு எதிராக இல்லை என்று ஆளுங்கட்சியும், பத்திரிகைகளும் நம்பினாலும், சட்ட மன்ற தேர்தல் நிலவரத்தைப் போல அதிமுகவுக்கு ஆதரவான மனநிலையில் இல்லை என்பதை அவர்களாலேயே மறுக்க முடியாது!

எனவே ஜெயலலிதா அறிவித்துள்ளதைப் போன்று தனித்து நின்றாலும் சரி, சரியான பலம் மிக்க கூட்டணி அமைக்கா விட்டாலும் சரி, வரும் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு எதிரானதாகத் தான் அமையும்.

ஆனால் இதுவரையிலான ராகுல் காந்தியின் செயல்பாடுகள், திமுவுக்கு இணக்கமானதாக அமைந்திருக்கவில்லை என்பதை கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தால், அதிமுகவினருக்கு ஆதரவான அல்லது திமுகவுக்கு எதிரான  மனநிலை கொண்ட சில காங்கிரஸாரின் போதனையால் தேமுதிக மற்றும் சில சில்லறைக் கட்சிகளைச் சேர்த்துக் கொண்டு காங்கிரஸ் தனியாக மூன்றாவது அணி அமைத்து களம் காணுகின்ற வாய்ப்புகளும் அதிகமாக இருப்பதை மறுப்பதற்கில்லை.

அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் கலைஞர் Vs ஜெயலலிதா (அவரின் ஆலோசகர்கள்) என்ற நேரடி அரசியல் சாணக்கியத் தனங்களின் உச்சக்கட்ட வெளிப்பாட்டை தமிழக மக்கள் ஆவலுடன் கண்டு களிக்கலாம். ஆனால் அப்படி ஒரு பலம் மிக்க மூன்றாவது அணி அமைவது ஆட்சிக்கு எதிரான அதிருப்தி ஓட்டுக்கள் பிரியக் கூடிய வாய்ப்பு என்ற வகையில் அதிமுகவுக்கு ஆதரவான நிலையாகத் தான் அமையும். ஆகவே பலம் மிக்க மூன்றாவது அணி அமைக்க ஜெயலலிதாவே முயற்சிகளை திரைமறைவில் முன்னெடுக்கக் கூடிய சாத்தியக் கூறுகளும் அதிகமாகவே இருக்கின்றன.

இப்படி ஒரு சூழ்நிலை அமையும் பட்சத்தில், உள்ளாட்சித் தேர்தலில் பரீட்சித்துப் பார்த்த, தனித்து நிற்கும் நிலைப்பாட்டை திமுக எந்த தயக்கமும் இன்றி எடுக்கும் என்பதையும் யாரும் மறுக்க முடியாது!

அப்படி ஒரு நிலை ஏற்படுமானால், திமுகவும் அதிமுகவும் ஆளுக்கு ஒன்றிரண்டு சில்லறைக்கட்சிகளை தங்களோடு இணைத்துக் கொண்டு கிட்டத்தட தனியாகவும், தமிழகம் முழுவதும் பரவலாக இருக்கும் தேமுதிகவும், காங்கிரஸும் தங்களோடு சில சில்லறைக் கட்சிகளை இணைத்துக் கொண்டு பலம் மிக்க மூன்றாவது அணியாகவும் நின்று, தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் பரிமாணம் முன்னெடுக்கப்படும் வாய்ப்பை உருவாக்கும். இது இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் ஒரு மாற்றை கொண்டுவர பிரிபப்படும் கணிசமான பொதுமக்களுக்கு பெரியதொரு வரப்பிரசாதமாகவும்  அமையும்.

பொது மக்களுக்கு இப்படியென்றால், இந்த மாதிரியான சூழ்நிலை திமுக மற்றும் அதிமுக இரண்டுக்குமே தங்களை சுயபரிசோதனை செய்து கொள்வதற்கும், தங்களைப் பற்றிய மக்களின் உண்மையான மதிப்பீட்டை உணர்ந்து கொள்ளவும் வழி வகுக்கும்.

பாராளுமன்ற தேர்தல் எப்பொழுது வரும் என்றே தெரியாத நிலையில் ஆனால் ஒரு வருடத்திற்குள் நடந்து விட்டிருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பில் இன்றைய அரசியல் மேக மூட்டங்களை வைத்து இவ்வளவு தான் நம்மால் யூகிக்க முடியும் என்றாலும், தமிழகத்தில் பலம்மிக்க மூன்றாவது அணி அமைய நீண்ட காலத்திற்குப் பின் இப்பொழுது தான் சாதகமான சூழல் நிலவுவதை கருத்தில் கொண்டு, தமிழகத்தின் நலன் கருதி அப்படி ஒரு அரசியல் கூட்டணிகள் அமைய வேண்டும் என்ற அவாவோடு இப்பொழுதைக்கு இந்த பாராளுமன்ற தேர்தல் முடிவு பற்றிய கணிப்புகளின் முதல் அத்தியாத்தை நிறைவு செய்வோம்!




Thursday, January 17, 2013

பலூன் மாமா!

அவனுக்கு ஊர் எல்லையை மிதித்தவுடனேயே, அதுவரை குறுகுறுவென இருந்த மன மொட்டு வெடித்துச் சிதறிப் பூத்தது போன்ற ஒரு ஆரவார சந்தோஷம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட பதினோரு வருடங்களுக்குப் பிறகு தான் பிறந்து வளர்ந்த ஊருக்கு முதன் முறையாக தன் மனைவி பிள்ளைகளை அழைத்து வருகிறான்!

சொந்த மண்ணில் கால் வைத்ததுமே ஒரு பனிப்படலம் அவனது விழித் திரைகளுக்கு முன்னால் மட்டும் தோன்றி, காட்சிகளை மறைக்கிறது, ஓரிரு விநாடிகளிலேயே அது கரைந்து கண்களின் அடிப்பகுதியில் நீர்த்துளிகளாய் தேங்கி, வழிய ஆரம்பிக்கிறது.

சட்டென தன் கண்களை துடைத்துக் கொண்டவன், தன் மனைவியைப் பார்க்கின்றான். அவன் உணர்வுகளைப் புரிந்து கொண்டவளாய் அவன் தோளில் கை வைத்து மெதுவாக அழுத்துகிறாள்......

நம்ம ராமசாமிக்கு வயது ஒரு முப்பத்தைந்து இருக்கும். மலேஷியாவில் வேலை. அவன் படித்து முடித்த பிறகு இரண்டு வருடம் வேலை தேடி நாயாய் அலைந்து, நான்கைந்து இடத்தில் வேலையில் சேர்ந்தாலும் அது சரிப்பட்டு வராமல் விரக்தியோடு சுற்றிக் கொண்டிருந்த நேரம் அது.

அப்பொழுது தான் அத்தையின் கணவர் சுந்தரமூர்த்தி மாமா, தான் வேலை பார்த்த ஒரு மலேஷிய பலசரக்கு கடையிலிருந்து ஒன்வேயில் வருகிறார். அந்த கடை முதலாளி உன் இடத்தில் நீயே ஒரு நல்ல பையனாக அமர்த்திவிடு என்று சொல்ல....,  நம்ம ராமசாமிக்கு அடித்தது யோகம்!

அங்கே இங்கே அலைந்து ஒன்றரை மாதத்தில் பாஸ்போர்ட் ரெடி பண்ணி, அதிலிருந்து பதினைந்தாவது நாள், அவன் கைக்கு விசா வந்து விட்டது. இரண்டு வருடம் நம்ம ஊரு வேலை வாய்ப்புத் துறை கொடுத்திருந்த அனுபவங்கள், அவனை அங்கே அடக்கமாக வேலை பார்க்க வைத்துக் கொண்டிருந்தது.

அந்த அடக்கமே அவனை படிப்படியாக உயர்த்தி, இன்று 15 கடைகள் கொண்ட ஒரு தொடர் சூப்பர் மார்க்கெட்டில் மேனேஜராக பதவியில் அமர்த்தியிருக்கின்றது. கை நிறைய சம்பளம். பழைய கடையிலிருந்து இந்த புதிய நிறுவனத்திற்கு மாறும் போது ஒன்வேயில் வர வேண்டியிருந்தது. அந்த நேரத்தில் தான் இந்த சொர்ணாவை கைப்பிடிக்கும் வைபோகம் நடந்தேறியது.

இது தான் அவனது தந்தைக்கு பூர்வீக கிராமம் என்றாலும், அவனது பதினைந்தாம் வயதில் தந்தைக்கு விவசாய கூலி வேலை சரியாக தொடர்ந்து கிடைக்காத காரணத்தால், 15 கி மீ தள்ளியிருக்கும் அந்த சிறிய நகரத்துக்கு அவனது குடும்பம் குடி பெயர்ந்தது. அங்குள்ள ஒரு மரவாடியில் அவன் தந்தை வேலைக்குச் சேர்ந்தார்.

கிராமத்து ஓட்டு வீட்டை விற்று, அந்த தொகையை போக்கியமாக கொடுத்து மரவாடிக்குப் பக்கத்திலேயே ஒரு சிறிய வீட்டில் அவனது குடும்பம் குடியேறியது. நம்ம ராமசாமி தான் மூத்த வாரிசு. அவனுக்குக் கீழே இரண்டு பெண் குழந்தைகள். அவன் வெளிநாடு சென்று சம்பாதிக்கும் வரை வாய்க்கும் கைக்குமே பற்றாத நிலையில் தான் அவனது குடும்ப பொருளாதாரம் இருந்து வந்தது.

அவன் தாய் மாமா, ஃபீஸ் கட்டியதால், அந்த ஊர் அரசு கல்லூரியில் அவனால் எந்த செலவும் இன்றி பி.ஏ படிக்க முடிந்தது. ஆனால் அவன் தந்தைக்கு, அவன் உடனே வேலைக்குச் சென்றால், தன் பாரம் கொஞ்சம் குறைந்து பெண் பிள்ளைகள் திருமணத்திற்கு எதாவது சேர்த்து காலா காலத்தில் கட்டிக் கொடுத்து விடலாமே என்ற எண்ணம் மனதுக்குள் இருந்தது. ஆனாலும் தன் ஒரே மகன் டிகிரி படித்தால் கொஞ்ச காலத்திற்கு கஷ்டம் தொடர்ந்தாலும், நம் அடுத்த தலைமுறையின் வாழ்க்கைத் தரம் ஒரு படி மேலே ஏறிவிடுமே என்று எண்ணி தன்னுடைய துன்பச் சுமையே இன்னும் சில வருடங்களுக்கு சுமக்கத் தயாராகி விட்டார்.

ஏதோ கனவுகள் போன்று பழைய சம்பவங்கள் எல்லாம் மனக் கண் முன்பாக ரீல் போல ஓடிக் கொண்டிருக்க...  ஹை..... என்ற ஆரவாரமான தனது இளைய மகன் அஸ்வினின் குதூகலக் குரல் அவனை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது. ராமசாமியின் கையை உதறிக் கொண்டு அந்த ஐந்து வயது பாலகன் ஒரே பாய்ச்சலாக ஓட, அந்த திசையைப் பார்த்த போது தான் இவனுக்கும் அந்த குதூகலம் தொற்றிக் கொண்டது.

வண்ண வண்ண பலூன்கள் விதவிதமான வடிவங்களில் நூல்களில் கட்டி கைக்கு எட்டாத தூரத்தில் பறக்க வைக்கப் பட்டிருந்தன. நடுவின் அதற்கான உபகரணங்களுடன் ஒருவன் அமர்ந்து கேட்கும் வடிவத்தில் பலூன்களை செய்து தந்து கொண்டிருந்தான். அவனைச் சுற்றிலும் இளஞ்சிறார்களின் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது.

ஆடு, மாடு, மயில், முயல், வாத்து, லவ் சிம்பள், குட்டிப் பெண், சுட்டிப் பையன் என்று பல்வேறு விதமாக அவன் பலூன் செய்யும் லாவகம் நம்ம ராமசாமிக்கு பெரும் வியப்பாய் இருந்தது. கூட்டத்தோடு முட்டிக் கொண்டிருந்த அஸ்வினைத் தூக்கிக் கொண்டு, பத்து ரூபாயை எடுத்து நீட்டியவாறு மயில் பலூன் ஒன்று செய்து குடு தம்பி என்று இரண்டு மூன்று முறை கத்தியும் அவன் நிமிர்ந்த பாடில்லை.

கடுப்பாகி இவன் திரும்ப எத்தனிக்க, மேலே பறந்து கொண்டிருந்த ஒரு மயில் பலூனின் நூலை கட் பண்ணி, இந்தாங்க சார் என்று கொடுத்தான். பணத்தைக் கொடுத்து அந்த பலூனை வாங்கும் போது தான் அந்தப் பையனை குறிப்பாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஒரு கணம் ஸ்தம்பித்துப் போனவன், தம்பி நீ மாரிமுத்து பையனா? என்று கேட்கவும், அந்த பலூன் விற்கும் தம்பி அன்னாந்து இவனைப் பார்த்து, கண்களில் ஒரு மகிழ்ச்சியான புன்னகையுடன், ஆமாம் சார்......  நீங்க....? என்று ஒற்றை வார்த்தையில் கேள்வி ஒன்றைப் போட்டான்.

அதுவரை சொந்த ஊரை பல வருடங்களுக்குப் பிறகு மிதித்து விட்ட, அதுவும் கௌரவமான நிலையில் வண்டி வாகனம், மனைவி, பிள்ளைகள் என்று வந்திருந்த உணர்ச்சிக் கொந்தளிப்பில் மூழ்கியிருந்தவன், இப்பொழுது பேயரைந்தவன் போல் காணப்பட்டான்.

நான்.... நான் வந்து...!

...ம் உங்க அப்பாவை எனக்கு நல்லா தெரியும். இந்த திருவிழவுக்கு வருடா வருடம் வந்து பலூன் கடை போடுவாரே......  அப்போ அவருடன் எனக்கு நல்ல பரிச்சயமுண்டு....

ஆனா நான் உங்கள பார்த்ததில்லையே சார்....., எப்புடி என்னைய கண்டுபுடிச்சீங்க? என்று பலூன் காரன் கேட்கவும்.....

இல்லப்பா, அப்ப உங்கப்பா வரும் போது குடும்பத்தோட தான் பத்து நாளும் இங்க வந்து தங்கியிருப்பாரு. திருவிழாவுக்கு ஒரு வாரம் முன்னதாகவே வந்துடுவாங்க. அப்ப இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்ட உன்னையும் உங்க அம்மா இடுப்புல தூக்கிக்கிட்டே வருவாங்க.....

நீண்ட நாளைக்கப்பறம், அதே திருவிழா, அதே பலூன் கடை ஆனால் அதில் வித்தியாசமான முயற்சியுடன், இளம்பிள்ளை வாதத்தால்  நடக்க முடியாமல் உட்கார்ந்து வியாபாரம் செய்யும் உன்னை பார்த்தோடுன, முடிவு பண்ணிட்டேன், நீ மாரிமுத்து மகனாய்த் தான் இருக்க வேண்டும் என்று!

இந்த அளவுக்கு என்னையும், எங்க குடும்பத்தையும் கூர்ந்து கவனிச்சி இத்தனை வருடத்திற்குப் பிறகும் என்னை தெரியுதுன்னா, எங்க அப்பாவோட உங்களுக்கு ரொம்ப பரிச்சயமா சார்?

ம்..ம்.. நல்ல பழக்கம் தான். வருடத்திற்கு பதினைந்து இருபது நாட்கள் குடும்பத்தோடு இந்த ஊரில் வந்து தங்குபவரை எங்களுக்குத் தெரியாமல் இருக்குமா? ... சரி உங்க அப்பா அம்மால்லாம் இப்ப உன் கூட வர்றதில்லையா?

அப்பா இல்ல சார்....!

இல்லன்னா??...    உசுரோட இல்ல சார்....

பகீர் என்றது ராமசாமிக்கு. இன்றைக்கு இருந்தாலும் ஐம்பது வயசுக்குள்ள தானே இருக்கும்? என்ற யோசனையுடனே மெதுவாக தலையை உயர்த்தி அந்தப் பையனைப் பார்த்தான்.

என்ன ஆச்சு? எப்படி இறந்தார்?

இருவது வருஷம் ஆச்சு சார்! நான் ரொம்ப சின்னப் புள்ள. நூறு, இருநூறுன்னு நாலஞ்சு பேருகிட்ட கடன் வாங்கி ஆயிரம் ரூவாக்கி சரக்கு எடுத்து வந்து இங்க திருவிழாவுக்கு கடைய போட்ருக்காங்க......

இங்கன வந்து அத ஏழெட்டுப் பேருக்கு பிரிச்சிக் கொடுத்து எல்லா இடத்துலயும் நிக்க வச்சி, வியாபாரம் கனஜோரா ஆரம்பிச்சிருக்கு.......  8 மணிக்கு கரண்ட்டு சிப்ட்டு மாத்தும் போது, எல்லா எடத்துலயும் பறந்துக்கிட்டிருந்த பலூன் எல்லாம் பொட்டு பொட்டுன்னு வெடிச்சிடிச்சி....

கரண்ட்டு வந்தோடுனதான் தெரிஞ்சிது, விளையாட்டுப் பசங்க, ஜாலிக்காக கரண்டு நிக்கற நேரத்துல கல்லு உப்ப விட்டெறிஞ்சி பலூனை எல்லாம் வெடிச்சிருக்காங்கன்னு......!!!

மிச்ச சொச்சம் இருந்த கொஞ்சூண்டு பலூனையெல்லாம் மறுநாள் வித்துட்டு, ஊருக்கு திரும்பிருக்காங்க. கடன் காரங்க, அசலும் வரல, வட்டியும் தரலன்னோடுன கேவலமா பேசினத பொறுக்க முடியாம ராவோட ராவா தூக்குல தொங்கிட்டாரு....!!!

கால் வைத்திருந்த தரை நழுவிக்கொண்டே செல்வது போல இருந்தது ராமசாமிக்கு. சுழன்று கொண்டிருக்கும் தேர்ச்சக்கரத்தின் முன்னே தடை விழுந்து நகரமுடியாமல் குலுங்கி நிற்பதைப் போல, நெஞ்சுக்குள் ஒரு கட்டை விழுந்து, இதயம் துடிப்பது ஒரு கணம் நின்றுவிட்டுத் தொடர்ந்தது....

அதீத மௌனத்துடன் கார் ஓடிக் கொண்டிருந்தது. பிள்ளைகள் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார்கள். சின்னவன் தான் ரொம்பவும் அழுது விட்டு அப்படியே தூங்கி விட்டான். பத்து நாள் திருவிழாவும் ஊரில் தங்கி கொண்டாடும் ஆர்வத்துடன் வந்திருந்தவர்கள், முதல் நாளிலேயே திரும்பினால் வருத்தம் வரத்தானே செய்யும்?!

அவன் மனைவிக்கும் ஒன்றுமே புரியவில்லை. அவனாக பேசட்டும் என்று காத்திருந்தாள். அந்த நகரத்தில் இருக்கும் வீட்டிற்கு கூட வந்திருக்கலாம். ஆனால் விடிவதற்குள் அந்த ஊரை விட்டு வெகு தூரம் ஓடி விட்டிருக்க வேண்டும் போல் அவன் மனசு துடித்துக் கொண்டிருந்தது.

இருக்காதா பின்னே? குற்ற உணர்ச்சி மனசை பிடிங்கித் தின்கிறது!

அன்றைக்கு பந்தயம் கட்டி விளையாண்ட எட்டுப் பேரில் இவன் தான் ஒரு பலூன் கூட மிச்சம் வைக்காமல் கல் உப்பை எறிந்து வெடித்து வெற்றி பெற்றிருந்தான்!! மத்த பசங்களால எல்லா பலூன்களையும் முழுமையாக வெடிக்க முடியவில்லை. அதனால் அன்றைக்கு ராமசாமி வெற்றி பெற்று பந்தயப் பணம் எட்டு ரூபாயையும் தனதாக்கிக் கொண்டான்!!

  

Thursday, January 10, 2013

விஸ்வரூபம் - திரை விமர்சனம்

எண்ணித் துணிய வேண்டும் ஒரு காரியத்தில்....

இறங்கிய பின்பு அது பத்தி யோசிச்சி பின் வாங்குறது ரொம்ப கேவலம்!!!

இரண்டாயிரம் வருஷத்துக்கு முந்தியே இத இவ்ளோ தெளிவா திருவள்ளுவர் சொன்னதே நம்ம கமல்ஹாசனுக்குத் தானோ என்று தான் தோன்றுகிறது!

அவர் ஒரு படத்தை எடுக்கறார், 90 கோடி பணம் போட்டிருக்கேன் என்கிறார். படம் அற்புதமாக வந்திருப்பதாக சொல்கிறார்.  இந்த இடத்துல அப்டியே கட் பண்ணி கீழ வாங்க.......

சினிமாத்துறை என்பது ஒரு தொழிற்களம். அதில் சினிமா தயாரிப்பு, விநியோகம், திரையிடுதல் என்ற முக்கிய மூன்று பிரிவுகள் ஒன்றுக்குள் ஒன்று இழையோடி பின்னிப் பிணைந்திருப்பவை. இதில் ஒரு படம் வந்து அது தோல்வி என்றாலும் அதில் பாதிக்கப்படாமல் பல சந்தர்ப்பங்களில் தயாரிப்பு தரப்பு தப்பித்துக் கொள்ளும் வாய்ப்புகள் இருந்தாலும், விநியோகம் மற்றும் திரையிடல் ஆகிய இரு தரப்புக்களும் பெரும்பாலும் அந்த நட்டத்தை பங்கிட்டுக் கொண்டு கையை சுட்டுக்கொள்ளும் நிலைமை தான் பரிதாபத்திற்குறியது.

இதில் சினிமா தயாரிப்பு என்ற பிரிவில் நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, இசை, இத்தியாதிகள் என்று கிட்டத்தட்ட ஒரு சதம் அளவிற்கு வெவ்வேறு துறைகளின் பங்களிப்பு இருந்து கொண்டிருக்கிறது. அத்துனை துறைகளுக்கும் வலுவான சங்கங்கள் தனித்தனியாகவும் இருக்கின்றன. அதைத் தவிர்த்து ஒட்டுமொத்த துறைகளுக்கென்றும் தனியாக ஒரே அமைப்புச் சங்கமும் இருக்கிறது.

இந்தச் சங்கங்களின் மூலம் அந்தத்த துறைகளைச் சார்ந்த தொழிலாளர்களுக்கு தனித் திறன், உழைப்பு விகிதம் மற்றும் நுணுக்கங்களுக்கு ஏற்ப நியாயமான சம்பள விகிதம் நிர்ணயிக்கப்பட்டு,  அவைகள் யாவும் பழுதில்லாமல் அவர்களுக்கு வந்து சேர வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.

அதனால் இந்த தயாரிப்பு பிரிவில் இயங்கும் துறைகள் சார்ந்த தொழிலாளர்களுக்கு, சம்பந்தப்பட்ட படத்தின் வெற்றி தோல்வி என்பது எந்த விதத்திலும் பொருளாதார ரீதியாக எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பது தான் உண்மை. அது போகட்டும்!

ஆனால் இந்த தயாரிப்பு பிரிவில் வரும் நடிப்புத் துறையில், பல நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் சம்பந்தப்பட்டிருந்தாலும்,  அதிக பட்ஜெட் படங்களில் ஒரே ஒரு நடிகர் சமபந்தப்பட்ட செலவுகள் என்பது அந்த படத்தின் பட்ஜெட்டில் பாதியைச் சில சமயங்களில் கடந்து விடுவது கண்கூடு.

இங்கே நான் அந்த நடிகரின் சம்பளம் என்று குறிப்பிடவில்லை. அவர் சம்பந்தப்பட்ட செலவுகள் என்றே குறிப்பிடுகின்றேன். காரணம், அவருடைய சம்பளம் மட்டுமல்லாது, அவர் சுட்டிக்காட்டும் நடிகையைத்தான் கதாநாயகியாக புக் செய்யும் நிர்ப்பந்தம் ஏற்படுவதால், சம்பந்தப்பட்ட நடிகையின் சம்பளம் தயாரிப்பு செலவுகள் பட்ஜெட்டை மீறி போய்விடும். அது தவிர அவர் சொல்லும் வெளிநாடுகளில் பாடல் காட்சிகள், அவர் சம்பந்தப்பட்ட மற்ற (கேரவன் வசதி போன்ற) இன்னபிற செலவினங்கள், அவருக்காக காத்திருக்கும் நாட்களுக்கான நஷ்டங்கள்... என்று, அந்த பெரிய நடிகருக்கான செலவுகள் படத்தின் மொத்த பட்ஜெட்டில் ஒரு பெரும் பகுதியை ஆக்கிரமித்துக் கொள்கிறது.

சரி, ஏன் அவருக்கு அவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்று ஒரு கேள்வி இயல்பாக எழுந்தாலும், அந்த நடிகருக்கென ஒரு குறிப்பிட்ட ரசிகர் வட்டம் இருக்கிறது, அதனால் அந்தப் படம் மினிமம் கியாரண்டி நாட்கள் திரையில் ஓடுவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதாலேயே தான் அவர் சம்பந்தப்பட்ட செலவினங்களுக்கு தயாரிப்பு தரப்பு மண்டையை ஆட்ட வேண்டியிருக்கிறது.

ஆனால் படம் வெளி வந்தவுடன், சம்பந்தப்பட்ட நடிகர் குடும்பத்துடன் கிளம்பி வெளி நாட்டுச் சுற்றுலாவுக்குச் சென்றுவிடுவார்! படத்தின் வெற்றி தோல்வி பற்றி அவருக்குக் கவலை இல்லை. இதற்குத் தான் கடிவாளம் போடும்படியாக படம் மினிமம் கியாரண்டி அளவிற்கு ஓடவில்லை என்றால், அந்த நடிகரிடமே பணத்தை திரும்ப கேட்கும் உத்தியை சமீப காலமாக கையாண்டு கொண்டிருக்கின்றார்கள்......

அப்டியே இந்த இடத்தில் கட் பண்ணி மேலே உள்ள கமல்ஹாசன் மேட்டருக்கு இப்ப நாம போவோமா?

கமல் எப்பவுமே இந்த மாதிரியான டிபிகல் நடிகர் தான். அன்பே சிவம், மன்மதன் அம்பு என்றால் நல்ல பிள்ளையாக தன் அடுத்த வேளையைக் கவனிக்க போய்விடுவதும், மருதநாயகம், மர்மயோகி என்று அவ்வப்பொழுது கட்டிங், குவாட்டர், ஆஃப்ன்னு தடுக்கி விழுவதும்....   ஆனால் தேவர் மகன், விருமாண்டி என்றால் அலப்பரை பண்ணுவதுமாக இருப்பது தமிழ் சினிமா ரசிகர்கள் காணாத ஒன்று அல்ல!

அந்த வரிசயில் இப்பொழுது லேட்டஸ்ட் அலப்பரை தான் விஸ்வரூபம். தானே கைக்காசு போட்டு எடுத்திருப்பதால், எப்படியாவது நல்ல விற்றுமுதல் பார்த்து விட வேண்டும் என்று துடிக்கிறார். அதில் தப்பில்லை. நியாயம் தான். அப்படி இந்தப் படத்தில் நல்ல லாபம் வந்தால், அவரை வைத்து நட்டமடைந்த பழைய தயாரிப்பாளர்களில் தரவரிசை அடிப்படையில் பத்து பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பிரித்துக் கொடுத்து விடுங்கள் என்றும் யாரும் கேட்கவில்லை.

இப்படி இருக்கும் சூழ்நிலையில், இது வரை தாயும் பிள்ளையுமாக இருந்த, நட்டம் என்று வந்தால் பல சந்தர்ப்பங்களில் தயாரிப்பு தரப்பை காப்பாற்றி விட்டு தாங்கள் மட்டுமே விஷத்தை உண்ட விநியோகம் மற்றும் திரையிடல் தரப்பினரை நட்டாற்றில் விட்டு விட்டு, இந்தப் படத்தின் லாபம் முழுமையும் தனக்கே, அதுவும் நேரிடையாகவே வந்து விட வேண்டும் அதுவும் ஒரே வார காலத்திற்குள் அனைத்தும் நடந்து முடிந்து விட வேண்டும் என்று தொலைத் தொடர்பில் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி சாதிக்க வேண்டும் என்ற முனைப்போடு களம் இறங்கினார்.

ஆனால் கமல் சொல்வது போல, அவரது பொருளை எப்படி சந்தைப்படுத்த வேண்டும் என்ற உரிமை அவரிடம் மட்டுமே உள்ளது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. அனைவரும் அதை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். அதே சமயம் அவர் தனது பழைய சந்தையிலும் அதை விற்பனைக்கு கொண்டு வருவேன் என்கிற போது தான் பிரச்சினை ஆரம்பமாகிறது.

இதைப் புரிந்துகொள்ள நல்ல உதாரணம் சொல்லலாம். கோல்கேட் கம்பெனி ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஸ்டாக்கிஸ்ட்டை நியமனம் செய்து அந்த ஊர்களில் உள்ள கடைகளுக்கு விநியோகம் செய்யச் சொல்கிறது. அந்த ஸ்டாக்கிஸ்ட்டும் கடை கடையாக ஏறி தினம் வசூல் என்ற அடிப்படையில் கடனுக்கு பொருட்களைப் போட்டு விற்பனை செய்கிறார். கடைக்காரர்களும் ஷோகேஸ்களில் அழகாக அடுக்கி மக்களுக்கு அதை விற்பனை செய்கின்றார்கள்.

இப்போ, அந்த கோல்கேட் கம்பெனி ஊருக்கு ஐந்து பேரை களம் இறக்கி வீடு வீடாகச் சென்று கோல்கேட்டை அதாவது தனது தயாரிப்பை நேரடியாக விற்பனை செய்கிறது என்று வைத்துக் கொள்வோம்......

இதைத் தான் இப்பொழுது விஸ்வரூபம் படத்தில் கமல் செய்ய முற்பட்டிருக்கின்றார். சரி அதில் தவறில்லை தனது பொருளை எப்படி சந்தைப் படுத்த வேண்டும் என்கிற உரிமை அவரிடமே இருக்கிறது என்பது ஒத்துக் கொள்வோம். ஆனால் மக்களிடமும் நேரடியாக விற்பனை செய்வேன், ஸ்டாக்கிஸ்ட்டுகள் மூலமாக கடைகள் வழியாகவும் விற்பனை செய்வேன். ஏனென்றால் அந்த ஐந்து பேரால் எல்லா தரப்பு மக்களையும் நேரடியாக சென்று சந்தித்து விற்பனை செய்ய முடியாது, அதனால் மீதமிருப்போருக்கு பழைய வழக்கப்படியே விற்பனை செய்கிறேன் என்று சொல்கிறார்...!

இங்கு தான் பிரச்சினையே ஆரம்பம் ஆகிறது. உன்னுடைய பொருள் புதிதாக மக்களுக்கு அறிமுகமில்லாமல் இருந்த காலத்திலிருந்தே விற்பனை செய்கின்றோம். அப்பொழுது ஏற்பட்ட நட்டத்தையெல்லாம் நாங்களே சுமந்திருக்கின்றோம், உங்களை மக்களுக்கு யார் என்று தெரியாத போதே வீதி வீதியாகச் உங்கள் சரக்கை தலையில் தூக்கிச் சென்று விற்றவர்கள் நாங்கள். அப்போ போணியாகாததையெல்லாம் நாங்களே நீலகண்டர்களாக இருந்து உங்களை வளர்த்தெடுத்தோம், இப்பொழுது எங்களை மீறி நேராக மக்களை சந்தித்து விற்பதாக சொல்கின்றீர்கள், பரவாயில்லை விற்றுக் கொள்ளுங்கள், ஆனால் பாதி விற்று விட்டு மீதியை எங்களிடம் கொடுத்து விற்கச் சொன்னால் என்ன நியாயம்?

அது முடியாது? முடிந்தால் முழுவதையும் நீங்களே கீழிறங்கி விற்றுக் கொள்ளுங்கள், முடியாவிட்டால்,  முழுமையாக எங்களிடம் கொடுத்து விற்கச் சொல்லுங்கள். ஆனால் உலக்கைப் பிடியை நீங்கள் பிடித்துக் கொண்டு அருவாப் பிடியை எங்களைப் பிடிக்கச் சொன்னால் அதற்கு ஏமாறுகின்ற கேணைகள் நாங்கள் அல்ல.....

இது தான் விநியோக மற்றும் திரையிடல் தரப்பின் வாதம்....!!

இதுவும் சரியாத்தானே இருக்கு? அப்பறம் என்ன கமல் சார், நீங்க பல உலக நாடுகளைச் சுற்றிப் பார்த்து அந்த  சினிமாக்கள் மற்றும் சந்தைப்படுத்துதல் நுணுக்கங்களையெல்லாம் கற்றறிந்து தானே நேரடியாக மக்களிடம் செல்லும் டிடிஹச் முறையை கொண்டு வந்திருப்பீர்கள். அப்படியே செய்யுங்கள், அறிவியல் வளர்ச்சியில் எதையும் யாரும் தடுத்துவிட முடியாது என்ற தத்துவத்தை நாங்களும் ஏற்கிறோம் என்று மக்களும் கமலுக்கு ஆதரவாக கொஞ்சம் கொஞ்சமாக கைதூக்க ஆரம்பித்து விட்டார்கள்.

எல்லாமே சரியாத்தான் போயிட்டிருப்பதாக எல்லோரும் நினைத்தார்கள். ஆயிரம் ரூபாய் கட்டுப்படியாகுமா? அந்த நேரத்தில் கரண்ட் போனால் என்ன செய்வது? என்று பலதையும் அலசி ஆராய்ந்து, பத்து பேர் சேர்ந்து பார்த்தால் லாபம் தான், கரண்ட்டு பிரச்சினைக்கு இன்வெர்ட்டர் பயன்படுத்திக்கலாம் என்றெல்லாம் முடிவெடுத்து டிடிஹச் காரர்களிடம் பணமும் கட்ட ஆரம்பித்து விட்டார்கள்....

கமலும் எல்லா டிடிஹச்சிலும் தோன்றி கால் மணிக்கு ஒரு முறை 1000 ரூபாய் கட்டி படம் பார்க்கச் சொன்னார், முக்கிய நிகழ்ச்சிகளுக்கு தலைகாட்டாத கமல், விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஜூனியருக்கெல்லாம் வந்து மணிக்கணக்கில் உட்கார்ந்து, குழந்தைகளின் பாடல்களை விமர்சனம் செய்து தன் படத்தைப் பார்க்க மக்களிடம் ஆதரவு திரட்டினார்.....

இவ்வளவு தெளிவாக வேலைகள் நடக்கின்றன, கமலும் பெரிய நாணயஸ்த்தர், டிடிஹச் காரர்களும் பெரிய தொழிலதிபர்கள் தவறிழைக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் பல்லாயிரக் கணக்கானோர் படம் பார்க்க பணம் கட்ட ஆரம்பித்து விட்டார்கள், இன்னும் லட்சக்கணக்கானோர் கட்டத் தயாராகி விட்டார்கள்......

இந்த நிலையில் படம் இப்பொழுது சொன்ன தேதியில் சின்னத்திரையில் திரையிடப்படாது என்று அறிவிக்கிறார் கமல். பணம் கட்டியவர்கள் பதபதைத்து கம்பெனிக்காரனிடம் கேட்டால் எப்போ படம் போடுகிறோமோ பார்த்துக் கொள்ளுங்கள், பணமெல்லாம் வாபஸ் கிடையாது என்கிறார்கள்...

என்ன கொடும சார் இது?

உங்களை நம்பித்தானே சார் பணம் கட்டினோம்? முதல் நாள் படம் பார்க்கும் ஆசையில் தானே கட்டினோம்? பொங்கல் விடுமுறையில் ஊருக்குச் சென்று குடும்பத்தோடு சேர்ந்து முதல் நாளே பார்க்கும் ஆசையில் தானே பணம் கட்டினோம்? இப்பொழுது அந்தத் தேதியில் இல்லை, பிறகொரு உங்களுக்குச் சௌகரியமான தேதியில் காட்டப்போவதாக சொல்கின்றீகள்... அதுவும் தியேட்டரில் போட்ட பிறகு தான் சின்னத் திரையில் காட்டப் போவதாகவும் சொல்கின்றீர்கள்...

இது அநியாயம் இல்லையா கமல் சார்? உங்கள் நாணயத்திற்கு இது அழகா?

உங்கள் நிலையைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு பெரிய முதலீட்டில் புதிய முயற்சியில் இறங்கும் போது, கண்ணால் பார்க்க முடியாத இடத்திலிருந்தெல்லாம் பிரச்சினைகள் வரும். அதேப் போல் உங்களுக்கும் வந்திருக்கலாம். ஆனால் உங்களது அந்தப் பிரச்சினையில், சம்பந்தமே இல்லாமல் அப்பாவி ரசிகர்கள் அல்லது பொது மக்களின் பணத்தை அவர்கள் சம்மதமே இல்லாமல் எப்படி நீங்கள் பணயம் வைக்கலாம்?

உங்களுக்கு எதிர் தரப்பிலிருந்து சிக்கல்கள் வந்து அதை சமாளிக்க முடியாமல் போயிருந்தால், உடனடியாக நீங்கள் செய்திருக்க வேண்டிய காரியம் என்ன? உங்கள் புது முயற்சிக்கு கண்ணை மூடிக்கொண்டு கை நீட்டிப் பணம் தந்தவர்களுக்கு அதைத் திருப்பித் தர ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.

அதைச் செய்ய தவறியதோடு மட்டுமல்லாமல், அது பற்றி வாயே திறக்காமல் இன்னமும் உங்களைப் பற்றியே யோசித்து பேசிக்கொண்டிருக்கும் நீங்கள் தமிழ்ச் சமுதாயத்தின் முன்னால் ஒரு குற்றவாளியே!

எண்ணித் துணிந்திருக்க வேண்டும்! துணிந்த பிறகு பின்வாங்கினாலே இழுக்கு என்கிறார் திருவள்ளுவர். ஆனால் நாங்கள் அதைக் கூடச் சொல்லவில்லை, பின்வாங்கும் போது நம்பி பணம் போட்டவர்களை நட்டாற்றில் விட்டு விட்டீர்களே அதைத் தான் குற்றம் என்கிறோம்!!!

உலகநாகயகன் இனி தமிழக மக்கள் மனதில் வில்லனாகவோ, காமெடியனாகவோ தான் வலம் வருவார்!



Tuesday, January 8, 2013

திமுகவில் உட்கட்சி ஜனநாயகம் நீர்த்து போனதா?

கடைசியில் அது நடந்தே விட்டது என்பது போல் தான் தோன்றுகிறது....!

தனது பதின்ம வயதுகளில் தொடங்கி கிட்டத்தட்ட நாற்பது வருடங்களுக்கும் மேலாக தன் வாழ்வை தான் சார்ந்த இயக்கத்திற்காகவே அர்ப்பணித்துக் கொண்ட ஒருவருக்கு அக் கட்சியின் தலைவரால் அடுத்த தலைமை பொறுப்பு இவர் வசம் தான் வரும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது தான் சமீபத்திய தமிழக அரசியலின் ஹாட் டாபிக்.

கட்சித் தலைமையின் இந்த அறிவிப்பானது அக் கட்சியின் பெரும்பாலான தொண்டர்களையும் தாண்டி, பொது மக்களில் குறிப்பிடத் தக்க சதவிகிதத்தினருக்கு மத்தியிலும் ஒரு வித இன்ப அதிர்வலைகளை ஏற்படுத்தியிருப்பது தான் இதில் முக்கியமாக கவனிக்கப்படும் விஷயமாக இருக்கின்றது.

ஆம், திமுகவின் பொருளாளரும் அதன் தொண்டர்களின் தளபதியுமாகிய ஸ்டாலினை அவரது தந்தையும், கட்சியின் தலைவருமான கலைஞர் அவர்களால், “திமுகவின் அடுத்த தலைமைப் பதவிக்கு ஸ்டாலின் பெயர் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. க. அன்பழகன் அவர்களால் ஏற்கனவே முன் மொழியப்பட்டு விட்டதால், இப்பொழுது அதை நான் வழிமொழிவதாக அறிவிக்கிறேன்” என்று பத்திரிகையாளர்கள் முன்பாக அறிவித்திருப்பது தான் சமீபத்திய தமிழக அரசியலில் உச்சக்கட்ட தீயை பற்ற வைத்திருக்கின்றது.

எப்பவுமே திமுக அல்லது கலைஞர் எதைச் செய்தாலும் அல்லது பேசினாலும் எதிர்மறையாக விமர்சிக்கும் சிலர் இந்த அறிவிப்பு வந்தவுடன் உடனடி எதிர்வினையாக, திமுகவில் உட்கட்சி ஜனநாயகம் செத்து விட்டது, திமுக என்ன சங்கரமடமா என்று கேட்டவர் இப்பொழுது தானே வாரிசு அரசியலை ஊக்கப் படுத்தலாமா? என்றெல்லாம் தங்களுக்கு கிடைத்த தளங்களில் எல்லாம் வழக்கம் போல் விமர்சிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இந்த எதிர்வினைக்காரர்களின் கேள்விகளையும் நாம் கொஞ்சம் விரிவாக விவாதிக்க வேண்டித்தான் இருக்கின்றது. ஏனெனில் அது தான் ஸ்டாலின் அவர்களின் திமுக தலைமைப் பதவி என்ற விருட்சத்திற்கான நல்ல உரமாக அமையும். இதற்கெல்லாம் பதில் சொல்லாமல் கடந்து போனால், அந்தக் கேள்விகள் எப்பொழுதுமே விருட்சத்தின் வேர்களை அரித்துக் கொண்டே இருக்கும்!

சரி விஷயத்திற்கு வருவோம்! இவர்கள் எல்லாம் சொல்வது போல திமுகவில் உட்கட்சி ஜனநாயம் செத்து விட்டதா?

ஸ்டாலின் தான் அடுத்த தலைவர் என்ற ஒரு சூழ்நிலை அடுத்தடுத்த பொதுக்குழு கூட்டங்களில் ஏற்பட்டால், அதை (அந்த தீர்மானத்தை) நான் வழி மொழிவேன் என்ற கலைஞரின் கருத்து எப்படி அந்தக் கட்சியின் உட்கட்சி ஜனநாயகத்திற்கு விடப்பட்ட சவாலாக மாறும்?

மிகத் தெளிவாக இருக்கின்றது அவரது வார்த்தைகள். திமுகவில் அடுத்த தலைமைப் பதவியை ஒருவர் ஏற்க வேண்டுமானால், அது அக்கட்சியின் பொதுக்குழுவில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு வெற்றி பெற வேண்டும். இதைத் தானே கலைஞர் தனது வார்த்தைகளில் பிரதிபலித்திருக்கின்றார்.

பொதுக்குழுவில் தலைமைப் பதவிக்கான போட்டியில் வேறு யாரும் போட்டியிடக் கூடாது என்று எங்காவது சொல்லியிருக்கின்றாரா? உண்மையிலேயே தொண்டர்கள் மத்தியில் செல்வாக்கு இருக்கின்ற ஒருவர் கலைஞர் மகனாக இல்லாது இருந்தாலும், தலைவர் பதவிக்கான தேர்வில் நின்று தொண்டர்கள் அவரை தேர்ந்தெடுத்து விட்டால் அவர் தான் கட்சியின் அடுத்த தலைவராக வர முடியும்.

நிச்சயமாக அப்படி ஒரு ஆள் இன்றைய தேதியில் திமுகவில் இல்லை என்பது தான் நிதர்சனம்.  நாற்பது வருடங்களுக்கும் மேலாக கட்சிப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, ஒரு அடிமட்டத் தொண்டனாக தனது கட்சிப் பணியை துவக்கி, முதன் முதலாக கட்சிக்கு இளைஞர் அணி என்ற அமைப்பை உருவாக்கி, அதை ஒரு கட்டுக்கோப்பான இயக்கமாக இன்றளவும் வைத்திருக்கின்ற அந்த ஆளுமை தான் இந்த அளவிற்கு ஸ்டாலின் அவர்களை உயர்த்தியிருக்கிறது.

கட்சித் தலைவரின் மகன், அதுவும் சிறந்த செயல்வீரன் என்ற காரணத்தினால் தானே கல்யாணமான இரண்டே மாதங்களில் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு, ஓராண்டு சிறையில் மிகக் கொடூரமான அடக்குமுறைகளையெல்லாம் எதிர் கொண்டு வெளி வர வேண்டியிருந்தது?!

கட்சித் தலைவரின் மகன் என்ற காரணத்திற்காக, முதன் முதலில் அவர்  தேர்தல் களத்திற்கு வந்த போது எளிதில் வெல்லக் கூடிய பாதுகாப்பான தொகுதியிலா களம் இறக்கப்பட்டார்? இல்லையே...  அதிமுக அமைச்சரவையில் எம் ஜி ஆரின் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய மிஸ்டர் க்ளீன் என்று சொல்லப்பட்ட மூத்த அமைச்சர் கே.ஏ. கிருஷ்ணசாமிக்கு எதிராகவல்லவா களமிறக்கப்பட்டார்.

அப்பொழுது சென்னை திமுகவின் கோட்டை என்று சொல்லப்பட்டாலும், தனிப்பட்ட செல்வாக்கினால் ஆயிரம்விளக்கு தொகுதி மட்டும் கேஏகே வின் கோட்டையாகவே இருந்தது. அதில் நின்றால் தோல்வி நிச்சயம் என்று தெரிந்தும், பலர் அதைத் தடுத்தும், கலைஞர் அந்தக் கோரமான கடலில் அல்லவா ஸ்டாலினை தூக்கிப் போட்டார்?!

அந்தத் தேர்தலில் தோற்றாலும், அதே தொகுதியில் தொடர்ந்து களப்பணியாற்றி அடுத்தடுத்த தேர்தல்களில் அதே தொகுதியில் வென்று சாதனைப் படைத்தாரே. அப்படி முதல் முறையாக வென்று சட்டமன்ற உறுப்பினராக ஆனதும், அவரை கலைஞர் தனது அமைச்சரவையில் சேர்த்துக்
கொண்டாரா? இல்லையே, முதல் முறை வெறும் சட்டமன்ற உறுப்பினராகத் தானே அமர்ந்து சட்டசபை பாடம் பயின்றார்!

இந்த இடத்தில் வைக்கோவைப் பற்றியும் நாம் பேச வேண்டியிருக்கிறது. விமர்சகர்களில் சிலர் சொல்லும் குற்றச்சாட்டு.....  “இன்றைய தேதியில் ஸ்டாலின் அளவிற்கு தொண்டர்பலம் கொண்டவர்கள் திமுகவில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அப்படி தொண்டர் பலம் கொண்டவர்களை எல்லாம் கட்சியிலிருந்து கட்டம் கட்டி, இவருக்கு ராஜபாட்டை அமைத்துக் கொடுத்தது கலைஞரின் ராஜதந்திரம்” என்பது தான் அது.

ஆனால் உண்மையில் என்ன நடந்தது? இவர் முதன் முறையாக எம் எல் ஏ வாக வென்ற போது வைக்கோ மூன்றாவது முறையாக, தேர்தலையோ மக்கள் மன்றத்தையோ சந்திக்காமல், கலைஞரால் எம்பி ஆக்கப்பட்டிருந்தார். அதாவது வைக்கோ நோகாமல் நோன்பு கும்பிட்டுக் கொண்டிருந்த நேரத்தில், ஸ்டாலின் மக்களோடும், கட்சியின் அடிமட்ட மற்றும் இளைஞரணி தொண்டர்களோடும் இரண்டரக் கலந்து போராடி சட்டமன்ற உறுப்பினர் என்ற முதல் வெற்றியைப் பெற்றிருந்தார்!

மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக ஆக்கப்பட்டதாலும், எப்பவுமே தலைவர் கலைஞரின் பக்கத்திலேயே நின்று கொண்டு மீடியா வெளிச்சத்தில் இருந்ததாலுமே தனக்குப் பின்னால் ஒரு ஒளிவட்டம் இருப்பதாக நம்ப ஆரம்பித்த வைக்கோ, தனக்கென ஒரு கூட்டம் அமைத்துக் கொள்ளுதல், கட்சிக் கட்டுப்பாடுகளை மீறி செயல்படுதல், அதன் காரணமாக கட்சிக்கு பற்பல சமயங்களில் சங்கடங்களை ஏற்படுத்துதல் என்ற நிலைக்கு கட்சியை கொண்டு சென்று, ராஜீவ் கொலைக்கு திமுக தான் காரணம் என்ற எதிர்கட்சியினரின் வாதத்தை மக்கள்  நம்பும் சூழ்நிலைக்கு தமது செயல்பாடுகளால் நிறுவியிருந்தார் என்பது தான் நிதர்சனம்.

இதன் காரணமாக தேர்தலில் தோல்வியுற்று ராஜீவ் கொலை சம்பந்தமான வழக்குகளையும், கட்சி அங்கீகாரத்தையே கேள்விக்குள்ளாக்கும் நடவடிக்கைகளையும் கட்சி சந்தித்துக் கொண்டிருந்த நேரத்தில் சப்பைக் காரணங்களைச் சொல்லி கட்சியிலிருந்து வெளியேறி, திமுகவையே கைப்பற்றும் செயலில் ஈடுபட்டு அதில் தோல்வியும் கண்டார்.

இந்த மாதிரியான ஒரு மிக இக்கட்டான நேரத்தில், தனது இளைஞர் அணியின் மூலமாக கட்சிக்குள் இள ரத்தத்தைப் பாய்ச்சி, திமுகவை ஒரு கட்டுக்கோப்பான இயக்கமாக மிகவும் வலிமையோடு, மீண்டும் எழுச்சிபெற வைத்து தமிழகம் முழுவதும் கலைஞருக்கு இணையாக சுற்றுப்பயணம் செய்து அடுத்த ஐந்து ஆண்டுகளில் திமுகவை ஆட்சிக் கட்டிலில் மீண்டும் அமர்த்தும் அந்த பெரும் பணியை ஆற்றி முடித்தவர் தளபதி ஸ்டாலின்.

அந்த இக்கட்டான கால கட்டத்தில், நீண்டகால தடைக்குப் பிறகு உயிரூட்டப்பட்ட சென்னை மாநராட்சிக்கு நடந்த தேர்தலில்  மேயர் பதவிக்கான தேர்தலில் நின்று, வெற்றி பெற்று சென்னைக்கு ஒரு புதிய பரிமாணத்தையே பெற்றுத் தந்தார். கலைஞர் முயற்சியால் கட்டப்பட்ட சென்னை ஜெமினி பாலத்திற்குப் பின்பு, சென்னையில் கட்டப்பட்டுள்ள கிட்டத்தட்ட அனைத்து மேம்பாலங்களுமே ஸ்டாலினாலும் அவர் வழித்தோன்றல்களாலும் கட்டப்பட்டவையே ஆகும்.

ஸ்டாலினின் பெருமுயற்சிகளால் இந்தப் பாலங்கள் கட்டப்பட்டிருக்காவிட்டால் சென்னை இன்றைக்கு முட்டுச் சந்துகளில் முட்டிக் கொண்டு தான் நின்றிருந்திருக்கும்!

இதற்குப் பிறகு தான் கலைஞர் அமைச்சரவையிலேயே அவருக்கும் இடம் தரப்பட்டது. உள்ளாட்சித் துறை அமைச்சராக தமிழகத்தில் பட்டி தொட்டியெங்கும் அவர் கால்கள் படாத இடமே இல்லை என்று சொல்லுகின்ற அளவிற்கு சுற்றிச் சுழன்று ஆயிரக்கணக்கான பாலங்கள், சிமெண்ட் சாலை வசதிகள், கிராமப்புரங்களில் உயர்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் என்று தமிழக கிராமப் புரங்கள் முழுவதும் தனது செயல்பாடுகளை தீவிரப்படுத்தினார்.

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்க அவர் அளித்த பல்வேறு வாய்ப்புகளும், சுழல்நிதியும் இன்றளவும் மக்களால் பேசப்படுகின்றன. அந்த நேரங்களில் தங்கள் கைகளில் இருந்த பணப்புழக்கத்தை, வரண்டு போயுள்ள இந்த நேரத்தில் நினைவு கூர்ந்து பேசும் பெண்கள் பட்டாளம் இன்றைக்கு கிராமங்கள் தோறும் ஏராளம்!

கடந்த முறை திமுகவின் தோல்விக்கு பல்வேறு காரணங்களை அறிவு ஜீவிகள் அலசிக் கூறினாலும் ஊடகங்களின் பிரச்சாரமும், அதிமுக அமைத்த வலுவான கூட்டனியும் தான் திமுகவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது. இந்தத் தோல்வியிலிருந்து தலைவர் கலைஞரே வெளிவந்து தொண்டர்களை உற்சாகப்படுத்தும் முன்னதாக, சுற்றுப்பயணத்தை ஆரம்பித்து தொண்டர்களை தட்டியெழுப்பியவர் தளபதி ஸ்டாலின் தான் என்பதை அனைவரும் கண்கூடாக கண்டிருப்பர்.

இதை ஒரு தோல்வியாகக் கருதாமல் கட்சியைப் பலப்படுத்தும் ஒரு அவகாசமாக எடுத்துக் கொண்டு களம் இறங்கினார் ஸ்டாலின். மேயர் ஆனது தொடங்கி அடுத்தடுத்து அமைச்சர் பதவி, துணை முதல்வர் பொறுப்பு என்று செயல்பட்ட கடந்த 20 ஆண்டுகளில் திமுக தலைமையால் தமிழக ஆட்சிப் பொறுப்பு, மத்தியிலும் ஆளுங்கட்சியை நிர்ணயிக்கும் முக்கிய பொறுப்பு, தேர்தல்கள், கூட்டணிகள் என்று வேலைப் பளு அதிகமிருந்த காரணத்தாலோ என்னவோ கட்சியில் இளைய தலைமுறையினரின் பங்களிப்பு என்பதே கிட்டத்தட்ட இல்லாத சூழ்நிலை இருந்ததை உற்றுக் கவனித்த ஸ்டாலின், அந்த இளைய தலைமுறையினரின் உழைப்பும் வாக்குகளும் கட்சிக்கு கிடைக்காமல் போனது தான் இந்த தோல்விக்கு அதி முக்கிய காரணம் என்பதை புரிந்து கொண்டார்.

இனி தன்னுடைய கடமை என்ன என்பது அவருக்கு தானாகவே புரிந்து போயிற்று. ஆட்சிப்பணிக்கான பொறுப்புகள் இல்லாத இந்த அவகாசத்தை அருமையாக பயன்படுத்திக் கொண்ட ஸ்டாலின், கடந்த ஓராண்டுக்கும் மேலாக தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து மாவட்டவாரியாக பொதுக்கூட்டங்கள் நடத்தி இளைஞர் அணியின் புதிய சட்ட திட்டங்களையும் வயது வரம்புகளையும், இன்னபிறவையும் அறிவித்து அதற்கான நேர்காணலுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுப் பேசினார்.

அவரது பேச்சு கட்சியில் இல்லாத பல இளைஞர்களையும் கவரவே மாவட்டம் தோறும் லட்சக்கணக்கான இளைஞர்கள் நேர்காணலுக்காக விண்ணப்பிக்க, அவர் மீண்டும் முன்னரே தேதிகளை அறிவித்து விட்டு மாவட்டம் தோறும் நேர்காணல் நடத்தி, தமிழகம் முழுமைக்கும் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட நகர, ஒன்றிய, கிளைக்கழக மற்றும் மாவட்ட, பொறுப்பாளர்களை தேர்ந்தெடுத்து அறிவித்து அவர்களுக்கு கட்சியின் கொள்கைகள், கட்டுப்பாடுகள் மற்றும் திராவிட இயக்க வரலாறு பற்றிய பயிற்சிப்பட்டரைகளை விரிவாக தொடர்ந்து நடத்தி வருகின்றார்.

ஆட்சி கைநழுவிப்போன இந்த 20 மாதங்களில். புத்துணர்வுடன் கூடிய எழுச்சி பெற்ற லட்சக்கணக்கான இளைஞர்கள் ஸ்டாலின் மூலமாக கட்சிக்கு கிடைத்திருக்கின்றார்கள். அவர்கள் கைகளில் தான் கட்சியின் எதிர்காலம் இருக்கின்றது என்பது எல்லோருக்கும் கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்து விட்டது. தலைவர் கலைஞர் அவர்களும் அவர்களை அங்கீகரித்து வாழ்த்தியிருக்கின்றார்.

இப்பொழுது ஆரம்ப விஷயத்திற்கு வந்துவிடுவோம்! ஒரு கட்சியில் அடிமட்டத் தொண்டனாக காலடி எடுத்து வைத்து, கட்சிக் கொள்கைக்காக  கடுமையான சிறைவாசத்தை அனுபவித்து, பதினைந்து வருடங்கள் பதவியின்றியே உழைத்த பிறகு, ஜெயிக்க முடியாத இடத்தில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு, எம் எல் ஏ, மேயர், அமைச்சர், துணை முதல்வர் என்று படிப்படியாக உயர்ந்து.......

அதோடு மட்டுமல்லாமல், கட்சியின் தலைமை எடுக்கும் எந்த முடிவுக்கும் மறு வார்த்தை பேசாமல் கட்டுப்பட்டு, தன் கடமைகளை பிரதிபலன் எதிர்பாராமல் செவ்வனே செய்து, இக்கட்டான காலகட்டங்களில் கட்சியின் அஸ்திவாரத்தையே தாங்கிப் பிடித்து, இன்றைக்கும் கட்சியை இள ரத்தத்துடன் உற்சாகமாக பயணிக்க வைத்துக் கொண்டிருந்து.....

இது மட்டுமல்லாமல், இத்தனை ஆண்டுகள் அரசு அமைச்சக பொறுப்புகளில் இருந்தாலும் கரை படாத கைகளுக்குச் சொந்தக்காரராகவும், தான் மட்டுமன்றி தன் மனைவி, பிள்ளைகள், தன் மனைவி வழி சொந்தங்கள் என்று யாரையுமே ஊழல் என்று குற்றம் சுமத்த முடியாத அளவிற்கு வழிநடத்தி நேர்மையானவராக இருந்ததோடு மட்டுமல்லாமல், மிகத் திறமையான நிர்வாகத் திறன் கொண்டவராகவும், அரசு ஒப்பந்தம் தானே என்று அலட்சியம் காட்டாமல் நேராக சென்று கண்கானிப்பு செய்து, திட்ட நேரம் மற்றும் தொகையை விட குறைவான நேரம் மற்றும் தொகையில் ஒப்பந்தங்களை நிறைவேற்றி மக்களுக்கு அர்ப்பணிக்கும் அந்த அளப்பறிய ஆற்றல் பெற்ற செயல் வீரனாகவும் திகழ்ந்து கொண்டிருக்கும்......

இந்த மனிதரின் கைகளில் திமுக என்ற கட்சியை கொடுப்பதற்கு கட்சித் தலைவர் முன்வந்தால் அது எப்படி உட்கட்சி ஜனநாயக மீறலாக எடுத்துக்கொள்ளப்படும்?

ஒருவேளை அந்த தலைவர் ஸ்டாலினுடைய தந்தை என்பதால் தான் இந்தப் பேச்சு எழுகிறது என்றால், அவர் ஸ்டாலினுக்கு மேல் உள்ள இரண்டு மூத்தவர்களுக்கு அல்லவா பட்டத்தைக் கட்டுவதாக அறிவித்திருக்க வேண்டும்?! அப்படி நடக்கவில்லையே?! வேறு ஏதோ ஒரு காரணத்திற்காகத் தானே ஸ்டாலினுக்கு முடி சூட்ட முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

அது என்ன காரணம்?

ஸ்டாலினால் கட்சிக்கு எந்த கெட்ட பெயரும் ஏற்பட்டதில்லை, ஸ்டாலினால் கட்சிக்கு எந்த அவமானமும் ஏற்பட்டதில்லை, ஸ்டாலினால் திமுக ஆட்சிக்கும் எந்த கெட்ட பெயரோ, அவமானமோ ஏற்பட்டதில்லை.....

ஸ்டாலின் கட்சியின் மிக முக்கிய துணை அமைப்பான இளைஞர் அணியை கட்டமைத்து அதை மிகத் தெளிவாக கட்சியின் தாங்கு தூணாக நிர்வகித்து வருகிறார். கட்சிக்காக பட்டி தொட்டியெங்கும் சென்று பிரச்சாரம் செய்கிறார். கலைஞருக்கு அடுத்து பெரும் கூட்டத்தைக் கூட்டி பிரச்சாரம் செய்யும் சக்தியாக அவர் ஒருவர் மட்டுமே இப்பொழுது கட்சியில் இருக்கின்றார். மிக இக்கட்டான கால கட்டங்களில் கட்சியை விட்டு ஓடி விடாமல், கட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்து சங்கடப்படுத்தாமல், கட்சியை தாங்கிப் பிடித்து உழைத்து மீட்டெடுத்திருக்கின்றார்.

இவை அனைத்தையுமே எந்த ஆடம்பரமும் இல்லாமல் தனது அதிகார வரம்பிற்கு உட்பட்டே செய்து வந்திருக்கிறார் என்பது தான் இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது.

இப்படிப்பட்ட ஒருவர் ஏன் திமுகவின் அடுத்த தலைவராக வரக்கூடாது? மிகத் தகுதி வாய்ந்த ஒருவர் தற்பொழுதைய தலைவரின் மகன் என்ற காரணத்தினால் அடுத்த தலைமைப் பதவிக்கு வர தகுதியற்றவராக ஆகிவிடுவாரா?

ஒரு வேளை அப்படி நடந்தால் அப்பொழுது சொல்லலாம், “திமுகவில் உட்கட்சி ஜனநாயகம் செத்து விட்டது” என்று!

அடுத்து இது என்ன மடமா? வாரிசு அரசியல் நடத்துவதற்கு, என்று கேட்பவர்களுக்கு ஒரே ஒரு பதில் தான், நிச்சயமாக திமுக என்பது அதன் தலைவரால் அடுத்த தலைமைக்கான வாரிசை நியமிக்கும் பழக்கம் உள்ள மடம் கிடையாது, தலைமை பதவிக்கு மூன்று வருடத்திற்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும், அப்பொழுது ஸ்டாலினை எதிர்த்து தகுதியுள்ள எந்தவொரு திமுக தொண்டனும் நிற்கலாம், அவர் பெரும்பான்மையான உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவரே திமுகவின் அடுத்த தலைவர். இதில் எந்த சந்தேகமும் இல்லை. இது தான் நடைமுறை.

ஆனால் இது போன்ற குதர்க்க வாதங்களை விமர்சனம் என்ற பெயரில் முன்வைப்பவர்கள் யார் என்று பார்த்தால், எப்பொழுதுமே திமுக எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டை கொண்டிருப்பவர்களோ அல்லது அதிமுக ஆதரவு நிலை வெளியில் தெரிந்தால் அவமானம் என்று நினைத்து நடுநிலை முகமூடியோடு திமுகவை மட்டுமே திட்டிக் கொண்டிருப்பவர்களும் தான் என்பது புரியவரும்.

ஆனால் பொது வெளியில் திமுகவையும், கலைஞரையும் கடுமையாக விமர்சிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் ஸ்டாலின் தலைமையை ஆவலுடன் வரவேற்கத்தான் செய்கின்றார்கள்.

அதனால் நான் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக எழுதிய வாருங்கள் ஸ்டாலின் பதவியேற்க என்ற இந்தப் பதிவையே இந்தப் பதிவின் முத்தாய்ப்பாக வைத்து முடிக்கின்றேன்!!!


Friday, November 23, 2012

இருண்ட தமிழகம்!

எங்கு பார்த்தாலும் ஒரே மயான அமைதி. இரண்டு வருடங்களுக்கு முன்பு மக்கள் அனுபவித்துக் கொண்டிருந்த அனேக சௌகரியங்களை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து, இப்பொழுது இந்த அசௌகரியங்களை பழகிக் கொள்ள முயன்று கொண்டிருக்கின்றார்கள். ஆனால் குழந்தைகளையும், சிறு பிள்ளைகளையும் நினைத்தால் தான் பரிதாபமாக இருக்கின்றது.

ஓரிரு வயதாகியிருக்கும் குழந்தைகளுக்குக் கூட பரவாயில்லை. பிறந்ததிலிருந்தே, தொடர் மின்விசிறி காற்றில் தூங்காத இந்த நிலை பழக்கமாகியிருக்கும். ஆனால் மூன்று வயதிற்கு மேல் உள்ள குழந்தைகள் படும் பாடு தான் காணச் சகிக்கவில்லை. பிறந்ததிலிருந்து இரவு நேரத்தில் முழு மின் விசிறிக் காற்றில் தூங்கப் பழகிவிட்டு, இப்பொழுது பாதி ராத்திரி புழுக்கமும், கொசுக்கடியும் தரும் அவஸ்த்தையில் துவண்டு போகிறார்கள்.

காலை ஆறு மணிக்கு கண் விழித்தாலே கூட கரண்ட் காணாமல் போய்விடுகிறது. அடுத்து பத்து மணிக்குத் தான் திரும்பவும் கரண்ட்டைக் கண்ணால் பார்க்க முடியும். ஆனால் அலுவலக வேலைக்குச் செல்பவர்களானாலும் சரி, தினக்கூலி வேலைக்குச் செல்பவர்களானாலும் சரி, காலை 8 லிருந்து பத்து மணிக்குள் வேலைக்குச் சென்றுவிட வேண்டும் என்ற நியதி இருப்பதால், மின்சாரத்தை உபயோகிக்காமலேயே வேலைக்குச் சென்று விட வேண்டிய அவலம் தான் மிஞ்சுகிறது.

ஹீட்டரில் சுடுநீர் வைத்துக் குளிப்பது, காலையில் படிப்பது, மிக்ஸியில் சட்னி அரைப்பது, காலையில் உடைகளை சலவை செய்து கொள்வது, நல்ல வெளிச்சத்தில் அலங்காரம் செய்து கொண்டு வேலைக்குக் கிளம்புவது, செல்ஃபோன் சார்ஜ் செய்வது, காலைச் செய்திகளை டீவியிலோ, ரேடியோவிலோ கேட்பது, அக்வாகார்டில் குடிநீரைச் சுத்திகரித்துக் குடிப்பது, ....

என்ற இப்படியான எண்ணற்ற காலை வேலைகளுக்கு நமக்கு பேருதவியாக இருந்த மின்சாரம் இன்மையால், அனேகமாக அனைவர் வாழ்விலும் இந்த காலை நேரப் பணிகள் தடையாகித் தான் போயிருக்கிறது.

ஒரு வழியாக பத்து மணிக்கு வரும் மின்சாரம் அடுத்த இரண்டு மணி நேரத்தில் தன் கடமையை முடித்து விட்டு 12 மணிக்கெல்லாம் கடையைக் கட்டிவிடும்! அதற்குள்ளாக வீட்டுப் பெண்கள், குடும்பத்தினரின் மறுநாள் தேவைக்கான உடைகளை சலவை செய்வதா? வாஷிங் மெஷின் போட்டு அழுக்குத் துணிகளை துவைப்பதா? மிக்ஸி கிரைண்டரைப் பயன் படுத்தி மதிய உணவைச் சமைப்பதா? என்று அல்லாடித் தான்  போய்விடுவார்கள்!

இதில் தங்களை ரிலாக்ஸ் செய்து கொள்ள டிவீ, ஃபேன் என்றெல்லாம் எப்படி எண்ணம் வரும்? 12 மணிக்குப் போன கரண்ட் மறுபடியும் மாலை நான்கு மணிக்குத் தான் வந்து கதவைத் தட்டும். அதற்குள்ளாக வியர்வையில் நனைந்தபடியே சாப்பிட்டு முடித்து.....   காலையிலிருந்து தொடர்ந்து வேலை செய்து, மதியும் உண்ட களைப்பும் சேர்ந்து கொள்ள கொஞ்சம் படுத்து உறங்கி புத்துணர்வு பெறலாம் என்றாலும், வியர்வையில் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து தலைவலி வந்தது தான் மிச்சம் எம் தாய்க்குளங்களுக்கு!

தலைவலி தலையைப் பிளக்க ஆரம்பிக்கும் போதே சரியாக 4 மணிக்கு மின்சாரம் வந்து கதவைத் தட்ட, மீண்டும் அறக்கப் பறக்க ஓட்டத்தை ஆரம்பித்தாக வேண்டும். ஏனென்றால் வந்த கரண்ட், ஆறு மணிக்கெல்லாம் மீண்டும் கடையைக் கட்டிவிடுமே!

அந்த இரண்டு மணி நேரத்தில், அவசர அவசரமாக கிரைண்டர் போட்டு இட்லி மாவு அரைப்பது, இரவு டிபனுக்கு மிக்ஸி, குக்கர் இத்தியாதிகளை பயன் படுத்தி வேலைகளை முடித்துக் கொள்வது, தண்ணி டேங்க்குக்கு நீர் ஏற்றுவது, இத்தியாதிகளை முடித்தாக வேண்டும்!

ஒரு வழியாக ஆறு மணிக்கெல்லாம் கரண்ட் போன பின்பு முகம் கழுவிக் கொண்டு, இருட்டில் சென்ற கணவனையும் பிள்ளைகளையும், இருட்டோடு வீட்டிற்குள் வரவேற்று.....  அதன் பிறகு ஆறே முக்காலுக்கு வந்து ஏழேகாலுக்கு போகும் அரை மணி நேர கரண்ட்டில், கணவனும், குழந்தைகளும் டீவிக்கு அடித்துக் கொண்டிருக்க, இரவு டிபனுக்கு அம்மா ரெடி செய்து விடுவாள்.

ஏழேகாலுக்கு கரண்ட் போனவுடன், வாசலில் வந்து அனைவரும் அமர்ந்து கொண்டு கதை பேச.... சரியாக எட்டு மணிக்கு கரண்ட் வந்தவுடன், அவசர அவசரமாக அனைவரும் உள்ளே வந்து சீக்கிரமாக கரண்ட் இருக்கும் போதே சாப்பிட்டு முடித்து விட்டு, படுக்கையறைக்குள் புகுந்து விட வேண்டியது தான்! இல்லன்னா, மீண்டும் எட்டே முக்காலுக்கு கரண்ட் போயிடுமே! இதே கதை தான் இரவு முழுதும் பயணித்து, விடிகாலை 6 மணி வரை தொடரும்.

இது தான் இன்றை தமிழக குடும்பங்களின் ஒரு நாள் வாழ்க்கை முறையாக இருந்து கொண்டிருக்கிறது.  தன் சௌகரியத்துக்கு, தான் நினைத்தபடி எதையும் எப்பொழுதும் செய்து கொள்ள முடியாது. குழந்தைகளுக்கு படிப்பு, விளையாட்டு எதுவும் கிடையாது. பெரியவர்களுக்கு டிவீ, ரேடியோ என்ற பொழுதுபோக்கு அம்சங்கள் கிடையாது. பெண்களுக்கு மாவரைப்பது, சட்னி அரைப்பது, துணி துவைப்பது, சலவை செய்வது எல்லாம் சவாலாகிப் போய்விட்டன.

மொத்தத்தில் கரண்ட் இல்லாமல், மின் விசிறி இல்லாமல், இரவு பகல் எப்பொழுதும், வியர்வையில் பொசுங்கி, கொசுக்கடியில் அல்லலுற்று, தூக்கம் கெட்டு நடைப் பிணமாகத் தான் ஒவ்வொரு தமிழனும், தமிழச்சியும் தமிழகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

மாலை ஆறு மணிக்கு மேல் ஊரே இருண்டு கிடக்கிறது. நிறைய வழிப்பறிகளும், சங்கிலி அறுப்புகளும் சர்வசாதாரணமாகி விட்டன. பெண்கள் வெளியே வரவே அச்சப்படுகின்றார்கள். வாழ்க்கையே முடங்கிப் போனது போல் ஆகிவிட்டது ஒவ்வொருவருக்கும்.

மாலை நேரங்களில் கரண்ட் இல்லாத போது ஊரே ஒரு வித மயான அமைதியில் இருப்பது போன்ற ஒரு உணர்வு வருகின்றது...... இதெல்லாமே கரண்ட் இல்லாததால் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தமிழக மக்கள் அனுபவிக்கும் ஒருநாள் வாழ்க்கை முறை கஷ்டங்கள் மட்டுமே....!

ஆனால் இந்த மின் தடையால் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பொருளாதார இழப்பும், அதன் காரணமாக அவர்கள் படுகின்ற பாடும், தனிப் பெரும் பதிவாக எழுதக் கூடிய அளவிற்கு மிகவும் மோசமானது!!!!

ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக தமிழகத்தில் ஒரு குரல் ஒலித்துக் கொண்டிருந்தது, தமிழகம் இருண்டு விட்டது.. தமிழகம் இருண்டு விட்டது என்று!

அந்தக் குரலுக்குச் சொந்தக்காரருக்கு அப்பொழுதே தெரிந்திருக்கிறது போலும் தமிழகம் இருண்டுவிடும் என்று!!!!

Thursday, October 18, 2012

திரா சார் வீட்டு கொலு

என் தாய் வழிப் பாட்டியின் ஊர் பெருஞ்சேரி. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் ஒரு உதாரணமாயிருக்கும் அழகிய கிராமம். அந்த ஊரைப் பற்றி நிறைய பல முறை எழுதிவிட்டதால் அப்படியே அதை கட் பண்ணிட்டு திரா சார் வீட்டுக்கு வருவோம்.

ஊரின் தென்பக்கமாக ஓடும் வீரசோழன் ஆற்றிலிருந்து நேராக கிராமத்துக்குள் நுழையும் ஒற்றையடிப் பாதையைக் கடந்து வரிசையாக பக்கத்திற்கு  பத்து வீடுகளைக் கொண்டிருக்கும் திருமஞ்சன வீதியையும் கடந்தால் ஊருக்குள் ஒரு நாளைக்கு 5 முறை வந்து செல்லும் ஒரே பேருந்தான எட்டம் நம்பர் பஸ்ஸுக்காகவே போடப்பட்டிருக்கும் கருங்கல் ரோட்டை வந்து முட்டலாம்.

ரோட்டின் கிழக்குப் பக்கம் திரும்பி நடந்தால் வலப்பக்கத்தில் இருக்கும் முதல் ஓட்டு வீடு தான் திரா சார் வீடு. அந்த வீட்டின் கொல்லை திருமஞ்சன வீதியில் முன்னூறு அடிக்கு நீண்டிருக்கும். அந்த வீதியின் மேலண்டை பக்கத்தில் இருக்கும் முதல் நான்கு வீடுகளுக்கு திரா சார் வீட்டுக் கொள்ளை தான் எதிர் வீடு!

ஊரில் இருக்கும் மூன்று பிராமணக் குடும்பங்களில் இவருடையதும் ஒன்று. ஆனால் மற்ற இரண்டு குடும்பங்களுக்கும் இவருக்கும் வித்தியாசம் உண்டு. திரா சார் ஊர் மக்கள் அனைவருக்கும் மிகுந்த பரிச்சயமானவர். மற்ற இரண்டு பிராமனாள் வீட்டிற்கும் எல்லோராலயும் உள்ளே நுழைந்து விட முடியாது. அவர்களும் ஊரில் உள்ள எல்லோருடனும் சகஜமாகப் பேசிவிட மாட்டார்கள். அவர்கள் முகத்தில் சிரிப்பை வரவழைத்துப் பேசுவார்கள் என்றால், அது ஊரில் இருக்கும் ஐந்தாறு பிள்ளைமார் வம்சத்து மிராசுதாரர் குடும்பத்தினரோடு மட்டும் தான்!

இந்தக் காரணத்தினாலேயே திரா சார் மேல் ஊர் மக்கள் அனைவருக்கும் கூடுதல் வாஞ்சை இருப்பது யதேச்சையாக அமைந்து விட்டது. அது மட்டுமல்லாமல் அவர் பெருஞ்சேரி மாணவர்கள் மட்டுமல்லாது, சுத்துப்பட்டு நாற்பது ஐம்பது கிராம மக்களும் பயிலுகின்ற மங்கைநல்லூர் கே.எஸ்.ஓ உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்ததும் ஒரு முக்கிய காரணம்.

இயற்கையிலேயே அப்பொழுது கிராமத்தைச் சேர்ந்த உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, குறிப்பாக தமிழாசிரியர்களுக்கு நல்ல மரியாதை இருந்தது. அதனாலேயே, அவர் பெருஞ்சேரி எல்லையையும் கடந்து நாற்பது கிராமங்களிலும் பெயர் சொன்னால் விளங்கும் அளவிற்கு பிரபலம் ஆகியிருந்ததும், மக்களுக்கு அவர் மேல் அதிக மதிப்பு ஏற்பட காரணமாக அமைந்து விட்டது.

இதுக்கு மேல அவர் வீட்டுல வைக்கின்ற கொலு பற்றி சொல்லாவிட்டால் அடிக்க வருவீங்க...!

புரட்டாசி ஐப்பசி மாதங்கள் என்றாலே அந்த ஊரில் எல்லோருக்குமே திரா சார் நினைவு தானாகவே வந்து விடும். கொலு வைப்பதற்கு முதல் நாளோ அல்லது சில வருடங்களில் நவராத்திரியின் முதல் நாளான அன்றைய தினத்தின் காலையிலோ, அம்பாள் படி இறங்கும் வைபவம் என்று அமர்க்களப் படுத்திவிடுவார்.

அந்த வைபவத்திற்கு 12 நாட்களுக்கு முன்னதாகவே (அது என்ன கணக்கோ தெரியவில்லை) வீடே......! சாமான்கள் சுத்தம் செய்வது, ஒட்டடை அடிப்பது, கழுவி விடுவது, துணி துவைப்பது என்று ஒரே களேபரமாகிவிடும். வீடு சுத்தம் பண்ணுவது முடிந்தவுடன், மச்சியிலிருந்து முதலில் கொலுப்படிக்கான பலகைகளைத் தான் இறக்குவார்.

இதற்கெல்லாம் ஒத்தாசை செய்ய ஊரில் அவருக்கு அந்த வருடத்தில் பிடித்த ஐந்தாறு மாணவர்களை வைத்துக் கொள்வார். அவர்களுக்கு அந்த வருடம் பூராவும் ஊரில் பெரிய மரியாதை கிடைப்பதாக அவர்களே எண்ணிக் கொள்வார்கள்!

பலகைகளையும் அதன் கால்களையும் சுத்தம் செய்து, அதில் இருக்கின்ற சிறு சிறு உடைப்புகளைச் சரி செய்து, இதற்கு மேல் தாங்காது என்பவற்றை தூக்கி கடாசி விட்டு, அதற்குப் பதிலாக புதிதாக ஒன்றைச் செய்து பொருத்திக் கொள்வது என்று......!  அதற்குள் கொலுவிற்கு இன்னும் நான்கைந்து நாட்களே இருக்கும் என்ற நிலை வந்து விடும்.

கொலுப் படிகள் அவருக்கு முழு திருப்தி தந்துவிட்டது என்றதும் தான் கொலு பொம்மைகள் மச்சியிலிருந்து கீழிறக்கப்படும். பெரிய பொம்மைகள் எல்லாம் தனித்தனியாக வைத்திருப்பார். சின்ன பொம்மைகள் எல்லாம் ஐந்தாறு மரப் பெட்டிகளில் இருக்கும்.

மச்சி வாசல் அருகில் உள்ள உத்திரத்தில் ஏணியைச் சாற்றி, மச்சியில் இரண்டு பேர் உட்கார்ந்து ஒவ்வொரு பொம்மையாக எடுத்துக் கொடுக்க, அதை ஏணியில் நின்று கொண்டிருக்கும் ஒரு பையன் வாங்கி, கீழே நின்று கொண்டிருக்கும் திரா சாரிடம் தர அதை அவர் தன்னருகே நிற்கும் பையனிடம் கொடுத்து அவன் பத்திரமாக ஒவ்வொரு பொம்மையாக கீழே வைப்பான்.

அரை மணி நேரம் நடக்கின்ற இந்த நிகழ்வுக்கு சம்பந்தப்பட்ட அனைவருமே, வழக்கத்தை விட படு வாஞ்சையோடு குளித்து முடித்து சுத்தபத்தமாக வந்திருந்து, இந்த வேளையைக் கவனிப்பார்கள். 

கொலு பொம்மைகள் கீழே இறக்கப்பட்டவுடன், கொலு வைப்பதற்கான முழு களையும் அந்த வீட்டிற்கு வந்து விடும். அதன் பிறகு ஐந்தாறு பெண் பிள்ளைகளையும் களத்தில் இறக்கி விட்டுவிடுவார் திரா சார். அவைகள், அந்த பொம்மைகளை மிகவும் நாசுக்காக சுத்தம் செய்யும். பலவற்றை பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதில் துணியை நனைத்து அதைக் கொண்டு பொம்மைகளைத் துடைத்தும் சுத்தம் செய்வர்கள். சில பொம்மைகளை வெறும் உலர்ந்த துணியால் மட்டுமே சுத்தம் செய்வார்கள்.

ஊரிலுள்ள குயவர் வீட்டு பையனோ பெண்ணோ வரவழைக்கப்பட்டு வர்ணம் போன பொம்மைகளுக்கெல்லாம் புதிதாக வண்ணம் வைக்கப்படும். மர பொம்மைகளுக்கும் அவர்களே வண்ணம் வைத்து விடுவார்கள். ஐயர் வீட்டின் உள்ளேயே வந்து வண்ணம் வைப்பதாலோ என்னவோ அவர்கள் அதற்கு கூலி கூட வாங்கிக் கொள்ள மாட்டார்கள்!

அம்மன் படியிறங்கும் வைபவம் நாளை மறு நாள் நடைபெற இருக்கிறது. எல்லோருக்குமே ஒரு வித பரபரப்பு தொற்றிக் கொள்ளும். மொத்தமாக இருநூறிலிருந்து இருநூற்றி ஐம்பது பொம்மைகள் வரை இருக்கும். ஒவ்வொரு வருடமும் குறைந்தது பத்துப் பதினைந்து பொம்மைகள் வரை சேர்த்துவிட வேண்டும் என்று திரா சார் விரும்புவதை மாணவர்கள் நிறைவேற்றி விடுவார்கள்.

ஊர் பெரிய மனிதர்களிடம் எல்லாம் சென்று இதற்காக ஊண்டி குலுக்கி காசு சேர்த்து, மாயவரம் சென்று புது பொம்மைகள் வாங்கி வந்து விடுவார்கள். அவர்களுக்கெல்லாம் கொலு என்பது வெறுமனே சாமி சம்பந்தப் பட்டது என்பது போக, ரயில் வண்டி பொம்மையைக் கூட கொலுவில் சேர்க்கலாம் என்பது அவர்கள் நினைத்திருந்த ஆன்மீகத்திற்கு புது வடிவம் அல்லது வர்ணம் கொடுத்தது போலிருந்தது.

புது பொம்மைகளுக்கென்றே இரண்டு பக்க வாட்டிலும் படிகள் வைக்கப் பட்டிருக்கும். அந்த வருடத்தில் அந்த இரண்டு படிகளிலும் உள்ள பொம்மைகளுக்குத் தான் அதிக மவுசு!

அம்மன் படியிறங்கும் வைபவத்திற்கு அதிகம் யாரும் வரமாட்டார்கள். ஆரம்பத்திலிருந்து இந்த வேலையில் சம்பந்தப்பட்ட மாணவ மாணவிகள் மட்டுமே வருவார்கள். ஊரிலிருந்து அவர் சித்தப்பா என்றழைக்கும் ஒரு முதிய பிராமணர் வந்திருந்து புரியாத மொழியில் மந்திரங்கள் சொல்ல, சர்க்கரைப் பொங்கல் எல்லாம் வைத்து படையல் போட்டு, இன்னும் என்னென்னவோ சாங்கியங்கள் எல்லாம் செய்து, வெற்றிகரமாக அந்த வருடத்திய கொலு ஆரம்பமாகிவிடும்.

நவராத்திரியின் முதல் நாள், புது பொம்மைகளைப் பார்ப்பதற்கென்றே பெரிய கூட்டம் கூடும். கிட்டத்தட்ட 100  பேர் வரையிலும் கூட வருவார்கள். திருமணமான பெண்களும் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு வருவார்கள். அனைவரையும் கூடத்தில், தாழ்வாரங்களில், (மழை இல்லை என்றால்)முற்றத்தில், வெளித் திண்ணையில் உட்கார வைத்து, அவரே எதாவது தமிழ் பாடல்கள் ஒன்றிரண்டு பாடுவார்.

வந்திருப்பவர்களையும் பாடச் சொல்வார். குறைந்தது பத்து பேராவது பாடினால் தான் அன்றைக்கு தீப ஆராதனை காட்டி, சுண்டல் தருவேன் என்பார். அதற்காகவாவது பிள்ளைகள் பாடுவார்கள். வெளியூரிலிருந்து இந்த ஊருக்கு திருமணம் செய்து வந்திருக்கும் சில பெண்களும் பாடி, தங்கள் மேதமையை ஊருக்கு அறிவிப்பார்கள். நீராரும் கடலொடுத்து பாடல் கூட சில மாணவச் செல்வங்கள் பாடும். சிலர் திருக்குறள் மனப்பாடப் பகுதியை ஒப்புவிப்பார்கள். 

வீட்டிலும், ஊரிலும் தண்ணி தெளித்து விடப்பட்ட சிலதுகள் கூட நல்ல சினிமா பாட்டைப் பாடி கைத்தட்டல் பெற்று, ஊரோடு ஒத்து வருவார்கள்! எல்லாம் முடிந்து அவருக்கே ஒரு வித திருப்தி ஏற்பட்ட பிறகு, கடைசியாக அவர் வடமொழியில் ஏதோ பாடல் பாடி விட்டு தீபாராதனை காட்டி அனைவருக்கும் வாசலில் நின்று சுண்டல் தருவார்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சுண்டலும், யாராவது அன்பர்கள் கொடுக்கும் தானியத்தைக் கொண்டு சமைத்த சாதமும் கொடுப்பார். அவ்வளவு ருசியாக இருக்கும். மாலை 6.30 லிருந்து 7.30 வரை அந்த வைபவமும், அதன் பிறகு அரை மணி நேரம் விநியோகமும் என்று 8 மணிக்கெல்லாம் ஒவ்வொரு நாள் நிகழ்வும் இனிதே நிறைவுறும்.

ஒவ்வொரு நாளும் கூட்டம் அதிகரித்த வண்ணம் தான் இருக்கும். அங்கு நிறைய பாடல்கள் அறங்கேறும். சாதி மத பேதமின்றி அனைவரும் அங்கு வருபவர் எல்லோரிடமும் ஒரு வித உற்சாகமும், சந்தோஷமும் பீறிட்டு பொங்கி வழியும். உண்மையான சமதர்மம் அங்கு ஓங்கியிருக்கும்.  ஆன்மீகம், ஆண்டவன் என்பதற்கான ஒரு புதிய  அல்லது உண்மையான வடிவம் அங்கு கட்டமைக்கப்படும்.

சாமான்யனின் திறமைகள் அங்கு வெளிக்கொணரப்படும், தாழ்வு மனப்பான்மைகள் அகற்றப்படும், என் தமிழ் அங்கு கொலு வீற்றிருக்கும்.

தி. ராமலிங்கம் என்கிற திரா சார் அவர்களே, உங்கள் உடலை மட்டும் தான் காலம் கொண்டு போக முடியும், உங்கள் நினைவுகளை, உங்கள் உணர்வுகளை, நீங்கள் விதைத்து வளர்ந்திருக்கும் எண்ணற்ற விருட்சங்களை என்றைக்கும் அழிக்க முடியாது,

நன்றிகள் திரா சார்!!!


Saturday, October 13, 2012

லாரி டிரைவர்

கணினித் துறை, ஆட்டோ மொபைல் துறை, சிறு தொழில் துறை, போலீஸ் துறை இத்தியாதிகள் என்று அனைத்தையும் பற்றி தினமும் செய்தித் தாள்கள், வார சஞ்சிகைகள் படிக்கும் பழக்கம் உள்ள அனைவருக்குமே ஓரளவிற்கு அத்துப்படி தான்.

இப்படி பொதுவான சில பல துறைகள் தவிர்த்து, நாம் படித்து அறிந்து கொள்ள இயலாததும், நம் கருத்துக்கு எட்டாததுமான பல முக்கிய தொழில் துறைகளும் அது சார்ந்த முதலாளிகளும் தொழிலாளிகளும் நடைமுறையில் இருப்பது பலராலும் ஊகிக்க முடியாதது தான்.

நம் தமிழகத்திலிருந்து தொலை தூர மாநிலங்களுக்கும், அங்கிருந்து தமிழகத்திற்கும் பலவித சரக்குகளை பறிமாற்றம் செய்யும் லாரி போக்குவரத்துத் தொழில் ரொம்பவே சுவாரஸ்யமானதும், கொஞ்சம் கரடு முரடானதும்.....  அத்துடன் நாமெல்லாம் அதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அளவிற்கு மிக மிக அத்தியாவசியமானதும் கூட!

கடந்த 30 ஆண்டுகளில் தமிழகத்தின் அரிசி உற்பத்தியானது விளை நிலங்கள் பட்டாவாகிப் போனதால், படிப்படியாக குறைய ஆரம்பிக்க, தமிழர்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய அண்டை மாநிலங்களான ஆந்திராவும், கர்நாடகாவும் தான் பெரிதும் அபயமளித்தன.

தமிழகத்தில் வேகமாக வீழ்ந்து வரும் அரிசி உற்பத்தியும், மக்கள் தொகை வளர்ச்சிக்கு நிகரான அதன் தேவை வளர்ச்சியும் ஆந்திரா, கர்நாடகாவையும் தாண்டி வட மாநிலங்களை நோக்கி நம்மைக் கையேந்த வைத்திருக்கின்றன.

அந்த வகையில் நம் தமிழர்களின் முக்கிய உணவான அரிசித் தேவைக்கு படியளக்கும் பங்காளியாக தற்பொழுது உருவெடுத்திருப்பவர்கள் வங்காளிகளே! உண்மை தான், நம் தமிழகத்தின் அரிசி உணவுத் தேவையின் ஒரு குறிப்பிடத்தக்க சதவிகிதத்தை மேற்கு வங்கம் தான் சமீப காலமாக பூர்த்தி செய்து வருகிறது.

அப்படி மேற்கு வங்காளத்திலிருந்து தமிழக டெல்ட்டா மக்களின் பசியைப் போக்க அரிசி ஏற்றிக் கொண்டு வரும் லாரிகளையும், அதன் ஓட்டுனர்களையும் நெருங்கி உற்று நோக்கினால், தமிழகத்தின் அதி அத்தியாவசியமான துறை ஒன்றைப் பற்றிய பல ஆச்சர்யமான அனுபவங்கள் தெரிய வரும்.

20 டன் வரையிலும் லோடு ஏற்றக் கூடிய டாரஸ் வகை பத்து சக்கர லாரிகள் தான் இந்த தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றன. மவராசன் வாஜ்பாய் புண்ணியத்தால் கல்கத்தாவும் சென்னையும் தங்கநாற்கரச் சாலை மூலம் இணைக்கப் பட்டிருப்பது தான் இன்றளவிலும் இந்தத் தொழில் நசிந்து விடாமல் நடந்து கொண்டிருக்க முக்கிய காரணம் என்றால் அது மிகையில்லை.

தமிழகத்தின் ஒரு லாரி உரிமையாளர் இதேப் போன்று இரண்டு லாரிகள் வைத்திருந்தால் போதும், வருமானம் வருகிறதோ இல்லையோ பிரஷ்ஷர், சுகர், மாரடைப்பு போன்ற வியாதிகள் கேரண்டியுடன் வந்து சேர்ந்து விடும்!

ஒரு லாரி மாதத்திற்கு நான்கு சிங்கிள்கள் அடித்தாலே பெரிய விஷயம். (ஒரு சிங்கிள் = ஒரு அப் அல்லது ஒரு டவுன்).ஏதேதோ கணக்குப் போட்டு ஒரு சிங்கிளுக்கு 57 ஆயிரம் ரூபாய் வாடகை என்று நிர்ணயித்திருக்கிறார்கள். இதில் டீசல், டிரைவர் படி, செக் போஸ்ட் மாமூல் போக ஏழாயிரம் ரூபாய் நிகர லாபமாக கிடைக்கும்.

நாலு சிங்கிள் ஓடினால் ஒரு லாரிக்கு 28 ஆயிரம் ரூபாய் வரையிலும் கிடைக்கும். இதில் தான் லாரிக்கான வங்கி மாதத்தவணை உட்பட, வண்டி பழுது பார்க்கும் செலவுகள் வரை அனைத்தினையும் முடித்துக் கொண்டு தங்கள் லாபத்தையும் பார்க்க வேண்டும்.

இது எப்படி சாத்தியம்?

வங்கிக் கடனில் தான் லாரி ஓடுகிறது என்றால், நிச்சயமாக இதை விற்பவருக்கும், வாங்குபவருக்குமான சேவைத் தொழிலாக மட்டுமே நடத்த முடியும்! ஆகையால் கடன் இல்லாமல் சொந்த முதலைப் போட்டு லாரி வாங்கி ஓட்டினால் தான் லாபம் என்ற வஸ்த்துவை மாதா மாதம் கண்களில் பார்க்க முடியும்.

இதுல வருடத்திற்கு ஒரு முறை வரும் இன்ஷ்யூரன்ஸ், எஃப் சி எடுக்கும் செலவெல்லாம் தனி. ஒரு சில மாதங்களில் எக்ஸ்ட்ரா சிங்கிள் ஓட்டி சரிக்கட்டிக்க வேண்டியது தான் இதையெல்லாம்.

இந்தத் துறையில் லாரிகளை ஓட்டிச் செல்லும் ஓட்டுநர்களின் முக்கியத்துவம் அளப்பறியது. ஒரு வண்டிக்கு இரண்டு டிரைவர்கள். கிளீனர் வைத்துக் கொள்வதெல்லாம் பழைய ஸ்டைல். அதற்கான ஆட்களும் இப்பொழுது வருவதில்லை. 2500 கிமீ ஒரு சிங்கிளுக்கு ஓட்ட இரண்டு அனுபவமுள்ள ஓட்டுநர்கள் இருந்தால் தான் சரிப்பட்டு வரும்.

ஒரு அப் & டவுன் அதாவது இரண்டு சிங்கிள் போய் வந்தால் அவர்களுடைய சாப்பாடு உட்பட அனைத்து செலவுகளும் போக ஆளுக்கு எட்டாயிரம் ரூபாய் வரையிலும் கிடைக்கும். அதற்கு கிட்டத்தட்ட பன்னிரெண்டிலிருந்து பதினைந்து நாட்கள் வரையிலும் ஆகும்.

ரோட்டோரக் கடைகளில் வாங்கிச் சாப்பிட்டால் கட்டுப்படியாகாது என்று இவர்களே சமைத்துக் கொள்கிறார்கள். வண்டியிலேயே மண்ணென்ணை ஸ்டவ், சமையல் சாமான்கள், மற்ற உப்பு,  எண்ணெய், மசாலாப் பொடிகள், அரிசி அனைத்தையும் கொண்டு சென்று விடுகின்றார்கள்.

ஓட்டுனர் அறையிலேயே ஒரு ரேக் அடித்து அனைத்தையும் சேகரித்து வைத்து விடுகின்றனர். வழியில் இருக்கின்ற கடைகளில் ஆட்டிறைச்சி, குடல் அல்லது கோழி இறைச்சியை வாங்கியவுடன், வண்டி ஓடிக் கொண்டிருக்கும் போதே இன்னொரு டிரைவர் காற்கறி நறுக்க ஆரம்பித்து விடுகிறார். அடுத்து வரும் நல்ல நிழலான ரோட்டோரத்தில் லாரியை நிறுத்தி விட்டு, ஸ்டவ்வில் குக்கர் வைத்து சாதம் சமைத்து, காய்கறி, இறைச்சியெல்லாம் போட்டு ஒரே குழம்பாக வைத்து விடுகின்றார்கள்.

வழியில் தயிர் பாக்கெட் வாங்கிக் கொண்டால், விருந்து சாப்பாடு தான். அதையே இரண்டு வேளைகளுக்கும் வைத்துக் கொள்கிறார்கள். மழை பெய்தால் கூட, லாரியின் பக்க கதவை கழட்டி விட்டு அடிக்கட்டையை குறுக்கே வெளியில் நீட்டிக் கொண்டிருக்கும் படி வைத்து அதன் மேல் ஸ்டவ் வைத்து சமைத்து விடுவார்களாம்!

இரண்டு மூன்று மாதங்கள் தொடர்ந்து வண்டியிலேயே இருந்து, ஐம்பதாயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரை சேர்த்துக் கொண்டு இறங்கி, வெளி நாடு சென்று வருவது போல வீட்டுக்கு வந்து ஓரிரு மாதங்கள் தங்கி பிறகு வண்டியேறும் ரகத்தினர் தான் அதிகம் இருக்கின்றார்கள்.

இவர்களுக்குள்ள முக்கிய பிரச்சினையாக வழிப்பறியைத் தான் அதிகம் சொல்கின்றார்கள். பல வழிப்பறிகளில் வெட்டுக் குத்து காயம், கை, கால் இழப்பு என்பதோடு போய் விடும். சில சம்பவங்களில் உயிரிழப்பு கூட ஏற்படுவதுண்டு. இது பொதுவாக எல்லா மாநில ஓட்டுனர்களுக்குமே உள்ள பிரச்சினையாகத் தான் இருக்கின்றது.

உயிரிழப்பு ஏற்படுகின்ற போது உடலை தமிழகம் கொண்டு வருவதில் நிறை செலவு பிடிக்கும் நடைமுறைகள் இருக்கின்றன. அதனால் அந்த லாரி உரிமையாளர் சம்பந்தப்பட்ட ஓட்டுனரின் குடும்பத்தில் பேசி ஒரு லட்சம் வரை பணம் கொடுத்து அங்கேயே அடக்கம் செய்து விடுவதும் நடக்கிறது. 

பெரும்பாலான வியாபாரிகள் சரக்கு டெலிவரி செய்யும் இடத்திலிருந்து ரொக்கமாக வாங்கிவரச் சொல்வது தான் பிரச்சினைக்கு முக்கிய காரணமே! சரக்கு வாங்குபவரை வங்கியில் பணத்தைக் கட்டச் சொல்லலாமே என்று கேட்டால், பேங்க் காரன் டியூ பணத்தை கழித்து விடுவான் அதனால் தான் ரொக்கமாக எடுத்துவரச் சொல்கிறார்கள் என்று அவர்கள் சொல்லும் போது, இந்த தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களின் அடி நாதமான பிரச்சினை பளீர் என மூளையில் தைத்து மனதை கொஞ்சம் பிழியத்தான் செய்கிறது.

இது கூடப் பரவாயில்லை, இதையும் மீறி இந்த வேலையை விரும்பித்தான் செய்கிறோம் என்று ஓட்டுனர்கள் சொல்லும் போது அவர்கள் மேல் ஒரு வித மரியாதை தான் ஏற்படுகிறது.

ஆனால் அவர்கள் சொல்லும் இன்னொரு விஷயம், இந்தத் தொழில் மெல்ல நசிந்து வருவதையும், இன்னும் பத்து வருடங்களுக்குள் இதற்கான மாற்று வழியை பற்றிக் கொள்ள வேண்டியிருப்பதன் அத்தியாவசியத்தையும் நமக்கு உணர வைக்கின்றது.

புதிதாக் இந்த வேளைக்கு இளைஞர்கள் வருவது வெகுவாக குறைந்து போய் விட்டது என்பது தான் அந்த விஷயம். காரணம் கேட்டால், யாரும் பெண் கொடுக்க முன்வர மறுக்கிறார்கள் என்பதாகத் தான் இருக்கிறது. 

சார், எனக்கு பல இடத்துல பொண்ணு பார்த்து எல்லாமே தட்டி போயிடிச்சி சார். நானும் எனக்கு கல்யாணமே வேண்டாம் என்று பிடிவாதமா மறுத்துட்டேன் சார். ஆனா எங்க அப்பன் ஆத்தா தான் புடிவாதமா இந்த ராணிய புடிச்சி என் தலையில கட்டி வச்சிட்டாங்க. அதுக்கே அந்த வியாதி இருக்கா? இந்த வியாதி இருக்கான்ன்னு ஆயிரத்தெட்டு டெஸ்ட்டு எடுத்து தான் ஒத்துக்கிட்டாங்க சார்.....

அந்தக் காலத்துலேர்ந்து, இந்த சினிமாக் காரனும், கதை எழுதறவனும் எங்களப் பத்தி ஒரு மாதிரியா காட்டிக் காட்டியே, கெடுத்து வச்சிட்டனுங்க சார். நூத்துக்கு பத்து இருவது பேரு தான் அப்பிடி இப்பிடி இருப்பாங்க, பாக்கி எல்லாருமே இது மாதிரி வாய வயித்த கட்டி வூட்டுக்கு தான் சான் கொண்டு போயி கொட்டுறான். அதப் பத்தி ஒருத்தனுமே படம் எடுத்து காட்ட மாட்டேங்குறான் சார்......

என்று ஒரு ஓட்டுனர் தனது மனக் குமுறலைக் கொட்டுகின்ற போது ஏற்படுகின்ற அந்த வலி, திரைப் பட இயக்குனர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் இந்த சமூக கட்டமைப்பில் இருக்கின்ற பங்களிப்பும், அதை அவர்கள் எவ்வளவு பொறுப்பில்லாமல் சிதைத்துப் போடுகிறார்கள் என்ற கோபமும் தான் தலைக்கேறுகிறது.

எந்தத் துறையில் தான் அந்த 20 சதவிகித விதிவிலக்குகள் இல்லாமல் இருக்கின்றார்கள் என்று நம் மனது தானாவே கேட்டுக்கொள்வதையும் நம்மால் தடுக்க இயலவில்லை!

இந்தத் துறையைப் பொறுத்த வரை லாரி உரிமையாளர்களுக்கும்-ஓட்டுனர்களுக்கும், அதாவது முதலாளிக்கும், தொழிலாளிக்கும் ஒரே அளவிலான லாபமும், நட்டமும்; இன்பமும், துன்பமும் இருப்பதை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. வண்டி தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்தால் தான் இருவருக்குமே பிழைப்பு. அதையும் தாண்டி, பொருளாதார ரீதியிலாக மட்டுமல்லாமல் உயிர் வரையிலும் பந்தயம் வைக்க வேண்டியிருக்கிறது.

இந்தத் தொழில் சிறப்பான வளர்ச்சியுடன் நடை பெற்றுக் கொண்டிருந்தால் தான், அரிசிச் சோற்றுக்காக வட மாநிலங்களை அன்னாந்து பார்க்க வேண்டிய சூழலில் சிக்கியிருக்கின்ற நாம், வரும் காலங்களில் அரிசிச் சோற்றை தினமும் உண்ண முடியும், இல்லாவிட்டால், பழைய காலம் மாதிரி தீபாவளி, பொங்கலுக்கு மட்டுமே பணியாரம் போல இட்லி, தோசையை உண்ணுகின்ற நிலைமைக்கு வந்து விட வேண்டியது தான்!

காலச்சக்கரம் நம்மை மீண்டும் அங்கு கொண்டு சென்று விடும் என்றே தோன்றுகிறது!!



Friday, October 12, 2012

வறண்ட வாழ்க்கை....! இருண்ட தமிழகம்.....!

கடந்த நான்கு மணி நேரத்திற்குப் பிறகு இப்பொழுது தான் கரண்ட் வந்திருக்கு. இன்னும் ஒரு மணி நேரத்தில் மீண்டும் போய்விடும்(((  ஒரு நாளின் 24 மணி நேரத்தில் வெறும் 6 லிருந்து 8 மணி நேரம் மட்டுமே மின்சாரம் இருக்கிறது.

இது தான் சென்னையைத் தவிர்த்த தமிழகத்தின் இன்றைய நிலை....

சிறு குறு தொழில் செய்வோர்கள், வணிகர்கள், சேவைத் தொழிலில் ஈடுபட்டிருப்போர், இங்கெல்லாம் வேலை செய்வோர் என்று அனைவர் மனங்களிலும் ஒரு விதமான பயம் தொற்றிக் கொள்ள ஆரம்பித்து விட்டதை கண்கூடாக காண முடிகிறது.

மின்சார துறையினரிடம் பேசும் போது நம்பிக்கையான பதில் அவர்களிடமிருந்து வராததே அனைவரின் இந்த பயத்திற்கும் காரணம்.

அரசும் அதன் தலைமையும் இது பற்றி வாயே திறக்காமல் இருப்பது மட்டுமல்லாமல், இப்படி ஒரு பிரச்சினை இல்லவே இல்லை என்பது போல வேறு வேறு விஷயங்கள் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதும், மக்கள் சுபிட்சமாக இருப்பது போல பேட்டி அளிப்பதும்.... மக்களை இன்னும் பெரிய அளவில், தங்கள்  நடைமுறை வாழ்க்கையை எதிர் கொள்வது பற்றி அச்சப்பட வைத்திருக்கின்றது.

சில பல லட்சங்கள் முதலீட்டில் சிறு தொழில் செய்பவர்கள் பத்திலிருந்து ஐம்பது ஊழியர்கள் வரை பணியிலமர்த்தி பொருட்களை உற்பத்தி செய்கின்றார்கள். பகல் வேலை நேரத்தில் பெரும்பாலும் வெறும் இரண்டு மணி நேரம் மட்டுமே மின்சாரம் இருப்பதால், நான்கில் ஒரு பங்கு உற்பத்தியைக் கூட இவர்களால் முழுமையாக செய்ய முடிவதில்லை.

அதனால் மூன்று பங்கு ஊழியர்களின் ஊதியமானது நட்டமாக வந்து தலையில் இடிபோல் இறங்குகின்றது. அதனால் பெரும்பாலான சிறு குறு தொழிற்சாலைகளில் பாதி அளவிற்கு மேல் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் முடிவு எடுக்கப்பட்டுக் கொண்டு அது செயல் முறைக்கும் வந்து விட்டது.

அப்படி வேலையிழப்பவர்களின் நிலைமையை எழுத வேண்டுமானால், பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டே போகலாம், ஆனால் அது நிமித்தம் மிக விரைவில் பெரிய புரட்சி வெடிப்பதற்கான சூழ்நிலையை அரசும் அதன் ஊடகங்களும் எவ்வளவு பெரிய திரை போட்டு மறைத்தாலும் தடுக்க முடியாது.

ஊழியர் எண்ணிக்கையைக் குறைத்து விட்டதால் அந்த குறு தொழில்கள் லாபமீட்டுகின்றனவா? என்றால் அதெல்லாம் இல்லை என்பதே பதில். பெரிய நட்டம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. அவ்வளவே!

எந்த ஒரு நல்ல லாபம் ஈட்டும் நிறுவனத்திற்குமே உற்பத்தி அல்லது விற்பனையில் கால்பாகம் குறைந்தாலே பிரேக் ஈவன் எனப்படும் லாப-நட்டமில்லாத அந்த நிலைக்குக் கீழே சென்றுவிடும் அபாயம் இருக்கிறது. ஆனால் இப்பொழுது உற்பத்தி வெறும் கால்பாகத்திற்கு சுறுங்கி விட்டதால், பெரும் நட்டம் என்ற நிலைக்கு இந்த நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.

இந்த நட்டத்தோடு இவர்கள் இன்னமும் தொழிலை மூடிவிட்டு ஓடாததன் காரணமென்ன?

ரொம்ப சிம்ப்பிள். இவர்கள் அனைவருமே புலி மேல் சவாரி செய்பவர்கள் தான்! வங்கிக் கடன், கொள்முதல் கடன், வரவேண்டிய பாக்கி, தன் குடும்பச் செலவுகள், பிள்ளைகளின் எதிர்காலம், மானம், மரியாதை என்று அனைத்துமே ஒரு புலியாக இந்த நிறுவனத்தின் வளர்ச்சி என்ற வடிவிலேயே இருக்கிறது.

அதை விட்டு இறங்கினால் அத்தனையும் கடித்துக் குதறிவிடும் அபாயம் மிகத் தெளிவாக இருக்கிறது. அதனால் இயன்ற வரை மூச்சைப் பிடித்து தாக்குப் பிடிக்க முயன்று கொண்டிருக்கின்றார்கள். இதற்கு ஒரு விடிவு காலம் வராதா? என்று நம்பிக்கையோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

சேமிப்புகள் இருக்கும் வரையில் சமாளித்துப் பார்த்து விடுவது. அடுத்ததாக தங்கம் இருக்கின்ற வரை தற்காத்துக் கொள்வது என்ற முடிவில் இருக்கின்றார்கள். 

இந்த நிலையில் தான் அரசின் பாரா முகமும், தங்களுக்காக குரல் கொடுக்க  கூட முன் வராமல் அரசின் அராஜகப் போக்கால், நமக்கெதற்கு வம்பு என்று எதிர்க்கட்சிகள் பயந்து பதுங்கும் சூழ்நிலையும், இவர்களை ஒரு வித அச்ச உணர்வுக்கு கொண்டு சென்றுள்ளது.

இப்படி சிறு குறு தொழில் செய்பவர்கள் நிலையாவது பரவாயில்லை. இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒப்பேற்றி விடுவார்கள். ஆனால் ஓரிரு வேலை ஆட்களை வைத்துக் கொண்டு, சில்லரை வர்த்தகத்திலும், சேவை வணிகத்திலும், விற்பனை வணிகத்திலும் ஈடுபட்டிருக்கும் பல லட்சம் தொழில்முனைவோரின் கதியும் அதோ கதிதான்! 

ஏனென்றால் அவர்களால் மாத வாடகையே முழு வியாபாரமும் நடை பெற்றால் தான் தர முடியும் என்ற நிலையில் தான் வரவு செலவும் இருக்கும். தினமும் 300 ரூபாயாவது வீட்டிற்கு எடுத்துச் சென்றால் தான் குடும்பம் சந்தோஷமாக வாழ முடியும். தினம் கூலி கொடுத்தால் தான் வேலையாள் அடுத்த நாள் வேலைக்கு வருவான்!

இந்த மாதிரி மின் தடை இன்னும் ஒரு மாதம் தொடர்ந்தாலே இவர்கள் கதையெல்லாம் கந்தையாகிவிடும்.

மாற்றம் வேண்டும் மாற்றம் வேண்டும் என்று தான் வாக்களித்தார்கள் இந்த மக்கள்......

உண்மையிலேயே இது மிகப் பெரிய மாற்றம் தான். தற்பொழுது 60 வயதுக்குள்ளாக இருக்கும் தமிழக தமிழர்கள் எவரும் கண்டிராத பெரிய மாற்றம் இப்பொழுது ஏற்பட்டிருக்கிறது.....

வறண்ட வாழ்க்கை....!   இருண்ட தமிழகம்.....!

Tuesday, October 9, 2012

விமர்சனம் மாதிரி...!!


கடுமையான மின் தடையோடு போராடி கடந்த மூன்று நாட்களில் சுந்தர பாண்டியன் படத்தை குடும்பத்துடன் சேர்ந்து பார்த்து முடித்தேன்.

இப்பல்லாம் இந்த மாதிரி லைட் மைண்டட் படங்கள் தான் ரொம்ப பிடிக்குது. அந்தக்கால கார்த்திக்-பிரபு  படங்களிலிருந்து 50 சதவிகிதமும், ராமராஜன் படங்களிலிருந்து 25 சதவிகிதமும், ஆர். சுந்தர்ராஜன் - ரங்கராஜ் படங்களிலிருந்து 25 சதவிகிதமும் கலந்த ஒரு கலவையாக இந்தப் படம் வந்திருக்கின்றது.

பாடல்கள் மட்டும் ஹிட் ஆகியிருந்தால் இந்த வருடத்திய சூப்பர் டூப்பர் ஹிட் படமாக இது அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. சசிகுமார் சம்பந்தப்பட்ட படங்களில் இருக்கின்ற வக்கிர காட்சிகளில் பாதி கூட இதில் இல்லை என்றாலும், இருப்பதையே இன்னும் கொஞ்சம் குறைத்திருந்தால், பார்வையாளர்களுக்கு இந்தப் படம் இன்னும் கொஞ்சம் சந்தோஷத்தைக் கூடுதலாக கொடுத்திருந்திருக்கும்.

ஒரு குடும்பத்தில் தாத்தா-பாட்டி, தாய்-தந்தை, பேரன் - பேத்திகள் சேர்ந்து உட்கார்ந்து பார்க்கின்ற படங்கள் தான் வெள்ளித் திரையில் வெள்ளி விழா காண்கின்றன. இந்த ஃபார்முலா ஏன் எந்த டைரக்டருக்கும் தெரியவில்லை என்றே புரிய மாட்டேன் என்கிறது.

குடும்பத்துடன் படம் பார்க்கக் கூடியவர்கள் எதை எதிர்பார்க்கின்றார்கள்? முதலில் மிகத் தெளிவான ஒரு கதை. பார்க்கும் போது மனதை அதிகமாக பாதிக்க வைக்காத வக்கிரக் காட்சிகள் மற்றும் சோகங்கள். அடுத்ததாக படம் நெடுகிலும் (திணிக்கப்படாத) கதையின் முக்கிய கதா பாத்திரங்களோடு பின்னி பிணையப்பட்ட இயல்பான நகைச்சுவை. கண்களையும், காதுகளையும் படுத்தி எடுக்காத ஒளி, ஒலிச் சேர்க்கை இல்லாத ரம்மியமான பாடல் காட்சியமைப்புகள்.

பாடல் காட்சிகளின் போது அழகான நாயகன் - நாயகியின் தெளிவான முக பாவனைகளைக் காட்டும் குளோசப் காட்சிகள். படம் ரிலீஸுக்கு முன்பே நன்கு ஹிட் ஆன பாடல்கள்.

ஓரிரு செண்டிமெண்ட் காட்சிகள், நறுக்குத் தெரித்த வசனங்கள். தேவையெனில் வக்கிரமில்லாத சண்டைக் காட்சிகள்......

அவ்வளவு தான்! மேற் சொன்னவற்றில் 60 சதவிகிதத்தைக் கடந்து விட்டார் சுந்தர பாண்டியன். இன்னும் ஒரு 20 சதவிகிதத்திற்கு முக்கியிருந்தால் இந்த வருடத்தில் வெள்ளித்திரை வெள்ளிவிழாவை இந்தப் படம் கொண்டாடியிருக்கும் என்பது என் எண்ணம்.

Tuesday, September 11, 2012

கூடங்குளம், சிங்களர் கார்ட்டூன், இன்னபிறவும்... மக்கள் மனநிலையும்.



இணையத்தை திறந்து மற்ற சொந்த வேலைகளை எல்லாம் முடித்த பின்பு, பொழுது போக்கிற்கான வெட்டி அரட்டை வேண்டி சமூக வலைத்தளங்களுக்குள் நுழைந்தாலே, நாட்டின் அன்றாட பிரச்சினைகள் குறித்து வெட்டுக் குத்து விவாதங்கள் தான் களை கட்டுகின்றன.

இப்போ சமீபமாக களை கட்டியிருக்கும் இரு பிரச்சினைகள் கூடங்குளமும், தமிழக முதல்வரையும், இந்திய பிரதமரையும் இழிவு படுத்தி சிங்கள பத்திரிகை ஒன்று  வெளியிட்டிருக்கும் கேலிச்சித்திரமும் தான்!

இதேப் போன்று எந்தப் பிரச்சினையானாலும், இணைய இளைஞர்களில் மிகக் குறைந்த சதவிகிதத்தைச் சேர்ந்தவர்களுக்கே, இரு எதிர்நிலைக் கருத்துக்களில் ஏதோ ஒன்றினை வலுவாக ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ பேசக்கூடிய ஆற்றலும் துணிச்சலும் இருக்கிறது.

இதில் பெரும்பாலான சதவிகிதத்தினர், மெஜாரிட்டி எந்தப் பக்கமோ அந்த ஸ்டாண்டை எடுத்து விடுகின்றனர். இது கூட பரவாயில்லை, ஒரு குறிப்பிட்ட சதவிகித இளைஞர்களுக்கு என்ன ஸ்டாண்டு எடுப்பது என்பதிலேயே குழப்பம் அதிகமிருப்பது தான் வேடிக்கையின் உச்சம்!

ஆனால் இது மாதிரியாக இணையத்தில் சூடாக விவாதிக்கப்பட்டு தீர்ப்பெழுதப்படும் பல விடயங்களில் பொது மக்களின் கருத்து என்ன மாதிரியாய் இருக்கின்றது என்று பார்த்தோமானால் நமக்கு மிகப் பெரிய ஆச்சர்யமே பதிலாக காத்திருக்கிறது.

கூடங்குளம் பிரச்சினையைப் பொருத்தவரை நான் சந்தித்தித்த அத்தனைப் பேரின் நிலைப்பாடும், போராட்டக் காரர்களுக்கு எதிரானதாகவே இருக்கிறது. அவர்களில் பெரும்பாலானோருக்கு  பகல் இரவு என்று பாராமல் கண்ட நேரங்களில் ஒரு நாளைக்கு 8 மணி நேரத்திற்கும் அதிகமாக ஏற்படும் மின் தடை மிகப்பெரிய சங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதை கண்கூடாகக் காண முடிகின்றது.
சாதாரணமாக இது போன்ற விடயங்களில் அரசுக்கு எதிராக கம்யூனிச சிந்தனையுடன் போராட்டக் காரர்களுக்கு ஆதரவாகப் பேசக் கூடியவர்கள் கூட, “சார், இன்னிக்கு வீட்டை விட்டு கீழ இறங்குறவங்க, உசிரோட வீடு திரும்பறதுக்கு என்ன சார் உத்தரவாதம் இருக்கு? பஸ்ஸுலயோ, ரயிலிலோ போனால் கூடத்தான் விபத்து ஏற்பட்டு சாகுறாங்க, அதனால அதுல போகாம இருக்கோமா? அது மாதிரி தான் அணு உலையையும் எடுத்துக்கனும்”. என்று பக்காவாக லாஜிக் பேசுகிறார்கள்.

அரசு இவ்விஷயத்தில் மிகவும் மெத்தனமாக செயல்படுவதாகவும் சிலர் கூறுவதைக் கேட்டால் அதிர்ச்சியாகத் தான் இருக்கின்றது. அதேசமயம் மிகப் பெரும்பான்மையான மக்களின் கருத்துக்களை ஒதுக்கித் தள்ளிவிடவும் முடியாது.

மேலும் இவ்விஷயத்தில் போராட்டக் காரர்களுக்கு ஆதரவாக இணையத்தில் ஆவேசமாக எழுதுகின்ற பெரும்பாலானோரைப் பார்த்தால் அவர்கள் வெளி நாடுகளில் பல வருடங்களாக தங்கள் குடும்பத்தோடு செட்டில் ஆனவர்களாகத் தான் இருக்கின்றார்கள்.

அளவுக்கு அதிகமான மின் தடையால் தான் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசியும் ஏறியிருப்பதாக மக்கள் நம்புகின்றார்கள். அதனால் தான் விவசாயம் தடைபட்டதாகவும் வாதிடுகின்றனர். விலைவாசி ஏற்றம் மிகப் பெரிய அளவில் மக்களை கோபப்படுத்தியிருப்பதை கண்கூடாகக் காண முடிகிறது.
                                                                                                                      
கூடங்குளத்திலிருந்து மின்சாரம் வந்தால், மின் தடை நேரம் பெருமளவில் குறையும் என்றும் நம்புகின்றார்கள். என்னைக் கேட்டால், கூடங்குளத்து போராட்டக் காரர்களின் ஆவேசத்துக்கு நிகரானதொரு பெருங்கோபம் நீரு பூத்த நெருப்பாய் பொது மக்களிடமும் மேற் சொன்ன காரணங்களுக்காக ஏற்பட்டிருப்பதையும் மறுப்பதற்கில்லை.

இதேப் போன்று தான் சிங்கள பத்திரிகையின் கேலிச் சித்திரம் பற்றி பெரும்பான்மையான பொது மக்களுக்கு தெரிந்திருக்கவே இல்லை. அது பற்றி அறிந்திருந்த ஒரு சிலரும், அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. “சாமி கும்புட வந்தவன துரத்தியடிச்சா அவன் படம் போட்டுத் தான் காறித் துப்புவான்” என்று சர்வ சாதாரணமாகச் சொல்கின்றார்கள்.

ஆனால் இணையப் போராளிகளைப் பொருத்தவரை இதில் நகை முரண் என்னவென்றால், எதற்கெடுத்தாலும் சுற்றி வளைத்து ஜெயலலிதவை ஆதரிக்கின்றவர்களும், அப்படி முடியாதபட்சத்தில் அதில் கலைஞரை சம்பந்தப்படுத்தி அவரை திட்டித் தீர்ப்பவர்களும், சிங்கள கேலிச் சித்திரத்திற்கு எதிராக பொங்கித் தீர்த்தவர்களும், இடிந்தகரை மக்களுக்கு ஆதரவாக பொங்கும் பொழுது நாசுக்காக ஜெயலலிதாவை நகர்த்தி வைத்து விட்டு போலீஸ்காரர்களை மட்டும் கண்டமேனிக்கு திட்டித் தீர்க்கின்றார்கள்.

என்னே ஒரு நடுவுநிலை இவர்களது?!

Monday, September 10, 2012

லக்பிமாவாவது இந்தியாவை திருத்துமா?!



கொஞ்சம் வெறுப்பு வரத்தான் செய்கிறது அந்த கார்டூனைப் பார்த்தால். “லக்பிமா” என்னும் சிங்களப் பத்திரிகையில் தான் அது வந்திருக்கின்றது. அந்த பத்திரிகையின் முதலாளி ராஜபக்‌ஷே அரசில் ஒரு மந்திரி என்றும் சொல்கிறார்கள்.

நமது தமிழக முதல்வரையும், இந்திய பிரதமரையும் ஒரு சேர, உடற்மொழி ரீதியாக மிக அசிங்கமாக சித்தரித்து கேலிச் சித்திரம் வரைந்து வெளியிட்டிருக்கின்றார்கள்.
விளையாடுவதற்காகவும், புனித யாத்திரைக்காவும் தமிழகம் வந்த சிங்களவர்கள் சிலரை திருப்பி அனுப்பிய தமிழக அரசின் செயலுக்கு எதிர்வினையாகத் தான் இந்த கேலிச்சித்திரத்தை அவர்கள் வெளியிட்டிருக்கக் கூடும்.

தமிழக அரசின் அந்தச் செயலுக்கான ஒரு எதிர் வினையை நாம் நிச்சயமாக எதிர்கொள்ளத் தான் வேண்டும். ஆனால் ஒரு நாட்டின் எதிர்வினை என்பது குறிப்பிட்ட வரைமுறைக்குள் தான் இருக்க வேண்டும் என்பதை விட நிச்சயமாக ஒரு நெறிமுறைக்குள் கட்டுப்பட்டிருக்க வேண்டும் என்பதை உண்மையான நடுநிலையாளர்கள் யாரும் மறுக்க முடியாது.

சரி, தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவ்வப்பொழுது தமிழுணர்வாளர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பதும், அதன் ஒரு எல்லையாக சிங்களர்களை துரத்தியடித்ததும் சிங்கள அரசை கோபப்பட வைத்திருப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிந்த அதே சமயத்தில்......

40 பாராளுமன்ற தொகுதிகளைக் கொண்ட தமிழகம் மற்றும் புதுவை மக்களின் விருப்பத்திற்கு மாறாக இலங்கை அரசின் விடுதலைப் புலிகளுக்கு எதிரான விதி மீறலுடன் கூடிய போர் என்ற பயங்கரவாதத்தை (லட்சக் கணக்கான சிவிலியன்கள் கொள்ளப்படுவதை போர் என்று ஏற்றுக் கொள்ள இயலாது. அது பயங்கரவாதம் தான்) அமைதியாக வேடிக்கைப் பார்த்ததுமின்றி, ஆதரவும் நல்கிய மன்மோகன் சிங் அரசு செய்த, துரோகத்துக்கு துணை போன செயலை மறந்து விட்டு அவரையும் அசிங்கப்படுத்தி கேலிச் சித்திரம் வரைந்திருப்பதின் காரணம் தான் என்ன?

உலக அளவில் இதை உற்று நோக்கினால், ஒரு பெரிய நாட்டின் சக்தி வாய்ந்த அதிகாரம் மிக்கவர் மற்றும் ஆட்சித் தலைவரை அதே நாட்டின் ஒரு மாகாண பெண் ஆட்சியாளரோடு உடற்மொழி ரீதியாக மிக கேவலமாக, அருகாமை நாட்டின் முழு அரசு ஆதரவு பெற்ற பத்திரிகையில் கேலிச் சித்திரம் வெளியிட்டிருப்பது எதைக் காட்டுகிறது?

அந்த நாட்டை தனது எதிரி நாடாக பிரகடனப் படுத்துகிறது என்று தான் அர்த்தம் கொள்ள வேண்டும். 

இவ் விடயத்தைக் கொண்டு, அதிமுகவின் தலைவி செல்வி ஜெயலலிதா தமிழ் ஈழ விஷயத்தில் அதிகம் ஸ்கோர் செய்து விடுவார் என்றெல்லாம் எண்ணி, என்னுடைய கருத்தை வெளிப்படையாக தெரிவிக்காமல் இருக்க முடியவில்லை.

இதை முதலில் ஒரு தமிழ் நாட்டுத் தமிழனாகவும், அடுத்தபடியாக ஒரு இந்தியனாகவும் தான் அணுக வேண்டும் என்பது என் நிலைப்பாடு.  நம் தமிழக முதல்வர் அதுவும் ஒரு பெண்ணை பின்னால் இருந்து தாக்குவது போல் கோழைத் தனமாக நான்காம் தர மஞ்சள் பத்திரிகையின் எண்ண ஓட்டத்தோடு கேலிச் சித்திரம் வரைந்த லக்பிமா சிங்கள தினசரியை வன்மையாக என்னுடைய இந்த கட்டுரையின் மூலம் கண்டிக்கிறேன்.

அதேப் போன்று நமது பாரதப் பிரதமரை இழிவுபடுத்தி நாகரீகமற்ற முறையில் தனது ஆதரவு பத்திரிகையின் மூலம் கேலிச் சித்திரம் வரைந்து தன்னை இந்தியாவின் எதிரி என்று பிரகடனப்படுத்திக் கொண்ட இலங்கை அரசுக்கு என் வந்தனங்கள்!

ஏனெனில் இத்தனை நாட்களாக நாமெல்லாம் கூவினாலும் காதில் விழாதவாறு செயல்பட்டு வந்த இந்திய தலைமைக்கு, இப்பொழுதாவது மண்டையில் உரைக்காதா என்ற எதிர்பார்ப்பு தான் அந்த “வந்தனத்திற்கான” காரணம்!