Tuesday, September 11, 2012

கூடங்குளம், சிங்களர் கார்ட்டூன், இன்னபிறவும்... மக்கள் மனநிலையும்.



இணையத்தை திறந்து மற்ற சொந்த வேலைகளை எல்லாம் முடித்த பின்பு, பொழுது போக்கிற்கான வெட்டி அரட்டை வேண்டி சமூக வலைத்தளங்களுக்குள் நுழைந்தாலே, நாட்டின் அன்றாட பிரச்சினைகள் குறித்து வெட்டுக் குத்து விவாதங்கள் தான் களை கட்டுகின்றன.

இப்போ சமீபமாக களை கட்டியிருக்கும் இரு பிரச்சினைகள் கூடங்குளமும், தமிழக முதல்வரையும், இந்திய பிரதமரையும் இழிவு படுத்தி சிங்கள பத்திரிகை ஒன்று  வெளியிட்டிருக்கும் கேலிச்சித்திரமும் தான்!

இதேப் போன்று எந்தப் பிரச்சினையானாலும், இணைய இளைஞர்களில் மிகக் குறைந்த சதவிகிதத்தைச் சேர்ந்தவர்களுக்கே, இரு எதிர்நிலைக் கருத்துக்களில் ஏதோ ஒன்றினை வலுவாக ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ பேசக்கூடிய ஆற்றலும் துணிச்சலும் இருக்கிறது.

இதில் பெரும்பாலான சதவிகிதத்தினர், மெஜாரிட்டி எந்தப் பக்கமோ அந்த ஸ்டாண்டை எடுத்து விடுகின்றனர். இது கூட பரவாயில்லை, ஒரு குறிப்பிட்ட சதவிகித இளைஞர்களுக்கு என்ன ஸ்டாண்டு எடுப்பது என்பதிலேயே குழப்பம் அதிகமிருப்பது தான் வேடிக்கையின் உச்சம்!

ஆனால் இது மாதிரியாக இணையத்தில் சூடாக விவாதிக்கப்பட்டு தீர்ப்பெழுதப்படும் பல விடயங்களில் பொது மக்களின் கருத்து என்ன மாதிரியாய் இருக்கின்றது என்று பார்த்தோமானால் நமக்கு மிகப் பெரிய ஆச்சர்யமே பதிலாக காத்திருக்கிறது.

கூடங்குளம் பிரச்சினையைப் பொருத்தவரை நான் சந்தித்தித்த அத்தனைப் பேரின் நிலைப்பாடும், போராட்டக் காரர்களுக்கு எதிரானதாகவே இருக்கிறது. அவர்களில் பெரும்பாலானோருக்கு  பகல் இரவு என்று பாராமல் கண்ட நேரங்களில் ஒரு நாளைக்கு 8 மணி நேரத்திற்கும் அதிகமாக ஏற்படும் மின் தடை மிகப்பெரிய சங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதை கண்கூடாகக் காண முடிகின்றது.
சாதாரணமாக இது போன்ற விடயங்களில் அரசுக்கு எதிராக கம்யூனிச சிந்தனையுடன் போராட்டக் காரர்களுக்கு ஆதரவாகப் பேசக் கூடியவர்கள் கூட, “சார், இன்னிக்கு வீட்டை விட்டு கீழ இறங்குறவங்க, உசிரோட வீடு திரும்பறதுக்கு என்ன சார் உத்தரவாதம் இருக்கு? பஸ்ஸுலயோ, ரயிலிலோ போனால் கூடத்தான் விபத்து ஏற்பட்டு சாகுறாங்க, அதனால அதுல போகாம இருக்கோமா? அது மாதிரி தான் அணு உலையையும் எடுத்துக்கனும்”. என்று பக்காவாக லாஜிக் பேசுகிறார்கள்.

அரசு இவ்விஷயத்தில் மிகவும் மெத்தனமாக செயல்படுவதாகவும் சிலர் கூறுவதைக் கேட்டால் அதிர்ச்சியாகத் தான் இருக்கின்றது. அதேசமயம் மிகப் பெரும்பான்மையான மக்களின் கருத்துக்களை ஒதுக்கித் தள்ளிவிடவும் முடியாது.

மேலும் இவ்விஷயத்தில் போராட்டக் காரர்களுக்கு ஆதரவாக இணையத்தில் ஆவேசமாக எழுதுகின்ற பெரும்பாலானோரைப் பார்த்தால் அவர்கள் வெளி நாடுகளில் பல வருடங்களாக தங்கள் குடும்பத்தோடு செட்டில் ஆனவர்களாகத் தான் இருக்கின்றார்கள்.

அளவுக்கு அதிகமான மின் தடையால் தான் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசியும் ஏறியிருப்பதாக மக்கள் நம்புகின்றார்கள். அதனால் தான் விவசாயம் தடைபட்டதாகவும் வாதிடுகின்றனர். விலைவாசி ஏற்றம் மிகப் பெரிய அளவில் மக்களை கோபப்படுத்தியிருப்பதை கண்கூடாகக் காண முடிகிறது.
                                                                                                                      
கூடங்குளத்திலிருந்து மின்சாரம் வந்தால், மின் தடை நேரம் பெருமளவில் குறையும் என்றும் நம்புகின்றார்கள். என்னைக் கேட்டால், கூடங்குளத்து போராட்டக் காரர்களின் ஆவேசத்துக்கு நிகரானதொரு பெருங்கோபம் நீரு பூத்த நெருப்பாய் பொது மக்களிடமும் மேற் சொன்ன காரணங்களுக்காக ஏற்பட்டிருப்பதையும் மறுப்பதற்கில்லை.

இதேப் போன்று தான் சிங்கள பத்திரிகையின் கேலிச் சித்திரம் பற்றி பெரும்பான்மையான பொது மக்களுக்கு தெரிந்திருக்கவே இல்லை. அது பற்றி அறிந்திருந்த ஒரு சிலரும், அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. “சாமி கும்புட வந்தவன துரத்தியடிச்சா அவன் படம் போட்டுத் தான் காறித் துப்புவான்” என்று சர்வ சாதாரணமாகச் சொல்கின்றார்கள்.

ஆனால் இணையப் போராளிகளைப் பொருத்தவரை இதில் நகை முரண் என்னவென்றால், எதற்கெடுத்தாலும் சுற்றி வளைத்து ஜெயலலிதவை ஆதரிக்கின்றவர்களும், அப்படி முடியாதபட்சத்தில் அதில் கலைஞரை சம்பந்தப்படுத்தி அவரை திட்டித் தீர்ப்பவர்களும், சிங்கள கேலிச் சித்திரத்திற்கு எதிராக பொங்கித் தீர்த்தவர்களும், இடிந்தகரை மக்களுக்கு ஆதரவாக பொங்கும் பொழுது நாசுக்காக ஜெயலலிதாவை நகர்த்தி வைத்து விட்டு போலீஸ்காரர்களை மட்டும் கண்டமேனிக்கு திட்டித் தீர்க்கின்றார்கள்.

என்னே ஒரு நடுவுநிலை இவர்களது?!

7 comments:

ஜோதிஜி said...

பொதுவான கருத்தைச் சொல்ல வரும் போது சொந்த கருத்தை திணிப்பது அழகல்ல.

கொக்கரக்கோ..!!! said...

சொந்தக் கருத்தைச் சொல்வது ஒரு பக்கத்துக்கான உரிமை மட்டுமல்ல ஜோதிஜி!

ஜோதிஜி said...

இவர் இப்படித்தான் முடிப்பார் என்று யூகிக்க வைத்து விட்டால் படிப்பவர்களுக்கு நமட்டு சிரிப்பு வந்து விடும். நீங்கள் சொல்ல வந்த கருத்து காணாமல் போய்விடும்.

தொடக்கத்தில் நீங்க சொன்ன விசயங்களைப் பற்றி என் தரப்பு விசயங்களையும் சேர்த்து யோசித்துக் கொண்டே வந்தேன். ஆனால் கடைசியில் அத்தனையும் மறந்து விட்டு வெளியே வந்து விட்டேன்.

பொதுப்படையாக யோசிக்கும் போது பல விசயங்களை நம்மால் எழுத முடியும். இதற்காக மட்டும் நாம் எழுதுகின்றோம் என்றால் நம் கருத்து அடிபட்டு குறிப்பிட்ட அரசியல் சார்புக்காகத்தான் நாம் எழுத வந்தோம் என்பதால் என்ன பிரயோஜனம்?

கொக்கரக்கோ..!!! said...

உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன் ஜி. அதே சமயம் கடைசி பாராவும் பொதுவான மனநிலையோடு தான் நான் எழுதினேன்.

ஆனால் என்னுடைய நிலைப்பாடு (அரசியலில்) உங்களை அப்படி நம்பச் செய்யாது. இருந்தாலும் முயற்சிக்கிறேன் ))

யுவகிருஷ்ணா said...

வெட்கமின்றி ஜெயலலிதாவை தலையில் வைத்து தூக்கிக் கொண்டாடிவிட்டு, நாங்க நடுநிலைமை என்று கோருவதற்கு நாக்கைப் புடுங்கிக்கிட்டு சாகலாம் :-(

ஜோதிஜி said...

எந்த கட்சியும் வெறுக்கக்கூடியது அல்ல. அந்த கட்சியில் தலை பொறுப்புக்கு வந்தவர்கள் அத்தனை பேர்களும் தெருவுக்கு வந்து போராடியவர்கள் தான். நம்மைப் போல கணினி கள வீரர்கள் அல்ல. அவர்களின் சுயநலம் பிறகு மேலோங்கி வந்தாலும் அதற்காக அவர்கள் பாதையில் இழந்தது பல. அதற்கு அறுவடை தான் பிறகு கிடைப்பது.

பொதுவாழ்க்கை என்றால் விமர்சனம் சகஜமே. எதிர்கருத்து எதுவுமே கூடாது என்றால் என்ன செய்ய முடியும்?

விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எதிர்க்கட்சி கூட்டம் என்பதை கலைஞர் கூட்டுவார்? செயல்படுத்தினாலும் இல்லாவிட்டாலும் கருத்துக்களை காது கொடுத்து கேட்பார். பத்திரிக்கையாளர்களை குழப்பப்படுத்தி கழுவிய மீனில் நழுவிய மீனாக பேசினாலும், இவர் என்ன இறுதியாக சொல்ல வந்தார் என்று புரியாவிட்டாலும் மறக்காமல் பத்திரிக்கையாளர்களை எதிர்கொள்வார்?

ஆனால் ஜெ..

கலைஞரை விமர்சிக்கும் போது எல்லாவற்றையும் மனதில் வைத்துக் கொண்டு தான் பேசுகின்றேன். பேசுவேன்.

என் பார்வையில் கலைஞர் ஒரு தலைவருக்குரிய தலைமைப் பண்பு இருக்கிறது. அவருடைய உச்சக்கட்ட சுயநலத்தையும் மனதில் வைத்துக் கொண்டு தான் பேசுகின்றேன்.

ஆனால் ஒரு பக்கச் சார்பு எடுக்கவே மாட்டேன். நானே ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்தால் கூட நிமிடத்திற்கு ஒரு முறை மாற்றி மாற்றி பேச மாட்டேன். கட்சி ரீதியான முடிவுகளை நாம் பேச வேண்டிய அவசியம் இல்லை. காரணம் மனிதர்களுக்கு தான் மனசாட்சி இருக்கிறது. அது தலைவர்களுக்கு தேவை இல்லை என்பதாக ஆகி விட்டது. அது தான் அரசியல்.

உங்கள் எழுத்துப் பயணம் உருப்படியாகச் சென்றால் நீண்ட தூரம் செல்லக்கூடியது.

விஜய் said...

எத்தனை அணு உலைகள் அமைத்தாலும் அதிலிருந்து கிடைக்கும் மின்சாரம் யானைப்பசிக்கு சோளப்பொறி மாதிரி தான். கூடங்குளம் போராட்டம் தீவரம் அடையும் போதெல்லாம் மின்வெட்டு அதிகரிப்பது போராட்டக்காரர்களுக்கு எதிராக மக்களை திசை திருப்பி விடுவதற்குத்தான்.