நான் கடந்த பத்து நாட்களில் செய்த பயணங்களின் இடையே எந்தக் கட்சியையும் சாராத பொது மக்கள், ரொடேரியன்கள், வியாபாரிகள், இளைஞர்கள், பெண்கள் என்று பேசிய வகையில்...
நான் ஒரு திமுக உடன்பிறப்பு என்று தெரிந்த நிலையில்.., அவர்கள் தாமாகவே என்னிடம் வந்து தேர்தல் முடிவுகள் பற்றிய கருத்துக்களை பறிமாறிக்கொண்டதில் இருந்து...
அவர்கள் யாருமே அதிமுகவின் வெற்றியை சிறு துளி அளவு கூட எதிர்பார்க்கவேயில்லை என்பதும், திமுகவின் ஆட்சியமைக்க முடியாமல் போன தோல்வியை இன்னமும் ஏற்றுக்கொள்ள இயலாதவர்களாகவோ அல்லது ஜீரணிக்க முடியாதவர்களாகவோ இருப்பதையும் தெள்ளத்தெளிவாக உணர்ந்து கொள்ள முடிந்தது.
கிட்டத்தட்ட அனைவருமே பதிவு செய்கின்ற ஒரு விஷயம், திமுக அமைத்த கூட்டணி பற்றியது தான். காங்கிரஸுக்கு இன்னும் சற்று குறைவான இடங்களை ஒதுக்கி..., மற்ற கட்சிகளுக்கு பத்து இடங்களுக்குள்ளாக அதுவும் உதயசூரியன் சின்னத்தில் நிறுத்தி... 200க்கும் சற்று கூடுதலான தொகுதிகளில் உதயசூரியன் நின்றிருந்தால், திமுக ஆட்சியமைத்திருக்கும் என்பதைத் தான்..!!
அவர்கள் அனைவருமே அழுத்தந்திருத்தமாக பதிவு செய்த இன்னொரு விஷயம்... பொது மக்கள் பெரிதும் எதிர்பார்த்த மு.க. ஸ்டாலின் அவர்களை திமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்காமல் களமிறங்கிய திமுக.... கலைஞரின் மேடைகளில் வேறு எந்த குடும்ப உறுப்பினரையும் ஏற்றியிருக்கக் கூடாது என்பதைத் தான்...!! அந்தக் காட்சிகளைப் பார்க்கும் பொதுவான மக்களிடம், திமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் அதே பழைய மல்டி பவர் செண்டர் ஆட்சிமுறையே கடைபிடிக்கப்படும் என்பதும், மு.க.ஸ்டாலின் நமக்கு நாமேவில் உறுதியளித்த யதார்த்த ஆட்சி முறை மற்றும் வெளிப்படையான, நேர்மையான நிர்வாக முறைக்கு... இந்த மல்டி பவர் செண்டர் குறுக்கீடுகள் மூலமாக வாய்ப்பில்லாமல் போய்விடும் என்றே அம்மக்கள் ஆணித்தரமாக பதிவு செய்கின்றார்கள்.
குறிப்பாக மேற்கு மண்டலத்தைச் சார்ந்த மக்கள் மற்றும் வியாபாரிகள் இந்த காரணத்திற்காகவே திமுகவை மிகுந்த தயக்கத்துடன் அரைகுறையாக ஆதரித்திருப்பதை பதிவு செய்கின்றார்கள்.
மதுரை மண்டலத்தைப் பொறுத்த வரை அழகிரி மீண்டும் திமுகவில் ஐக்கியமாகிவிடுவாரோ என்ற ஐயம் தான் அங்குள்ள கட்சி சாராத பொதுமக்களை திமுகவுக்கு ஆதரவாக வாக்களிக்க விடாமல் செய்து விட்டதாகவே வருந்துகிறார்கள்..! அங்கேயுள்ள அழகிரி ஆதரவாளர்கள் அதை வெளிப்படையாக பதிவு செய்ததும் மக்களை உஷாராக்கி திமுகவை நோக்கி வரவிடாமல் செய்து விட்டதாக நம்புகிறார்கள்.
நாகை மாவட்டத்தைப் பொறுத்தவரை... லட்டு தொகுதிகள் கூட்டணிக்கு தாரை வார்க்கப்பட்டதும், தவறான வேட்பாளர் தேர்வும், உட்கட்சிப் பிரச்சினைகளுமே படு தோல்விக்கு வித்திட்டது என்பது கண் கூடான உண்மை...!
எது எப்படி இருந்தாலும் பசிச்சவன் பழங்கணக்கு பார்ப்பது கூட ஒரு வகை கவலை நீக்கும் மருந்து என்ற வகையிலேயே இப்பதிவை எழுதுகிறேன்..! மக்கள் வாரிக் கொடுக்கக் காத்திருந்த வெற்றியை அந்த மக்களின் மனநிலையை புரிந்துகொள்ளாத கட்சியின் வழவழா கொழகொழா புராதனகாலத்து செயல்பாடுகளுமே இத் தோல்விக்கு காரணம் என்பது தான் யதார்த்த கள நிலவரம்.
2 comments:
அய்யோ அய்யோ இப்படியே இன்னும் 5 ஆண்டுகளுக்கு புலம்புங்க
BRO ALL SECTIONS OF TAMILNADU PEOPLE WERE AFFECTED BY DMK DMK GOONDAS TAMIL NADU WOMEN FEARED DMK SO AIADMK WON
Post a Comment