Tuesday, July 16, 2013

பிறப்பொக்கும்...! இப்படிக்கு வள்ளுவர்.

அங்கே பெரிய கூட்டம். பரபரப்பும் ஆவேசமும் நிறைந்த மனிதர்கள்!... இங்கே இருந்து பார்க்கும் போது இரண்டு குழுக்களைச் சேர்ந்தவர்கள் மாதிரி தோனுது. இரண்டு தரப்புமே ஒருத்தரை ஒருத்தர் வெட்டிச் சாய்க்க வெறி கொண்டு துடித்துக்கொண்டிருப்பது புரிகிறது. காவலர்கள் சிலர் கடமையேன்னு கடமையாற்றிக்கொண்டிருக்கின்றார்கள்.....
 
ஜி ஹெச்சின் கட்டக் கடேசில தான் அந்த பிணவறையும் இருந்தது. அதன் வெளிப்பக்க சுவற்றில் சாய்ந்து கொண்டு தான் இவன் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறான். அரைக்கால் டவுசர், தொளதொளவென்றிருக்கும் பழைய காக்கிச் சட்டை. வேட்டியை தலையில் முண்டாசாக கட்டிக்கொண்டிருந்தான்.
 
குத்துக்காலிட்டு அமர்ந்திருந்தவன், இரு கைகளாலும் முழங்கால்களை கட்டிக்கொண்டிருந்தான். தொலைவில், மருத்தவமனையில் வாயில் அருகே நடந்து கொண்டிருந்ததை ஒருவாராக ஊகித்துக்கொண்டவன், அலட்சியமா அல்லது விரக்தியா என்று சொல்லத்தெரியாத ஒரு வித புன் முறுவலுடன் கைகளைப் பிரித்தவாறு பக்கவாட்டு தரையில் ஒரு கையை ஊன்றி
காலை நீட்டி உட்கார எத்தனித்தபோது தான், அந்த ஆளைப் பார்த்தான்.....
 
....பிணவறையின் வாயிலில், படிக்கட்டுக்களுக்கு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு இவனையும் அந்த கலவரத்தையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தார் அந்த முதியவர்!
 
கொஞ்ச நேரத்துக்குப் பிறகு அந்த இரண்டு குழுவும் மருத்துவமனை எதிரில் நடு ரோட்டில் அமர்ந்து விட்டனர். இரண்டு பெரிய வேன்களில் எக்கச்சக்கமாக போலீஸ் வந்து குவிக்கப்பட்டிருந்தது.
 
அந்த ரெண்டு பொணத்தையும் வச்சிக்கிட்டு காலைலேர்ந்து இதே மாதிரி தான் பிரச்சினை பண்ணிட்டிருக்காங்க. நேத்திக்கி வரைக்குமாவுது ரெண்டு பொணமும் அரைக்குள்ள சேப்டியா இருந்திச்சி.....  இப்போ காலைலேர்ந்து வெய்யில்ல கெடத்து அழுவிட்டிருக்கு....
 
அந்த பெரியவர் கேட்பதாக நினைத்துக்கொண்டு இவன் பேசிக்கொண்டிருந்தான். இந்த ரெண்டு பேரோட கவனமுமே மண் தரையில் கிடந்த அந்த ரெண்டு பொணத்து மேலயும் தான் இருந்திச்சி. கலவரத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கெல்லாம் பொட்டலம், டீ, கட்டு சாப்பாட்டுன்னு அப்பப்ப வந்திட்டிருந்திச்சி. அதில் தலைவர்கள் மாதிரி தெரிந்த சிலர் போலீஸாருக்கும் வாங்கித் தந்தார்கள்.
 
இவன் போயி ரெண்டு பக்கமும் கேட்டும் ஒன்னும் கிடைக்கல. சில போலீஸார் சாப்பிடாமல் வைத்திருந்ததை இவனை அழைத்துக் கொடுத்தார்கள். இவன் சாப்பிட்டுக்கொண்டே ஒரு பொட்டலத்தை எடுத்து முதியவரிடம் நீட்ட, “ஆச்சு”ன்னு ஒற்றை வார்த்தையில் பதிலளித்தார்.
 
நேரம் மாலையைக் கடந்து இரவையும் தொட்டது. யார் யாரோ வந்தார்கள். வெள்ளை வெளேர், சலவை சட்டை வேட்டியில். கிட்டத்தட்ட இரவு பதினோறு மணிக்கு கூட்டம் கலைவது போல் இருந்தது. அதற்குள் இவன் ரெண்டு ரவுண்டு தூங்கி விழித்திருந்தான்.
 
கூட்டத்திலிருந்து கம்பௌண்டர் வேகமாக இவனை நோக்கி வந்தார். எலேய் மகராசா, உனக்கு வேலை வந்துடுச்சிடா. இங்க வா. வந்து இது ரெண்டுத்தையும் எடுத்துட்டு போயி எரிச்சிட்டு வந்துடுடா.....
 
கடகடன்னு கட்டிடத்தின் பக்கவாட்டுப்பக்கம் ஓடியவன் நான்கு சக்கர பிணம் சுமக்கும் வண்டியை தள்ளிக்கொண்டு வந்தான். பெருவாரியான கூட்டம் கலைந்து விட, ஓரிருவர் மட்டும் இரண்டு பிணங்களையும் சற்று எட்ட நின்று வாயையும் மூக்கையும் சேர்த்து மூடியவாறு அழுது கொண்டிருந்தார்கள்.
 
ஐயா, யாராவது வந்து கொஞ்சம் பிடிங்கய்யா, ரொம்ப கனக்குது. நாளு முழுக்க வெய்யில்லயும், பனியிலயும் கிடந்தா இப்புடித்தான். யாருக்காவது புரியுதா? என்று இவன் சத்தமாக முனுமுனுக்க....
 
கம்பௌண்டர் தான் அதட்டினார்! எலேய், நாறுதுல்ல? எப்புடிடா கிட்ட வரமுடியும்? தோ..... காயத்துல எல்லாம் புழு வக்க ஆரம்பிச்சிருச்சி....   ஒரு ஆஃப்பு எக்ஸ்ட்ராவா வாங்கித்தரச் சொல்றேண்டா....
 
தூக்கிப் போடுற வரைக்கும் தாண்டா கஷ்டம். அப்பறம் வண்டிய தள்ளிட்டிப்போயி சுடுகாட்டுல ரெண்டையும் தள்ளிட்டின்னா போதும், எரிக்கிறதுக்கெல்லாம் ஏற்பாடு பண்ணிட்டாங்க.
 
யாரோ ஒருத்தார், எதெதோ பேப்பரில் அங்கிருக்கும் பத்துப்பதினைந்து பேரிடம் கையெழுத்தெல்லாம் வாங்கினார்கள். அங்கேயே சீல் எல்லாம் வைத்தார்கள். இவனிடமும் ரெண்டு பேப்பரில் கையெழுத்து கேட்டார்கள். பெருமையாக கைநாட்டு பதித்தான்!
 
ஒன்னு முடிஞ்சிது.... இது தான் ரொம்ப கனபாடியா இருக்குன்னு சொல்லிக்கிட்டே, அதிகமாக தரையில் இழுபடாதவாறு ரொம்ப கஷ்டப்பட்டு தோளில் தூக்கி, இதையும் வண்டியில் போட்டான்.
 
இவனிடம் ஒன்றிரண்டு பேர் வந்து தனித்தனியாக நூறு ரூபாய் தாளை கைகளில் திணித்தார்கள். ஒருவன் வந்து இரத்தக்கலர் திரவம் நிறப்பிய பட்டை பாட்டிலை தந்தான். சந்தோஷமாக வாங்கி டவுசர் பையில் வைத்து, ஒருமுறை தொட்டுப்பார்த்துக்கொண்டான்.
 
விடியற்காலை நாலு மணிக்குத்தான் பிணவரை பக்கம் வந்தான் நம்ம மகாராசா. அப்பவும் அந்த முதியவர் அதே இடத்தில் அமர்ந்திருந்தார். கொஞ்சம் தள்ளாட்டமாக இருந்தவன் சாப்ட்டியா பெருசு?ன்னு கேட்டுக்கிட்டே அவர் அருகில் அமர்ந்தான்.
 
ஒருத்தன் தாழ்த்தப்பட்டவனாம்... இன்னொருத்தன் பெரிய ஜாதியாம்....!  ரெண்டு பேத்தோட மவனும் மவளும் ஓடிப் போய்ட்டாங்க. இவிங்க ரெண்டு பேரும் நாண்டுக்கிட்டு செத்துட்டாய்ங்க. இது உள்ள தான் நாலு நாள் இருந்திச்சி. இன்னிக்கு அது ரெண்டுத்தையும் எடுத்துட்டுப் போவ வரச்சொல்ல தான், அடிதடி தகராறு எல்லாமும்!
 
பொணத்த வெயில்ல போட்டுக்கிட்டு, ஒரு நாளு முக்க வேலை வெட்டிய விட்டுட்டு கூத்துக்கட்டிட்டு போய்ட்டானுவோ. ஊதிப்போன பொணத்தை நீ தூக்கிப்பாரு தெரியும்!
 
தரையில இழுத்துட்டுப்போவ மனசு வருதா?....   நம்மளமாதிரி ரத்தமும் சதையுமா, ஆவிய உள்ள புடிச்சி வச்சிக்கிட்டு நாலு நாளு முன்னாடி வரைக்கும் சுத்திக்கிட்டு திரிஞ்சவய்ங்க தான? அந்த உசிருங்க இத்தன நாளு இருந்த கட்டைய அசிங்கப்படுத்தலாமா சாமீ?
 
அதான் முடிஞ்ச வரைக்கும் காட்டுலயும் அம்மாசிக்கு கூட மாட ஒத்தாசையா இருந்து எரிச்சு போட்டுட்டு வந்தேன்!!! என்னைய விட அவிங்க ரெண்டு பேத்தோட கூட்டமுமே உசந்த ஜாதி காரவுக. நாத்தம் வந்துடிச்சி, புழுவும் வச்சிடிச்சி...  எப்புடி சாமி அவிங்க தொட முடியும் அத?
 
படிக்கட்டில் தலை வைத்து அவன் தூங்க முற்பட்ட போது தான், அந்த முதியவர் ஒரு காகிதத்தில் தான் எழுதிக் கொண்டிருந்ததை சத்தமாக வாசித்தார்.....   திடுக்கிட்டு எழுந்தவன் என்ன சாமீ உளர்ற? என்று கேட்கவும்...  மீண்டும் ஒரு முறை இப்படி வாசித்தார்....!

 

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்.

 
எனக்கு புரியிற மாதிரி பேசு சாமீ!!

அவன் இல்லடா ஒசந்த ஜாதி. உன் வேலையை, கடமையை, சிரிச்சிக்கிட்டே, நேசிச்சிக்கிட்டே, தெளிவா, சிறப்பா செஞ்ச பாரு.....  நீ தாண்டா உசந்த ஜாதி.



Thursday, July 11, 2013

மன்னிக்கவும் உதயகுமாரன்(கள்) !!

எனக்கு எப்பவுமே இந்த சுப. உதயகுமாரன் மேல் பெரிய மதிப்பு எல்லாம் இருந்ததில்லை. அதற்கு அடிப்படைக் காரணம் நான் அறிவியல் சார்ந்த வளர்ச்சிகளுக்கு எப்பவுமே ஆதரவான மனநிலை கொண்டவன் என்பதால் தான்.

பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப அவர்களுக்கான வசதி வாய்புகளை உறுதி செய்யும் பொருட்டு விஞ்ஞான கண்டுபிடிப்புகளின் உதவியுடன் பெரும்பான்மை மக்களுக்கு ஒரு நன்மை விளையும் பொருட்டு உருவாக்கப்படும் திட்டங்கள், குறிப்பிட்ட சிலருக்கு ஏதாவது ஒரு வகையில் கொஞ்சம் இடைஞ்சலாகவும் இருக்க வாய்பிருக்கிறது.

ஆனால் அந்த சிலருக்கு ஏற்படும் இன்னல்களை தவிர்க்கும் பொருட்டு சில மாற்று ஏற்பாடுகளை அவர்களுக்கு செய்து கொடுத்து விட்டு பொது மக்களுக்கு கிடைக்க வேண்டிய பலன்களை உறுதி செய்வது ஆட்சியாளர்களின் கடமை. ஒரு வேளை ஆட்சியாளர்கள் அதைச் செய்யத் தவறும் போது, அந்தச் சிறு கூட்டத்திற்கு ஆதரவாக போராடுபவர்கள், அந்த புதிய திட்டத்தால் பாதிப்படைபவர்களுக்காக...., அவர்களின் வாழ்க்கை நிலையில் எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு அரசு செய்ய வேண்டிய மாற்று ஏற்பாட்டினை கோரித்தான் தங்களது போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இது தான சரியான வழிமுறை என்பது என் கருத்து.

ஒரு பெரிய திட்டம், அதனால் பொதுமக்களுக்கு நல்ல பலன்கள் வரும் என்கிற போது அதை ஒரு சிறு கூட்டத்திற்கு ஆதரவாகவோ அல்லது தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதாலேயோ பெருவாரியானவர்கள் பலன் பெறப்போகும் ஒரு திட்டத்தை, அரசுக்கு பெரும் வருவாயை ஈட்டித்தரக்கூடிய ஒரு திட்டத்தையே முடக்க நினைத்து, அதற்கு ஆதரவாக, பல தரப்பினரையும் தூண்டிவிட்டு பயமுறுத்தி செய்யப்படும் போராட்டம் நிச்சயமாக சுயநலம் சார்ந்ததாகவே இருக்கும்.

இந்த மாதிரியான உதயகுமாரன்களுக்காக அந்தக்காலத்து ஆட்சியாளர்கள் அடிபணிந்து போயிருந்தால், இன்றைகு மேட்டூர் அணையும், வைகை அணையும், முல்லைப்பெரியாறு அணையும், நெய்வேலி அனல் மின் நிலையங்களும்.......  இன்னும் இது போன்ற எண்ணற்ற திட்டங்கள் மக்களுக்கு பலன் தரும் வகையில் வந்தே இருக்காது. இன்றைய மக்கள் தொகை பெருக்கத்திற்கான தேவைகள் எதுவுமே பூர்த்தி செய்யப்படாமல் நாடோடி வாழ்க்கை தான் நாம் வாழ வேண்டியிருந்திருக்கும்.

நாற்கர சாலைகள் அமைப்பது கூட சிலருக்கு இடையூராகத்தான் இருந்திருக்கும். அதற்காக இந்த உதயகுமாரன்கள் இப்பொழுது அந்த நாற்கர சாலைகளை பயன்படுத்தாமல் பழைய குறுக்குப் பாதையில் தான் பயணம் செய்து கொண்டிருக்கின்றார்களா? என் எல் சி நிறுவனம் உருவாகும் போது எழாத எதிர்ப்பா? இப்போ அங்கிருந்து கிடைக்கும் மின்சாரத்தை, அல்லது அது போன்று பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் கட்டப்பட்ட அணைகளிலிருந்து பெறப்படும் மின்சாரத்தை இந்த உதகுமாரன்கள் பயன்படுத்தாமல் இன்னமும் சிம்னி விளக்கில் தான் குடும்பம் நடத்துகின்றார்களா?

இவர் வக்காலத்து வாங்குவதாக சொல்லிக்கொள்ளும் அப்பாவி மீனவ மக்கள் அனைவரும் இன்றைக்கு துடுப்பு போடும் தோனியில் சென்று தான் மீன் பிடித்து வருகின்றார்களா? அந்த மீனவர்கள் பயன்படுத்தும் லாஞ்சர் போட்டை இயக்க பயன்படும் டீசல், ஏதோ ஒரு கடல் பகுதியை பெருமளவில் மாசுபடுத்தி, அங்கிருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணையிலிருந்து தானே தயாரிக்கப்படுகிறது. அந்தக் கடல்பகுதிகளைச் சார்ந்த மீனவர்கள் போராட்டம் நடத்தினால் இவர்கள் எல்லாம் தோனியில் சென்று தான் மீன் பிடிக்க வேண்டியிருக்கும் என்பதை அந்த மீனவ தோழர்களுக்கு இந்த உதய்குமாரன்கள் சொல்வதில்லை.

இவரைப் போன்றவர்களின் நோக்கம், அப்பாவி மக்களை பயமுறுத்தி இவர்கள் அதில் பலனடைய வேண்டும் அவ்வளவே. 

சரி, இவர் உணமையிலேயே சுற்றுச்சூழல் ஆர்வம் கொண்ட உண்மையான இயற்கை போராளி என்றே வைத்துக்கொள்வோம். இவரது தாக்குதல்கள் அந்த புதிய திட்டங்களை செயல்படுத்த முனைவோர் அனைவருக்கும் எதிராக ஒரே தொனியில் மிகச் சமமானதாகத்தானே இருக்க வேண்டும்?! அப்படித்தான் இருக்கின்றதா உதயகுமாரனின் நடவடிக்கைகள்?!

இன்றைய தமிழக அரசு கூடங்குளம் அணுமின் நிலையம் அமைப்பதற்கு எதிரான மனநிலையில் தான் இருக்கின்றதா? ஜெயலலிதா நினைத்தால் அந்த திட்டத்திற்கு மிகத் தெளிவான தடையை மாநில அரசின் மூலமாக போட முடியுமே! அதைச் செய்யாமல் போராட்டக்காரங்களை அடக்கி அந்த திட்டம் உடனடியாக செயல்படும் செயலைத்தானே முடுக்கி விட்டிருக்கின்றார்?

கலைஞருக்கு எதிராக நீள்வது போன்று இவரது நாக்கும், பேனாவும் அவ்வளவு நீளமாக ஜெயலலிதாவுக்கு எதிராக எப்பொழுதாவது நீண்டிருக்கிறதா? இப்பொழுது கூடங்குளம் பிரச்சினையில் கலைஞரை குறை சொல்ல முடியாமல் கை அரித்துப் போன நிலையில், ஜெயலலிதாவை லேசாக குறை கூறினாலே காயடிக்கப்பட்டுவிடுவோம் என்பதை உணர்ந்து கொண்டு, தன் இருப்பை வெளிக்காட்டிக் கொள்ள சேது சமுத்திர திட்டத்திற்காக போராடும் கலைஞருக்கு எதிராக தனது அரிப்பை வெளிக்காட்டியிருக்கின்றார்.

எழுபதுகளுக்குப் பிறகு தமிழகத்தில் கலைஞரை எதிர்த்துஅரசியல் செய்தால், ஊடக வெளிச்சம் நன்றாகக் கிடைக்கும், சில சமயங்களில் ஆட்சியாளும் யோகமும் கிடைக்கும் என்பதை உணர்ந்து கொண்ட உதயகுமாரன்கள், கலைஞருக்கு மானசீகமாக நன்றியை சொல்லிவிட்டு(?!) அவருக்கு எதிரான ஆயுதங்களை கையில் எடுத்து வீதிக்கு வந்து விடுகின்றார்கள்......!

இந்த மாதிரி நூற்றுக்கணக்கான உதயகுமாரன்கள் இன்றைக்கு ஊர் பேர் தெரியாமல் சுறுண்டுகிடக்கின்றார்கள் என்பது இவரால் அந்த ஊடக வெளிச்ச மயக்கத்திலிருந்து வெளிவரும் போது தான் புரிந்துகொள்ளப்படும். அந்த ஆட்சியாளும் யோகமும் ஆரியர்களுக்கோ அல்லது உண்மையான ஆரிய அடிவருடிகளுக்கோ மட்டுமே சாத்தியமாகும் என்ற உண்மையும் அப்பொழுது தான் அவர்களுக்குப் புரியவரும்.

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று திமுகவும் அதன் தலைவர் கலைஞரும் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கும் வேலையில், சமூக ஆர்வலரான உதயகுமாரன் அந்த திட்டத்திற்கு எதிரான உண்மையான மனநிலையோடு இருந்தால், என்ன செய்திருக்க வேண்டும்?

அந்தத் திட்டத்தினால் ஏற்படும் அபாயங்களை ஆதாரப்பூர்வமாக எடுத்துக்காட்டி, புள்ளி விவரங்களுடன் ஒரு அறிக்கை வெளியிட்டு, கலைஞருக்கே கூட இந்த திட்டத்தை செயற்படுத்த முனைய வேண்டாம் என்று கோரிக்கை விடுத்திருக்கலாம். அல்லது இந்ததிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் அதனால் பாதிப்படைபவர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கை நிலை தாழாமல் இருக்க வேறு என்ன மாதிரியான மாற்று ஏற்பாடுகளை நீங்கள் முன் வைக்கின்றீர்கள்? என்று கலைஞரிடமே வினா எழுப்பி இருக்கலாம்.


ஆனால் அதையெல்லாம் விடுத்து, கலைஞரையும் அவர் குடும்பத்தினரையும் திமுகவினரையும் தரம் தாழ்ந்த வார்த்தைகளைக் கொண்டு தனி நபர் விமர்சனம் செய்யும் போதே, நீ பெரிய போராளி அல்ல வெறும் பேமானி என்று புரிந்து போகிறது. உன்னுடைய திட்டம் எந்த அடித்தட்டு மக்களுக்காகவும் போராடுவது அல்ல, கலைஞரை எதிர்த்து ஊடக வெளிச்சத்தைப் பெறுவதும், ஆட்சியாளர்களுக்கு கால் கழுவி விடுவதும் தான் என்று புரிந்து போகின்றது.

அந்த திட்டத்தில் நீங்கள் சொல்வது போல ஊழல் நடந்திருந்தால், அதற்கான ஆதாரங்களுடன் நீதிமன்றம் சென்று சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்றுத்தரலாம். அல்லது ஊழல் நடைபெறா வண்ணம் அந்த திட்டத்தை வெளிப்படையாக செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கலாம். அதையெல்லாம் விடுத்து ஒரு நான்காம தர மேடைப்பேச்சாளர் போன்று கலைஞர் மீது தனிநபர் தாக்குதல் நடத்தியிருப்பதிலிருந்து, உங்கள் மேல் இதுவரை இருந்த ஒரு எதிர்நிலை கொள்கை கொண்ட போராளி என்ற பிம்பம் உடைந்து, பேட்டை ரவுடி என்ற எண்ணம் தான் உண்மையான நடுநிலையாளர்களுக்கு மேலோங்குகிறது.


Saturday, July 6, 2013

சிங்கம் 2.... பைசா வசூல்!!

முதல் நாளே செகண்ட் ஷோ குடும்பத்தோடு போயி பார்த்தாச்சு. கடந்த ஒரு மாசமா இந்தப் படம் பற்றி வந்த ப்ரொமோ விளம்பரங்கள், டிரெயிலர் எல்லாம் பார்த்து கொஞ்சம் மிரண்டு தான் போயிருந்தேன். ஆனால் நேற்று காலையிலிருந்தே நம்ம அமெரிக்க வாழ் இணைய தோழர்களின் இந்தப்படம் பற்றிய விமர்சனங்கள், உடனடியாக இந்தப்படத்தைப் பார்க்கும் ஆசையை தூண்டிவிட்டன.

நிச்சயமா இது ஹரிக்கு இன்னொரு சாமி தான். ஆனா இதுல ரெண்டு தப்பு பண்ணியிருக்கார். ஒன்னு, இசையமைப்பாளர் தேர்வு மற்றொன்று, ரெண்டு ஹீரோயினிக்களை போட்டு, யாருக்கு முக்கியத்துவம் தர்றதுன்னு புரியாம அவரும் குழம்பி ரசிகர்களையும் பரிதவிக்க விட்டது. இது ரெண்டும் தான் எனக்கு பெரியதாக தெரிந்த குறைகள்.

மற்றபடி, ஒரு சராசரி சினிமா ரசிகனான எனக்கு முழு திருப்தியை தந்திருக்கிறது படம். ரெண்டே முக்கால் மணி நேரத்துக்கு ஒரு நிமிடம் கூட குறையாமல் படம் ஓடுகிறது. இருந்தாலும் இன்னும் ஐந்து பத்து நிமிடம் சேர்த்து எடுத்து முழுசா சிங்கத்தோட கல்யாணம், அவருக்கு அரசு விருது கொடுத்து பாராட்டுவது இப்டீன்னெல்லாம் காமிச்சிருந்தா ரொம்ப சந்தோஷமா இருந்திருக்கும்ன்னு தான் எழுந்து வரும் போது தோனிச்சி!

இதுவே இந்த படத்தோட பெரிய வெற்றின்னு தான் சொல்லனும். நிச்சயமா இதுல இயக்குனர் ஹரி தான் பாராட்டுக்குறியவர். டைரக்டர் ஆர்ட்டிஸ்ட் என்கிற வகையில் சூர்யாவையும் பாராட்டலாம். ஆனா இதை விஜய் அல்லது அஜீத் பண்ணியிருந்தா, படம் சந்திரமுகி வசூலை பின்னுக்குத் தள்ளியிருக்கும்.

அவ்ளோ வெயிட்டான கேரக்டர், ஒரு சீனைக் கூட உப்புக்குச்சப்பாணியா இருக்கட்டுமேன்னு படத்துல வைக்கல. பாட்டெல்லாம் கூட சீக்கிரமாவே முடிஞ்சி சீன் வந்துடுற மாதிரியே தோனுது. சண்டைக் காட்சிகளும், சேஸிங் காட்சிகளும் கூட அடுத்த நிமிடம் தொடர்ந்தால் கொஞ்சம் சாய்ந்து உட்காரலாம்ன்னு நினைக்கும் போது முடிவுக்கு வந்து அடுத்த பரபர சீன் ஆரம்பிச்சிடுது.

எவ்ளோ நாழி தான் சீட்டுல சாயாமயே உட்காருவது? இடுப்பெல்லாம் வலி எடுத்து தான் சாய்ந்து உட்கார்ந்து பார்க்கும் நினைவே வருகிறது. படத்துல டெக்னிகலா ஆயிரம் குறை சொல்லலாம், அதெல்லாம் என்னைய மாதிரி வெகுஜன சினிமா ரசிகர்களுக்கு கண்ணுலயே தெரியாது. தெரிஞ்சிக்கவும் நாங்க விரும்பல.

கோவத்தை கோவமா காட்டியிருக்கான், பாசத்தை பாசமா காட்டியிருக்கான். அவ்ளோ தான். நான் செய்யனும், பேசனும்ன்னு நினைக்கறத எல்லாம் திரயில வர்றவங்களும் செய்யறாங்க, பேசறாங்க. அது போதும் எனக்கு. ஹீரோ உண்மையிலேயே நல்ல புத்திமதி சொல்றார், ஸாரி செஞ்சு காமிக்கிறார். ஒரு இளைஞன் கூட இதப்பார்த்து கெட்டுப்போக மாட்டான்.

எங்க ஊரின் மிக இளம் போலீஸ் ஆஃபீஸர் தன் மனைவியோட குதூகலாமா படம் பார்க்க வந்திருந்தார். கண்டிப்பா இன்னும் ஒரு மாசத்துக்காவது, அவர் இதே விரைப்போட மக்களுக்கு நல்லது செய்ய முனைவார். கெட்டவங்கள நசுக்க தயங்க மாட்டார்ன்னு நம்பறேன்.ஏன்னா படத்தின் தாக்கம் அந்த அளவுக்கு இருக்கு!

டைரக்டர் மேல எனக்கு இனோரு வருத்தம் என்னான்னா? நம்ம அஞ்சலியக்காவ முழுசா காமிக்காம சதி பண்ணிட்டார். அதான். அந்தப் பாட்டுலயும் கூட சூர்யா ஆடுவதையும், எதிரிகளை நோட்டம் விடுவதையும் காமிச்சி, கொஞ்சம் ஏக்கப்பட வச்சிட்டார். ஆனா இத மாதிரி ஒவ்வொருத்தர் விருப்பத்தையும் அவர் பூர்த்தி பண்ணனும்ன்னா படம் அஞ்சு மணி நேரத்து ஓட வேண்டியிருக்கும்.

ஒவ்வொரு சீனையும் அவசர அவசரமா முடிச்சி, வசனம் பேசுறவங்களை கூட வேக வேகமா பேசவச்சி, ரெண்டே முக்கால் மணி நேரத்துக்குள்ள படத்தை முடிச்சிக் கொடுத்திருக்கார் ஹரி. அதுனால தான் ரொம்ப தூக்கத்தோட படத்துக்குப் போனாலும், கொட்டாவி கூட விடாம ஃப்ரெஷ்ஷா படம முடிந்தவுடன் வெளியே வர முடியுது.

இப்படியெல்லாம் படம் எடுத்தாத்தான், பணம் போட்டவனும் கொஞ்சம் காசை கண்ணுல பார்க்க முடியும். விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் அங்கு வேலை செய்யறவங்க, சைக்கிள் ஸ்டாண்டு, கேண்டீன் நடத்துபவர்கள் உட்பட அனைவருமே நாலு காசு பார்க்க முடியும். இதெல்லாம் நடந்தாத்தான் இந்த சினிமா தொழிலே வளமா இருக்க முடியும்.

இது எல்லாத்துக்கும் மேல, உழைச்ச காச கொடுத்து டிக்கெட் வாங்கி சந்தோஷத்துக்காக சினிமா பார்க்க போறவங்க எல்லாருக்கும், ஒரு மூணு மணி நேரத்துக்கு நான் ஸ்டாப் கொண்டாட்டத்துக்கு 100% கேரண்டி. குடும்பத்தோட போயி எந்த சஞ்சலமும் இல்லாம படம் பார்த்துட்டு வரலாம்.

Tuesday, July 2, 2013

தளபதி ஸ்டாலினும்... ஆளுமைப் பண்பும்...!

இரண்டு நாட்கள் முன்பு, மதுரையில் நடைபெற்ற அற்புதமான நிகழ்ச்சி ஒன்றில், திமுகவின் பொருளாளரும், மாநில இளைஞர் அணிச்செயலருமான தளபதி ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தில் இந்த வருடம் நடைபெற்ற பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் மாநில மற்றும் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவச் செல்வங்களுக்கு திமுக இளைஞரணி சார்பாக சான்றிதழும், பணப்பரிசும் வழங்கி மாணவச் செல்வங்களை ஊக்குவித்தார்.

இது ஒரு நிகழ்வு....!!

ஆனால் இதை தளபதி ஸ்டாலின் அவர்கள் எவ்வாறு தெளிவான திட்டமிடலுடன் நடத்தினார் என்பதில் தான் அவர் ஏன் தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஆக வேண்டும் என என்னைப் போன்றவர்கள் விரும்புகின்றார்கள் என்பதன் காரணம் பொதிந்திருக்கிறது.

தமிழகத்தின் 32 மாவட்டங்களில் இருந்து இரண்டு வகுப்பிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்றிருக்கும் மாணாக்கர்கள் மற்றும் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்திருக்கும் மாணாக்கர்கள் (ஒரே நிலையில் எத்தனை மாணாக்கர்கள் இருந்தாலும் அனைவரையும்) பட்டியலிடப்படுகின்றனர்.....



அப்படி பட்டியலிடப்பட்டவர்களை திமுக இளைஞரணியைச் சேர்ந்த அந்தந்தப்பகுதி மாவட்ட, நகர, ஒன்றிய கிளைக்கழக பொறுப்பாளர்கள், நேரடியாக வீடு தேடிச் சென்று, அதற்கான கடிதத்தைக் கொடுத்து, தேதியைச் சொல்லி அழைத்துச் செல்வதற்கான ஏற்பாட்டினையும் விளக்கி ஒப்புதல் பெற்றுக்கொள்கின்றனர்.

ஒரு மாணவருடன், தாய் தந்தை இரண்டுபேரோ அல்லது அவர்கள் சொல்லும் உறவினர்கள் இரண்டு பேரோ உடன் வரலாம். பிறகு அவர்களிடம் அறிவித்த படி, தனியார் பேருந்துகளில், அவர்கள் வீட்டிலிருந்தே அழைத்துச் சென்று மதுரையில் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட விடுதிகளில் முதல் நாள் இரவே தங்க வைக்கப்படுகின்றனர்.

அவர்களுக்கு தரமான உணவும் நேரம் தவறாமல் வழங்கப்படுகிறது. மறு நாள் காலை நிகழ்ச்சி நடைபெறும் ராஜா அண்ணாமலை மன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமரவைக்கப்படுகின்றனர். அரங்கில் நுழைந்தவுடன், எந்தவொரு அரசியல் கலப்பும் கிடையாது. மேடையிலும் தளபதி ஸ்டாலின் மற்றும் முன்னாள் சென்னை மாநகர மேயரும், மாநில இளைஞரணி துணைச் செயலாளருமான மா. சுப்ரமணியன் தவிர வேறு அரசியல்வாதிகள் யாரும் கிடையாது. அது ஒரு கல்வி விழாவாகவே நடைபெறுகிறது.

பொதுவாக அரசியல் நிகழ்ச்சிகளில் ஒலி, ஒளிபரப்பப்படும் பிரச்சாரப்பாடல்கள், படங்கள் எதுவும் கிடையாது. மெல்லிய பியானோ இசை மட்டுமே தவழ்ந்தோடுகின்றது. மாணாக்கர்கள் அமர வைக்கப்பட்ட அடுத்த நிமிடம் தளபதி ஸ்டாலின் மேடையேறுகிறார். அழகான சுறுக்கமான முன்னுரை.  எந்த அவசரமோ, படபடப்போ தேவையில்லை. எத்தனை நேரமானாலும் அனைவரிடமும் சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டு தான் செல்வேன். என்று உறுதி அளிக்கின்றார்....

வரிசைப்படி மாணாக்கர்கள் அழைக்கப்படுகின்றார்கள். ஒவ்வொருவராக தத்தமது பெற்றோருடன் அல்லது உறவினர் இருவருடன் மேடையேறுகின்றனர். சான்றிதழும் பணப்பரிசும் வழங்கப்படுகின்றது (மாவட்ட முதலிடத்திற்கு ரூ. பத்தாயிரம் ) பிறகு அவர்களோடு சேர்ந்து புகைப்படம்.

இந்த நிகழ்வு முடிவதற்கு நான்கு மணி நேரம் பதினைந்து நிமிடங்கள் ஆகின்றன. இடையில் ஒரு நிமிடம் கூட அமர்ந்து ஓய்வெடுக்காமல், ஒரு மிடறு தண்ணீர் கூட அருந்தாமல் விழா தொடர்ந்து அதே உற்சாகத்துடன் கடைசி நிமிடம் வரை கடந்து நிறைவடைகின்றது.

வந்திருந்த அத்துணை பேருக்கும் அவ்வளவு உற்சாகம்! பிறகு தளபதி ஸ்டாலின் அவர்களுடன் சேர்ந்து மதிய சாப்பாடு. பிரியாணி மற்றும் வெஜிடேரியன் சாப்பாடு இரண்டும் அவரவர் விருப்பப்படி பரிமாறப்படுகிறது. அவர்கள் அனைவரும் சாப்பிட்டு எழும் முன்பாக, அவர்கள் தளபதி ஸ்டாலின் அவர்களுடன் இணைந்து எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படமும் அவர்கள் கைகளில் கொடுக்கப்பட்டு விடுகிறது.

பிறகு அதே பேருந்துகளில், அவரவர் ஊர்களுக்கு வீட்டு வாசலிலேயே கொண்டுவந்து சேர்க்கப்படுகின்றனர். கிட்டத்தட்ட ஆயிரத்தி அறுநூற்றி எண்பது மாணாக்கர்கள், மற்றும் அவர் தம் பெற்றோர் என்று அனைவருக்குமே உற்சாகம், மகிழ்ச்சி மற்றும் நெகிழ்ச்சி...!!!

இந்த அத்தனை பேருமே அந்தந்தபகுதிகளில் பலரால், பல தொண்டு நிறுவனங்களால், பள்ளி நிர்வாகங்களால் பாராட்டப்பட்டிருப்பார்கள். ஆனால் தமிழகத்தின் முன்னாள் துணை முதல்வர் அவர்கள் கையால், சான்றிதழும், பரிசும், இவ்வளவு அந்நியோன்யத்துடனும் அக்கரையுடனும், எந்த சிரமத்திற்கும் ஆளாகாமல் பெற்றது மற்றெதையும் விட சந்தோஷமான, தங்கள் வாழ்வில் மறக்க முடியாத நல்ல சம்பவமாக அமைந்து விட்டதாக போய் வந்த அத்தனை பேரும் சொல்வது தான் இதில் சிறப்பு.

தன் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு அரசியல் சார்புடைய அணியை வைத்து, தமிழகம் தழுவிய, மிக முக்கியமான சென்சிடிவ் நிகழ்வை, சம்பந்தப்பட்டவர்கள் பயன் பெறுவது மட்டுமல்லாமல், சந்தோஷப்படும் அளவிலும், நிகழ்த்திக் காட்டும் வல்லமை பெற்ற ஒருவர் கைகளில் இந்தத் தமிழகத்தின் அரசு எந்திரம் வந்து சேர்ந்தால், ஒட்டு மொத்த தமிழகமும், தமிழர்களும் எவ்வளவு பயன்களும் சந்தோஷங்களும் அடைவார்கள் என்பதை எண்ணிப்பார்க்கவே இதை எழுதுகின்றேன்.

இப்பொழுதெல்லாம் அரசியல் விழாக்கள் அல்லது அரசு சார்பான அரசியல் தலைவர்கள் கலந்துகொள்ளும் பொது நிகழ்ச்சிகள் என்றாலும் கூட, யாருக்காக அந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது என்ற காரண காரியங்களை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, அந்த அரசியல் கட்சி அல்லது தலைவரின்  துதி பாடும் பிரச்சார நிகழ்வாகவே அமைந்துவிடுவது எல்லோரும் அறிந்த ஒன்று தான்.

ஒரு வேளை அந்த தலைவரே விரும்பாவிட்டாலும் அதிகரிகளோ அல்லது அரசியல் அடிப்பொடிகளோ செய்யும் அலப்பறைகளும் நாம் அறிந்ததே!

ஆனால் அவை அனைத்தையுமே, மிகுந்த கட்டுப்பாட்டுடனும், கண்ணியத்துடனும், அந்த விழாவின் உண்மையான கதாநாயகர்களுக்குத் தான் அத்தனை மதிப்பும், மரியாதையும், முன்னுரிமையும், பாராட்டுக்களும் என்பதை முழுமையாக உணர்ந்து அதை கச்சிதமாக நிறைவேற்ற........,

அதை செயல்படுத்தும் ஒரு பெரும் கூட்டத்தை கட்டுப்படுத்தும் அந்த ஆளுமைத் திறன் தான் இங்கே போற்றுதலுக்குரியதாகிறது. 



தலைவனை துதிபாடினால் போதும் பதவிகள் தேடி வரும் என்று தொண்டர்கள் எண்ணும் நிலையை மாற்றி, அந்தத் தலைவன் இட்ட கட்டளையை பன்னாட்டு நிறுவன ஒழுங்கு முறையுடன், செயல்படுத்தினால் மட்டுமே தலைவனின் போற்றுதலுக்கு தகுதியானவர்களாவோம் என்று அவர்களை எண்ண வைத்த......

அந்த சுயநலமில்லாத...., பொது மக்கள் நலனும் மகிழ்ச்சியும் மட்டுமே தனது லட்சியம் என்று செயல்படும் தளப்தி ஸ்டாலின் அவர்களின் புது பாணி நிச்சயம் பாராட்டுக்குறியது. இந்த மாதிரியான தலைவர்கள் தான் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் இன்றைய அத்தியாவசிய தேவை!