Friday, February 14, 2014

ஜிடிபி, மோடி, கலைஞர், ஜெயலலிதவும்... பின்ன ஞானும்!!!

ஏம்ப்பா..   இந்த ஜிடிபி, பொருளாதார வளர்ச்சி.. லொட்டு லொசுக்கு, புண்ணாக்கு, கந்தாயம்ன்னெல்லாம் நம்ம மோடியும, அவரது அடிப்பொடிகளும் நாலஞ்சு வருஷமோ போட்டு பின்னி பெடலெடுத்து கத்து கத்துன்னு கத்தி.... ஒலக அளவுள குஜராத்து அவ்ளோ வளர்ச்சியடைஞ்சிருக்குறதா சொல்லிக்கிட்டு இருந்தாங்கள்ல....?

நம்மாளுங்களும் பப்பரக்கான்னு வாய பொளந்துக்கிட்டு அதெயெல்லாம் கேட்டுக்கிட்டு,...

ஆஹா...  பேஷ் பேஷ்..  சூப்பராத்தான்யா சொல்றாரு இந்தாளு. இவனை ஆட்சில ஒக்கார வச்சோம்ன்னா செமையா ஒரு மாற்றம் வரும்யான்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. இப்புடி இங்க இருக்குற டிகிரி படிச்சவிங்க எல்லாம் பேச ஆரம்பிச்சோடுன, நம்ம ஊரு படிக்காத ஆளுங்களும், இந்த படிச்ச ஆளுங்க சொன்னா பொய்யா இருக்காதுய்யா....!

நமக்கு ஒன்னும் புரியாட்டியும், அந்தாளு மோடி என்னென்னவோ பேசுறாரு, அத நம்ம படிச்ச பயபுள்ளைங்களும் ஆமோதிக்கிறாய்ங்க... அப்டீன்னா, இந்த ஆளு ஆட்சிக்கு வந்தா ஏதோ மாத்தம் இருக்கும்ன்னு தான்யா தோனுது...

இப்ப இருக்குற மாதிரி நம்ம நாடும் நாட்டு மக்களும் கேவலமா இல்லாம...  இந்தாளு மோடி ஆட்சிக்கு வந்தான்னா, வேளைக்கே போகலன்னாலும் மூனு வேளை சாப்பாட்டுக்கான சாமான் சட்டு எல்லாம் வீடு தேடி ஃப்ரீயாவே வந்துடும் போலருக்குய்யா, பஸ்ஸு, டிரெய்னு எல்லாம் நம்மள ஃப்ரீயாவே ஏத்திட்டுப் போயி எங்க விடுனுமோ அங்க விட்டுடும் போலருக்குய்யா.....,

இப்டீன்னெல்லாம் செமத்தியா கற்பனை செஞ்சிக்கிட்டு கனவு காண ஆரம்பிச்சிட்டாங்க.!

இதுக்கு நடுப்புற, நம்ம ஊர்லேர்ந்து ஒரு அம்மா, டொட்டொடைன்னு..... எண்ட்ரி கொடுக்குது....!   நானும் தான் “மாற்றம்” கொண்டு வருவேன்னு சொல்லிக்கிட்டு வண்டிய கெளப்பிடிச்சி....!!

“மாற்றம்”ன்னா ஹிந்தில “டாஸ்மாக்”ன்னு அர்த்தம் போலருக்குன்னு நம்மாளுங்களும் நெனச்சிக்கிட்டு...  ஆமாமா, நம்ம அம்மா மாதிரி யாராலயும் “மாற்றம்” ....   அதாங்க, “டாஸ்மாக்” கொண்டுட்டு வர முடியாதுன்னு நம்பி...  

இந்தியா முழுக்க டாஸ்மாக்காஆஆஆஆஆஆ... அப்டீன்னு உச்சு கொட்ட ஆரம்பிச்சிட்டாய்ங்க!!

ஸ்ஸ்ஸப்பாஆஆஆஆ....  மிடியல!

இதெல்லாம் பார்த்து நெம்ப கன்பீசன் ஆன நம்மள மாதிரி ரெண்டுங்கெட்டான் பொதுஜனமெல்லாம், என்ன தான்யா நடக்குது இங்க?ன்னு கிளம்பி டேட்டாவ எல்லாம் எடுக்க ஆரம்பிச்சாஆஆஆஆஆஆஆஆஆஆஆ....


இந்த கந்தாயம்...  அதாங்க ஜிடிபி.. ஜிடிபிங்கறாங்களே...  அது பத்து பாய்ண்ட்டுக்கு மேல இருந்தா தான் அந்த மாநிலத்தோட ஆட்சி சூப்பர் ஆட்சியாம்....  (இத நாங்க சொல்லலீங்க... மோடி மஸ்தானுங்க தான் நாலஞ்சு வருஷமா கத்திக்கிட்டிருக்காங்க!)

அப்புடிப் பார்த்தா, 2010 -11 ல....  அதாங்க, நம்ம கலைஞர் ஆட்சி தமிழ்நாட்டுல நடக்குறப்போ....  இங்க அந்த புண்ணாக்கு டிஜிபி.. ச்சீ... ஸாரிங்க... ஜிடிபி 13.14 பாய்ண்ட்டா இருந்திருக்குங்க!!!  அதாவது பத்து பாய்ண்ட்டுக்கு மேல இருந்திருக்கு....

ஆனா அதே பீரியட்ல மோடியோட குஜராத்துல எவ்ளோ தெரியும்ங்களா???   நம்மள விட 3 பாய்ண்ட் கம்மியா அதாவது வெறும் 10 பாய்ண்ட் தாங்க இருந்திருக்கு....!!!

அப்டி பார்த்தா மோடி மஸ்தானுங்க விட்ட அலப்பறைய தாண்டி திமுக காரங்க பலமா சவுண்டு விட்டுருக்கனும். ஆனா நம்ம பயபுள்ளைங்க, “நாங்க நாட்டுக்காக சேவை செய்யறோம், இது எங்க கடமை, இதெல்லாத்தியும் அலப்பறை பண்ணி அரசியல் ஆதாயம் தேடுறது அல்பமான விடயம்ன்னு” சொல்லி அசால்ட்டா இருந்திட்டாங்க!!!

ஓக்கே இதெல்லாம் போவட்டுங்க....!

இப்ப்ப என்னடா நிலைமைன்னு போயி பார்த்தா???   இந்தம்மா ஆட்சிக்கு வந்து மூனு வருஷத்துல இந்த ஜிடிபி அதாங்க தமிழ்நாட்டோட பொருளாதார வளர்ச்சி வெறும் 4.12 பாய்ண்ட்டா குறைஞ்சு போச்சுங்க!!!!

ஏன்யா இப்புடி பண்ணிட்டீங்கன்னு நம்ம நிதியமைச்சர் (அவர்ட்ட தான இது பத்தி கேக்கனும்) பன்னீரு கிட்ட கேட்டா, ஒத்த கையால அந்தம்மாவ சுட்டிக்காட்டி.....   அக்கட ஜருகண்டி, ஜருகண்டிங்கறாருங்க....!

சரின்னு அந்தம்மாட்ட போயி ஏம்மா இப்புடி பண்ணிட்ட தாயீன்னு கேட்டா????

என்ன மேன் கேக்குற நீயி? மாற்றம் வேணும்ன்னு ஒங்க ஆளுங்க தான கேட்டாங்க???

எஸ் மேடம்?

கர்ணாநிதி ஆட்சில ஜிடிபி 13.14 பாய்ண்ட்டுன்னா.. அது வளர்ச்சியா? வீழ்ச்சியா? மேன்...

வளர்ச்சி தான் மேடம்...

அப்ப வளர்ச்சிக்கு “மாற்றம்” என்ன மேன்?

”வீழ்ச்சி” மேடம்...

இப்போ என்ன மேன் நடந்திருக்கு?

13 லேர்ந்து வெறும் 4 ஆ வீழ்ச்சியடைஞ்சிருக்கு மேம்....

அப்ப உங்க ஆளுங்க கேட்ட மாற்றம் நடந்துருக்கா இல்லையா மேன்????


ஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ.....!!!



Thursday, February 6, 2014

கெஜ்ரிவால்கள் இதை உணர்வார்களா????!!!


ரெண்டு மாசத்துக்கு முன்னாடி, டெல்லி தேர்தல் பிரச்சாரத்தின் போது கூட ஆம் ஆத்மி கட்சியோட உறுப்பினராவும், தீவிர ஆதரவாளராகவும் இருந்த ஒரு ஆட்டோ ஓட்டும் தொழிலாளி, இன்றைக்கு அக் கட்சியோட தீவிரமான எதிரியாக மாறியதோடு மட்டுமல்லாமல், அக்கட்சியின் தலைவர் கெஜ்ரிவாலுக்கும் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்து கைதாகியிருக்கின்றார்....!!!

இது செய்தி....   ஆனா இதுல நாம கவனிக்க வேண்டிய விடயம் அல்லது சித்தாந்தம் சார்ந்த ஒரு கருத்து, இப்படியாக எதுவோ ஒரு புண்ணாக்கு இருக்கு!

ஒரு குறுகிய நிலப்பரப்பில் வசிக்கின்ற, கிட்டத்தட்ட பல்வேறு கலாச்சாரங்கள் கொண்ட, பல்வேறு மொழிகள் பேசக்கூடிய, பல்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த....

பூர்வீக உரிமை சார்ந்தோ, விவசாயம் அல்லது அது சம்பந்தமான தொழில்கள் சார்ந்தோ இல்லாமல்....

ஒருவருக்கொருவர், இது போன்ற தலைமுறை கடந்த பிணைப்புகள் எதுவும் இல்லாமல் சேர்ந்து வாழ்கின்ற மக்களிடம்.....

அவர்கள் அனைவருக்குமான அன்றாட வாழ்வியல் தொடர்பான சில அபிலாஷைகள் அல்லது சங்கடங்கள் அல்லது நெருக்கடிகள் அல்லது தேவைகள்....   இப்படி சிலவற்றை துல்லியமாக கணிக்கக் கூடிய ஆற்றல் பெற்ற ஒருவர் அல்லது ஒரு குழு அந்த உணர்வுகளைத் தெளிவாக தூண்டிவிட்டால்.....

அம்மக்கள் எந்த பாகுபாடும் இன்றி அந்த தலைவனையோ அல்லது அந்தக் குழுவையோ ஆதரித்து ஷண நேரத்தில் முடிவெடுத்து வாக்களிப்பது என்பது மிகவும் எளிதான விடயம் தான்!!!

ஆனால் அப்படி நொடி நேரத்தில் முடிவெடுத்து வாக்களித்தவர்கள், அவர்களின் அந்த தூண்டிவிடப்பட்ட உணர்வுகள் அல்லது நம்பிக்கைகள் அதே வேகத்தில் நிறைவேற்றப்படா விட்டாலோ அல்லது அப்படி நிறைவேற்றுவதில் சின்ன பிழை அல்லது குறைவு ஏற்பட்டாலோ கூட, அந்தத் தலைவனுக்கோ, குழுவுக்கு எதிராக அதே நொடிப்பொழுதில் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவும் தயங்கமாட்டார்கள்... அல்லது அதே மாதிரி மாற்றிக்கொள்ளவும் தயாராய் இருப்பார்கள்..!!!

இது தான் யதார்த்தம்...!  இது தான் நிதர்சனம்...!  இது தான் இப்பொழுது டில்லியில் நடந்து கொண்டிருக்கின்றது....!!  இதற்கு ஒரு உதாரணம் தான் முதல் பாராவில் சொல்லப்பட்டிருக்கின்ற செய்தி...!!!

ஆகவே தொலைநோக்கில், நீண்ட தூரம் பயணித்து, மக்களுக்கு சமூக நீதியின் அடிப்படையிலும், அடிமைப்பட்டுக் கிடக்கின்ற அனைத்துத் தரப்பு மக்களின் கல்வியறிவை மேம்படுத்துகின்ற செயலின் அடிப்படையிலும், ஒரு நாட்டில் ஒரு குடையின் கீழ் வசிக்கின்ற ஒரு பெரிய சமுதாயத்தையே முதலில் அவற்றில் இருக்கின்ற ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து..., அதற்குத் தேவையான சட்டதிட்டங்களை வடிவமைத்து, அதைச் செயல்படுத்தி.....

பிறகு ஏற்றத்தாழ்வுகளற்ற அந்த சமுதாயத்தை உலகத் தரத்திற்கு மேம்படுத்தி, உலக அளவில் வளர்ந்த சமுதாய மக்களுக்கு நிகரான குடிமக்களைப் பெற்ற ஒரு நாடாக தங்கள் நாட்டை நிர்மாணிக்கும் இலக்கோடு......

ஒரு தலைவன் அல்லது ஒரு குழு அல்லது ஒரு இயக்கம் தங்களுடைய கொள்கைகளை சிந்தித்து, வாதப் பிரதிவாதங்கள் நிகழ்த்தி, சிறந்ததாக வடிவமைத்துக் கொண்டு....

அதை மக்களிடம் தெளிவாகப் பிரகடனப்படுத்திக் கொண்டு களம் இறங்கி தொய்வில்லாமல் செயல்பட்டால்.... அக்கட்சி ஆட்சியதிகாரத்தைப் பிடிக்க குறைந்த பட்சம் இந்த தொலைத்தொடர்பு வசதிகள் கொண்ட காலகட்டத்திலேயே கூட பத்தாண்டுகளுக்கு மேல் ஆகலாம்...!!!

அப்படியொரு தொலை நோக்குச் சித்தாந்தக்களுடன் செயல்பட்டு ஆட்சியைப் பிடிக்கும் ஒரு இயக்கத்தை வீழ்த்துவது என்பது அவ்வளவு எளிதான செயல் அன்று...!!!

அதை விடுத்து மக்களுக்கு போதையை ஏற்றி விட்டு, அவர்கள் கையை நீட்டும் போது ஊறுகாயாக தன்னை முன்னிறுத்திக் கொண்டவர்கள், போதை வடிந்தவுடன் தேவையற்ற குப்பையாகத்தான் தெரிவார்கள்...!!!

கெஜ்ரிவால்கள் இதைப் புரிந்து கொண்டு செயல்பட்டால் தான் நல்லது. அதை விடுத்து மக்களின் அன்றாட செயல்பாடுகளுக்கான தீர்வுக்காகத்தான் ஆட்சியே தனக்கு வேண்டும் என்று எண்ணினால் அதை அதிகாரிகளே செய்து விடுவார்கள். பேரியக்கங்களும், கட்சிகளும் தேவையில்லை.

ஆனால் அதிகாரிகளின் ஆட்சி என்பது ஆரம்பத்தில் உவப்பாகத்தான் தோன்றும் ஆனால் போகப் போக அதன் அடக்குமுறைகளும், அடிமைத்தனத்தை வளர்க்கக் கூடிய எதேச்சாதிகாரங்களையும் மக்கள் உணரும் போது அதை விட நரகம் எதுவுமே இருக்க முடியாது.

படித்த இளைஞர்கள் முதலில் இதை உணர்ந்து அரசியல் ஞானம் பெற வேண்டும்.


Wednesday, February 5, 2014

2 ஜி ஆடியோ ரிலீஸ்... திமுக வெற்றியை பாதிக்குமா?!

கடந்த நான்கு வருடங்களாக அகில இந்திய அளவில் வடிவமைக்கப்பட்டு, திடீர் திடீர் திருப்பங்களுடனும், பக்கா ட்விஸ்ட்டுகளுடனும், பற்பல கிளைக் கதைகளுடனும் அறங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு நாடகம் 2 ஜி அலைக்கறை ஊழல் வழக்கு!

இந்த வழக்கின் ஒரு கிளைக் கதை தான் கனிமொழி மூலமாக கலைஞர் டீவிக்கு வந்ததாகச் சொல்லப்பட்ட 200 கோடி ரூபாய் பணம். ஒன்னே முக்கால் லட்சம் கோடி ரூபாய் லஞ்சம் என்று சொல்லப்பட்ட மெயின் கதையில் கடைசியாக ஒன்றுக்கும் குறைவாக கால் சதம் கூட தேறாத வெறும் 200 கோடி ரூபாய் மட்டுமே கலைஞர் குடும்பத்திற்கு வந்து சேர்ந்திருப்பதாக சொல்லப்படுவது தான் இந்த கிளைக் கதையில் உள்ள பெரிய லாஜிக் ஓட்டை!

ஆனால் கதைக் குழுவில் இருப்பவர்கள் இது பற்றிச் சொல்லும் போது, கதையில் அடுத்தடுத்து வரும் ட்விஸ்ட்டுகளும், விறுவிறுப்புக் காட்சிகளும், இந்த லாஜிக் ஓட்டையை மக்கள் கண்களில் இருந்து இலகுவாக மறைத்து விடும் என்கின்றார்கள்.

ஓக்கே இந்த முன்னுரையோடு இப்ப மெயின் மேட்டருக்கு வருவோம். கடந்த ஒரு வாரமாக தமிழ்கத்தில் பற்றவைக்கப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக அது புகைய ஆரம்பித்து நேற்று டெல்லியில் வெடித்திருக்கும் விஷயம் தான் கனிமொழி சம்பந்தப்பட்ட 2ஜி கிளைக் கதையில் வருகின்ற சில நபர்களுக்கிடையேயான தொலைபேசி உரையாடல்களின் பதிவுகள் அடங்கிய ஆடியோ ரிலீஸ்!!

வரும் ஏப்ரல் 16 முதல் நாடாளுமன்ற தேர்தல்கள் துவங்கவிருக்கின்றன என்று தேர்தல் கமிஷன் டெல்லியில் அறிவித்த சில மணித்துளிகளில் இந்த 2ஜி கிளைக் கதையின் ஆடியோ ரிலீஸை அதே டெல்லியில் வைத்து ஆம் ஆத்மி கட்சியின் பிரஷாந்த் பூஷன் வெளியிட்டிருக்கின்றார்.

கலைஞர் குடும்பம் சார்ந்த ஆடியோ என்பதால், அகில இந்திய அளவில் கூட நல்ல மார்க்கெட் இருக்கின்றது என்ற காரணத்தால் தமிழ்கம் மட்டுமல்லாது இந்திய அளவிலான் ஆங்கில ஊடகங்களும் கூட கேஸட்டைப் பெற்றுக்கொண்ட கையோடு அதை இருந்து சிறப்பாக ஒலிபரப்பி நன்றாக கல்லா கட்டிக் கொண்டிருக்கின்றன.

சரி, இப்போ இதனால் திமுகவுக்கு ஏற்படவிருக்கின்ற சாதக பாதகங்கள் அல்லது இந்த பரப்புரைகளால் அதை திட்டமிட்டு செயல்படுத்திக் கொண்டிருப்பவர்களின் எதிர்பார்ப்புகள் எந்த அளவிற்கு பூர்த்தி செய்யப்படும், என்பதையெல்லாம் கொஞ்சம் தெளிவாகப் பார்க்கலாம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை திமுகவுக்கு எதிரான பரப்புரைகள் என்பது புதிதான ஒன்று அல்ல.  அதனால் இந்த கேஸ்ட் மேட்டர் எல்லாம் அந்த பத்தோடு பதினொன்று தான் என்பதில் வாக்களிக்கப்போகும் பொதுமக்களுக்கே சகஜமாகத் தெரிந்த விடயம் தான். கலைஞருக்கு எதிரான சர்க்காரியா கமிஷன் குற்றச்சாட்டுகள் தொடங்கி, விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளித்து ராஜீவைக் கொன்றதாக தீவிரவாத முத்திரையில் பயணித்து, 2ஜி அலைக்கற்றை ஊழல் என்ற அகில இந்திய அளவிலான ஊழல் குற்றச்சாட்டு வரை இந்தப் பயணம் தமிழக மக்களுக்கு பழகிப் போன ஒன்று தான்.

ஆனால் திமுக எதிர்ப்பாளர்களின் இந்த முயற்சிகள் ஒவ்வொரு முறையும் திமுகவை அந்தந்த காலங்களில் நடைபெற்றிருந்த ஓரிரு தேர்தர்தல்களில் தோல்வியைத் தழுவ வைத்திருக்கின்றதே தவிர, திமுகவின் வளர்ச்சியையும், இன்றைய தேதியில் அகில இந்திய அளவில் திமுகவின் ஆளுமையையும் ஒரு சிறு துளி அளவு கூட மட்டுப்படுத்துவதற்கு மாறாக மட்டற்ற வளர்ச்சியைத்தான் ஒவ்வொரு தேர்தல் தோல்விக்குப் பிறகும் திமுகவுக்குத் தந்திருக்கின்றது. இது யாரும் மறுக்க இயலாத வரலாற்று உண்மை.

இந்த அடிப்படையில்  பார்க்கும் பொழுது, 2ஜி பிரச்சினை என்பதற்கான விலையை கடந்த 2011 சட்டமன்ற தேர்தலிலேயே திமுக கொடுத்து விட்டது. அந்தத் தேர்தலுக்குப் பிறகு இந்த விவகாரம், எப்படி ஒன்றுமில்லாமல் நீர்த்துப் போய் நீதிமன்றத்தில் அல்லாடிக் கொண்டிருக்கின்றது என்பதையும், அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆ. ராசாவாகட்டும், கனிமொழியாகட்டும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு சிறைக்குச் சென்றதாகட்டும், அதன் பிறகு இன்று வரையிலும் நீதி மன்றத்திற்கு பெருமளவில் ஒத்துழைப்பு நல்கி, இந்த வழக்கை விரைந்து முடிக்க அவர்கள் காட்டுகின்ற நேர்மையாகட்டும்.... இதையெல்லாம் தமிழக மக்கள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டு தான் இருக்கின்றார்கள்.

அதே சமயம், இரண்டுக்கும் மேற்பட்ட ஊழல் வழக்குகளில் ஒரு சிலவற்றில் கீழ் கோர்ட்டில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்று அதில் ஜாமீன் பெற்று வெளியில் வந்து மேல் முறையீட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் உயர்நீதிமன்ற வழக்கில் 130 தடவைக்கும் அதிகமாக வாய்தா பெற்றும், நீதிபதிகள் முதல் அரசு வழக்குறைஞர்கள் வரை குற்றம்சாட்டப்பட்டவகளே மாற்றக் கோருகின்ற விநோத நிகழ்வுகளையும்,  முதல்வராக இருக்கும் போதே கூட வருமானவரி கட்டாமல் ஏமாற்றிய வழக்கில் 17 வருடங்களாக நீதி மன்றத்திற்கு தண்ணி காட்டிக் கொண்டிருந்ததற்கு உச்சநீதி மன்றத்தால் எச்சரிக்கப்பட்டு, இன்னும் நான்கு மாத கெடுவிற்குள் அவ்வழக்கை முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கின்ற நெருக்கடியில் இருந்து கொண்டிருக்கும் இன்றைய தமிழக முதல்வரைப் பற்றியும் தமிழக மக்கள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டு தான் இருக்கின்றார்கள்.

இதையெல்லாம் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு தமிழக மக்கள் பத்தாம் பசலிகளாகத்தான் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் திமுக தரப்பை மட்டுமே அவதூறுகள் செய்து கொண்டிருக்கும் ஊடகங்களையும் தமிழக மக்கள் உற்று நோக்கிக் கொண்டு தான் இருக்கின்றார்கள். ஊடகங்களின் இந்த ஒரு தரப்பான அவதூறுகள், கொஞ்சம் கொஞ்சமாக திமுகவினர் மேல் ஒரு வித அனுதாபத்தையும், அதிமுகவின் மீதான ஊடகங்கள் பேச மறந்த அல்லது மறுக்கும் விமர்சனங்களை  மக்களே பேச ஆரம்பித்திருக்கும் நிலையும் தான் இப்பொழுது தமிழகத்தில் ஏற்பட்டிருக்கின்றது.

தமிழகத்தில் முக்கியமான இரு பெரிய கட்சிகளின் மீதான விமர்சனங்களையும் சமமாக எடுத்து வைத்து மக்கள் மன்றத்தில் அதை விவாதப் பொருளாக கட்டமைக்க வேண்டிய கடமையில் இருந்து தவறி செயல்படும் ஊடகங்களால்.....

மக்கள் திமுக சார்பிலும், ஊடகங்கள் அதிமுக சார்பிலும் நின்று வாதிடும் நிலை இன்றைக்கு இயல்பாகவே தமிழகத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது என்பது தான் யதார்த்தம்.

ஊடகங்கள் பேச்சை நம்பி திமுகவை ஆட்சிக் கட்டிலில் இருந்து இறக்கிய தமிழக மக்கள், மூன்று ஆண்டுகள் கழிந்த நிலையிலும்...  இன்றைக்கும் அதே திமுகவின் மேல் அதே குற்றச்சாட்டை வைத்து அதே ஊடகங்கள் வரும் பாராளுமன்ற தேர்தலையும் அதிமுகவுக்கு ஆதரவாக பயன்படுத்துவதை ஒருவித அசூயையுடன் தான் கவனிக்கின்றார்கள்.

கடந்த திமுக ஆட்சியில் செய்யத்தவறியாக சுட்டிக்காட்டப்பட்ட கடமைகள், செய்ததாகச் சொல்லப்பட்ட தவறுகள்.... இவற்றையெல்லாம் இந்த மூன்று ஆண்டுகளில் அதிமுக அரசு எந்த அளவிற்கு சரி செய்திருக்கின்றது என்ற மக்களின் கேள்விகளுக்கு அதிமுகவிடமோ, ஊடகங்களிடமோ பதில் எதுவும் இல்லை என்கின்ற போது.....

திமுகவின் உட்கட்சிப் பிரச்சினைகளிலும், ஏற்கனவே குற்றம்சாட்டப்பட்டு சிறை சென்று, நடந்து கொண்டிருக்கின்ற அதுவும் வேகமாக நடந்து கொண்டிருக்கின்ற வழக்கை மீண்டும்  பூதாகரமாக.... சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும்... அதிமுகவும், பாஜகவும் எடுத்து வைப்பதும், ஊடகங்களும் அதையே தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பதும்....

கடந்த மூன்றாண்டுகால அதிமுக அரசின் தோல்வியை அல்லது கையாலாகாத தனத்தை மறைப்பதற்கான முயற்சியாகவே இது மக்களால் பார்க்கப்படுகின்றது. மேலும் 91 - 96 ஜெயலலிதா ஆட்சியில் மிகப் பெரிய அளவிலான ஊழல்களையும், அராஜகங்களையும் செய்த ஜெயலலிதா ஆட்சியை, மிகக் கேவலமான தோல்வியைத் தந்து தோற்கடித்த தமிழக மக்கள், அந்த ஊழல்களுக்கான வழக்குகள் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையிலும், 2001 இல் மீண்டும் ஆட்சியில் அமர வைத்தனர்.

அப்படியிருக்கும் போது, 2ஜி ஊழல் குற்றச்சாட்டின் ஒரு கிளைக் கதையை எடுத்துக் கொண்டு க்டந்த தேர்தலிலும் இதே போன்ற ராடியா டேப் விவகாரத்தை பூதாகரமாக்கிப் பேசி, அதை நம்பி மக்களும் திமுகவுக்கு எதிராக வாக்களித்து விட்ட நிலையில், அது வழக்கிற்கு சம்பந்தமில்லாதது என்று உச்சநீதிமன்றம் சொல்லிவ்விட்ட நிலையில்.... இந்த தேர்தலிலும் திமுகவை வீழ்த்த அவர்கள் எடுத்திருக்கும் அதே மாதிரியான் ஆடியோ டேப் விவகாரம் என்பது நிச்சயம் பூமராங்காகத் திரும்பி அவர்களையே தாக்கும் என்பதில் வேறு கருத்துக்கு இடமில்லை.

ஆகவே இப்பொழுது தமிழக ஊடகங்கள் எல்லாம் அதிமுகவைக் காப்பாற்றுவதை நிறுத்திவிட்டு, தங்களின் நம்பகத்தன்மையை மக்களிடம் காப்பாற்றிக்கொள்ளும் முயற்சியில் களம் இறங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை உணர வேண்டும்.

ஒரு வேளை இவ்வழக்கில் கனிமொழி மீண்டும் சிறைச் செல்ல வேண்டியிருந்தால், வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாற்பதையும் திமுக வெல்லும்!!!!!

Tuesday, February 4, 2014

அரசியல் கதம்பம் - LAST ONE WEEK....!

இந்த வருஷத்துக்கு மொதோ மொதோ கூடுற சட்டமற்ற கூட்டத்தொடர், ஒரு பதினைஞ்சு இருவது நாளுக்கு நடந்துச்சினா, நம்ம தமிழ்நாட்டுல கடந்து மூனு மாசமா நடந்த, அடுத்த மூனு மாசத்துக்கு நடக்கவிருக்குற மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளையெல்லாம் பேசி தீர்த்து, கூட்டணிக் கட்சி எதிர்க்கட்சி காரங்க கருத்துக்களையும் கேட்டு ஒரு முடிவுக்கு வர சரியா இருக்கும்....

ஆனா அதெல்லாம் வேண்டாத வேலைங்கற மாதிரியே ஒரு நாலஞ்சு நாள் மட்டும், மாச கடேசில கணக்கு காமிக்க கேசு போடுற போலீஸ் கணக்கா இந்த கூட்டத்தொடரை நடத்துறாங்க....

சரி போவட்டும், இருக்குறதே நாலு நாளு தான் இதுலயும் அங்க என்னடான்னா? எதிர்க்கட்சியோட உட்கட்சி பிரச்சினையையும், ஒரு தலைவரின் குடும்ப பிரச்சினையையும் பேசி கலாய்க்கிறதுன்னா என்ன அர்த்தம்????

ஓக்கே அது முக்கியமான பிரச்சினைன்னு நீங்க சொல்றீங்களா? ஏத்துக்குறோம், இன்னிய தேதில எதிர்க்கட்சி தலைவரை விட அரசு அதிகாரம் அதிகம் கொண்டவர் முதல்வர் தானே? அவர் குடும்பத்துல அல்லது அவரது தோழிக்கும் அவருக்கும் நடந்த பிரச்சினை, அதுவும் கட்சிப்பொருப்பாளர்கள் நூற்றுக்கணக்கானவர்களை மாற்றும் அளவிற்கு சென்ற பிரச்சினை பத்தியும் பேசித்தீத்துடுவோம்ன்னு......

நம்ம தளப்தி சொல்றார்......

நியாயம் தானே அவரு சொல்றது?!

இதெல்லாத்தையும் வுட்டுப்புட்டு அழகிரி வூட்டு கக்கூஸ்ல போயி குந்திக்கிட்டு பயாஸ்கோப்பு காட்டி, அங்க இருக்குற சின்னப்புள்ளங்கள எல்லாம் கூட்டி பஞ்சு மிட்டாய் கொடுத்து பேட்டி எடுத்துப் போடுறாய்ங்க....!!!

போங்கய்யா நீங்களும் உங்க ஊடக தர்மமும்...!!


************************************************************************

கலைஞர் திமுக தலைவரா இருக்குறதுனால, கலைஞர் டீவில திமுகவுக்கு ஆதரவான செய்திகள் வரும்.....

ஜெயலலிதா அதிமுக பொதுச்செயலாளரா இருக்குறதுனால ஜெயா டீவில அதிமுகவுக்கு ஆதரவான் செய்திகள் வரும்....

இதே மாதிரி தான் மக்கள் டீவியும்...

இதெல்லாம் ஓக்கே! 

அதனால இந்த டீவிலல்லாம் வர்ற அரசியல் சம்பந்தப்பட்ட செய்திகளை வைத்து நாம் ஒரு கட்சிக்கு ஆதரவான அல்லது எதிரான முடிவுகளை எடுக்க முடியாது... எடுக்கவும் கூடாது..!

இதுவும் ஓக்கே..!

இதே மாதிரி ஐ ஜே கே ங்கற ஒரு கட்சி, அது அதி தீவிர மோடி மற்றும் பாஜக ஆதரவு நிலைப்பாட்டுடன் தான் தன் ஆரம்ப காலம் தொட்டு, மிகத் தெளிவாகவும், வெளிப்படையாகவும் செயல்பட்டு வருகிறது. வரும் தேர்தலில் பாஜகவுக்கு தன்னோட ஆதரவை அவர்கள் கூட்டணி அமைக்க முயற்சி எடுக்கும் முன்பாகவே வெளிப்படையாக அறிவித்து செயல்பட்டும் வருக்கிறது. அப்படிப்பட்ட அந்த கட்சியின் தலவரோட டீவி புதிய தலைமுறை......

அந்த டீவில வர்ற அரசியல் சம்பந்தப்பட்ட செய்திகள் எல்லாம் நடுநிலைமையானது என்று எண்ணி யாரவாது நினைச்சிட்டிருந்தீங்கன்னாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ.....

ஸாரி... இதுவரைக்கும் உங்களுக்கு புரியலைன்னாலும், இதுக்குமேலயும் அத நம்பி, அதில் வரும் செய்திகள் அல்லது விவாதங்களின் அடிப்படையில் ஆதாரமா வச்சிக்கிட்டு அரசியல் பேசுனீங்கன்னா........, பேசுனீங்கன்னா..... நீங்க பெரிய டூபாக்கூர் தான் ஸார்....!!!!


**********************************************************************

எப்பா.... ஒன்னரை வருஷமா பொதுக்குழுவெல்லாம் கூட்டி தனிச்சி நிக்கப்போறோம்.... நாற்பதுலயும் நிக்கப்போறோம்.... பிரதமராவப் போறோம்னெல்லாம் உதார் விட்டுக்கிட்டு திரிஞ்சாய்ங்க.....

இதக் கேட்டுட்டு, வழக்கம் போல நம்ம மானங்கெட்ட ஜால்ரா ஊடகமெல்லாம், அம்மா அதிரடி, ஆட்டுக்குட்டி காமெடின்னெல்லாம் தலைப்புப் போட்டு எழுதி எழுதி தள்ளுனாய்ங்க.....

இப்ப என்னன்னா? ரெண்டு நாளா வரிசைல வந்து ஒவ்வொருத்தரா ஜோடி போட்டுட்டுப் போறாய்ங்க....

அத இந்த நாறவாய் நாளேடுகளும் அம்மாவின் கூட்டணி முழக்கம்ன்னு வாந்தி எடுத்து வச்சிருக்காய்ங்க....!!!

கூட்டணி வக்கிலன்னா, அதிரடிங்கறான்.....! கூட்டணி வச்சா, முழக்கம்ங்கறான்....!!!

இதே திமுகவுல....

கூட்டணி வக்கிலன்னா, தனிச்சிவிடப்பட்ட திமுகங்கறான்...! கூட்டணி வச்சா, வழியில்லாம வழுக்கிவிழுந்த திமுகங்கறான்....!!!

ஹேய்.... எதாச்சும் ஒரு ஃபார்முக்கு வாங்கடா... மக்கள்லாம் உங்கள புரிஞ்சிக்கா ஆரம்பிச்சிட்டாங்கடா....!!! இப்புடியே போனீங்கன்னா ரொம்ப அசிங்கப்பட்டுடுவீங்க... ஆமா!!!!


**********************************************************************

நேத்து முன் தினம் விஜயகாந்த் பேசுனதை கூட்டி கழிச்சி, ஜம்புல்டு செண்டன்ஸ் கோக்குறமாதிரி எடுத்துப் போட்டு பார்த்து புரிஞ்சிக்கிட்ட வரைக்கும்......

1. ஜெயலலிதாவை தாக்கு தாக்குன்னு தாக்குனதால கண்டிப்பா ஜெயலலிதா கூட கூட்டணி வச்சுக்க மாட்டார்.

2. ஜாதிக்கட்சி, மதக் கட்சி, இலங்கை பிரச்சினையை சொல்லி ஓட்டு வாங்குற கட்சி இதெல்லாம் வரக்கூடதுங்கற மாதிரி தெளிவாவும் நமக்கு புரியாத மாதிரியும் பேசுனதால பாஜக கூட்டணியில சேர்ற வாய்ப்பு கிட்டத்தட்ட இல்லைங்கற மாதிரியும் தெரியுது.

3. ஞானதேசிகன் வாழ்த்து அனுப்பியிருப்பதும், ஒரு இடத்தில் சோனியா காந்திய உயர்வா பேசுனதுனாலயும் காங்கிரஸோட கூட்டணி வைப்பாரோன்னு ஒரு டவுட்டு வருது.

4. திமுக தலைவரை கலைஞர்ன்னு சொன்னதும், திமுகவையும் கலைஞரையும் ஒரு வார்த்தை கூட திட்டாததும் வச்சி பார்த்தா.., ஒரு வேளை காங்கிரஸோடு சேர்ந்து திமுகவுக்கு ரூட்டு போடுற மாதிரியும் தெரியுது.

5. கடேசில இவர் கேட்ட கேள்விக்கு எல்லாம் தொண்டர்கள் எப்படி கையாட்டினாலும், அவர்கள் கூட்டணி வேணாம்ன்னு தான் சொல்றாங்கன்னு இவரே சொன்னத வச்சிப் பார்த்தா???? பேரம் எதுவும் சரியா படியலன்னா, தொண்டர்கள் விருப்பப்படி தனியா நிக்கறேன்னு சொல்லி ஓட்டு வாங்கலாம்ன்னும் ஒரு கணக்கு இருக்குறதும் புரியுது!

மேல உள்ள அஞ்சு பாய்ண்ட்டையும் வச்சி நீங்களே கூட்டி கழிச்சி ஒரு முடிவுக்கு வந்துக்குங்க மக்கா...! இப்பவே ஒரு ஃபுல்லு சாத்துன மாதிரி கிர்ர்ருங்க்து...!!!!



மூவர் தூக்கு தண்டனையும், காங்கிரஸ் மற்றும் ஈழ உணர்வாளர்கள் நிலைப்பாடுகளும்!

பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்கு தண்டனைக்கு தடை விதிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அழுத்தமாக வாதிட்டிருப்பதாக செய்தி வந்ததையடுத்து....

தமிழகத்தில் இருக்கின்ற ஈழ உணர்வாளர்களும், வைக்கோ வகையறா ஆதரவாளர்களும், உடனடியாக காங்கிரஸுக்கு எதிராக போர்க்கொடியைத் தூக்கி ஓட்டுக்கேட்டு காங்கிரஸ் தமிழகத்தின் உள்ளே வரக்கூடாது என்று வீரவேசம் காட்டி வருகின்றனர். 

மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டில் நமக்கும் சிறிதளவு கூட உடன்பாடில்லை என்பதை தெளிவுபடுத்திவிட்டு, இது தொடர்புடைய சில விடயங்களையும் இங்கே தெளிவுபடுத்திக்கொள்ள விரும்புகிறோம்.

தேசிய அளவில் இந்தப் பிரச்சினையை அணுகும் காங்கிரஸ் கட்சி, அந்தப் பார்வையில் தங்களுடைய நிலைப்பாட்டிற்கு நியாயம் கற்பிக்கின்றது. அதனால் இப்பொழுது காங்கிரஸுக்கு எதிராக தமிழக தமிழர்கள் எடுக்கும் நடவடிக்கையின் பலனை நேரடியாக அனுபவிக்கப்போவது, பாஜக மட்டுமே.

ஆகவே தமிழக தமிழர்கள் எடுக்கின்ற இந்த முடிவினால் மத்தியில் ஆட்சியே அமைக்கக்கூடிய வாய்ப்பைப் பெறவிருக்கின்ற பாஜகவை இந்த ஈழ உணர்வாளர்களும், அந்த பாஜகவோடு கூட்டணி அமைத்து அகில இந்திய அளவில் அதற்காக பிரச்சாரமும் மேற்கொள்ளப்போவதாக அறிவித்திருக்கின்ற வைக்கோ அவர்களும்.....

பாரளுமன்றம் துவங்கவிருக்கின்ற இந்த அரிய வாய்ப்பைப் பயன் படுத்தி காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரும் நெருக்கடியை பாஜகவை விட்டு தரச்சொல்ல வேண்டும். அத்தோடு மட்டுமல்லாமல், ஈழத்தமிழர் விவகாரத்தில் தமிழக தமிழர்களின் விருப்பத்திற்கிணங்க, அவர்களுக்குஆதரவான பாஜகவின் நிலைப்பாட்டினையும் பாராளுமன்றத்தில் பிரகடனப்படுத்தச் சொல்ல வேண்டும்.

இது பாஜகவுக்கு மட்டுமல்லாமல், ஆம் ஆத்மி, கம்யூனிஸ்டுகள் போன்ற தமிழகத்தில் வாக்குக்கேட்டு வரவிருக்கின்ற அனைத்துக் கட்சிகளுக்குமான தங்கள் கோரிக்கையாக அல்லது கட்டளையாக தமிழக்த்தில் இருக்கின்ற வைக்கோ வகையறாக்கள் உள்ளிட்ட அனைத்து ஈழ உணர்வாளர்களும் அறிவிக்க வேண்டும்.

இதை ஏற்று அதன் படி பாரளுமன்றத்தில் இன்னும் ஒரு வார காலத்திற்குள் செயல்படாத எந்தக் கட்சியையும், அதனுடன் கூட்டணி வைக்கின்ற எந்த தமிழக கட்சியையும் புறக்கணிக்கப் போவதாக இந்த கூட்டமைப்பு பிரகடனம் செய்ய வேண்டும்.

அதைத் தவிர்த்து, காங்கிரஸை மட்டும் குடைந்து கொண்டிருந்தால், தமிழக மீனவர் பிரச்சினை மற்றும் ஈழத்தமிழர் பிரச்சினைகளில் காங்கிரஸ் போன்று ஒரே கண்ணோட்டமும் செயல்திட்டமும் கொண்டிருக்கின்ற பாஜக போன்ற கட்சிகள் தமிழக வாக்காளர்களின் பலனைப் பெற்று தமிழர்கள் கண்களையே குத்துகின்ற நிலையை தவிர்க்க இயலாது.

ஆகவே உண்மையான உணர்வுகள் கொண்ட தமிழர்கள், தங்களது கோரிக்கையை ஆட்சிக்கு வர வாய்ப்பிருக்கின்ற அனைத்து தேசியக் கட்சிகளுக்கும் முன்பாக
பொதுவானதாகத்தான் வைக்க வேண்டும்.

அதை விடுத்து காங்கிரஸுக்கு மட்டும் எதிராக இப்பிரச்சினையை மக்களிடம் காட்ட முயற்சிப்பது, தங்களது மிகக் கேவலமான சுயநல ஆதாயத்திற்கான முயற்சியாகத்தான் பார்க்கப்படும். அது தான் உண்மை.