Friday, January 10, 2014

நாடாளுமன்ற தேர்தலும் திமுகவின் பலமும்...!!

1967 இல் தொடங்கி கடந்த 2009 தேர்தல் வரை நடைபெற்றிருக்கும் அனைத்து நாடாளுமன்ற தேர்தல்களிலுமே திராவிட முன்னேற்ற கழகம் பங்கேற்று தனது முத்திரையை பலமாக பதித்து வந்திருக்கின்றது.

இந்த 46 ஆண்டுகால வரலாற்றில் தி மு கழகம் எண்ணற்ற ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்திருந்தாலும், நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றைப் பொறுத்தவரை இந்த 12 தேர்தல்களில் பெரும்பாலானவற்றில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் சராசரியாக 50 சதவிகிதத்திற்கும் அதிகமான இடங்களை திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி வேட்பாளர்கள் கைப்பற்றி வெற்றிவாகை சூடியிருக்கின்றனர்.

இதில் 84, 89 மற்றும் 91 ஆம் வருட தேர்தல்களில் தமிழகத்தைப் பொறுத்தவரை இந்திராகாந்தி படுகொலையும், எம்ஜிஆர் உடல்நிலை பாதிப்பும், ராஜீவ்காந்தி படுகொலையும் திமுக மிக மோசமான தேர்தல் எதிர்வினையை சந்திக்க வேண்டியிருந்ததால் இந்த மூன்று தேர்தல்களை மட்டும் விதிவிலக்காகத் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். 

இதில் ஒரு சில தேர்தல்களில் திமுகவோடு தோழமையாக இருந்து தேர்தலை சந்தித்த கட்சிகள் வென்றெடுத்த தொகுதிகள் அனைத்தையும் ஒன்று சேர்த்தால் சேர்த்தால் இந்த சதவிகிதமானது 75 ஐயும் கூட தாண்டிவிட்டிருக்கின்றது.

இது ஒரு மிக முக்கியமான வரலாற்றுப் புள்ளி விவரம். அதாவது திமுக முதல் முதலாக தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து 2009 இல் நடந்த பாராளுமன்ற தேர்தல் வரை மாநில அளவில் எந்தக் கட்சியை மக்கள் தேர்ந்தெடுத்திருந்தாலும், தமிழக வாக்காளர்கள் மத்தியில் ஆட்சி அதிகாரத்தை அளிப்பதைப் பொறுத்தவரை திராவிட முன்னேற்ற கழகத்தின் மேலேயே பெரும்பாலான தேர்தல்களில் அதிகமான நம்பிக்கையை வைத்து டெல்லிக்கு அனுப்பி வைத்திருக்கின்றார்கள். 

இந்த வழக்கத்தில் இருந்து 1998 இல் தமிழக மக்களிடம் ஏற்பட்ட ஒரு சின்ன ஊசலாட்டமானது தவறு என்று அப்பொழுது டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஜெயலலிதாவால் ஒரே ஆண்டிலேயே நிரூபிக்கப்பட்டுவிட்ட காரணத்தால், அதற்கு அடுத்த வருடம் அதாவது 1999 லேயே மீண்டும் திமுகவையே அதிகார பலத்துடன் டெல்லிக்கு அனுப்பி வைத்துவிட்டனர் நம் தமிழக வாக்காளர்கள்.

பொதுவாக தமிழர்கள் உணர்ச்சிக்கு அடிபணிந்துவிடும் மனநிலை கொண்டவர்கள், சினிமா மோகத்தில் ஆட்சியையே தாரை வார்ப்பவர்கள் என்ற ஒரு பார்வை மற்றவர்களிடம் இருப்பது உண்டு. ஆனால் அந்த மாதிரியான தங்களுடைய சிற்றின்பம் மாதிரியான தேவைகளுக்கு மாநில அரசு அமைப்பதில் வேண்டுமானால் தமிழர்கள் அலட்சியப் போக்குடன் நடந்துகொள்வார்களே தவிற.....

மத்திய அரசு ஆட்சி என்று வருகின்ற போது, இந்த மாதிரி செண்டிமெண்ட்டுகள், சில்லறைத்தனங்களை எல்லாம் தூக்கி கிடாசி விட்டு, மத்திய அரசில் ஆதிக்கம் செலுத்தினால் மட்டுமே..., தமிழகத்திற்கு தொலை நோக்கிலும், நிரந்தரத் தன்மையோடும், தமிழக மக்களின் வாழ்வாதாரத்தையே மேம்படுத்தக் கூடியதுமான திட்டங்களையும், சட்டங்களையும் போட வைத்து தமிழகத்திற்கு நிரந்தர பலன் தரக்கூடிய பேரின்பத்தை அடைய முடியும் என்பதை தெளிவாக உணர்ந்து.....   

அதை சாதிப்பதற்கு திமுக மட்டுமே சரியான தேர்வாக இருக்க முடியும் என்ற தெளிவான முடிவோடு, கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக மத்திய ஆட்சி அதிகாரத்திற்கு திமுகவை அனுப்பி வைத்துக்கொண்டிருக்கின்றார்கள்.

திமுகவும் தமிழக மக்களின் இந்த நம்பிக்கையை வீணடிக்காமல், கொஞ்சம் கொஞ்சமாக மத்தியில் ஒரு கட்சி ஆட்சி என்ற பிம்பத்தை உடைத்து கூட்டணி ஆட்சி ஒன்றே பல்வேறு பிராந்தியங்கள், கலாச்சாரங்கள், மொழிகள், இனங்கள் அடங்கிய இந்தியாவுக்கு சரியான தீர்வாக இருக்கும் என்பதை கொள்கையாகக் கொண்டு அதை கடந்த 1989 முதல் சாதித்தும் காட்டி வந்திருக்கின்றது. 

முதலில் பல்வேறு சிறு கட்சிகளின் கூட்டணி ஆட்சியாக அமைக்கப்பட்டு அதில் ஸ்திரத்தன்மை இல்லாத நிலை ஏற்பட்டவுடன், ஒரு பெரிய தேசியக் கட்சியுடன் சில பிராந்தியக் கட்சிகள் இணைந்த கூட்டணி ஆட்சி என்ற முறையை 1999 முதல் அரங்கேற்றி அதை இன்றளவிலும் வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றது. 

இந்தியாவைப் பொறுத்தவரை மத்திய அரசில் இந்த மாதிரியான ஒரு ஆட்சி முறை நாட்டின் அனைத்து பிராந்தியங்களுக்கும் சம ரீதியிலான பலன் தரக்கூடிய சிறந்த தீர்வாகவும் அதை அனைவருமே ஏற்றுக்கொண்டிருப்பதற்கும் திமுகவின் மிகப்பெரிய பங்களிப்பை எவராலுமே மறுக்க முடியாது. 

1989 தொடங்கி இப்பொழுது வரையிலும் சற்றேரக் குறைய கால் நூற்றாண்டில் இந்தக் கூட்டணி ஆட்சிகளில் திமுக 18 வருடங்களுக்கும் அதிகமாக பங்கேற்று அதன் காரணமாக தமிழகத்திற்கு எண்ணற்ற பலன்களையும் கொட்டிக் குவித்திருக்கின்றது என்பதையும் யாரும் மறுக்க முடியாது. 

இந்த 15 ஆண்டுகளில் மட்டுமே தமிழகத்தின் 90 சதவிகித அகல ரயில்பாதைகள் வந்திருக்கின்றன, நான்கு வழி இருபக்க சாலைகள் மாநிலம் முழுவதும் வந்திருக்கின்றன, ஆயிரக்கணக்கான சிறு, குறு, பெரும் பாலங்கள் தமிழகத்தை அலங்கரித்திருக்கின்றன. பல நூறு ஆயிரம் கோடி முதலீட்டிலான பெரும் தொழிற்சாலைகள் இங்கு தருவிகப்பட்டு பல லட்சக்கணக்கான தமிழக இளைஞர்கள் ஐந்திலக்க சம்பளங்களை வாங்கும் நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது, மத்திய அரசுப் பணிகள் மற்றும் கல்விச் சாலைகளில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு சாத்தியமாக்கப்பட்டிருக்கின்றன, மெட்ரோ ரயில் முதல் சேது கால்வாய் வரையிலும் சாத்தியமாகும் சூழல் உருவாக்கப்பட்டிருக்கின்றது, தமிழகத்தின் உட்கட்டமைப்பும், குடிநீர் ஆதாரங்களும், கூட்டுக் குடிநீர் திட்டங்களும், மத்திய பல்கலைக் கழகங்களும், எண்ணற்ற மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகளும் சாத்தியமாகியிருக்கின்றது, 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தமிழக மக்களின் வாழ்க்கை நிலையில் நல்ல முன்னேற்றமும் மேம்பாடும் அதிகரித்திருக்கின்றது, இந்திய அளவில் வளர்ந்த மாநிலங்கள் பட்டியலில் பெருவாரியான துறைகளில் முதல் மூன்று இடங்களுக்குள் தமிழகமும் வந்திருக்கின்றது........

இப்படியாக மிகப் பெரும் மேல் நோக்கிய மாற்றத்தை கடந்த 15 ஆண்டுகளில் திமுகழகம் மத்திய ஆட்சியில் பங்காளியாக இருந்து தமிழகத்திற்கு பெற்றுத் தந்திருக்கின்றது.

சில பல அரசியல் காரணங்களுக்காகவும், ஆரிய சூழ்ச்சியாலும் திமுகவின் மேல் ஒரு கணக்காய குழுவின் யூக மதிப்பீட்டிலான இழப்பீட்டை முன்வைத்து ஆரிய ஊட்கங்களால் களங்கம் சுமத்தப்பட்டிருந்தாலும், சில சுயநல லெட்டர் பேட் அரசியல் கட்சிகளால் திமுகவின் மேல் ஈழத்துக்கு எதிரானவர்கள் என்ற பழி சுமத்தப்பட்டிருந்தாலும், போராட்ட உணர்வுடன் மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கான நலன்கள் அனைத்தையும் சிந்தாமல் சிதறாமல் கொண்டுவரக்கூடிய தகுதியும் திறமையும் திமுகழகத்திற்கு மட்டுமே இருக்கின்றது என்பது தமிழக மக்களுக்கு தெள்ளத் தெளிவாக புரிந்து தான் இருக்கின்றது. 

இந்தியாவில் இருக்கும் ஒரு சில அண்டை மாநிலத்தவர்கள் தமிழர்கள் பற்றி இளக்காரமாகப் பேசினாலும், பழங்காலந்தொட்டே தமிழர்கள் மிகத் தெளிவான தொலைநோக்கு சிந்தனையுடன் செயல்பட்டே.....  உலகெங்கிலும் மூலை முடுக்கிலெல்லாம் இன்றைக்கும் பூர்வகுடி மக்களாக விரவி வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இப்பொழுதும் லட்சக்கணக்கான தமிழக இளைஞர்கள் உலகெங்கிலும் வெறும் டீ கடை மட்டுமே வைத்து நடத்திக் கொண்டிருக்காமல் பொறியாளர்களாகவும், விஞ்ஞானிகளாகவும், மருத்துவர்களாகவும் பரிமளித்து தமிழகத்தின் என்று மட்டும் சொல்லமுடியாதபடிக்கு ஒட்டுமொத்த இந்தியாவின் பெருமயையும் உயர்த்தக்கூடியவர்களாக விளங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

அப்படிப்பட்ட தமிழக வாக்காளர்கள் அரை நூற்றாண்டாக ஒரு குறிப்பிட்ட கட்சியினரை மட்டும் பெரும்பான்மையாக மத்திய ஆட்சி அதிகாரத்திற்கான தூதுவர்களாக அனுப்பி வைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்றால் அது இலகுவாக புறம்தள்ளிவிடக்கூடிய விடயமன்று. தமிழர்களின் அந்த எதிர்பார்ப்பை திமுகழகம் மிகத் தெளிவாக பூர்த்தி செய்து தான் வந்துகொண்டிருக்கின்றது. அந்த வரலாறு வரும் காலத்திலும் தொடரும். மத்திய ஆட்சிப் பொறுப்பிலிருந்து சில காரணங்களுக்காக விலகி நின்றாலும் திமுகவின் சில பல எம் பிக்கள் தங்கள் தொகுதிகளுக்கு டவுன் பஸ் விடுவது மாதிரியாக ரயில் விட்டுக் கொண்டிருப்பதையும், நாற்கரச்சாலைகள் அமைத்துக் கொடுத்துக் கொண்டிருப்பதையும், மீனவர் பிரச்சினையாகட்டும் மற்ற எந்த முக்கிய மக்கள் நலம் சம்பந்தப்பட்ட பிரச்சினையிலும் மத்திய அரசிடம் வாதாடி உரிமையை மீட்டுக்கொடுக்கும் அந்த சாதுர்யத்தை திமுகழகத்தினர் நன்றாக கைவரப்பெற்றிருக்கின்றனர் என்பதை தமிழக வாக்களர்கள் அய்யம் திரிபுர புரிந்து வைத்துத்தான் இருக்கின்றார்கள். 

அதனால் தான் தொடர்ந்து ஐம்பது சதவிகிதத்திற்கும் அதிகமான திமுக கூட்டணியினரை தவறாமல் பாரளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இதே நிலை தான் வரும் 2014 நாடாளூமன்ற தேர்தலிலும் தமிழகத்தைப் பொறுத்த அளவில் தொடரும். இதை எதிர் கட்சிகள்  புரிந்து கொள்கின்றனவோ இல்லையோ, திமுக தலைமை இதை நன்றாக உணர்ந்து, முப்பதுக்கும் அதிகமான தொகுதிகளில் திமுகவினரை களம் இறக்கி, தமிழக மக்கள் பெருமளவிலான திமுகவினரை பாராளுமன்றத்திற்கு அனுப்பும் வாய்ப்பை தமிழக வாக்காளர்களுக்கு உருவாக்கித் தர வேண்டும். திமுக தலைமை தன் பலத்தை முதலில் உணர வேண்டும். இதுவே ஒவ்வொரு உண்மையான் திமுக தொண்டனின் தலைமைக்கான வேண்டுகோளாகும்!