Tuesday, May 22, 2012

ராஜீவ் காந்தி கொலையான தினமும்... சில நினைவலைகளும்...

அது தேர்தல் ஜூரம் உச்சபட்சமாக தகித்துக் கொண்டிருந்த நேரம். மாயவரம் பார்க் மைதானத்தில் திமுக வின் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம். கவர்னர் பர்னாலா தான் உரையாற்றிக் கொண்டிருக்கிறார்.....

கலைஞர் ஆட்சிக்கு எதிராக சட்டம் ஒழுங்கு சரியில்லை, அது இது புண்ணாக்கு என்றெல்லாம் மத்திய அரசு அறிக்கை கேட்க, அப்படியெல்லாம் தரமாட்டேன் என்று கவர்னர் பதவியில் அமர்ந்து கொண்டே கர்ஜித்த பஞ்சாப் சிங்கம் தான் அவர். அதையும் மீறி ஆரிய சூழ்ச்சியால் கலைக்கப்பட்ட திமுக ஆட்சியை மீண்டும் கலைஞர் தலைமையில் அரியணை ஏற்றிட பதவி தன் கால் தூசுக்கு சமம் என்று சொல்லிவிட்டு, தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும், திமுக மேடைகளில் நடந்தது என்ன என்ற உண்மையை மக்களிடம் விளக்கிக் கொண்டிருந்த காலம் அது....!!

அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் பதின்மூன்று வருட வனவாசத்தை முடித்துக் கொண்டு, திமுகவை மீண்டும் அரியணை ஏற்றியிருந்தார் தலைவர் கலைஞர். முதன் முதலில் திராவிடம் அரியணை ஏறியதை தாங்கமாட்டாமல், சர்க்காரியாவை ஏவி வீழ்த்திவிட்டோம் என்று மமதையில் இருந்த ஆரிய சக்திகள், மீண்டும் திராவிட ஆட்சியா? அதுவும் கலைஞர் தலைமையிலேயேவா? இவன் சகாப்தம் முடிந்து விட்டது என்றல்லவா எண்ணிக் கொண்டிருந்தோம், நம்மைக் கருவருக்க வந்து விட்டானே என்று பதைபதைத்துப் போயிருந்தார்கள்!

அவர்கள் பயந்த மாதிரியே, கனஜோராய் ஆரம்பித்த கலைஞர் ஆட்சி, அதுவரையிலும் மாநில அளவில் மட்டுமே சட்ட உரிமை வழங்கப்பட்டிருந்த (அதுவும் திராவிட ஆட்சியின் உபயம் தான்) பிற்படுத்தப்பட்டவர்களுக்கான அரசு கல்வி, வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டை, மத்திய அரசு அளவிலும் நடைமுறைப் படுத்த பரிந்துரைக்கும் மண்டல் கமிஷன் அறிக்கையை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும், என்ற கோரிக்கையோடு அகில இந்திய அளவில் பிரபலமான தலைவர்கள் மற்றும் ஆங்காங்கே மக்கள் செல்வாக்குள்ள குட்டிக் கட்சிகளை எல்லாம் ஒருங்கிணைத்து தேசிய முன்னணி என்ற அமைப்பை உருவாக்கி, மத்தியிலும் ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்று ஆரியர்களுக்கு அங்கும் ஆப்பு வைக்கும் வேலையினை மிக மும்மரமாக செய்து கொண்டிருந்தார். அதில் வெற்றியும் கண்டு கொண்டிருந்தார்.

சர்க்காரியா கமிஷனை வைத்து பூச்சாண்டி காட்டியவர்களுக்கு, மண்டல் கமிஷன் மூலம் கடுக்காய் கொடுத்துக் கொண்டிருந்தார்!!!

விடுவார்களா? மூளையைக் கசக்க ஆரம்பித்து விட்டார்கள்.
முதலில் மாநில அரசின் ஆட்சி அதிகாரத்திலிருந்து இவர்களை அகற்ற வேண்டும். அதை வைத்துக் கொண்டு தானே அகில இந்திய அளவில் ஒத்த கருத்துள்ளவர்களை ஒருங்கிணைக்கிறார்கள்?! .....ஆனால் அடுத்த தேர்தலுக்கோ இன்னும் மூன்றாண்டுகள் இருக்கின்றதே?. அதுவரை விட்டு வைத்தால் அடிமடியிலேயே கைவைத்து விடுவாரே?! அதற்குள்ளாக எந்த வழியிலாவது ஆட்சியை விட்டு இறக்க வேண்டியது தான்!

இருக்கவே இருக்கின்றது இந்திய அரசியலமைப்புச் சட்டம் 356. அந்தப் பிரிவின் படி ஒரு மாநில அரசை பதவி நீக்கம் செய்ய வேண்டுமானால் இரண்டு காரணங்களில் ஒன்று இருந்தாலே போதும். கவர்னரிடம் அறிக்கை வாங்கி கலைத்து விடலாம். ஒன்று: அந்த மாநில அரசால் கட்டுப்படுத்த இயலாத அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர் கெட்டிருக்க வேண்டும். அல்லது இரண்டாவது காரணமான: இனி ஆட்சியை நடத்த முடியாத அளவிற்கு நிதி நிர்வாகம் சீர் கெட்டுப் போயிருக்க வேண்டும்.

ஆனால் தமிழகமோ அமைதிப் பூங்காவாகத்தான் இருக்கின்றது. நிதி நிர்வாகமும் நல்லபடியாகத்தான் இருக்கின்றது. என்ன செய்யலாம்?
ஒஹ்... இருக்கவே இருக்கின்றது இலங்கைப் பிரச்சினை!
ஆரிய அடிவருடிகளான சிங்கள அரசுக்கு கை கொடுத்த மாதிரியும் இருக்கும். திமுகவையும் ஆட்சிக் கட்டிலிலிருந்து இறக்கி விட்ட மாதிரியும் ஆகும். ஆக ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!!  .... ம்.. ஆரிய ஊடகங்களின் தாரை தப்பட்டைகள் முழங்கட்டும்.....!!!

விடுதலைப் புலிகளின் ஊடுறுவல் தமிழகத்தில் முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு இருக்கிறது. திமுக அரசின் உதவியால் அவர்கள் சர்வ சுதந்திரத்துடன் இங்கு முகாம்கள் அமைத்து பயிற்சியில் ஈடுபடுகின்றனர். அதனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பெருமளவில் பாதிக்கப்பட்டு மக்கள் ஒரு வித அச்ச உணர்வில் தத்தளிக்கின்றார்கள் என்று  இன்றைய ஈழத்தாயும் என்றுமே ஆரியமாதாவுமாகிய அம்மையார் முன்னுரை வாசிக்க, அதை அப்படியே சுனா சாமிகளும், சோ, வெங்கட்ராமன் வகையறாக்களும் வழிமொழிய....   ஆரிய ஊடகங்கள் இந்த கருத்தியலுக்கு விதவிதமான பொழிப்புரைகள் எழுத ஆரம்பித்து விட்டன.

அதே சமயம், இலங்கை சென்ற இந்திய அமைதிப்படை அங்குள்ள தமிழர்களையே சூறையாடுவதாக பலமான குற்றச்சாட்டு அங்கிருந்து எழ, அது உடனடியாக திரும்பப்பெறப்பட வேண்டும் என்ற போராட்டம் தமிழகத்தில் வெடிக்கிறது. ஆளும் கட்சியான திமுகவின் அமோக ஆதரவால் போராட்டம் விண்ணைத் தொட, மத்திய அரசு வேறு வழியின்றி கட்டுப்படுகிறது.

சென்னையில் வந்திறங்கிய இந்திய அமைதிப்படையை, இந்திய அரசியலமைப்பு நடைமுறைப்படி மாநில முதல்வர் சென்று வரவேற்க வேண்டும்.  அரசியலமைப்புச் சட்டப்படி என் இனத்தை கொன்று மானபங்கப்படுத்திய உன்னை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்று, என் ஆட்சிக் கட்டிலை இறுக்கப் பிடிப்பேன் என்று நினைத்தாயோ....... என்று கலைஞர் அதை மறுதலித்து விட்டார்.

இது போதாதா அவர்களுக்கு? இந்திய இறையாண்மையையே கேலிக்கூத்தாக்கி விட்டார், விடுதலைப் புலிகள் வேறு தமிழகத்தில் நர்த்தணம் ஆடிக் கொண்டிருக்கின்றார்கள், தமிழக மக்களோ பீதியில் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கின்றார்கள். ஆகையால் உடனடியாக இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுபோத்கான் சகாய் நேரடியாக வந்து சென்று அறிக்கை சமர்ப்பிக்க... ஆட்சி கலைக்கப்படுகிறது!

அதன் தொடர்ச்சியாகத்தான் கவர்னர் ஆட்சி. மீண்டும் சட்டமன்றத்துக்கு தேர்தல் வரவேண்டும். இந்த ஒரு காரியத்துக்காகவே காத்திருந்தது போல மத்திய அரசில் 63 எம்பிக்கள் மட்டுமே கொண்ட சந்திரசேகர் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தந்து கொண்டிருந்த ஜெயலலிதாவின் கூட்டாளியான ராஜீவ் காந்தியின் காங்கிரஸ் கட்சி, தனது ஆதரவை விலக்கிக் கொள்ள, பாராளுமன்றத்திற்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது.

ஆக, பாராளுமன்றம் மற்றும் தமிழக சட்ட மன்றத்திற்கான தேர்தல் இரண்டுக்குமான தேதி குறிக்கப்பட்டு, பிரச்சாரம் உச்சக் கட்டத்தை அடைந்திருந்த நேரம் தான் நாம் ஆரம்பத்தில் பார்த்த ஒரு மாலை நேர தேர்தல் பிரச்சாரம். எந்தவொரு சிறு தவறும் சுட்டிக் காட்ட இயலாத அளவிற்கான இரண்டாண்டு கால ஆட்சியை திமுக கொடுத்திருந்தது. இலங்கைப் பிரச்சினையிலும் மக்கள் ஒட்டுமொத்தமாக திமுகவையே ஆதரித்துக் கொண்டிருந்தார்கள். தவறான காரணத்தைக் காட்டி இரண்டே ஆண்டுகளில் ஆட்சி கலைக்கப்பட்ட அனுதாப அலை வேறு.

இக்காரணிகளால் திமுக தான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று அனைத்து பத்திரிகைகளின் சர்வேக்களும் தெள்ளத் தெளிவாகக் கூறின. தராசு பத்திரிகையின் சர்வே 175 இடங்கள் வரை திமுக வெல்லும் என்று அடித்துக் கூறியிருந்தது.

ஓவர் டு தேர்தல் பிரச்சாரக் கூட்டம்....

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்கான வேட்பாளராக ராஜீவ் காந்தியின் ஆப்த நண்பரும் இந்திய வெளியுறவுத்துறை ஆட்சிப்பணியில் இருந்த மணி சங்கர் ஐயர் அறிவிக்கப்பட்டிருந்தார். வெற்றி வாய்ப்பு நிலை சரியில்லாததால், அவருக்காகவே மயிலாடுதுறை பிரச்சாரக் கூட்டத்தில் பேசுவதற்காக அன்றைய தினம் ராஜீவ் காந்தி தமிழக பிரச்சாரத்திற்கு வருவதாக மாயவரம் முழுவதும் செய்தி பரவியிருந்தது. அந்தக் கூட்டம் இரவு பத்து மணிக்கு மேல் மாயவரம் பெரிய ராஜன் தோட்டத்தில் நடைபெறுவதாக இருந்தது.

மிகப் பெரிய அளவிலான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கிராமங்களிலிருந்து வேன்கள் மூலம் ஆட்கள் கொண்டுவந்து குவிக்கப்பட்டுக்கொண்டிருந்தனர். அப்படி காசுவாங்கி வந்த கூட்டத்தில் ஒரு பெரும் பகுதி மாலை 7 மணிக்கே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கவர்னர் பர்னாலா கூட்டத்திற்கு ஆவலோடு திரண்டு வந்திருந்தனர். பார்க் மைதானம் முழுமையும் நிரம்பி, பார்க்கிலும் மக்கள் வெள்ளம் குடிபுகுந்தது. இந்தப் பக்கம் பியர்லஸ் தியேட்டர் ரோடு, அந்தப் பக்கம் பஸ்ஸ்டாண்டு வரையிலும் கூட்டம் நிரம்பி வழியவே, போக்குவரத்தே ஸ்தம்பித்துப் போனது.

பர்னாலா கிட்டத்தட்ட ஒரு மணி பத்து நிமிடம் உரை நிகழ்த்தினார். தன் பேச்சைக் கேட்பதற்காக இவ்வளவு பெரிய மக்கள் வெள்ளத்தை தன் வாழ்நாளில் கண்டதேயில்லை என்று குறிப்பிட்டார். அந்த உற்சாகத்திலேயே  "நான் கிளம்பியவுடன், இங்கு வரவிருக்கும் ராஜீவ் காந்தியைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்" என்று அவரைப் பற்றியும் கிழித்துத் தைத்தார்.

கூட்டம் இனிதே நிறைவுற்றது. இந்தத் தேர்தலில் திமுக 200 சீட்டுகளுக்கும் அதிகமாக பெறும் என்று உற்சாகமாக பேசிக் கொண்டே கிளம்பினோம். வீட்டிற்கு செல்லும் வழியில் ராஜன் தோட்டம் வழியாகச் சென்றோம். மைதானத்தில் கால்வாசி கூட நிரம்பியிருக்கவில்லை. போலீஸ் தலைகள் தான் நிரம்பியிருந்தன. ஸ்ரீ பெரும்புதூரிலும் கூட்டம் பேசிவிட்டு வருவதால் இங்கு வர 12 மணி ஆகிவிடும் என்றார்கள். அப்பொழுதே மணி ஒன்பது ஆகிவிட்டிருந்தபடியால், இதற்கு மேல் இங்கு கூட்டம் சேராது என்று கேலி பேசிக் கொண்டே, திமுகவின் வெற்றி அப்பொழுதே எங்கள் கைகளில் வந்துவிட்டது போன்ற களிப்பில் வீடு வந்து சேர்ந்தோம்.

ஒரு மாதமாக கடும் உழைப்பு. மக்களிடம் திமுகவுக்கு ஆதரவாக பெரும் எழுச்சி ஏற்பட்டிருப்பதை இன்றைய கவர்னர் பொதுக்கூட்டத்தில் கண்கூடாக காண முடிந்தது. அதே சமயம் அதிமுக காங்கிரஸ் கூட்டணிக்காக, காசு கொடுத்துக் கூட அவர்களால் கூட்டம் கூட்ட முடியவில்லை. இன்னும் இரண்டு தினங்களில் தேர்தல். நிச்சயம் வெற்றி நமக்குத்தான் என்று மனக்கணக்கு போட்டுக்கொண்டே நிம்மதியாக கண்ணயர்ந்தேன். (என்னைப் போலத்தான் ஒவ்வொரு திமுக காரனுக்கும் அந்த இரவு கழிந்திருக்கும்)

அப்பொழுதெல்லாம் எங்கள் ஊரிலேயே மொத்தமாக 30 பேர் வீட்டில் டீவி இருந்தாலே பெரிய விஷயம். அதுவும் தெளிவாகத் தெரியாது. எங்களுக்கெல்லாம் ரேடியோ தான் ஒரே பொழுது போக்கு சாதனம். காலை 6.50 நியூஸ் ரொம்ப பிரபலம். கொஞ்சம் சமூக அரசியல் சிந்தனை உள்ளவர்கள் அதைக் கேட்கத் தவறமாட்டார்கள். அதுவும் தேர்தல் நேரம். காலை எழுந்து பல் துலக்கி, காப்பியோடு ரேடியோவை ஆன் செய்தால்......  தலைவர்கள் இறந்தால் ஓடும் சோக கீதம் ஓடிக்கொண்டிருந்தது. கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

யாராய் இருக்கும்? இன்னும் பத்து நிமிடத்தில் செய்திகளில் சொல்லிவிடுவார்கள். அதற்குள் அவசரம். வெளியில் வந்து கேட்டால் தெருவிலும் யாருக்கும் தெரியவில்லை. சட்டையை மாட்டிக் கொண்டு தெருமுக்கு, மெயின் ரோடு வந்தால் கூட்டம் கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். நெருங்கிச் சென்று விசாரித்தால், நேற்று இரவு ராஜீவ் காந்தி மீட்டிங்குக்கு வரலியாம். அவருக்கு தான் ஏதோ பிரச்சினைன்னு ஃபோன் வந்து காங்கிரஸ்காரங்கல்லாம் போயிருக்காங்களாம்....

ரேடியோ சோக கீதம் அவருக்காக இருக்குமோ? அவசரமாக வீட்டுக்கு ஓடினேன். சரோஜ் நாராயணசாமி அழும் குரலில் பேசிக் கொண்டிருந்தார். ராஜீவ் உடல் சிதறி இறந்ததாக. காங்கிரஸின் அப்போதைய மாநில தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி பேசினார். விடுதலைப் புலிகளை வைத்து கருணாநிதி தான் ராஜீவ் காந்தியைக் கொன்றதாக பட்டவர்த்தனமாக அறிவித்தார்.....

ரெடி ஸ்டார்ட் மீஜிக்........!!!   அப்பொழுது திமுகவினருக்கு எதிராக ஆரம்பித்த கலவரம் அடங்க பத்து நாட்கள் ஆகின!!!!!

உடனடியாக நடைபெற்ற தேர்தலில் கலைஞர் மட்டுமே திமுக சார்பாக துறைமுகம் தொகுதியிலிருந்து வெற்றிவாகை சூடினார்.....   முதன் முறையாக ஜெயலலிதா தமிழக முதல்வரானார்!!

ஆட்சியைப் பிடித்த ஜெயலலிதா, முதலில் செய்தது..... இந்தியாவில் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு முழுமையான தடை வாங்கிக் கொடுத்ததும், அவர்களுக்கு ஆதரவான எந்த இயக்கத்தையும், பேச்சுக்களையும் இரும்புக் கரம் கொண்டு அடக்கியதும் தான். அப்படிப்பட்ட ஜெயலலிதா தான் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் ஈழத்தாய் என்றும், இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்றும் வானளாவ புகழப்பட்டார்!!!!!!

 

22 comments:

Anonymous said...

CORRECT HISTORY AT RIGHT TIME. NICE NARRATION.

அபி அப்பா said...

இதல்லாம் சீமானுக்கும் அவரது குஞ்சூஸ்க்கும் என்ன தெரியும்?

Prakash said...

ஈழ அப்ரண்டீஸ்களும், திடீர் குபீர் உணர்வாளர்களும் தெரிந்துகொள்ளவேண்டியவை....

அபி அப்பா said...

ஈழப்போராட்ட வரலாறு எதுவுமே தெரியாமல் இன்றைக்கு 2009க்கு பின்னர் மட்டுமே திடீரென ஈழம்ன்னு ஒரு விஷயம் திடீரென முளைத்து வந்ததா நினைச்சு பேசிகிட்டு இருக்கும் காளான்கள் இந்த கட்டுரையை வாசித்தால் நல்லது.

கொக்கரக்கோ..!!! said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அபிஅப்பா!

கொக்கரக்கோ..!!! said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்று ஜே.பி.பிரகாஷ்.

Anonymous said...

திமுக ராஜீவ் கொல்லபடாமல் இருந்தாலும் ஜெயித்து இருக்காது. 89 - 91 வரை நடந்த இடை தேர்தலில் எல்லாவற்றிலும் ஒன்றுபட்ட அதிமுகவே வெற்றி பெற்றது. நடுவே வந்த மக்களை தேர்தலில் திமுகவிற்க்கு கிடைத்த இடங்கள் பூஜ்ஜியம். அதிமுக காங்கிரஸ் கூட்டணி 39/40 இடங்களில் வெற்றி பெற்றது.
நாகை தொகுதியில் மட்டும் தனது சொந்தபலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது.

இப்படி இருக்க திமுக 200 இடங்களை பெறுமாம்.

கொக்கரக்கோ..!!! said...

அனானி ஐயா, உங்கள் புள்ளி விவர அறிவு மெய்சிலிர்க்க வைக்கின்றது!!

ராவணன் said...

1989 சட்டசபை தேர்தலில் அண்ணா திமுக பிளவு பட்டதால் கருணாநிதி வெல்ல முடிந்தது.

அதே ஆண்டு நடந்த நாடாளுமன்றத்தேர்தலில் கருணாநிதிக்கு எத்தனை இடங்கள் கிடைத்தது? ஒன்றுமே இல்லை.

ராஜீவ் காந்தி மரணத்திற்கும் கருணாநிதியின் தோல்விக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

1977, 1980, 2001, 2011 போன்ற ஆண்டுகளில் யார் செத்ததால் கருணாநிதி தோல்வியுற்றார்.

Komalan Erampamoorthy said...

2009 இறுதிப்போரில் எங்களுடைய மக்கள் இறந்து கொண்டு இருக்க உங்களுடைய தலைவர் காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையில் ஒரு உண்ணாவிரதம் இருந்து ஈழ மக்களுக்காய் உழைத்தவர். இத்தனை ஆயிரம் உயிர்களும் போனதற்க்கு இவரும் ஒரு காரணம் மத்திய அரசுக்கு கொடுத்த ஆதரவை வில்லக்கி இருந்தால் நிலமை வேறு விதமாய் அமைந்துருக்கும். ஆனால் அந்த காலப்பகுதியில்தான் நாடே அதிர மிகப்பெரிய ஊழலை செய்தவர்கள்............ யார் என்று உலகே அறியும்...............

Anonymous said...

திமுக ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் வந்தது. அதில் திமுக படு தோல்வி அடைந்தது. காரணம் பல பல. மக்கள் நம்பிக்கையை திமுக சில மாதங்களில் இழந்தது.

ஜெயலலிதாவை சட்டமன்றத்தில் அவமானபடுத்தியது முதல் பல இருக்கிறது.


இழந்த ஆதரவை சரிகட்ட கலைஞர் புலி ஆதரவை கையில் எடுத்தார். மத்திய உளவு துறை பாதுகாப்பில் சென்னையில் இருந்த பத்மநாபாவை புலிகள் கொலை செய்த போது, செக்போஸ்ட்டுகளை அனைத்தையும் திறந்து விட்டு சென்னையில் இருந்து வேதாரணயம் பயணம் செய்ய உதவி செய்தார்.

அப்போது தப்பித்தவர்தான் ஒற்றை கண் சிவராசன். பின்னர் ராஜீவ் கொலைக்கு மீண்டும் தமிழ்நாடு வந்தனர்.

உள்துறை செயலராக இருந்த நாகராசன் பின்னர் தடாவில் கைதாகி வாக்குமூலம் அளித்தது எல்லாம் மறந்து விட்டதா? ஒரு வகையில் ராஜீவ் கொலைக்கு கலைஞரும் காரணம். அன்று பத்ம்நாபா கொலையாளிகளை தப்பிக்க விடாமல் பிடித்து இருந்தால் பின்பு புலிகளுக்கு தமிழ்நாட்டி வந்து இதை போல கொடூர கொலைகள் செய்ய தைரியம் வந்து இருக்காது.

ஆனால் பாவம் கலைஞர் அவர் புலிகளை ஆதரித்த நேரமோ என்னவோ எல்லாமே தவறாகவே நடந்தது. இதற்க்கு அவர் பேசாமல் 89க்கு முந்தைய நிலையில் இருந்து இருக்கலாம்.

மணிஜி said...

அபி அப்பா said...
ஈழப்போராட்ட வரலாறு எதுவுமே தெரியாமல் இன்றைக்கு 2009க்கு பின்னர் மட்டுமே திடீரென ஈழம்ன்னு ஒரு விஷயம் திடீரென முளைத்து வந்ததா நினைச்சு பேசிகிட்டு இருக்கும் காளான்கள் இந்த கட்டுரையை வாசித்தால் நல்லது.
22 May 2012 4:16 PM
கொக்கரக்கோ..!!! said...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அபிஅப்பா!

Anonymous said...

திமுகவை பொருத்தவரை எட்டு கோடி தமிழக மக்களில் 75 சதவிகிதம் ஆரிய சக்திகள் தான்.. ஏனென்றால் ஒரு போதும் திமுக பெரும்பான்மை பெற முடியாது,,, மிருக மெஜாரிட்டி என்பது எப்போதும் எம்ஜிஆர் அல்லது அம்மாதிமுகவுக்கு மட்டுமே,,, திமுக என்றும் மைனாரிட்டி அரசுதான்... அப்படி தப்பித் தவறி வந்தாலும் அது அம்மா தயவில் (அம்மா ஆட்சியில் தலைகீழாய் ஆடி பெயரை கெடுத்துக் கொள்ளுதல் அல்லது தாருமாறாக போலீஸ் ராஜ்ஜியம் நடத்தி பெயரை கெடுத்துக் கொள்ளும் போது),, ஆக தமிழக மக்கள் அனைவரும் திமுகவுக்கு ஆரிய சக்திகள்தான்....

Barari said...

இந்த சிலோன் கூட்டம் எப்போதுமே நன்றி கெட்டவர்கள்.ராஜீவின் சாவில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தவுடன் வெற்றி
தன்னால் தான் கிடைத்தது ராஜீவின் மரணத்தால் அல்ல என்று நாக்கூசாமல் அறிக்கை விட்டவர்தான் இந்த பாப்பாத்தியம்மா
என்ற பால்கனி பாவை.

சத்ரியன் said...

நான் ஓட்டுரிமைப் பெற்ற நாளிலிருந்து தி.மு.க. அல்லது தி.மு.க- கூட்டணிக்கு மட்டுமே (கடந்த தேர்தலிலும்) ஓட்டு போட்டவன் என்ற முறையில் கீழ்கண்டவற்றைக் கேட்க தோன்றுகிறது

1) ஈழப்போராட்ட வரலாறு இந்தக்கட்டுரையில் அடங்கக்கூடியதா என்று அண்ணன் சௌம்யன் தான் சொல்ல வேண்டும்.

2) தி.மு.கவை ஒழிக்க கங்கனம் கட்டியலைந்த ஆரியக்கூட்டமான ‘காங்கிரஸ்’ பன்றிகளுடனே நெடுங்காலக் கூட்டணி அமைத்து கொள்ளையடித்த ‘உடன்பிறப்பு’ தலைமையை இன்னும் கொண்டாடுவது எந்தவகையில் நியாயப்படுத்த முடிகிறது?

3) அனைத்துக்கட்சியைச் சார்ந்த கொள்ளையர்களுக்கு கூஜா தூக்குவது மட்டும் தான் நம் குடும்பத்துக்கு சோறு போடப்போகிறதா?

ராஜ நடராஜன் said...

கொக்கரக்கோ!நலமாக இருக்கிறீர்களா?

முக்கு சந்துல கும்மியெடுத்தாலும் கூட அபி அப்பா மட்டும்தான் தொடர்ந்து நான் எத்தனை அடிச்சாலும் தாங்குவேனாக்கும் என்று தொடர்கிறார்.நீங்க,நண்பர் பிரகாஷ்களை சென்ற சட்டமன்ற தேர்தல் காலத்தில் பார்த்தது.என்ன கலைஞர் சீறி எழுங்கள் உடன்பிறப்புக்களே!இதோ பாரளுமன்ற தேர்தல் நம்மை நோக்கி வந்து கொண்டேயிருக்குது.டெசோ ஆயுதம் ஏந்தி செல்வோம்.வெல்வோம் தமிழ் மனங்களையென்று சொல்லி விட்டாரா என்ன:)

பார்க்கலாம் டெசோவை வைத்துக்கொண்டு கலைஞர் என்னதான் பூச்சாண்டி காட்டுகிறாரென்று.இருந்தாலும் தமிழக ஜனநாயகத்தின் நீண்ட வரலாறு கொண்ட கலைஞரின் டெசோவுக்கான எனது ஆதரவு.

வடிவேலின் தக்காளி எல்லா இடத்துக்கும் பொருந்தி வருவது திருவிளையாடல் தருமி போல் தமிழக நகைச்சுவையின் கிளாசிக்.

உங்களோடு அடிமையாகிப் போனால் கண்மணிகள்.அதையே தவறுகளையும் சுட்டிக்காட்டவும் விமர்சனம் செய்பவர்கள் 2009க்கு பின்பு முளைத்த காளான்கள் அல்லவா அபி அப்பா:)

ராஜ நடராஜன் said...

நண்பர் சத்ரியன்!நானும் அண்ணன் சௌம்யன் முகம் கூட்டத்திலே தெரிகிறதா என்று தேடிப்பார்க்கிறேன்.காணவில்லையே:)

கொக்கரக்கோ..!!! said...

வாங்க ராஜ நடராஜன். உங்களையும் பார்த்து நீண்ட நாட்களாகி விட்டன.

இந்த கூகுள் பஸ், இப்பொழுது ப்ளஸ், மற்றும் ஃபேஸ் புக் இவற்றில் அதிகம் பேசிக் கொண்டிருப்பதால், வலைப்பூ எழுத நேரம் இல்லாமல் போய் விட்டது.

அதற்காக எழுதாமலும் இல்லை. எண்ணிக்கை மட்டுமே குறைந்துள்ளது. மற்றபடி எங்கும் ஓடி ஒளியவில்லை. அதற்கான அவசியமும் எனக்கு ஏற்படவில்லை.

ஜெயலலிதாவுக்கு ஆதரவாக வாக்களித்த மக்களும், அவருக்கு ஆதரவாக வெகுண்டெழுந்த உங்களைப் போன்ற நல்லவர்களும் தான் இப்பொழுது முகத்தை மூடிக்கொள்ளும் நிலைக்கு கடந்த ஓராண்டு கால ஆட்சி அமைந்திருக்கின்றது.

அடுத்து, டெஸோவை வைத்து அரசிய்ல் நடத்த வேண்டும் என்ற நிலைக்கு என்றைக்குமே கலைஞர் இருந்ததில்லை. தமிழகத்தில் அவர் ஆட்சியில் செய்யப்பட்டுள்ள உட்கட்டமைப்பு வசதிகளே போதும் அவர் புகழை என்றென்றும் சொல்ல.

அவர் அளவிற்கு மின் தடையை கட்டுக்குள் வைத்திருக்க இயலாத, விலைவாசி ஏற்றத்தை தடுக்க வழியில்லாத ஜெயலலிதா ஆட்சியை வரவேற்ற உங்களைப் போன்றவர்களைத்தான் மக்கள் தேடிக் கொண்டிருக்கின்றார்கள். எங்காவது முகம் தென்படுகிறதா என்று )))

ராஜ நடராஜன் said...

கொக்கரக்கோ!என்னை நீண்ட நாட்களாக பார்க்கவில்லையென்பதிலிருந்தே பதிவுலகிலிருந்து எவ்வளவு விலகியிருக்கிறீர்கள் எனபதனை உணரமுடிகிறது.

ஜார்ஜ் புஷ்சின் You are with us or with them என்கிற மாதிரி இருக்கிறது உங்கள் வாதம்.கலைஞரை விமர்சனம் செய்கிறதாலேயே ஜெயலலிதாவின் ஆதரவாளன் என்கிற முடிவுக்கு ஏன் வருகிறீர்கள்?நாற்காலி மீண்டும் கிடைத்த மகிழ்ச்சியில் துவக்க நாட்களில் அவர் ஆட்டத்தை அழகாகவே துவங்கினார்.ஆனால் அவரின் பலவீனமே தி.மு.கவின் பலம் என்பதையும் நான் உணராமல் இல்லை.ஜெயலலிதாவின் ஆட்சி பத்தரை மாத்து தங்கமென்று நான் தொடர்ந்து பதிவு போடவில்லை.நான் நிகழ்வுகளை பொதுவாக விமர்சிப்பவன் மட்டுமே.யாருக்கும் கட்சி கப்பம் கட்டுபவனல்ல.

மறுபடியும் ஜார்ஜ் புஷ்க்கு போய் விட்டு வந்து விடலாம்.அவரின் எட்டாண்டு ஆட்சியில் சில முக்கியமான குளறுபடிகளுக்கும் இப்போதைய பொருளாதார மந்தத்திற்கு ஒபாமாவை குறை சொல்வது போல் இருக்கிறது உங்கள் வாதம்.

எந்த ஒரு ஆட்சியும் சீராக இயங்குமிடத்து அடுத்து வரும் ஆட்சி இன்னும் கொஞ்சம் கட்டமைப்புக்களை மேல்நோக்கி நகர்த்த முயற்சிப்பதே நாட்டு மக்களுக்கு நல்லதாக அமையும்.ஆனால் இரு கழகங்களும் தமிழ் நண்டுக்கதைதான்.திராவிட இயக்கங்களின் மொத்த வரலாற்றோடு நம் அனைவரின் வாழ்க்கையில் சில நன்மைகளைப் பெற்றிருக்கிறோம்.அதே மாதிரி அரசியல் தாழ்வுகளையும் சந்தித்திருக்கிறோம்.நல்லவைகளை வரவேற்பதும் தவறுகளை சுட்டிக்காட்டுவது மட்டுமே ஒரு நல்ல குடிமகனுடைய கடமையாக இருக்க முடியும்.அதனை விடுத்து கட்சி சாயம் பூசிக்கொண்டு தலைமை என்ன சொன்னாலும் ஆமாம் ஐயா/அம்மா போடும் சூழல்களை தமிழர்கள் கடந்து வரவேண்டும்.

இரண்டு கழகங்களுக்கும் மாற்றாகவும் கூட பரிட்சித்துப் பார்க்கும் தேர்வு முறையே தமிழகத்திற்கு நல்ல ஜனநாயகமாக அமைய முடியும்.அதனை விடுத்து கட்சி பேனரை கழுத்தில் கட்டிக்கொண்டே திரிந்தால் தொலைநோக்கில் ஆண்டான் அடிமையென்ற அரச பரம்பரையையே நாம் எதிர்காலத்துக்கு விட்டுச் செல்வோம்.நன்றி.

கொக்கரக்கோ..!!! said...

@ராஜ நடராஜன்.

நான் தான் ப்ளாக் அதிகம் எழுதுவதில்லை என்று கூறுகின்றேனே. ஆனால் ப்ளஸ்ஸில் ஆக்ட்டிவ்வாகத்தான் இருக்கின்றேன். அதனாலேயே ப்ளாக் எழுத முடியாமல் போய் விட்டது. உங்கள் இருப்பையும் உணர முடியாமல் போய் விட்டது.

மேலும் ஜார்ஜ் புஷ் உதாரணம் போல நான் உங்களுக்கு எப்பவுமே அதிமுக முத்திரை குத்திவிடவில்லை. மாறாக திமுகவுக்கு மாற்றாக இந்த பெரும் ஏமாற்றத்தைக் கொண்டுவர போராடியதைத்தான் குற்றம் சொல்லியிருக்கின்றேன். நீங்கள் அறுதியிட்டிருப்பது போல் இந்த இரண்டு கட்சிகளும் இல்லாத இன்னொரு மாற்றுத் தளத்திற்காக எந்தவொரு முன்னெடுப்பும் நீங்கள் எடுக்கவில்லை என்பதை இப்பொழுதாவது உணர்கின்றீர்களா?

கடந்த திமுக ஆட்சி சரியில்லை என்றால் ஜெயலலிதா பக்கம் தானே நின்றிருந்தீர்கள்? இது சரியான வழிமுறையா? அந்த ஆட்சியின் மேல் விமர்சனம் மட்டும் வைத்து விட்டு, ஒழிந்த அயோக்கியனை ஒழிந்ததாக விட்டுவிட்டிருந்தீர்கள் என்றால், இந்நேரம் நீங்கள் எல்லாம் எதிர்பார்க்கும் அந்த புதிய கனவுக் கட்சி தானாகவே உதயமாகியிருக்கும்.

மேலும் நான் ஐயா எதைச் சொன்னாலும் ஆதரிக்கும் ரகம் அல்ல. தேர்தலுக்கு முந்தைய என்னுடைய பதிவுகள் அனைத்தையும் படித்து விவாதித்தவர் என்ற முறையில் கடந்த ஆட்சியை பல காரணங்களுக்காக நான் விமர்சித்திருப்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.

ஆனால் ஜெயலலிதாவின் செயல்பாடுகளில் எனக்கு சுத்தமாக நம்பிக்கை கிடையாது. அதற்கு திமுகவே பெஸ்ட் என்று நினைப்பவன் நான். ஆனால் நீங்கள் சொல்வது போல இன்னுமொரு நல்ல கட்சியோ அல்லது திமுகவிலோ நல்ல தலைமை மாற்றமோ நிகழ்ந்தாலும் நான் அதையும் ஆதரிக்க தயாராகவே இருக்கின்றேன்.

அதுவரை இருப்பதில் பெஸ்ட் என்ற வகையில் திமுகவே எனது சாய்ஸ்!

ராஜ நடராஜன் said...

கொக்கரக்கோ!திமுகவுக்கு மாற்று அதிமுக மட்டுமேயென்று மக்கள் ஏன் நினைக்கிறார்கள் என்பது இன்னும் எனக்கு ஆச்சரியமே.ஈழப்பிரச்சினைக்கே ஒன்று சேர்ந்து குரல் கொடுக்காமல் குழு குழுவாய் உட்கார்பவர்களுக்கு மத்தியில் எந்த முன்னெடுப்பும் எடுக்கவில்லையென்று சுட்டிக்காட்டுகிறீர்களே!அவ்வ்வ்வ்வ்:)

சட்டமன்ற தேர்தலில் தி.மு.கவின் நிர்வாக சீர்கேடுகள் மற்றும் ஈழப்பிரச்சினை என்ற இரண்டு காரணங்கள் பிரதிபலித்தது மட்டுமே ஆட்சி மாற்றத்துக்கான காரணங்கள்.மற்றபடி ஜெயலலிதா என்ற ஒற்றை மனுஷியின் ஆளுமைக்காக அல்ல.

ஜெயலலிதாவின் கண்கள் என்னமோ டெல்லியை வட்டமடிக்கிற மாதிரி தெரிகிறது.அது நிகழாத பொழுதும் கூட தற்போதைய நிலையில் திமுக நொண்டிக்குதிரைதான்:)

அடுத்த சட்டமன்ற தேர்தல் வரை தமிழக மக்களுக்கு என்ன மனமாற்றங்கள் வருமோ என்பதற்கும் முன்னால் பாராளுமன்ற தேர்தல் தற்போதைய நிலையில் திமுகவுக்கு ஒரு சவாலே.பஜக கூட ஏற்கனவே கும்மாளமடிச்சு காங்கிரஸ் பக்கம் போயாச்சு.காங்கிரஸ் ஆளை விட்டா போதுமய்யா என்று இப்பொழுதே மன்மோகன் சிங் கல்லூரி பிரிவுபசார விழா மாதிரி பார்ட்டியெல்லாம் வைக்க ஆரம்பித்து விட்டார்.

தோல்வி மட்டும் ஒரு கட்சியின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில்லையென்ற போதிலும் இருப்பதிலே பெஸ்ட் சாய்ஸ் திமுகவுக்கு இன்னுமொரு அவ்வ்வ்வ் போட்டுக்கிறேன்:)

சாந்திபாபு said...

மிகவும் அற்புதமான பதிவு ... கொக்கரக்கோ ....