Tuesday, December 30, 2014

போக்குவரத்து கழக ஊழியர் ஸ்ட்ரைக் தேவையா?!


மழையும் விடாம பேயுது, அரசுப் பேருந்துகளும் ஓடவில்லை... மக்கள் நேத்திக்கு காலைலேர்ந்து அல்லாடித்தான் போயிருக்காங்க.
யாருமே எதையுமே கண்டுக்கிட்டது மாதிரி தெரியல. அரசுன்னு ஒன்னு நடக்குதான்னே புரியமாட்டேங்குது. இந்தம்மா ஆட்சிக்கு வந்ததுலேர்ந்து ஒன்னுக்கு ரெண்டு மூனு தபா, எல்லா அத்தியாவசிய பொருட்களையும் விலை ஏத்தியிருக்கு, ஆனா மூனு வருஷத்துக்கு ஒரு தபா ஏத்த வேண்டிய சம்பளத்தை ஏத்தாம இந்த போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு போக்கு காமிச்சிட்டிருக்கு...!!
அதாவது கலைஞர் ஆட்சியில இவிங்களுக்கு எல்லாம் ஷெட்யூல்படி மூனு வருஷத்துக்கு ஒரு தபா சம்பளம் ஏத்துனாங்க. அதுக்கப்பறம் நாலரை வருஷமா இன்னும் நயா பைசா ஏத்தல..!! நாலரை வருஷத்துக்கு முன்னாடி நானூறு ரூவா கரண்ட்டு பில்லு கட்டுனவங்க இன்னிக்கு 1000 ரூவா கட்டுறாங்க. அன்னிக்கு மாச மளிகை சாமான் 1200 ரூவாய்க்கு வாங்குனது இன்னிக்கு அதே சாமன்களை 2100 கொடுத்து வாங்க வேண்டியிருக்கு. பால் விலையும் அப்படித்தான்...! ஸ்கூல் ஃபீஸ் கேக்கவே வேணாம்...!!
இப்புடி இருக்கறச்சே அவங்க என்ன தான் பண்ணுவாங்க?

நல்லா யோசிச்சி பாருங்க மக்களே.... இந்தம்மா ஆட்சிக்கு வந்ததுலேர்ந்து என்னென்ன பண்ணினாங்கன்னு?! மொதல்ல உள்ளாட்சி தேர்தல் வந்திச்சி... அதுல எல்லாம் பிஸியானாங்க. அடுத்தது கூட்டுறவு தேர்தல் வந்திச்சி அதுல எல்லாம் பிஸியானாங்க. அடுத்தது பார்லிமெண்ட் தேர்தல் வந்திச்சி, அதுல எல்லாம் பிஸியானாங்க. இதுல ஒவ்வொரு துறையிலயும் நாலஞ்சு தபா, மந்திரிங்க, அதிகாரிகள் எல்லாம் மாத்துனாங்க. எதிர்க்கட்சிக்காரங்கள ஒடுக்குறது, சினிமாக்காரங்கள கேஸு போட்டு கைக்குள்ள கொண்டு வர்றது, கடந்த ஆட்சியில் போட்ட திட்டங்களை எல்லாம் எப்புடி முடக்குறதுன்னு யோசிச்சி யோசிச்சே கோர்ட்டு கேஸுன்னு அலையுறது..... நடுப்புற அப்பாவி மக்களை ஏமாத்த, அம்மா தண்ணி, அம்மா உப்பு, அம்மா மளிகை, அம்மா உணவகம், அம்மா மெடிக்கல்ஸ்னு திறந்து வெளம்பரம் தேடிக்கிறது...

இப்புடியா போயிட்டிருந்து, கடேசில, சொத்துக்குவிப்பு கேஸுல கடந்த ஏழெட்டு மாசமா இன்வால்வ் ஆகி, ஜெயிலுக்குப் போயி, டம்மி முதல்வர ஒக்கார வச்சி, அவங்க ஆட்சிய போட்டுடக் கூடாதுன்னு மக்கள்ங்கற வரிசைல ஏகப்பட்ட் போஸ்ட்டிங்க போட்டு அதை மெய்ண்டெய்ன் பண்ணி...... மினிஸ்டருங்க எல்லாரையும் பால் குடம், காவடி, தீமிதி, அலகு குத்துதல்ன்னு அலைய விட்டு......

ஸ்ஸ்ஸ்ஸப்பாஆஆஆ... இதெல்லாம் செஞ்சிட்டிருந்தா, நாட்டுல உருப்படியான விஷயம் எதத்தான் கவனிக்க முடியும்???
வேற வழியே இல்லாம இந்த போக்குவரத்து ஊழியர்கள் ஸ்ட்ரைக்குல உட்கார்ந்துட்டாங்க.....!!
அடுத்தடுத்து யாரு யாரெல்லாம் இப்புடி உட்கார போறாங்களோ தெரியல....!! நினைச்சாலே கெதக்குன்னு வருது...! ஏன்னா? இவங்க பண்ணுற தப்பெல்லாம் நம்ம (மக்கள்) தலையில தான வந்து விடியுது...! அதான்!!!
அதனால தான் நான் அடிக்கடி சொல்றேன்.....!
ஓட்டுப்போடும் போது, ஊடகங்கள் சொல்றதை எல்லாம் அப்படியே நம்பி உணர்ச்சிக்கு அடிமையாகி ஓட்டுப்போடாம, யாரு வந்தா, நம்ம அன்றாட வாழ்க்கையும், தொலைநோக்கிலான வளர்ச்சியும் நன்றாக இருக்குமோ அவங்களுக்கு ஓட்டுப்போடுங்கன்னு....!!!


Monday, December 29, 2014

மாதொரு பாகனும்... திராவிட அரசியலும்..!


இத்தனை காலமாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கொஞ்சம் கொஞ்சமாக கால் ஊன்றி தமிழகத்தில் மட்டும் ஒரு சிறிய ஆளுமையைக் கூட பதிவு செய்ய இயலாமல் இருந்த பாஜக....
இப்பொழுது மத்திய அரசில் அறுதிப் பெரும்பான்மையுடன் கூடிய மிருகபலத்துடன் ஆட்சியைப் பிடித்து அமர்ந்து விட்ட பிறகு... இது தான் தமிழகத்தில் காலூன்ற சரியான தருணம் என்று திட்டமிட்டு, தனக்கிருக்கும் அதிகார பலத்தை பயன்படுத்தி அனைத்துவிதமான உபாயங்களையும் இங்கே இறக்கிவிட்டிருக்கிறது என்றே தோன்றுகிறது.
அந்த உபாயங்களில் ஒன்று தான் பாஜகவின் கொள்கைகளுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்ட புத்தகங்கள், திரைப்படங்கள் மற்றும் இன்னபிற பரப்புரைகளை சாம, பேத, தான, தண்டங்களைக் கொண்டு தடை செய்கின்ற நடவடிக்கைகள்.
அந்த வகையில் பிகே என்ற பகுத்தறிவுப் பாடத்தைச் சொல்லும் திரைப்படத்தை தடை செய்த கையோடு......
நான்காண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்ட மாதொருபாகன் என்ற நூலை இந்துமத அடிப்படைவாதத்திற்கு எதிரான கருத்துக்களைக் கொண்டதாகச் சொல்லி, வன்முறை வெறியாட்டங்கள் மூலமாகவும், அறிக்கைகள் வாயிலாகவும் தடை செய்ய தமிழக பாஜக தன் கிளைக் கழகங்கள் மூலமாக களமிறங்கியிருக்கின்றது.
அந்தப் புத்தகத்தை படித்தவர்கள் எல்லாம் அப்படியே பாஜகவுக்கு எதிராக வாக்களித்துவிடப் போகின்றார்களா? அல்லது அந்தப் புத்தகம், அப்படி என்ன அவ்வளவு வேகமாக விற்றுத் தீர்ந்து கொண்டிருக்கின்றதா? அல்லது இதற்கு முன்பாக தமிழகத்தில் ஆரியத்தையும், இந்து மதத்தையும் எதிர்த்து இதைவிட மோசமாகவும், நேரிடையாகவும் எழுதப்பட்ட புத்தங்களை வெளி வந்திருக்கத்தான் இல்லையா???
இப்படி ஒரு புத்தகம், அதிலும் இந்து அடிப்படைவாதத்திற்கு எதிரான கருத்துக்களோடு வெளி வந்திருப்பதே, இப்பொழுது பாஜகவின் பலமான எதிர்ப்புக்குப் பிறகு தான் இங்கே பலபேருக்கு தெரியவே வந்திருக்கின்றது...!
மேலும் இதற்கெல்லாம் முன்னதாக, ஆரிய மாயை, கம்பரசம், அர்த்தமற்ற இந்துமதம்...... இப்படியாகவெல்லாம் எண்ணற்ற இந்து மத எதிர்ப்புப் புத்தகங்கள் தமிழகத்தில் வெளி வந்து அவை அனைத்தும் இன்றுவரையிலும் கூட விற்பனையில் சக்கைபோடு போட்டுக்கொண்டு தான் இருக்கின்றது...!
ஆனால் பாஜக இன்றைக்கு, அந்தப் புத்தங்களை தடை செய்ய முன்வரவில்லையே ஏன்? அதைச் செய்தால், தமிழகத்தில் இன்றளவிலும் பலமாக இருக்கின்ற திராவிட இயக்கங்கள், குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகம், அதை வெறுமனே வேடிக்கப் பார்த்துக்கொண்டிருக்காது. அதை காரணமாக வைத்தே, தமிழகத்தில் நீர்த்துப் போயிருப்பதாக பாஜகவினரால் நம்பவைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் திராவிட இயக்க சித்தாந்தங்கள், வெகு வேகமாக காட்டுத் தீ போன்று இங்கே இளைஞர்கள் மத்தியில் பரவ வைக்கப்பட்டுவிடும்...!
திராவிட இயக்கங்களை, சித்தாந்தங்களை இங்கே நீர்த்துப்போக வைத்தால் தான், தமிழகத்தில் பாஜகவினால் காலூன்ற முடியும் என்ற நிலையில் தான், முன்னதாக தமிழ் தேசியம் மற்றும் ஜாதிக் கட்சிகள் என்ற இரட்டைக் குழல் துப்பாக்கியை தமது ஊடக பலத்தைக் கொண்டு இங்கே வளர்த்தெடுத்துக் கொண்டிருக்கின்றது பாஜக.

ஆனால் அந்தப் பக்கத்திலிருந்தே பாஜகவின் கொள்கைகளுக்கு எதிராக ஒரு இங்கே ஒரு நூல் வெளியாவதை அவர்களால் பொறுத்துக்கொள்ள இயலுமா? அது மட்டுமின்றி, உனக்கு கொடுக்கப்பட்ட வேலை திராவிட இயக்கங்களை, சித்தாந்தங்களை நீர்த்துப்போக வைப்பது மட்டுமேயன்றி, ஆரியத்திற்கு எதிராக உன் துப்பாக்கி முனையை திருப்புவது அல்ல என்பதை அவர்களுக்கு ஆணித்தரமாக புரிய வைக்க வேண்டாமா???
அதைத்தான் இப்பொழுது பாஜக செய்ய ஆரம்பித்திருக்கின்றது.
இனி தமிழகத்தில் உள்ள உண்மையான பொது நலனுடன் செயல்படக்கூடிய தமிழ் தேசியவாதிகளும், ஜாதியக் கட்சிகளின் பின்னால் அணி வகுத்திருக்கும் நியாயமான இளைஞர்களும், ஆரியத்தால் போஷாக்கோடு வளர்க்கப்பட்டுக்கொண்டிருக்கும் உங்கள் தலைவர்களின் பேச்சை நம்பி ஏமாறாமல், திராவிடத்தின் அணியில் ஒன்றிணைய வேண்டும்.
தனியாக நின்று உங்களால் ஆரிய அடக்குமுறையை நிச்சயமாக தாக்குப் பிடிக்க முடியாது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். நம் பங்காளி சண்டைகளை எப்பொழுது வேண்டுமானாலும் தீர்த்துக்கொள்ளலாம், ஆனால் ஆரிய சதியில் சிக்கினால், மீண்டும் அடிமையாக நேரிடும் என்ற உண்மையை உணர்ந்து ஓரணியில் திரளுங்கள்.


Monday, December 22, 2014

மகளிர் சுய உதவி குழுக்களும், மதவாத ஆட்சியின் காட்டமும்...!


பொதுவாகவே எந்த மதத்தைச் சார்ந்த மத அடிப்படைவாதிகளானாலும் அவர்களது கண்களை அதிக அளவில் உறுத்துவது, பெண் சுதந்திரம் தான். பெண்களின் மீதான அடக்குமுறை, ஆளுமை போன்றவை என்பது மத அடிப்படைவாதிகளுக்கேயான அடிப்படை விருப்ப குணாதிசயம்.
மத அடிப்படைவாதத்திற்கும், மூடப் பழக்கங்களுக்கு எதிரான கொள்கையோடும் உருவானது தான் திராவிட இயக்க சித்தாந்தம் என்றால் அதை யாரும் மறுக்க இயலாது.
அந்த வகையில், திராவிட இயக்கங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அவற்றின் அடிப்படைக் கொள்கைகளான சமூக நீதியை இடஒதுக்கீட்டின் மூலமும், பல்வேறு ஆட்சியதிகார சட்டங்களினாலும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருந்தலும்.... உண்மையான திராவிடக் கட்சியான திமுகழகம் தனது ஆட்சிக்காலங்களில்... பெண் விடுதலை, பெண் சுதந்திரம், பெண் கல்வி, பெண் சம உரிமை, பெண் சுயசார்பு நிலை.... இப்படியாக பெண்களுக்கான முன்னேற்றத்திற்கு பல செயல்திட்டங்களைத் தீட்டி அதை நடைமுறைப்படுத்தியும் இருக்கின்றது....!

பெண்களுக்கு சொத்தில் சம உரிமை.., கல்லூரி வரை பெண்களுக்கு இலவச கல்வி, படித்த பெண்களுக்கு திருமண உதவித் தொகை, பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டு... இப்படியாக பெண்களை கடந்த 30 ஆண்டுகளில் ஆண்களுக்கு இணையாக கல்வி, வேலை வாய்ப்பு... சொத்துரிமை இப்படியாக அனைத்து துறைகளிலும் வகைகளிலும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்காலங்களில் போடப்பட்ட திட்டங்கள் உயர்த்திக் கொண்டு வந்திருக்கின்றன.

அந்த வகையில் கிராமப்புற, அடித்தட்டுப் பெண்களையும் பொருளாதார ரீதியிலாக சுயசார்புநிலைக் கொண்ட சுதந்திரப் பெண்மணிகளாக மாற்றும் பொருட்டு, மகளிர் சுய உதவிக் குழுக்களை அமைத்து, அவர்களுக்கான சின்னச் சின்ன குடிசைத் தொழில்களுக்கான நிதி உதவிகளையும் விற்பனை வாய்ப்புக்களையும் ஏற்படுத்தி, அதிலும் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் இந்த திட்டத்திற்கு தானே நேரிடையாக ஒவ்வொரு மகளிருக்கும் சுழல்நிதியை வழங்கி, ஊக்கப்படுத்தியதன் மூலம், இன்றைக்கு தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கான பெண்கள், நாள்தோரும், வங்கிகளில் பணம் எடுப்பதும், போடுவதுமாக பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றுத் திகழும் நிலையினை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

ஆனால், கணவன் இறந்தால், தானும் உடன்கட்டை ஏறி உயிர்விடும் நிலையில் இருந்த பெண்களைக் காப்பாற்றி அவர்கள் மறுமணம் செய்துகொள்கின்ற அளவிற்கு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுவிட்ட நிலையில், இன்றைக்கு மீண்டும் உடன்கட்டையை அறிமுகப்படுத்தத் துடிக்கும் சில மத அடிப்படைவாதிகளின் அறிக்கைகள் வந்து கொண்டிருப்பதை பார்த்து திகைத்துக்கொண்டிருக்கும் வேலையில்....
மதவாதக் கட்சியான பாஜகவின் அமைச்சர் ஒருவர்... அதிலும் பெண் அமைச்சர்.... இந்த மகளிர் சுய உதவிக் குழுவை மூடுவதற்கான முஸ்தீபுகளைத் துவங்கி அறிக்கை விடுத்திருக்கின்றர்....!!!

இதோ... திராவிட இயக்கத்துச் சிங்கங்கள்  கலைஞரும்,  எம் கே எஸ் அவர்களும் இந்த அறிவிப்பை எதிர்த்து மிகக் காட்டமாக அறிக்கை கொடுத்திருக்கின்றனர். தேவைப்படுமெனில் கடும் போராட்டத்தையும் முன்னெடுக்க தயாராயிருக்கின்றார்கள்...!!!
ஒட்டுமொத்த தமிழக மக்களும் இந்த நேரத்தில் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். ஏதோ மகளிர்... அதிலும் கிராமத்தில் இருக்கின்ற பெண்களுக்குத்தானே பிரச்சினை என்று அமைதியாகக் கடந்து செல்ல முற்படுவீர்களேயானால்....
....மதவாதிகளின் அடுத்த அபிலாஷையான சமூக அநீதி முன்னெடுக்கப்படும்... இட ஒதுக்கீடுகள் தவிடுபொடியாகிடும்..., உம்முடைய வாரிசுகள் அனைவரும் இன்னும் பத்தாண்டுகளில் உங்கள் மூதாதையார் பார்த்துக்கொண்டிருந்த குலத்தொழிலைச் செய்யச் செல்ல வேண்டியிருக்கும்....!!!

பார்ப்பனரல்லாத வளர்ந்த தமிழ்ச் சமுதாயமே... இதையெல்லாம் சந்திக்க தயாராகவிருக்கின்றீர்களா????!!!!


Friday, December 19, 2014

இதற்காகவா வாக்களித்தார்கள்... மோடிக்கு?!

இன்றைக்கு மத்திய அரசில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்த்தப்பட்டிருக்கும் மோடி சார்ந்திருக்கும் பாஜக என்ற கட்சிக்கு வாக்களித்த மக்களில் 90 சதவிகிதத்தினர் என்ன காரணத்திற்காக வாக்களித்திருக்கின்றார்கள் என்பதை ஆய்ந்து உணர வேண்டிய முக்கியமான தருணத்தில் மோடி இருப்பதை அவரது நலன் விரும்பிகள் அவருக்கு எடுத்துச் சொல்வது நலம்! (ஹப்பாஆஆ.... ஒரே மூச்சுல இம்ப்புட்டு பெரிய வாக்கியமா?)

மோடியும், பாஜகவும் தங்களது தேர்தல் பிரச்சாரங்களில் மோடி ஆண்ட குஜராத் மாநிலத்தில் நிகழ்த்தியதாகச் சொல்லப்பட்ட தொழில்துறை, மின்சாரம், விவசாயம், தனிநபர்... மற்றும் இன்னபிற வளர்ச்சிகளை சுட்டிக்காட்டித்தான் மக்களிடம் வாக்குக் கேட்டனர். அங்கு நடந்த மதக்கலவரங்களை அடியோடு மறைத்து/மறுத்து, அதற்கும் தங்களுக்கும் தொடர்பே இல்லை என்று சத்தியம் செய்து, தாங்கள் அனைத்து மதத்தினருக்கும் பொதுவானவர்கள், எந்த மதச்சார்பாகவும் குஜராத்தில் ஆட்சி செய்யவில்லை என்று கோர்ட் தீர்ப்புகள் வாயிலாகவும், ஊடகப் பிரச்சாரங்களின் மூலமும் தலைகீழாக நின்று மக்களிடம் உறுதியளிதே வாக்குக் கேட்டனர்....
மேலும் இதற்கு முன்பு ஆண்ட ஐக்கியமுற்போகுக் கூட்டணி அரசு இந்துக்களுக்கு சலுகைகள் வழங்கவில்லை, சமஸ்கிருதத்தையும், இந்தியையும் மக்களிடம் பரப்பவில்லை, கீதை போன்ற இந்து சமய நூல்களை தேசிய நூலாக அறிவிக்கவில்லை...., அதனால் அந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும், நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இந்தியாவை இந்து நாடாக மாற்றுவோம் என்றெல்லாம் சொல்லி வாக்குக் கேட்கவில்லை....!
மாறாக, முந்தைய ஐ.மு ஆட்சியில் நிர்வாகம் சீர்கெட்டிருக்கின்றது, கருப்புப் பணத்தை இந்தியா கொண்டுவரவில்லை, விலைவாசி உயர்கிறது, ஊழல் மலிந்து விட்டது, தொழில் வளர்ச்சி இல்லை.... இப்படியெல்லாம் சொல்லி, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதையெல்லாம் சரி செய்வோம் என்று வாக்குக் கொடுத்துத் தான் மக்களிடம் வாக்குக் கேட்டனர்...!!!
ஆனால் இதையெல்லாம் மறந்து விட்டு, ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்கள் கடந்து விட்ட நிலையில், இப்பொழுது, இந்தியை பரப்புவோம், சமஸ்கிருதத்தை ஆட்சி மொழியாக்குவோம், கீதையை தேசிய நூலாக்குவோம், ராஜபக்‌ஷேவை இந்தியாவின் நண்பனாக அறிவிப்போம், கங்கையை சுத்தப்படுத்துவோம், ரேடியோவைத் திறந்தால், ஹிந்தியில் அரசுக்கு ஆதரவாக விளம்பரம் செய்வோம், ரயில் கட்டணங்களை ஏற்றிவிட்டு, காங்கிரஸ் வழியில் செல்கிறோம்......
.... இப்படியெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தால், மக்கள் ஏமாளிகளாக இருந்து விடுவார்கள் என்று நம்பிவிட வேண்டாம் திரு. மோடி அவர்களே. அதானிக்கு நீங்கள் காட்டியிருக்கின்ற சலுகை உங்களுக்கு ஓட்டுப்போட்ட ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் ஆழமாக பதிந்திருக்கின்றது. நூற்றுக்கு வெறும் 30 பேர் மட்டுமே வாக்களித்து உங்களை அரியணையில் ஏற்றியிருக்கின்றார்கள். அதாவது இந்திய மக்கள் உங்களை வெறும் கயிற்றின் மேல் மட்டுமே நடக்கவிட்டிருக்கின்றார்கள் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
உங்களுக்கு வாக்களிக்காத அந்த 70 பேரின் நம்பிக்கையை பெருவது இருக்கட்டும், உங்களுக்கு ஆதரவளித்த அந்த 30 பேர் மீண்டும் உங்களுக்கு வாக்களிக்க வேண்டுமானால், முதலில் இந்த காவி கோஷங்களை ஓரம்கட்டி வைத்து விட்டு, சனாதன மனுதர்ம விவகாரங்களில் இருந்து முற்றும் முழுதாக விலகி நின்று, ஒவ்வொரு பிராந்திய மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்ப்பளித்து, சிறுபான்மையின மக்களை சகோதரத்துவத்துடன் நடத்தும் பண்போடு செயல்படத் துவங்குங்கள்.

இப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்பட்டிருப்பது டிரையல் மட்டுமே என்பதை புரிந்து செயல்படுங்கள். உங்களை விட மிருக பலத்துடன் அரியணை ஏறிய ராஜீவ் காந்தியையே தூங்கியெறிந்த மக்கள் தான் இந்தியர்கள் என்ற வரலாற்றைப் படித்துப்பாருங்கள். இந்தியா என்பது குஜராத் மட்டுமல்ல. இது ரொம்பப் பெருசு!!!


Thursday, December 18, 2014

மக்கள் முதல்வருக்கு, ஒரு அப்புறாணியின் மனம் திறந்த மடல்..!


மதிப்பிற்குறிய மக்கள் முதல்வர் அவர்களுக்கு.... ஒரு அப்புறானி தமிழக வாக்காளனின் வேண்டுகோள்....!!

மூனறை வருஷத்துக்கு முன்னாடி, ஒரு தேர்தல் வந்திச்சி. அதுக்கு முன்னாடி வரைக்கும் ஆட்சி செஞ்சிக்கிட்டிருந்த ஒருத்தரோட ஆட்சியில விலைவாசி எல்லாம் எக்கச்சக்கமா ஏறிப்போச்சின்னு நீங்க திரும்பத்திரும்பச் சொல்லிக்கிட்டிருந்தீங்க. உங்க கட்சி ஆளுங்களை எல்லாம் விட்டு முக்குக்கு முக்கு போராட்டம் எல்லாம் நடத்துனீங்க. உங்க ஜெயா டீவிய எப்ப திறந்தாலும் இதே பாட்டு தான் பாடிட்டிருந்திச்சி....

எங்க மக்களும் நீங்க சொல்றத எல்லாம் நம்பி... (நாங்க தான் அப்புறானின்னு ஏற்கனவே சொல்லிட்டேனே!) நீங்க ஆட்சிக்கு வந்தா, விலைவாசிய எல்லாம் குறைச்சிடுவீங்க, அதுனால, நாங்களும் மாசாமாசம் இன்னும் கூடுதலா சேமிச்சி சொந்த வீடு கட்டி சந்தோஷமா வாழலாம்ன்னு நினைச்சி உங்களுக்கு ஓட்ட குத்தி ஆட்சியில உக்கார வச்சோம்...!!!
ஆனா நீங்க வந்ததும் வராங்காட்டியுமா, ஒரே மாசத்துல வணிக வரியில ஐயாயிரத்தி ஐநூறு கோடி ஓவாக்கு வரிய ஏத்திப்புட்டீங்க, அதுனால, வீட்டை விட்டு வெளில போயி எந்த கடைல என்ன பொருள் வாங்கினாலும், 5 பர்செண்ட் விலை ஏறிப்போச்சி...!
அப்பாலிக்கா, மின் கட்டணத்தை கிட்டத்தட்ட டபுளா ஏத்துனீங்க. அதுல மாசத்துக்கு ஐநூறுலேர்ந்து ஐயாயிரம் வரைக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆப்பு விழுந்திச்சி....!!
சரி போவுட்டும்ன்னு சொல்லி, இருக்கச்சே... திடீர்னு பஸ் கட்டணத்தை கிட்டத்தட்ட டபுளா ஏத்திட்டீங்க. அதுனால என்னா ஆச்சுன்னு கேட்டீங்கன்னா.. எங்கூருலேர்ந்து 36 கிமீ தள்ளியுள்ள ஊருல தான் நான் வேல பார்க்குறேன், அதுக்கு பஸ்ஸு டிக்கெட்டு 10 ஓவா அம்பது காசு, நீங்க வெல ஏத்துனதால 20 ஓவாயா மாத்திட்டானுவோ....! அப்பண்டவுனுக்கு 40 ஓவா... ரோசிச்சி பாருங்க நெதத்துக்கு 19 ஓவா எனக்கு தெண்டம். மாசத்துக்கு 500 ரூவா சொளையா போச்சு... ஆத்தா ஒனக்கு ஓட்டுப்போட்ட தெண்டம்... எனக்கு சேமிப்புங்கற ஒரு விஷயத்தையே இல்லாம பண்ணிட்ட தாயி..!!
அதோட வுட்டியா? அடுத்ததா பால் விலைய ஏத்துன... அதுல மாசத்துக்கு மூன்னூறு ஓவா ஆட்டைய போட்டுட்ட...! நீயி ஏத்திப்புட்ட, அதனால நான் டேரக்ட்டா இழந்தது தான் இந்த தொகை எல்லாம். ஆனா, மின்சாரத்துலேர்ந்து போக்குவரத்து வரைக்கும் விலை ஏறுனதால, எல்லா பொருளும் உற்பத்தி அடக்கம் அதிகமாச்சின்னு சொல்லி இன்னும் கூடுதலா ஏத்திப்புட்டானுவோ....!!!
இந்த நேரத்துல தான் அஞ்சு மாசம் முன்னாடி ஒரு தேர்தல் வந்திச்சி. அப்ப உம்மேல கோவமா இருந்த எங்ககிட்ட நீ என்னா சொன்ன? ....போன தபா ஆட்சி செஞ்சவரு நெம்ப தப்புத்தப்பா செஞ்சிட்டாரு, அதெல்லாத்தையும் சரி பண்ணத்தான் வெலவாசிய நான் இம்புட்டு ஏத்த வேண்டீயதா போச்சி. அப்புடி ஏத்துனா தான் இந்த நாட்ட தூக்கி நிப்பாட்ட முடியும், அல்லாங்காட்டி அல்லாரும் கீழ போய்டுவோம்... அது இதுன்னு புலம்புன... அதுக்கப்பறம் வூடா வூட்டுக்கு வந்து 200 ஓவாய உங்காளுங்க கையில திணிச்சிட்டு, இந்த தபா நீங்க மாத்தி ஓட்டு போட்டாலும் மாநிலத்துல எங்கம்மா தான் முதல்வரா தொடருவாங்க, அதோட இப்ப கெலிச்சி செண்ட்ரலுக்கு போனா தான் இந்த பிரச்சினையை எல்லாம் சரி பண்ணி, வெலவாசிய குறைக்க முடியும்... அப்புடி இப்புடின்னெல்லாம் பேசுனாங்க...!!
அப்ப நாங்க கொஞ்சம் ரோசிச்சி பாத்தப்ப, இப்ப ஓட்ட மாத்தி குத்துனாலும், இந்தம்மா தான் இங்க ஆளப்போவுது. இதுக்கு ஓட்டுப்போடாம செண்டரல்ல இதுக்கு பலம் இல்லாம போச்சுன்னா, திரும்பயும் அதயே காரணம் காட்டி வெலைய ஏத்தும்ன்னு முடிவு பண்ணி, உனக்கு எம்பிக்கள் நிறையா கொடுத்தா, அங்க போயி பேசி கீசி, வெலவாசிய குறைப்பியோன்னு ஒரு நப்பாசைல, அப்பவும் உனக்கே ஓட்டப்போட்டோம்....!!!
40க்கு 37 மார்க்கு வாங்கின ஒடனே, உனக்கு மாநில முதல்வர் பதவியை விட உயர்வா மக்கள் முதல்வர்ன்னு ஒரு பதவி கிடைச்சிருக்குறதா, உங்க ஆளுங்களும், டீவியும் சொல்லிக்கிட்டு திரியறாய்ங்க. நீங்க இருந்த எடத்துக்கு ஒரு அட்டு பீஸ நீங்களே வச்சி, உங்க டைரக்‌ஷன் படியே ஆட்சி நடக்குறதா உங்க ஆளுங்களே ஒங்க டீவி பொட்டிய தொறந்தாலே, காது கிழியிற மாதிரி கத்துறாய்ங்க. நடுவால கொஞ்ச நாளு வழக்கமா போற கொடநாட்டுக்கு பதிலா, நீங்க பொறந்த ஊருக்கு பக்கத்துல இருக்குற ஒரு அக்கிரஹாரத்துக்கு போயிட்டு வந்ததா, பெரிய வரவேற்பு எல்லாம் கொடுத்து, அத எல்லா டீவி காரய்ங்களூம் லைவ் ரிலே எல்லாம் போட்டு காமிச்சாய்ங்க!!!
அத்த வுடுங்க..! ஆன இப்ப என்னடான்னா? பழைய குருடி கதவ தெறடிங்கற கதையா..., திரும்பவும் பால் கட்டணத்தை ஏத்திட்டு, அடுத்ததா இப்ப மின் கட்டணத்தையும் ஏத்திட்டீங்க....!! இதுக்கே மாசத்துக்கு இப்ப ஆயிரம் ஓவா எக்ஸ்ட்ரா துண்டு விழுது!! இதுக்கு நடுவுல இப்பத்தான் சில பத்திரிக்கை காரனுங்க, பருப்பு வாங்குறதுல ஊழல், பால் வாங்குறதுல ஊழல், முட்டை வாங்குறதுல ஊழல், எல்லாத்துக்கும் கமிஷன்,.... இதெல்லாம் பத்தாதுன்னு உங்க மினிஸ்டருங்க, ஊருல இருக்குறவன் பொண்டாட்டிய எல்லாம் தள்ளிட்டு போயிடுறான்னு வேற எழுதறாங்க....!!!
இந்த மூனறை வருஷத்துல எங்க பசங்க பல லட்சம் பேரு படிச்சி முடிச்சி, குடும்ப பாரத்தை சுமக்க வந்து நிக்கறாங்க, அவங்களுக்கு எல்லாம் வேலை கொடுக்குற மாதிரி ஒரே ஒரு தொழிற்சாலையை கூட நீங்க ஆரம்பிக்கவே இல்லை. இதுல இருக்குற தொழிற்சாலை எல்லாம் மூடிட்டு வேற மாநிலத்துக்கு ஓடுறான்... ! ஏன் ஓடுறான்? நீங்க ஏன் அவனை எல்லாம் தடுத்து நிப்பாட்ட மாட்டேங்கறீங்கன்னும் புரிய மாட்டேங்குது...!!!
மூனறை வருஷத்துக்கு முன்னாடி அப்பல்லாம் அந்த அப்புறாணி பழைய முதல்வர், துணை முதல்வர் ஆட்சியில வெலவாசியே ஏறாததனால, மாசாமாசம் கொஞ்சம் மிச்சம் புடிச்சி ஒரு அமௌண்ட் சேர்த்து வச்சிருந்தேன். அப்பவே வீடு கட்டலாம்ன்னு நினைச்ச போது, எங்க பக்கத்து வூட்டு மன்னாரு, ஏய்.., முட்டாப்பயலே, இப்ப கட்டாதடா, இந்தம்மா ஆட்சிக்கு வந்துச்சினா எல்லா வெலவாசியையும் இன்னும் குறைக்கப் போறதா சொல்லிக்கிட்டிருக்கு. இது ஆட்சிக்கு வந்தோடுன கட்டினீன்னா... சிமெண்ட்டு, கம்பி, மணலு, ஜல்லி எல்லாம் சல்லிசா கிடைக்கும்டா, இப்ப நீயி கட்டுறத விட மூனு லட்ச ஓவா மிச்சம் புடிக்கலாம்டான்னு சொன்னான்!!!
அவன் பேச்சைக் கேட்டு நானும் வெயிட் பண்ணினேன். இப்ப ஒரு மேஸ்திரிய கூப்பிட்டு, அந்தப் பணத்துக்கு ஆயிரம் சதுர அடியில வீடு கட்டித்தர சொன்னா... அந்தாளு என்னையப் பார்த்து வாயை மூடிக்கிட்டே சிரிச்சிட்டு சொல்றான்.....
......சார் இது என்ன கலைஞர் ஆட்சின்னு நினைச்சீங்களா நீங்க கொடுக்குற பணத்துக்கு ஆயிரம் சதுர அடிக்கு வீடு கட்ட?!! இப்ப நடக்குறது மக்கள் முதல்வர் ஆட்சி சார்... மக்கள் முதல்வர் ஆட்சி...!!! இந்தப் பணத்துக்கு 500 சதுர அடிக்கு வேனா வீடு கட்டித்தர்றேங்கறான்....!!!!
இப்ப சொல்லுங்க மக்கள் முதல்வரே... இதெல்லாம் நியாயமா??? என்னைய மாதிரி அப்புறாணி மக்களை எல்லாம் நம்ப வச்சி கழுத்தறுத்திட்டீங்களே...!! இது நியாயமா??!!!

சொல்லுங்க மக்கள் முதல்வரே... சொல்லுங்க...!!!!!

Wednesday, December 17, 2014

லிங்கா... படம் பார்த்த அனுபவம்..!

வழக்கம் போல பிரபல்யமான படங்களை தட்டாமல் பார்க்கின்ற அஜெண்டாவில் லிங்காவும் வருவதால், 13ஆம் தேதியே அதாவது சனிக்கிழமை இரவுக் காட்சிக்கு மனைவியுடன் ஆஜர் ஆகிவிட்டேன்.

மாயவரம் விஜயா தியேட்டர், பால்கனி, ஒரு டிக்கெட் 250 ரூபாய். ரஜினி படம் பொதுவாக திங்கள் கிழமை ரிலீஸ் என்றாலே அந்த வாரத்தில் எந்தக் கிழமை சென்றாலும் திருவிழாக்கூட்டம் தான் இருக்கும். ஆனால் இரவு 9.35க்கே எந்த சிரமமும் இன்றி காரை தியேட்டர் உள்ளே கொண்டு சென்று ஃப்ரீயாக நிறுத்த முடிந்தபோதே, கொஞ்சம் ஜெர்க் ஆகித்தான் போச்சு!

200 பேர் வரை கியூவில் அமைதியாக நின்று டிக்கெட் எடுத்துக்கொண்டிருந்தார்கள். என் சீட்டுக்கு அடுத்து நான்கு இருக்கைகள் படம் முடியும் வரை காலியாகவே தான் இருந்தது. 

இடைவேளை விட்ட பொழுது, சுற்றும் முற்றும் பார்த்ததில், எல்லோருமே பெரிதாக சோம்பல் முறித்தபடியே, தூக்கத்தை விரட்ட ஏதாவது கூல்டிரிங்க்ஸ் குடிக்கலாமா என்ற தோரணையில் எழுந்து நடக்க ஆரம்பித்தனர்.

ரஜினி படம் என்றாலே இருக்கின்ற அந்த விறுவிறுப்பும், ஸ்டைலும், நகைச்சுவையும், இதிலே டோடலாக மிஸ் ஆகியிருந்தது. படம் துவங்கும் போதே, கர்நாடகாவின் சீஃப் மினிஸ்டரிலிருந்து பியூன் வரைக்கும் போட்ட நன்றி கார்டே, ஒரு கன்னட பட ஃபீலிங்கை உருவாக்கிவிட்டிருந்தது. அதே மாதிரியே படமும், அந்தக்காலத்தில் கிழவர்களான பின்பும் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த கிருஷ்ணா, ராஜ்குமார் படங்களைப் போன்றே இருந்தது.  ஆனால் தெலுங்கர்கள், கன்னடர்கள் மாதிரி நம் தமிழர்கள் கிடையாது என்பதை இப்பொழுது ரஜினி வகையறாக்கள் புரிந்துகொண்டிருக்கும். 

அந்தக்காலத்தில் இங்கே ரஜினிக்கு எஸ்.பி. முத்துராமன் மாதிரி தெலுங்கில் சிரஞ்சீவிக்கு கோதண்டராம ரெட்டி என்ற இயக்குனர் இருந்தார். இந்தப்படமும் அவரது படம் மாதிரியே இருந்து ஒருவித டப்பிங் சினிமா பார்த்த எஃபக்ட்டை கொடுத்தது தான் கொடுமையின் உச்சம்.

இளமையாகக் காட்ட ரஜியை படுத்தியிருக்கும் பாடு....  முகம் எல்லாம் வீங்கி தொங்குகின்றது...  தலைமுடி விக், கேவலத்தின் உச்சம்...  ரஜினியின் மனசு அவர் குடும்பத்தினரைப் பார்த்து விடுங்கடா பாவிங்களான்னு கூவியிருக்கும்ன்னு நினைக்கிறேன்.

படம் வந்து இன்னும் ஒருவாரம் கூட ஆகவில்லை, காலை காட்சி விஜயா தியேட்டர் காற்று வாங்கிக் கொண்டிருக்கின்றது.  ரஜினியின் தோல்விப்படங்கள் கூட பத்து நாட்கள் நான்கு காட்சியும் ஃபுல் ஆகும் என்பது தான் வரலாறு. குசேலனுக்குப் பிறகு அந்த வரலாறுகள் மாற ஆரம்பித்திருப்பது தான் யதார்த்தம்.

ஜஸ்டிஸ் கோபினாத், படிக்காதவன், படையப்பா போன்ற படங்களில் சிவாஜி தன் வயதுக்கு ஏற்றவாறு கேரக்டர் எடுத்துக்கொண்டு, இன்னொரு வளரும் நடிகரோடு நடித்தது மாதிரியான படங்களை தேர்வு செய்வது தான் இனி ரஜினிக்கு வெற்றி ஃபார்முலாவாக இருக்கும் என்று நினைக்கிறேன்.  இல்லை... நான் தான் ஒன் அண்டு ஒன்லி ஹீரோவாக அதிலும் இளமை ததும்பிடும் ஹீரோவாக நடிப்பேன் என்று இன்னமும் அடம்பிடித்தால், ரஜினி உருவாக்கிய சாம்ராஜ்யத்தை அவரே தரைமட்டமாக்கிவிட்டுச் செல்லும் நிலை தான் ஏற்படும்!!!

சொல்லுங்கள் மக்களே சொல்லுங்கள்.! இப்படிக்கு மாக்களின் முதல்வர் மனசாட்சி..!!

கடந்த மூன்றாண்டுகளில் இரண்டாவது முறையாக மக்கள் தலையில் பேரிடியாய் வந்து விழுந்திருக்கும் இந்த மின் கட்டண உயர்வுக்கு முற்றும் முழுதாக, ஆதி முதல் அந்தம் வரையான காரணம் என்றால் அது கடந்த காலங்களில் நடைபெற்ற திரவிட முன்னேற்ற கழக ஆட்சிக்காலங்களின் செயல்பாடுகள் தான்...!!! 
இப்படிக்கு மாக்களின் முதல்வர் மற்றும் திராவிட இயக்க சித்தாந்தங்களை எதிர்க்கும் கூட்டமைப்புகளின் மைண்ட் வாய்ஸ்கள்...!!!
======================================================================
மக்களே இதை உங்களுக்கு புரிய வைக்க, கொஞ்சம் தெளிவாக, விளக்கமாக, எழுத வேண்டியுள்ளதால், பொறுமையாக முழுமையாக படித்து எங்கள் பக்கத்து நியாயத்தை புரிந்துகொள்ளுங்கள்....!!!  இப்படிக்கும்... அதே கூட்டமைப்புக்களின் மைண்ட் வாய்ஸ்கள்...!

திமுக என்ற கட்சி முதன்முதலாக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, தமிழகத்தில் பார்ப்பரனல்லாத மற்றும் உயர்நிலை சாதிக்காரர்கள் தவிர்த்து கிட்டத்தட்ட 65 சதவிகித பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவருமே, பள்ளிக் கல்லூரிப் படிப்புகளை அனுபவிப்பது கிட்டத்தட்ட 5 சதவிகிதத்திற்கும் குறைவானதாகத்தான் இருந்தது. அவரவர் தத்தமது குலத்தொழிலையோ அல்லது கூலி வேலை செய்வதையோ தான் தொழிலாக கொண்டிருந்தனர்.
தமிழகத்தில் சொல்லிக்கொள்கிற மாதிரியாக ஒன்றிரண்டு மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே நான்கைந்தாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் நிலையில் இருந்தது. மற்றபடி அரசு அலுவலக பணியாளர்களைத் தவிர வேறொரு வேலை வாய்ப்பிற்கான வசதியும் இல்லாத நிலையில்.... டிகிரி முடிக்கும் சொற்ப நபர்களும் வேலைக்காக மும்பை, டெல்லி, கொல்கத்தா என்று தான் செல்ல வேண்டியிருந்தது.
ஆகவே தமிழகத்தைச் சார்ந்த கிட்டத்தட்ட 80 சதவிகித மக்கள், சராசரிக்கும் மிகக் கீழான அடித்தட்டு வாழ்க்கை நிலையினையே பெற்றிருந்த நிலையில்... அவர்களது இல்லங்களில், மின் விசிறி, அயர்ன் பாக்ஸ், டீவி, டிவிடி, வாட்டர் ஹீட்டர், மிக்ஸி, கிரைண்டர், ஃபிரிட்ஜ், தண்ணி மோட்டார், டியூப் லைட், செல்ஃபோன் ரீசார்ஜர்ஸ், ரேடியோ.... இப்படியாக எந்த மின் உபயோகப் பொருட்களுமே கிட்டத்தட்ட எந்த வீட்டிலும் கிடையவே கிடையாது....!!
வீதிகளில் கூட எங்காவது ஒரு மூலையில் வெறும் குண்டு பல்பு மட்டுமே எரியும், கிராமங்களில் அதுவும் கிடையாது. விவசாயிகளுக்கு போர்செட் வசதியும் கிடையாது.
ஆகவே தொழிற்சாலைகள் கிடையாது, பள்ளி, கல்லூரிகள் மிக மிக குறைவு, விவசாயத்திற்கும் மின்சாரம் கிடையாது, 70 சதவிகித வீடுகளில் மின் இணைப்பே கூட கிடையாது, இருப்பவர்களும் மாததிற்கு 50 யூனிட் அளவுக்கு கூட பயன்படுத்த முடியாத உபகரணங்கள் தான் வைத்திருந்தார்கள்.... இக்காரணங்களால், ஒட்டுமொத்த தமிழக மின் தேவையே இப்பொழுது இருப்பதில் வெறும் 5 சதவிகிதம் மட்டுமே இருந்தது....!!!
இப்படிப்பட்ட ஒரு அற்புதமான காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருந்த தமிழக மக்களின் நிம்மதியைக் குறைக்கும் வண்ணமாக முதன் முதலாக தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வர ஆரம்பித்த காலத்தில் இருந்து தான், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்களுக்கான இட ஒதுக்கீட்டுக் கொள்கைகளை வேகமாக முன்னெடுக்க ஆரம்பித்து, அவர்கள் பள்ளி, கல்லூரி, அரசு வேலைகள் என்று நுழைய ஆரம்பித்தனர், ஒரு கட்டத்தில் மத்திய அரசு கல்வி மற்றும் வேலை வாய்ப்பிலும் இவர்களுக்கு இட ஒதுக்கீடு வாங்கித்தார்கள். தேவைக்கேற்ப அவர்களது அரசு இன்னும் புதிது புதிதாக பள்ளிகள், கல்லூரிகள் திறக்க ஆரம்பித்தது. அதுவும் போதாமல் தனியாருக்கும் பள்ளி, கல்லூரி திறக்க அனுமதி அளித்தனர். இன்னும் நிறைய பேரை ஊக்கப்படுத்த, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கல்விக்கட்டண சலுகை, பெண்களுக்கு இலவச கல்வி, படித்த பெண்களுக்கு திருமணத்திற்கு உதவி... படித்த இளைஞர்களுக்கு தமிழகத்திலேயே வேலை கிடைக்க, மத்திய அரசோடு கூட்டணி அமைத்து மத்திய ஆட்சிகளில் பங்கெடுத்து, அதனைப் பயன்படுத்தி, எக்கச்சக்கமான வெளிநாட்டு தொழிற்சாலைகளை தமிழகத்திற்கு கொண்டுவந்து கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவது.... இன்னமும் படிக்காமல், கூலி வேலை செய்யும் பாட்டாளி பெருமக்களுக்கு இங்கேயே அதிக சம்பளத்தில் வேலை கொடுப்பதற்கு, அரசு அலுவலகங்கள், சாலைகள், பாலங்கள், கிராமங்கள் தோறும் உயர்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், கூட்டுக்குடிநீர் திட்டங்கள், கடல்நீரை நன்னீராக்கும் திட்டங்கள்... இப்படியான மக்களுக்குத் தேவையான தொலைநோக்குத்திட்டங்களைத் தீட்டி அதை செயல்படுத்துவதன் மூலம், இந்த பாட்டாளி பெருங்குடி மக்களுக்கும் அதிக சம்பளத்துடன் வருடம் முழுக்க வேலைவாய்ப்பை வழங்கியும், விவசாயம் பொய்த்துப்போகாமல் காப்பாற்ற, விவசாயிகள் போர்செட்டுக்களுக்கு இலவச மின்சாரம் அளித்து இன்றுவரையிலும் தமிழக விவசாயத்தைக் காப்பாற்றி வருவது, போக்குவரத்துத் துறையை அரசுடமையாக்கி ஒரே நாளில் பல லட்சம் தமிழர்களை அரசு ஊழியர்களாக்கியது.... அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கி, அவர்கள் வாழ்க்கை நிலையை தரம் உயர்த்தியது.... இப்படியாக இன்னும் எழுத எழுத வந்து கொண்டிருக்கும் அளவிற்கு இன்றைய நிலையில் தமிழகத்தின் உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கின்ற அனைத்து மக்களின் மிகக் குறைந்த அளவிலான ஒரு நாளைய ஊதியமே 250 ரூபாய் என்ற அளவிற்கு வந்துள்ள நிலையில்....
....வந்துள்ள நிலையில்.... (கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கோங்க மக்கா)
இன்றைக்கு, மின் இணைப்பு இல்லாதே வீடே தமிழகத்தில் இல்லை, டியூப் லைட், ஃபேன் இல்லாத வீடும் இல்லை, டீவி, மிக்ஸி, கிரண்டர், அயர்ன் பாக்ஸ் இல்லாத வீடும் இல்லை, இதைத் தவிர்த்து தண்ணி மோட்டார், ஏஸி என்று பெரும்பாலான வீடுகளில் இருக்கின்றது. ஒவ்வொரு வருடமும் பல லட்சம் பேர் புதிது புதிதாக வீடு கட்டுகின்றனர், குக்கிராமங்கள் வரை டியூப் லைட்டுக்களால் வீதிகள் மிளிர்கின்றன, எண்ணற்ற பெரும் தொழிற்சாலைகள், லட்சக்கணக்கான சிறு, குறு தொழிற்சாலைகள்.... கிட்டத்தட்ட தமிழகத்தின் அனைத்து மக்களுக்குமான வேலை வாய்ப்பு இங்கேயே உறுதி செய்யப்பட்டிருக்கின்றது......
நடுவில் எம்.ஜி.அர், அவ்வப்பொழுது ஜெயலலிதா என்று வந்து இந்த வளர்ச்சிகளை ஃப்ரீஸ் பண்ணி வைத்தாலும், இந்த பாழாய்ப்போன தமிழர்கள் மீண்டும் மீண்டும் தூக்கம் கலைந்து திமுகவை ஆட்சிக்கு வரவழைத்து, இந்த வளமைகளை மீண்டும் தொடர வைத்து தமதாக்கிக் கொண்டு தான் இருக்கின்றார்கள்....!!!
திராவிட ஆட்சி முதன் முதலாக 1967இல் துவங்குவதற்கு முன்னால் கூட காங்கிரஸுக்கு பெரிய பிரச்சினை இல்லாமல் இருந்தது. ஆனால் உண்மையான திராவிட ஆட்சிக்குப் பிறகு ஒவ்வொரு தடவையும் வருகின்ற எங்களது இந்த அ திராவிட ஆட்சி, அந்த வளர்ச்சியின் வேகங்களைக் குறைப்பதற்கும், அந்த வளர்ச்சிக்கு ஈடு கொடுத்து செயலாற்ற முடியாமலும், எவ்வளவு சிரமப்பட்டு தத்தளித்துக்கொண்டிருக்கின்றது என்பதை பொது மக்கள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்!!!
அவர்கள் நிறைய பள்ளிக் கல்லூரிகள், தொழிற்சாலைகள் என்று திறந்து வைத்து விட்டார்கள் அதற்கு எவன் மின்சாரம் தருவது? அவர்கள் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் தந்துவிட்டார்கள் அதற்கு யார் பணம் கட்டுவது? அவர்கள் தனி நபர் வருமானத்தை உயர்த்தி விட்டதால் அவனவன் சொந்த வீடு கட்ட ஆரம்பித்து விட்டான், அதற்கெல்லாம் அதிகப்படியான மின்சாரத்தை நாங்கள் எப்படி தரமுடியும்? அவர்கள் நிறைய சம்பாதிக்கும் நபர்கள் எண்ணிக்கையை பெருக்கி விட்டதால் ஏஸி, பெரிய பெரிய டீவி இதெல்லாம் வச்சிக்கிட்டு மின்சாரத்தை அதிகம் பயன்படுத்தினால் நாங்கள் என்ன செய்ய முடியும்????
மின் கட்டணத்தை உயர்த்தி, மின் பயன்பாட்ட குறைக்க வைக்கும் வழியைத்தான் எங்களால் செய்ய முடியும். இந்தப் பிரச்சினையை எல்லாம் தீர்க்க அவர்கள் எட்டு மின் உற்பத்தி திட்டங்கள் போட்டு 7600 மெகாவாட் மின் உற்பத்திக்கு ஏற்பாடு செய்து, அவை அனைத்தும் 2011லேயே முக்கால், பாதி, கால் கிணறு தாண்டிய நிலையில் இருக்கின்றது என்று சொன்னார்கள்....
ஆனால் அதை எல்லாம் தொடர்ந்து செய்து முடித்திட திறமையான அமைச்சரோ அதிகாரிகளோ எங்களிம் இல்லை என்பது கூடவா உங்களுக்குப் புரியவில்லை? அதிகாரிகளை 6 மாதத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டிய இக்கட்டான நிலையில் இருக்கும் எங்கள் நிலையையும் கொஞ்சம் புரிந்துகொள்ளுங்கள் மக்களே...!! விலையில்லா ஆடு, மாடு, லேப்டாப், அரை பவும் தாலித்தங்கம், அம்மா உணவகம், ஸ்கூல் பேக், செறுப்பு, பல்பொடி, ஃபேன், மிக்ஸி, கிரைண்டர்... இப்படி உங்களிடம் ஓட்டு அறுவடை செய்ய வாரி இறைத்திருக்கும் இலவசங்களுக்கே எங்களுக்கு பணப்பற்றாக்குறை இருக்கும் போது, இந்த மின் உற்பத்தி திட்டங்களுக்கு எல்லாம் எப்படி எங்களால் பணம் செலவு செய்ய முடியும் என்று சொல்லுங்கள் மக்களே...!! அதனால் தான் வெளி மாநிலங்களில் இருந்து கூடுதல் விலை கொடுத்து மின்சாரம் வாங்குகிறோம்... அந்த கூடுதல் செலவை உங்கள் தலையில் கட்டண உயர்வாக வைத்துத்தானே... ஈடுகட்ட முடியும்???!!!
வெளி மாநிலத்தில் இல்லாமல் இங்கேயே குறைந்த விலைக்கு வாங்கலாமே என்கிறார் கடந்த ஆட்சியாளர், உங்களிடம் ஓட்டு வாங்க ஓட்டுக்கு 200. 500 ந்னு அவர் கொடுத்திருந்தால், இப்படியெல்லாம் பேசியிருக்க மாட்டார்....!!!!
இப்பொழுது சொல்லுங்கள் மக்களே.... இந்த மின் கட்டண உயர்வுக்கு எல்லாம், நாங்கள் காரணமா? அல்லது முந்தைய திமுக ஆட்சியாளர்களின்.... அடித்தட்டு மக்களை எல்லாம் அல்ட்ரா மாடர்னாக மாற்றிய திட்டங்கள் காரணமா????

சொல்லுங்கள் மக்களே... சொல்லுங்கள்...!!!!


Tuesday, December 16, 2014

தள்ளாடுகின்றனவா.... திராவிடக் கட்சிகள்...?!

திராவிட சித்தாந்தம் இனியும் தேவையா?  திராவிட இயக்க கட்சிகள் தேய்ந்து கொண்டிருக்கின்றதா??....

இப்படியான வாதப் பிரதிவாதங்களை, சமீபகாலமாக ஆரிய அடிவருடி ஊடகங்கள் தொடர்ந்து பரப்புரை செய்து வர ஆரம்பித்திருக்கின்றன.  இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இலகுவாக எதாவது ஒரு காரணத்தை முன்னிறுத்தி காலூன்ற முடிகின்ற பாஜகவால், தமிழகத்தில் மட்டும் அப்படி இலகுவாக ஒரு சிறிய மாற்றத்தைக் கூட ஏற்படுத்திட முடியவில்லை.

ஊழல், தனி நபர் புகழ் கெடுத்தல், மயக்கும் விளம்பரங்கள்... இப்படி எந்த மாயாஜாலங்களும் பாஜகவை தமிழகத்தில் காலூன்ற உதவிடவில்லை....!!

இதற்கான காரணங்களை பாஜக ஆராயும் போது தான், தமிழக மக்கள் ஒரு சித்தாந்தத்தின் வாயிலாக ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதும், அவர்களின் வாக்களிக்கும் முறை என்பது அந்த சித்தாந்தத்தின் வாயிலாக ஸ்கேன் செய்யப்பட்டே பதிவு செய்யப்படுவதும் புலப்பட்டிருக்க வேண்டும்.

அது தான் திராவிட இயக்க சித்தாந்தம் என்ற போதிலும், அதை உடனடியாக ஆரியத்திற்கான எதிர்ப்பு என்ற ஒற்றைச் சாளர பார்வையில் மட்டுமே கணிப்பதும் மிகத் தவறானதாகும் என்பதை இப்பொழுது தான் பாஜக புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கின்றது. அந்த சித்தாந்தத்தின் இன்னொரு பரிமாணம் அல்லது முக்கியமான பரிமாணம் என்பது ஆரியத்தின் கபடத்தில் இருந்து இங்கிருக்கும் மற்ற அனைவரையும் ஒரு குடையின் கீழ் நிறுத்தி பாதுகாப்பதுவே... என்பதை மிகச் சமீபத்தில் தான் புரிந்து கொண்டிருக்கின்றது!

அப்படியான திராவிட சித்தாந்தத்தின் பாதுகாப்பில், ஒட்டுமொத்த தமிழக தமிழர்களும் கடந்த அரை நூற்றாண்டில் அடைந்திருக்கின்ற பலன்கள் என்பது அளவிடற்கறியது.

அரை நூற்றாண்டுக்கு முன்னதாக பார்ப்பனரல்லாத அனைத்து தமிழக தமிழர்களின் வாழ்க்கைத் தரமும் இன்றைக்கு அவர்கள் வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்டிருக்கின்ற கற்பனைக்கெட்டாத வளர்ச்சியையும், ஒவ்வொரு தமிழக இளைஞரும் 50 வயதினைக் கடந்த தங்கள் வீட்டுப் பெரியோரைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். இந்திய அளவில் மற்ற மாநிலங்களோடு நம் தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் உற்று நோக்கிட வேண்டும்.  கால் நூற்றாண்டுக்கு முன்பு வரை கூலி வேலைக்காக் கூட வெளி மாநிலங்களுக்குச் செல்ல வேண்டியிருந்த தமிழக தமிழர்களின் நிலை...  இன்றைக்கு தங்கள் வேலைகளுக்கு வெளிமாநில இந்தியர்களை இங்கே கூலி வேலைக்கு அமர்த்தக்கூடிய அளவிற்கு உயர்ந்திருப்பதையும் எண்ணிப்பார்த்திட வேண்டும். உடல்சார் வேலைகளுக்காக மட்டுமே வெளிநாடுகளுக்குச் சென்று கொண்டிருந்த தமிழர்கள் இன்றைக்கு கடந்த பதினைந்து ஆண்டுகளாக, அறிவுசார் வேலைகளுக்காக பெருமளவில் உலகம் முழுவதும் பயணித்துக்கொண்டிருக்கின்ற நிலையினையும், உணர வேண்டும்.

ஒரு சித்தாந்தத்தின் அடிப்படையிலான அரை நூற்றாண்டுகால ஆட்சியானது, தவறானதாக இருந்திருக்குமேயானால், இப்படியொரு சமுதாயப் புரட்சியை ஏற்படுத்தியிருக்கின்ற மாற்றங்கள் ஒரு சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கவே வாய்ப்பில்லை. 

இதை மிகத் தெளிவாக புரிந்து கொண்டுவிட்டிருக்கின்ற பாஜக, ஆரியத்தின் அடிவேர்களான தாங்களே இதை எதிர்த்தால் இங்கே வேலைக்காகாது என்று தான், இங்கிருக்கும் சில சில்லரைகளை கட்சிகள் என்ற பெயரில் துவங்க வைத்து, அவை எல்லாம், திராவிட இயக்கங்களுக்கான மாற்று என்ற கோஷத்தை முன் வைத்து, திராவிட இயக்கங்களை நீர்த்துப்போக வைக்கும் முயற்சிகளில் இறங்கியிருக்கின்றது.

பாமக, தமாக, தமிழ்தேசியக் கட்சிகள் மற்றும் இன்னபிற சாதிக்கட்சிகள் தான் பாஜகவின் இந்த வலையில் வீழ்ந்து அவர்களுக்காக இங்கே கூலி வேலை செய்துகொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் நேற்று புதிய தலைமுறை டீவியில் நடைபெற்ற ஒரு விவாதத்தில் திராவிடக் கட்சிகள் தளர்ந்து போய்விட்டன என்ற பாமகவின் பாலுவுக்கு எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் அளித்த ஆணித்தரமான விளக்கங்களுக்கு பதில் சொல்ல இயலாமல், 2ஜி ஊழலை கையில் எடுத்து பாமக பாலு பேசத் துவங்கியவுடன், எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன், ஊழலைப் பற்றிப் பேசும் தகுதி பாமகவுக்கு கிடையவே கிடையாது என்று அன்புமணி சம்பந்தப்பட்ட ஊழல்களையும், பாமகவின் கீழ்த்தரமான அரசியல் செயல்பாடுகளையும் அப்பட்டமாக பேசிப் பொறிந்துதள்ளிவிட்டார்.

ஆரியம் தற்பொழுது திராவிடத்திற்கு எதிரான மிகப் பெரிய சூழ்ச்சியுடன் களமிறங்கியிருக்கின்ற வேளையில், ஆரியத்திற்கு துணை போகின்ற கோடரிக்காம்புகளான பாமக, தமாக, தமிழ்தேசியம் போன்ற கட்சிகளையும் அதன் தலைவர்களையும் இனிமேல் திமுகவும் அதன் தலைமையும் மிகப் பலமாக எதிர்கொள்ள வேண்டும். அவர்களிடம் மென்மையான எதிர்வினைகள் ஆற்றுவது என்பது திமுகவுக்கு வரும் தேர்தலில் மிகப் பெரும் சேதாரத்தை அளிப்பதோடு, திராவிட சித்தாந்தத்தின் அடிப்படைக் கொள்கைகளான சமூக நீதி, இட ஒதுக்கீடு போன்றவற்றுக்கெல்லாம் சமாதி கட்டுகின்ற சூழலையும் தமிழகத்தில் உருவாகிவிடும்.

திமுகவுக்கு தன்னுடைய எதிரிகள் யார் என்று தெரியும்....   ஆனால் துரோகிகளை உடனடியாக கருவறுக்க வேண்டிய அவசர நிலையில் அது இருப்பதை திமுக தலைமை உணர வேண்டும்!!! 

Wednesday, December 3, 2014

முட்டை கொள்முதலும்.. கூமுட்டை மணியும்..!

பர்சேஸ் மணி வந்து கேண்டீன் ரோக்கா கொடுத்துவிட்டு நின்றான்...

நான் அதை மேய்ந்தவாரே...  என்னய்யா இது, ஒரு முட்டை ரெண்டு முட்டை வாங்கினாலே நாலு ரூபாய்க்கு கடைல கிடைக்குது, நீ 100 முட்டை வாங்கினதுக்கு 3.90 கொடுத்து வாங்கிருக்கியே? மொத்தமா 100 முட்டையா வாங்கினாலும் வெறும் பத்து காசு தான் குறைப்பாங்களா??

அட போங்க சார், கொஞ்சங் கூட வெவரம் இல்லாமலேயே பேசுறீங்களே...?!  இப்பல்லாம் முட்டைய மொத்தமா வாங்கினால் சில்லரை விலையை விட காசு கூடுதல் சார்...   நானா இருக்கங்காட்டி அடிச்சி புடிச்சி பத்து காசு கம்மியா வாங்கியிருக்கேன் சார்...!!

யோவ்... என்னையா? என்னை லூஸுன்னு நினைச்சியா?

நீங்க லூஸு இல்லன்னா, ஐ ஏ எஸ் அதிகாரிங்க, அமைச்சருங்க, முதலமைச்சரு, மக்கள் முதல்வர் இவிங்க எல்லாம் லூஸா சார்?

என்னய்யா ஆச்சு உனக்கு? சம்பந்தமே இல்லாம மாத்தி மாத்திப் பேசி குழப்பற?

பின்ன  என்னா சார்....  100 முட்டை வாங்கினதுக்கே, நான் பத்து பைசா கம்மியா வாங்கியிருக்கேன், ஆனா ஒரு நாளைக்கு 48 லட்சம் முட்டை வாங்க 51 காசு அதிகமா கொடுத்து வாங்கியிருக்காங்க சார்....   !!!!!

அடங்கொன்னியா.....   என்னாய்யா சொல்ற?

ஆமா சார்...  நான் உங்க கிட்ட வேலை பார்க்குறதுக்கு பதிலா என்னைய மாத்திரம் அரசாங்கத்துல இந்த முட்டை வாங்குற வேலைக்கு சேர்த்தாங்கன்னா, வருஷத்துக்கு நம்ம தமிழக அரசுக்கு இருநூறு கோடி ரூபாய்க்கு மேல மிச்சம் பண்ணிக் கொடுப்பேன் சார்...!!

அது என்னய்யா 200 கோடி ரூவா கணக்கு????!!!

தமிழ்நாட்டுல ஒரு நாளைக்கு ஒன்னாங்கிளாஸ்ல இருந்து பத்தாங்கிளாஸ் வரைக்கும் 48 லட்சம் மாணவர்கள் சத்துணவு சாப்பிடுறதா தினகரன் பேப்பர்ல போட்டிருக்காங்க சார்...!!

48 லட்சம் பேருக்கும் வாரத்துல 5 நாள் முட்டை போடுறாங்களா?  அப்புடீன்னா வாரத்துக்கு எத்தினி லட்சம் முட்டை சொல்லுங்க??

2 கோடியே 40 லட்சம் முட்டை....!

ஒரு வருஷத்துக்கு எத்தினி வாரம் சார்....?

52 வாரம் வரும்யா...

அப்டீன்னா வருஷத்துக்கு எத்தினி முட்டை சார்...?

124 கோடியே 80 லட்சம் முட்டை வருதுய்யாஆஆஆ...!!!

ஒரு வருஷத்துக்கு 125 கோடி முட்டை எல்லாம் வாங்குறதுன்னா, அத சில்லரை கடை விலையை விட கூடுதலா குடுத்து வாங்க நான் ஒன்னும் கூமுட்டை இல்ல சார்...!!!

உற்பத்தியாளர்கிட்டயிருந்து ஒரு லாபம் வச்சி ஹோல் சேல் வியாபாரிக்கிட்ட வந்து, அவங்க கிட்ட இருந்து ஒரு லாபம் வச்சி, ஒவ்வொரு ஊரு டீலருக்கும் வந்து சேர்ந்து, அவங்க ஒரு லாபம் வச்சி சில்லரை கடை காரங்களுக்கு கொடுத்து, அவங்க ஒரு லாபம் வச்சி நமக்கு தரும் போதே 4 ரூபாய்க்கு தர முடியுதுன்னாஆஆஆஆஆஆஆஆஆஆ....

அந்தந்த மாவட்டத்துல ரெண்டு முட்டை உற்பத்தியாளரை புடிச்சி,  இந்தந்த பள்ளிக்கு இவ்ளோ இவ்ளோ முட்டை தினம் ஃப்ரீ டெலிவரியா இறக்கனும்ன்னு டீல் போட்டாலே போதும் சார், வெறும் 3 ரூபாய்க்கே கூட கொண்டு வந்து கொடுத்து தலைக்கு மேல கைய தூக்கி கும்பிட்டுட்டு போவாங்க சார்...!!!

அவர் ஒன்னும் விலையை குறைச்சு கூட தர வேண்டாம் சார். நடுவுல இருக்குற ஹோல் சேல் வியாபாரி, டீலருங்க, கடைக்காரர் இவங்க மூனு பேரோட லாபத்தை நமக்கு தள்ளிவிட்டாலே போதும், நான் சொல்ற ரேட்டுக்கு ஜம்முன்னு கொடுக்கலாம்...!

அப்புடி பார்க்கும் போது வருஷத்துக்கு 125 கோடி முட்டைக்கு 1.50 மிச்சம்னா எவ்ளோ மொத்த லாபம்ன்னு சொல்லுங்க சார்???

187 கோடி ரூபாய்யா............!

அப்புடி இருந்தாலும் நீ சொன்ன 200 கோடில 13 கோடி ஷார்ட்டேஜ் வருதேய்யா???

அட போங்க சார்....!  பர்ச்சேஸுக்கு பத்து பர்செண்ட் கமிஷன் வாங்கினா கூட அதுல 13 கோடிய கவர்மெண்ட்டுக்கு கொடுத்துட்டு பாக்கிய எங்க வீட்டுக்கு வெள்ளை அடிக்க வச்சிக்குவேன் சார்....!!

என்னைய மட்டும் அந்த டிபார்ட்மெண்ட்டுக்கு அமைச்சரா ஆக்கினா முட்டைல மட்டுமே நம்ம தமிழ்நாட்டுக்கு 200 கோடி ரூவா லாபம் சம்பாதிச்சி கொடுப்பேன்....   இப்ப அந்த பணம் எல்லாம் யார் யாருக்கு பங்கா போயிட்டிருக்கோ தெரியல....!!!!

டிஸ்கி: போன திமுக ஆட்சியில மாசா மாசம் டெண்டர் விட்டு, அந்தந்த மாவட்ட நிர்வாகமே, அங்கங்கே பர்சேஸ் பண்ண வழி செஞ்சி ஊழல் இல்லாம சந்தை விலையை விட குறைவா வாங்கின முட்டையை, இந்த ஆட்சியில் வருடத்திற்கு ஒரு டெண்டர் என்று மட்டுமே விட்டு, அதையும், மாநில அளவில் இரண்டே நிறுவனங்கள் மட்டுமே சப்ளை பண்ணும்படி ஏற்பாடு பண்ணியிருக்காங்க. அதுனால தான் இவ்ளோ ஊழல்...

மக்களே இப்போ சொல்லுங்க...

திமுக ஆட்சி பெஸ்ட்டா?   அதிமுக ஆட்சி பெஸ்ட்டா?

Tuesday, December 2, 2014

மோடியின் பொருளாதாரமும்.... மு.க. ஸ்டாலின் விமர்சனமும்..!

ஸ்டாலினுக்கு பொருளாதாரம் தெரியுமா? - சுனா சாமி!!!

மோடி ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் ஆகின்ற நிலையில் பொருளாதாரம் சார்ந்த அவர் அரசின் செயல்பாடுகள் பணக்காரர்களுக்கு மட்டுமே பலனும் ஊக்கமும் அளிப்பதாக தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருக்கின்றார்.இதற்குத் தான் சுனா சாமி மேலே உள்ளது மாதிரியான அபத்தத்தை வாந்தியாக எடுத்திருக்கின்றார். ஒரு அரசின் செயல்பாடுகள், ஏழைபாழைகளுக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கும் பலனுள்ளதாக அமையவில்லை என்பதைச் சொல்ல ஒருவர் பெரிய பொருளாதாரப் புலியாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாறாக அவர் ஏழை மற்றும் நடுத்தர மக்களிடம் அவர்களில் ஒருவராக இணைந்து நெருங்கி பழகினாலே..., வாழ்ந்தாலே போதும்!!

ஒரு கல்விக்கடன் வாங்கவே இங்கே அவனவன் சிங்கி அடித்துக்கொண்டிருக்கும் போது, ஸ்டேட் பேங்க்ல நம்ம பணத்தைக் கொடுத்து டிடி எடுக்கவே நாள் கணக்குல காத்து நிற்க வேண்டியிருக்கும் நிலையில், அந்த வங்கித் தலைவரையும், ஒரு ஃபெயிலியர் ப்ராஜெக்ட்டை கையில் வைத்திருக்கும் தன் தொழிலதிபர் நண்பரையும் கையோடு ஆஸ்திரேலியா அழைத்துச் சென்று 6000 கோடி கடன் கொடுக்க வைப்பது, அதிலும் ஆஸ்திரேலியாவில் தொழில் தொடங்க கடன் கொடுக்கும் போதே.... தெரியவில்லையா? மோடி அரசின் பொருளாதார செயல்பாடுகள் யாருக்கு பலனளிக்கும் என்பதை..!!!??

அதேப் போன்று இந்தியாவின் மிகப் பெரிய அரசுத் துறை நிறுவனமான ரயில்வேயை தனியார் மயமாக்குவது என்று முடிவெடுத்திருப்பது கூட யாருக்கு பலன் அளிக்கும்?

டியூவுக்கு ஆட்டோ, வேன் வாங்கி ஓட்டுறவனும், முக்குக்கு முக்கு லேத்து பட்டறை வைத்து வயிற்றுப்பிழைப்பை ஓட்டுகின்றவர்களுக்குமா, அந்த வாய்ப்பு வரப்போகிறது???  அம்பானிகளுக்கும், டாட்டா பிர்லாக்களுக்கும், இந்துஜா, பஜாஜ் போன்ற குழுமங்களுக்கும் தானே அது பயன்படப்போகிறது?!

ஒரு தொழிலில் லாபம் இல்லை என்றால் எந்த தனியார் நிறுவன முதலாளியாவது அதில் முதலீடு செய்வானா?! இதோ சில குறிப்பிட்ட வழித்தடங்கள் மட்டும் முதலில் தனியாருக்கு தாரை வார்க்கப்படுமாம்.

முதலில் அவர்கள் அதில் பணத்தைப் போட்டு, நல்ல பல வசதிகளை இப்பொழுது இருக்கின்ற கட்டணத்திலேயே பயணிகளுக்கு வழங்குவார்கள். நல்ல வேகமான சேவையையும் வழங்குவார்கள். ஆனால் அதனால் ஏற்படும் இழப்பை பணியாளர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் தருவதன் மூலம் மட்டுமே ஈடுகட்டி விடுவார்கள். இதை மக்களுக்கு காட்டி விளம்பரப்படுத்தியே, மொத்த ரயில்வேயும் ஐந்து ஆண்டுகளுக்குள் இவர்களுக்கு தாரை வார்க்கப்பட்டுவிடும். மொத்தமாக தனியார் கைகளுக்கு ரயில்வே வரும் பொழுது அவர்கள் நிர்ணயிப்பது தான் கட்டணமாக இருக்கும்! மக்களுக்கும் அப்பொழுது தான் புரியும்..!!

இந்த இடத்தில் பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்களின் சீர்கேட்டிற்கு காரணமே மிக அதிக ஊதியம் பெறும் பொறுப்பற்ற ஊழியர்கள் என்பதையும் நான் கவனத்தில் கொள்ள வேண்டும்.  அதற்கு மேல் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் ஊழல்கள்!!

இந்த இரண்டு விஷயங்களையும் ஒரு நல்ல அரசானது இரும்புக்கரம் கொண்டு சரிசெய்தாலே, அரசுத் துறை நிறுவனங்கள் தனியாரை விட குறைந்த கட்டணத்தில் மிக அதிக சேவைகளை வழங்கிட முடியும்.

ஆனால் இப்படியெல்லாம் இவர் செய்வார் என்று நம்பி வாக்களித்த மக்களின் எதிர்ப்பார்ப்புகளுக்கு மாறாக, நிர்வாகத்தை சீர் செய்யாமல் தனியாருக்கு தாரை வார்ப்பேன் என்பது யாருக்கு லாபமான பொருளாதாரக் கொள்கை என்று சொல்வதற்கு பெரிய பொருளாதாரப் புலியாகவெல்லாம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை புரோக்கர்களே....!!

அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களின் நலனில் உண்மையான அக்கரை இருந்தாலே போதும்...!!

அன்றைக்கு தமிழக பேருந்துகளை ஓரிரவில் அரசுடைமை ஆக்கினாரே தலைவர் கலைஞர்.....  அதன் காரணமாகத்தான் இன்றைக்கும் இந்திய அளவில் தமிழகத்தின் பேருந்துக் கட்டணமானது மிகக் குறைவாக இருக்கின்றது. அது மட்டுமின்றி, மிகக் குறைந்த மக்கள் வசிக்கின்ற குக்கிராமங்களுக்கும், பயணிகள் அதிகம் வராத இரவு மற்றும் அதிகாலை வேளையிலும் கூட நட்டத்தைப் பொருட்படுத்தாமல் அது சேவை என்பதாக தமிழக அரசு போக்குவரத்துத் துறை செயல்பட்டுக்கொண்டிருக்கின்றது.

மோடியின் அடியாட்கள் போன்று செயல்படும் சில நபர்கள் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுடைய கருத்துக்கு நக்கலாக பதில் சொன்னாலும், நேற்றைய புதிய தலைமுறை வாசகர் வாக்கெடுப்பில் தமிழக மக்கள் நச் என்று தளபதியின் கருத்தை ஆதரித்திருக்கின்றார்கள்.

ஆகவே இனி....

தளபதியின் வழியே...   தமிழகத்தின் வழி...!