Tuesday, July 12, 2011

ஆவுடையார் கோவில் கொடுங்கை நீங்கலாக....! (ஒரு ஆன்மீக / கலை பயண அனுபவம்)

2011 ஆம் வருடம், ஜனவரி 20 ஆம் தேதி என்னுடைய பழைய வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட பதிவு இது!!

கடந்த மாட்டுப் பொங்கல் அன்று தமிழ் கூறும் நல்லுலகினர் அனைவரும் மாட்டை விரட்டி (மாடு இல்லாதவர்கள் டீ.வி. சேனல்களை விரட்டி) பொங்கலை கொண்டாட தயாராக, நான் எனது மனைவி, மகன் சகிதம் ஒரு நண்பர் கம் ஆடிட்டர் (35 வயது மட்டுமே என்னை விட மூத்தவர்) உடன் வர காரை விரட்டிக் கொண்டிருந்தேன் - "ஸ்ரீ ஆத்மநாத சுவாமி" அருள் பாலித்துக் கொண்டிருக்கும் ஆவுடையார் கோவிலுக்கு.

மாயவரத்திலிருந்து அதிகாலை 4.45 க்கு புறப்பட்ட நாங்கள் புதுக்கோட்டையில் காலை டிபன் முடித்து, அறந்தாங்கி வழியாக "ஸ்ரீ யோகாம்பிகை சமேத ஆத்மநாத சுவாமி" ஆலயத்திற்கு வந்து சேர்ந்த பொழுது மணி சரியாக மணி 10- ஐ தொட்டிருந்தது.

சாதாரணமாக எல்லா கோவில்களிலும் ராஜ கோபுரத்தை தாண்டியதுமே கொடிமரம், நந்தி, அதைப்பிடித்து நேர் கோட்டில் முன்னேறினால் பலி பீடம் பின்பு மூலவர் என்றிருக்கும். இந்த கோவிலில் அது எல்லாமே மிஸ்ஸிங்..!

உள்ளே நுழைந்த உடனேயே எல்லா கோவில்களிலும் நாம் பார்த்துப் பார்த்து பழகிப்போன இந்த ஆன்மீக அடையாளச் சின்னங்கள், இங்கு விடுபட்டிருப்பதே... நமது "எண்ண அலைக்கற்றைகள்" அனைத்தையும் ஒன்று திரட்டி அக் கோவிலின் ஊடே வலு கூட்டப்பட்ட ஒரே கீற்றாகப் பரவி, நான்.., நாம்..., நமது... எல்லாம் மாறி 'அது - இது' என்ற ஜீவனாகி "இது" அங்கு ஏற்கனவே பல்கிப் பெறுகி முழுமையாக வியாபித்து இருக்கும் ஸ்ரீ ஆத்மநாத சுவாமி என்று அழைக்கப்படுகின்ற "அரூப ஆவியின்" அதாவது "பர{ம்}த்தின்" ஒரு அங்கம் தான், அதன் ஒரு பகுதி தான் 'இது' என்ற 'பொருள்' விளங்கப் பெற்று, மரத்துப் போயிருந்த இதற்கும் - அதற்குமான உறவுப் பாலம், உணர்ச்சியூட்டப்பட்டு, இரண்டும் ஒன்று தான் - அனேகமும் ஏகம் தான்!! என்ற விழிப்பு நிலையை இது அடைந்து... அடடா அற்புதம்!

கோவிலை விட்டு வெளியே வரும் வரை கிட்டத்தட்ட இதே நிலை தான்!

சமயக்குறவர்கள் நால்வரில் ஒருவரான ஸ்ரீ மாணிக்க வாசகர் கட்டிய கோவில் அது. இங்கு உற்சவர், நந்திகேஸ்வரர், சண்டிகேஸ்வரர் உட்பட பெறுவாரியான பாத்திரங்களை அவரே ஏற்றிருக்கிறார். அனைத்து விதமான மரியாதைகளையும் "சுவாமி" அவரே ஏற்றுக் கொள்கிறார்.

உலகின் பெறும்பான்மையான மக்களால் (மதங்களால்) ஏற்றுக் கொள்ளப்பட்ட "இறைவன் ஒருவனே" அதுவும் உருவம் இல்லாதவன் (எந்த உருவமாகவும் இருக்கக்கூடியவன்) என்ற தத்துவத்தை பரை சாற்றுகின்ற இடமாகவே இத் திருக்கோவில் அமைந்திருக்கிறது.

மூலவரை எடுத்துக்கொண்டால் கிட்டத்தட்ட அரூபத்தின் பிரதிபலிப்பாகத்தான் இருக்கின்றது. எல்லா சிவன் கோவில்களிலும் இருப்பது போன்ற வடிவிலான லிங்கம் இங்கு காணப்படவில்லை. கிட்டத்தட்ட நம் கண்ணுக்கோ அல்லது அறிவிற்கோ கணிக்க முடியாத 'வடிவம்' தான் அங்கு!. படையல் கூட தினமும் ஆறு காலமும் மூலவர் முன் உள்ள பெரிய படைக்கல்லில் சுடச்சுட வடித்த சாதத்தைக் கொட்டி அதில் பாகற்காய் குழம்பை ஊற்றி, அதிலிருந்து வரும் ஆவி கருவரை முழுக்க வியாபித்த பின் தீப ஆராதனை எடுக்கப்படுகின்றது. "அந்த ஆவிக்குத் தான் ஆராதனையே"..!

ஆவி வடிவுடையார் என்பதால் தானோ என்னவோ திருப்பெருந்துறை என்ற அந்த ஊருக்கு ஆவுடையார் கோவில் என்ற பெயர் வந்தது போலும்.

ஆராதனை முடிந்த பின் சோற்றையும், குழம்பையும் படைக்கல்லிலேயே கலந்து, அங்கு வரும் பக்தர்களுக்கும், ஏழைகளுக்கும் வழங்கப்படுகின்றது. இது தினமும் ஆறு காலமும் தவறாமல் நடைபெறுகிறது.

இறைவன் ஏகன் - அரூபன்; அண்டி வருபவர்களுக்கு உடனடியாக ஆகாரம் அளித்து பசிப்பிணி போக்குபவன். இவை அனைத்தும் அங்கே தினமும் நிகழ்த்திக் காட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அடுத்து உடையவரின் சரிநிகர் சமபாதியாக விளங்கக் கூடிய உமையவள் "ஸ்ரீ யோகாம்பிகை" என்ற பெயருடன், உடையவர் அரூபனுடன் இரண்டற கலந்து பிரித்துப் பார்க்க முடியாதவளாய் எப்பொழுதும் யோக நிலையிலேயே இருப்பதான ஒரு தோற்றம். அதுவும் நம் கண்களுக்கு புலப்படாது! நாற்பது துளைகள் கொண்ட கருங்கல் ஜன்னல் ஊடாக மட்டுமே தரிசிக்க இயலும். அதுவும் ஒரு உருவத்தை காண வழியில்லை. ஏனென்றால் இத் திருத்தலத்தில் எங்கும் வியாபித்திருக்கும் அரூபம் தானே --- இறை என்பது?!

இனிமேல் தான் நம் ஹீரோ! பொன்னியின் செல்வன் நாவலில் உண்மையான நாயகன் அருண்மொழித் தேவர் என்றால், மக்களின் நாயகன் வந்தியத்தேவன் என்பது போல், இத் திருத்தலத்தில் அனைத்தும் "ஆத்மநாத சுவாமி" என்றாலும் மக்களோடு தொடர்புடைய மற்ற லௌகீக  விஷயங்கள் எல்லாமே மாணிக்க வாசகருடையதுதான்.

திருவாதவூரர் என்ற இயற்பெயருடன் பாண்டிய நாட்டில் முதல் மந்திரியாக இருந்தவர், குதிரைகள் வாங்குவதற்காக பணத்துடன் கிழக்குக் கடற்கரை (ECR) பகுதிக்கு மன்னனால் அனுப்பப்பட, அவர் அந்த பகுதிக்கு வரும் பொழுது ஸ்ரீ ஆத்மநாத சுவாமியால் ஆட்கொள்ளப் பட்டு, ஆண்டவன் முன்னே ஆள்கிறவன் எம்மாத்திரம்?! என்று எதைப் பற்றியும் கவலைப் படாமல் குதிரை வாங்க கொண்டு வந்த பணத்தில் இத் திருக்கோவிலை கட்டி முடிக்கிறார். அது மட்டுமில்லாமல் அங்கேயே அமர்ந்து "திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்" என்று போற்றப்படும் 'திருவாசகத்தை' இயற்றி இறைப் பணியோடு தமிழ் பணியும் ஆற்றினார்.

இத் திருக்கோவிலின் அமைப்பே வேறெங்கும் கண்டிராத வகையில் (நான் பார்த்த வரை) வித்தியாசமாகத்தான் அமைந்திருக்கிறது. இங்கு வருபவர்களுக்கு பக்தி மார்க்கத்தில் உருவ வழிபாட்டின் மூலம் சித்தி கிடைக்கும் என்ற ஆயாசமான, கிட்டத்தட்ட யாருக்குமே சித்தி கிடைக்காத நிலையை தவிர்த்து, தியான மார்க்கத்தில் ஞானத்தை அடைகின்ற உத்தியை தான் காட்டுகின்றது.

இப் பிறவியில் முக்தி கிட்டக் கூடிய யோக (தியான) மார்க்கத்தில் ஒவ்வொருவரும் கடக்க வேண்டிய ஆறு நிலைகளான மூலாதாரம், சுவாதிட்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுத்தி மற்றும் ஆக்ஞை ஆகியவற்றை கடந்து ஞானத்தைப் பெறுவது போல இங்கும் ராஜ கோபுரத்தின் உள் நுழைந்தால் ஆறு நிலைகளான கனக சபை, திருமாளிகைப் பத்தி மண்டபம், சுந்தர பாண்டியன் மண்டபம், தில்லை மண்டபம், அமுது மண்டபம் மற்றும் அர்த்த மண்டபத்தை கடந்து தான் பேரானந்தத்தை கொடுக்கக் கூடிய மூலவரை தரிசிக்க இயலும்!.

இக் கோவிலின் சிற்பங்கள் உலக பிரசித்தி பெற  தகுதி உடையனவாக இருந்தும் ஏனோ இன்னும் உள்நாட்டுப் பிரசித்தம் கூட முழுமையாக அடைந்ததாக தெரியவில்லை. இங்கு கற்பகிரஹம், அர்த்த மண்டபம், அமுது மண்டபம் நீங்கலாக மற்ற நிலைகள், மண்டபங்கள் அனைத்துமே மாணிக்கவாசகரின் ஆக்ஞை படி வெவ்வேறு கால கட்டங்களில் வேறு வேறு அரசர்களாலும், மடாதிபதிகளாலும் கட்டப்பட்டதாக தெரிகிறது.

அப்படி கட்டப்பட்ட ஒவ்வொரு மண்டபத்திலும் அல்லது நிலைகளிலும், வேறு எங்குமே காணப்படாத அமைக்கப்பட முடியாத சிறப்பம்சம் பொருந்தியதாக திகழ்வது தான் "கொடுங்கை" எனப்படும் வடிவத்திலான தேர்ச்சுற்று போன்ற மண்டப அமைப்பு. முழுவதும் மரத்தினாலேயே வேயப்பட்டது போன்ற தோற்றம். மேற்கூரைக்கு உட்புறமாக வரிசையான சரங்கள், இரண்டுக்கும் நடுவே சட்டங்கள். அந்த சரங்களை கோற்பது போல் திருகு ஆணி, அதற்கு நெட், வாஷர் எல்லாமே நேர்த்தியாக செய்யப்பட்டிருக்கிறது.

இவை அனைத்துமே "கருங்கல்"!!. இது தான் இதன் சிறப்பே. பார்தவுடன் கருங்கல் என்றே நம்ப முடியாது. ஆங்கிலேயர்கள் கூட அதை துப்பாக்கியால் சுட்டுப் பார்த்து தான் 'கருங்கல்' என்று உறுதி செய்தனர். அந்த் காலத்தில் ஒரு மன்னன் கோவில் கட்ட கல் தச்சரிடம் சிற்பங்கள் செய்ய ஒப்பந்த ஓலை எழுதிக் கொடுக்கச் சொன்னால், "ஆவுடையார் கோவில் கொடுங்கை நீங்கலாக"! என்று எழுதித் தான் தாங்கள் செய்யப் போகும் சிற்பங்களை பட்டியலிட்டு எழுதித் தருவார்கள்.

இது எதைக் காட்டுகிறது? இந்தக் கோவிலின் சிற்பச் சிறப்பையா? அல்லது அதைப் பராமரிக்க இயலாத, ஏன்...? உலகம் முழுவதும் பரைச் சாற்றி அதன் பெருமையை எடுத்துக் கூற கூட வக்கற்ற நம்முடைய கையாலாகாத தனத்தை காட்டுகிறதா?

இந்த 'கொடுங்கை மட்டுமல்ல இங்குள்ள குதிரைச்சாமி சிலையின் குதிரை வீரனின் கைகளிலும், கால்களிலும் புடைத்திருக்கும் நரம்பு கூட துள்ளியமாக தெரியும் அளவிற்கு செதுக்கப்பட்டுள்ளது. உலகின் வேறு எந்த பாகத்திலும் இது போன்றதொரு நுணுக்கமான சிலையை காண்பதரிது என நினைக்கிறேன். அது மட்டுமன்றி கல்லிலேயே செதுக்கித் தொங்கும் சங்கிலி வளையங்கள், அதன் நுனியில் பாம்பு ஒன்று பின்னிக் கொண்டு தலையைக் காட்டுவது (எல்லாமே  கல்லில் தான்), 27 நட்சத்திரங்களின் உருவச் சிற்பங்கள், தத்ரூபமான ரதி - மன்மதன் சிலை -- அதில் மன்மதனின் கையில் உள்ள கரும்பில் வேர் கூட தெரியும்படியான ஒரு நுட்பம், தற்கால பட்டுப்புடவையில் உள்ள பார்டர் டிசைன்கள் செதுக்கப்பட்ட தூண்கள், 1008 லிங்கங்கள் செதுக்கப்பட்ட இரு பெரும் தூண்கள், இவை எல்லாம் வெறும் 10 சதவீதம் தான் கூறியிருக்கின்றேன்! 90 அங்கு இருக்கின்றது. எழுதி பயன் இல்லை. சென்று பார்த்தால் தான் பரவசம்!!

ஆன்மீக நாட்டமில்லாதவர்கள் கூட ஒரு தாஜ்மஹாலையும், எல்லோரா - அஜந்தாவையும் பார்ப்பது போல் இங்கு வரலாம். அதற்கெல்லாம் எள்ளளவும் குறையாத கலை விருந்து இங்கு கிடைக்கும். ஆன்மீக பயணத்தினால், பக்தியினால் பணம் வேண்டும், பலன் வேண்டும் என்று எண்ணாமல் முக்தி வேண்டும், ஞானம் வேண்டும் என்று எண்ணுகிறவர்கள் தவறாமல் வந்து செல்ல வேண்டிய திருத்தலம் இதுவாகும்.

உள்ளே நுழையும் போதே, பேரானந்த பெருவெளியில் நம்மை இழுத்துச் சென்ற இத் திருத்தலம், வெளியே வரும் போது அதன் ஈடு செய்ய இயலாத சிற்பக்கலை நுணுக்கங்களை நம் மனதிலேயே நிலை நிறுத்தி கல்லில் செதுக்கிய எழுத்துப் போல் நம் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டது.

மாயவரம் வந்து சேரும் வரை நாங்கள் யாருமே தேவைகளுக்குத் தவிர பெரிதாக பேசிக் கொண்டதாகத் தெரியவில்லை. இதை எழுதி முடித்து பதியவிருக்கும் இந்த நேரத்தில் ஏதோ ஒரு கடமையை செய்தது போன்ற திருப்தியில் மனம் இலேசாவது போல் ஒரு உணர்வு!





   

3 comments:

MurPriya said...

ஆவுடையார் கோவில் :-

அற்புதமான கோவில்.
காலத்தின் கொடுமை, மக்களுக்கு இதை எல்லாம் ரசிக்க மனமும் நேரமும் இல்லை.

R. Gopi said...

ரசித்து எழுதி இருக்கிறீர்கள்.

R. Gopi said...

ரசித்து எழுதி இருக்கிறீர்கள்.