Friday, March 21, 2014

பாஜக கூட்டணி திமுக - அதிமுகவுக்கான மாற்றா???!!!

தமிழகத்துல அரசியல் அநாதைகளாக இருந்த கட்சியெல்லாம் ஒன்னு சேர்ந்து ரெண்டு மாசமா முட்டி மோதி ஒரு முடிவுக்கு வந்து ஒன்னு சேர்ந்திருக்காங்க.... இதுக்குப் போயி ஒட்டுமொத்த மீடியாவும் தையத்தக்கான்னு குதிக்கிறாங்க....

ஒருத்தர் அதிமுகவுக்கும் இந்தக் கூட்டணிக்கும் தான் போட்டிங்கறார், இன்னொருத்தர் திமுக டெபாஸிட் வாங்காதுங்கறார். ஒருத்தர் இந்தக் கூட்டணி 40 தொதியிலும் வெல்லும்ங்கறார், ஒருத்தர் இந்தக் கூட்டணியின் சார்ப்பா நிக்கறவங்கள்ல யார் யார் மந்திரியாகப் போறாங்கன்னு லிஸ்ட்டு போடுறார், தட்ஸ் தமிழ்ல ஒரு அம்பி ஒரு படி மேலே போய் திமுகவும், அதிமுகவும் தமிழ்நாட்டுல தனிமைப்படுத்தப்பட்டுடுச்சிங்குது!!!

என்னத்த சொல்றது?

சினிமாவில் நடக்குற மாதிரி எல்லாமே ஓரிரவில் நடந்திடும்ன்ங்கற மாதிரி மக்களை இந்த ஊடகங்கள் எல்லாம் இப்போ நம்ப வைக்க முயற்சிக்குது!! ஆனால் நிதர்சனம் என்பது எப்பவுமே நிலையானதாகவும், இந்த மாதிரியான யூகங்களை புறம் தள்ளுவதாகவுமே தான் இருக்கின்றது.


ஒரு பாராளுமன்ற தொகுதிக்கு சராசரியா 1500 வாக்குச்சாவடிகள் வரைக்கும் இருக்குது. இந்த வாக்குச்சாவடில எல்லாம் இருக்கின்ற ஆண், பெண் பூத்துக்கள் உட்பட அனைத்து இயந்திரங்களுக்குமாக சேர்த்து தலா ஐந்து பூத்து ஏஜண்டுகள் போட வேண்டும். அதுவே ஒரு தொகுதிக்கு 7500 பேர். இவர்கள் மிக மிக மிக நம்பகமான அந்தந்த்தப் பகுதியின் அனைத்து வாக்காளர்களையும் நன்கு அறிந்த உணர்வுள்ள கட்சிக்காரராக இருந்தால் தான் இந்த வெலையைத தெளிவாகச் செய்ய முடியும். 

இதைத் தவிர ஒரு வாக்குச்சாவடிக்கு சராசரியாக 3000 த்திலிருந்து 4000 வாக்காளர்கள் வரை இருப்பார்கள். 300 வாக்காளர்களுக்கு ஒரு பிரதிநிதி என்று வைத்துக்கொண்டால் கூட ஒரு வாக்குச்சாவடிக்கு நேர்மையான கட்சிக்காரர்கள் குறைந்தபட்சமாக 10 பேர் தேவை. அவர்கள் தான் தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் 300 வாக்காளர்களுக்கும் கடைசி 10 நாட்களில் பூத் சிலிப் கொடுப்பதிலிருந்து, அவர்களிடம் கட்சியின் சார்பாக நேரிடையாக வீட்களுக்குச் சென்று கட்சியின் பிரசுரங்களையும், பிரச்சாரங்களையும், வாக்குறுதிகளையும் சொல்லி தங்கள் கட்சிக்கு ஆதரவாக வாக்காளர்களைத் திரட்ட வேண்டும். இந்த எண்ணிக்கையே 15000 வரும். 

ஆக மொத்தம் பிரச்சாரம், மற்ற மற்ற பணிகளையெல்லாம் தவிர்த்து இந்த மாதிரியான நிர்வாகம் சம்பந்தப்பட்ட வேலைகளுக்கே 22500 கட்சியின் உணர்வுள்ள தொண்டர்கள் ஒவ்வொரு தொகுதிக்கும் தேவை. ஒரு கட்சி வெற்றிபெறுவதற்குத் தேவையான மிக மிக அடிப்படை தகுதி இது. 

இவை தவிர்த்து ஒவ்வொரு தொகுதிக்கும் (பாராளுமன்ற தொகுதி) வருகின்ற தலைவர்கள், பேச்சாளர்கள், வேட்பாளர் போன்ற அனைவருக்கும் பிரச்சாரத்திற்கான அனைத்து ஏற்பாடுகள் செய்வது, அழைத்துச் சென்று மக்களிடம் அறிமுகப்படுத்துவது, மற்ற மற்ற பிரச்சாரப் பணிகளையும், 22500 முக்கிய சேவையாளர்களுக்கும் தலைமைக் கழகத்துக்குமான பாலமாக இருந்து செயல்படுவது உட்பட அனைத்தையும் செய்வதற்கு.....

....ஒரு பாராளுமன்ற தொகுதிக்கு சராசரியாக 12லிருந்து 15 ஒன்றிய, நகர, பேரூர் கழக அமைப்புக்களும், சராசரியாக இவற்றுக்குக் கீழே 500லிருந்து 600 வரையிலான கிளைக்கழக (வார்டுகள், பஞ்சாயத்துக்கள்) அமைப்புக்களும்... அவ்வமைப்புக்களின் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்களாக மட்டுமெ 8000 லிருந்து 10000 பேர் வரையிலும் தேர்தல் காலங்களில் முழுநேர களப்பணியாளர்களாக இருந்து செயலாற்றிட வேண்டும். இதைத்தவிர்த்த மாவட்ட கழக நிர்வாகிகள் செயல்வீரார்களை இந்தக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. 

ஆக மொத்தம் வெற்றிபெறத் தகுதியான ஒரு கட்சிக்கு ஒரு பாரளுமன்ற தொகுதிக்கு மட்டும் தேர்தல் காலங்களில் கிட்டத்தட்ட ஒன்னரை மாதத்திற்கு முழு நேரமாக களம் இறங்கி உணர்வுடன் பணியாற்றக் கூடிய தொண்டர்களின் மிகக் குறைந்த பட்சத் தேவை 22500+9500 = 32000 பேர் ஆகும். 

இந்த 32000 தன்னார்வத் தொண்டர்கள் என்பது ஏதோ ஓரிரு தொகுதிகளிலோ அல்லது பத்துப்பதினைந்து தொகுதிகளிலோ இருந்தால் மட்டும் போதாது. ஆட்சியமைக்கத் தகுதியான கட்சி ஒன்றுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் இருக்கின்ற 40 தொகுதிகளிலுமே இந்த எண்ணிக்கை முழுமையாக இருந்திடல் வேண்டும். 

இந்தத் தகுதியில்லாத ஒரு கட்சி.... தான் ஆட்சியமைக்கப்போகிறோம் என்று அரைகூவல் விடுவதை விட அபத்தமான பேச்சு வேறு எதுவுமே இருக்க முடியாது. இந்த விவரங்கள் எல்லாம் புரியாத ஏசி ரூம் எழுத்தாளர்கள் எழுதுகின்ற கட்டுரைகளும், கட்டமைக்கின்ற விவாதங்களும் வெறும் ஏட்டுச் சுரைக்காயாகத்தான் முடியும். 

ஆகவே தமிழகத்தைப் பொறுத்தமட்டில் இந்தத் தகுதியை முழுமையாகப் பெற்றிருக்கின்ற கட்சிகள் என்று பார்த்தால், திமுகவும், அதிமுகவும் மட்டுமே. 

இவற்றிற்கு அடுத்தபடியாக இதில் கால்வாசி தகுதியை எட்டிப்பிடித்திருக்கின்ற ஒரே கட்சி என்றால் அது தேமுதிக மட்டுமே. ஆனால் அப்படி கால்வாசி தகுதியைப் பெற்றுவிட்ட ஒரு கட்சி தொடர்ந்து கூட்டணி அமைத்து களம் காணுமேயானால் அது கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து காணாமல் போகின்ற வரலாறு என்பது காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், மதிமுக போன்ற கட்சிகளை தொடர்ந்து கவனித்துக்கொண்டிருப்பவர்களுக்குப் புரியும்.


உடனே சிலர் ஓடிவந்து எம் ஜி ஆரையும், என் டி ஆரையும் துணைக்கழைப்பார்கள். ஆனால் அவர்கள் இருவருமே அரசியலில் அடியெடுத்து வைப்பதற்கு 30 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே தங்கள் ரசிகர்மன்றங்களை இது மாதிரியாக மிகப் பலமாக உருவாக்கி வைத்திருந்ததையும், அது அப்படியே அரசியல் கட்சியாக உருப்பெற்றதையும் இலகுவாக மறந்து போகின்றனர்.  ஆனால் அவர்களுக்கு முதல் வாய்ப்பிலேயே கிட்டிய ஆட்சியதிகாரம் என்ற அதிர்ஷ்டம் விஜயகாந்துக்கு கிடைக்காமல் போனது அவரது துரதிருஷ்டம் என்று சொல்வதை விட....  வியஜயாகாந்து முத்துவதற்கு முன்பாக கடைத்தெருவுக்கு வந்ததும், தான் என்ற ஆணவம் நிறைந்த பேச்சும், பொதுவெளியில் அவரது செயல்பாட்டில் தனிமனித ஒழுக்கம் பற்றிய மக்களின் விமர்சனமும், வெறும் குடும்பத்தை மட்டுமே தன் அருகில் வைத்துக்கொண்டு அறிவுஜீவிகள் யாரையும் அண்டவிடாமல் இருப்பதும்....  இப்படியாக ஏகப்பட்ட தவறுகள் அவரை முன்னேறவிடாமல் தடுத்துவிட்டது. 

இந்த 32000 பேர் என்ற எண்ணிக்கையானது சராசரியாக ஒரு தொகுதியில் வாக்களிக்கப்போகும் 800000 வாக்காளர்களில் 4 சதவிகிதம் ஆகும். 

ஆகவே பாஜக கூட்டணியில் ஒட்டுமொத்த வாக்கு வங்கியே 4 சதவிகிதத்தைத் தொடாத சிறு சிறு கட்சிகள் (தேமுதிக மட்டும் 7 சதவிகிதம் எடுத்துக்கொள்ளலாம்) நான்கைச் சேர்த்து களமிறங்கி அது வெற்றி பெரும் என்று எழுதுவதையும் பேசுவதையும் விட முட்டாள்தனமும், பத்தாம்பசலித்தனமும் வேறு எதுவுமே இருக்க முடியாது. 

ஆகவே வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டி என்பது திமுகவுக்கும் அதிமுகவுக்கும் மட்டுமே. மேலும் இவ்விரு கட்சிகளும் பெரிய கூட்டணி எதுவும் இல்லாமல் கிட்டத்தட்ட தனியாக நிற்பதே தங்களது மாநிலம் முழுமைக்குமான உட்கட்டமைப்பை இன்னும் பலமாக கூர் தீட்டிக்கொள்வதற்காக மட்டுமே என்பதையும் அரசியல் ஆர்வலர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


2 comments:

Vaasagan said...

இந்த தேர்தலில் திமுக காங்கிரஸ் மண்ணை கவ்வினலே போதும்

ஜோதிஜி திருப்பூர் said...

நிச்சயம் இதுவொரு முக்கியமான பதிவு. இது போன்ற நுணுக்கமான விசயங்களை நான் கற்பனை செய்து பார்த்தது கூட இல்லை. என் வட்டத்தில் பகிர்ந்து கொள்கின்றேன். நன்றி சௌமியன்.