Sunday, June 29, 2014

தளபதி- 2016 பாகம்-1

ஒரு தலைவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு 22.06.2014  தமிழகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு ஒரு சிறந்த சான்று...

கடந்த மூன்று ஆண்டுகளாக சட்டமன்ற தேர்தல், உள்ளட்சி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் என்று தொடர் தோல்வி. அதிலும் கடைசியாக வந்தது கட்சியின் வாக்குவங்கியையே கேள்விக்குள்ளாக்கும் அளவிற்கான பெரும் தோல்வி....

அதைத் தொடர்ந்து கட்சியில் களையெடுப்பு வேலைகள் உட்பட கட்சியை மறு சீரமைப்பு செய்து மீண்டும் புதுப் பொலிவுடனும் உற்சாகத்துடனும் அதன் தொண்டர்களை உசுப்பி விட்டு பொதுமக்களிடம் நன் மதிப்பைப் பெற வேண்டிய அந்த கடும் பணியில் இரவு பகல் பாராது உழன்று கொண்டிருக்கின்ற வேளையில்....

தான தலைமைப் பொறுப்பேற்றிருக்கின்ற கழகத்தின் இளைஞரணி சார்பாக தொடர்ந்து நடைபெற்று வரும், 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்களில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்றிருக்கும் மாணவ மாணவிகளுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சியில் உற்சாகத்துடன் சென்று கலந்து கொண்டு 469 மாணவச் செல்வங்களுக்கு ரூபாய 56 லட்சத்திற்கும் அதிகமான தொகையினை பங்கிட்டு பரிசளித்துள்ளார் அந்த மாமனிதர்...

ஊடகங்களால் பெரிய அளவில் முன்னெடுக்கப்பட்ட, பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கடந்த தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு இப்பொழுது எங்கே இருக்கின்றார்கள் என்றே தெரியாத நிலையில் தான் இருக்கின்றார்கள். அமோக வெற்றி பெற்ற ஆளுங்கட்சியினரோ, தேர்தல் நேரத்தில் வீடு வீடாகச் சென்று வாக்குக் கேட்ட பிறகு இனி அடுத்த தேர்தலுக்கு வந்தால் போதும் என்ற நிலையிலேயே இருந்து கொண்டிருக்கின்றார்கள்....

ஆனால் இந்த நம்முடைய தலைவனோ, தான் சார்ந்த இயக்கமானது வெறும் தேர்தல் அரசியலுக்கானது மட்டுமல்ல என்பதை தெளிவாக உணர்ந்த காரணத்தினால் தான், மக்கள் சேவையை அரசு சார்பாக நிறைவேற்றித் தரும் பொறுட்டே எங்களுக்கு தேர்தல் அரசியல் என்பது தேவை, அதில் தோல்வியுற்றாலும், எங்கள் கரங்களைக் கொண்டு இயன்ற அளவிற்கு செய்கின்ற மக்கள் சேவையை எந்தத் தொய்வும் இல்லாமல் தொடர்ந்து செய்வோம் என்று கூறி.....

 கோவையில் மையம் கொள்கிறார்.... மாநிலம் முழுவதும் முதல் மூன்று இடங்களைப் பெற்றிருக்கின்ற மாணவச் செல்வங்களின் பட்டியல் படி, அந்த 469 பேரையும் அந்தந்த மாவட்ட இளைஞரணி தோழர்கள் அவரவர் பெற்றோருடன் தங்கள் செலவில், பாதுகாப்பில் அழைத்து வந்து விழாவில் பங்கெடுக்க வைத்து அவர்களுக்கு தாம் பெற்ற உயர்வுக்கான தரச் சான்றிதழையும் ஊக்கத்தொகையினையும் அந்தத் தலைவரின் கரங்களால் வழங்கி மீண்டும் அவர்களை அவரவர் இல்லங்களில் பத்திரமாக கொண்டு சேர்க்கும் வரை பொறுப்பேற்றுக் கொண்டு செயல்படுத்தியிருக்கின்றார்கள்...

இந்த நிகழ்வானது தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இது மட்டுமன்றி அண்ணா பிறந்தநாள் விழாவின் போதும் தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் மாணவ மாணவிகள் பங்கேற்கும் வகையில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளை நடத்தி அதில் மாநில மற்றும் மாவட்ட அளவில் வெற்றி பெறுகின்ற முதல் மூன்று பேர் என்கிற வகையில் ஆயிரக்கணக்கானோருக்கும் இதேப் போன்று பரிசுகள் வழங்கி இந்த இயக்கத்தின் சார்பாக இந்த மாமனிதர் தொடர்ந்து செய்துகொண்டிருக்கின்றார்.

இந்த மனிதர் திராவிட இயக்கக் கருத்துக்களில் பற்று கொண்டிருக்கின்றாரா? அதற்காக ஏதாவது செய்கின்றாரா? என்று கேட்பவர்களுக்கு..... வருடம் தோரும் ஒரு லட்சம் மாணவச் செல்வங்கள் பெரியார், அண்ணா, திராவிட இயக்கக் கொள்கைகள், சமூக நீதி போன்றவை சார்ந்த தலைப்புகளை மட்டுமே கொடுக்கப்படும் அந்த கட்டுரை, பேச்சுப்போட்டிகளின் மூலம் அவற்றை தேடிப் பிடித்து படிக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தித் தருகின்றார். அமைதியாக அதேசமயம் இவ்வியக்கத்தின் கொள்கைகளை ஆணி வேரிலிருந்து பலப்படுத்தும் வேலையை தொடர்ந்து இந்த மாமனிதர் செய்து வருவதற்கு இதைவிட வேறு சான்று என்ன இருக்க முடியும்?

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ஒரு மக்கள் நலப் பணியானது, அதிலும் குறிப்பாக மாணவச் செல்வங்கள் சம்பந்தப்பட்ட பணியானது, ஒரு கட்சியின் அல்லது அதைச் சார்ந்த தலைவரின் தனிப்பட்ட வெற்றி தோல்வியின் காரணமாகவோ, வேலைப் பளுவின் காரணமாகவோ எந்தத் தடையும் ஏற்பட்டுவிடாமல் தொடர்ந்து அதே உற்சாகத்துடன் நடைபெறுவதற்கு உறுதியளிக்கும் ஒரு மாமனிதரையே நாம் தலைவராக ஏற்றுக்கொண்டிருக்கின்றோம்...

அந்த வகையில் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களை என் தலைவர் என்று சொல்லிக்கொள்வதில் நிச்சயம் நான் பெருமைப்படுகின்றேன்.

No comments: