Tuesday, September 1, 2015

திருக்குறள் - தேசிய நூல்...!! ஒரு உண்ணாவிரதப் போர்.நேற்று சென்னையில் நடந்தது ஒரு அற்புதமான நிகழ்வு. நமக்கு பிடித்த ஒரு இடத்திற்கு சென்று வந்தாலோ அல்லது உணர்வு ரீதியாக நாம் முழுமையாக ஏற்றுக்கொள்ளும் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டு திரும்பினாலோ... நாம் பிறந்ததற்கான அர்த்தங்களில் அல்லது காரணங்களில் ஒன்றினை கடந்து விட்டோம் என்ற எண்ணம் மனம் முழுவதும் பரவி.... உள்ளம் அது தேக்கி வைத்திருக்கும் துன்பக் குப்பைகளை எல்லாம் வெளித்தள்ளி... இலேசானது போன்ற உணர்வு வருமே.... அப்படித்தான் இருந்தது..!

தமிழர்கள் அனைவருக்கும் தங்கள் பழமையையும், பாரம்பரியத்தையும் நினைத்து பெரும் பெருமை உண்டு. கப்பல் கட்டுனது, கடல் கடந்து வாணிபம் செய்தது, வாணிபத்துக்கு உதவியாக பாதுகாப்புக்கு படைகளையும் கொண்டு சென்றது.., படைகளை வைத்து கடல் கடந்த தேசங்களை வென்றது..... அங்கெல்லாம் ஆட்சி அமைத்தது... இந்த வீர தீர, வியாபார பராக்கிரமங்களை எல்லாம் ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் இலக்கியம், வாழ்வியல் இலக்கணம், காப்பியங்கள், காவியங்கள் என்றும் மற்றொரு பக்கம் இசை, ஓவியம், சிற்பம், கட்டிடம் என்று கலைத்துறையிலும்....

இப்படியாக நாம் இன்றைக்கும் பேசிக்கொண்டிருக்கும் பெருமைக்குறிய விஷயங்கள் அனைத்தும் பத்திருபது தலைமுறைகளுக்கு முந்தியது அல்ல... மாறாக ஐநூறு, ஆயிரம், ஐயாயிரம் தலைமுறைக்கு முன் வாழ்ந்த நம்முடைய பூட்டன்கள் செய்தவற்றைத்தான்...!!

இன்றைக்கு நம்மவர்களில் சிலர் செய்து கொண்டிருப்பது எல்லாம், அந்த சாதனைகளை செய்த நம் முன்னோர்கள் எந்தெந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்கிற ஆராய்ச்சியைத் தான்...!!

ஆனால் இன்றைய தமிழர்களின் நிதர்சணமான நிலை என்றால், அது நிச்சயம், நம் மொழி, பண்பாடு, கலாச்சாரம், எண்ணம்... இது மாதிரி எந்த எழவுமே புரியாத, தெரியாத புண்ணக்குங்க புது டெல்லியில் உட்கார்ந்து கொண்டு.., அவர்கள் கொண்டுவரும் திட்டத்தை எதிர்பார்த்து, கொடுக்கின்ற பிச்சையினைப் பெற்று, போடுகின்ற சட்டத்திற்கு அடிபணிந்து நடக்கின்ற ஒரு சுதந்திரமற்ற... அதாவது அடிமைத்தன வாழ்வு தான் நமது!

இப்படியான ஒரு நிலையில், நம் முன்னோர்களைப் போன்று பெரும் பெரும் சாதனைகளை எல்லாம் நாம் செய்வது இருக்கட்டும்..., நமக்கான திட்டங்களை நாமே போட்டு, சட்டங்களை நாமே இயற்றி, நம் செல்வத்தைக் கொண்டே செழிப்பாக வாழ்வதற்கு ஒரு வழி செய்வதெல்லாம் கூட இருக்கட்டும்...

இதற்கெல்லாம் ஒரு முதல் படி போன்று... ஆரம்பப் புள்ளி போன்று நம் முன்னோர்களின் அந்தச் சாதனைகள் ஒவ்வொன்றாக உலகறியச் செய்து, அதற்கான அங்கீகாரங்களைப் பெறும் ஒரு முயற்சியையாவது நாம் துவக்கலாம் தானே? அதைச் செயல்படுத்தலாம் தானே?!

தொன்மையான நம் தாய் மொழியை, முழுமையான நம் தமிழ்மொழியை செம்மொழியாக இந்திய அரசு அங்கீகரிக்கும் பெரும் பணியிணை கலைஞர் செய்து விட்டிருக்கின்றார். அதுபோதுமா? அத்தோடு நிறுத்திக்கொள்வதா?

வேறு என்ன செய்ய வேண்டும்? அதேப் போன்று ஒவ்வொன்றாக நம் மொழி, வரலாறு சார்ந்த ஒவ்வொன்றுக்குமான இந்திய அளவிலான, உலக அளவிலான அங்கீரங்களை காப்புரிமையை நாம் நிலைநாட்டி, அதை உலகம் முழுவதும் கொண்டு சென்று, ஆங்கே தமிழன் என்ற இனமுண்டு, அவனுக்கென்று தனி குணமுண்டு, வரலாறு உண்டு, வீரம் உண்டு, விவேகம் உண்டு, கலாச்சாரம் உண்டு... இப்படியாக உலகம் முழுவதும் நம்மை மதிப்பும் மரியாதையுடன் உற்று நோக்கும் நிலையை உருவாக்க வேண்டாமா?

இந்தக் கேள்வியில் உதித்த ஒரு புள்ளி தான் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கக்கோறும் ஒரு நாள் உண்ணாவிரதப் போர்..! நேற்று முன் தினம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற அந்த உண்ணாவிரதப் போருக்கு சென்று வந்த போது ஏற்பட்ட ஒரு உணர்வைத்தான் இந்தப் பதிவின் முதல் பத்தியில் நீங்கள் படித்தது..!!

இதை அவர் செய்வார், இவர் செய்வார் என்றெல்லாம் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிராமல், தனி ஒரு நபராக களம் இறங்கி, ஒத்த கருத்துடைய உணர்வாளர்கள் பலரையும் நேற்று அந்த உண்ணாவிரதப் போரில் பங்கெடுக்க வைத்ததில் திருவெண்காடு வள்ளளார் தமிழ்மன்றத் தலைவர் மருத்துவர் ஜெய. ராஜமூர்த்தி அண்ணன் அவர்களுடைய உழைப்பும், நம்பிக்கையும் அளப்பறியது. கிட்டத்தட்ட ஓராண்டாக இந்த உணர்வினை மெல்ல வளர்த்து, ஆறு மாதங்களாக இதற்கான திட்டமிடலை துவங்கி, கடந்த மூன்று மாதங்களாக அதை நடைமுறைப்படுத்த தொடர் சுற்றுப்பயணம், பிரச்சாரம் எல்லாம் மேற்கொண்டு, பெரும்பான்மையான தமிழறிஞர்களை நேரடியாகச் சென்று சந்தித்து, அழைப்பு விடுத்து, கடந்த 15 நாட்களுக்கு மேலாக சென்னையில் முகாமிட்டு, முறையான அனுமதி பெறுவது, போராட்டக் களத்திற்கான முன்னேற்பாடுகளைக் கவனிப்பது என்று பம்பரமாய்ச் சுற்றி....

இடையில், நம் இணையதள நண்பர்கள் பலரும் ஆங்காங்கே தமிழகத்தின் பற்பல பகுதிகளிலும், இந்நிகழ்விற்கான விளம்பர பதாகைகளை வைக்க, இணையத்தில் பதிவுகள் பறிமாறப்பட, சென்னையில் விளம்பரத் தட்டிகள், போஸ்டர்கள் என்று பரபரபைக் கூட்ட, வெளியூரிலிருந்து வரும் தமிழ் உணர்வாளர்களுக்கு இரவு தங்கும் விடுதி ஏற்பாடு செய்து, காலை 7 மணிக்கு எல்லாம் உணவு வழங்கியும் இணையதள தோழர் பட்டாளம் ஒன்று கடமையாற்ற...

நேற்று முன் தினம்... அதாவது ஆகஸ்ட் 30 ஆம் தேதி மிகச் சரியாக காலை பத்து மணிக்கு எல்லாம் உண்ணாவிரதப் பந்தலில் ... வள்ளுவர் கோட்டத்தின் வாயிலில் அந்த வள்ளுவன் எழுதிய திருக்குறளுக்காக ஒரு உண்ணாவிரதப் போர் முறைப்படி துவங்கியது.

காலை பத்து மணிக்கே 500க்கும் மேற்பட்டோர் பந்தலில் குழுமிவிட்டனர். வரிசையாக பல்வேறு தமிழறிஞர்களும், தமிழ் உணர்வாளர்களும், திருக்குறள் ஆர்வலர்களும், பல்வேறு கட்சித் தலைவர்களும், பல்வேறு தமிழ் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் வந்திருந்து, தத்தமது கருத்துக்களையும், அரசுக்கான கோரிக்கைகளையும், வாழ்த்துரைகளையும், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கக் கோரும் இந்த போராட்டத்தின் நியாயங்களையும், இதை எப்படி சாத்தியமாக்கிட முடியும் என்ற வழி முறைகளையும், அதற்காக தாங்களும் கைகொடுக்க தயாராக இருப்பதையும்... என்று... இப்படியாக மாலை 5 மணி வரை தொய்வில்லாமல் தொடர் சொற்பொழிவுகள் நடந்தவண்ணமே இருந்தன.

இதில் விசேஷம் என்னவென்றால் அத்தனை பேச்சாளர்களும், வெறுமனே தாங்கள் பேச வேண்டிய கருத்தினை அப்படியே கொட்டிவிடாமல், திருக்குறள் பற்றியும், அதன் சுவை, பெறுமை இத்தியாதிகள் பற்றியும், அதன் வரலாறு, காலம் போன்றவை பற்றிய பல்வேறு ஆதாரங்களுடன் கூட ஆய்வறிக்கைகளையும் கையில் வைத்துக்கொண்டு, ஒரு அற்புதமான திருக்குறள் மாநாட்டு ஆய்வரங்க கருத்தரங்கம் போன்ற பிரம்மையை என்னைப் போன்ற பார்வையாளர்களுக்கு ஏற்படுத்திவிட்டனர்.

ஏதோ நான் திருக்குறள் பற்றி பல்வேறு தரவுகளைப் படித்து ஓரளவு அது பற்றிய ஞானத்துடன் இருப்பவன் என்ற எண்ணத்துடன், என்னைப் போன்று அங்கு சென்ற அனைவருக்கும், எனக்குத் தெரிந்தது எல்லாம் கடுகளவு கூட இல்லை என்ற உணர்வினை, அந்த கருத்தரங்கப் பேச்சாளர்களின் ஆய்வறிக்கைகள் ஏற்படுத்திவிட்டன.

செவிக்கு உணவில்லாத போது சிறிதளவு வயிற்றுக்கும் ஈயப்படும் என்று சொன்ன பாரதியின் வரிகளின் உண்மையான விளக்கவுரை, பொழிப்புரை எல்லாம் நேற்று முன் தினம் தான் எனக்கு முழுமையாக அர்த்தமாயிற்று!! நல்ல தமிழ், செந்தமிழ், செமொழித்தமிழ், தூய்மையான தமிழ், நம் செவிகளில் பாயும் பொழுது, நம் உடலின் வயிறு என்ற பாகம் சமாதி நிலைக்குச் சென்றுவிடுகின்றது என்ற பேருண்மையை நேற்று தான் நான் கண்டேன்.


அரங்கினில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து ஒரிரு மணி நேரங்கள் இருந்து கலந்து கொண்டு, இப்போராட்டத்திற்கான தமது ஆதரவினையும், அற்பணிப்பையும் உணர்த்திவிட்டுச் சென்று கொண்டிருந்தாலும், சுமார் 400லிருந்து 500 நபர்கள் வரை காலை முதல் மாலை 6 மணி வரை முழுமையாக வீற்றிருந்து இப் போராட்டத்தினை முழு வெற்றியடைய வைத்தனர்.

ஒவ்வொரு பேச்சாளர்களுக்கு இடையிலும் அண்ணன் ஜெய. ராஜமூர்த்தி அவர்களின் இடி முழக்கத் தமிழும், கொஞ்சு தமிழும், அருவித் தமிழும், செந்தமிழும், பெரியாரியத் தமிழும், தன்மானத் தமிழும்... இப்படியாக மாறி மாறி, கேட்போர் அனைவரையும், சோர்வின்றி, கடைசிவரை உற்சாகத்துடனேயே வைத்திருந்தது.

இடையிடையே தமிழகத்தின் அத்தனை பிரபல அச்சு மற்றும் காட்சி ஊடகங்களும் வந்து அரங்க நிகழ்வுகளை பதிவு செய்வதும், பேட்டி எடுப்பதும் என்று சென்று கொண்டிருக்க...

மிகச் சரியாக 5 மணிக்கெல்லாம் ஒலி பெருக்கியை தன் வயப்படுத்திய ஊரன் அடிகளார், அரை மணி நேரத்திற்கு திருக்குறள் மற்றும் திருவள்ளுவர் பற்றிய முத்தாய்ப்பான நிறைவு உரையாற்றி... இந்த போராட்டத்தின் தீர்மானங்களை ஒவ்வொன்றாக படித்து, (அதை தனி பதிவில் அளிக்கின்றேன்) அதை மீண்டும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வாசிக்கச் செய்து... ஒவ்வொரு தீர்மானத்திற்கான சிறிய விளக்கக் குறிப்பையும் பற்றிப் பேசி.... இத் தீர்மானம் யார் யாருக்கு, எந்தெந்த துறைகளுக்கு அனுப்பப்படும் என்பதையும் அறிவித்து, அடுத்த உண்ணாநிலை போராட்டம் விரைவில் அண்ணன் ஜெய. ராஜமூர்த்தி தலைமையில் டெல்லியில் நடைபெறும் என்ற அறிவிப்பை பலத்த கரகோஷங்களுக்கு இடையில் பரைசாற்றி... அனைவருக்கும் பழரசம் கொடுத்து உண்ணாவிரதப் போரை இனிதே நிறைவு செய்து தந்தார்...!!

இந்தப் பதிவை எழுதுவதே எனது கடமை என்று எண்ணித்தான் இங்கே இதை பதிவு செய்கின்றேன். ஒரு மிகப் பெரிய முயற்சியில் நாமும் ஒரு சிறிய அங்கமாக இருப்பதே... அப்படி ஒவ்வொருவரும் நினைத்து இருப்பதே... இப்பெருவெற்றியின்.. அடையப் போகும் வெற்றிக்கான காரணமாக அமையும் என்பதையும், ஒரு பெரிய சாதனைக்கான போராட்டத்தின் நானும் பங்கேற்றேன் என்ற உணர்வே எனக்கும் என் சந்ததிகளுக்கும் பெருமை சேர்க்கும் என்ற எண்ணத்தோடும்... ஒவ்வொருவரும் கலந்துகொள்ளும் போது, நம் தமிழர்களால் சாதிக்க முடியாதது என்று எதுவுமே இல்லை என்பது புரியவரும்.

நம் பழம் பெரும் சாதனைகளை வெறுமனே பேசிக்கொண்டிராமல், அதை உலகிற்கு அறிமுகம் செய்வோம், அதற்கான அங்கீகாரத்தைப் பெறுவோம்..! இதுவே இன்றைக்கு நாம் செய்ய வேண்டிய சாதனை என்பதை உணர்வோம்...!!


பின்குறிப்பு: இந்தப் பதிவில் வந்தவர்கள், பேசியவர்கள், உதவி செய்தவர்கள் என்று யாருடைய பெயரையும் தனித்தனியாக நான் குறிப்பிடவில்லை.... காரணம், என் பார்வை முழுவதும் குதிரைக்கு முகப்புப் பட்டம் கட்டியது போன்று... செல்ல வேண்டிய சாலை மட்டுமே கண்ணில் பட்டது... இரு பக்கங்களும் இருக்கின்ற, செல்கின்ற பள்ளிவாசல்களும், தேவாலயங்களும், கோவில்களும், மடாலயங்களும், மனிதர்களும், விலங்குகளும்... இப்படி எதுவுமே என் கண்களுக்குத் தெரியவில்லை... தெரியவும் விடக் கூடாது... அப்படித் தெரிந்தால் வேகம் குறையும், நோக்கம் சிதறுண்டு போகும்...!! என்று நான் வரித்துக்கொண்டதையே இப்பதிவைப் படிப்பவர்களுக்கும் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, நோக்கத்தை மட்டுமே குறியாக்கி மற்ற காரணிகளை சைலண்ட் மோடில் போட்டுவிட்டேன்.

நன்றி..

சௌம்யன்.

2 comments:

Sampath Kalyan said...

நல்ல துவக்கம். வெற்றி பெற்றே தீர வேண்டும். நீங்கள் குறிப்பிட்டது போல் நோக்கம் மட்டுமே குறிக்கோளளாய் இருத்தல் அவசியம். வாழ்த்துக்கள்.

Mutharasi Ravi said...

Fantastic coverage....would you please give me your contact number..
Ravi
9445990152