Tuesday, July 16, 2019

கலைஞரின் கல்லக்குடி போராட்டம் அவசியம் நடந்திருக்க வேண்டிய ஒன்றா..?!

ஜூலை 15..!
விடிவெள்ளி முளைத்தது..!
சேவல்.."கொக்கரக்கோ" எனக் கூவிற்று..!

ஆம்... தலைவர் கலைஞர் 1953ஆம் ஆண்டின் இன்றைய தினமான ஜூலை 15ஆம் நாளை இப்படித்தான் வர்ணிக்கின்றார்..!
இன்றிலிருந்து மிகச் சரியாக 66 ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்ற கல்லக்குடி பெயர் மாற்றப் போராட்டத்திற்காக தலைமையேற்று லட்சக் கணக்கான தொண்டர்களுடன் தலைவர் கலைஞர் களம் காணுகின்ற அந்த நாளின் துவக்கத்தைத் தான் கலைஞர் இப்படி விவரிக்கின்றார்..!
இங்கே சில சங்கிகள் வழக்கம் போல ஒரு ஊருக்கு பெயரை மாற்றுவதற்காகவெல்லாம் பெரிய போராட்டம் செய்வதா? அதற்காக ஆறு பேர் போலீஸாரிடம் குண்டடி பட்டு உயிர் தியாகம் செய்கின்ற அளவிற்கு என்ன அவசியம் வந்தது? திமுகவினர் இப்படி உணர்ச்சிகளை தூண்டி விட்டே மக்களை ஈர்த்து ஆட்சியைப் பிடித்தனர்...
என்றெல்லாம் ஊளையிட்டுக் கொண்டிருக்கின்றனர்..!
ஆனால் அது ஏதோ சில நூறு ஆண்டுகளாக... அல்லது சில ஆயிரம் ஆண்டுகளாக வழக்கத்தில் இருந்த ஒரு ஊரின் பெயரை நம் தாய் மொழியில் மாற்றுவதற்காக நடைபெற்ற சாதாரண ஊர்ப்பெயர் மாற்றம் செய்யும் போராட்டம் அல்ல...
அப்படி ஒரு சாதாரணமான ஒரு போராட்டமாக அது இருந்திருந்தால், லட்சக் கணக்கானோர் அதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து திரண்டிருக்க மாட்டார்கள்... அவ்வளவு அதிகமான ஆயுதம் தாங்கிய போலீஸாரும் குவிக்கப்பட்டிருக்க மாட்டார்கள்... அந்த போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்க துப்பாக்கிச் சூட்டிற்கும் ராஜாஜி தலைமையிலான... அதாவது அன்றைய ஆர் எஸ் எஸ் மூளையாக செயல்பட்ட ராஜகோபாலாச்சாரியின் தலைமையிலான அரசும் உத்தரவிட்டிருக்காது..!
அந்த ஊரின் இயற் பெயரே கல்லக்குடி பழங்காநத்தம் என்பது தான்..! அங்கே வடநாட்டவரின் சிமெண்ட் தொழிற்சாலை, வடநாட்டவரான அதன் தலைவர் பெயர் தாங்கி டால்மியா என்ற பெயரில் இயங்கி வந்தது. அதாவது இன்றைக்கு வடநாட்டு வேதாந்தா நிறுவனம் தூத்துக்குடியில் மத்திய அரசின் முழு ஆதரவோடு செயல்படுவது போல...!
அப்படி அந்த தொழிற்சாலை சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச் செல்ல அங்கே முக்கியமான ரயில் நிலையம்... அந்த வடநாட்டவர்களுக்கு... கல்லக்குடி, பழங்காநத்தம் போன்ற அந்த ஊர்களின் தமிழ் பெயர் பிடிக்கவில்லை... அதாவது இப்போ எல்லா மத்திய அரசு திட்டங்களுக்கும் நம் வாயிலேயே நுழையாத இந்திப் பெயர்களை வைக்கின்றார்களே... தமிழகத்திற்குள் ஓடுகின்ற ரயிலுக்கு தேஜஸ் என்று பெயர் வைக்கின்றார்களே... இப்படியாக எல்லா நிலைகளிலும், எல்லா தளங்களிலும் இந்தியை நுழைக்கின்றார்களே...
அப்படி அந்த ஊரின் பெயரையே டால்மியாபுரம் என்று மாற்றி அந்த ரயில் நிலையத்திற்கும் அதே பெயரை சூட்டி விட்டார்கள்...!
இன்னும் கொஞ்சம் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், நேற்று வரை உன் பெயர் குப்புசாமி தான் ஆனால் அது எனக்கு பிடிக்கவில்லை, வாயில் நுழையவும் இல்லை... ஆகவே இன்றிலிருந்து உன் பெயரை குப்தா என்று மாற்றுகிறேன் என்றால் ஏற்றுக்கொள்ள முடியுமா?!
அதை அப்படியே சும்மா விட முடியுமா?! அப்படி விட்டிருந்தால் இன்றைக்கு நாம் நம் தமிழ்நாட்டிலேயே வடமாநில இந்திக்காரர்களுக்கு அடிமைகளாக சேவகம் செய்து கொண்டிருந்திருப்போம்...!
ஆனால் அன்றைக்கு அந்த இந்திப் படையெடுப்பும், இந்திக்காரர்கள் ஊடுறுவலும் தடுக்கப்பட்டதால் தான் இன்றைக்கு நம் தமிழர்கள் படித்து பல நாடுகளுக்கும் சென்று உயர் வேலைகளில் பணிபுரியும் வாய்ப்பும், நம் தமிழகத்தில் வடமாநிலத்தவர் கூலி வேலை செய்யும் நிலையும் ஏற்பட்டு மானத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்..!
அந்த ஒரே நாளில் தமிழகம் முழுக்க மூன்று போராட்டங்களை அறிஞர் அண்ணா அறிவிக்கின்றார்.
முதல் போராட்டம்... அன்றைய மோடியான ராஜாஜி கொண்டு வந்த புதிய கல்வித் திட்டத்திற்கு எதிரானது..!
என்ன ஆச்சரியமாக இருக்கின்றதா?! அவாள் எல்லாம் அதே புதிய கல்விக் கொள்கையைத் தான் இப்பொழுது இன்றைய ராஜாஜியான மோடி அவர்கள் 66 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கொண்டு வந்திருக்கின்றார். இந்த புதிய கல்விக் கொள்கையின் அபாயத்தை எடுத்துக் கூறவே இன்றைக்கு தலைவர் தளபதியார் அவர்கள் ஒன்பது பேர் கொண்ட அறிஞர் குழுவினை அமைத்துள்ளார்கள்..!
அன்றைக்கு கொண்டு வரப்பட்ட அந்த புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக ஒரு போராட்டம்... அந்த போராட்டத்திற்கு தலைமை ஈவிகே சம்பத்.
அடுத்ததாக கல்லக்குடிக்கு டால்மியாபுரம் என்று மாற்றப்பட்ட பெயரை நீக்குவதற்கான இரண்டாவது போராட்டம்... அதற்கு தலைமை தலைவர் கலைஞர்..!
மூன்றாவதாக இந்தித் திணிப்புக்கு எதிராக போராடி வரும் தென்னிந்திய தலைவர்களை "நான்சென்ஸ்" என்று கூறி அவமதித்த பிரமர் நேருவுக்கு எதிராக அவரைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ரயில் நிறுத்தப் போராட்டம்...
ஆக திமுகழக வரலாற்றில் இன்றைய நாள் மிக முக்கியமான மும்முனைப் போராட்டம் நடைபெற்ற நாள்..!
முன்னெச்சரிக்கை கைது என்ற பெயரில் ஈவிகே சம்பத் உள்ளிட்ட போராட்டத் தலைவர்களை கைது செய்த போலீஸாரால் கல்லக்குடி போராட்டத் தலைவர் கலைஞரை கைது செய்ய முடியவில்லை... காரணம் அவர் போலீஸார் கண்களில் மண்ணைத் தூவிக் கொண்டே முதல் நாள் இரவு லால்குடிக்கு வந்து இரவு இரண்டு மணி வரையிலும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு...
விடியற்காலை நேராக களம் புகுந்து விட்டார்..!
போராட்டம் முழுமையாக நடைபெற வேண்டும் என்பதற்காக அதி தீவிர போராட்டக்காரர்களை மூன்று குழுவாக பிரித்துக் கொண்டார். ஒவ்வொரு குழுவிலும் 25 போராளிகள்... அவர்களைச் சுற்றிலும் ஆயிரம் தொண்டர்கள்.
அப்படியாக முதல் குழுவில் தானும், இரண்டாவது குழுவில் காரைக்குடி சுப்பையா அவர்களும், மூன்றாவது குழுவில் கவிஞர் கண்ணதாசனும் இருப்பது போல் அமைத்துக் கொண்டு... முதல் ரயிலை இவர் குழு மறித்து சிறைச் சென்றால்... அத்தோடு போராட்டம் நின்று விடாமல் அடுத்த ரயிலை மறிக்க இரண்டாவது குழுவும், மூன்றாவது ரயிலை மறைக்கு மூன்றாவது குழுவும் என்பதாக... அந்த போராட்டம் அன்றைய நாள் முழுவதும் முழுமையாக நடைபெற்று ஆட்சியாளர்களை அடிபணிய வைக்க வேண்டும் என்பதாகவே திட்டமிட்டார்...!
இதில் அதற்கு ஒரு மாதம் முன்பிலிருந்தே அதி தீவிர போராளிகள் 500 பேரை முன்னால் வருபவருக்கு முன்னுரிமை என்பதாக பதிவு செய்து... அவர்களையே தண்டவாளத்தில் படுக்கும் முன்னேற்பாட்டுடன் இருந்தார்..! இன்னும் சொல்லப்போனால் தண்டவாளத்தில் தலைவைத்து படுத்து ரயிலை நிறுத்தும் போராட்ட உத்தியினை அவர் கவிஞருக்கே கூட சொல்லவில்லை என்று பின்னாளில் கண்ணதாசன் புலம்பிய வரலாறு எல்லாம் உண்டு..!
Image may contain: 1 person, outdoor
கலைஞர் திட்டமிட்டவாறே மூன்று ரயில்களும் நிறுத்தப்பட்டன... மூன்றாவது ரயில் நிறுத்தப்படும் பொழுது தான் தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தியது போல... அன்றைக்கு கல்லக்குடியிலும் போலீஸார் துப்பாக்கிச் சூட்டினை நடத்தி ஆறு உயிர்களை பலி கொண்டு அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டனர்..!
அதற்கு காரணம் இப்படி உயிர்பலி கொண்டால் தான் அடுத்தடுத்து அரசுக்கு எதிராக போராட யாரும் முன்வர மாட்டார்கள்... அரசு நினைத்ததை எல்லாம் நிறைவேற்றலாம் என்பது தான்...!
ஆனால் அந்த போராட்டத்தினை முன்னெடுத்த கலைஞர் உறுதியாகச் சொல்கின்றார்...
நாங்கள் 
வாழைக்கு கன்றல்ல...
ஆலுக்கு விழுதுகள்...
அன்னை தமிழுக்கு மக்கள்...

என்று... என்ன அற்புதமான வார்த்தைகள் இவை..?! எவ்வளவு பெரிய உணர்ச்சிகளை கலைஞரின் இந்த வார்த்தைகள் ஒவ்வொரு தொண்டரிடத்திலும் ஏற்படுத்தியிருக்கும்..?!
இன்றைக்கு அந்த ஊரின் பெயர் மாற்றப்பட்டு விட்டது... அதிலும் தலைவர் கலைஞர் முதல்வரான 1969லேயே மாற்றி விட்டார்...!
ஆனால் இன்றைக்கும் அதே ஆரியம் தமிழகத்தின் மேல் தாக்குதலை துவங்கி விட்டது..! அதே புதிய கல்விக் கொள்கை, அதே இந்தித் திணிப்பு, இப்பொழுது இன்னும் கூடுதலாக நாம் ஈன்றெடுத்த சமூகநீதியின் அடித்தளமாம் அந்த இட ஒதுக்கீட்டிற்கும் கொள்ளி வைக்கும் சட்டங்கள், இன்னும் கொஞ்சம் கூடுதலாய் இந்தியை மட்டுமே இதுவரையிலும் திணித்து வந்தவர்கள் இப்பொழுது இந்திக்காரர்களையே இங்கு நம் அரசுப்பணிகளில் திணிக்கவும் துணிந்து விட்டார்கள்..!
அவர்களுக்கு எப்படி இந்த அளவிற்கு தைரியம் வந்தது... இதையெல்லாம் செயல்படுத்துவதற்கு..?!
இங்கே அண்ணா இல்லை, கலஞர் இல்லை, நெடுஞ்செழியன் இல்லை, சம்பத் இல்லை, பேராசிரியர் செயல்படமுடியவில்லை, மதியழகன் இல்லை.... இன்னும் பல்வேறு திராவிட இயக்க சித்தாந்தங்களை தங்கள் உயிர் மூச்சாக கொண்ட சில நூறு தளகர்த்தர்கள், சில ஆயிரம் அடலேறுகள், பல லட்சம் தொண்டர்கள் இல்லை என்ற எண்ணமா..??!!
அவகள் எண்ணத்தில் இடி விழத்தான் போகின்றது..!
அத்தனை தலைவர்களையும் உள் வாங்கிய ஒற்றை உருவமாகத்தான் தலைவர் தளபதி அவர்கள் திகழ்கின்றார்..! 23 கிழட்டு சிங்கங்கள், முராட்டுச் சிங்கங்கள், சிங்கக் குட்டிகளை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்... மேலவையிலும் வரிப்புலிகள் உறும ஆரம்பித்து விட்டன....
புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக முதல் கட்டமாக இங்கே அறிவாயுதம் ஏந்தியிருக்கின்றார்...
53 சதவிகித மக்களின் நம்பிக்கையைப் பெற்று தான் தனியொருவன் இல்லை... மாறாக தமிழகன் என்று ஆரியப்படைக்கு எதிராக கம்பீர தளபதியாக வானுயர்ந்து நிற்கின்றார்...!
அவர் பின்னால் அணி வகுப்போம்... ஆரியப்படைகளை அடித்து விரட்டுவோம்...!

No comments: