Saturday, October 24, 2015

மு.க.ஸ்டாலின் - நமக்கு நாமே...! முதல் பார்வை


திராவிட முன்னேற்ற கழகத்தின் இன்றைய பொருளாளரும்..., அடுத்த தலைவருமான தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களுடைய நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம், தமிழக மக்கள் மத்தியில் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி தமிழகத்தின் மொத்த சட்டமன்ற தொகுதிகளில் சரிபாதியை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கின்ற நிலையில்...
அதிமுக உள்ளிட்ட தமிழகத்தின் கிட்டத்தட்ட அனைத்து மாற்றுக்கட்சித் தலைவர்களும்..., அவர்களுக்கு ஆதரவான அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடகங்களும், இந்த பிரச்சாரப் பயணத்தை ஆரம்பத்தில் கிண்டலும், கேலியும் செய்து வந்த நிலை மாறி தற்பொழுது விமர்சனங்களை வைக்கின்ற அளவிற்கு நிலைமை முன்னேற்றம் கண்டிருக்கின்றது.
நமக்கு நாமே பயணத்திற்கு எதிராக மாற்றுக்கட்சி தலைவர்களால் வைக்கப்படும் விமர்சனங்களில் முக்கியமானதாக ஒரு சிலவற்றைச் சொல்ல வேண்டுமானால், இத்தனை நாளாக இப்படி மக்களை வந்து சந்திக்காமல், இப்பொழுது திடீர் என்று வந்து சந்திப்பதன் காரணம் என்ன? இது தேர்தலுக்கான நாடகம் தானே? இதனால் திமுகவுக்கு எந்த பலனும் கிடைக்காது... இப்படியாகத்தான் செல்கிறது அந்த விமர்சனங்கள்.

இந்த விமர்சனத்தின் அடிப்படையான கருப்பொருள் ஒன்றே ஒன்று தான். அதாவது இத்தனை நாளாக செய்யாத ஒரு நல்ல காரியத்தை இப்பொழுது மட்டும் செய்வதன் காரணம் என்ன என்ற கேள்வியில்..., தளபதியின் இந்த மக்கள் சந்திப்பு என்பது ஒரு தவறான செயல் கிடையாது என்பதை முதலில் அந்த விமர்சகர்கள் ஏற்றுக்கொள்கின்றார்கள். மேலும் இதை ஒரு நல்ல செயலாக அவர்களே ஒத்துக்கொள்ளவும் செய்கின்றார்கள்.

இன்னும் ஒரு படி மேலே போய், காலம் தாழ்ந்து செய்தாலும், ஒரு நல்ல செயலை இந்தத் தலைவர் செய்வதால் மக்கள் மத்தியில் இவருக்கு நல் ஆதரவு பெருகிவிடுமோ என்ற பதற்றத்திலும், பயத்திலும் தான், இதை ஒரு நாடகம் என்று முத்தாய்ப்பு வைக்கின்றார்கள்.
அதாவது எதிரிகளின் விமர்சனங்கள், அவர்களுக்கே திருப்தி தராத நிலையில் தான், மக்களே..., இதை நம்ப வேண்டாம், இது வெறும் நாடகம் என்று வாதாடுகின்றார்கள்.
கடைசியாக இந்தப் பயணத்தினால் திமுகவுக்கு எந்தப் பயனும் இல்லை என்று தங்களைத் தாங்களே திருப்திப் படுத்திக்கொள்வதோடு, தளபதியின் இந்த பயணத்தினால் திமுகவுக்கு மக்கள் மத்தியில் கிடைத்திருக்கின்ற பெரும் வரவேற்பைக் கண்டு தங்கள் கட்சித் தொண்டர்கள் துவண்டு விடக் கூடாது என்பதற்காகவும், இப்படியொரு சப்பைக்கட்டையும் கட்டுகின்றார்கள்.
இதெல்லாம் எது எப்படி இருந்தாலும், தளபதி ஏன் இத்தனை ஆண்டுகளாக இல்லாமல் இப்பொழுது மட்டும் மக்களை அவர்கள் இருப்பிடத்திற்கே சென்று சந்திக்கின்றார் என்ற எதிரிகளின் கேள்விக்கு சரியான விளக்கம் தந்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடு தான் இக் கட்டுரை.
இந்த விமர்சகர்கள் எல்லாம் சொல்வது போல தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏதோ இத்தனை காலமும் ஏசி ரூம், சில்வர் ஸ்பூன் என்று சென்னையில் மட்டுமே வாழ்ந்து காலம் தள்ளியவர் கிடையாது. தனது தந்தை கட்சியின் தலைவர் ஆவதற்கு முன்பே கழகத்தின் இளைஞர் அணியை உருவாக்கி தமிழகத்தை வலம் வர ஆரம்பித்தவர் தான் ஸ்டாலின்.
நாற்பத்தைந்து ஆண்டுகளாக... கிட்டத்தட்ட அரை நூற்றாண்டைக் கடந்து கொண்டிருக்கின்றது, அன்றைக்குத் துவங்கிய அவரது தமிழகப் பயணம். அவரது தந்தை முதல்வராக இருந்து மத்திய அரசின் பெரும் அடக்கு முறைக்கு எதிராக வெகுண்டெழுந்து போராடிய போதே, முதல் நபராக அதில் கலந்து கொண்டு, திருமணமான நான்கே மாதத்தில் ஓராண்டு காலம் சிறை சென்றவர் தான் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள்.
எம் ஜி ஆர் திமுகவை விட்டுப் பிரிந்து 13 ஆண்டு காலம், திமுக எதிர்க்கட்சியாகக் கூட இல்லாமல் இருந்த நிலையில், தமிழகம் முழுவதும் சுற்றித்திரிந்து, இளைஞர்களைத் திரட்டி, கழகத்தின் இளைஞரணியை ஒரு கட்டுக்கோப்பான அமைப்பாக உருவாக்கி, கழகம் மீண்டும் 89 இல் ஆட்சியைப் பிடிக்க பெரும் பக்க பலமாக இருந்தவர் தான் தளபதி ஸ்டாலின்.
மீண்டு(ம்) ஆட்சிக்கு வந்த திமுகவை வீழ்த்த நவீன எம் ஜி ஆராக ஆரியர்களால் உருவாக்கப்பட்ட வைக்கோ, திமுகவை விட்டு வெளியேறிய போது, எம் ஜி ஆர் ஏற்படுத்திய அந்த தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் போனதற்கு, வலுவான இளைஞரணியை தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் கட்டமைத்து வைத்திருந்தது தான் காரணமாக அமைந்தது.
சென்னை மாநகர மேயராக இருந்த போதும் கூட அவர் இதோ இன்றைக்கு மக்களைத் தேடி ஓடி வருவது போலத்தான் சென்னை மாநகர் முழுவதும் சுற்றிச் சுற்றி அற்புதமான பாலங்களை தனது நேரடி மேற்பார்வையில்... திட்டமிட்ட காலத்திற்கு முன்னதாகவும், திட்டச் செலவை விட குறைவான செலவிலும் கட்டி முடித்து, சாதாரண சென்னையை சிங்காரச்சென்னையாக மாற்றும் முதற்படியில் ஏறி நின்றார்.
உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த பொழுது தமிழகம் முழுவதும் சுற்றித்திரிந்து இதே அடித்தட்டு மகளிரை நேரடியாக சந்தித்து அத்தனை லட்சம் பேருக்கும் தனது கரங்களாலேயே சுழல்நிதியை வழங்கி கிராமப்புற பெண்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தியவர் தான் தளபதி. அதை முழுமையாக இன்றைக்கு உணர்ந்துள்ள அந்தப் பெண்கள் தான், ”அந்த நாளும் வந்திடாதோ” என்ற ஏக்கத்தில் இன்றைக்கு தங்கள் தங்கள் ஊருக்கு வரும் தளபதியை நேரில் சந்தித்து, தங்கள் குமுறல்களை கொட்டித்தீர்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
துணை முதல்வராக இருந்த பொழுது எங்கெங்கு எல்லாம் சென்று நிதியைத் திரட்ட முடியுமோ அங்கெல்லாம் நேரடியாகச் சென்று பேசி நிறுவனங்களையும், நிதியையும் திரட்டிக்கொண்டு வந்து, மெட்ரோ ரயில், ஒக்கேனகல் கூட்டுக் குடிநீர் திட்டம், எட்டு மின் உற்பத்தி திட்டங்கள், கடல்நீர் குடிநீராக்கும் திட்டம், பறக்கும் பாலங்கள், தென்னக நதி நீர் இணைப்புத் திட்டங்கள், புறவழிச் சாலைகள், அரசு அலுவலகங்களுக்கு அருமையான கட்டிடங்கள், ஒவ்வொரு நகரத்திலும் சுற்றுச் சாலைகள்... இப்படியாக தமிழகத்திற்குத் தேவையான எண்ணற்ற தொலைநோக்குத் திட்டங்களையும், முதலீட்டாளர்களைக் கவர்ந்திழுக்கும் உட்கட்டமைப்பு வசதிகளையும், பெரிய பெரிய தொழிற் பூங்காக்களையும் உருவாக்கி..., இன்றைய ஜெயலலிதா அரசு அவற்றைக் காட்டித்தான் உலக முதலீட்டாளர்களை அழைக்கும் நிலையை உருவாக்கியவர் தான் தளபதி மு.க. ஸ்டாலின்.
ஒரு நாட்டில் உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் பொழுது, பல லட்சம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு உருவாக்கப்படுவதும், அதைச் சார்ந்த எண்ணற்ற தொழிற்சாலைகள் உருவாகுவதும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதும், மக்களிடம் வெகுவான பணப்புழக்கம் ஏற்படுவதும் என்று.... இவர் செய்த காரியங்கள் அனைத்துமே நேரடியாக அடித்தட்டு மக்களுக்கே பயனுள்ளதாக சென்றடைந்ததை, மனசாட்சி உள்ள எவருமே மறுக்க முடியாது.
சரி... இவற்றையும் மீறி, திமுகவில் சிலர் மூலம் நடந்த தவறுகளுக்காக மக்களால் மாற்றம் கொண்டு வரப்பட்டு, திமுக என்பது அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாகக் கூட இல்லாத நிலையில்.....
ஆட்சி பறிபோன அடுத்த நாளில் இருந்தே, அவர் தனது பயணத்தை துவக்கி விட்டார். முதலில் திமுக தொண்டர்களை சோர்ந்து போக வைக்க, அவர்கள் மீது தொடுக்கப்பட்ட பொய் வழக்குகளில் இருந்து மீட்க, அவர்களை நேரடியாகச் சென்று சந்தித்து, கட்சி உருக்குலைந்து போகாமல் கட்டிக் காப்பாற்றினார்....!
திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட சமச்சீர் கல்வி, புதிய தலைமைச் செயலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம்... ஆகியவை பறிபோகாமல் இந்த அரசிடம் இருந்து காப்பாற்ற சட்டப் போராட்டத்தையும் வெற்றிகரமாக நடத்திக் காப்பாற்றினார். தன்னை எம் எல் ஏ வாக தேர்ந்தெடுத்த கொளத்தூர் தொகுதி மக்களை மாதம் தவறாமல் நேரடியாக சந்தித்து குறைகளைக் கேட்டுப் பெற்று, அவற்றுக்கான நிவாரணங்களை சட்டப்பூர்வமாக வழங்கி, ஒட்டுமொத்த தமிழக எம் எல் ஏக்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகின்றார்.
வருடாவருடம் அண்ணா பிறந்த நாளில் இளைஞர் அணியின் சார்பாக அந்தந்த ஆண்டு 10வது மற்றும் +2 தேர்வுகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்கள் மற்றும் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகளை அவர்கள் பெற்றோருடன் அழைத்து, அழைத்து என்றால், அந்தந்த மாவட்டத்திலும் பேருந்துகளை ஏற்பாடு செய்து, ஒரு பைசா செலவில்லாமல் அழைத்து வந்து தக்க மரியாதையுடன் தங்க வைத்து பணம் மற்றும் சான்றிதழ்களை தனது கரங்களாலெயே அளித்து, உணவுடன் மீண்டும் அவர்கள் வீடு வரை கொண்டு சென்று விட்டு வரும் நிகழ்வையும் நடத்தி வருகின்றார்.
அதேப் போன்று கலைஞர் பிறந்தநாளிலும், தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளிகளில் மாணவ, மாணவிகளிடையே பேச்சுப்போட்டி நடத்தி, மாவட்ட வாரியாக முதல் மூன்று இடங்களைப் பெரும் மாணவச் செல்வங்களை இதேப் போன்று அழைத்து பரிசுகளும், சான்றிதழும் தன் கரங்களாலேயே கொடுத்து மாணவர்களை ஊக்கப்படுத்தும் நவீன அப்துல் கலாமாக திகழ்பவர் தான் தளபதி.
ஏதோ பேச வேண்டும் என்பதற்காக எதிரிகள், தளபதியைப் பார்த்து இன்றைக்கு திடீர் என மக்களை வந்து சந்திப்பதாக புலம்புவது தான் அபத்தத்தின் உச்சம். ஆட்சியில் இருக்கும் போது செய்ய வேண்டிய தனது கடமைகளை தவறாமல் செய்த ஸ்டாலின் அவர்கள், ஆட்சியில் இல்லாமல், அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி அந்தஸ்த்து கூட இல்லாத நிலையில்...
செய்ய வேண்டிய தமது கடமைகளை மிகத் தெளிவாக எந்தத் தொய்வும் இன்றி செய்து வருகின்றார். இதோ இன்னும் 7 மாதத்தில் தேர்தல் வரவிருக்கின்ற நிலையில், நடப்பு ஜெயலலிதா ஆட்சியின் அவலங்களால், தினம் தினம் நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கும் மக்களை அவர்கள் இருப்பிடத்திற்கே நேரடியாகச் சென்று சந்திக்கின்ற அவகாசமும் அவருக்கு இருக்கின்ற நிலையில்...

அதை வீணாக்காமல், போய் மலை உச்சியில் ஓய்வெடுத்துக்கொண்டிராமல், இந்த தனது அவகாச காலத்தையே ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு, மக்களைத் தேடி, அவர்களை நாடி அவர்கள் இடத்திற்கே சென்று பார்த்து, பேசி, கலந்துரையாடி, தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்புக்கொடுத்தால், அவர்கள் குறைகளை எல்லாம் நிவர்த்தி செய்வோம் என்று வெளிப்படையாக அவர்கள் முன்னனியிலேயே வாக்குறுதி கொடுத்து வருகின்றார்.

அவர் மீது நம்பிக்கை இருப்பதால் தான், மக்களும் அவரை நம்பி வந்து தங்களது கோரிக்கைகளை முன் வைக்கின்றார்கள். மனுக்கள் தருகின்றார்கள், வாக்குறுதிகளைக் கேட்கின்றார்கள்.
கடந்த திமுக ஆட்சியில் சில தவறுகள் நடந்திருப்பதை மனதார மக்களிடம் ஏற்றுக்கொண்டிருக்கின்றார். அடுத்து வரும் தங்கள் ஆட்சியில் அது முற்றிலும் அகற்றப்படும் என்று வாக்குறுதி தந்துள்ளார். 15 நாட்களுக்கு ஒரு முறை அமைச்சர்களும், எம் எல் ஏக்களும் மக்களை நேரடியாக சந்திக்கும் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். மாணவர்களின் கல்விக்கடன் நீக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
திமுகவுக்கு எதிரானவர்கள் என்று கருதப்படும் கோவில் குருக்கள்கள் கூட அவரைச் சந்தித்து மனு கொடுக்கின்ற அளவிற்கு அவர் மீதான நம்பிக்கை மக்களிடம் வேரூன்ற ஆரம்பித்து விட்டது.
கடைசியாக, அவர் கலர் கலராக சட்டை பேண்ட் அணிந்து செல்கின்றார் என்று கூட விமர்சனம் வைக்கின்றார்கள்....
மக்களோடு மக்களாக...., நமக்கு நாமே என்று அவர் செல்லும் பொழுது, மக்களுடைய அண்ணனாக, தம்பியாக, தந்தையாக, தனையனாக, அவர்களோடு ஒருவராகச் செல்வதில் என்ன தவறு இருக்கின்றது? பொதுவாகவே வெள்ளை வேட்டி, மொட மொட சட்டை அரசியல் வாதிகளிடமிருந்து மக்கள் சற்று தள்ளி நிற்கவே விரும்புகின்ற நிலையில், மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப மக்களோடு ஒருவனாக அவர் செல்வதில் எந்தத் தவறும் இல்லை. அதைத் தவறு என்று மக்கள் சொன்னால் அதையும் அவர் மாற்றிக்கொள்வார். எதிரிகள் அதைச் சொல்லக் கூடாது.!
தமிழக அரசியலில்... ஏன்? ஒட்டுமொத்த இந்திய அரசியலிலும், மக்களோடு நெருங்கிப் பழகி, அவர்களின் குறைகளைக் களைய, தனியொரு பாதை அமைத்து....
இனி இப்படித்தான் ஒவ்வொரு அரசியல்வாதியும் செயல்பட வேண்டும் என்ற புது இலக்கணத்தை... புத்தம் புதிய அரசியல் இலக்கணத்தை....
தனியொருவனாக..... தளபதி எழுதிக்கொண்டிருக்கின்றார்....

அதன் பெயர் தான்...
நமக்கு நாமே...!!


2 comments:

Anonymous said...

dai ennathan koovinalum kozhambathan pove thavira vera onnum aagamudiathu da dmk potta kozhi

கொக்கரக்கோ..!!! said...

அனானியாரே முக்காடு போட்டு வந்து பேசும் நீ தான் பொட்டை கோழி என்பதை ஊர் அறியும்.